Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 23.2

இரவு சென்றவன் இதுவரை திரும்பவில்லை , தொடர்பு கொள்ளவும் இல்லை பலமுறை அழைத்து பார்த்தும் பலன் இல்லை .

“அம்முவை கடத்திவிட்டார்கள்” என்று ஹரி ஜெயன் மீது கிஷோர் வழக்கு பதிந்திருக்க , அவனுக்கு அதிகாலையில் மூணார் காவல் துறையிடம் இருந்து வந்து சேர்ந்தது அந்த தகவல்.

அதை தொடர்ந்து மூணார் அரசு மருத்துவமனை சென்றவன் அங்கு ராஜீவை கண்டான் , விவரங்களை அறிந்து கொண்டவன் , தனி ஒருவனாக அனைத்திற்கும் ஓடி நடந்து சோர்ந்திருந்த ராஜீவை பார்த்துவிட்டு  துரைசெல்வதை அழைத்து  விவரம் கூறினான்.

கேட்டவருக்கும் அதிர்ச்சியே  “தம்பி கொஞ்சம் அங்கே பாத்துக்கோங்க நான் வரேன்” என்றவர் மனைவியை அழைத்து விவரத்தை கூற, “என்னங்க சொல்றீங்க , ஐயோ இத எப்படிங்க இங்க சொல்றது” என்க.



Advertisement

“சொல்லித்தான் ஆகணும் , நீ பக்குவமா எடுத்து சொல்லு  நான் அங்க போய் மதத்தை பாக்குறேன்” என்று கிளம்பினார்.

மூணார் சென்று சேர , ராஜீவ் ஓய்ந்து போன தோற்றத்தில் முகம் எல்லாம் இருண்டு அமர்ந்திருந்தான் , நான்கு வருடம் முன்பு ஜெகன்நாதனை இதே போல தோற்றத்தில் அவர் பார்த்தார் , உயிரை அறுக்கும் வேதனையோடு.

ஏனோ மனம் வலித்தது  “இந்த பிள்ளைகளுக்கு இந்த வயதில் ஏன் இத்தனை இன்னல்கள் வந்து  சேர்க்கிறது” என்று.

Advertisement

அருகில் சென்று அவன் தோள் தொட அவரை பார்த்தவன் உடைந்து அழுதான் , துரைசெல்வம் வாய்விட்டே புலம்பினார்  “அம்மாடி சீதா ஏன்மா” என்று.

Advertisement

ஆம்… சீதாவின் சாபம் பலித்துவிட்டது , மலையில் இருந்து உருண்டு விழுந்த காரில் இருந்து இருவரின் எரிந்து அடங்கிய உடல்கள் மட்டுமே கிடைத்தது.

சங்கரனின் மாமியார் வீட்டில் இருந்த ஸ்மிதாவிற்கு சொல்லியாகிவிட்டது.

ராஜீவுடன் அமர்ந்திருந்தார் துரைசெல்வம் , கிஷோர் அவரை தேடி வந்தவன் “சார் சங்கரனுக்கு சொல்ல வேண்டாமா” என்க அவர் ராஜீவை பார்த்தார்.

Advertisement

“இப்போவே பெட்டிஷன் போடலாம் நாளைக்கு அனுப்ப வாய்ப்பிருக்கு” என்றான் கிஷோர்.

ராஜீவ் தலை அசைத்தான் , அவன் மூளைக்குள் இப்பொழுது ஒன்றுமே ஏறவில்லை “வேண்டாம்”  என்று தள்ளி நிறுத்தியவர்களின் பிரதிநிதி இப்பொழுது துணையாக நிற்கிறார்.

அனைத்தையும் முடித்து உடல்கள் கிடைக்கவே பாதி இரவு ஆகிவிட்டது , கிஷோர் இல்லை என்றால் என்ன செய்திருப்போம் என்று எண்ணி எண்ணி மறுக்கினான் ராஜீவ்.

அவனின் உறவினர்கள் அனைவரையும் மாறி மாற அழைத்து பார்த்தான் , “அவ்வளவு தூரமா”, “எங்க மேல ஏதாவது கேஸ் ஆயிட போகுது” என்று காரணங்களை அடுக்கினார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை.

ஹாலின் மூலையில் ஒட்டிக்கொண்டு கால் முட்டியை மடக்கி ஷ்யாமாவின் தோளில் சாய்ந்திருந்தாள் அம்மு , எங்கும் உறவுகள் நிறைந்திருக்க ஏதேதோ பேச்சு குரல்கள்.

நடுஹாலில் இரண்டு வெள்ளை துணி போர்த்திய உடல்கள் , ராஜீவ் வெளியில் ஆட்களோடு பேசிக்கொண்டிருக்க.

ரெம்யா ஒரு பக்கம் தளர்ந்து கிடந்தாள் , அழுது அழுது உணர்வற்று கிடந்தார் அம்முவின் சித்தி ஸ்மிதா , ஒன்றாக பிறந்த இரட்டை பிள்ளைகள் ஒன்றாகவே மரணத்தையும் தழுவிக் கொண்டார்கள்.

கிருஷ்ணனும்  சங்கரனும்  பெயிலில்  வந்திருந்தனர் , மகன்களின் காலடியில் கிடந்தார் சங்கரன் , அனைவரும் ஒவ்வொரு நிலையில் இருந்தாலும் அனைவரின் சிந்தனையிலும் அந்த நொடி நின்றவர் சீதாராணி.

இறுதி வாக்காக சங்கரனை பார்த்து அன்று சொன்னாரே “நான் தப்பானவளா இருந்தா என் வம்சம் அழியட்டும் , நீ தப்புனா உன் வம்சம் அழியட்டும்”  என்று அழிந்துவிட்டதே  தாயும் தந்தையும் உயிரோடு இருக்க சந்ததியை வாரி கொடுத்துவிட்டு நிற்கிறார்களே.

 

சிறிது நேரம் அமைதியாக இருந்த துரைசெல்வம் ராஜீவின் அருகில் சென்று  “எதுவும் உதவி பண்ணனுமா ஏதாவது தேவைன்னா சொல்லுங்க , என்னால முடிஞ்சது செய்றேன்” என்க ஒரு நொடி அவரை அதிர்ந்து பார்த்த ராஜீவ் விழிகள் நிறைய அவரை தழுவிக்  கொண்டான்.

துறைசெல்வம் ஒரு நிமிடம் பதறி விட்டார் அவனின் கண்ணீரில்,  தவறோ தறுதலையோ , வெறும் சதை பிண்டமாக கிடப்பது அவனின் தம்பிகள் அல்லவா.

உடன் தந்தை இல்லை , சித்தப்பா இல்லை வந்த உறவுகள் எல்லாம் இவர்கள் அப்படி செய்து விட்டார்கள் இப்படி செய்துவிட்டார்கள், போதை மருந்து எடுத்திருந்தானாம் , நல்ல குடும்பம் , இப்படியே பேசிக் கொண்டிருக்க.

ஒன்றை ஆளாய்  அனைத்திற்கும் பின் அலைந்து கொண்டிருக்கிறான், யாரேனும் ஒரு வார்த்தை ஆறுதல் கூறி விட மாட்டார்களா என்று நேற்று முதல் தவிக்கிறான்.

அந்த நொடி பிரகாஷ் குடும்பத்திடம் கேட்க்கும் மன்னிப்பு கூட தன் குடும்பத்திற்கு பாவ விமோசனம் தராது என்று தோன்றியது .

“தம்பி இங்க பாருங்க இப்போ தளர்ந்து போக கூடாது , என்ன வேணும் சொல்லுங்க” என்க.

அவனுக்கு சில விஷயங்களை கையாள தெரியவில்லை, தெரியவில்லை என்பதை விட மனம் முழுதாக சோர்ந்திருக்க யோசிக்க முடியவில்லை.

அவனை ஒரு இடத்தில அமர்த்தியவர் தானே கையில் எடுத்துக்கொண்டார் பட பட என்று வேலைகள் நடந்தது.

விவரம் கேள்விப்பட்டு அச்சுதன் வந்து சேர்ந்தார் , ஆனால் எதுவும் செய்யவில்லை , ஆளே பாதியாக இளைத்து பரிதாபமாக இருந்தார்.

பார்வை முழுதும் மகளின் மேலே நிலைத்திருந்தது , அம்மு ஒரு முறை கூட அவரை நிமிர்ந்து பார்க்கவில்லை.

நேற்றில் இருந்து  யாரும் ஒன்றும் சாப்பிடவில்லை , ரூபா அடுக்களை சென்று அனைவருக்கும் கடுங்காப்பி வைத்து எடுத்து வந்து கொடுத்தாள்.

பெண்களை வற்புறுத்தி குடிக்க வைத்தவள் , ஆண்களுக்கு கொடுக்க ராஜீவ் “வேண்டாம்” என்றான்.

“எங்க அப்பா தனியா எப்படி வேல செய்வார் , நீங்க அவர் கூட நிக்க வேண்டாமா , இத மட்டுமாவது குடிங்க” என்றவளை நிமிர்ந்து அவன் பார்க்க , அவள் அவனையே பார்த்திருந்தாள் விழிகளை தாழ்த்திக்கொண்டவன் காப்பியை எடுத்துக்கொண்டான்.

“நீ தான் டி கொண்டு போய் கொன்னுட்ட”  என்று ரெம்யாவை திட்டி திட்டி ஓய்ந்து போனார் ஸ்மிதா.

தன்னுடைய சுயநலமும் , முட்டாள் தனமும் இரண்டு உயிர்களை பலி வாங்கி விட்டதா என்று தவித்துக் கொண்டிருந்தாள் ரெம்யா

கிருஷ்னனுக்கு மகளின் மீது கோபம் ஒரு பக்கம் , அவளின் நிலை பார்த்து வேதனை ஒரு பக்கம் என்று அல்லாடினார்.

 சட்டென்று தன்  இடத்தில இருந்து எழுந்த சங்கரன்  “ஏய் எல்லாம் உன்னால தான் டி , நீ தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம் , உன்ன அடிச்சு கொன்னு இங்கேயே புதச்சாதான் எனக்கு  நிம்மதி”  என்று கார்தும்பியை நெருங்க எத்தனிக்க.

ஷ்யாமாவும் மாதவியும் அம்முவிற்கு அரணாக நிற்க ராஜீவ் சங்கரனை தடுக்க பார்த்தான் , அந்த நொடி  “அவ்ளோ தைரியம் இருந்தா அவள தொட்டு பாரு” என்ற கர்ஜனையில்  அனைவரும் ஒரு நொடி ஸ்தம்பித்தனர்.

வாசல் படியில் ரௌத்திரம் சுமந்த விழிகளோடு நின்றிருந்தான் ஜெகன்நாதன்.

(www.mombrite.com)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!