அகல்கவி 12

அகல்கவி சிலையமுதே 12
Advertisement
அடுத்தநாள் காலையிலேயே தடதடவென கதவு தட்டப்பட, அரைத் தூக்கத்தில் எழுந்து சென்று கதவைத் திறந்தான் யுவன்.
அவனுக்கோ வாசலில் அநியாயத்திற்கு வெட்கப்பட்டவாறு நின்றுக்கொண்டிருக்கும் பொன்னியை பார்த்ததும் அய்யோ என்றிருக்க, “சீக்கிரம் ரெண்டு பேரும் குளிச்சுட்டு வாங்க, எல்லா தயாரா இருக்கு” என்றவர் அவன் முகத்தைப் பார்க்க வெட்கப்பட்டு அங்கிருந்து ஓடியே விட்டிருந்தார்.
Advertisement
Advertisement
கதவை சாற்றியவனோ கட்டிலில் அமர்ந்து தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அகல்யாவை அழுத்தமாக ஒரு பார்வைப் பார்த்தான்.
அவனிடம் வாயைத் திறந்து பேசுவதற்கே அவளுக்கொரு தயக்கம்.
Advertisement
அவளை கண்டுகொள்ளாதது போல தன்னுடைய பொருட்கனை எடுத்துக்கொண்டு யுவன் அறையிலிருந்து வெளியேறியிருக்க, சில கணங்கள் அவன் சென்ற திசையை வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருந்தவளோ அடுத்து ஆக வேண்டியதை செய்ய ஆரம்பித்தள்.
வீட்டிலிருந்த பாதி சொந்தங்கள் எப்போதோ சென்றிருக்க, ஒருசில நெருங்கிய சொந்தங்கள் மாத்திரமே வீட்டில் இருந்தனர்.
இதில் மேகலையோ தன் மகளின் நினைவிலேயே வேதனையில் கரைந்தவர், இரவே சாரதாவுக்கு அழைத்து செய்ய வேண்டிய அதிமுக்கிய கடமையை செய்துவிட்டு இரவோடு இரவாக சங்கரபாண்டியை இழுத்துக்கொணடு வீட்டிற்கே சென்றுவிட்டார்.
காலையுணவை முடித்ததுமே சிவலிங்கம் சென்னை செல்வதற்கு தயாராகி நிற்க, சிறுபிள்ளை போல் தாயை அணைத்து கதறியழும் தன் மனைவியை பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை இட்டவாறு பார்த்துக்கொண்டிருந்தான் யுவனாதித்.
“அம்மா நான் இங்கேயே இருக்கேனே…” இதுவரை ஊரை விட்டு சென்றிராதவளுக்கு இப்போது தாய் வீட்டை விட்டு நிரந்தரமாக செல்வதை நினைத்து அடிவயிறு கலங்க பயத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள் அகல்யா.
“கல்யாணமானா புருஷன் வீட்டுக்குதானே போகணும், அங்க உன் அத்தை ஆர்த்தி தட்டோட உன்னதான் எதிர்பார்த்துட்டு இருப்பாங்க” என்று பொன்னி சொன்னதில், ‘க்கும்! தொடப்பகட்டையோட நிக்காம இருந்தா சரி!’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார் சிவலிங்கம்.
“என் தங்கச்சி இல்லாம கல்யாணம் நடந்திருச்சு, கொஞ்சம் வருத்தமாதான் இருக்கு, ஆனா அவ புரிஞ்சுப்பா. இதுக்கப்பறம் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி நீ நடந்துக்கணும் புரியுதா..” என்று முத்துப்பாண்டி மகளின் தலையை வாஞ்சையோடு வருடியபடி சொல்ல, தந்தையை அணைத்துக்கொண்டாள் அவள்.
மாறி மாறி கண்ணீர்விட்டு இவர்கள் வெளியேறுவதற்குள் ரயில் செல்வதற்கான நேரமும் நெருங்கிவிட, எப்படியோ அடித்துப் பிடித்து ஓடிச் சென்று தங்களுக்கான சீட்டில் அமர்ந்துக்கொண்டனர் மூவரும்.
“டேய் யுவா, சீக்கிரம் ஒரு கார் வாங்கிரு! இதுக்கப்பறம் உன் அத்தை வீட்டுக்கு அடிக்கடி வந்துட்டு போக வேண்டியிருக்கும்” என்று சிவலிங்கம் அகல்யாவை விழிகளால் காட்டி சொல்ல, அவனோ அவரை முறைத்துப் பார்த்தவன் எங்கோ பார்ப்பது போல முகத்தை திருப்பிக்கொண்டான்.
சென்னைக்கு போய் சேரும் வரை அகல்யாவின் பார்வை அடிக்கடி யுவனின் மீது பதிந்தாலும், அவளை திரும்பியும் பார்க்கவில்லை அவன்.
என்னவென்று தெரியாத கோபம் அவனுக்குள்!
சில மணித்தியாலங்கள் கடந்து மூவரும் சென்னைக்கு போய் சேர, வீட்டை நெருங்க நெருங்க இரு ஆண்களின் இதயத்துடிப்பும் பயத்தில் அசுரவேகத்தில் அடித்துக்கொண்டது.
சிவலிங்கமோ அழைப்பு மணியை அழுத்தச் சென்றவர் பின் ஏதோ யோசித்துவிட்டு சட்டென கதவத் திறந்ததும் அதுவோ திறந்துக்கொள்ள, உள்ளே நுழைந்தனர் மூவரும்.
சுற்றிமுற்றி சாரதாவை தேடியவாறு முன்னே சென்ற அகல்யாவின் காதில், “வெளியில போடீ!” என்ற சத்தம் அறை பக்கமாகக் கேட்க, தூக்கி வாரிப்போட்டவளாக திரும்பிப் பார்த்தவளுக்கு சாரதாவின் இந்த தோற்றம் புதிதுதான்.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க பத்ரகாளி போல் நின்றுக்கொண்டிருந்தார் சாரதா.
சிவலிங்கமும் யுவனும் அவரை அதிர்ந்துப் பார்க்க, எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய கதையாக சாரதாவின் விழிகளுக்கு அகல்யாவின் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறு தெரிய, கோபம் எக்குத்தப்பாக எகிறியது.
“அ.. அத்தை” என்று அவள் அழைத்தவாறு அவரருகில் செல்லப் போக, “ச்சீ… வாய மூடுடீ! என் பையன குடும்பமா சேர்ந்து மயக்கிட்டீங்கல்ல, இதென்ன உன் அம்மா வேலையா.. சொல்லுடீ!” என்று காட்டுக்கத்து கத்தினார் பெரியவர்.
“சாரதா கொஞ்சம் அமைதியா பேசு, நம்ம குடும்ப மானத்த நீயே வாங்கிராத” என்று சிவலிங்கம் பற்களைக் கடிக்க, “அட என் வீட்டுக்காரரா நீங்க… பெத்தவ இல்லாம நீங்களே கட்டி கொடுத்துட்டீங்க போல. ரொம்ப நல்லாயிருக்கு.. பையனோட அம்மா எங்கன்னு கேட்டதுக்கு போய் சேர்ந்துட்டான்னு சொன்னீங்களோ!” என்றார் அவர் மனைவி பதிலுக்கு.
அகல்யாவோ சாரதா பேசுவதை விழி விரித்து பார்த்துக்கொண்டிருந்தாள்.
“அம்மா கொஞ்சம் நிறுத்துறீங்களா! அங்கயிருந்த நிலைமை அப்படி.. அது… அது வந்து.. அதை பத்தி உங்களுக்கு சொன்னா புரியாதும்மா” என்ற யுவனுக்கு தன் தாயிடம் இதை சொல்லி புரிய வைக்க முடியாதென்று மட்டும் நன்றாகவே புரிந்தது.
“இவள பத்தி என்ன தெரிஞ்சதோ முன்னாடி மண்டபத்துல மாப்பிள்ள கல்யாணம் வேணாம்னு ஓடி போனான், ஆனா நீ என்னடான்னா இந்த ராசிக்கெட்டள கல்யாணம் பண்ணியிருக்க. அதுவும் நீயா போய் கட்டிக்குறேன்னு சொல்லியிருக்க. எனக்கு எதுவும் தெரியாதுன்னு நினைச்சியா.. அன்னைக்கு உன் அப்பா இவள உனக்கு கட்டிக் கொடுப்பமான்னு கேக்கும் போதே நான் சுதாகரிச்சு இருந்துருக்கணும். எல்லாரும் சேர்ந்து என்னை ஏமாத்திட்டீங்கல்ல..”
கோபமாக ஆரம்பித்து இறுதியில் அழுகையோடு முடித்த சாரதா முந்தானையால் கண்ணீரைத் துடைக்க, அகல்யாவுக்கு தன்னால்தான் எல்லாமே என்ற குற்றவுணர்ச்சி வேறு உள்ளுக்குள் அலைக்கழித்தது.
“அத்தை.. எல்லாமே என்னாலதான். நான்…” அவள் உண்மையை சொல்ல வாயெடுக்க, “அம்மா, அந்த மாதிரி ஒருத்தன அகல் கல்யாணம் பண்றது எனக்கு சரியா படல. அதான் நான் அவள கல்யாணம் பண்றேன்னு சொன்னேன்.. என் தப்புதான்ம்மா, என்னை மன்னிச்சிருங்க!” என்று அவளை குறுக்கிட்டு சொன்னான் யுவன்.
அகல்யாவின் பார்வை யுவன் மீது இயலாமையோடு பதிய, அவளை உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு ஒரு பார்வைப் பார்த்தவன் உடனே முகத்தை திருப்பிக்கொண்டான்.
“எனக்கு எந்த காரணமும் தேவையில்ல, இவள என்னால மருமகளா ஏத்துக்க முடியாது.. ஒழுங்கு மரியாதையா அவள அவ ஊருக்கே அனுப்பி விட்டுரு! நான் உனக்கு பொருத்தமான பொண்ணா கட்டி தர்றேன்” என்று சாரதா மனசாட்சி இல்லாமல் பேச, இரு ஆடவர்களும் இதை சுத்தமாக எதிர்பார்க்கவில்லை.
“அம்மா தெரிஞ்சுதான் பேசுறீங்களா..” என்று யுவன் கோபத்தில் பற்களைக் கடிக்க, “அத்தை, கொஞ்சம் பொறுமையா இருங்க.. நான்..” என்று பேச வந்தவளை குறுக்கிட்டு கத்தினார் சாரதா.
“நீ வாய மூடுடீ! என் பையனுக்கு எந்த வகையிலடீ நீ பொருத்தமா இருப்ப, என் அண்ணன் பொண்ணுதான். அதுக்காக என் பையன் வாழ்க்கை நாசமாகுறத என்னால பார்த்துட்டு இருக்க முடியுமா? குரங்கு கையில பூமாலை கதையால்ல இருக்கு.. உன்னை போய் ச்சே! எப்படி வாழ வேண்டியவன் என் பையன், இப்போ உன்ன மாதிரி ராசிக்கெட்டவள கல்யாணம் பண்ணி… ஒழுங்கா நீயே இங்கயிருந்து போயிரு! இல்லன்னா..”
சாரதா ஆத்திரத்தில் வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டே போக, “போதும் நிறுத்துறீங்களா?” என்று மிச்சமிருந்த பொறுமை காற்றில் பறக்க அந்த வீடே அதிர கத்திவிட்டான் யுவன்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்திலுள்ள ஆட்களோ வீட்டில் நடப்பதை எட்டிப் பார்க்க, வேகமாக சென்று கதவை சாற்றினார் சிவலிங்கம்.
சாரதாவுக்கு நிலைக்கொள்ள முடியவில்லை.
“அவளுக்காக என்கிட்டயே குரல ஒசத்தி பேசுறல்ல..” அவர் விழிகள் சிவக்கக் கேட்க, “எல்லை மீறி பேசுற சாரதா, இப்போ முடிவா என்னதான் சொல்ல வர்ற? உன்னால ஏத்துக்க முடியுமா முடியாதா?” என்று ஒரு முடிவாகக் கேட்டார் பெரியவர்.
யுவனோ கஷ்டப்பட்டு பொறுமையை இழுத்துப் பிடித்து தன் தாயை வெறித்துப் பார்க்க, மகனை ஆதங்கத்தோடு பார்த்தவாறு, “அவ இங்கயிருந்தா நான் இருக்க மாட்டேன், ஊருக்கு போற பஸ்ல அவள ஏத்தி விட்டுட்டு நடந்தது மொத்தத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்துட்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க..” என்று அழுத்தமாக சொன்னார் அவர்.
சிவலிங்கமோ மனைவியை எரிச்சலாகப் பார்க்க, அகல்யாவோ கண்ணீரைத் துடைத்தபடி எதற்கும் தயாராகத்தான் நின்றிருந்தாள்.
இத்தனை கலவரமும் அவளால்தானே என்ற குற்றவுணர்ச்சி வேறு அவளுக்கு!
“முடியாதும்மா, அகல் என்கூடதான் இருப்பா, அவ இனி என்னோட பொறுப்பு, என்னால அவள விட முடியாது” இப்போது யுவனின் வார்த்தைகள் அழுத்தமாக அதேசமயம் நிதானமாக வந்தன.
அகல்யா இத்தகைய வார்த்தைகளை அவனிடமிருந்து சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. குறையாத ஆச்சரியத்தோடு தன்னவனையே இமை வெட்டாமல் பார்த்திருந்தாள் அவள்.
சாரதாவுக்கு மகனின் வார்த்தைகளில் மேலும் கோபம் பெருக்கெடுக்க, “அப்போ வெளிய போ!” என்றதும்தான் தாமதம், “சாரதா…” என்று கத்திய தன் கணவரை உணர்ச்சியற்ற ஒரு பார்வைப் பார்த்தார் அவர் மனைவி.
“என் பையன் என்னை மதிக்கல, நீங்களும் என்னை புரிஞ்சுக்கலன்னா எப்படிங்க..” அவர் தன் கட்டுப்பாட்டை இழந்து வெடித்தழ, அதற்குமேல் யுவனும் அங்கு நிற்கவில்லை.
“என்.. என்னை மன்னிச்சிருங்கம்மா!” தழுதழுத்த குரலில் சொன்னவன் அகல்யாவின் கரத்தைப் பற்றி அங்கிருந்து வெளியேற, மகனை நோக்கி செல்லப் போன சிவலிங்கத்தின் பார்வை மனைவியின் மீதுதான் பதிந்தது
அவர் மேல் மலையளவு கோபம் இருந்தாலும் காதல் மனைவியின் அழுகையை காண முடியவவில்லை அவரால்.
வேகமாகச் சென்று அவர் மனைவியை தன் மார்போடு அணைத்து தேற்ற முயற்சிக்க, வீட்டிலிருந்து வெளியே வந்த யுவனோ அகல்யாவை ஒரு பார்வைப் பார்த்தான்.
அவளால் கண்ணீர் வீடுவதை தவிர வேறு என்னதான் செய்ய முடியும்!
இப்போது வரை ஒரு வார்த்தைக் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
சிறிதுநேரம் அவள் அழுகையை வெறித்துப் பார்த்துவிட்டு உடனே யுவன் ஒரு எண்ணிற்கு அழைத்துப் பேச, அடுத்த பதினைந்து நிமிடங்களில் அரவிந்தின் முன் அமர்ந்திருந்தனர் இருவரும்.
அகல்யாவையும் யுவனையும் மாறி மாறிப் பார்த்த அரவிந்திற்கு தலை சுற்றாத குறைதான்.
“மாமாபொண்ணுக்கு கல்யாணம்னுதானே போன, உனக்கு கல்யாணம்னு ஒரு வார்த்தைக் கூட சொல்லலயே!” என்று அவன் குறையாத அதிர்ச்சியோடுக் கேட்க, “டேய், இதை நாங்களே எதிர்பார்க்கலடா!” என்றான் யுவன் வேகமாக.
அகல்யா நிமிர்ந்தும் பார்க்கவில்லை.
“அம்மாவ சமாளிச்சிரலாம்னு நினைச்சேன்டா, ஆனா அவங்க இவ்வளவு பிடிவாதம் பிடிப்பாங்கன்னு எதிர்பார்க்கல. அதுமட்டுமில்லாம மறுபடியும் இவள கூட்டிக்கிட்டு ஊருக்கு போக எனக்கு பிடிக்கல” அவனிடமிருந்து பெருமூச்சு வெளியேற, நெற்றியை நீவி விட்டவாறு யோசித்தான் அரவிந்த்.
திடீரென ஏதோ ஞாபகம் வந்தவனாக தன் அலைப்பேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்துப் பேசியவன், அழைப்பைத் துண்டித்ததுமே “டேய் யுவா, எனக்கு தெரிஞ்ச ப்ரோக்கர் ஒருத்தங்ககிட்ட பேசினேன், ஒரு வீடு இருக்கு. இங்க பக்கத்துலதான். ஆனா உனக்கு வசதியா இருக்குமான்னு தெரியல.. போய் பார்க்கலாம். சிஸ்டருக்கும் ஓகேன்னா உடனே கன்ஃபார்ம் பண்ணிடலாம்” என்றான் இருவரையும் மறி மாறி ஆர்வமாகப் பார்த்தபடி.
யுவனோ அகல்யாவை ஒரு பார்வைப் பார்த்தவன், “போய் பார்க்கலாம்டா” என்றுவிட்டு உடனே மனைவியையும் அழைத்துக்கொண்டு அரவிந்தோடு அந்த ப்ரோக்கரை சந்திக்கச் சென்றான்.
மேல்தள சிறிய வீடுதான். ஆனால் அந்த இருவருக்கும் அதுவே வசதியாக இருக்க, மித்ராவுடனான திருமணத்திற்கென்று முன்னரே மிச்சம் பிடித்து சேமித்து வைத்திருந்த காசு இப்போது அவனுக்கு உதவியது.
முன்பணமாக கொடுத்து உடனே அந்த வீடை வாடகைக்கு யுவன் எடுத்திருக்க, முந்தானையை இடுப்பில் கட்டி வேகவேகமாக சுத்தம் செய்ய ஆரம்பித்தாள் அகல்யா.
பாதி வேலையை முடித்துவிட்டு பால்கனியில் நின்று வெளியே வெறித்துக்கொண்டிருந்த யுவனுக்கு அடுத்து என்ன செய்வதென்று கூட தெரியவில்லை.
“சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்..” என்று எங்கோ பார்த்த வண்ணம் சொல்லிவிட்டு அரவிந்தோடு வெளியேறியவனை விழிகளில் வலியோடு இவள் பார்த்து நிற்க, அரவிந்திற்கும் ஏதோ சரியில்லை என்று மட்டும் தெரிந்தது.
டீக்கடை முன்னே யோசனையில் ஆழ்ந்திருந்த தன் நண்பனை புரியாமல் பார்த்த அரவிந்தோ, “யுவா.. டேய் யுவா..” என்று அவனை உலுக்க, அவனை நிதானமாகப் பார்த்தவன், “பெரிய தப்பு நடந்து போச்சுடா மச்சா..” என்று கோபமாக காலை தரையில் உதைத்தான்.
அவனை அதிர்ந்துப் பார்த்த மற்றவனோ, “ஏன்டா என்னாச்சு, ஏன் இப்படி நடந்துக்குற?” என்று அவன் கோபத்தை கட்டுப்படுத்த முயல, அவன் கரத்தை உதறிய யுவன், “அவ என்னை காதலிக்கிறான்னு நினைச்சுதான்டா கல்யாணம் பண்ணேன், ஆனா… ஆனா அவ என்னை காதலிக்கல. அவ காதலிச்சது என் அண்ணன் யுகன டா மச்சான்” என்றான் வலியை அடக்கிய குரலில்.
அரவிந்திற்கு ஒன்றுமே புரியவில்லை.
“எதே அண்ணனா..” என்று புருவ முடிச்சு களோடு தன் நண்பனை கேள்வியாகப் பார்த்திருந்தவன், நடந்தது அனைத்தையும் யுவன் சொல்லி முடித்ததும் அதிர்ந்தேவிட்டான்.
-Sheha zaki
