திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகி இருந்தது. சுந்தர்ராஜன் பரிமளாவும் பெண் மாப்பிள்ளையை மறு வீட்டிற்கு வருமாறு அழைத்துவிட்டு அன்று இரவே கும்பகோணம் திரும்பிவிட்டனர்.
Advertisement
திருமணம், நிச்சயம் அதற்கான ஏற்பாடுகள் என்று எல்லாம் விரைவாக நடந்திருந்தாலும், மணிமேகலை தேவ்விடம் கேட்டுக்கொண்டது, ‘திருமணத்திற்கு பிறகு அனைவரும் ஒரே வீட்டில் இருக்க வேண்டும்’ என்பதை தான்.
பெரிய வீடாக பார்த்து மாறிக்கொள்ளலாம் என்று வாடகைக்கு வீடு பார்க்க ஆரம்பித்தார் வந்தியத்தேவன்.
Advertisement
Advertisement
ஆனால் வராஹியும் வல்லபனும், “மேலே கீழே தானே அத்தை இருக்க போறோம், வேற வீடு எல்லாம் மாற வேண்டாமே” என்று கேட்டு கொண்டார்கள். இந்த வீட்டின் மீது ஒரு இனம் புரியாத பற்று அவர்களுக்கு ஏற்பட்டிருந்தது.
பத்துமாக்கும் அதே போல இந்த வீட்டை விட்டு வேறு வீடு செல்ல அவ்வளவாக விருப்பம் இல்லை.
Advertisement
இவர்கள் மூவரும் இப்படி கூறவே, அதன் பின் வந்தியத்தேவன் அவர்கள் குடியிருந்த வீட்டு ஓனரிடம் வீட்டை விலைக்கு தருவாரா என்று பேசினார். முதலில் தயங்கிவர், பின் “எப்படியும் இந்த வீட்டை வாடகைக்கு தான் சார் விட போறேன், நாங்க இருக்கிறதே சொந்த வீடு தான். ஆனா இந்த வீடு நாங்க முதன் முதல்லா வாங்கிய சொத்து, அதான் தயக்கமா இருக்கு” என்றார்.
அவருக்கு மணிமேகலையையும் பிடித்திருந்தது, வந்தியத்தேவனையும் பிடித்திருந்தது. அவர்கள் எல்லாரும் வீட்டின் மேல் வைத்திருக்கும் ஆசை புரியவே, சரி என்று ஒத்து கொண்டார். என்ன ஒன்று விலையை மட்டும் குறைக்க மாட்டேன் என்று பிடித்த பிடியில் நின்றுவிட்டார்.
தஞ்சாவூரில் வந்தியத்தேவனுக்கு சொந்த வீடு இருந்தது. சில நிலங்களும் இருந்தன. அதில் ஒரு நிலத்தை கொடுத்துவிட்டு இந்த வீட்டை வாங்கிடலாம் என்று முடிவு செய்தார்.
ஆனால் மணிமேகலை அதற்கு ஒத்து கொள்ளவில்லை. பூர்விக சொத்தை திருமணம் ஆகும் நேரத்தில் கொடுப்பதில் அவருக்கு உடன் பாடில்லை. “எப்படியும் எங்க அப்பா என் கல்யாணத்துக்குன்னு சீதனம் தருவாரு. என் கல்யாண செலவுக்குன்னு ஒரு பணம் சேர்த்து வச்சிருப்பாங்க. அதை வாங்கிக்கலாம். பத்தாததுக்கு ஹவுசிங் லோன் போட்டுக்கலாம்” என்றார்.
இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது பத்தும்மாவும் அங்கே தான் இருந்தார்.
“அதான் பத்தும்மா அன்னிக்கே சொல்லிட்டாங்களே, அது என் உரிமைன்னு.. அப்புறம் என்ன?” அதோடு பேச்சு முடிந்தது என்பதை போல எழுந்து நின்றுவிட்டார்.
வந்தியத்தேவன் குழப்பமாக “என்ன செய்ய?” என்று அம்மாவை பார்க்க,
“என்ன என்னய எதுக்கு பார்க்குற? நீயாச்சு உன் வருங்காலம் ஆச்சு..” என்று அவர் எழுந்து உள்ளே சென்று விட்டார்.
“ரொம்ப யோசிக்காதீங்க.. பணம் இங்க பிரச்சனை இல்லை. இப்ப சொத்தை விக்க வேண்டாம்னு தோணுச்சு.. அவ்வளவுதான்”
அதன் பிறகு வந்தியத்தேவனும் “சரி” என்று ஒத்து கொண்டார். சுந்தர்ராஜனிடம் விஷயத்தை கூறியதும் அவர் மகிழ்ச்சியாகவே ஒத்துக்கொண்டார்.
திருமணத்திற்கு முன்பே அந்த வீட்டை மணிமேகலையின் பெயரில் ரெஜிஸ்டர் செய்துவிட்டார்கள். வீட்டை சுற்றி கொஞ்சம் இடம் இருந்ததது தான். ஆனால் உடனடியாக வீட்டை பெரியதாக கட்ட வேண்டாம் என்று முடிவு செய்து, கொஞ்சம் ஆல்ட்ரேஷன் மட்டும் செய்துகொண்டார்கள். கீழ் வீட்டில் இருந்து வீட்டிற்குள் இருந்தே மாடிக்கு செல்வதை போல ஒரு ரோலிங் படிகட்டுகளை வைத்துக்கொண்டார்கள். அதே போல கீழே உள்ள அடுப்படியை ஒரு சின்ன கெஸ்ட் ரூமாக மாற்றிக்கொண்டார்கள்.
திருமணம் முடிந்துபிறகு மணிமேகலையும் வந்தியத்தேவனும் மாடியிலும், பத்தும்மா பிள்ளைகளுடன் கீழேயும் என்று முன்பே பேசி முடிவு செய்திருந்தனர்.
ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி இயல்பாய் ஆர்மபித்தது இவர்களது புது குடித்தனம். எப்பொழுதும் வல்லபன் அதிகமாக பேச மாட்டான். இந்த திருமணம் முடிவானதில் இருந்து அவனாகவே வந்தியத்தேவனுடன் ஒட்டிக்கொண்டான்.
அங்கிள் என்று அழைத்த பிள்ளைகளை, திருமணத்திற்கு பிறகு மாமா என்று அழைக்கும்படி பெரியவர்கள் கூற, வல்லபன் தான் தனிமையில் அவரிடம் ‘நானா’ என்று கூப்பிடவா என்று கேட்டிருந்தான்.
“அது என்ன வல்லபா நானா?”
“அதுவா, எங்க கிளாஸ்ல ஒரு தெலுங்கு பையன் இருக்கான். அவன் அவங்க அப்பாவை நானான்னு தான் கூப்பிடுவான்..” என்றான் கொஞ்சம் தயங்கிய குரலில்.
“ஓ.. நல்லா தான் இருக்கு.. உனக்கு பிடிச்சா அப்படியே கூப்பிடு.. எனக்கு ஓகே” என்றுவிட்டார் வந்தியத்தேவனும்.
வந்தியத்தேவனுடன் சேர்ந்து மேட்ச் பார்ப்பது, எங்கு சென்றாலும் அவருடன் பைக்கில் தானாக சேர்ந்து செல்வது என அதிக நேரங்களை அவருடன் செலவிட்டான். இருவரும் நிறைய விஷயங்கள் பேசிக்கொள்வது தெரிந்தது. ஆனால் அவர்கள் இருவர் பேசுவதும் யாருக்கும் கேட்காது. முதலில் தயங்கினாலும் அவனது ஆர்வம் புரிந்து அதன் பிறகு வந்தியத்தேவன் அவராகவே அவனை அரவணைத்து கொண்டார்.
மணிமேகலைக்கே ஆச்சர்யமாக இருந்தது.
“என்ன தேவ், இந்த வல்லபன் உங்களோட இப்படி க்ளோஸ் ஆகிட்டான். என்னோடு கூட இவ்வளவு க்ளோஸ் இல்ல அவன்” என்றார் சிறு பொறாமை எட்டிப் பார்க்க..
“நான் கூட எங்க அப்பாவோட இப்படி தான் இருப்பேன் மேகா.. எங்க அப்பா தான் எனக்கு அப்போ ஹீரோ.. அவன் மனசு அவங்க அப்பா அம்மா பிரிவால ரொம்ப ஆழமா காயப்பட்டிருக்கு.. வெளியே காட்டிக்கொள்ளாட்டியும் அதனோட வெளிப்பாடு தான் இது. அதுக்கான மருந்தா அவன் என்னை பார்க்கிறான்.. நம்ம பிள்ளைங்களா தான் இனி வராவும் வல்லபனும் வளரனும்.. எந்த மனவருத்தமும் இல்லாம பாதுகாப்பா..”
அவர் பேச பேச மணிமேகலைக்கு அவரது தேவ் மீது அவ்வளவு காதல் பொங்கியது. காதலுடன் அவரை பார்த்துக்கொண்டே அமைதியாக அமர்ந்திருந்தார்.
“என்ன எனக்கு ஒரு பயம்னா, திடீர்னு உங்க அண்ணாவும் அண்ணியும் வந்து எங்க பிள்ளைங்கன்னு உரிமை கொண்டாடுனா நாம என்ன செய்யறது? “
“அது எல்லாம் வர மாட்டாங்க தேவ்.. வந்தாலும் நம்ம பிள்ளைங்க நம்மளை விட்டு போக மாட்டங்க”
“நீ சொல்றது தான் சரி மேகா”
———————–
திருமணம் முடிந்த கையோடு மணிமேகலையை கல்லூரியில் சேரும்படி கூறினார் வந்தியத்தேவன்.
என்ன படிக்கலாம் என்று தெளிவு இல்லை அவரிடம். அவர் குழப்பமாகவே சுற்றி கொண்டிருக்க, அனைவரும் கலந்து ஆலோசித்து, ஊட்டச்சத்து மற்றும் உணவியல் துறையில் இளங்கலைப் பட்டப்படிப்பான பி.எஸ்சி. நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ் (B.Sc. Nutrition and Dietetics) படிக்க முடிவு செய்தனர்.
பத்தும்மா ட்ரீட்மெண்ட் எடுக்கும் மருத்துவமனையில் ஒவ்வொரு நோயாளிக்கும் ஒரு உணவியல் நிபுணர் நியமித்தனர். அதை வைத்து இந்த யோசனையை கூறியது பத்தும்மா தான். மணிமேகலைக்கு அது பிடித்து போக அதையே முடிவு செய்து, உடனடியாக சென்னையிலேயே ஒரு கல்லூரியில் அட்மிஷனையும் முடித்தனர்.
உடனே கல்லூரியும் தொடங்கிவிட்டது. இதை அறியாமல் ஹரி தன் அக்கா மாமாவிற்கு தேனிலவிற்கான பேக்கேஜ் ஒன்றை புக் செய்து பெருமையாக அதை மணிமேகலைக்கு அழைத்து கூறினான்.
“நான் ரெண்டு நாளா தான் காலேஜ் போக ஆரம்பிச்சிருக்கேன். தேவ்வுக்கும் இப்ப லீவ் கிடைக்காதுடா.. நீ புக் பண்றதுக்கு முன்னாடி கேட்க மாட்டியா?”
“என்ன அக்கா இப்ப படிச்சு நீ என்ன கலெக்டரா ஆக போற.. அந்தமானுக்கு லக்சுரி பேக்கேஜ் புக் பண்ணிருக்கேன் க்கா.. உனக்காக ஆசையா செஞ்சேன்”
“எப்பவுமே எனக்கு என்ன வேணும்னு நீயா முடிவு செஞ்சுட்டு அதை நான் ஏத்துக்கனும்னு சொன்னா எப்படி?”
“கேன்சல் பண்ணா புல் ரீபண்ட் கூட கிடைக்காது அக்கா.. “
முதலில் அக்கா மறுத்ததில் கோவம் எட்டிப்பார்த்தாலும், பின் அக்கா சொன்ன யோசனையை கேட்டு குஷியாகி போனான் ஹரி. இதற்கான செலவில் பாதியை பரிமளாவிடம் தான் பிக்கப் செய்திருந்தான். சாம்பவியும் அவனும் ஜாலியாக அந்தமான் சென்று வந்தனர்.
பரிமளா தான் “கல்யாணம் ஆன கையோட எதுக்கு மணி இப்ப படிக்கறேன்னு நிக்குற.. கல்யாணம் ஆன புதுசுல புருஷன் பொண்டாட்டிக்குள்ள ஒரு அன்யோன்யம் வரும். அது தான் எதிர்காலத்துக்கான அஸ்திவாரம் மணி.. அம்மா சொன்னா எல்லாமே தப்பா இருக்கும்னு அவசியம் இல்லை” என்றார்
“நான் படிக்குறதே உனக்காகவும் ஹரிக்காகவும் தான்.. என்னால என் படிப்பை நீங்க நிறுத்துனதை இப்பவுமே மறக்கவும் முடியலை மன்னிக்கவும் முடியலை. இப்ப படிச்சு முடிச்சிட்டாலாவது, நான் படிக்கலைன்ற அந்த எண்ணம் விலகி உங்க மேலே எனக்கு இருக்கிற கோவம் மறைய வாய்ப்பு இருக்குன்னா.. அதை செய்யலாம்னு தான்” என்றார் மணிமேகலை.
அதற்கு பிறகு பரிமளா அதை பற்றி பேசவில்லை.
—————
ஒரு நாள் மாலை அனைவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், பத்தும்மா
“தேவ், மேகா உங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா திருப்பதி வரேன்னு வேண்டிக்கிட்டு இருக்கேன். எப்ப லீவ் கிடைக்கும்னு பார்த்து போகணும்” என்று கூறினார்.
“போலாம் பத்து, நான் திருப்பதி போனதே இல்லை” என்றார் மணிமேகலை உடனே..
“நாங்களும் பார்த்தது இல்ல” என்று சேர்ந்து கொண்டனர் வராஹியும் வல்லபனும்.
“எங்க நானா லேட்னாலும் லேட்டஸ்ட்டா வருவாரு..” என்று வீர்யாவை முறைத்துக்கொண்டே கூறினான் வல்லபன்.
“திருப்பதி தானே ம்மா, லீவ் எல்லாம் இல்லைனாலும் பரவாயில்லை, சனி ஞாயிறு டிக்கெட் இருக்கான்னு பார்த்து போய்ட்டு வந்துடலாம்”
“அது நான் கீழ் திருப்பதியில் இருந்து மேலே நடந்து வராதா வேண்டிக்கிட்டு இருக்கேன்..” என்றார் பத்தும்மா பம்மிக்கொண்டே.
“எதுக்கு இப்படி எல்லாம் வேண்டிக்கிட்டு இருக்கீங்க. இப்ப தானே உடம்பு தேறி நல்லா ஆகிட்டு வர்றீங்க “
“அது எல்லாம் பெருமாளை நினைச்சு நடந்தா ஒன்னும் ஆகுது தேவ்…”
“அப்ப முதல்ல டாக்டர்கிட்ட நீங்க போலாமான்னு கேட்டுட்டு அப்புறம் முடிவு செய்யலாம்”
“நான் அந்த ஏழுமலையானை பார்க்க டாக்டர் எட்வேர்ட் எதுக்குடா பெர்மிஷன் கொடுக்கணும்? எங்கப்பன் அந்த ஏழுமலையான் பெர்மிஷன் கொடுத்தா போதும்..”
“டாக்டர்கிட்ட கேட்டுட்டு தான் போறோம்” என்று எழுந்து சென்றுவிட்டார் வந்தியத்தேவன்.
“ரொம்ப தான் ரூல்ஸ் போடறான் மிலிட்டரிகாரன்” என்று நொடித்து கொண்டார் பத்தும்மா.
“எங்க நானா என்ன சொன்னாலும் அது..” என்று ஆரம்பித்தான் வல்லபன்.
“அய்யா சாமி.. உன் நானா தங்க நாணயம் தான்.. அதுக்காக சும்மா அவருக்காக நீ நாயனம் வாசிக்காத” என்றார் பத்தும்மா கடுப்பாக.
பின் டாக்டரை பார்த்து பேசி, “அவர் நிதானமா போய்ட்டு வாங்க.. மன தைரியம் தான் முக்கியம் .. அதுவும் மிஸஸ் பத்மபிரியா ஜமாய்சிடுவாங்க. தண்ணீர் பழங்கள் எல்லாம் நல்லா எடுத்துக்குங்க.. ஆல் தி பெஸ்ட்” என்று அவர் பச்சை சிக்னல் காட்டியதும் தான் வந்தியததேவன் ஒத்து கொண்டார்.
அதன் படி அடுத்த ஞாயிறு கிளம்பவதாக முடிவு செய்தனர்.
மணிமேகலை சுந்தரராஜன் பரிமளவிடம் கூற, “திருப்பதி போய்ட்டு வந்தீங்கனா வாழ்க்கையில நல்ல திருப்பம் வரும்னு சொல்லுவாங்க.. சந்தோசமா போய்ட்டு வாங்க” என்று கூறினார்கள்.
ரகுநந்தன் பத்தாம் வகுப்பு என்பதால் அவன் மட்டும் வரவில்லை என்று கூறிவிட்டான்.
இன்னும் இரண்டு நாட்களில் பயணம் என்ற நிலையில், மறுநாள்
காலை எழுந்ததும் வராஹி பெரிய பெண்ணாகிவிட்டாள். பத்தும்மா தான் முதலில் பார்த்தது. அவர் உடனே மணிமேகலையை அழைத்து விஷயத்தை கூற, அவருக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை.
உண்மையில் அவரே குழந்தையாக சில நிமிடங்கள் மலங்க மலங்க விழித்தார். அதன் பின் முதலில் நிவேதாவுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்கள். அப்பொழுதே நிவேதாவும் வீர்யாவும் வந்துவிட்டார்கள்.
சமீபத்தில் வீர்யா பெரிய பெண்ணாகி இருந்ததை பார்த்ததால் வல்லபனுக்கும் கொஞ்சம் புரிந்தது.
பெண்கள் எல்லாம் அறைக்குள் இருக்க, வந்தியத்தேவனும் வல்லபனும் வெளியே அமர்ந்திருந்தார்கள்.
“நாங்க உடனே புறப்பட்டு வர்றோம் மணி” என்றார் உற்சாகமாக.
பின், “நாளை மறுநாள் நீங்க திருப்பதி போறேன்னு சொன்னீங்களே” என்றார் ஆதங்கமாக.
“அதனால என்னம்மா.. இப்ப இது தானே முக்கியம்.. அடுத்த மாசம் போனா போச்சு..”
“இல்ல மணி நானும் அப்பாவும் வந்திடுவோம்.. நாங்க வந்ததும் திட்டம் போட்டமாதிரி நீங்க போய்ட்டு வந்துடுங்க.. கல்யாணம் ஆகி முதன்முதல்லா கோவிலுக்கு போறதா கிளம்புனது தடை பட வேண்டாம்”
“என்ன ம்மா லூசு மாதிரி பேசிட்டு இருக்கீங்க..”
அங்கே தான் பெண்கள் எல்லாரும் இருக்க, வீர்யாவும் பத்தும்மாவும் ‘லூசுன்னு கரெக்டா சொன்னாங்க’ என்று ஹைபை கொடுத்து கொண்டார்கள்.
“உன் நல்லதுக்கு சொன்னா நான் லூசா..”
“பின்ன என்னம்மா.. நமக்கு தீட்டு இல்ல?”
“எங்களுக்கு தான் தீட்டு.. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இல்ல. இந்த தீட்டு உனக்கு சேராது..”
“நீ என்ன நினைச்சிட்டு இருக்கேன்னு தெரியாது. எங்க பொண்ணு பெரிய பொண்ணாயிருக்கா. அதுக்குண்டானது எல்லாம் எங்களையும் சேரும். எனக்கு நிறைய வேலை இருக்கு.. உனக்கு எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்க முடியாது.. நீங்க கிளம்பிட்டு போன் போடுங்க..” என்று வைத்து விட்டார்.
பின் உடனடியாக வாங்கவேண்டிய பொருட்களை லிஸ்ட் போட்டு கணவரிடம் வாங்கிவருமாறு கொடுத்தார். வல்லபனும் வந்தியத்தேவனும் வாங்கி வர கிளம்பி விட்டார்கள்.
“உங்க அண்ணா அண்ணிக்கு சொல்லனுமா மேகா?” என்றார் பத்தும்மா.
அவர் யோசனையாக வராஹியை பார்க்க,
பெண்ணின் கண்களில் ஆர்வம் தெரிந்தது. அதன்பின் அவர் யோசிக்கவே இல்லை.
ராமிற்கு முதலில் அழைத்து பேசினார்.
“இந்த காலத்துல இதை எல்லாம் பெருசா வெளிய யாராவது சொல்லுவாங்களா மணி? வராக்கு சங்கடமா இருக்கும் இல்ல? அவளுக்கு இதை அக்செப்ட் பண்ண கஷ்டமா இருந்தா கவுன்சிலிங் கூட்டிட்டு போ” என்றார்.
“———————–”
“வேற என்ன மணி?”
“ஒண்ணுமில்லை.. வச்சிடுங்க”
வராஹியின் முகம் கொஞ்சம் வாடியது.
அடுத்ததாக வினோதாவிற்கு அழைத்தார்.
“சொல்லு மணி.. என்ன இவ்வளவு காலைல கூப்பிட்டிருக்க? பிள்ளைங்க நல்லாத்தானே இருக்காங்க?”
அதை பார்த்து வீர்யாவின் முகமெல்லாம் சிவக்க தொடங்கியது.
அதற்குள் அந்த பக்கம் வினோதாவை யாரோ அழைக்கும் குரல் கேட்கவே, “இன்னிக்கு என் பையன் சாத்விக்கு மொட்டை அடிக்க கிளம்பிட்டு இருக்கோம்.. நான் வந்து பேசுறேன்..” என்று அழைப்பை துண்டித்து விட்டார்.
சற்று நேரம் அமைதியாக கழிந்தது.
“மேகா, அவ கோவிலுக்கு போக கூடாது.. தீட்டு.. மொட்டை அடிக்க கோவிலுக்கு இல்ல போவாங்க.. நீ திரும்ப போன் பண்ணி விஷயத்தை சொல்லு..” என்றார் பத்தும்மா.
வேறு வழி இல்லாமல் மீண்டும் அழைத்தார்.
“என்ன மணி உங்களுக்கு இப்ப பிரச்சனை?”என்று எடுத்ததும் எரிந்து விழுந்தார் வினோதா.
“வராஹி பெரிய பெண்ணாயிட்டா.. உங்களுக்கு தீட்டு.. கோவில் போக கூடாது.”
“———————–”
மீண்டும் வினோதாவை யாரோ அந்தப் பக்கம் கூப்பிட்டார்கள்.
“இப்ப இதை சொல்ல கூடாது தான். என் சூழ்நிலை அப்படி. உங்க அண்ணாவுக்கும் எனக்கும் தான் விவாகரத்து முடிஞ்சுதே.. இனி எனக்கு என்ன தீட்டு?” என்று போனை வைத்து விட்டார்.
வராஹிக்கு கொஞ்சமாக அம்மா என்று இருந்த பாசம் அந்த நொடியில் காணமல் போனது.
“காலையில நல்லெண்ணெய் முட்டை எல்லாம் கொடுக்கணும் இல்ல மேகா, தேவ் வந்துட்டானா இல்லையா பாரு மேகா?”என்று பேச்சை மாற்றி அனைவர் கவனத்தையும் திசை திருப்பினார் பத்தும்மா.
வீர்யா தான் அதிக கோபத்தில் இருந்தாள். அவளால் வினோதாவின் செயலை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி என் வராஹிக்கு இப்படி ஒரு அநியாயத்தை மனசாட்சியே இல்லாமல் செய்ய முடியுது என்று.
வாராஹியை விட வினோதாவின் செயல் வீர்யாவை அதிகமாக தாக்கியது.
கடைக்கு சென்று திரும்பிய வந்தியத்தேவன் பார்த்தது வாசலில் முகமெல்லாம் சிவந்து போய் அமர்ந்திருந்த வீர்யாவை தான். எப்பொழுதும் துறுதுறு என்றே பார்த்த சிறுமி இப்படி இருக்கவும் அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
“வீர்யா என்னாச்சும்மா? ஏன் இப்படி இருக்க?” என்றார் பதற்றமாய்.
அவளுக்கு வேகமாக மூச்சு வாங்கியது.. பேசவே முடியவில்லை.
“வல்லப், போய் தண்ணீ எடுத்திட்டு வா” என்றார் வேகமாக.
“மேகா.. மேகா..” என்று சத்தமாக குரல் கொடுத்தார்.
இவர் குரலை கேட்டு அனைவரும் வேகமாக வெளியில் வந்தனர்.
“யார் என்ன சொன்னீங்க? ஏன் வீர்யா இப்படி இருக்கா?” என்று அனைவரையும் முறைத்து கொண்டே கேட்டார்.
“எலியும் பூனையுமா இருப்பீங்க நீங்க ரெண்டு பேரும்.. இப்ப என்ன அவளுக்காக எங்களை எல்லாம் மிரட்டுற நீ?” என்றார் பத்தும்மா இழுவையாக சூழலை இலகுவாக்கும் பொருட்டு.
“இல்ல அண்ணா, அது வராஹியோட அம்மா…” என்று விளக்கம் கொடுக்க வந்தார் நிவேதா.
“நோ… இனி நீங்க அவங்களை வராஹியோட அம்மான்னு சொல்ல கூடாது” என்று வெடித்தாள் வீர்யா.
“ரிலாக்ஸ்.. ரிலாக்ஸ்.. வீர்யா..” என்று வந்தியத்தேவன் தான் அவளை கூட்டிக்கொண்டு வந்து அமரவைத்தார்.
தன்னை கொஞ்சம் ஆசுவாச படுத்திகொண்டு வராஹியிடம் சென்றாள்.
“இங்க பாரு வரா, நீ கவலைப்படாத சரியா? இந்த டைம்ல சந்தோசமா இருக்கணும். உனக்கு தான் அம்மாவா நம்ம அத்தை இருக்காங்க இல்ல? இனி அவங்க தான் உனக்கு அம்மா.. உன் அத்தம்மா அவங்க சரியா?
சுயநலமா உன்னை விட்டுட்டு போய் இப்படி பேசுறவங்களுக்காக இனி நீ வருத்தப்படக்கூடாது, சரியா?”
வரா தோழியின் கைகளை கெட்டியாக பிடித்துகொண்டாள்.
“என் வராக்கு இனி இவங்க தான் அம்மா.. இவர் தான் அப்பா..” என்றாள் வீர்யா மணிமேகலை வந்தியத்தேவனை காட்டி அனைவருக்கும்.
வரா தோழியை கட்டிக்கொண்டு அப்படி ஒரு அழுகை..
பார்த்துக்கொண்டிருந்த அனைவர் கண்களும் கலங்கத்தான் செய்தது.
மேகா, மெல்ல நடந்த விஷயத்தை வந்தியத்தேவனுக்கு கூறினார். அவருக்கும் வீர்யாவின் கோவம் நியாயமாகவே பட்டது.
சுந்தர்ராஜன் பரிமளாவுடன் ஹரி சாம்பவி மகா வெங்கட் என்று அனைவருமே வந்தனர். அக்கம் பக்கம் உள்ளவர்களை அழைத்து எளிமையாக விருந்து வைத்தனர்.
வீர்யாவிற்கும் பத்துமாவிற்கும் தான் அடிக்கடி முட்டிக்கொண்டது.
சமீபத்தில் தானே அவளும் பெரிய பெண்ணாகி இருந்தாள். அதனால் அவளுக்கு செய்ததை எல்லாம் சரியாக வராஹிக்கும் செய்கிறார்களா என்று மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் வீர்யா.
“என் வயசுக்கு இந்த அரை டிக்கெட் சொல்றதை எல்லாம் கேட்கணுமா” என்று போர் கொடி பிடித்தார் பத்தும்மா..
“அரை டிக்கெட்டா முக்கா டிக்கெட்டான்னு எல்லாம் பேச்சு இல்ல.. நீங்க செய்றதை ஒழுங்கா செஞ்சா நான் ஏன் கேள்வி கேட்க போறேன்”
இவர்கள் பஞ்சாயத்தை மட்டும் பார்த்தால் போதும், மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று நாட்டாமையாக கணவரை நியமித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் மணிமேகலை.
ராமும் வினோதாவும் இல்லாமலே எல்லாம் சுபமாக முடிந்தது.