அகல்கவி சிலையமுதே 02

அகல்கவி சிலையமுதே 02
Advertisement
யுவன் அவளையே பார்த்தபடி அவள் முன்னே சொடக்கிட, நடப்புக்கு வந்த அகல்யாவோ, “யுவன் மாமா…” என்றழைத்தபடி திருதிருவென விழித்தாள்.
அவளின் அழைப்பில் புன்னகைத்தவன், “அகல், உன்ன சின்ன பொண்ணா இருக்கும் போது பார்த்தது. ரொம்ப வளர்ந்துட்ட… பார்க்க மித்து மாதிரியே..” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட மித்ரா, “ஆங் அகல், நீ ஒன்னும் தப்பா எடுத்துக்காத! மாமா நான்னு நினைச்சுதான் உன்ன… புரியும்னு நினைக்கிறேன்..” என்றுவிட்டு யுவனின் கரத்தைப் பற்றி வெளியே இழுத்துச் சென்றாள்.
Advertisement
Advertisement
ஆனால் அகல்யாவுக்கு தன்னிலையை சுதாகரிக்கவே சில நிமிடங்கள் எடுத்தது என்னவோ உண்மைதான்.
அதேநேரம் மித்ராவோ யுவனை இழுத்துக்கொண்டு மாடிக்கு சென்றவள் அங்கு யாரும் இல்லாததை உறுதி செய்துவிட்டு பேச வாயெடுக்க, அதற்குள் வேகமாக அவளை இழுத்து தன்னோடு அணைத்துக்கொண்டான் அவன்.
Advertisement
மித்ரா இதை எதிர்பார்க்கவில்லை. அதிர்ந்தவள் பின் சுதாகரித்து, “உங்கள இப்படி என் பக்கத்துல பார்க்குற இந்த ஒரு நாளுக்காக நான் எம்புட்டு நாள் ஏங்கியிருக்கேன் தெரியுமா.. வேலை வேலைன்னு வெளியூருக்கு போனவரு அகலோட கல்யாணம்னு இப்போதான் வந்திருக்கீங்க. கொஞ்சம் விட்டிருந்தா இந்நேரம் அகலோட இடத்துல நான் இருந்திருப்பேன்” என்றாள் மூக்கை உறிஞ்சியபடி.
அவள் சொன்னதைக் கேட்டவனுக்கு நிலைமை புரிய, அவனுடைய முகமோ இறுகியது.
தமக்கை இருக்க, சிறியவளுக்கு திருமணம் என்றால் எந்த குடும்பத்தில்தான் ஏற்பார்கள்!
“புரியுது மித்து, ஆனா என்ன பண்றது? படிச்ச படிப்புக்கு வேலை இல்ல. அம்மாவும் அப்பாவும் கடன் வாங்கிதான் என்னை டுபாய்க்கு வேலைக்காக அனுப்பினாங்க. அஞ்சு வருஷம் ரொம்ப கஷ்டப்பட்டேன், இப்போ சேமிச்ச காசு கொஞ்சம் கையில இருக்கு. வேலை கிடைக்கிற வரைக்கும் அதை வச்சுதான் சமாளிக்கணும். ஆனா வேலை கிடைச்சதுமே மாமாகிட்ட முறையா வந்து பொண்ணு கேக்குறேன் சரியா..”
என்று யுவன் அவளின் இரு கன்னங்களைத் தாங்கியபடி விழிகளில் காதல் மிதக்கக் கேட்க, அவனின் நிலையை நினைத்து அவள் மனம் அதிருப்தியில் சுணங்கினாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் வரவழைக்கப்பட்ட புன்னகை புரிந்தாள் மித்ரா.
இப்போது ஆடவனின் பார்வையோ அவளின் புன்னகையில் விரிந்திருந்த இதழின் மீது பதிந்தது.
ஏனோ அவளின் நெருக்கமும் ஸ்பரிசமும் ஒரு ஆண்மகனாக அவனின் உணர்ச்சிகளைக் கிளற, அவளிதழை நோக்கி குனிந்தவன் தன்னிதழோடு அவளிதழை உரசினான்.
பெண்ணவவோ விழிகளை மூடிக்கொள்ள, திடீரென மித்ராவின் கரத்திலிருந்த அவளுடைய அலைப்பேசி அலறியது.
வேகமாக யுவனை தள்ளிவிட்டு அலைப்பேசி திரையைப் பார்த்தவள் தன்னையே கேள்வியாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.
“யாராச்சும் முக்கியமான காலா இருக்க போகுது, நீ பேசு மித்து” என்று அவன் தன்மையோடு சொல்ல, “ஆங்.. அது மாமா அம்புட்டு முக்கியம்னுலாம் கிடையாது. காலேஜ் ஃப்ரென்டுதான்” என்றவள், “அய்யோ மாமா, சீக்கிரம் வாங்க. கீழ போகலாம், ரொம்ப நேரம் என்னை காணலன்னா அப்பாவுக்கு சந்தேகம் வந்துரும்” என்றுவிட்டு வேகமாக முன்னே ஓடினாள்.
அவள் சென்ற திசையையே அவளிதழோடு மோதிய தன்னிதழை வருடியபடி யுவன் புன்னகையோடு பார்த்திருக்க, இங்கு ஹாலில் தன் இரு அண்ணண்களுக்கு நடுவே சேலை முந்தானையில் கண்ணீரைத் துடைத்தபடி அமர்ந்திருந்தார் சாரதா.
“அண்ணே, உன்ன பார்த்து எத்தனை வருஷமாச்சு.. எல்லாத்துக்கும் காரணம் இந்த மனுஷன்தான், என் பையனும் ஊருல இல்ல, அவன் மட்டும் இருந்திருந்தா நான் இப்படி உங்கள பார்க்காம பிரிஞ்சு இருந்திருப்பேனா?”
என்று அவர் வராத கண்ணீரை வரவழைத்தவாறு கதறியழ, சங்கரபாண்டிக்கும் முத்துப் பாண்டிக்குமே மனம் வேதனையில் மூழ்கியது.
ஒரு ஓரமாக நின்றிருந்த பொன்னியோ எதிலும் தலையிடாது பார்த்துக்கொண்டு நின்றிருக்க, “என்ன இப்படி சொல்ற, எனக்கென்னவோ நீ கஷ்டப்பட்ட மாதிரி தெரியல, இங்கயிருந்து போகும் போது இருந்தை விட இப்போ பளபளன்னு இருக்க. என்ன ரகசியம்?” என்று குறுக்கிட்டு வேண்டுமென்றே கேட்டார் மேகலா.
சாரதாவுக்கு உள்ளுக்குள் பொறுமிக்கொள்வதை தவிர வேறு எந்த எதிர்வினையும் காட்ட முடியவில்லை.
“ஹிஹிஹி… அண்ணிக்கு எப்போ பாரு தமாசுதான்” என்று அவர் சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்துக்கொள்ள, முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டார் சிவலிங்கம்.
முத்துப்பாண்டி மற்றும் சங்கரபாண்டிக்கு சாரதா ஒரே தங்கை.
மூத்தவரான சங்கரபாண்டி மற்றும் மேகலை தம்பதியினரின் புதல்விதான் மித்ரா. முத்துப்பாண்டி மற்றும் பொன்னி தம்பதியினரின் புதல்விதான் அகல்யா.
சாரதா மற்றும் சிவலிங்கம் தம்பதிக்கு ஒரே புதல்வன்தான். நம் கதையின் நாயகன் யுவனாதித்.
திருமணத்திற்காக பிரிந்திருந்த மொத்தக் குடும்பமும் இப்போது கூடியிருக்க, நான்கே நாட்களில் திருமணமென்பதால் கல்யாண வேலைகள் வேகவேகமாக நடந்தேறின.
அன்று,
“மாமா.. இங்க பக்கத்துல புதுசா கடை திறந்திருந்திருக்காங்களாம், நான் கல்யாணத்துக்காக சில திங்க்ஸ் வாங்க வேண்டியிருக்கு” என்று மித்ரா ஆசையோடுக் கேட்க, அவன் முடியாதென்றா சொல்லப் போகிறான்!
“போகலாம் மித்து, சீக்கிரம் ரெடியாகிட்டு வா!” என்றவன் சமையலறைக்குள் நுழைய, அங்கு அடுப்பில் வைத்திருந்த பால் பொங்குவதைக் கூட உணராமல் எங்கோ வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள் அகல்யா.
அவளை விழிகளை கூர்மையாகிக் கவனித்தவனுக்கோ யோசனையில் இரு புருவங்களும் முடிச்சிட்டன.
அவளை புதிதாக பார்ப்பவன் அல்ல அவன். சிறுவயதிலிருந்தே கவனிக்கத்தான் செய்கிறான்.
சிறுவயதிலிருந்தே தனக்கான ஒரு வட்டத்தை கீறி அமைதியாக இருப்பவள்தான் அகல்யா. நாற்பது வார்த்தை பேசினால் அவள் வாயிலிருந்து பதிலுக்கு நான்கு வார்த்தைகள் வருவதே அதிசயம்தான்.
மாநிறம் கலையான முகம் என்று சிட்டுக்குருவியாய் இருந்தவள், இன்று முகத்தில் கல்யாணப்பெண் என்ற கலை கொஞ்சமும் இல்லாமல் எதையோ பறிகொடுத்தது போல திரிகிறாள்.
யாருடனும் ஒரு வார்த்தைக் கூட பேசவில்லை.
அந்த யோசனையோடே, “அகல்…” என்று யுவன் அழைத்ததும்தான், நடப்புக்கு வந்தவள் அடுப்பில் பால் கொட்டி காய்ந்து போயிருப்பதைப் பார்த்து பதறியடித்துக்கொண்டு அடுப்பை அணைத்தாள்.
‘ஊஃப்ப்…’ ஒரு பெருமூச்சு விட்டவள், “ஆங் மாமா.. ஏதாச்சும் வேணுமா, ஏதாச்சும் பண்ணி கொடுக்கட்டுமா?” என்று பதற்றமாகக் கேட்க, “ஹேய் ரிலாக்ஸ்! நீ கல்யாணப் பொண்ணுதானே! ஏதோ இந்த வீட்டுக்கு வேலைக்கு சேர்ந்த மாதிரி முழு வேலைக்காரியாவே மாறிட்ட ஹாஹாஹா…” என்று சொல்லி சிரித்தான் அவன்.
அவள் பதிலுக்கு சிரிக்கவில்லை. அவனின் புன்னகையையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளுடைய முகபாவனையில் அவனுடைய புன்னகையும் மறைய, எதையோ கேட்க வந்தவன் சட்டென்று பொன்னி வந்ததும் அமைதியாகி விட, மித்ராவும் யுவனைத் தேடி அங்கு வந்தாள்.
“மாமா, நான் ரெடிதான். எவ்வளவு நேரம் உங்களுக்காக வெயிட் பண்றது, சீக்கிரம் வாங்க..” என்று அவள் அவனின் கரத்தைப் பற்றிக்கொள்ள, மித்ரா பற்றியிருந்த யுவனின் கரத்தை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள் அகல்யா.
“அம்மாடி, கடைக்கு போறியா என்ன! அகலுக்கு கொஞ்சம் சாமான் வாங்கணும், என்ன ஏதுன்னு எனக்கு எதுவும் தெரியல. உங்க சித்தப்பாகிட்டயும் சொல்ல முடியாது. அவர பத்திதான் தெரியுமே, நீ பார்த்து வாங்கிட்டு வர்றீயா?”
என்று அவர் கெஞ்சலாகக் கேட்க, மித்ரா பேச வருவதற்குள் குறுக்கிட்டுப் பேசினான் யுவன்.
“அத்தை, நான் அகலையும் கடைக்கு அழைச்சுட்டு போறேன், அவளுக்கு பிடிச்சத அவ வாங்கட்டும்” என்று அவன் சொல்ல, அகல்யாவோ, “இல்லை மாமா… அது…” என்று ஆரம்பித்தவள் பின் பொன்னி அவள் கரத்தில் கொடுத்த அழுத்தத்தில் அமைதியானாள்.
அவளுடைய பார்வை தன் அன்னையின் மீது கேள்வியாகப் பதிந்தது.
“அதுவும் நல்லதுதான்ப்பா, தாராளமா அழைச்சுட்டு போ. மாமா ஹால்லதான் இருக்காரு, அவர்கிட்டயும் கொஞ்சம் சொல்லிக்கோ!” என்று பெரியவர் சொன்னதும் யுவன் புன்னகையோடு முன்னே செல்ல, உள்ளுக்குள் பொறுமிக்கொண்டாலும் வெளியில் காட்டாது அமைதியாக இருந்துக்கொண்டாள் மித்ரா.
கைகளைப் பிசைந்துக்கொண்டு நின்றிருந்த அகல்யாவுக்கு தான் என்ன உணர்கிறோம் என்றே புரியவில்லை.
அவளுக்குள் ஏனென்று தெரியாத தயக்கம், தர்மசங்கடம், குழப்பம் என்று பல உணர்ச்சிகள் சுழற்றியடிக்க, தாயை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அமைதியாக அவன் பின்னாலேயே சென்றாள்.
மூவரும் செல்வதைப் பார்த்த சங்கரபாண்டியோ, “டேய் யுவா, அகல அழைச்சுக்கிட்டு எங்க போற? அதுவும் மூனே நாள்ல கல்யாணத்தை வச்சுக்கிட்டு கல்யாணப் பொண்ணு வெளியில போறது சரியா என்ன..” என்று கண்டிப்புக் குரலில் கேட்க, அப்போதுதான் நடப்பதை கவனித்தார் முத்துப்பாண்டி.
“மாமா அகலுக்கு சில பொருளுங்க வாங்கயிருக்கு. அத்தைக்கு அதை பத்தி எதுவும் தெரியாதாம், அதான் நானே அழைச்சுட்டு போய் வாங்கி கொடுக்கலாம்னு. அதுமட்டுமில்லாம அகலோட கல்யாணத்துக்கு அவளுக்காக நான் எந்த கிஃப்ட்டும் கொண்டு வரல, அதான் என் சார்பா ஏதாச்சும் எடுத்து கொடுக்கலாம்னு யோசிச்சேன்..”
என்று யுவன் சொல்லி முடிக்கவில்லை, முத்துப்பாண்டியின் விழிகள் மின்னின.
தான் செலவழிப்பது என்றாலே பஞ்சம் பாடுபவருக்கு அடுத்தவன் காசு இனிக்கத்தானே செய்யும்!
“அதுக்கென்ன யுவா கண்ணா, உனக்கில்லாத உரிமையா? நீ நகையோ பட்டுப்புடவையோ பார்த்து ஏதாச்சும் நல்லதா எடுத்து கொடு… ஹிஹிஹி…”
சகோதரன் அசடுவழிவதை எரிச்சலாகப் பார்த்த சங்கரபாண்டியோ அப்போதுதான் தன் மகள் யுவனின் கரத்தை உரிமையோடு பற்றியிருப்பதை கவனித்தார்.
“ஆமா… நீ எங்கலே போற, அவளுக்குதானே சாமான் வாங்கணும்?” அவர் கோபத்தோடுக் கேட்க, “மாமா எனக்கும் வாங்கி கொடுக்குறேன்னு சொல்லுச்சு.. அதுமட்டுமில்லாம ராமன் இருக்கும் இடமே சீதைக்கு அயோத்தி” என்றுவிட்டு விட்டால் போதுமென்று வெளியில் ஓடிவிட்டாள் மித்ரா.
சங்கரபாண்டியோ மகள் சொல்லிவிட்டு சென்றது புரியாமல், “என்னடீ உன் பொண்ணு உளறிட்டு போறா, நான் கேட்ட கேள்விக்கும் ராமாயணத்துக்கும் என்ன சம்பந்தம்?” என்று ஒரு கேள்வியை கேட்டு வைத்தார்.
அதில் மேகலையோ திருதிருவென்று விழிக்க, எங்கோ பார்ப்பது போல பாவனை செய்துக்கொண்டிருந்தார் சாரதா.
அதன் பின் மூவரும் வெளியே செல்ல, காரின் பின்சீட்டில் அகல்யா அமர்ந்துக்கொண்டாள் என்றால் முன்சீட்டில் யுவனுக்கு அருகே அமர்ந்துக்கொண்டாள் மித்ரா.
காரும் மிதமான வேகத்தில் செல்ல, அகல்யாவின் பார்வையோ யுவனின் மீதுதான் பல முறை பதிந்து மீண்டது.
அடர்த்தியான கேசம், மாநிறம், ட்ரிம் செய்யப்பட்ட தாடி மீசை என்று இருப்பவன் உடலை செதுக்கவும் தவறவில்லை.
ஏதோ பார்க்க முரடன் போல தெரிந்தாலும் அவனின் மென்மையான குணத்தைப் பற்றி நன்கே அறிந்து வைத்திருந்தாள் அகல்யா.
அவன் மீது பதிந்திருந்த அவள் பார்வை அவனை விட்டு அகல மறுத்தது.
சட்டென கார் கண்ணாடி வழியே பின்சீட்டில் அமர்ந்திருந்தவளின் மீது யுவனின் பார்வை எதேர்ச்சையாக பதிய, உடனே முகத்தை திருப்பிக்கொண்டாள் அவள்.
ஆனால் அவள் பார்வையை கண்டுகொண்டான் யுவன்.
“அகல், ஏன் ஒரு மாதிரியா இருக்க, ஏதாச்சும் சொல்லணுமா?” அவன் கண்ணாடி வழியே அவளை பார்த்தபடி கேட்க, அவனையே உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்தோடு ஒரு பார்வைப் பார்த்தவள் சற்றும் மாறாமல் இல்லையெனும் விதமாக தலையசைத்தாள்.
அந்த பதிலே அவனுக்கு எதையோ ஒன்றை தவறாக உணர்த்த, அடுத்து அவன் கேட்க வருவதற்குள் “மாமா, இன்னும் மூனே நாள்ல எங்க ஊர்லயே பெரிய குடும்பத்துக்கு நம்ம அகல் வாழ்க்கைப்பட்டு போக போறா.. அவளுக்கு என்ன கஷ்டம் இருந்துர போகுது. நாமதான் பணத்த பத்தி யோசிக்கணும்” என்றாள் ஒருமாதிரி குரலில்.
அவள் வார்த்தைகளில் யுகனின் முகம் மாற, “ஏன் மித்து இப்படி சொல்ற? கண்டிப்பா நாம பணத்துக்கு கஷ்டப்பட மாட்டோம், உன்ன நான் கஷ்டப்படுத்தவும் மாட்டேன். என்னை நம்பு!” என்றான் உறுதியான குரலில்.
‘க்கும்’ உள்ளுக்குள் நொடிந்துக்கொண்டவாறு மித்ரா திரும்பிக்கொள்ள, சரியாக அவன் கார் நின்றது என்னவோ நகை கடைக்கு முன்னேதான்.
“இங்க எதுக்கு வந்திருக்கோம்?” என்று கேட்டுக்கொண்டே காரிலிருந்து இறங்கிய மித்ரா, ‘அடியே மித்ரா, உன் மாமாவ ரொம்ப தப்பா எடை போட்டுட்டியே!’ என்று உள்ளுக்குள் நினைத்தவாறு அவனை விழிகள் மின்ன பார்த்தாள்.
ஆனால், அவளுடைய சந்தோஷம் எல்லாம் சில கணங்கள்தான்.
அதற்குள் அகல்யா கார் கதவை திறக்கத் தெரியாது தடுமாறுவதை உணர்ந்து அவள் பக்கமிருந்த கார் கதவை திறந்துவிட்டவன், “உனக்காகதான் அகல்” என்று சொல்ல, அந்த பிரம்மாண்டமான நகைக் கடையை தயக்கத்தோடு பார்த்தாள் அவள்.
“இல்ல மாமா, எனக்கு இதெல்லா வேணாம்” அவள் உள்ளே கூட நுழையாது வாசலில் இருந்தபடியே மறுக்க, “போதும் ரொம்ப பண்ணாத!” என்று இருந்த கோபத்தில் அவளை கடிந்துக்கொண்ட மித்ரா அகல்யாவை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தாள்.
அங்கு அகல்யா ஆர்வமாக பார்த்தாளோ இல்லையோ ஒவ்வொரு நகைகளையும் தனக்கு வைத்து அழகு பார்த்துக்கொண்டிருந்தாள் மற்றவள்.
“உனக்கு என்ன பிடிச்சிருக்கோ அதை எடுத்துக்கோ அகல்” யுவன் அக்கறையோடு சொல்ல, இருக்கையில் அமர்ந்துக்கொண்டவளுக்கு அங்கு வேலைப் பார்க்கும் பெண்ணொருத்தி ஒவ்வொரு நகைகளாக காண்பிக்க ஆரம்பித்தாள்.
“ஏய் அகல், இந்த நெக்லஸ் செம்மயா இருக்குடீ! கண்டிப்பா மூனு சவரணுக்கு மேல இருக்கும்”
“அகலு.. இந்த தோடு எனக்கு நல்லா இருக்கா? இந்த வளையல் கூட..”
“மாமா, நம்ம கல்யாணத்துக்கு எனக்கு நீங்க இந்த வளையல கிஃப்ட்டா தரணும்..”
அவள் பாட்டிற்கு இடை விடாது பேசிக்கொண்டு போக, மெல்லிய புன்னகையோடு தன் முன்னே இருந்த கண்ணாடியை பார்த்த அகல்யாவுக்கு தன் பின்னே இருந்த யுவனின் விம்பம் நன்றாகவே தெரிந்தது.
அவனோ தன் பர்சை திறந்து பார்ப்பதும் பின் டெபிட் கார்டை கையில் வைத்து யோசிப்பதுமாக தீவிர யோனையிலிருக்க, அதைப் பார்த்துவிட்டு தோடுகளுக்கு மத்தியிலிருந்த ஒரு சிறிய தோடு ஜோடியை மட்டும் கையிலெடுத்தாள் அகல்யா.
“ஏய் அகல், இது ரொம்ப சின்னதா இருக்கு” என்று மித்ரா அதிப்தியோடு சொல்ல, யுவனை ஒரு பார்வைப் பார்த்தவள், “எனக்கு இது போதும் மித்து” என்றாள் புன்னகையோடு.
அதேநேரம், அறைக்குள் அமர்ந்து பல வருடங்களுக்கு முன் நடந்த ஒரு அசம்பாவிதத்தை நினைத்து சாரதா அழுது கரைய, மனைவியை தேற்ற வழி தெரியாது இறுகிப் போய் நின்றுக்கொண்டிருந்தார் சிவலிங்கம்.
-Sheha zaki
