Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 9

“நீ ஏன் நடக்க முயற்சி பண்ணல” என்ற அம்முவின் கேள்வியில், பெற்றோருடன் ஜெகனும் அவளை நிமிர்ந்து பார்த்துவிட்டு வாஞ்சியின் மேல் பார்வை பதித்தனர்.

இது போன்ற பேச்சுக்கள் வந்தால் ஒன்று தனக்குள் சுருண்டு விடுவான், இல்லையேல் பேசியவர்களை காயப்படுத்துவான், இப்பொழுது அம்முவை ஏதும் பேசிவிடுவானோ என்று அவர்களுக்கு கவலையானது.

ஆனால் இதழில் மிளிர்ந்த புன்னகையோடு “எனக்கும் நடக்க ஆசைதான் உங்க எல்லாரையும் மாதிரி, ஆனா பாட்டி எப்போவும் ஏதாவது சொல்லிட்டே இருப்பாங்க”.

“மத்தவங்களும் நடக்குறது கஷ்டம் அப்படினு பேசும்போது மத்தவங்க முன்னாடி அவமானப் பட வேண்டாம், வீல் செர் பெட்டர்னு தோணுச்சு, நடக்க முடிஞ்சா தான ரூமைவிட்டு வெளில போக தோணும், அவங்கள பாக்க தோணும்.. அதும் ஒரு காரணம்” என்க.



Advertisement

அந்த பதில் பிரகாஷை காயப்படுத்தியது, மகனை சரியாக கவனிக்க வில்லையோ என்று.

உண்மையில் அம்முவிடம் அவனுக்கு எளிதாக மனதை திறக்க முடிந்தது.

பிரகாஷின் அருகில் வந்த ஜெகன் “அப்பா அவனுக்கு அவளோட பேசறது இன்னும் கொஞ்சம் ஈஸியா இருக்கு, எல்லாரும் எல்லார்கிட்டயும் மனச திறந்திட மாட்டாங்க, நீங்க எங்களுக்கு நல்ல அப்பா எதையும் நினச்சு மனச குழப்பாதீங்க” என்றான்.

Advertisement

வாஞ்சிநாதனை பார்த்துக்கொண்டே எழுந்த அம்மு “உங்க பாட்டியால நடக்க வேண்டாம்னு முடிவு பண்ணின சரி  இப்போ அம்மூக்காக நடப்பியா ?” என்றவள்.

Advertisement

“இன்னும் மூணு மாசத்துல விஷு (மலையாள வருடப்பிறப்பு) ,  உனக்கே தெரியும் நா கிருஷ்ணன பாக்காம ஒரு நாள் கூட இருக்க மாட்டேன், இனிமேலும் அப்படி தான் ஆனா விஷு அன்னைக்கு காலைல நீ நடந்து வந்து என்ன கூப்பிடனும்”.

“அப்போ மட்டும் தான் நா கோவில் போவேன், இந்த வீட்டுக்கும் அந்த வீட்டுக்கும் இடைல இருக்குற இந்த பத்து அடிய நீ நடந்தா போதும்”.

“ஆனா நீயே நடந்து வரணும் , நீ வந்து கூப்பிடுற வரைக்கும் நா இங்க வர மாட்டேன், எனக்காக நடக்க போறியா ? இல்ல பாட்டிய போல என்னையும் தள்ளி வெக்கப் போறியா” என்றவள் அவள்  வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

Advertisement

பெரிதாக யோசிக்க ஒன்றும் இல்லை அவனுக்கு  “அப்பா டாக்டர் கிட்ட போலாம், எனக்கு நடக்கணும்” என்க.

எதற்கு என்று தெரியாமலே அழுது நின்றார் சீதா “அம்மா எனக்கு உங்கள யாரையும் பிடிக்கலைனு இல்லை , நீங்க எல்லாரும் என்னை ரொம்ப நல்லா பாத்துக்கிட்டிங்க,  உங்க யாரு மேலயும் எனக்கு வெறுப்பு… அப்படிலாம் இல்லமா”.

“உங்க எல்லாரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் , அம்மு… அவ எனக்கு ரொம்ப ஸ்பெஷல் மா , அவளை எந்த உறவுக்கு உள்ளேயும் என்னால அடைக்க முடியாது”.

“என்ன எனக்குள்ள இருந்தே வெளில கொண்டுவந்து இந்த உலகத்தை ரசிக்க வெச்சவ,  எந்த ஒரு சின்ன விஷயத்தையும் எனக்கு கதையா சொல்லுவா, நானே என்ன அறியாம எல்லாத்தையும் ரசிக்க ஆரம்பிச்சுட்டேன் “.

“அவகிட்ட எல்லாத்துக்கும் கதைகள் இருக்கு புல்லுல இருந்து மரம் வரைக்கும் , கல்லுல இருந்து மலை வரைக்கும்”.

“ஏன் எத்தனை தொட்டாச்சிணுங்கி இன்னைக்கு விழிமூடுச்சு அப்படிக்கறதில இருந்து , காலைல சாப்பிட்ட புட்டுல கொறஞ்சு போன தேங்கா வரைக்கும் அவகிட்ட கதைகள் இருக்கு” என்க அனைவர் முகத்திலும் புன்னகையின் சாயல்.

“நாம  பாக்குற எல்லா விஷயத்துலயும் ஒளிஞ்சி  இருக்குற நல்லத ரசிக்க கத்துக் குடுத்திருக்கா, ஷி இஸ் லைக் எ கார்டியன் ஏஞ்சல் போர் மீ  மா, உங்களுக்கு புரியுது தான” என்று தவிப்போடு கேட்ட  மகனை வாரி அணைத்துக்கொண்டார் சீதா.

அவரோடு மனைவியையும் மகனையும் சேர்த்துக் கொண்டார் பிரகாஷ்.

நிறைந்து விடுவேன் என்ற விழிகளை தட்டி சரி செய்து கீழுதட்டை கடித்து நின்றிருந்த ஜெகனை பார்த்தவன் “ப்ரோ நீயும் கட்டிக்கலாம், நா வில்லன் இல்ல” என்றவனின் பேச்சில் சிரிப்போடு சென்று தம்பியை கட்டிக் கொண்டான்.

அவனுடைய ஒத்துழைப்பை பார்த்து மருத்துவருக்கே ஆச்சர்யம், “ப்ராசஸ் கொஞ்சம் வலிக்கும்,  நடக்கும்போதும் வலி இருக்கும் , மெல்ல மெல்ல தான் வரும்” என்க.

“முயற்சி பண்ணினா  நடந்துடுவேன்ல டாக்டர், எனக்கு நடக்கணும்” என்றான்.

“ஒரு மனுஷன் எழுந்து நிக்க தேவையான  மிகப் பெரிய பலம் அவன் கால்கள் இல்ல “மனசு…”  நம்ம மனசு எழுந்து நிமிர்ந்து நின்னா, நாமளும் நிமிர்ந்து நிக்கலாம் நடக்கலாம்,  நீ கண்டிப்பா நடந்துடுவ,  யு ஹாவ் தட் ஸ்பிரிட்” என்றார் .

உண்மை தான் வலியை சகித்து மனதை ஒருநிலைப் படுத்தி அண்ணன் மற்றும் தந்தையின் உதவியோடு பயிற்சி செய்து  கொண்டே  இருந்தான்.

ஹாலில் அவன் நடை பழக சீதாவின் பார்வை ஆசையாக மகனை தழுவிக்கொண்ட இருக்கும்.

வருடப்பிறப்பிற்கு பத்து தினங்கள் இருக்க அம்மு குட்டி பெரிய பெண் ஆகிவிட்டாள், பதினாறு வயதில் பூப்பெய்தினாள், ஷ்யாமாவிடம் கேட்டபோது “எங்களுக்கு சடங்கு எதுவும் கிடையாது, நெருங்கிய உறவுக்கு மட்டும் சொல்லுவோம்”.

“அவங்க நேரம் கிடைக்கும் போது பரிசு பொருளோடு வந்து செல்வார்கள் அவ்வளவு தான்” என்க.

சீதாவிற்கு ஆச்சர்யம் தாங்கள் எப்படி ஆடம்பரமாக, ஒரு விழாவாகவே எடுத்து செய்யும் ஒரு முக்கிய தருணத்தை இவர்கள் இவ்வளவு எளிதாக சொல்கிறார்கள் என்று .

பிறகு தெரிந்தது மலையாள மக்களின் வழக்கமே அது தான் என்று, அவர்கள் அதை வாழ்வின் ஒரு பாகமாக கடந்துவிடுவார்கள் அதற்க்கு தனியான விழாவோ வெளியில் சொல்வதோ கிடையாது.

ஆனாலும் தங்களின் வழக்கப்படி அம்முவிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று எண்ணிய சீதா லக்ஷ்மியம்மாவிடம் கேக்க “செய்துகொள்ளுங்கள்” என்றுவிட்டார்.

அவளுடைய அறையில் வைத்தே சிறிதாக சடங்குபோல செய்து அவளுக்கு அத்தையின் சீராக ஆழ்ந்த பச்சைப்பட்டில் பாவாடை சட்டையும், மரகத கற்கள் வைத்த குடை ஜிம்மிக்கியும், கண்ணாடி வளவிகளும் வைத்து இனிப்பு பூ  பழம் என்று தட்டில் வைத்து கொடுத்தார்.

ஷயாமாவிற்கு  ஆச்சர்யம் “இதெல்லாம் செய்வார்களா” என்று.

“இது ரொம்ப கம்மி” என்றார் சீதா.

விஷு அன்று காலை விஷுக்கணி கண்டு, பச்சை பட்டாடையை உடுத்தி, குடை ஜிமிக்கி ஆட, பச்சை பொட்டு, பச்சை வளவி என்று அனைத்தும் பச்சை நிறம் கூந்தலில் கூட துளசிக் கதிர் மட்டும்.

இப்பொழுது கொஞ்சம் நாட்களாக மனதில் ஏதோ ஒரு உணர்வு என்ன என்று தெரியவில்லை, கரணம் இல்லாமல் சிரிப்பு வருகிறது, அவன் அறியாமல் அறை ஜன்னலில் ஒளிந்து நின்று பார்க்கிறாள்.

சில சமயம் பட்டாம் பூச்சிகள் பறக்கிறது , சில சமயம் பயம் வேர் விடுகிறது, பல சமயம் வெட்கப் பூக்கள் பூக்கிறது, பருவ நிலை மாற்றம் போல அவளுள் பருவத்தின் மாற்றங்கள்.

கிருஷ்ணனை காண காலையே தயாராகி நிற்கிறாள், வாஞ்சி வர வேண்டும் இப்பொழுது அது ஒன்றே பிரார்த்தனை .

“அம்மு கோவில் போகலையா” என்ற பெரியம்மாவின் குரல் கூட வந்து விட்டது , இன்னும் அவன் வர வில்லை மீண்டும் “அம்மு” என்ற அழைப்பு இந்த முறை எதிர்ப்பார்த்த அழைப்பு.

உள்ளில் இருந்து புயல் வேகத்தில் வெளியில் வந்து பார்க்க, தரவாடு வீட்டின் தோட்டத்தில் இருந்து தடுமாறி மெல்ல மெல்ல அடி வைத்து நடந்து வந்தான் இவளை நோக்கி, அவன் தடுமாறி விழுந்தால் பிடித்துக் கொள்ளும் தூரத்தில் ஜெகன் வந்து கொண்டிருந்தான் .

அவளால் நம்பவே முடியவில்லை, ஜெகனின் உதவியோடு அவனை பிடித்துக் கொண்டு நடப்பான் ஒரு இரண்டு அடி, என்று எண்ணியிருக்க முகம் நிறைய புன்னகையோடு அவளின் அருகில் நெருங்கி கையை நீட்டி “கோவில் போகணும் துணைக்கு வரியா” என்க.

அவளுக்கு அவன் முகமே தெரியவில்லை, விழிகள் நிறைந்து நின்றது.

சீதாவின் அழுகுரலில் வீட்டின் உள்ளே  இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்க்க, அம்முவை கட்டிக்கொண்டு கண்ணீர் வடித்து நின்றார், அவளின் கை இன்னும் வாஞ்சியின் கையில் இருந்தது.

ப்ரகாஷிற்கு அந்த நொடிகள் அத்தனை நெழிச்சியாய், அவள் விழிகள் ஜெகனின் நேரே உயர அவன் பிம்பம் கூட மங்கலாய், ஆனால் அவன் இதழ்களில்  உறைந்திருந்த புன்னகையும், அவன்  விழிகள் அவளுக்கு கடத்திய நேசமும் நெஞ்சை முட்டியது.

ஷ்யாமாதான் முதலில் ஓடி வந்து வாஞ்சியை பார்த்தவர் அவன் கைகளை பிடித்துக் கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

“சீதா என்ன இது, பாரு” என்று சீதாவை சமாதானம் செய்ய “ஷ்யாமா பாத்தியா.. என் புள்ள நடந்துட்டான்!! என் அம்மு குட்டி நடக்க வெச்சுட்டா” என்றவருக்கு  வார்த்தை வர வில்லை, பொக்கிஷமாக அந்த நொடிகள்.

“வாங்க கோவில் போகலாம்” என்று வாஞ்சியை ஆசிர்வதித்து லக்ஷ்மி அம்மாவும் சேர்ந்துகொள்ள,  பிரகாஷும் ஜெகனும் அரனாய் வாஞ்சியுடன் நடக்க,  சீதா லக்ஷ்மியம்மாவுடன் சேர்ந்து சென்றாள் அம்மு.

கோவிலில் குடும்பமாக நின்று தொழுது முடிக்க, மனம் முழுதும் ஒரு வித முக்தி அடைந்த நிலை, கணவனும் மனைவியும் ஒன்றாக நிற்க, சீதாவின் அருகில் வாஞ்சி அவனை அணைத்துக்கொண்டு ஜெகன்.

அவன் அருகில் இருந்த வெற்றிடத்தில் அவள் பார்வை நிலைத்திருந்தது,  அங்கு நிற்க எண்ணினாளா? அந்த குடும்பத்தில் இனைய ஆசை கொண்டாளா, இல்லை அந்த விரல்களை கோர்க்க ஏங்கினாளா தெரியவில்லை, அதுவும் நடந்தது அவளின் பதினெட்டாவது பிறந்த நாளில்.

 

*************************************************************************************

 

தந்தையின் அறையில் இருந்த வாஞ்சியின் புகைப்படத்தின் முன் நின்றிருந்தான்,  “உயிரோடு இருந்திருந்தால் இன்றோடு அவனுக்கு இருபத்தி ஐந்து வயது”  என்ன முயன்றும் விழிகளில் சிவப்பேற, கை முஷ்டிகள் இறுக உடல் விறைத்தது.

“நம்ம பழைய அம்முவா இருந்திருந்தா,  இன்னைக்கு கிருஷ்ணன் கோவில் பிரசாதமும், பால் பாயசமும் வந்திருக்கும்”  என்ற பிரகாஷின் வார்த்தைகள் பாதியில் இடறியது.

“அவன் அலறல் சத்தம் இப்பவும் கேட்டுட்டே இருக்கு ஜெகா” என்றவர் உடைந்து அழ,  தந்தையை தன்னோடு இறுக அனைத்துக் கொண்டவன் விழிகளில் இப்பொழுது கண்ணீர்.

 

(விஷு மலையாள மக்களின் முக்கியமான ஒரு பண்டிகை, முன்   தினம் இரவே கிருஷ்ண பகவானை  அலங்கரித்து  பழங்கள் தேங்காய், புதிதாக விளைந்த காய்கறிகள் நெல், பணம், கொன்னை பூ, நகை, பட்டு, துளசி மாலை, கண்ணாடி அனைத்தையும் வைத்து விடுவார்கள், வீட்டின் மூத்த பெண்மணி பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குளித்து, விளக்கேற்றி வீட்டில் இருக்கும் அனைவரின் கண்ணையும் பொத்தி அழைத்து வந்து முதலில் பகவானை காண வைப்பார்கள், அந்த வருடம் முழுதும் ஐஸ்வர்யம் நிறைந்து இருக்கும் என்பது ஐதீகம், அதற்க்கு  கணிகாணுதல் என்று பெயர் , அதன் பிறகு பெரியவர்கள் சிறியவர்களுக்கு விஷுக்கை நீட்டம் –  அதாவது ஆசிர்வாதமும் பணமும் கொடுப்பார்கள்  )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!