Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

விழி மொழி பேசு

அத்தியாயம் 10_2 விழி மொழி பேசு_கார்த்திகா கார்த்திகேயன்

அனைவரும் காலை உணவுக்கு சாப்பாட்டு மேசையில் அமர்ந்திருக்க ரேகா சேதுபதிக்கும் விக்ரமுக்கும் பரிமாறிக் கொண்டிருந்தாள். சாரதா அப்போது தான் சாப்பிட அமர்ந்தாள்.

அப்போது அங்கே ஆதி வரவும் “என்ன டா நீ மட்டும் வந்திருக்க? எங்க என் மருமக?”, என்று கேட்டாள் சாரதா.



Advertisement

“ஏன் மா நான் மட்டும் வந்தா எனக்கு சாப்பாடு தர மாட்டியா?”, என்று புன்னகையுடன் கேட்ட படி அங்கே அமர்ந்தான் ஆதி.

Advertisement

“அண்ணா நீ சொன்னாலும் சொல்லாம போனாலும் நம்ம அம்மா நம்மளை விட ரெண்டு மருமக மேல தான் உயிரா இருக்காங்க. என்னமா மாமியாரும் மருமகளுங்களும் கொஞ்சிக்கிறாங்க தெரியுமா?”, என்று புன்னகையுடன் கேட்டான் விக்ரம்.

Advertisement

“ஆதி அத்தான், எங்களையும் அத்தையையும் கண்ணு வைக்க வேண்டாம்னு உங்க தம்பிக் கிட்ட சொல்லுங்க. உங்க தம்பிக்கு எங்க ஒற்றுமையைப் பாத்து ரொம்ப தான் பொறாமை”, என்று புன்னகையுடன் சொன்னாள் ரேகா.

Advertisement

“ஆமா ஆமா கொஞ்சம் பொறாமை இருக்க தான் செய்யுது. அவனுக்கு மட்டும் இல்லை. அப்ப அப்ப எனக்கும் இருக்கும்”, என்று ஆதி சொன்னதும் அனைவரும் சிரித்தார்கள்.

“அப்படிச் சொல்லுண்ணா”, என்று சிரித்த விக்ரம் “அப்பா, நானும் அண்ணனும் எங்க பொறாமையை ஒத்துக்குறோம். அம்மா ரெண்டு மருமக கூட பேசும் போது உங்களுக்கும் கொஞ்சம் பொறாமை இருக்கணுமே?”, என்று கேட்டான்.

“உங்களுக்காவது கல்யாணம் முடிஞ்ச அப்புறம் தான் பொறாமை வந்துருக்கு. எனக்கு ஆதி எப்ப பிறந்தானோ அப்பவே பொறாமை வந்துட்டு”, என்று சிரித்தார் சேதுபதி.

“என்ன மாமா சொல்றீங்க? அத்தான் பிறந்தப்பவே வா? எதுக்கு?”, என்று கேட்டாள் ரேகா.

“அது வந்து மா இவன் பிறக்குறதுக்கு முன்னாடி வரை உன் அத்தை என்னையே சுத்தி வருவா. என்னைக்கு இந்த பய பொறந்தானோ அப்ப இருந்து என்னைக் கண்டுக்க மாட்டா. அப்ப இருந்து எனக்கு பொறாமை தான். அப்புறம் மஞ்சு, அப்புறம் இவன் பிறந்தான். அதுக்கு அப்புறம் சுதாகர் மாப்பிள்ளைக்கு தான் தனி கவனிப்பு. அப்புறம் அஞ்சலி பாப்பா, அதுக்கு அப்புறம் காயத்ரி, இப்ப நீ. இனி உங்க பிள்ளைகள்னு எல்லார் மேல தான் அன்பா இருக்கா. என்னை உன் அத்தை கண்டுக்கவே இல்லை. அப்ப நான் எவ்வளவு பொறாமை படணும்? அப்ப இருந்து இப்ப வரை எனக்கு பொறாமை தான்”, என்று சேதுபதி சொல்ல அனைவரும் சிரித்தார்கள்.

சாரதாவோ “விவஸ்தை கெட்ட மனுஷன், பிள்ளைங்க கிட்ட என்ன பேசணும்னு தெரியுதா?”, என்று வாய்க்குள் முணுமுணுத்து விட்டு அவரை முறைத்தாள்.

“நீங்களும் சாப்பிடுங்க அத்தான். உங்களுக்கும் டிபன் வைக்கிறேன். இல்லைன்னா காயத்ரி அக்கா கூட தான் சாப்பிடுவீங்களா? ஆமா அக்கா எங்க?”, என்று கேட்டாள் ரேகா.

“நீ சொன்ன உடனே தான் ரேகா எனக்கு நான் சொல்ல வந்தது நினைவே வருது. இங்க நடந்த கலாட்டால நான் சொல்ல வந்ததை மறந்துட்டேன் பாரு. அம்மா அப்பா நம்ம உஷாவை சாயங்காலம் பொண்ணு பாக்க வராங்கலாம். அதனால நாங்க இப்ப அங்க கிளம்புறோம். காயு கிளம்பிட்டு இருக்கா. அங்க போய் சாப்பிட்டுக்குறோம். நீங்க எல்லாரும் எப்ப வறீங்க?”, என்று கேட்டான் ஆதி.

“அப்படியா ரொம்ப சந்தோஷம் பா. பையன் யாரு என்னன்னு சம்பந்தி நல்லா விசாரிச்சாரா?”, என்று கேட்டார் சேதுபதி.

“மாமாவோட ஃபிரண்ட் பையன் தானாம்? அவர் கொஞ்சம் விசாரிச்சிருப்பார். நாமளும் நல்லா விசாரிக்கணும். சாயங்காலம் நம்ம எல்லாரையும் அங்க வரச் சொல்றாங்க. உங்க கிட பேசுறோம்னு தான் மாமா சொன்னாங்க. நான் தான் நான் சொல்லிக்கிறேன்னு சொன்னேன்”, என்றான் ஆதி.

“இதுல என்ன இருக்கு ஆதி? நல்ல விஷயத்தை யார் சொன்னா என்ன? அவங்க தான் சொல்லணும்னு பார்மாலிட்டி எல்லாம் வேண்டாம். சரி சரி நீயும் காயத்ரியும் இப்ப கிளம்பி போங்க”, என்று ஆதியிடம் சொன்ன சாரதா “என்னங்க நாம சாயங்காலம் போவோமா?”, என்று கேட்டாள்.

“நான் இன்னைக்கு ஒரு முக்கியமான கிளைன்ட்டை பாக்க போகணும் சாரதா. இப்ப உஷாவை பொண்ணு பாக்க தானே வராங்க? அதுக்கு கூட்டம் எதுக்கு? நாம நிச்சயத்துக்கு போகலாம். ஆதியும் காயத்ரியும் இப்ப போகட்டும். விக்ரமும் ரேகாவும் சாயங்காலம் போகட்டும்”, என்று சேதுபதி சொன்னதும் ரேகா முகம் மலர்ந்தது.

“என்ன ரேகா, விக்ரம் கூட சாயங்காலம் காயு வீட்டுக்கு போறியா?”, என்று கேட்டாள் சாரதா.

அம்மா அப்படிக் கேட்டதும் அனுமதிக்காக மனைவி தன்னுடைய முகத்தைப் பார்ப்பாள் என்று விக்ரம் எதிர்பார்த்து அவளைப் பார்க்க அந்தோ பரிதாபம் அவன் மனைவியோ அவன் முகத்தைப் பார்க்காமல் “சரிங்க அத்தை, கண்டிப்பா போறோம்”, என்று சாரதாவுக்கு புன்னைகையுடன் பதில் சொல்லியிருந்தாள்.

தன்னுடைய அனுமதியைக் கேட்காமலே அவள் பதில் சொன்னதும் புசுபுசுவென்று கோபம் பொங்கியது விக்ரமுக்கு. அடுத்தவர்கள் முன்னிலையில்  கோபத்தைக் காட்ட முடியாமல் அமைதியாக உணவை உள்ளே தள்ளினான். அப்போது காயத்ரியும் கிளம்பி வந்தாள்.

அனைவரிடமும் சொல்லி விட்டு “நீயும் கண்டிப்பா வரணும்னு அம்மா அப்பா சொல்லச் சொன்னாங்க ரேகா. கண்டிப்பா சாயங்காலம் வரணும் என்ன? நான் உன்னைக் கண்டிப்பா எதிர் பார்ப்பேன்”, என்றாள் காயத்ரி.

அப்போதும் அவனைப் பார்க்காமல் “கண்டிப்பா வரோம் அக்கா”, என்று பதில் சொன்னாள் ரேகா.

அவர்கள் கிளம்பிச் சென்ற பிறகு ஆபீஸ் கிளம்புவதற்காக அறைக்கு வந்தான் விக்ரம். ரேகாவும் அங்கே வந்தாள். “என்னங்க காயு அக்கா வீட்டுக்கு எத்தனை மணிக்கு போகணும்? நான் என்ன சேலை கட்டட்டும்? இதோ இது நல்லா இருக்கு. இது ஓகே வா?”, என்று கண்களில் கனவோடு கேட்க அவள் கையில் இருந்த சேலையை பிடுங்கி அவள் முகத்திலே எறிந்தான் விக்ரம்.

அவன் கோபத்தில் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள் ரேகா. “உனக்கு என்னைப் பாத்தா எப்படி டி தெரியுது? ஒரு நாள் கூட புருசனா என்னை மதிக்க மாட்ட அப்படித் தானே?”

“நான் என்ன செஞ்சேன்?”

“என்ன செஞ்சியா? காயத்ரி அண்ணி ஆதி அனுமதி இல்லாம எதுவுமே செய்ய மாட்டாங்க. ஆனா நீ அவங்க கூப்பிட்ட உடனே சாயங்காலம் வரேனு சொல்ற? என்னைக் கேக்கணும்னு உனக்கு தோணவே இல்லைல்ல?”

“இல்லைங்க அத்தை கேட்டாங்களேன்னு தான் அப்படிச் சொன்னேன். அப்ப நாம அங்க போக போறதில்லையா?”

“போறது போகாதது ரெண்டாவது விஷயம். நீ எதுக்கு என் கிட்ட அனுமதி கேக்கலை? எங்க அண்ணன் அம்மா அப்பாவைக் கூட தான் சாயங்காலம் வரச் சொன்னான். ஆனா அம்மா நாம போவோமான்னு அப்பா கிட்ட கேக்க தான் செஞ்சாங்க. நாம போவோம்னு முடிவு பண்ணி சொல்லலை. ஆனா நீ ஆளுக்கு முன்னாடி வறேன்னு மண்டையை ஆட்டுற? அப்ப பக்கத்துல புருசன்னு ஒருத்தன் எதுக்கு இருக்கேன்?”, என்று சொன்னதும் அவன் மனது அவளுக்கு புரிந்தது. ஒரு நொடி அவனையே பாவமாக பார்த்தாள்.

பின் இதற்காவது தான் விளக்கம் சொல்லித் தான் ஆக வேண்டும் என்று முடிவெடுத்த ரேகா அவன் அருகில் சென்று நின்றாள். அவன் அவளை முறைத்துப் பார்க்க அவனை நெருங்கி அவன் கைகளை எடுத்து தன்னுடைய கைக்குள் பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவள் செய்கையில் குழப்பம் வந்தாலும் அந்த சிறு தொடுகை அவன் மனதுக்கு அமைதியைக் கொடுத்தது. வெகு அருகில் நின்ற அவளையே இமைக்காமல் பார்த்தான்.

“உங்க கோபம் இப்ப எனக்கு புரியுது விக்ரம். நான் அதை யோசிச்சிருக்கணும். தெரியாம பண்ணிட்டேன். சாரி. எனக்கு இதெல்லாம் தெரியாதுங்க. புருஷன் பொண்டாட்டி உறவைப் பத்தியே தெரியாதப்ப உங்க கிட்ட அனுமதி வாங்கணும்னு எல்லாம் நான் யோசிக்கவே இல்லை. அவங்க போறியான்னு கேட்டதும் எனக்கு சந்தோசமா ஆகிருச்சு. அதான் உடனே சரின்னு சொல்லிட்டேன். ஏன்னா நான் இது வரைக்கும் எந்த பங்க்சனுக்கும் போனதே இல்லை. எந்த கூட்டத்துலயும் கலந்துகிட்டதே இல்லை. என்னை யாரும் எந்த பங்க்சனுக்கும் கூப்பிட்டதே இல்லை தெரியுமா? முதல் தடவையா காயத்ரி அக்கா தான் கூப்பிட்டுருக்காங்க”, என்று கலங்கிய குரலில் சொல்ல அவனுக்கு உருகிப் போயிற்று.

“ரேகா”, என்று அதிர்வாக அழைத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!