அசுரனாய் மாறிய அன்பனே 12
பகுதி 12
பெங்களூரில் இருந்தது அந்த பெரிய நட்சத்திர ஹோட்டல். கண்ணைப் பறிக்கும் அழகுடன் பிரகாசமாய் மின்னியது. அதற்கு அங்கு மிளிர்ந்து கொண்டு இருந்த வண்ண வண்ண விளக்குள மட்டுமே காரணம் அல்ல.
பம்பரமாய் சுற்றி ஓடிக் கொண்டு இருந்த பணியாட்கள் கைவண்ணம் என்றே கூறலாம். அவர்கள் இத்தனை ஆர்வமாக வேலை பார்ப்பது கடமை உணர்ச்சியில் என்று நினைத்தால் அது உண்மையல்ல.
பயத்தில்!.. ஆம் அதிலும் வேலை போய் விடுமோ என்ற பயத்தில் பம்பரமாய்ச் சுற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டும் இருந்தார்கள். அப்படி இருந்து தானே ஆக வேண்டும்.. அவர்கள் முதலாளி சற்று நேரத்தில் வந்து விடுவாரே. அவனை மனிதன் என்று சொல்வதை விட அரக்கன் என்றே சொல்லலாம்.
Advertisement
ஆம்.. மனதநேயம், இரக்கம், மன்னிப்பு என்ற வார்த்தைகளுக்கு எல்லாம் அவன் அகராதியில் இடமே இல்லை. எந்த சிறு பிழையும் பொறுத்துக் கொள்ள மாட்டான். ஆனால் அவன் கண்டிப்பின் பலன் அந்த நட்சத்திர ஹோட்டல் தோற்றத்தில் நிச்சயம் தெரியத் தான் செய்யும். எந்த இடத்திலும் ஒரு சிறு தூசியோ அழுக்கோ பார்க்க முடியாது.
கண்ணாடி மாளிகை போல எப்பொழுதும் பளிச்சென மின்னும். வெளிநாட்டவர்கள், பெரிய பெரிய பணக்காரர்கள் கூட அழகாக வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டல் விளம்பரத்தைப் பார்த்து வரத் துவங்கி இருந்தார்கள். அவர்களின் இனிமையான வரவேற்பு, அறைகளின் நேர்த்தி, சுத்தம் என்று எல்லாமே சிறப்பாக இருந்தது.
எல்லாவற்றிலும் மேலாக அங்கே கிடைக்கும் உணவு அத்தனை ருசியாக இருப்பதாக வரும் விமர்சனங்கள். இவை எல்லாமே அந்த ஹோட்டலின் வளர்ச்சியை பெரிதாக கூட்டி இருந்தது. இரண்டே வருடங்களில் அத்தனை பிரபலம் ஆகத் துவங்கி இருந்தது.
Advertisement
அத்தனைக்கும் காரணமான அந்த ஹோட்டலின் அதிபனான ஹரி வேக நடையிட்டு உள்ளே வந்து கொண்டு இருந்தான். கம்பீரமாக உள்ளே வந்தவனின் கழுகுக் கண்கள் வரவேற்பு அறையை ஒரு நொடி தான் வட்டமிட்டது. அவன் அலுவல் அறைக்கு சென்று விட்டான்.
Advertisement
ஆனால் அங்கு நின்ற வரவேற்பாளர்கள் மேனேஜர் என்று அனைவரும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு இருந்தார்கள்.. இன்று யாருக்கு வேலை போகப் போகிறதோ என்று பயந்து கொண்டு நின்றார்கள். மற்றவர்கள் போல இவன் யாரிடமும் கோபமாக எல்லாம் பேசவே மாட்டான். அவன் குரல் உயரவே உயராது.
ஆனால் ஒரே சொல் ஒரே முடிவு தான். அதற்கு மேல் பேசவே கூடாது என்று அவர்கள் வேலைக்கு சேரும் போதே எழுதி வாங்கி விடுவான். அப்படியும் அங்கு நிறைய பேர் வேலை செய்ய விரும்பும் ஒரே காரணம்.. அவன் கொடுக்கும் அதிக சம்பளம் மற்றும் தங்க இடம்.
அதே நேரம் மேனேஜர் ஃபோன் அதிர “ஹலோ சார்”.. என்று அவன் பயபக்தியுடன் எடுக்கும் போதே சுற்றி உள்ளவர்களுக்கு யார் அழைத்து இருப்பார்கள் என்று புரிந்து போனது.
Advertisement
“ஒகே சார். இதோ வரேன்”.. என்று அவன் சொல்லிவிட்டு அவன் ஹரி அறைக்கு செல்லப் போக.
ரிசப்ஷன் மற்றும் வரவேற்பு அறைக்கு பொறுப்பானவர் திகிலுடன் மேனேஜரைப் பார்க்க. “ம்ம்.. நீங்க பாசாகிட்டீங்க. கிச்சன் போகப் போறோம்”. என்றதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டார்கள் அங்கிருந்த அத்தனை பேரும்.
ஹரி அடுத்ததாக சமையல் அறையைச் சோதிக்க உள்ளே சென்றான். அனைவரும் வேக வேகமாக சமைத்துக் கொண்டு இருந்தாலும் குட் ஈவினிங் சார் என்றார்கள். சில உணவுகளை சாப்பிட்டும் பார்த்தான். அவன் எதுவும் சொல்லவில்லை என்றால் எல்லாம் சரியாக இருக்கிறது என்று அர்த்தம்.
அப்போது ஒரு பெண் ஃப்ரைட் ரைஸுக்காக பெரிய கடாயில் பெரிய தீயில் நீளமாக வெட்டிய காய்களுடன் உதிரி உதிரியாக வேக வைத்த சாதத்தைக் கிளற.
“வெயிட்.”.. என்று அவளை நிறுத்தியவன். அருகில் நின்ற மற்றவனிடம்.. “இந்த ஃப்ரைட் ரைஸை குப்பையில் போட்டு. நீ புதுசா இந்த ஆர்டரை முடிச்சுக் கொடு”.. என்றான் கட்டளையாக.
அந்த பெண் பதறிப்போய்.. “சார்.. எல்லாமே கரெக்ட்டா தான் பண்ணி இருக்கேன். நீங்க வேணா சாப்பிட்டு பாருங்க”.. என்று விழிகள் கலங்க கெஞ்சினாள்.
“நோ!!.. அதுல உன் முடி இருக்கு. கம் டூ மை ரூம்”.. என்றான்.
அவன் அப்படி சொல்லி விட்டாலே.. உன் வேலை போய் விட்டது. சம்பள பாக்கியை வாங்கிச் செல் என்று தான் அர்த்தம்.
அவள் நடுங்கி விட்டாள். அவன் சொன்னது உண்மையே. அவள் உற்றுப் பார்த்த போது தான் அந்த முடி அவள் கண்ணில் பட்டது. சற்று தூரத்தில் நின்றவனுக்கு எப்படித் தான் கண்ணில் பட்டதோ. அவள் தொப்பி போட்டு தான் சமைக்க வந்தாள். அப்புறமும் எப்படி விழுந்தது என்று அவளுக்கே தெரியவில்லை.
பயந்து கொண்டே அவன் அறைக்கு சென்றவள். “சார் ரொம்ப சாரி சார். இது மாதிரி நிச்சயம் திரும்ப நடக்காது சார்.”.. என்று அவள் கெஞ்சினாள்.
அவனோ.. “எப்படி நடக்கதுன்னு அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க”.. என்று கேட்டவனின் பார்வையோ கம்ப்யூட்டரில் இருந்த சிசி டிவியில் தான் இருந்தது.
இப்படி கேட்டால் என்ன சொல்வது.. என்று திணறியவள் “இல்ல சார் இனி ரொம்ப ஜாக்கிரதையா இருக்கேன்”.. என்றாள்.
அவன் லேப்டாப் திரையை அவள் பக்கம் திருப்பி காட்டியவன். “உங்க கொண்டை அவுந்திருச்சு.. அதை பாத் ரூம் போய் சரி செய்யாம.. யாரும் பக்கத்தில் இல்லை என்ற தைரியத்தில் அங்கேயே கிளிப் போட்டு இருக்கீங்க. அப்போ தான் முடி விழுந்து இருக்கணும். என்னால் இன்னொரு சான்ஸ் கொடுத்து ரிஸ்க் எடுக்க முடியாது.” என்றான்.
“சார் அப்படி சொல்லாதீங்க எனக்கு இந்த வேலை ரொம்ப முக்கியம். பிளீஸ்”.. என்றாள் கண்ணீருடன்.
ம்ம்.. என்று யோசித்தவன். “ஒகே.. அப்போ நாளைக்கு உங்க முடியை ஷேவ் பண்ணிட்டு வந்துடுங்க. ஐ வில் டிரஸ்ட் யூ”.. என்று மிக சாதாரணமாக சொல்லி இருந்தான்.
“என்ன மொட்டை போட்டு வரணுமா?”.. என்று அவள் அதிர்ந்து கேட்க.
“கரெக்ட் யுவர் வர்ட்ஸ் வாசுகி. நான் உங்களை வேலையை விட்டு போகத் தான் சொன்னேன். நீங்க ரொம்ப கெஞ்சினதினால உங்களுக்கு சாய்ஸ் கொடுக்கிறேன். அவ்வளவுதான்.”.. என்றான் கொஞ்சமும் இரக்கமின்றி.
வாசுகி குடும்ப நிலையை ஒரு நிமிடம் நினைத்து பார்த்தாள். அவள் கண் முன் அவள் செல்ல மகள் நினைவுக்கு வர.. “அம்மா நாளைக்கு தான் ஸ்கூல் ஃபீஸ் கட்ட கடைசி நாள்” என்றது நினைவு வந்தது. அவள் கணவனுக்கும் காலில் ஏற்பட்ட விபத்தால் ஒரு மாதம் ஆட்டோ ஓட்ட முடியாத நிலை. முடி தானே.. ஒரு மாதத்தில் வளர்ந்து விடப் போகிறது.. “சரி சார் நாளைக்கு நான் ஷேவ் பண்ணிட்டு வந்துடுறேன் சார்”. என்றாள்.
“ஒகே.. யூ கேன் கோ”.. என்றான்.
வெளியே வந்த அந்த பெண் வாசுகி இதழ்கள் “சரியான அரக்கன். இவன் எல்லாம் என்ன ஜென்மமோ. ஏதோ அவசரத்தில் ஒத்துக்கிட்டோம். முடி இல்லாம என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியலையே” என்று நினைத்தவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.
மறுநாள் வாசுகி சொன்னது போல செய்து ஒரு ஸ்கார்ஃபை தலையை மறைத்து வந்து இருந்தாள். அவளுக்கு அனைவரின் பரிதாபப் பார்வை கூட அவள் தோற்றத்தைப் பார்த்து முகம் சுழிப்பது போல தான் தோன்றியது.
எப்போது வேலை போகுமோ என்று செத்துச் செத்து பிழைத்த ஊழியர்கள் கண்களுக்கு ஹரி எமனாகத் தான் தெரிந்தான். அங்கு மட்டும் அல்ல.. அவன் வீட்டில் வேலை பார்ப்பவர்களிடமும் அதே அரக்கத்தனம் இருக்கும்.
அருகில் தான் வீடும் இருந்தது. அந்த பங்களாவும் அவன் ஹோட்டல் போல தான் எப்போதும் பளபளவென மின்னும். இரண்டே இரண்டு பேருக்காக இவ்வளவு பெரிய வீடா என்று வேலையாட்கள் அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்வார்கள்.
கீழே பெரியம்மாவுக்காக பத்திய சாப்பாடு. ஹரிக்கு எண்ணெய் இல்லாத, புரதம் அதிகம் கொண்ட உணவு வகைகள். வேலையாட்களுக்கு சாப்பாடு. என்று இதை சமைக்க நான்கு பெண்கள். சுத்தம் செய்ய நான்கு பெண்கள். பெரியம்மாவைப் பார்த்துக் கொள்ள மூன்று ஷிஃப்ட் நர்ஸ்கள்.
அந்த நர்ஸ் விஜயாவுக்கு திருமணம் முடிவாகி விட்டதால் வேலையை விட்டு போகப் போகிறாளாம். அவளுக்குப் பதிலாக வேறு நர்சுக்கான நேர்முகத் தேர்வு இன்று நடக்கப் போகிறதாம். என்று அதற்கான வேலைகளை காலையில் செய்தபடி வேலையாட்கள் அவர்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டனர்.
ஹரி தினமும் அந்த பெரியம்மாவிடம் ஒரு அரை மணி நேரம் சென்று பேசிவிட்டு வருவான். அதன்பின் தான் ஹோட்டலுக்கு கிளம்புவான். அவன் இப்போது எல்லாம் மனம் விட்டு பேசும் ஒரே ஜீவன் அவர் மட்டும் தான். அந்த பெரியம்மாவிற்கும் அவனை விட்டால் யார் இருக்கிறார்கள்?
அதனால் யாரும் அந்நேரம் அவர்களை தொந்தரவு செய்யத் துணிய மாட்டார்கள். இன்று காலையில் நர்ஸ்களின் தேர்வுக்காக ஐந்து பெண்கள் வந்து ஒரு மணி நேரமாக காத்துக் கொண்டு இருந்தார்கள்.
அதில் ஒரு பெண் சற்றும் பொறுமை இல்லாமல் எப்போ ஆரம்பிப்பீங்க என்று கேட்டுக் கொண்டே இருந்தாள். “அவசரப்படாதீங்க மேடம். சார் வர இன்னும் அரைமணி நேரம் ஆகும்”. என்று சென்று விட்டாள் அந்த பணிப் பெண்.
ஹரியும் சில நிமிடங்களுக்குப் பிறகு தன் அலுவல் அறைக்குள் சென்று கொண்டவன். “உமா.. எத்தனை பேர் இன்டர்வியூக்கு வந்து இருக்காங்க?” என்று கேட்டான்.
“அஞ்சு பேர் வந்து இருக்காங்க சார்”. என்றாள் அந்த பணி பெண்.
“ஒகே.. அவங்க எல்லோருடைய பயோ டேட்டா வாங்கி கொண்டு வாங்க. நான் பார்த்திட்டு கூப்பிடுறேன்” என்றான்.
வாக் இன் இன்டர்வியூ என்பதால் வந்து இருப்பவர்களுடைய எந்த அறிமுகமும் இல்லாமல் கேள்வி கேட்க முடியாது என்று அப்படி கேட்டு இருந்தான்.
உமா கொடுத்து விட்டுச் செல்ல.. ஒவ்வொரு பயோ டேட்டாவையும் கவனமாக ஆராய்ந்தான். முதல் மூன்று பெண்களுக்கு தகுதி இருந்தாலும்.. அனுபவம் சற்று கம்மியாக இருந்தது. அவனுக்கு அனுபவம் முக்கியம் அல்ல.. பெரியம்மாவுக்கு பிடித்த மாதிரி அவர்களை அன்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிடுமூஞ்சியாக இல்லாமல் அவர்களுக்கு பேச்சு துணைக்கு உதவியாகவும், அக்கறையுடனும் பார்த்துக் கொள்கிற அன்பான பெண்ணாக இருக்க வேண்டும். நடக்க முடியாமல் ஒரே அறையில் முடங்கிப் போனவருக்கு அவர் துன்பம் தெரியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அவனுக்கு எந்த பெண் மீதும் நம்பிக்கை இல்லை. அதனால் தான் ஷிஃப்டில் மூன்று நர்ஸ்களை வைத்து இருப்பான். ஒருவர் சொதப்பினாலும் புது நர்ஸ் வரும் வரை இருவரை வைத்து. சமாளிக்கலாம் என்று கணக்கிடுவான்.
அவன் நாலாவது பயோ டேட்டாவை எடுத்துப் பார்க்க.. அதில் இருந்த பெயரைப் பார்த்தவனின் உடல் விறைக்கத் துவங்கியது. அகல்யா மாணிக்கம் என்று இருக்க.. அவன் கண்கள் கோபத்தில் சிவப்பு ஏறியது. ஏழு வருடங்களாக எந்த பெயரைக் கூட உச்சரிக்கக் கூடாது என்று வாழ்கிறானோ இன்று அவள் வந்து இருக்கிறாளா??
இல்லை!!.. அவள் இங்கு வர வாய்ப்பு இல்லையே என்று யோசித்தவன் அவள் தானா என்று உறுதி செய்ய.. அங்கு காத்திருப்பு பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த.. சிசிடிவி யை தன் லேப்டாப்பில் ஓட விட்டான்.
அவன் கண்கள் கூர்மையாக ஆராய.. ஆம் அங்கு அமர்ந்து இருந்தது அகல்யாவே தான். ஏழு வருட கோபத்திலும் அவமானத்திலும் தன் சுயத்தை மறந்து அசுரனாய் மாறிப் போனவன் முன் திரையில் தெரிந்தாள் அகல்யா.
தொடரும்.
