அகல்கவி 17

அகல்கவி சிலையமுதே 17
Advertisement
சாரதா குற்றவுணர்ச்சியில் அழுது கரைய, தன் சகோதரியை பாவமாகப் பார்த்த முத்துப்பாண்டியோ, “அய்யோ விடும்மா, அந்தந்த வயசுக்கு வர வேண்டியது வரத்தான் போகுது. அதுக்கு போய் நீ… நீ தப்ப உணர்ந்ததே பெரிய விஷயம்மா, இப்போவே போய் உன் மருமககிட்ட பேசு.. சின்னஞ்சிறுசுங்க ரொம்ப கஷ்டப்படுறாங்க..” என்றார் எல்லாமே சரியாகிவிட்டதென்று நினைத்து.
Advertisement
யுவன் கூட தன் தாயை ஆர்வமாகப் பார்த்திருக்க, தன் அண்ணன் பேசியதைக் கேட்ட சாரதாவுக்கு தூக்கி வாரிப்போட்டது.
Advertisement
“எதே தப்ப உணர்ந்தனா.. நான் உங்ககிட்ட பேசின விதம் தப்பு, அதுக்கு மன்னிப்பு கேட்டேன். மத்தபடி உங்க பொண்ண நான் ஒன்னு என் மருமகளா ஏத்துக்கல” என்ற சாரதாவை முத்துப்பாண்டி அதிர்ந்துப் பார்க்க, ‘க்கும்! எங்க அம்மாவ பத்தி எனக்கு தெரியாதா என்ன..’ என உள்ளுக்குள் நினைத்த வண்ணம் நொடிந்துக்கொண்டான் யுவன்.
Advertisement
“அய்யோ சாரதா என்னம்மா சொல்ற.. எனக்கு மறுபடியும் நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கே.. சாக போறேன்னு நினைக்கிறேன்.. என் கடைசி ஆசையா அவங்கள ஏத்துக்கம்மா.. நீ பே.. பேசுறத பார்த்துட்டுதான் நான் என் கண்ண மூடணும்”
என்று முத்துப்பாண்டி மீண்டும் நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, “என்னங்க..” என்று அழுதபடி கணவன்மேல் சாய்ந்துக்கொண்டார் பொன்னி.
ஆனால் எந்த முயற்சியும் சாரதாவிடத்தில் செல்லுபடியாகவில்லை.
“ஒன்னு பிரச்சனை இல்ல, ஆம்பியூலன்ஸ்க்கு கால் பண்ணி சொல்லியாச்சு. வந்துட்டு இருக்காய்ங்க” என்று வெளியிலிருந்து வந்த சங்கரபாண்டி அவர் பாட்டிற்கு ஒன்றை சொல்ல, இப்போது முத்துப்பாண்டிக்கு தூக்கி வாரிப்போட்டது.
“என்ன.. எல்லாருமா சேர்ந்து என்னை ஆம்பியூலன்ஸ்ல ஏத்திவிட்டு சாகடிக்க பார்க்குறீயலா.. அதுக்கெல்லா நான் மசிய மாட்டேன், என்னை தனியா விட்டுட்டு எல்லாரும் இடத்த காலி பண்ணுங்க போங்கன்னு சொன்னேன்..” என்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு அவர் கத்திய விதத்தில் எல்லோரும் அறையிலிருந்து வெளியேறிப் போக, இப்போது முத்துப்பாண்டியோடு பொன்னியும் அகல்யாவும் மட்டும் நின்றுக்கொண்டனர்.
“என்னங்க…” என்று பொன்னி மெதுவாக அழைக்க, “ஸப்பாஹ்…” என்றவாறு ஜம்மென்று எழுந்தமர்ந்த முத்துப்பாண்டியோ, “என்னலே உன் அத்தைக்கு இம்புட்டு பிடிவாதம். இது குடும்பத்துக்கு ஆகாதுலே.. க்கும்! இந்த பிடிவாதம் இருக்கபோய்தானே ஓடிபோய் அவன கட்டிக்கிட்டா” என்று அமைதியாக அதேசமயம் கோபமாகப் பேசினார்.
அகல்யாவுக்கோ கோபம் பெருக்கெடுத்தது. தன் தாயையும் தந்தையையும் முறைத்துப் பார்த்தவள், “அப்போ இதெல்லா பொய்யா.. சும்மா நடிச்சீங்களா? எதுல விளையாடணும்னு தெரியாதா உங்களுக்கு..” என்று தன்னை மீறி கோபத்தில் கத்திவிட, மீசையை முறுக்கிவிட்டவாறு தன் மகளை ஒற்றைப் புருவத்தைத் தூக்கிப் பார்த்தார் பெரியவர்.
“என்னலே எதிர்த்துப் பேசுற! கல்யாணம் ஆனதும் பயம் விட்டு போச்சா? இப்போவும் நீ என் பொண்ணுதான், நியாபகத்துல வச்சுக்கோ! உன் அத்தையோட பிடிவாதத்த பார்த்தேல்ல, இம்புட்டு ஆக்டிங் பண்ண என்னை பார்த்தே அவ மசியல, ஆனா நீ என்னடான்னா யாருக்கு கேடுன்னு உன் பாட்டுக்கு இருக்க.. அப்பறம் எப்படிலே ஒன்னுக்குள்ள ஒன்னா இருப்பீங்க அதான் நாங்களே ஒரு திட்டத்தை போட்டு வர வச்சோம்”
என்று முத்துப்பாண்டி சொல்ல, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்தார் பொன்னி.
‘கல்யாணம் நடந்ததே தப்புதான். நான் நினைச்சதும் நடக்காம எனக்காக வந்தவரோட வாழ்க்கையும் நான் நாசம் பண்ணி ச்சே… இதுல ஒன்னா இருந்தா மட்டும் என்ன விளங்கிட போகுது..’
என தனக்குள்ளேயே நினைத்துக்கொண்டவள் அதற்குமேல் எதுவும் பேசாமல் அங்கிருந்து வெளியேற, வீட்டுக்குள் வேகமாக வந்தாள் துர்கா.
“அடியே துர்கா.. நான் வந்தது தெரிஞ்சு என்னை பார்க்க வந்திருக்கியா நீனு.. அம்புட்டு ஸ்பீடா நியூஸ் பரவிருச்சோ!” என்றுக்கொண்டே அகல்யா ஓடிச்சென்று அவளை அணைத்துக்கொள்ள, “ஹிஹிஹி… ஆமா புள்ள, பீபீசி நியூஸ விட ஃபாஸ்ட்டு உனக்கு தெரியாதா..” என்றவளின் பார்வை அடிக்கடி வெளியே எட்டிப் பார்த்தது.
“எங்க கூடதானே வந்தான் இந்த அரவிந்த் பயலு, ஆளையே காணோமே..” என்று யோசித்துக்கொண்டே வெளியில் சென்ற யுவன் இடுப்பில் கைக்குற்றி நின்றுக்கொண்டு சுற்றிமுற்றி தேட, அங்கு ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த காரில் சாய்ந்து நின்றிருந்தவனோ தனியாக உளறிக்கொண்டிருந்தான்.
“அய்யோ பார்த்துட்டேனே பார்த்துட்டேனே.. எப்படி பேசுறது என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலயே! வெக்க வெக்கமா வேற வருதே!” என அவன் வாய்விட்டே புலம்பித்தள்ள, அவனருகில் சென்ற யுவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை.
“என்னடா மச்சா! இந்த ஊருல காத்து கருப்பு ஏதாச்சும் அடிச்சிட்டோ, ஏதேதோ பண்ணிட்டு இருக்க” என்று அவன் புரியாமல் சிறு அதிர்ச்சியோடு கேட்டுக்கொண்டிருக்கும் போதே உள்ளே இருந்து அகல்யாவோடு வெளியே வந்தாள் துர்கா.
“ஆமாடா மச்சா.. சூனியம் வச்சுட்டாய்ங்க” என்று அவளின் மேல் பார்வையை பதித்தவாறு சொன்னவன், துர்கா அகல்யாவின் பின்னே மறைந்துக்கொள்வதை ரசனையோடு பார்க்க, இது யுவனின் கண்ணுக்கு புலப்படவே இல்லை. அவனின் பார்வை அகல்யாவின் மீதுதான் இருந்தது.
“வாடீ சீக்கிரம் போகலாம்..” துர்கா ஒருவித பதற்றத்தோடு தோழியை இழுத்துக்கொண்டு வேகமாக செல்ல, அவளின் பதற்றத்தை புரியாமல் பார்த்த அகல்யாவோ யுவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் இழுத்த இழுப்பிற்கு சென்றாள்.
அன்று மாலை கிட்டத்தட்ட சூரியன் மறையும் வேளை..
முத்துப்பாண்டி பொன்னி, சாரதா, சிவலிங்கம், அரவிந்த், யுவனாதித் மற்றும் அகல்யா அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, எல்லோருக்குமிடையில் வெறும் மௌனம் மட்டுமே..
சில நிமிடங்கள் யாரும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை. முத்துப்பாண்டியோ மாறி மாறி எல்லோரையும் பார்த்தவர், “அப்போ சரிம்மா எல்லாரும்…” என்று ஏதோ சொல்ல வர, “அண்ணே நாங்க இன்னைக்கே கெளம்பலாம்னு இருக்கோம்” என்றார் சாரதா வெடக்கென்று.
யுவன் எதுவும் பேசவில்லை அமைதியாக அவரையே வெறித்துப் பார்த்திருந்தான்.
“எதே இன்னைக்கே கெளம்புறியா.. என்னம்மா விளையாடுறியா.. அண்ணனுக்கு ஏற்கனவே ஹார்ட்டு அட்டேக்கு இதுல நீ வேற இப்படி பண்றதால…” என்று மீண்டும் முத்துப்பாண்டி நெஞ்சைப் பிடித்துக்கொள்ள, “உன்ன பார்த்தா ஹார்ட் அட்டேக் வந்தவங்க மாதிரியே இல்லை, ஜம்முன்னு நல்லாதான் இருக்க. ஹாஸ்பிடலுக்கும் போக மாட்டேங்குற.. நான் இங்கயிருந்து என்னதான் பண்ண, ஏதாச்சும் சீரியஸ்னா திரும்ப வர்றேன்” என்று முடிவாக சொன்னார் சாரதா பதிலுக்கு.
தன் தங்கையின் வார்த்தைகளில் விக்கித்துப்போய் விட்டார் முத்துப்பாண்டி.
‘எதே சீரியஸா இருந்தா திரும்ப வருவாளா.. என்ன சொல்றா இவ.. ஒருவேள நமக்கு சீரியஸ் ஆகணும்னு நினைக்கிறாளோ? இவ தெரிஞ்சு பேசினாளா தெரியாமா பேசினாளா?’ என தனக்குத்தானே கேட்டுக்கொண்டவர் முகத்தை முயன்று பாவமாக வைத்து தழுதழுத்த குரலில் பேச ஆரம்பித்தார்.
“என்னம்மா நீ.. எப்போவாச்சும்தான் ஊருக்கு வர்ற, ஒரு ரெண்டுநாள் இருந்துட்டு போகாம உடனே கெளம்புறேன்னு சொல்றியே.. சரி விடு! நீ இன்னும் அண்ணன் மேல கோபத்துலதான் இருக்கன்னு புரியுது. உன்னோட விருப்பம் நீ இப்போவே கெளம்பு. என்ன கொஞ்சம் நெஞ்சு வலிக்குற மாதிரி இருக்கு.. ஆஆ..” என்று அவர் பாவம் போல் பேசிக்கொண்டே போய் சட்டென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு இருக்கையில் சாய்ந்துக்கொள்ள, “அய்யோ என்னங்க…” என்று போலியாக பதறினார் பொன்னி.
இவர்களின் கூத்தில் சலிப்பாக விழிகளை உருட்டிய சாரதாவோ, “சரி சரி ரெண்டுநாள் இருந்துட்டு போறேன். ஆனா பெரிய அண்ணே வீட்டுல நாங்க தங்கிக்குறோம். இதுக்கு முடியாதுன்னா நாங்க இப்போவே…” என்று எழப் போக, உடனே “இல்ல இல்லம்மா, நீ அண்ணே வீட்டுலயே தங்கிக்கோ!” என்றவருக்கு தங்கை ஊரில் இருப்பதற்கு சம்மதித்ததே போதுமாகத்தான் இருந்தது.
அதற்குமேல் சாரதா எதுவும் பேசவில்லை. சிவலிங்கத்தை அழைத்துக்கொண்டு விறுவிறுவென்று சங்கரபாண்டியின் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
எங்கு இங்கு இருந்தால் தன் மகனுடனும் மருமகளுடனும் பேச நேர்ந்துவிடுமோ என்ற பதற்றம் அவருக்குள்.
ஆனால் போகும் தன் அம்மாவை யுவன் ஏக்கமாக பார்த்துக்கொண்டு நிற்க, அவனை பரிதாபமாகப் பார்த்தாள் அகல்யா.
அன்றிரவு,
அலைப்பேசியை நோண்டிவாறு யுவன் கட்டிலில் சாய்ந்திருக்க, அவன் பக்கத்தில் அமர்ந்திருந்தவளோ ஏதோ பேச வருவதும் பின் தயங்குவதுமாக தடுமாறிக்கொண்டிருக்க, அதை ஆடவன் உணராமலில்லை.
“இப்போ என்ன வேணும் உனக்கு?” அலைப்பேசியை ஓரமாக வைத்துவிட்டு அவள் விழிகளை கூர்மையாக பார்த்த வண்ணம் அவன் கேட்க, பெக்கபெக்கவென விழித்தவளுக்கு இவனிடம் எப்படி பேச்சை ஆரம்பிப்பதென்றே தெரியவில்லை.
அவளின் தடுமாற்றம் மேலும் அவனுக்குள் ஆர்வத்தைத் தூண்ட விழிகளை கூர்மையாக்கி அவளை ஆழ்ந்த பார்வைப் பார்த்தான் அவன்.
“அது.. அது வந்து.. எனக்காகத்தான் நீங்க என்னை கட்டிக்கிட்டீங்க, நான் உங்கள காதலிக்கலன்னு தெரிஞ்சப்பறம் கூட என்னை விட்டு நீங்க போகல. அத்தை வேணாம்னு சொல்லும் போதும் நீங்க எனக்காக அவங்கள எதிர்த்து பேசி வீட்டை விட்டு வந்தீங்க. இதுவரைக்கும் என்னோட எல்லா தேவையையும் நீங்கதான் பார்த்து பண்ணுறீங்க. இப்போ நீங்க நினைச்சா என்னை விட்டு போகலாம் ஆனா நீங்க போகல.. எதுக்காக இது அத்தனையும் பண்றீங்க மாமா?
அத்தை சொல்ற மாதிரி நான் அவ்வளவா படிச்சதும் இல்ல, உங்க அளவுக்கு அழகும் இல்ல. உங்களுக்கு கொஞ்சம் கூட பொருத்தமே இல்லாத பொண்ணுக்காக ஏன் இத்தனையும் பண்றீங்க? பேசாம நீங்க அத்.. அத்தைக்கு பிடிச்ச மாதிரி…” என்று பேசிக்கொண்டே சென்றவளின் வார்த்தைகள் அவனின் முறைப்பில் திக்கித்திணற, அவளை ஆழ்ந்த பெருமூச்சோடு ஒரு பார்வைப் பார்த்தான் யுவன்.
“இப்போ என்ன! நான் உன்ன விட்டுட்டு என் அம்மாக்கு பிடிச்ச பொண்ணா கட்டிக்கிட்டு வாழணும் அதானே.. சரி” என அவன் பாட்டிற்கு சொல்லிவிட்டு மீண்டும் அலைப்பேசியில் அவன் பார்வையைப் பதிக்க, அகல்யாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.
‘என்ன சொல்றாரு இவரு.. அப்போ வேற பொண்ண கட்டிக்க போறாரா? என்னை விட்டு சீக்கிரமா போறேன்னு சொல்றாரா.. ஒன்னுமே புரியல்லைலே.. மறுபடியும் ஏதாச்சும் கேட்டா திட்டுவாரோ, இல்ல இல்ல வேணாம்.. ஆனா எதுவுமே புரியாம தலையே வெடிச்சிரும் போலயிருக்கே!’
தனக்குத்தானே புலம்பிக்கொண்டவள் அவனிடம் கேட்கவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தடுமாற, யுவனோ அவள் மனதின் புலம்பலை எல்லால் கண்டுகொள்ளாமல் களைப்பில் உறங்கியே விட்டிருந்தான்.
அடுத்தநாளும் விடிந்தது. அப்போதுதான் காலையுணவை முடித்துவிட்டு யுவன் ஜம்மென்று சோஃபாவில் அமர்ந்திருக்க, அவனுக்கெதிரே வந்தமர்ந்த முத்துப்பாண்டியோ, “என்ன யுவா கண்ணா, காலையில வர்றேன்னு சொன்ன உங்க ஆத்தாள இன்னும் காணோம்.. எங்கலே அவ?” என்று கேட்க, “உங்க தங்கச்சிதானே நீங்களே கேக்கலாமே..!” என்று மெதுவாக அவன் முணுமுணுத்தாலும் அது பெரியவரின் காதில் நன்றாகவே விழுந்து தொலைத்தது.
‘வர வர என் பெரிய மீசைக்கு மரியாதையே இல்லாம போச்சு..’ என உள்ளுக்குள் அவர் பொரிந்துக்கொள்ள, “யுவா கண்ணா இத கொஞ்சம் சாப்பிடு..” என்றுக்கொண்டே கையில் இனிப்புத் தட்டோடு வந்தார் பொன்னி.
“இப்படி சாப்பிட்டா அவ்வளவுதான் நான் கொஞ்சநாள்லயே மாமா மாதிரி ஆகிருவேன்..” என்று மீண்டும் அவன் முத்துப்பாண்டியை கலாய்க்க, ‘இவன… காலையிலயிருந்து நம்மள சுராண்டிட்டே இருக்கானே!’ என்று நினைத்தவாறு தன் மருமகனை முறைத்தவர் அங்கிருந்து நகர்ந்திருந்தார்.
அதில் தன் அத்தையை பார்த்து சிரித்தவன், அவர் கொண்டு வந்த தட்டிலிருந்த இனிப்பை எடுத்துக்கொள்ள, பொன்னியோ அவனை தயக்கமாகப் பார்த்தார்.
“அது தம்பி.. நான் உங்கிட்ட ஒன்னு கேக்கணும். அகலுக்கு சண்டை போட தெரியும்னு உனக்கு முன்னாடியே சொல்லியிருக்கணும். சில ஆம்பிளைங்க இதை விருப்பப்பட மாட்டாங்க, ஆனா நீ…” என்று நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்து, “ரொம்ப நன்றிப்பா. உன்னை விட பொருத்தமான ஒரு பையன் அகலுக்கு கிடைக்க மாட்டான், சின்ன வயசுல அவ எதையும் ஆசைப்பட்டதில்ல. அவ கத்துக்கணும்னு ஆசைப்பட்டு கேட்டது இதை ஒன்னுதான். அதான்.. அவ அப்பாக்கு கூட தெரியாம யுகன் கூட அவள அனுப்பி கத்துக்க வச்சேன்..” என்று முடித்தார் புன்னகையோடு.
அவரை பதிலுக்கு புன்னகையோடு பார்த்தவன், “இதுல என்ன அத்தை இருக்கு, எல்லா பொண்ணுங்களும் கத்துக்க வேண்டியதுதான். அகலுக்கு இது தெரியும்னு எனக்கு தெரிஞ்சதுலயிருந்து அவளோட திறமை வீணா போகக் கூடாதுன்னு நினைச்சேன். டூர்ணமென்ட்டுக்கு தான் போக பிடிக்கல, இப்போ இருக்குற சின்ன பசங்களுக்காச்சும் கத்து கொடுக்க சொன்னேன். இதுல எனக்கு ரொம்ப பெருமைதான் அத்தை..” என்றான் பெருமிதத்தோடு.
பொன்னியோ அவனை மெச்சுதலாக பார்க்க, இத்தனை நேரம் அவன் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்த அகல்யாவுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை.
தன்னவனையே இமை வெட்டாமல் அவள் பார்த்துக்கொண்டிருக்க, அறையிலிருந்து அதிரடியாக வெளியே வந்த அரவிந்தோ தன் நண்பனி ன் முன்னே மூச்சு வாங்கியவாறு சென்று நிற்க, அவனை கேள்வியாகப் பார்த்தான் யுவனாதித்.
-Sheha zaki
