Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 13

 

அகல்கவி சிலையமுதே 13

 



Advertisement

 

“எதே! நீ.. நீ ட்வின்ஸ்ஸா, உனக்கு அண்ணன் இருக்கானா? என்னடா ஒரே குழப்பமா இருக்கு..” என்று அரவிந்த் தலையை பிய்த்துக்கொள்ளாத குறையாகக் கேட்க, இடுப்பில் கைக்குற்றி தரையை வெறித்திருந்தவன் மேலும் கீழும் தலையாட்டி வைத்தான்.

 

Advertisement

அரவிந்திற்கோ யுவனுக்கு இரட்டை சகோதரன் இருந்ததே பெரும் அதிர்ச்சி என்றால், அகல்யா அவனுடைய சகோதரனை காதலித்ததை தெரிந்ததும் மயக்கம் வராத குறைதான்.

Advertisement

 

“மச்சான் இப்படி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத.. ரெஸ்ட் இன் பீஸ்டா” யுவனின் தோளில் கரத்தை வைத்து வராத கண்ணீரை வரவழைத்தபடி அவன் சொல்ல, அவன் முதுகில் இரண்டு போடு போட்ட மற்றவனுக்கு பைத்தியம் பிடிக்காத குறை.

 

Advertisement

“விளையாடாதடா முண்டம்! அவ என்னை காதலிச்சிருக்கான்னு தெரிஞ்சதாலதான் நான் கட்டிக்கிறேன்னு தைரியமா சொன்னேன், ஆனா இப்போ.. அவ என்னை காதலிக்கல யுகாவதான் காதலிச்சிருக்கான்னோ தெரிஞ்சதுலயிருந்து என்னால முடியலடா. ஒரு மாதிரியா இருக்கு.. தப்பு பண்ணிட்டோமோன்னு தோனிட்டே இருக்கு” அவனுடைய வார்த்தைகள் இயலாமையோடு வெளிவந்தன.

 

அரவிந்திற்கு அவனின் நிலை புரியாமல் இல்லை.

 

“புரியுதுடா மச்சான், ஆனா இப்போ உன் அண்ணன் உயிரோட இல்ல. என்ட் நீங்கதான் ஒன்னு சேரணும்னு விதி எழுதியிருக்கு. இப்போ அகல்யாவோ நீயோ இதை ஏத்துக்கிட்டுதானே ஆகணும்!” என்று ஒரு நல்ல நண்பனாக அவன் அறிவுரை சொல்ல, “பார்க்கலாம்.. ஒருவேள அகலுக்கு பிடிக்கலன்னா நான் அவளவிட்டு விலக தயாராதான் இருக்கேன். ஆனா.. ஆனா ஏன் மச்சா எனக்கு மட்டும் இப்படி நடக்குது. நான் காதலிச்ச பொண்ணும் எனக்கு கிடைக்கல, என்னை காதலிச்சிருக்கான்னு கட்டிக்கிட்டேன். ஆனா அதுவும் பொய்யாகிருச்சு. நான் அப்படி என்னடா பாவம் பண்ணேன்?” என்றவனுடைய குரல் தழுதழுக்க, அவனின் வார்த்தைகள் அத்தனை வலியை தாங்கியிருந்தன.

 

அவன் தோளில் ஆறுதலாக கையைப் போட்ட அரவிந்த், “விடு மச்சான், கூடிய சீக்கிரம் எல்லா சரியாகிரும். சரி வா போகலாம், தங்கச்சி தனியா இருக்கா” என்று சொல்லிக்கொண்டே முன்னே நடக்க, யோசனையோடு அவன் பின்னால் சென்றான் யுவனாதித்.

 

இரவு வரை அங்கேயே இருந்து சிலபல வேலைகளை செய்து கொடுத்தவன், யுவன் வேண்டாமென்று மறுத்தும் வீட்டிற்கு தேவையான சில பொருட்களையும் வாங்கிக் கொடுத்துவிட்டே சென்றான் அரவிந்த்.

 

இப்போது வீட்டில் இரூவர் மட்டுமே..

 

சில கணங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொள்ள, முதலில் சுதாகரித்து பேச வாயெடுத்தாள் அகல்யா.

 

“மாமா… அது வந்து..  அப்பா கால் பண்ணாரு.. சாரதா அத்தை அப்பாக்கு கால் பண்ணி சண்டை போட்டு பெரிய பிரச்சனை ஆகிருச்சு..” என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு, “பெரிய மீசை என்ன சொல்லிச்சு?” என்று கேட்டான் சந்தேகமாக.

 

அவன் தன் தந்தையை கேலியாக அழைப்பதில் முறைத்துப் பார்த்தவள், “அது.. அப்பா சொன்னாரு.. மாமா உனக்காகதான் எல்லாமே பண்ணாரு அதனால மாமா கூடவே இரு, வீட்டுக்கு வந்துராதேன்னு..” என்று இறுதி வசனத்தை இழுக்க, “க்கும்! அதானே பார்த்தேன்” என்று நொடிந்துக்கொண்டான் யுவன்.

 

அகல்யாவுக்கு ஒரு மாதிரியாகிப் போனது.

 

“மாமா.. என்னாலதான் உங்களுக்கு இத்தனை கஷ்டமும், என்னாலதான் அத்தை உங்களையும் துரத்தி விட்டுட்டாங்க.. கொஞ்சநாள்ல நான் அப்பாகிட்ட எடுத்து சொல்லி ஊருக்கு போயிடுறேன்.. நீங்க அத்தை சொல்ற பொண்ண கட்டிக்கோங்க..”

 

என்று அவள் தரையை பார்த்தபடி தயங்கித் தயங்கி பேசி முடிக்க, ஆடவனோ அவளை முறைத்துப் பார்த்தான்.

 

“அப்படியா.. உனக்கு ரொம்ப பெரிய மனசுதான். என்ட் அதை கொஞ்சநாள்ல பார்த்துக்கலாம். இப்போ வீட்டுக்கு என்னெல்லா வாங்கணும்னு லிஸ்ட்டு போடு.. நாளைக்கு நான் வேலையில இருந்து வந்ததுமே வாங்க போகலாம்”

 

என்று சொல்லிக்கொண்டே அவன் சுவற்றோடு சாய்ந்தபடி தரையில் அமர்ந்துக்கொள்ள, அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்துக்கொண்டாள் அகல்யா.

 

அவனும் ‘அதை வாங்க வேண்டும்.. இதை வாங்க வேண்டும்..’ என்று அவன் பாட்டிற்கு சொல்லிக்கொண்டே போக, அவனையே பார்த்திருந்தவள், “மாமா…” என்று அழைத்ததும்தான் தாமதம், அவளை புருவ முடிச்சுகளோடு கேள்வியாகப் பார்த்தான் யுவன்.

 

“நீங்.. நீங்க இன்னும் மித்ரா அக்காவதான் காதலிக்கிறீங்களா?” என்று அவள் தன் மனதில் அரித்துக்கொண்டிருந்த சந்தேகத்தை கேட்டுவிட, ஆடவனின் முகமோ கோபத்தில் சிவக்க பாறைப் போல் இறுகிப் போனது.

 

அதற்குமேல் பேசாமல் எழுந்து விறுவிறுவென்று அவன் வெளியில் சென்றுவிட, தன்னைத்தானே நொந்துக்கொண்டாள் அகல்யா.

 

அன்றையநாள் கழிந்து அடுத்தநாளும் விடிந்தது.

 

வேலைக்கு செல்வதற்காக யுவன் தயாராகி நிற்க, பெக்கபெக்கவென விழித்துக்கொண்டு நின்றிருந்தாள் அகல்யா.

 

“மாமா.. பசிச்சா நான் என்ன பண்றது?” என்று அவள் புரியாமல் கேட்க, “சாப்பிடு..” என்று இடது கரத்தில் கைக்கடிகாரத்தை கட்டியவாறு அலட்சியமாக சொன்னான் அவன்.

 

அவளுக்கோ அவனை மூக்கு விடைக்க முறைக்க மட்டும்தான் முடிந்தது.

 

அவளின் முறைப்பை இதழுக்குள் அடக்கப்பட்ட சிரிப்போடு பார்த்தவன், “இந்த காச வச்சிக்க, இங்க பக்கத்துல ஹோட்டல் இருக்கு. ஏதாச்சும் வேணும்னா போய் வாங்கிக்கோ.. வெளியில போறேன்னா வீட்டை பூட்டிட்டு போ, நான் வந்தததும் வீட்டுக்கு தேவையானத வாங்க போகலாம்.. என்ட் ரொம்ப முக்கியமான விஷயம் நாய்கள் ஜாக்கிரதை!” என்று படபடவென பேசி முடித்து சென்றுவிட, இவளுக்கோ ஆயாசமாய் போய்விட்டது.

 

இதுவரை அவள் இத்தனை தனிமையாக உணர்ந்ததில்லை. கையிலிருந்த பட்டன் ஃபோனில் எத்தனை நேரம்தான் அந்த பாம்பு கேம்மையே அவள் மீண்டும் மீண்டும் விளையாடுவது!

 

எப்படி நேரத்தை கடத்துவதென்று தெரியாமல் அவள் விழித்துக்கொண்டிருக்க, ஏனோ அன்றையநாள் நேரமும் மெதுவாக நகர்வது போல ஒரு உணர்வு அவளுக்கு.

 

புதிய இடம், புது முகங்கள். நெருங்கியவர்களுடன் அவள் பேசிப் பழகுவதே பெரும்பாடு, இதில் எப்படி அவள் இங்கு இருப்பவர்களுடன் வாய் திறந்து பேச?

 

பயந்தபடியே வீட்டிலிருந்து வெளியேறி பக்கத்திலிருந்த ஹோட்டலுக்கு சென்று உணவை வாங்கிக்கொண்டவள், வயிறு நிறைய உண்டுவிட்டு ஒரு குட்டித் தூக்கம் ஒன்றை போட்டு விழிப்பதற்குள் யுவனும் வந்திருந்தான்.

 

அவனைப் பார்த்ததும்தான் அவளுக்கு ‘அப்பாடா!’ என்றிருக்க, அத்தனை களைப்போடு விழிகளை மூடி தரையில் சாய்ந்துக்கொண்டவனைப் பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது.

 

அவனையே பாவமாகப் பார்த்தபடி அவள் நின்றுக்கொண்டிருக்க, விழிகளைத் திறக்காமல் “என்னை சைட் அடிச்சது போதும், சீக்கிரம் ரெடியாகு, போகலாம்” என்றவன் மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்து ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, அதில் அதிர்ந்தவள் வேகவேகமாக தயாரானாள்.

 

பழுப்புநிற குர்த்தியில் கழுத்தில் புதுத் தாலி மற்றும் நெற்றி வகுட்டில் குங்குமம் என ஒப்பனையே இல்லாமல் நின்றிருந்தவளை ஒரு பார்வைப் பார்த்தவன் முன்னே சென்று பைக்கில் ஏறிக்கொள்ள, அவனை தயக்கமாகப் பார்த்தாள் அவள்.

 

அவளோ அமராமல் திருதிருவென்று விழித்துக்கொண்டிருப்பதை கவனித்த யுவன், “இப்போ எதுக்கு நின்னுட்டு இருக்க?” என்று கடுப்பாகக் கேட்க, “இல்ல அது.. பைக்ல போய் எனக்கு பழக்கமில்ல அதான்…” என்று வார்த்தைகளை இழுத்தாள் அகல்யா.

 

அதில் சலிப்பாக விழிகளை உருட்டியவன், “அப்போ அம்மணி நடந்து வர்றீங்களா?” என்று கேலியாகக் கேட்டு, அவள் தட்டுத்தடுமாறி ஏறியதும் மின்னல் வேகத்தில் வண்டியை பறக்கவிட்டான்.

 

அகல்யாவோ அவன் தோளைப் பற்றிக்கொள்வதா வண்டியைப் பற்றிக்கொள்வதா என்று தெரியாமல் தடுமாற, அவன் ஒரு கடைக்கு முன் வண்டியை நிறுத்தியதும்தான் அவளுக்கு நிம்மதி பெருமூச்சே வெளியானது.

 

வீட்டிற்கு தேவையான அடுப்பிலிருந்து  மெத்தை தலையணை வரை வாங்கிக்கொண்ட யுவன், அடிக்கடி பர்சிலும் கார்டிலும் இருந்த பணத்தையும் பார்த்துக்கொள்ள, இவளுக்கோ பாவமாய் இருந்தது.

 

“உனக்கு ஏதாச்சும் வேணும்னா சீக்கிரம் எடு!” அவன் எங்கோ பார்த்துக்கொண்டு சொல்ல, “இல்ல மாமா வேணம்..” என்றுவிட்டு அமைதியாக நின்றுக்கொண்டாள் அவள்.

 

முன்னே யுவன் பைக்கை செலுத்த அத்தனைப் பொருட்களையும் ஆட்டோ ஒன்றில் போட்டு அவன் பின்னாலேயே வந்தாள் அகல்யா.

 

வீட்டிற்கு முன்னே இவன் வண்டியை நிறுத்த, வாசலில் நின்றிருந்தவரை பார்த்ததும் யுவனின் விழிகள் விரிய, “அப்பா….” என்றழைத்தவாறு வேகமாக வண்டியிலிருந்து  இறங்கி ஓடிச் சென்றான் அவன்.

 

வாசலில் நின்றிருந்த சிவலிங்கத்திற்கோ மகனைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம்.

 

“ரொம்பநேரம் வெயிட் பண்றீங்களாப்பா, அம்.. அம்மா வரல்லையா? என்மேல கோபமாதான் இருக்காங்களா?” என்று வேதனை நிரம்பிய குரலில் அவன் கேட்க, “கூடிய சீக்கிரம் அவ புரிஞ்சுப்பா, ஆமா.. என் மருமக எங்க?” என்று சுற்றிமுற்றி பார்த்தவாறு கேட்டார் சிவலிங்கம்.

 

அவளோ இரு கரங்களிலும் பொட்களைத் தூக்கிக்கொண்டு தட்டுத்தடுமாறி ஆட்டோவிலிருந்து இறங்க, வேகமாகச் சென்று அவள் கையிலிருந்ததை வாங்கிக்கொண்டவன் ஆட்டோவுக்கான பணத்தை கொடுத்துவிட்டு பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்குள் எடுத்து வந்தான்.

 

“வீடு நல்லா இருக்குப்பா, நான் இங்க வந்தது சாரதாவுக்கு தெரியாது. தெரிஞ்சா காளி அவதாரம்தான் எடுப்பா” உள்ளுக்குள் மகனை பிரிந்ததில் துக்கம் அடைத்தாலும் வெளியில் கேலியாகச் சொல்ல, விழிகளுக்கு எட்டாத புன்னகைப் புரிந்தான் அவன்.

 

சிறிதுநேரம் பேசிவிட்டு நேரத்தைப் பார்த்த சிவலிங்கத்திற்கு பதற்றம் தொற்றிக்கொள்ள, “அப்போ நான் வர்றேன்ப்பா.. நேரமாச்சு” என்று சொல்லிக்கொண்டே மகனின் கையில் தான் கொண்டு வந்த பணத்தை திணிக்க, “அப்பா இதை நான்தான் பண்ணணும். ஆனா நீங்க..” என்று மறுத்தான் யுவன்.

 

“கஷ்டத்துல இருக்கும் போது யாரு வேணா யாருக்கும் கொடுக்கலாம்ப்பா, நான் சம்பாதிக்கிறதும் உனக்காகதானே!” என்றவர், “நல்லா பார்த்துக்க” என்றுவிட்டு அகல்யாவின் தலையை வாஞ்சையோடு வருடினார்.

 

வாசல் வரை சென்றவர் சட்டென நின்று திரும்பிப் பார்த்துவிட்டு, “நீங்க சீக்கிரம் நல்ல விஷயம் சொன்னீங்கன்னா சாரதாவ சமாதானப்படுத்திரலாம், படத்துல கூட காமிப்பாங்களே!” என்று சொல்ல, அகல்யாவோ சங்கடத்தோடு திரும்பிக்கொண்டாள் என்றால் ‘இவரை என்ன செய்தால் தகும்?’ என்ற ரீதியில் தந்தையை முறைத்துப் பார்த்தான் யுவன்.

 

இருவரும் இரவுணவை முடித்துவிட்டு உறங்கப் போக, புது மெத்தையில் இரு வேறு திசையில் ஒருக்களித்துப் படுத்திருந்தனர் யுவனும் அகல்யாவும்.

 

விடிந்ததும் முதலில் கண்விழித்த யுவனோ தாமதமாகிவிட்டதோ என்ற பதற்றத்தில் எழப் போக, அவனுடலில் ஏதோ ஒரு அழுத்தம்.

 

குனிந்துப் பார்த்தவன் அப்போதுதான் தன்னை அணைத்தவாறு உறங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து அதிர்ந்து விழிக்க, அவனுடல் அசைந்ததில் நெளிந்தவள் தலையை நிமிர்த்தி விழிகளை மெல்ல திறந்துப் பார்த்தாள்.

 

அவனோ அசையாமல் அவளையே பார்த்துக்கொண்டிருக்க, அவன் விழிகளையே பார்த்திருந்த அகல்யாவுக்கு நடப்பை ஊணரவே சில நிமிடங்கள் எடுத்தன.

 

அப்போதே தான் செய்யும் காரியத்தை உணர்ந்து பதறியபடி அவள் விலகியமர்ந்துக் கொள்ள, அவளையே பார்த்தபடி எழுந்தமர்ந்தவனுக்கு ஒரு ஆண்மகனாக பெண்ணிடத்தில் ஏற்படும் உணர்ச்சிகள் தூண்ட ஆரம்பித்தன.

 

அவள் கழுத்திலுள்ள மங்களநாண் வேறு அவன் உரிமையை எடுத்துக்காட்ட, தலையை அழுந்தக் கோதி உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டவாறு எழுந்து குளியலறைக்குள் நுழைந்துக்கொண்டான்.

 

அடுத்து வந்த நாட்கள் வேகமாகவே நகர, அன்று ஃபேக்டரியில்…

 

“சார், என்னை கூப்டீங்களா?” என்று ராஜேந்திரனின் அறைக் கதவை தட்டிவிட்டு யுவன் உள்ளே நுழைய, “ஆமா யுவா, இதை எடுத்துக்க! இது உனக்கான கமிஷன்” என்று அவன் முன்னே ஒரு கவரை வைத்தார் ராஜேந்திரன்.

 

அதை அதிர்ந்துப் பார்த்தவன், “கமிஷனா.. நெஜமாதான் சொல்றீங்களா சார், ஆனா.. புது ஸ்டாஃப்ஸுக்கு கமிஷன் இல்லன்னு சொன்னாங்க” என்று தயக்கமாக இழுக்க, “ஆமா புது ஸ்டாஃப்ஸுக்கு முதல் வருஷம் கமிஷன் இல்லதான், ஆனா.. உன்னோட வேலை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குப்பா, அதான்…” என்றார் அவர் புன்னகையோடு.

 

யுவனுக்கு நடப்பதை கிரகிக்கவே முடியவில்லை.

 

அன்று வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கவென்று தெரிந்த ஒருவரிடம் எடுத்த கடனைப் பற்றி அவன் யோசிக்காத நிமிடமில்லை.

 

இப்போது கடவுளே அவனுக்கு இவர் மூலம் உதவி செய்வது போல இருக்க, சந்தோஷத்தோடு அதை வாங்கிக்கொண்டவன் அவருடைய அறையிலிருந்து வெளியே வந்ததும்தான் தாமதம், அங்கு அவனோடு வேலைப் பார்க்கும் ஒரு சிலரின் முகத்தில் அதிருப்தி.

 

அதை கண்டுகொண்டாலும் காணாதது போல அவன் தன் வேலையில் கவனமாக, அவன் பக்கத்தில் வந்த சிதம்பரமோ, “என்ன தம்பி, அதுக்குள்ள ஐயா உங்களுக்கு கமிஷன் கொடுத்திருக்காரு போல.. ஆனா நாங்கெல்லா வேலைக்கு சேர்ந்த புதுசுல கண்டுக்கவே மாட்டாரு. இரண்டு வருஷம் வெறும் சம்பளம் மட்டும்தான்” என்றார் அப்பட்டமான பொறாமையோடு.

 

அவரை திரும்பி ஒரு பார்வைப் பார்த்தவன், “ஓஹோ.. அப்படியா சரி சரி” என்றுவிட்டு அதற்குமேல் பேசாமல் வேலையைப் பார்க்க, “ஆமா.. நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே! அந்த சின்ன ஃபேக்டரில வேலை பார்த்த உங்கள சட்டுன்னு இங்க வேலைக்கு வச்சாரு.. இப்போ ஆறு மாசம் கூட முடியல அதுக்குள்ள கமிஷன் கொடுத்திருக்காரு. உங்களுக்குள்ள ஏதாச்சும் ரகசியம் இருக்கா.. இல்ல சும்மா கேக்குறேன்..” என்றவனின் வார்த்தைகளில் வன்மம் அப்பட்டமாக வெளிப்பட்டது.

 

பொறுமை காற்றில் பறக்க, கை முஷ்டியை இறுக்கி கோபத்தை கட்டுப்படுத்தியவன், “நீங்க ஒழுங்கா வேலை பார்த்தா ஐயா ஏன் உங்கள கவனிக்காம இருந்திருக் க போறாரு?” என்றதும்தான் தாமதம், அவனை சிதம்பரம் கோபத்தில் தள்ளிவிட, அவன் சட்டைக் காலரைப் பற்றினான் யுவனாதித்.

 

-Sheha zaki

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!