Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அறம் காக்கும் அன்பு

அறம் காக்கும் அன்பு 21

அத்தியாயம் 21

“ஹலோ ம்மா.. எப்படி இருக்கீங்க? ஒரு சந்தோசமான விஷயம்..” என்றார் ராம் கைப்பேசியில் ஆரவாரமாக.



Advertisement

“நல்லா இருக்கேன் ராம். ரொம்ப நாள் அப்புறம் இப்ப தான் உன் குரல்ல ஒரு துள்ளல் தெரியுது? என்ன விஷயம்?”

“எங்க ஆபிஸ்ல நான் லீட் பண்ண ப்ராஜெக்ட் ரொம்ப பெரிய சக்ஸஸ்.. அதனால எனக்கு பெரிய ப்ரோமோஷன் கொடுத்திருக்காங்க. பெஸ்ட் எம்ப்ளாய் ஆப் தி இயர் அவார்டும் கொடுக்கிறதா சொல்லி இருக்காங்க..”

Advertisement

Advertisement

“சூப்பர் டா.. ரொம்ப சந்தோசம்..”

“இது ரொம்ப பெரிய ப்ரோமஷன் ம்மா.. கிட்டத்தட்ட இங்க யூ.கே பிரான்ச் ஆஃபீஸ்கே நான் தான் ஹெட் மாதிரி”

Advertisement

“ராத்திரி பகலா கண் முழிச்சு உழைச்சதுக்கான பலன் ராம். நிஜமாலுமே ரொம்ப பெருமையா இருக்கு டா”

“நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்கம்மா? அப்பா பக்கத்துல இருக்காங்களா? கொடுங்கம்மா அப்பாகிட்டயும் சொல்லிடறேன்”

“உங்க அப்பா இப்ப தான் டா கிளம்பி மகா வீட்டுக்கு போனாரு..”

“ஹரி பையன் எப்படி இருக்கான் ம்மா? அப்புறம் மணி பொண்ணு?”

“நல்லா இருக்காங்க ராம். நீ வரா, வல்லபன் கிட்ட விஷயத்தை சொல்லிட்டியா? என்ன சொன்னாங்க ரெண்டு பேரும்? ”

“இனி தான் ம்மா பேசணும். ஸ்கூல் போயிருப்பாங்கல. இந்த வருஷம் பசங்களை கூட இங்கயே கூட்டிட்டு வரலாம் ம்மா.. எங்க ஆஃபீஸ்லயே வீசாலாம் பார்த்துப்பாங்க”

“நீயே அங்க ஒத்தையில கிடந்து தடுமாறிட்டு இருக்க.. இதுல பிள்ளைங்களை கூட்டிட்டு போய் என்னன்னு சமாளிக்க முடியும் ராம்?”

“பசங்க தான் இப்ப வளர்ந்துட்டாங்க இல்ல ம்மா.. அவங்களை தனியா பார்த்துக்க என்ன இருக்கு.. “

“ஏன்டா, உங்க நாலு பேரையும் ஒரே மாதிரி தானே பெத்து வளர்த்தேன்.. மகாவுக்கும் மணிக்கும் இருக்கிற அறிவு ஏன்டா உனக்கும் ஹரிக்கும் இல்லாம போச்சு..”

“என்னம்மா இப்படி சொல்றீங்க?” என்றார் ராம் கொஞ்சம் இறங்கிவிட்ட குரலில். பின்னே எப்பொழுதும் ராமிற்கும் ஹரிக்கும் தான் பரிமளாவிடத்தில் செல்லம் அதிகம்.

“பின்ன என்னடா.. தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன், டைவர்ஸ் பண்ணாதேன்னு.. கேக்கல.. ஹாஸ்டல்ல பிள்ளைகளை தள்ளிவிட்டுட்டு நீ பாட்டுக்கு வெளிநாட்டுக்கு போயிட்ட..

தவிச்சு நின்ன பிள்ளைங்க, மணிக்கூட போய் இப்ப தான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க.. பிள்ளைங்க வளந்துட்டாங்கன்னா என்ன அர்த்தம்? வயசு பிள்ளைங்க கூட பொறுப்பா ஒருத்தர் இருக்க வேண்டாமா?”

“இல்லம்மா.. அது நான் என்ன சொல்ல வரேன்னா”

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம்.. இன்னொரு கல்யாணம் செஞ்சுக்கிறியா? அப்புறம் வேணும்னா பசங்களை உன் கூட வச்சிக்கோ”

“என்னம்மா நீ? எனக்கு கல்யாணத்துல எல்லாம் விருப்பம் இல்லை. இப்ப தான் நான் ஆசை பட்ட மாதிரி சாதிக்க ஆரம்பிச்சிருக்கேன். மணிக்கும் குழந்தை பிறந்துடுச்சு.. இன்னும் என் பிள்ளைகளை பார்த்துகிறது அவங்களுக்கு கஷ்டமா இருக்கும்னு யோசிச்சுதான் இங்க கூப்பிடுக்கலாம்னு”

“நீ யோசிச்சு ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்..”

“ஏன் ம்மா இப்படி கோவமா பேசுறீங்க?”

“பின்ன என்ன டா.. நீ என்னடான்னா அம்சமா இருந்த குடும்பத்தை உடைச்சு தனியா எங்கேயோ போய் இருக்குற.. உன் தம்பி அதுக்கும் மேலே.. தங்கமான பொண்ண கல்யாணம் பண்ணியும், மாமனார் கூட கூட்டு சேர்ந்து எல்லாம் தப்பு தப்பா பண்ணி, இப்ப சாம்பவி மகா வீட்ல இருக்கு. ஹரியை பிள்ளை முகத்தை கூட பார்க்க விடலை.

மணி உன் பிள்ளைங்களுக்கு பாக்குறா.. மகா ஹரி பையனுக்கு பாக்குறா.. அவங்களுக்கு இருக்கிற பொறுப்பு ஏன்டா உங்களுக்கு இல்லாம போச்சு..”

“————-”

“எனக்கு என்னமோ போல இருக்கு ராம்.. நீயும் ஹரியும் நிம்மதியா குடும்பமா வாழ்றத பார்க்க முடியலையே”

“எனக்கு என் தப்பு புரியுதும்மா.. பிள்ளைங்களை நான் விட்டிருக்க கூடாது தான். வினோதாவை நான் உண்மையா நேசிச்சேன் ம்மா.. உனக்கே தெரியும் நான் எப்படி குடும்பத்தை பார்த்துக்கிட்டேன்னு.. அவ இன்னொருத்தனை பிடிச்சிருக்குனு சொன்னப்ப எனக்கு என்ன செய்றதுன்னு தெரியலை.. எனக்கு ஒரு மாதிரி அவமானமா இருந்துச்சு.. அதான் அசிங்கம் இல்லாம கௌவரவமா பிரிஞ்சு வந்துடனும் யோசிச்சு இங்க வந்துட்டேன்.. “

“அவ மட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு குழந்தையும் பெத்து சந்தோசமா இருக்காளே டா.. நீ ஏன்டா தனியா இருக்கணும்?”

“வினோதா எப்படி இருந்தாலும், நான் அவளை விரும்பினது நிஜம் ம்மா.. என்னால இன்னொரு பொண்ணு கூட எல்லாம் வாழ முடியாது. எனக்கு இந்த வாழ்க்கை பிடிச்சிருக்கு ம்மா.. “

“என்னமோ போ ராம்.. விடு.. சந்தோசமா பேசுன பிள்ளைக்கிட்ட நான் தான் சங்கடமா பேசிட்டேன். கஷ்டப்பட்டு சாதிச்சிருக்க.. சந்தோசமா இருடா”

“நான் அப்பாகிட்டயும் பசங்ககிட்டயும் பேசுறேன் ம்மா..பாய்” என்று வைத்துவிட்டார் ராம்.

மாலை விஷயத்தை வரா வல்லபனிடம் ஆசையாக கூறினார்.

“காங்கிராட்ஸ் ப்பா” என்று முடித்துக்கொண்டான் மகன்.

“ஹாப்பி பார் யூ ப்பா” என்று முடித்துக்கொண்டாள் மகள்.

அவ்வளவு தானா என்று கொஞ்சம் ஏக்கமாக போனது அவருக்கு.

“உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க வரா, வல்லபா.. “என்றார் ஆசையாக.

“எங்களுக்கு என்னப்பா வேணும்.. இங்க நானாவும் அத்தம்மாவும் நாங்க கேட்காமலே எல்லாம் வாங்கி தந்துடறாங்க”

“நீங்க இங்க அப்பாகூட வந்துடறீங்களா? இங்க ஸ்கூல் எல்லாம் விசாரிக்கவா? இங்க ரொம்ப நல்லா இருக்கும்”

“நாங்களா? ஏன்? எதுக்கு?” என்றனர் இருவரும் அதிர்ச்சியாகி.

“நாம மூணு பேரும் ஒன்னா இருக்கலாம் இல்ல?”

“எங்க கூட இருக்கணும்னா நீங்க இங்க வாங்க ப்பா” என்றாள் வராஹி.

“இப்ப தானே வரா, அப்பாக்கு ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு. அதை விட்டுட்டு எப்படி அங்க வரமுடியும்? அதுவுமில்லாம இங்க படிக்கிறது எல்லாம் உங்களுக்கு ரொம்பவே நல்ல சான்ஸ்”

ஹாலில் லேப்டாப்பில் தான் வீடியோ அழைப்பில் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் வீர்யா வந்தாள்.

“ஹாய் அங்கிள்” என்று ராமிற்கு ஒரு ஹாய் கூறிவிட்டு வராஹி பக்கத்தில் அமர்ந்தாள்.

“ஹாய் வீர்யா.. எப்படி இருக்க? ஒரு ஹாப்பி நியூஸ்..” என்றார் ராம்.

“யாருக்கு ஹாப்பி நியூஸ், உங்களுக்கா எங்களுக்கா?” என்று கேட்டாள் வீர்யா பதிலுக்கு.

வீர்யாவிடம் ஜாக்கிரதையாக தான் எப்பொழுதும் பேசுவார். ‘எப்படி தான் இப்படி கேள்வி கேட்குதோ?’ என்று நினைத்து கொண்டு, அமைதியாக “எனக்கு ப்ரோமோஷனும் பெஸ்ட் எம்பிளாய் ஆப் தி இயர் அவார்டும் கிடைச்சிருக்கு.. இது ரொம்ப ப்ரெஸ்டீஜியசான அவார்ட்”

“ஓ.. அப்ப உங்களுக்கு தான் ஹாப்பி நியூஸ் இல்ல?”

‘குட்டி சாத்தான், ஒரு கங்கிராட்ஸ் சொன்னா என்னவாம்?’ என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டு வெளியே சிரித்து வைத்தார்.

“நீயே சொல்லு வீர்யா, உன் பிரென்ட் கிட்ட. யூகேல படிக்கிறது எல்லாம் எவ்வளவு பெரிய வாய்ப்பு.. இங்க வாங்கன்னு சொன்னா ரெண்டு பேரும் எதுக்குன்னு கேக்குறாங்க?”

“நீங்க அங்க கூப்பிட்டா, எதுக்குன்னா கேட்டாங்க?”

“ஆமா வீர்யா. எத்தனை குழந்தைங்க வெளிநாட்டுல படிக்கணும்னு ஆசை படறாங்க. இவங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திக்க தெரியலை”

“கரெக்ட் அங்கிள்”

“பாரு உனக்கு புரியது.. அதான் உன்கிட்ட சொல்றேன். அவங்களுக்கு கொஞ்சம் புரிய வைம்மா”

லாப்டாப்பிற்கு பின்பக்கம் தான் பத்தும்மாவும் மணிமேகலையும் அமர்ந்திருந்தார்கள்.

“ஏன் மேகா, உங்க அண்ணா இப்படி அவனா வந்து வலையில் விழுகுறான். நல்ல ஆள் கிட்ட நியாயம் கேக்குறான். கிழிச்சு தொங்க விட போறாப்பாரு இப்ப” என்றார் பத்தும்மா மருமகளிடம் மெல்ல.

“விடுங்க பத்து, ராம் அண்ணாக்கு எல்லாம் அவ தான் கரெக்ட்..”

“என்ன வரா இது, எவ்வளவு பெரிய ஆஃபர் கொடுக்குறாங்க.. நீங்க ஏன்னு கேக்குறீங்களாமே?” என்றாள் வீர்யா வராஹியிடம் நக்கல் குரலில்.

“விடு வீரு.. பாவம் அப்பா..” என்றாள் வராஹி தோழியை அறிந்தவளாக.

“யாரு பாவம்.. யாரு அப்பா.. இல்ல யாரு அப்பா?” என்று சுருதியை கூட்டினாள் வீர்யா.

ராமிற்கு பக்கென்று ஆனது.

“இங்க பாருங்க அங்கிள், உங்க ஊசிப்போன ஆஃபர் இங்க யாருக்கும் வேண்டாம். வேண்டாம்னு பட்டுன்னு சொல்லாம, ஏன் எதுக்குன்னு கேள்வி கேட்குறாங்க.. என்ன செய்ய?”

“இல்ல வீர்யா, அன்னிக்கு சூழ்நிலை நான் அவங்களை கூட்டிட்டு வர முடியலை.. ஆனா இப்ப அப்படி இல்ல, என்னால அவங்களை கூட வச்சுக்க முடியும்..”

“உங்களுக்கு மட்டும் தான் சூழ்நிலை மாறுமா? அன்னிக்கு சூழ்நிலை, என் வரா அப்பா அம்மாக்காக ஏங்கி நின்னா.. இப்ப அப்படி இல்ல.. அவ ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருக்கா.. அதை கெடுக்க நினைச்சீங்க அவ்வளவுதான்..”

“நீ சின்ன பொண்ணு.. உனக்கு தெரியாது விடு.. நான் பெரியவங்ககிட்ட பேசிக்கிறேன்..”

“இது தான் நீங்க.. உங்களுக்கு தேவையான மாதிரி பேசுனா அப்ப நான் எடுத்து சொல்லலாம்.. இப்ப நான் சின்ன பொண்ணா? எவ்வளவு பெரிய காரியவாதி நீங்க.. உங்களை.. உங்க முன்னாள் மனைவியை எல்லாம் இப்ப என்னால ஒன்னும் செய்ய முடியாது தான், ஏன்னா நீங்க சொன்ன மாதிரி இப்ப வேணும்னா நான் சின்ன பொண்ணா இருக்கலாம்.. ஆனா, கண்டிப்பா உங்களை நிக்க வச்சு கேள்வி கேட்குற நிலைமைக்கு நான் வருவேன்.. வரா பட்ட கஷ்டத்துக்கு எல்லாம் உங்களை கேள்வி கேட்காம நான் விடமாட்டேன்..”

“உன் கோவம் எனக்கு புரியது வீர்யா. வரா மேலே உள்ள அக்கறையில சொல்ற. இனிமே நான் அவங்களை கண்டிப்பா நல்லா பார்த்துப்பேன்”

“உங்களுக்கு என் கோவம் புரிஞ்சுதா கோவக்காய் புரிஞ்சுதான்னா எனக்கு அக்கறை இல்லை. இப்ப உங்களுக்கு உங்க சந்தோஷத்தை, வெற்றியை கொண்டாட கூட குடும்பம் வேணும். அப்படி தானே?”

“அப்படியே இருந்தாலும் அதுல என்ன தப்பு?”

“தப்பு இல்லை.. ஆனா இது சாதாரண ஒரு விஷயம் தான். உங்களால இந்த சந்தோஷத்தை தனியா ஹாண்டில் பண்ண முடியலைன்னா போய் கவுன்சிலிங் அட்டென்ட் பண்ணுங்க.. எப்பவுமே வராக்கு ஏதாவது தேவைன்னா அதை தானே பண்ண சொல்லுவீங்க.

இன்னொரு தடவை அங்க வா இங்க வான்னு கூப்பிட்டிங்க, அப்புறம் கண்டிப்பா வராவும் சரி வல்லபனும் சரி உங்க கூட பேசவே மாட்டாங்க..” என்று ராமை பேசவிடாமல் பொரிந்துவிட்டு,

“என்ன நான் சொல்றது புரியதா?” என்று வராவையும் வல்லபனையும் முறைத்துக்கொண்டு கேட்க இருவரும் வேகமாக மண்டையை ஆட்டினார்கள்.

வீர்யாவே காலை கட் செய்துவிட்டாள்.

மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது.

வல்லபன் நைசாக கிரிக்கெட் பேட் எடுத்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டான்.

வராவுக்கும் வீர்யாவுக்கும் சாக்லேட் மில்க் கொண்டு வந்து கொடுத்தார் பத்து.

“எங்க பத்தும்மா.. குட்டி பம்ப்கின்?”

“இப்ப தான் தூங்குனா.. எங்க உன் அல்லக்கை?”

“இப்ப வருவான்..” என்று அவள் கூறி முடிக்கும் முன்னே, “ஹாய்” என்று வந்து சேர்ந்தான் சம்பவ்.

“டேய் சம்பவ், நாம ரொம்ப நாளா என்ன படிக்கலாம்னு யோசிச்சிட்டு இருந்தோம் இல்ல?” என்று ஆரம்பித்தாள் வீர்யா.

“ஆமா.. நமக்கு தான் இந்த டாக்டர்.. என்ஜினீயர் எல்லாம் பிடிக்கலையே?”

“நான் முடிவு பண்ணிட்டேன்.. நாம ரெண்டு பேரும் வக்கீலுக்கு படிக்கலாம்”

“நல்லா யோசிச்சிட்டியா? நமக்கு செட் ஆகுமா?” என்றான் அவனும் சீரியசாக.

“ஏன் வீர்யா, ஏன் இதுல மட்டும் வாராஹிகூட சேரல?”

“பத்தும்மா.. அவ டாக்டர் படிக்கணும்னு ஆசை படற.. எனக்கு அது செட் ஆகுது.. இப்ப ராம் அங்கிள் கிட்ட பேசும்போது தான் முடிவு பண்ணேன்.. கேள்வி கேட்குற இடத்துல நிக்கனும்னா வக்கீல் ஆகலாம் இல்ல?”

“நீ வக்கீல் படிக்காமலே பாயிண்ட் பாயிண்ட்டா பேசுற.. படிச்சா நாடு தாங்குமா?” என்றார் அவர்.

“அது எல்லாம் தாங்கும்.. தாங்கும்” என்று நொடித்துக்கொண்டு நீங்க வாங்க நாம விளையாட போகலாம் என்று வராஹியையும் சம்பவ்வையும் அழைத்து கொண்டு சென்றுவிட்டாள்.

“என்ன வாய் பாரு இந்த வீர்யாக்கு” என்றார் பத்தும்மா மணிமேகலையிடம், அதில் பெருமையே அதிகம் இருந்தது.

“பத்து, எனக்கு அண்ணா பசங்களை கூப்பிட்டதும் ஒருநிமிஷம் கொஞ்சம் பதட்டமா போச்சு தெரியுமா?”

“மெதுவா சொல்லும்மா. இல்லைனா போன புயல் திரும்ப வந்து உன் பக்கம் அடிக்க போகுது..”

“ஹா ஹா அதுவும் சரிதான்”

“ஏன் மேகா, இந்த மாசம் பம்ப்கின்க்கு பெயர் வைக்குற பங்க்ஷன் வச்சுக்கலாமா?”

“எல்லாரும் பம்ப்கின் பம்ப்கின்னு கூப்பிடறீங்க.. அதை மாத்தவாது சீக்கிரம் பெயர் வைக்க தான் வேணும்..”

“ஹா ஹா.. நீங்க என்ன பெயர் வச்சாலும் எங்களுக்கு அவ குட்டி பம்ப்கின் தான் போவீயா”

“போங்க பத்து, நாளைக்கு பெரியவளானதும் உங்க கூட சண்டை போடுவா பாருங்க..”

“போட்டா நான் பார்த்துக்கிறேன்.. சரி மேகா, அங்க ஊர்ல என்ன ஆச்சாம்? ஹரி எப்படி இருக்கான்?”

“என்னத்த சொல்றது பத்து.. செய்றது எல்லாம் செஞ்சுட்டு இப்ப பாவமா எல்லார் முகத்தையும் பார்த்திட்டு இருக்கான். சாம்பவி கண்டிப்பா குழந்தையை காட்ட மாட்டேன்னு சொல்றா.. நேத்துகூட பையன் போட்டோவாச்சு காட்ட சொல்லுங்கன்னு அம்மாகிட்ட கேட்டிருக்கான்.

எங்க அம்மா பத்தி தான் உங்களுக்கு தெரியுமே.. சாம்பவிக்கிட்ட சீரியல் தோத்துப்போற அளவுக்கு வசனம் பேசி இருக்காங்க.

அதுக்கு, ‘என் குழந்தையை பார்த்தா உங்களுக்கு பிடிக்காது, நீங்க நினைச்ச மாதிரி அழகா இல்ல. திரும்ப யாரையாவது அனுப்பி பேசினா நான் குழந்தையோட எங்கயாவது போயிடுவேன்னு’ ஹரிக்கு மெசேஜ் அனுப்பி இருக்கா சாம்பவி”

“அப்படி போடு. நல்லா வேணும்.”

“அப்பா தான் எத்தனை நாளைக்கு சாம்பவி அங்க இருக்க முடியும்.. அவங்க கூட்டு குடும்பம் வேறன்னு” சங்கடப்படறாங்க.

“இங்க கூப்பிட்டுக்கலாமா?”

“நானும் யோசிச்சேன் பத்து.. ஆனா சாம்பவிக்கு உடம்பு ட்ராவல் பண்ண ஒத்துகாதுன்னு அப்பா சொல்றாங்க”

“பேசாம ஹரியை இங்க வர சொல்லிடவோமா? அப்ப சாம்பவி உங்க வீட்டுக்கு போய் இருக்கலாம் தானே?”

“இங்கேயா?”

“இப்ப தான் அவன் தவறை உணர ஆரம்பிக்கிறான். இந்த மாதிரி சமயத்துல நல்ல வழிகாட்டி இருந்தா அவன் நல்ல வழிக்கு வந்துடுவான் மேகா.. வரட்டும் பார்த்துக்கலாம்”

பின் வந்தியத்தேவனிடம் இதை பற்றி பேசினார் மணிமேகலை. “அம்மா சொன்னா சரியா தான் இருக்கும் மேகா.. நீ பேசி பாரு” என்றார் வந்தியத்தேவன்.

பின் சுந்தர்ராஜனுக்கு அழைத்து விஷயத்தை கூறினார்.

‘ஹரி வேலை?’ என்று அவர் யோசிக்கவும்,

“இங்க எங்க காலேஜ்ல கூட வேக்கன்சி இருக்கிறதா சொன்னாங்க.. அங்க அப்ளை பண்ணா கிடைக்கும் ப்பா .. நீங்க பேசிட்டு சொல்லுங்க”

ஹரியோ எப்படி மனைவியை சமாதானம் செய்வது என்று புரியாமல் சுற்றிகொண்டிருந்தான். இந்த யோசனை அவனுக்கு ஒரு விதத்தில் நிம்மதியை தந்தது. முதலில் நம்ம வீட்டுக்கு அவளும் பிள்ளையும் வரட்டும் என்று ஒத்து கொண்டான்.

யார் முகத்தில் முழிக்கவே பிடிக்காமல் இருந்தானோ இன்று அந்த அக்கா வீட்டிற்க்கு அடைக்கலமாக செல்கிறான்.

‘அழகா இல்லன்னா என்ன, என் மகனை நான் பார்க்க கூடாதா? எப்படி இருந்தாலும் என் ரத்தம்’ என்று மகனுக்காக துடிக்கும் இதயம் அவனுக்கு தன் தவறுகளை உணர்த்த ஆரம்பித்திருந்தது.

ஹரி தன் சென்னை பயணத்திற்கு தயாராகினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!