நேயனின் நேசமினிது..4
இனிய நேசம் – 4
அகநேயனின் அகம் தொடும் வார்த்தைகள் இனியவர்ஷினியின் இதயத்தை தென்றலாய் தீண்டி இருக்க, தன்னிலை இழந்திருந்தாள் பாவை.
Advertisement
அவளையும் மீறி அவளது இதழ்கள் அவனது வினைக்கு எதிர்வினையாக “எஸ்” என மொழிந்திருந்தது.
அவளது சம்மதத்தை கேட்டு கூட்டம் அதிர்வுடன் ‘ஹோ’வென ஆர்ப்பரிக்க, அகநேயன் அவளையே சிரிப்புடன் பார்த்தபடி மெதுவாக எழுந்து நின்றான்.
Advertisement
Advertisement
அவளிடமிருந்து ‘எஸ்’ வரும் என்று எதிர்பார்த்தே இருந்தான் போலும்…. அவனிடம் இருந்து பெரிய அதிர்வுகள் ஒன்றுமில்லை.
“நினைச்சேன் மேடம்..” என்ற அகநேயன் அவளது முகத்தையே விடாமல் பார்க்க, அப்போது தான் சுயம் பெற்றாள் இனியவர்ஷினி.
Advertisement
என்ன கூறி விட்டோம் என்று யோசித்தவள் கண்கள் விரிய “ஓ மை காஷ்..” என்றபடி நெற்றியை தட்டிக் கொண்டாள்.
“சோ.. இனியவர்ஷினி..! ஐ டிடின்ட் எக்ஸ்பெக்ட் திஸ் ஃப்ரம் யூ..” என்ற அகநேயன் அடுத்து சொன்ன வரிகளில் இனியவர்ஷினியின் ஈகோ சற்றே தூண்டப்பட்டு விட்டது நிஜம்!
“எப்படி ஓகே சொன்னீங்க? முதல்ல ஏன் ஓகே சொன்னீங்க? நான் உங்களை இம்ப்ரஸ் பண்ற மாதிரி முட்டி போட்டு உக்காந்து Let’s love endlessly அப்படின்னு சொன்னதும் ஃப்ளாட் ஆகிட்டீங்களா?” என்று கேட்க, இனியவர்ஷினி சங்கடம் நிறைந்த மௌனத்துடன் நின்றிருந்தாள்.
“மேடம்.. யாராவது வந்து மயக்குற ஸ்மைலோட இப்படி போலி ரோஸ் ஒன்னைக் கொடுத்து தேன் சிந்துற மாதிரி லவ் சொன்னா ஓகே சொல்லிடக் கூடாது மேடம்! சரி சொல்லுங்க… என்னைப் பத்தி உங்களுக்கு என்ன தெரியும்? என்னோட கேரக்டர், விருப்பு, வெறுப்பு இப்படி எதுவுமே தெரியாம எப்படி எஸ் சொன்னீங்க?
லவ் டுடே படத்துல உத்தமன் பிரதீப், யோகி பாபு மேல சந்தேகப்படுற மாதிரி நான் குடிகாரனா இருந்தா? சைக்கோவா இருந்தா? அறிவில்லாதவனா இருந்தா?” என்று கேட்டவன் யாரும் அறியா வகையில் மிக சாதாரணமாக அன்னையிடம் பார்வையை பதித்து பின் இனியவர்ஷினியிடம் பார்வையை குவித்தான்.
‘குடிகாரனா இருந்தா..’ என்று கேட்டபோது அவன் அன்னையை பார்த்த அப்பார்வையில் ஒரு வித தயக்கமும் கொஞ்சம் பயமும் அதிக குற்ற உணர்வும் தேங்கி நின்றது அவன் மட்டுமே அறிந்த ஒன்று!
“சொல்லுங்க இனியவர்ஷினி.. இப்படி எதுவுமே ஒரு ஆளை பத்தி தெரியாம ஹவ் கேன் யூ சே எஸ்?” என்று கவனத்தை அவள் மீது வைத்துக் கேட்டவன், அவள் மௌனமாக நின்றிருப்பதை கண்டு, மீண்டும் அவனே பேசினான்.
“இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்களை அறிவான ‘ஐ.டி. டூட்’னு சொன்னேன். ஆனா, நீங்க.. என் ப்ரொபோஸல்கு ஓகே சொல்லி அது உண்மையில்லன்னு சொல்லாம சொல்லிட்டீங்களே..! க்யா மேடம்? இப்படியா டக்குன்னு எஸ் சொல்வீங்க நீங்க? யோசிச்சு பதில் சொல்லனும் தானே?” என்றவனின் வார்த்தைகள் சிந்திக்க வைக்கும் தோரணையுடனும் சாதாரண கிண்டல் தன்மையுடனும் வெளி வர, இனியவர்ஷினியின் ‘ஈகோ’ அதனை ஏற்றுக் கொள்ள முடியாமல் சண்டித்தனம் செய்தது.
‘எனக்கு அறிவில்லையா?’ என்று மனதினுள் அவளை அவளே கேள்வி கேட்டுக் கொண்ட மறு நொடி, நன்றாக நிமிர்ந்து அவனை ஏறிட்டவள் “ஏன் யோசிக்காம? யோசிச்சு தான் ஓகே சொன்னேன் மிஸ்டர். அகநேயன்” என்றாள் தடுமாறாமல் திடமான குரலில்!
இப்போது அகநேயன் அதிர்ந்து அவளைப் பார்க்க, மீண்டும் எல்லோரும் ‘ஹோ’வென ஆர்ப்பரித்தனர்!
“நீங்க கேட்ட மாதிரி உங்க விருப்பு வெறுப்புகள் இதெல்லாம் முழுசா தெரியாதுதான். ஆனா, கேரக்டர் அப்படின்னு வரும் போது நீங்க மோசமான குணம் உடையவரா இருக்க சென்ட் பெர்சென்ட் (நூறு சதவீதம்) வாய்ப்பில்ல. அதுக்கு ஒரு உதாரணம் சொல்லவா?” என்றவள், அவனது அன்னையை சுட்டிக் காட்டி பேசத் தொடங்கினாள்.
“ஜஸ்ட் ஃபார் ஃபன்காக எனக்கு ப்ரொபோஸ் பண்ண நினைச்சீங்க. பட், முட்டி போட்ட அடுத்த நிமிஷம் உங்க அம்மா நினைவு வந்து எழுந்து நின்னு அவுங்க கிட்ட பேசி, உங்க அம்மா சொன்னதுக்கு ஒரு காமெடி டச்சோட ரிப்ளை கொடுத்து, நடிப்புக்காக ப்ரொபோஸ் பண்றதா இருந்தாலும் கூட அவுங்க பெர்மிஷன் கேக்க நினைச்சீங்க பாருங்க. அப்பவே யூ ஆர் க்ரோன் அப் வித் குட் கேரக்டர் அப்படின்றதை புரிஞ்சுக்க முடிஞ்சது. அண்ட் தென், ஸ்டான்ட் அப் காமெடி அப்படின்ற பேர்ல அடல்ட் கன்டென்ட் மட்டுமே பேசி சிரிக்க வைக்கிற பல ஸ்டான்ட் அப் காமெடியன்ஸ் மத்தில இப்படி குழந்தைங்கள்ல இருந்து பெரியவங்க வரை உங்க ஆடியன்ஸ்ஸா அட்ராக்ட் பண்ணி எந்த விதமான முக சுளிப்பும் இல்லாம எல்லாரையும் சிரிக்க வைக்கிறீங்க. இது போதாதா உங்க நல்ல குணம் பத்தி சொல்றதுக்கு?” என்று அவனது கண்களைப் பார்த்து சவாலாகச் சொன்னவள், அகநேயனின் அகத்தை அதிர வைத்துக் கொண்டிருந்தாள்.
“அண்ட் வேற என்ன கேட்டீங்க? சைக்கோவா இருந்தாவா? சைக்கோவா இருக்கவன் பல பேரை பயங்கரமா அழ மட்டும்தான் வைப்பான். நீங்க பல பேரை பயங்கரமா சிரிக்க வைக்கிறீங்க! எப்படி சைக்கோவா இருப்பீங்க?” என்றதும் கரகோஷம் காதை கிழித்தது!
அகநேயனே அசந்து போய் வார்த்தைகளற்று அவளை விழிகள் விரிய பார்த்தபடி நின்றான்.
அவள் ஒவ்வொன்றாக சொல்லச் சொல்ல அவன் இதயம் தாளம் தப்பித் துடிக்க, மக்கள் எல்லோரும் பலத்த கரகோஷம் எழுப்பினர்.
மகனைப் பற்றி அப்பெண் கணித்துக் கூறிய ஒவ்வொரு விஷயமும் கீதாராணியை ஆச்சர்யத்துடன் திகைக்க வைத்தது.
“அப்புறம் என்ன கேட்டீங்க? அறிவில்லாதவனா இருந்தாவா? அறிவில்லாதவரா இருக்கப் போய்தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை யோசிச்சு பதில் சொல்லணுமா இல்லையா அப்படின்னு கேட்டு அறிவு இருக்கனும்ற அளவுக்கு அட்வைஸ் பண்ற மாதிரி பேசினீங்களா?” என்று கேட்க, இரட்டிப்படைந்த கரகோஷ ஒலி அரங்கத்தை அதிர வைத்தது.
மக்களின் கரகோஷத்திற்கு இடையில், “வாவ்…..” என்ற கூச்சல்களும், “சூப்பர் பொண்ணே” என்ற பாராட்டுகளும்,
“செம்மையா அகன் ப்ரோவை ரோஸ்ட் (Roast) பண்ணிட்டீங்க சிஸ்டர்!” சில நபர்களின் கேலிக் கருத்துகளும் வலம் வந்தன.
அகநேயன் வாயடைத்துப் போனான்! இத்தனை சிறிய நிமிட அளவில் தன்னைப் பற்றிய நேர்மறையான விஷயங்களை வார்த்தைகளால் அடுக்கி உன்னுடைய காதல் பிரேரணைக்கு (Love Proposal) நான் சம்மதம் கூறியதில் எந்த வித தவறுமில்லை என்று தலைநிமிர்ந்து பதில் சொன்னவளின் அழகில் லயித்துப் போனான் அகநேயன்.
இப்போது மெய்யான உணர்வுகளுடன் அவள் முன் மண்டியிட வேண்டும் என்று அவனது இதயம் கூற, உதடுகளில் உறைந்த புன்னகையுடன் அவளையே பார்த்தான்.
“அண்ட் இன்னொரு விஷயமும் சொல்லணும். அது உங்க அம்மா பத்தி..” என்றவள், கீதாராணியை பார்த்து “சொல்லலாமா ஆன்ட்டி?” என்று பணிவுடன் கேட்க, நெகிழ்ந்து போய் அமர்ந்திருந்த கீதாராணி புன்னகை குன்றா முகத்துடன் அவளுக்கு ஒரு தலையசைப்பை கொடுத்தார்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி” என்றவள் அகநேயனிடம் பார்வையை பதித்து “கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உங்க அம்மா சொன்னாங்க. ‘உன்னால காதலிச்சு உனக்கொரு வாழ்க்கைத் துணையை கூட தேடிக்க முடியாதா? உனக்கேத்த மாதிரி ஒரு பொண்ண உன்னால தானடா பார்க்க முடியும்’ அப்படின்னு..” என்றதும், அகநேயன் மந்திரித்து விட்டவன் போல் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.
“ரியல்லி யூ ஆர் லக்கி. உங்களுக்கு இப்படிப்பட்ட அன்டர்ஸ்டான்டிங்கான அம்மா கிடைச்சிருக்காங்க. உங்க வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்குற பொறுப்பை உங்க கிட்டயே கொடுக்குறாங்க. இங்க எத்தனையோ பேருக்கு இப்பவும் அப்படிப்பட்ட ஃப்ரீடம் கிடைக்கிறது இல்லதானே. பட், உங்க அம்மா டிப்பிக்கல் (Typical) மதரா இல்லாம ரொம்ப ஃப்ரெண்ட்லியா அன்பா இருக்காங்க. அப்படிப் பட்டவங்களோட வளர்ப்புல வளர்ந்த நீங்க எப்படி கேரக்டர்லெஸ் (Characterless – குணச்சிறப்பற்ற) பெர்சனா இருக்க முடியும்?” என இரு புருவங்களையும் சீராக ஏற்றி இறக்கி இனியவர்ஷினி கேட்ட தோரணையில், அகநேயனின் மூச்சுக் காற்று சீரற்று போனது!
“I’m Surrender இனியா..” என்றவன் நிஜமாகவே மண்டியிட்டு கைகளை தூக்கி விட, எல்லோரும் சிரிப்புடன் கை தட்டினார்கள்.
இனியவர்ஷினி படபடக்கும் இதயத்துடன்தான் நின்றிருந்தாள். நொடி நேரத்தில் அவனைப் பற்றி இவ்வளவு பேசி விட்டோமா என்று இதயம் அதிர்ந்தாலும் அவன் தன்னிடம் ‘யோசிச்சு பதில் சொல்லனும் தானே.. அறிவான பொண்ணு இல்லேன்னு சொல்லாம சொல்லிட்டீங்களே..’ என்று கூறிய போது அவளால் அதனை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.
தன்னிலை மறந்து அவனது வார்த்தைகளுக்கு கூறிய சம்மதத்திற்கு நியாயம் சேர்த்து விடத் துடித்த உள்ளத்தை அடக்க வழி தெரியாமல், அவனைப் பற்றிய நல்ல விஷயங்களை வரிசையாக கூறி இருந்தாள்.
ஆனாலும், கவனமாக அந்த ‘குடிகாரனா இருந்தா?’ எனும் கேள்வியை மட்டும் தவிர்த்திருந்தாள் இனியவர்ஷினி.
அக்கேள்வியை தன்னிடம் கேட்ட போதே அவன் பார்வை அவனது அன்னையின் மீது படிந்த விதமும் அதில் தென்பட்ட உணர்வுகளும் இனியவர்ஷினியின் கண்களுக்கு தப்பாமல் புரிந்து விட்டன.
அவனுக்கு குடிக்கும் பழக்கம் உண்டு போல.. என அனுமானித்து விட்டவள், அதை மட்டும் கேட்காமல் தவிர்த்திருந்தாள்.
“என்னைப் பத்தி லிஸ்ட் போட்டு சொல்லி உங்க ‘எஸ்’ தப்பே இல்லன்னு அடிச்சு சொல்லிட்டீங்க இனியா. இதையும் உங்க கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல” என ஆச்சர்யம் நீங்காத குரலில் கூறியதும், இனியவர்ஷினி சிந்தனையில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டு மௌனமாக அவனது முகத்தை பார்த்தாள்.
“என்னோட ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவ மினி லவ் ஷோவா மாத்திட்டோம்னு நினைக்கிறேன்.
பாருங்க எல்லாரும் எப்படி என்ஜாய் பண்றாங்கன்னு..” என்று கூட்டத்தை பார்த்து சொன்னவன், “நீங்க இன்னைக்கு என்னைப் பத்தி சொன்னதை என்னைக்கும் மறக்க மாட்டேன். தேங்க்ஸ் இனியா.. ஃபார் ஜாயினிங் வித் மீ ஆன் ஸ்டேஜ்” என்றான் அகநேயன் எழுந்து நின்றபடி.
இனியவர்ஷினியும் ஒரு தலையசைப்புடன் அங்கிருந்த உதவியாளரிடம் மைக்கினை கொடுத்து விட்டு கீழிறங்கி வந்து வெண்ணிலா அருகே சென்று அமர்ந்து கொண்டாள்.
வெண்ணிலா தோழியை கட்டிக் கொண்டு “கலக்கிட்டடா இனி! நீ எஸ் சொன்னதுல நானுமே ஷாக் ஆகிட்டேன். ஆனா, அடுத்து சொன்ன பாரு.. வாவ்… வாவ்… அகன் வாயடைச்சு போய் நின்னதை பாக்கணுமே…” என்று சிரித்தபடி மேடையில் நின்று பேசி விட்டு வந்த தோழியை பாராட்டித் தீர்த்து விட்டாள்.
அடுத்தடுத்து அகன் மற்ற நபர்களிடம் பேசி நகைச்சுவையை மேற்கொண்டாலும் பார்வை அவ்வப்போது இனியவர்ஷினியை தொட்டுத் தொட்டு மீண்டது!
இனியவர்ஷினியும் அதை உணர்ந்தவளாக அவன் தன்னைப் பார்க்கும் நேரங்களில் மிக சாதாரணமாக இருப்பது போல் முகத்தை வைத்துக் கொண்டாள்.
ஆனால், அகத்தை அகநேயன் மண்டியிட்டு முன்மொழிந்த வார்த்தைகளும், அந்த வார்த்தைகளை உதிர்த்த போது அவன் முகத்தில் தென்பட்ட மெய்பாடுகளும் (பாவனைகளும்) ஆக்கிரமித்திருந்தன.
அன்றைய நிகழ்ச்சி இனிதே முடிவடைந்திருக்க, வந்திருந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக கிளம்பத் துவங்கி இருந்தனர்.
எல்லோரும் வெளியேறுவதற்கு முன்பு அகநேயன் யார் யாரிடம் எல்லாம் பேசி நகைச்சுவை செய்தானோ அவர்களிடம் “இதை நாங்க யூ ட்யூப் அண்ட் சோஷியல் மீடியால போஸ்ட் பண்ணலாம் தானே.. வித் ரிவீலிங் யுவர் ஒரிஜினல் ஃபேஸ் அண்ட் வாய்ஸ்” என்று அவரவரின் அனுமதியை வேண்டி கேட்டுக் கொண்டிருந்தான்.
சிலர் சரி என்று கூறினர். சிலர் அவர்களின் privacy யை கருதி மறுத்தனர். இன்னும் சிலர் “ஃபேஸ் ப்ளர் பண்ணிட்டு அப்லோட் பண்ணிக்கங்க ப்ரோ” என்று ஒப்புதல் அளித்தனர்.
அதே போலவே இனியவர்ஷினியிடமும் கேட்க நேர்ந்த போது ஒரு நொடி அவளது முகத்தையே இமைக்காமல் பார்த்தான் அகநேயன்.
அன்றைய நாளின் களைப்பை முகத்தில் தாங்கி இருந்ததின் அடையாளமாக சற்றே சோர்ந்து காணப்பட்டாள் பெண். நெற்றியில் ஒற்றை வெள்ளை நிறக் கல் பொட்டு. காஜல் தீட்டப்படாத கண்கள் அழகாகவே இவன் கண்களுக்குத் தெரிந்தன. அடர்த்தியான புருவங்கள் இமைகளுக்கு மகுடமாய் வீற்றிருந்தன. இடது கன்னத்தில் ஒன்றிரண்டு முகப்பருக்கள் எட்டிப் பார்த்ததன் அடையாளமாக பிங்க் நிறத்தில் இருந்தன. உதடுகளில் பார்வை சென்றதும் படக்கென்று பார்வையை அவளது கண்களுக்கு கொண்டு வந்து விட்டான் அகநேயன்.
அவனையும் மீறி ஒரு பெண்ணை இந்த அளவிற்கு உற்று நோக்குவதை எண்ணி அவனது உள்ளம் ஆடித்தான் போனது. அதனுடன் தன்னையே கடிந்தும் கொண்டான்.
‘டேய் அகா… என்னடா பண்ற? ஸ்டெடி மேன்.. இப்படியா பாப்ப? தப்பு…’ என்று நடுமண்டையில் ஓங்கி அடித்துக் கொள்ளாத குறையாக மனதிற்குள் ஓங்கி ஒலித்த குரல் அவனை சமன்பட வைத்தது.
தன்னிலை அடைந்தவன் அவளது கண்களைப் பார்த்து, “அந்த ப்ரபோசல்.. நீங்க பேசுனது.. நான் பேசினது.. அப்புறம் உங்க எஸ்.. இதெல்லாம் நான் என்னோட யூ ட்யூப் சேனல்ல அப்லோட் பண்ணிக்கலாமா?” என்று கேட்க, ஒரு நொடி தயங்கினாள் இனியவர்ஷினி.
யூ ட்யூபில் போட்டால் உலகமே பார்க்கும்! அந்த உலகத்தில் உறவுகளும் அடக்கம்!
இனியவர்ஷினிக்கு அவளின் உறவுகளை நினைத்தே சற்று தயக்கமாக இருந்தது. அவளது உறவு வாசிகள் வேறு மிக மிக மிக நல்லவர்கள்(!!)
அவர்கள் பார்க்க நேரிட்டு ஏதேனும் அன்னையிடம், அண்ணனிடம் வந்து கேட்டால் என்று பலவாறாக யோசிக்கத் தொடங்கியவள் பின்னர் அவர்கள் தங்களுக்காக உறுதுணையாக நிற்கும் உறவுகளா என்ன? அவர்களுக்காக ஏன் பயப்பட வேண்டும் என்று எண்ணியபடி சம்மதம் சொல்வதற்காக நிமிர்ந்தாள்.
அவள் தயங்குவதை புரிந்து கொண்ட அகநேயன் “இட்ஸ் ஓகே இனியா மேடம். ஐ கேன் அன்டர்ஸ்டான்ட். நான் இதைப் போஸ்ட் பண்ணல..” என்று கூற, இனியவர்ஷினி உடனே மறுத்து “இல்ல பரவாயில்ல. அப்லோட் பண்ணிக்கோங்க” என்று கூறி விட்டாள்.
அகநேயன் ஆச்சர்யமாக அவளைப் பார்க்க, வெண்ணிலா தோழியின் தோளில் இடித்து “வீட்ல பார்த்தா பிரச்சனை ஆகிடப் போகுது இனி..” என்று கிசுகிசுக்க, “ஆனா ஆகட்டும் நிலா. இந்த சொந்தக்காரனங்களுக்கு இனிமேல் பயப்பட முடியாது. அண்ணாவும் அம்மாவும் கேட்டா நான் பதில் சொல்லிடுவேன். மத்தவங்க யாரு கேட்டாலும் இனி நான் பயப்பட போறதில்லை. பாத்துக்கலாம்” என்றவள், அகநேயனிடம் “நீங்க அப்லோட் பண்ணிக்கங்க. எனக்கு அப்ஜெக்ஷன் எதுவும் இல்ல” என்று தெளிவாகவே கூறி விட, நொடி நேரத்திற்கும் மேலாக அவளின் மீது பார்வையை பதித்தவன், “ஓகே தேங்க்ஸ் இனியா மேடம்” என்று கூற, ஒரு தலையசைப்புடன் தோழியுடன் அங்கிருந்து நகர்ந்தாள் இனியவர்ஷினி.
அரங்கத்தை விட்டு வெளியேறியவள், அகநேயனின் அகத்திற்குள் அவனது அனுமதியின்றியே ஆழமாய் நுழைந்திருந்தாள்!!
