அகல்கவி 16

அகல்கவி சிலையமுதே 16
Advertisement
“என்ன அகலு, ரொம்ப வலிக்குதா.. இதை கத்துக்கும் போது அப்படிதானே இருக்கும்.. இதையெல்லா நீ தாங்கிக்க பழகிக்கணும்” என்று யுகன் சொல்ல, தன் முழங்கையை தடவி விட்டவாறு வலியில் முணங்கிக்கொண்டிருந்தாள் அகல்யா.
Advertisement
Advertisement
“அகல்யா, நேரமாச்சு.. சீக்கிரம் வா” என்று அவளுடைய கராத்தே கற்றுக் கொடுக்கும் மாஸ்டர் அழைக்க, அவரைப் பார்த்துவிட்டு யுகனை பாவமாகப் பார்த்தாள் அவள்.
அவனோ ஒரு ஆழ்ந்த பெருமூச்சைவிட்டு அவளருகில் அமர்ந்துக்கொண்டவன், “இங்க பாரு அகல், இதை நீ கத்துக்கணும்னு ஆசைப்பட்டதாலதான் மாமாவுக்கு தெரியாம நான் உன்ன இங்க அழைச்சுட்டு வர்றேன். இதுல உனக்கு இருக்குற ஆர்வத்தை பத்தி மாஸ்டருக்கு நல்லாவே தெரியும். அதுமட்டுமில்லாம மாமாவையும் ஊர்க்காரங்களையும் பத்தி தெரிஞ்சதாலதான் யாருக்கும் தெரியாம உனக்கு கத்து கொடுக்கவும் சம்மதிச்சாரு.. ஆனா ஊர்க்காரங்க யாராச்சும் பார்த்துட்டாங்கன்னா அம்புட்டுதான் அகலு.. அதுக்குள்ள உன்னால முடிஞ்ச வரைக்கும் கத்துக்க..” என்றான் அவள் விழிகளை கூர்மையாகப் பார்த்தபடி.
Advertisement
அகல்யாவுக்கு அன்று அவன் பேசிய வார்த்தைகள் நினைவுக்கு வர, அதை யுவனிடம் சொல்லி புன்னகைக்க, அவனோ ஏகத்துக்கும் முறைத்துத் தள்ளிக்கொண்டிருந்தான்.
“அப்போ உன்ன பத்தி நான் புரிஞ்சு வச்சதெல்லாமே தப்பு அப்படிதானே! சூப்பரு… வேற என்னெல்லா அம்மணி கத்து வச்சிருக்கீங்க, இப்போவே சொல்லிட்டீங்கன்னா வசதியா போயிரும். ஆனா ஒன்னு ஊர்ல இருக்கும் போது கண்ணுலயே பட மாட்ட, நான் கூட ஏதோ நினைச்சுட்டு இருந்தா திருட்டுக்களவாணி வீட்டுக்கே தெரியாம சண்டை போட கத்துக்கிட்டு இருந்திருக்க”
என்று யுவன் ஒற்றை புருவத்தை தூக்கிய வண்ணம் சொல்ல, திருதிருவென விழித்தாள் அவள்.
“அப்படியெல்லா இல்ல மாமா, இது மட்டும்தான் கத்துக்கிட்டேன். அதுவும் கொஞ்சநாள்லயே ஊர்க்காரங்களுக்கு தெரிஞ்சு அப்பா காதுக்கு போய் வீட்டுல பெரிய பிரச்சனை ஆகிருச்சு. அதுக்கப்பறம் போகவே இல்ல.. ஏதோ கத்துக்கிட்ட கொஞ்சம் நியாபகம் இருக்கு. அதை வச்சுதான் இன்னைக்கு அவங்கள சமாளிச்சேன். அதுமட்டுமில்லாம அன்னைக்கு அந்த அரைக் கிழவன் புருஷோத்தமன கூட…”
என்று தயக்கமாக இழுத்தவளின் நினைவுகள் அன்று நடந்ததை மீட்டிப் பார்த்தன.
சிறிதுநேரத்தில் திருமணம் என்றிருக்க, அகல்யாவுடன் தனியாக பேச வந்த புருஷோத்தமனோ பேசியவாறு அவள் தோளில் கை வைத்திருக்க, அடுத்தகணம் அவன் கரத்தை மடக்கி முறுக்கினாள் அவள்.
அவனோ கத்தவும் முடியாமல் வலியை தாங்கவும் முடியாமல் அலற, அவனை வேகமாக விட்டவளோ, “அய்யோ என்னை மன்னிச்சிருங்க, இதை மட்டும் அப்பாகிட்ட சொல்லிராதீங்க.” என்று பயந்துபோய் கெஞ்ச ஆரம்பித்தாள்.
கரத்தை பரபரவென தேய்த்து விட்டுக்கொண்டவனோ அவளை பயந்தபடி பார்த்துவிட்டு, “என்னடீ ஒரு ஆம்பிள மேலயே கைய வச்சு இப்போ பயப்படுற மாதிரி நடிக்கிறியா உன்ன..” என்று அவள் தலை முடியை கொத்தாகப் பற்ற, அவனின் மத்திய பகுதியிலேயே முட்டியால் ஓங்கி அடித்தவள், “ஐயா என்னை மறுபடியும் மன்னிச்சிருங்க..” என்று மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தாள்.
அவனோ அவள் அடித்த அடியில் நிற்கக் கூட முடியாமல் சுவற்றிலேயே சாய்ந்துக்கொள்ள, வலியில் மயக்கமே வருவது போலிருந்தது அவனுக்கு.
“படுபாவி! கல்யாணமே ஆகாத மாதிரி பண்ணிட்டாளே.. இவ அடிச்சான்னு வெளியில சொன்னா எனக்குல்ல அசிங்கம்.. கடவுளே…” வாய்விட்டே புலம்பியவன் தன்னை நிதானப்படுத்திவிட்டு, “இது நமக்குள்ள இருக்கட்டும் புரியுதா..” என்று பயத்தை மறைத்த வண்ணம் போலி மிரட்டலை விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.
அதை அகல்யா சொல்லி முடிக்க, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்ட யுவனுக்கு அன்று தான் பார்த்த புருஷோத்தமனின் முகத்தை இப்போது நினைத்துப் பார்க்கவே சிரிப்பை அடக்க முடியவில்லை.
அவனுடைய இதழ்கள் விரிந்திருப்பதை புன்னகையோடு பார்த்தவள், “மாமா…” என்று அழைக்க, மீண்டும் முகபாவனையை விறைப்பாக மாற்றிக்கொண்டவன், எதுவும் பேசாமல் நகரப் போய் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான்.
“அப்போ சரி இந்தியாவுல நடக்க போற கராத்தே டோர்னமென்ட்ல உன் பேர கொடுக்க போறேன்.. நாளையிலருந்து ப்ராக்டிஸ் ரெடியா இரு..” என்று அவன் சொல்ல, தூக்கி வாரிப்போட்டவளாக, “அய்யோ மாமா.. அதெல்லா என்னால முடியாது.. நான் என்னோட ஆசைக்கு கத்துக்கிட்டேன் அவ்வளவுதான், அதை எல்லார் முன்னாடியும் சண்டை போட்டெல்லா காட்ட முடியாது.” என்றாள் பதற்றமாக.
மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க அவளைப் பார்த்தவன் வேகமாக அவளை நெருங்கி, “அப்போ என்னதான்டீ பண்ண போற? எங்கேயாச்சும் வேலைக்கு போன்னா அதுவும் முடியாது, ஏதாச்சும் கத்துக்குறியான்னு கேட்டா அதுவும் வேணாம். இப்போ கத்துக்கிட்டத வச்சு ஏதாச்சும் சாதனை பண்றியான்னு கேட்டா அதுக்கும் பயம். என்னதான்டீ உன் பிரச்சனை?” என்று படபடவென பொரிந்துத் தள்ள, அவனை அரண்டு போய் மிரட்சியாகப் பார்த்தாள் அகல்யா.
“அது.. நான்… நான் வந்து…” அவள் தடுமாற, அப்போதுதான் யுவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.
“நீ வேணா சின்ன பசங்களுக்கு கராத்தே கத்து கொடு அகலு.. உனக்கும் பொழுது போன மாதிரி இருக்கும்ல” என்று அவன் விழிகளை விரித்தபடி புன்னகையோடு சொல்ல, ‘ஆஆ…’ என்று வாயை பிளந்துக்கொண்டு பார்த்தாள் அவள்.
“எதே! கத்து கொடுக்கவா.. மாமா, நானே அரைகுறை. முழுசா கூட கத்துக்கல, ஏதோ தெரிஞ்சத வச்சு சமாளிக்குறேன். நீங்க வேற.. அதுமட்டுமில்லாம அதெல்லா எனக்கு ரொம்ப பயம் மாமா நான் இப்படியே சும்மா இருக்கேன்” என்று அவள் பேசிய பேச்சில் அவனுக்கு பிபி ஏகத்துக்கும் எகிறியது
“முட்டாள் முட்டாள்! சில பொண்ணுங்க சாதிக்க வழி தெரியாம ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு இருக்காங்க. ஆனா உனக்கு எல்லாமே கிடைச்சும் எதுவுமே வேணாங்குற அறிவுகெட்டவ! ஒழுங்கா கராத்தே க்ளாஸ் எடுக்குற அவ்வளவுதான்”
என்று கறாராக சொல்லிவிட்டு அவன் சென்றுவிட, பாவம் போல் முகத்தை வைத்துக்கொண்டவளுக்கு வேறு வழியும் இருக்கவில்லை.
அடுத்த இரண்டு நாட்களில் யுவனே பக்கத்து வீடுகளில் இதைப் பற்றி சொல்லியிருக்க, மறுநாளே இரண்டு சிறுவர்கள் வேறு அவளிடம் கற்றுக்கொள்ளவென வர ஆரம்பித்தனர்.
“ஆரம்பத்துல காசெல்லா தேவையில்ல, சும்மா கத்துக் கொடு! போக போக பார்த்துக்கலாம்” அவன் சொல்ல, தனக்காக இத்தனையும் செய்யும் அவனை இமை வெட்டாமல் பார்த்திருந்தாள் அகல்யா.
ஆரம்பத்தில் அவளுக்காகத்தான் அவளை திருமணம் செய்தான், அவளுக்காகத்தான் அவனின் சொந்த வீட்டை விட்டு வெளியே வந்தான். இப்போது அவளுக்காகத்தான் இது அத்தனையும்..
நடந்தது அத்தனையும் யோசித்த வண்ணம் உறங்கிக் கொண்டிருந்தவனையே அவள் பார்த்துக்கொண்டிருக்க, “தூங்காம எவ்வளவு நேரத்துக்கு மேடம் என்னை சைட் அடிச்சுக்கிட்டு இருக்க போறீங்க?” என்று விழிகளைத் திறக்காமலேயே கேட்டான் யுவன்.
அதில் திடுக்கிட்டவள் உடனே திரும்பி படுத்துக்கொள்ள, விழிகளைத் திறந்து லேசான இதழ் சிரிப்போடு பார்த்துவிட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான் அவன்.
அடுத்தநாளும் விடிந்தது. விழிகளை கசக்கிக்கொண்டு எழுந்தமர்ந்த அகல்யா, நேரத்தைப் பார்த்துவிட்டு எழப் போக, அவளிடையை ஏதோ ஒன்று இறுக்கிப் பிடித்திருப்பது போல ஒரு உணர்வு.
விழிகளை சுருக்கி யோசித்தவாறு குனிந்துப் பார்த்தவளுக்கு தன்னிடையை வளைத்திருந்த யுவனின் கரத்தைப் பார்த்ததும் பக்கென்று இருக்க, உடனே அவன் கரத்தை விலக்க முயற்சித்தாள்.
ஆனால் அவனோ, “கொஞ்ச நேரம்.. இப்போ எழுந்துருவேன்” என்று தூக்கக் கலக்கத்தில் முணங்கிக்கொண்டே அவளிடையை மேலும் வளைத்து அவள் வயிற்றில் முகத்தை புதைத்துக்கொள்ள, ஒருபக்கம் சங்கடம் என்றாலும் இன்னொருபுறம் இனம் புரியாத ஒரு உணர்வு அவளை ஆட்கொண்டது.
‘அய்யோ.. என்ன இவரு, இப்படி இருந்தா நான் எப்படிதான் எழுந்துக்குறது..’ என தனக்குள்ளேயே முணங்கியவாறு அவனிடமிருந்து அவள் விலக முயற்சிக்க, அவனோ மேலும் மேலும் அவள் வயிற்றில் தன் முகத்தை உரசியபடி புதைந்துக்கொண்டான்.
அவனின் ஸ்பரிசமும் உரசலும் அவளுக்கு கூச்சத்தை ஏற்படுத்த நெளிந்தவாறு, “மாமா… மா.. மாமா எழுந்துருங்க” என்று திக்கித்திணறி சொன்னவளின் குரலில் மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்தான் யுவன்.
அவளுடைய முகம் அருகில் தெரிய புன்னகைத்தபடி, “அகல்…” என்று அழைத்தவனின் குரலில் ஏதோ ஒன்று ஆழமாக இருப்பது போலிருந்தது அவளுக்கு.
அது கொடுத்த உணர்வில் விழி விரித்த அகல்யா, எச்சிலை விழுங்கியவாறு அவனை பார்க்க, விழிகளை மூடியவன் இப்போது என்ன உணர்ந்தானோ பட்டென்று விழிகளைத் திறந்து அவளை திகைப்போடு பார்த்தான்.
அவனுடைய கரங்கள் அப்போதும் அவளிடையை வளைத்திருக்க, தன் கரங்களையும் அவள் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தவன் சடாரென விலகியமர, அவள் முகம் வெட்கத்தில் சிவந்ததோ இல்லையோ அவனுடைய முகம் வெட்கத்தில் சிவந்திருந்தது.
“அது.. சா.. சாரி அகலு, தூக்கத்துல நான்.. நீ எதுவும் நினைச்சுக்கலல்ல!” என்று யுவன் தடுமாற்றத்தோடு கேட்க, “இ.. இல்ல மாமா, நான் எதுவும் நினைச்சுக்கல” என்றவள் உடனே அங்கிருந்து எழுந்து நகர்ந்துச் சென்றாள்.
‘ஊஃப்ப்…’ என்று பெருமூச்சுவிட்டவனின் இதழ்கள் தான் செய்த காரியத்தை எண்ணி மெல்ல புன்னகையில் விரிந்துக்கொள்ள, பின்னந்தலையில் அடித்து குறும்பாக சிரித்துக்கொண்டவனின் சிந்தனை ஒலித்த தன் அலைப்பேசியின் புறம் திரும்பியது.
திரையைப் பார்த்தவன், புருவ முடிச்சுகளோடு அழைப்பையேற்று காதில் வைத்து, “சொல்லுங்கப்பா..” என்று சொல்ல, மறுகணம் அவனுடைய விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்துக்கொண்டன.
அலைப்பேசியை துண்டிக்கக் கூட செய்யாது, “அகல்யா…” என்று கத்திக்கொண்டே அவளை நோக்கி ஓடியவன், “அகலு… அது.. அது வந்து.. முத்து மாமாக்கு ஹார்ட் அட்டேக்காம். அப்பாதான் கால் பண்ணாரு.. நாம இப்போவே ஊருக்கு கெளம்பலாம்” என்று பதற்றமாக பேசிக்கொண்டே போக, ஸ்தம்பித்துப் போய்விட்டாள் அகல்யா.
அவளுக்கு அழுகையில் தொண்டை அடைக்க, எந்த வேலையும் ஓடாது அப்படியே அமர்ந்துக்கொண்டவளை பார்த்தவாறு தன் நண்பன் அரவிந்திற்கு அழைத்தவன், “டேய் மச்சா.. எனக்கு அவசரமா ஒரு வண்டி ஏற்பாடு பண்ணணும்டா.. ஏன்னா… ” என்று ஆரம்பித்து நடந்ததை சொல்லி முடித்தான்.
அரவிந்தும் அவசர அவசரமாக ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவனே ட்ரைவராக காரை செலுத்திக்கொண்டு செல்ல, ‘வண்டிய மட்டும்தானே கேட்டேன்.. இவன் எதுக்கு கூட வர்றான்..’ என்று யோசித்த யுவனை அதற்குமேல் அகல்யாவின் அழுகை தோண்டித் துருவ விடவில்லை.
பக்கத்திலிருந்து மூக்கை உறிஞ்சியபடி வந்தவளை பாவமாகப் பார்த்தவன், அவள் கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொள்ள, அவன் தோளில் சாய்ந்துக்கொண்டாள் அகல்யா.
“மச்சா சிஸ்டர சமாதானப்படுத்துடா, அவங்க அப்பாவுக்கு எதுவும் ஆகியிருக்காது” முன்னே காரை செலுத்திக்கொண்டிருந்த அரவிந்த் தன் பங்கிற்கு ஆறுதல் சொல்ல, அவனை விழிகளை சுருக்கி சந்தேகமாகப் பார்த்தான் யுவன்.
டிப்டாப்பாக தயாராகி இதழில் புன்னகையோடு தானாகவே முன்வந்து காரை செலுத்துபவனைப் பார்க்க அவன் தோழனுக்கு சந்தேகம் வராமல் இருக்குமா என்ன!
ஆனால் அப்போது எதுவும் பேசாமல் யுவன் அமைதியாக இருக்க, ஒருசில மணித்தியாலங்களிவ் ஊர் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்தனர் மூவரும்.
வீட்டு வாசலில் கார் நிற்க, அகல்யாவோ வேகமாக இறங்கி உள்ளே ஓடினாள் என்றால், ‘தலைவலின்னாலே மொத்த ஊரும் வீட்டு வாசல்லதான் நின்னுட்டு இருக்கும், ஹார்ட் அட்டேக்னு சொன்னாங்க ஒரு பயலயும் காணோம்..’ என உள்ளுக்குள் யோசித்தவாறு சுற்றிமுற்றி பார்த்தபடி உள்ளே நுழைந்தான் யுவனாதித்.
இங்கு தன் மகளை அணைத்துக்கொண்ட பொன்னியோ, “உள்ள போய் அப்பாவ பாரும்மா, கரும்பா தேய்ஞ்சு போயிட்டாரு. எனக்குன்னு இப்போ இருக்குறது அவர் மட்டும்தான் அவரும் இல்லன்னா…” என்று சேலை முந்தானையை வாயில் பொத்தி அழத் தொடங்க, தாயை தேற்றிவிட்டு தந்தையை காண அறைக்குச் சென்றாள் அகல்யா.
யுவனும் பின்னாலேயே செல்ல, விழிகளை மூடியிருந்த முத்துப்பாண்டியோ அரவம் உணர்ந்து மெல்ல விழிகளைத் திறந்துப் பார்த்தார்.
“அம்மாடி அகலு..” அவர் மெல்ல அழைத்ததும் தந்தையின் அருகே அவள் அமர்ந்துக்கொள்ள, “அத்தை, யாருக்கும் விஷயத்த சொல்லலயா? இல்ல எவரையும் காணோமே, பெரிய மாமாவ கூட.. அதான் கேட்டேன்” என்று கேட்டேன் தயங்கியபடி.
“அவர் என்ன போய் சேர்ந்துட்டாரா, எல்லாருக்கும் தகவல் சொல்ல.. ஹார்ட் அட்டேக்தானே..” என்று பொன்னி அழுதபடியே சொல்ல, முத்துப்பாண்டியோ மனைவியை முறைத்துப் பார்த்தார் என்றால், தன் அத்தையை மேலிருந்து கீழ் ஒரு மாதிரியாகப் பார்த்து வைத்தான் அவர்களின் மருமகன்.
இவர்கள் வந்த கொஞ்ச நேரத்திலேயே சிவலிங்கம் சாரதாவோடு சங்கரபாண்டியும் வீட்டிற்குள் நுழைய, “அண்ணே…” என்று அழும் குரலில் அழைத்தவாறு உள்ளே வந்த தன் தாயை அதிர்ச்சியாகப் பார்த்தான் யுவனாதித்.
அகல்யாவும் இதை எதிர்பார்க்காததில் வேகமாக சென்று தன் கணவனின் பக்கத்தில் நின்றுக்கொள்ள, அறைக்குள் வந்த சாரதாவும் அங்கு தன் மகனை எதிர்பார்க்காததில் சற்று அதிர்ச்சியானது என்னவோ உண்மைதான்.
ஆனால் அதிர்ச்சியையும் தாண்டி அவருடைய விழிகளில் சிறு ஏக்கமும் எட்டிப் பார்க்க, சாரதாவை நோக்கி ஒரு அடி முன்னே வைத்தவன் பின் என்ன நினைத்தானோ அமைதியாக நின்றுக்கொண்டான்.
“சாரதா..” என்று முத்துப்பாண்டி கஷ்டப்பட்டு எழப் போக, “அய்யோ அண்ணே படுத்துக்கோங்க, நீங்க எதுக்கு சிரமப்படுறீங்க?” என்று அவரை எழ விடாது படுக்க வைத்தவர், அவரின் கரத்தை தன் கண்களில் ஒற்றி அழ ஆரம்பிக்க, முத்துப்பாண்டியும் இதை எதிர்பார்க்கவில்லை.
“என்னை மன்னிச்சிருங்க அண்ணே, எல்லாமே என்னாலதான், உங்கள போய் நான் அப்படி பேசிட்டேன், என்னாலதானோ உங்களுக்கு இப்படி ஆகிருச்சுன்னு எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. நான் பேசினது தப்புதான் என்னை மன்னிச்சிருக்கண் ணே”
என்று அவர் குற்றவுணர்ச்சியில் அழுது கரைய, தன் சகோதரியை பாவமாகப் பார்த்தார் முத்துப்பாண்டி.
-Sheha zaki
