அகல்கவி 18

அகல்கவி சிலையமுதே 18
Advertisement
அறையிலிருந்து அதிரடியாக வெளியே வந்த அரவிந்தோ தன் நண்பனின் முன்னே மூச்சு வாங்கியவாறு சென்று நிற்க, அவனை கேள்வியாகப் பார்த்தான் யுவனாதித்.
Advertisement
Advertisement
“என்னாச்சுடா?” என்று அவன் புரியாமல் கேட்க, “டேய் மச்சா நா.. நான் ஒரு பெரிய பிரச்சனையில மாட்டிக்கிட்டேன்டா” என்ற அரவிந்த் சுற்றி தன்னையே எல்லோரும் கேள்வியாக பார்ப்பதை உணர்ந்து, “என்கூட வா மச்சா.. இப்போவே போய் பொண்ணு கேக்கலாம்” என்றான் நண்பனின் கரத்தைப் பற்றி இழுத்தபடி.
அதில் அதிர்ந்து கால்களை தரையில் ஊன்றி நின்றுக்கொண்ட யுவனோ, “டேய் டேய் இருடா! மொதல்ல என்னன்னு தெளிவா சொல்லு.. பொண்ணு கிண்ணுன்ற என்னடா மேட்டரு.. வாய திறந்து சொல்லுடா மட சாம்பிராணி” என்று தாறுமாறாகத் திட்ட, திருதிருவென்று விழித்தவனோ விழிகளை அழுந்த மூடித் திறந்தான்.
Advertisement
“அது… அது வந்துடா.. அகலோட ஃப்ரென்டு துர்கா இருக்கால்ல அவள எனக்கு மொதல்லயே தெரியும். என் ஃபேஸ்புக் ஃப்ரென்டு. அதுல பழக்கமாகி பேச ஆரம்பிச்சு காதலிக்கவும் ஆரம்பிச்சிட்டோம். அவள பார்க்குறதுக்காகதான் உன் கூட இந்த ஊருக்கும் வந்தேன். ஊர்பேர் தெரியாத யாராச்சும் வந்தாங்கன்னா ஊருக்குள்ள அவ்வளவு ஈஸியா விட மாட்டாங்கன்னு சொன்னா.. அதான்..” என்று நிறுத்தியவன் அவனே மீண்டும் தொடர்ந்தான்.
“அவங்க வீட்டுல மாப்பிள்ள பார்க்க ஆரம்பிச்சிட்டாங்களாம் மாப்ள.. அவ்வளவு ஈஸியா சம்மதிக்க மாட்டாங்கன்னு சொல்றா.. என்ன பண்றதுன்னு தெரியல, வாடா நாம போய் அவங்க வீட்டுல பேசுவோம். என்னையும் என் ஆளையும் நீதான்டா சேர்த்து வைக்கணும்” என்று அரவிந்த் அழாத குறையாகப் பேச, யுவனுக்கு பேரதிர்ச்சியாகத்தான் இருந்தது.
“என்.. என்னடா சொல்ற, எந்த கேப்லடா இதெல்லா நடந்துச்சு? கடவுளே!” தலையைத் தாங்கிய வண்ணம் யுவன் அமர்ந்துக்கொள்ள, சற்று தள்ளி அமர்ந்திருந்த அகல்யாவுக்கும் ஒன்றுமே புரியவில்லை.
“அண்ணா நீங்.. நீங்க நெஜமாவே துர்காவதான் சொல்றீங்களா? இல்லன்னா என் காதுல தப்பா கேட்டிருச்சா?” என்று அவள் குறையாத அதிர்ச்சியோடுக் கேட்க, “உன் ஃப்ரென்டு துர்காவேதான்ம்மா..” என்றவன் பாவமாக அவளைப் பார்த்தான்.
ஒரு ஆழ்ந்த பெருமூச்சையெடுத்த யுவன், “வாடா மச்சா வாடா மச்சா.. என்னன்னாலும் பார்த்துக்கலாம்” என்று சட்டைக் கையை மடித்து விட்டவாறு முன்னே செல்ல, “மாமா, இது சரியா வராது நீங்க போறாது வேஸ்ட்டு” என்றாள் அகல்யா வேகமாக.
வேகநடையிட்டு சென்றவனோ சட்டென நின்று அவளை திரும்பிப் பார்க்க, “அது.. அது வந்து மாமா.. துர்கா வீட்டுல இதுக்கெல்லா சம்மதிக்கவே மாட்டாங்க. நீங்க போய் பேசினாலும் ஒன்னு ஆகபோறதில்ல” என்றாள் தயங்கியபடி.
“ஏன் அகலு, சமூகம் பெரிய ஆளோ?” என்று யுவன் இடுப்பில் கைக்குற்றி கேட்க, “அவங்க அப்பாதான் எங்க ஊரு போலீஸு மாமா” என்றதும்தான் தாமதம் அரவிந்த் எச்சிலை விழுங்கிக்கொள்ள, அதிர்ந்து விழித்தான் யுவனாதித்.
தன் நண்பனை பாவமாகப் பார்த்தவன், “மச்சா.. இப்போ உன் முடிவுதான். நீ ஊன்னு சொல்லு அதுக்கப்பறம் பாரு” என்று சொல்லி முடிக்கவில்லை, “ஊ..” என்றான் அரவிந்த் பட்டென்று.
அதில் திடுக்கிட்டவன், “மச்சான் சட்டுபுட்டுன்னு முடிவெடுக்காதடா, நிதானமா யோசிச்சே சொல்லு. ஒன்னு பிரச்சனையில்ல ஹிஹிஹி…” என்று அசடுவழிய, தன் நண்பனை முறைத்துப் பார்த்த அரவிந்தோ, “நீ வரலன்னா என்ன.. நான் போய் பேசுறேன். பொண்ண கொடுக்கலன்னா தூக்கிட வேண்டியதுதான்” என்றுவிட்டு விறுவிறுவென்று வெளியேறிச் சென்றான்.
“அய்யோ மாமா.. என்ன இவரு.. வாங்க சீக்கிரம் போகலாம்” என்று அகல்யா பதறிக்கொண்டு அரவிந்தின் பின்னே ஓட, “சோதீக்காதீங்கடா..” என்று புலம்பியவாறு இருவரைத் தொடர்ந்து வேகமாகச் சென்றான் யுவன்.
அடுத்த பத்து நிமிடங்களில் அரவிந்த், யுவன் மற்றும் அகல்யா மூவரும் தூர்காவின் வீட்டில் அமர்ந்திருக்க, துர்காவின் தந்தை வேலாயுதம் மீசையை முறுக்கியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தார் என்றால் தாய் மங்கையின் பக்கத்தில் கைகளை பிசைந்தபடி தயக்கமாக நின்றிருந்தாள் துர்கா.
“என்ன யுவா தம்பி, காலங்காத்தாலயே நம்ம வீட்டு பக்கம் வந்திருக்கீங்க. ஏதாச்சும் வேலை ஆகணுமா.. சொல்லுங்க பண்ணிரலாம்” என்று அவர் சொல்ல, சுவற்றில் போலீஸ் யுனிஃபார்மோடு நின்றிருந்த அவரின் புகைப்படத்தை அடி வயிறு கலங்க பார்த்த யுவன் பக்கத்திலிருந்த தன் நண்பனை பார்த்துவிட்டு கோபத்தின் உச்சத்திற்கே சென்றுவிட்டான்.
அரவிந்தோ தன்னவளை விழுங்கி விடுவது போல பார்த்துக்கொண்டு விழிகளாலேயே ரொமேன்ஸ் செய்துக்கொண்டிருக்க, முழங்கையால் அவன் வயிற்றில் குத்தியவன், “ஐயா கேக்குறாருல்ல சொல்லு..” என்றான் பற்களைக் கடித்துக்கொண்டு.
வேலாயுதமோ விழிகளை சுருக்கி அரவிந்தை சந்தேகமாகப் பார்த்தவர், “யார் இந்த தம்பி, உங்க தோஸ்த்தா.. அவருக்கு என்ன காரியம் ஆகணும்?” என்று கேட்டு வைக்க, “அது.. அது வந்து.. அது நா.. நான் ஒரு பொண்ண லவ் பண்றேன் ஐயா.. அவங்க வீட்டுல ஒத்துக்க மாட்டேங்குறாங்க, நீங்கதான் பேசி..” என்றான் திக்கித்திணறி.
அவன் பேசி முடித்ததும் யுவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவனை நெற்றியை நீவி விட்டவாறு ஒரு பார்வைப் பார்த்தவர், “அப்படியா விஷயம்.. எங்க ஊர் பொண்ணா?” என்று கேட்டார் யோசனையோடு.
“ஆ..மா சார்..” என்று அரவிந்த் வார்த்தையை இழுக்க, “ஓஹோ.. அது ஒன்னு பிரச்சனையில்ல. பொண்ணு மேஜர்னா பேசி பார்க்கலாம். இந்த காலத்து சின்னஞ்சிறுசுங்க எங்க நம்ம பேச்ச கேக்குதுங்க. அதுங்களா ஒரு முடிவு எடுத்துக்குதுங்க. ஆனா பரவாயில்ல. யுவா தம்பியோட ஃப்ரென்ட்டு நல்ல பையனாதான் இருப்பீங்க. எங்க ஊரு பொண்ண காதலிக்கிறேன்னு சொல்றீங்க.. அவங்க ஆத்தா அப்பாவோட நான் பேசி பார்க்குறேன்” என்றவர் எழுந்து செல்லப் போனார்.
“ஆனா… ஆனா மாமா அவங்க ஜாதி பார்க்குறாங்களாம். அதான்…” என்று யுவன் இழுக்க, “எவன் தம்பி அது, எங்க ஊர்ல இருந்துக்கிட்டு ஜாதி மதம்லாம் பார்க்குறது. தம்பி நீங்க வாங்க, இப்போவே போய் முடிவா பேசிட்டு வரலாம்” என்ற பெரியவர் தன் பெரிய மீசையை முறுக்கிவிட்டுக்கொள்ள, பயத்தை மறைத்துக்கொண்டு அவர் முன் சென்று நின்றான் அரவிந்த்.
“உங்கள பத்தி எல்லார் சொன்னத வச்சும் உங்க பெரிய மீசைய பார்த்தும் நான் ஏதோ நினைச்சுட்டேன். ஆனா நீங்க இம்புட்டு பெருந்தன்மையா பேசுவீங்கன்னு நான் நினைச்சும் பார்க்கல” என்று அவன் பேசிக்கொண்டே போக, அவனை மேலிருந்து கீழ் ‘ஙே’ என பார்த்தவர், “என்ன தம்பி சொல்றீங்க?” என்று கேட்டார் புரியாமல்.
அரவிந்தோ எச்சிலை விழுங்கியபடி துர்காவைப் பார்க்க, அவனின் பார்வை செல்லும் திசையை பார்த்துவிட்டு திரும்பியவருக்கு அப்போதுதான் மூளைக்கு உரைத்தது.
அவருடைய முகம் கோபத்தில் சிவக்க பாய்ந்து அரவிந்தின் சட்டைக் காலரைப் பற்றியவர், “ஏலே.. எவ்வளவு தைரியம் இருந்தா என் வீட்டுக்கு வந்து என் பொண்ண கேப்ப, நான் யாருன்னு தெரியுமாலே.. இந்த ஊரை வுட்டு உயிரோட போக முடியாது நீ” என்று ஆக்ரோஷமாகக் கத்த, ஸ்தம்பித்துப் போய்விட்டான் அரவிந்த்.
“அப்பா…” என்று துர்கா ஒரு பக்கம் பதற, வேகமாக வந்து வேலாயுதத்தின் கரத்தைப் பற்றியிழுத்த யுவன், “மாமா கோபப்படாதீங்க. இத.. இதை பத்தி கொஞ்சம் பொறுமையா பேசலாம்” என்று அவனும் பதிலுக்கு பதற்றமாகக் கத்த, அவனைப் பிடித்து தள்ளிவிட்டார் வேலாயுதம்.
“என்னலே பொறுமை.. ஊர்க்கார பையன்னு உன்ன உள்ள விட்டதுக்கு நல்லா பண்ணிட்ட.. பொறுமையா பேசுறதுக்கெல்லா இங்க ஒன்னுஇல்ல. இன்னைக்கே ஊரை விட்டு ஓடிருங்க. இல்ல… பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளிருவேன் பார்த்துக்க” என்று அவர் அடித்தொண்டையிலிருந்து மிரட்ட, முயன்று தைரியத்தை வரவழைத்து நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு அவர் முன்னே நின்றான் அரவிந்த்.
“இல்ல சார்… என்னால துர்காவ விட முடியாது. நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம். நல்ல வேலை, நல்ல சம்பளம் இதுக்கு மேல என்ன வேணும்? எதுக்காக உங்க பொண்ண எனக்கு கொடுக்க முடியாது அதை சொல்லுங்க..” என்று கேட்டு விறைப்பாக நிற்க, “நீ என்ன எங்க ஊர்க்காரனா.. எங்க ஆளுங்களா.. நான் எதுக்கு உனக்கு என் பொண்ண கொடுக்கணும்? ஒழுங்கா போயிரு இல்லன்னா…” என்றார் அவர் கோபத்தோடு.
“அண்ணா.. வாங்க போகலாம், அப்பறமா பேசிக்கலாம் வாங்க அண்ணா.. வாங்க மாமா..” என்று அகல்யா பயத்தோடு இருவரையும் இழுக்க, “இல்ல அகல்யா, இதை இன்னைக்கே பேசியாகணும்” என்ற அரவிந்த் இதை விடுவதாக இல்லை.
துர்காவிற்கு அழுவதை தவிர வேறு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
“மச்சா.. வா போகலாம்..” யுவனும் இவர்களிடம் பேசி வேலைக்காகாது என்பது போல நண்பனை வெளியேறுவதற்காக இழுக்க, அவனோ கால்களை தரையில் ஊன்றி பிடிவாதமாய் நின்றுக்கொண்டவன், “நான் வேற ஊர்க்காரன்தான். ஆனா.. உங்க ஆளுங்களான்னு கேட்டீங்களே அதுக்கு என்ன சார் அர்த்தம்?” என்று கேட்டான் அழுத்தமாக.
பெரியவரோ முறைத்துப் பார்த்தவர், “எங்க ஆளுங்கன்னா.. எங்க ஜாதி பயலுக்கு மட்டும்தான் நாங்க எங்க பொண்ண கட்டி கொடுப்போம். புரியுதா இடத்த காலி பண்ணு” என்று அலட்சியமாக சொல்ல, “ஓஹோ.. அப்போ.. இப்பொ கொஞ்சநேரத்துக்கு முன்னாடி கட்டபொம்மான் மாதிரி பெரிய வீரவசனம்லாம் பேசினீங்க. அப்போ அதெல்லா வெறும் வாய்பேச்சுதானா” என்றவன் ஏளனமாக இதழை வளைத்தான்.
அவரோ அதில் தடுமாறியவர், “அது.. அது வந்து… எங்க சொந்தம் விட்டு போகக் கூடாதுன்னு நினைக்கிறோம். அது தப்பா.. ஏய் இங்க பாரு இதுக்கெல்லா என்னால உனக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்க முடியாது. இதுக்குமேல ஒரு வார்த்தை பேசினேன்னா அடுத்தநிமிஷம் ஸ்டேஷன்லதான் இருப்ப.” என்று ஒற்றை விரலை நீட்டி மிரட்ட, அங்கு சுவற்றில் மாலையிட்டு மாட்டப்பட்டிருந்த ஒரு யுவதியின் புகைப்படத்தை சுட்டிக் காட்டினான் அரவிந்த்.
“அது உங்க மூத்த பொண்ணுதானே.. தற்கொலை பண்ணி இறந்திருக்கா. அதுவும் உங்களால..” என்றவனின் வார்த்தைகள் குற்றம் சாட்டுவது போல அவரைத் தாக்க, வேலாயுதமோ அதிர்ந்தவர் ஏதோ கோபமாக சொல்ல வர, “எதுவும் பேசாதீங்க..” என்று குறுக்கிட்டு கத்தினான் அவன்.
“ஜாதி ஜாதின்னு பார்த்துதான் துர்காவோட அக்கா தற்கொலை பண்ணிக்கிட்டாங்க. அவங்க காதலிக்கிற விஷயத்த உங்ககிட்ட சொல்ல கூட இல்ல. வெறும் பயம்.. சொன்னா எப்படாயும் சம்மதிக்க மாட்டீங்கன்னு பயம். அதனாலேயே உயிர விட்டாங்க. ஆனா அப்போவும் உங்க வெறி அடங்கலல்ல. பெத்த புள்ளைங்களோட ஆசைய நிறைவேத்தாம என்ன வாழ்க்கை சார் வாழுறீங்க ச்சே!
இதுல ஐயா போலீஸாம்.. பெத்த புள்ளையே காப்பாத்த முடியல இதுல ஊருக்கு காவல்.. உங்க பதவிக்கும் யூனிஃபார்முக்கும் வேல்யூவே இல்லாம பண்ணிட்டீங்க. இதுக்குமேல பேச எதுவுமில்ல.. என் பேரு அரவிந்த், சென்னையில சொந்த வீடு இருக்கு. நல்ல வேலை நல்ல சம்பளம். இவ்வளவுதான். இதுக்கப்பறம் உங்க முடிவு”
படபடவென பேசிவிட்டு அவன் அங்கிருந்து வெளியேறிப் போக, நடப்பதை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டிருந்த யுவனும் அகல்யாவும் அவன் பின்னால் வேகமாக ஓடினர்.
“டேய் மச்சா.. நீ இந்தளவுக்கு பேசுவேன்னு நான் நினைச்சும் பார்க்கலடா.. செம்ம ஸ்பீச்டா வேற லெவல்” என்று யுவன் விசிலடித்து பாராட்டித் தள்ள, “வாய மூடுடா குரங்கு.. பில்டிங் ஸ்ராங்கு, பேஸ்மென்ட் வீக்குடா மாப்ள. ஒரு ஃப்லோல பேசிட்டேன், போலீஸ் மாமா ஊரை விட்டு போறதுக்குள்ள என்னை உள்ள தள்ளாம இருந்தா போதும்” என்றான் உடல் நடுங்க.
யுவனுக்கு அவனின் பாவனையில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
சரியாக முத்துப்பாண்டியிடமிருந்து அழைப்பு வர, அதையேற்று பேசிய அகல்யாவின் விழிகள் தெறித்து விடுமளவிற்கு விரிந்திருந்தன.
அவளையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த யுவனோ அவள் அழைப்பைத் துண்டித்ததுமே, “என்னாச்சு அகலு?” என்று கேள்வியாகப் பார்க்க, “அது.. அது வந்து மாமா.. மித்ரா அக்கா திரும்பி வந்திருக்காங்க” என்றாள் தயங்கியபடி.
அதைக் கேட்டதும் யுவனுக்கு பேரதிர்ச்சியாக இருக்க, அடுத்த பத்து நிமிட ங்களில் சங்கரபாண்டியனின் வீட்டினுள் நின்றிருந்தனர் மொத்தப் பேரும்.
-Sheha zaki
