Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 11.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 11

 

எந்த கவிஞனும் கோடி

கவிதைகள் படைப்பான்



Advertisement

உன்னைக் கண்ட நொடியில்!!!

 

இரவு பத்து மணி ஆக சிறிது நேரம் இருந்தது. திவ்யா கடையை அடைத்து விட்டு வந்து மதியம் செய்ததில் மீதி இருந்த சாப்பாடை உண்டு விட்டு வாசலில் போனைப் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.

Advertisement

 

Advertisement

அரவிந்த் டவுனில் இருந்த குவாட்ரசில் தங்கி இருப்பதால் இங்கே வீட்டுக்கு அதிகம் வர மாட்டான். வந்தாலும் அன்னையும் அண்ணனும் திவ்யாவை படுத்தும் பாட்டை பார்க்க வேண்டி வருமே. அதனால் அதிகம் வர மாட்டான். அவர்கள் செய்வதை விட அவள் அப்படி பொறுமையாக இருப்பதை தான் அவனால் தாங்க முடிய வில்லை.

 

தங்கமோ இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு சொந்தக்காரர்கள் அழைத்தார்கள் என்று சொல்லி விட்டுச் சென்றிருந்தாள்.

Advertisement

 

மதியம் ஜூஸ் கடையில் இருந்து கிளம்பிச் சென்ற பாண்டியன் இன்னும் வீடு வந்து சேர வில்லை. வந்தாலும் தோசை ஊத்திக் கொடுத்து விட்டு படுக்கலாம் என்று எண்ணி தான் அமர்ந்திருந்தாள். அந்த வீடு பழமையான மச்சு வீடு. நடுவே நிலாமுற்றம் வைத்து கட்டி இருந்தார்கள். சிறிது நேரம் வாசலில் அமர்ந்திருந்தவள் பத்து மணி சர்ச்சில் அடிக்கவும் கதவை பூட்டி விட்டு நிலா முற்றத்தில் வந்து அமர்ந்தாள்.

 

அவள் கண்கள் தன்னால் வாட்சப்க்குள் சென்றது. அவந்திகாவை ரசிப்பது போல அவள் கண்கள் சாணக்கியனையும் கள்ளத்தனமாக வருடியது.

 

திவ்யாவைத் தவிர வீட்டில் யாரும் இல்லை என்று தெரிந்த பாண்டியன் நண்பர்களை விருந்து கொடுக்க வீட்டுக்கு அழைத்து வந்திருந்தான். நல்ல வேளையாக அவளுக்கு எதுவும் சமையல் வேலை வைக்காமல் குவாட்டர், பிரியாணி, சிக்கன் என அவனே வாங்கி வந்திருந்தான்.

 

தனியாக மனைவி வீட்டில் இருக்கிறாள் என்ற அறிவு கூட இல்லாமல் எவனாவது ஆண் நண்பர்களை அழைத்து வருவார்களா? ஆனால் வசந்த், சுந்தர் என்ற இரண்டு பேரை அழைத்து வந்திருந்தான். அவர்களைக் கண்ட திவ்யா அறைக்குள் பதுங்கிக் கொண்டாள். ஏனோ அவள் நெஞ்செல்லாம் பலமாக அடித்துக் கொண்டது. இதற்கு முன்னும் அவனுடைய நண்பர்கள் அங்கே வருவார்கள் தான். ஆனால் அவளுக்கு துணையாக தங்கம் அங்கே இருப்பாள். ஆனாலும் மகனை கேள்வி கேட்க மாட்டாள்.

 

“உடம்பு வலியா இருக்கு டா, எனக்கு ஒரு கிளாஸ் கொடு”, என்று கேட்கும் ரகம் தான் தங்கம் என்றாலும் திவ்யாவுக்கு அவள் துணையாக தான் தெரிந்தாள். ஆனால் இன்று அவளும் இல்லாதது திவ்யாவுக்கு பயமாக தான் இருந்தது. ஏற்கனவே வசந்த் அவளிடம் தவறாக பேசி அடி வேறு வாங்கி இருக்கிறான். ஆனாலும் சொந்த வீட்டில் எதுவும் தவறாக நடக்காது என்று எண்ணிக் கொண்டு தூங்க முடியாமல் அமர்ந்திருந்தாள்.

 

“ஏய் என்னோட பிரண்ட்ஸ் வந்துருக்காங்க? நீ உள்ள என்ன டி பண்ணுற? வா வந்து தண்ணி எடுத்து கொடு”, என்று அழைத்தான் பாண்டியன். வேறு வழியில்லாமல் அவள் எடுத்து கொடுத்து விட்டு போகும் போது அது வேண்டும் இது வேண்டும் என்று அவளை அங்கேயே இருக்க வைத்தவனுக்கு போதை சற்று அதிகமாக ஆனது. அவனது அரட்டலும் அவனது நண்பர்களின் கேவலமான பார்வையும் அவளை ஒரு மாதிரி பதட்டத்துக்குள்ளாக்கியது.

 

பாண்டியன் வேறு அதிக போதையில் அப்படியே கிடக்க இது தான் சந்தர்ப்பம் என்று எண்ணிய அந்த குள்ளநரியும் அவள் கையை வேண்டும் என்றே தீண்ட அவள் பத்திரகாளியாக அவனை முறைத்தாள்.

 

“என்ன டி முறைக்கிற? ரொம்ப உத்தமி மாறி பார்வையைப் பாரு? உன் குடும்பமே அப்படி தானே? இப்ப எங்களை அட்ஜஸ்ட் பண்ணு. ரொம்ப நாளா உன் மேல எங்களுக்கு கண்ணு. இன்னைக்கு தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு. என் நண்பன் மனைவி எங்களுக்கும் மனைவி தான். அவ்வளவு அழகு டி நீ”, என்று சொன்னவன் கிட்டே வந்தான்.

 

“வேண்டாம், ஒழுங்கு மரியாதையா போயிருங்க”, என்று பயத்துடன் அவள் மிரட்ட “உன் உடம்புல எங்க எங்க மச்சம் இருக்குன்னு வரைக்கும் அவன் தெளிவா எங்களுக்கு சொல்லிருக்கான். விடிஞ்சதும் எங்க கூட சந்தோஷமா இருந்தேன்னு பாண்டியனுக்கு தெரிஞ்சா கூட அவன் ஒண்ணும் சொல்ல மாட்டான். பிகு பண்ணாம சும்மா வாடி. சொர்கத்துக்கு  உன்னைக் கூட்டிட்டு போறேன்”, என்று சொல்ல அவளுக்கு அருவருப்பாக இருந்தது. கணவன் தன்னை வார்த்தையால் இவர்களுக்கு படையல் வைத்திருக்கிறான் என்று புரிந்தது.

 

அவள் எப்படி இதில் இருந்து தப்பிக்க என்று நினைத்துக் கொண்டிருக்க “நீ என்ன டா உக்காந்துருக்க. நீயும் வா. உனக்கும் இவளை ரொம்ப பிடிக்கும் தானே? வா அனுபவிக்கலாம். இன்னைக்கு மூணு பேரும்..”, என்று சொன்னவன்  அவனுடன் இருந்த சுந்தரையும் அழைத்தான்.  திவ்யாவுக்கு திக்கென்று இருந்தது.

 

இருவரின் பார்வையும் அவனது பேச்சும் அவர்களின் போதை நிலையும் தனக்கு ஆபத்து என்பதை உணர்த்த அடுத்த நொடி அறையை பார்த்து ஓட பார்த்தாள். ஆனால் அவள் சேலையை கையில் பற்றினான் வசந்த்.

 

அவள் திகைக்கும் போதே சுந்தரும் அவள் அருகே வந்திருக்க திவ்யாவுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை. வசந்த் அவள் சேலையை பற்றி இழுக்க அதை தன்னுடைய கையால் பற்றிக் கொண்டவள் “மாமா எந்தி, இங்க பாரு. இவங்க என்னை என்ன செய்யுறாங்கன்னு. தயவு செஞ்சு எந்தி மாமா”, என்று கதறிய படியே பாண்டியனைப் பார்க்க அவனோ குடிவெறியில் எதையோ உளறிக் கொண்டிருந்தான். சுற்றி என்ன நடக்கிறது என்று கூட தெரிய வில்லை.

 

அவளை நக்கலாக பார்த்த வசந்த் அவள் சேலையை பற்றி இழுக்க அது அவன் கையோடு போனது. சுந்தர் அவளை நெருங்கி அவளை கட்டி அணைக்க வர “கடவுளே என்னைக் காப்பாத்து”, என்றவளின் கண்ணில் விழுந்தது அங்கே இருந்த காலி பாட்டீல்.

 

அவனையும் அதையும் ஒரு நொடி பார்த்தவள் அதை கையில் எடுத்து அவன் தலையிலே ஓங்கி அடித்திருந்தாள்.

 

லேசாக ரத்தம் வடிய அவன் மயங்கி கீழே விழ பாண்டியனோ போதை மயக்கத்தில் நடப்பது என்ன என்று தெரியாமல் இருந்தான்.  அவள் செய்கையில் வசந்த் அதிர்ந்து ஒரு நொடி நின்றவன் “ஏய் என்ன டி திமிரா? எதுக்கு அவனை அடிச்ச? உன்னை இன்னைக்கு என்ன பண்ணுறேன் பாரு”, என்று கேட்ட படி அவளை நெருங்க அவனையுமே ஒரு அடி அடித்து விட்டாள். அவனும் அப்படியே கீழே விழுந்தான்.

 

இருவருமே மயங்கி கீழே விழ வெறும் பாவாடை மற்றும் சட்டையுடன் கண்களில் நீர் வடிய தரையில் அமர்ந்தாள் திவ்யா. அவளுக்கு அழுகையாக வந்ததே தவிர அடுத்து என்ன செய்ய என்று தெரிய வில்லை.

 

சொந்த வீட்டிலே இப்படி ஒரு நிலை. கட்டிய கணவனால் கூட தனக்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்வை அவளால் தாங்கவே முடியவில்லை. அவன் போதையில் இல்லை என்றாலும் அவனே அவளை அவர்களுக்கு தாரை வார்த்திருப்பான் என்றும் புரிந்தது.

 

இப்போது அவள் தடுக்க வில்லையென்றால் அடுத்து என்ன நடந்திருக்கும் என்று நினைத்தவளின் நெஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது. இதற்கு மேல் இந்த கேவலமான வாழ்க்கை வாழ வேண்டுமா என்று எண்ணியவளுக்கு அடுத்து என்ன செய்யலாம் என்று யோசனை வந்தது.

 

எப்போது வேண்டும் என்றாலும் இவர்கள் கண் விழிக்கலாம். தாய் தந்தைக்கோ அரவிந்துக்கோ ரதிக்கோ அந்த நிமிடம் அழைக்க வேண்டும் என்று கூட தோன்றவில்லை. அவள் நினைத்தது சாணக்கியனை மட்டும் தான். தன்னைக் காப்பாற்ற அவன் ஒருவனால் மட்டுமே முடியும் என்று எண்ணியவள் அடுத்த நொடி போனை எடுத்து ஏற்கனவே பதிந்திருந்த சாணக்கியன் நம்பருக்கு அழைத்து விட்டாள்.

 

பால்கனியில் அமரனுடன் பேசிய படியே அவந்திகாவை கொஞ்சிக் கொண்டிருந்தவன் ஏதோ புது எண் என்று எண்ணி அந்த அழைப்பை எடுக்காமல் இருக்க அவளுக்கு படபடப்பு கூடியது. மீண்டும் அழைத்தாள். அப்போது தான் அவளது பெயர் ட்ரு காலரில் திவ்யா பாண்டியன் என்று மின்னியது. அந்த பெயரிலே அவன் கண்கள் நிலை குத்திப் போனது.

 

அப்போதும் அவள் தானா என்று சந்தேகம் வந்தாலும் அவனுக்கு தெரிந்த ஒரே திவ்யா அவள் தானே? அவன் அவசரமாக போனை எடுப்பதற்குள் அதுவே கட் ஆகி விட்டது.

 

“அண்ணா யாரு? திருப்பி திருப்பி கூப்பிடுறாங்க. என்ன அவசரமோ? போனை எடு. நான் பாப்பாவை தூங்க வைக்கிறேன். நீ பேசிட்டு உள்ள வா”, என்று எழுந்து சென்றான் அமர்.

 

திவ்யாவுக்கு அவன் அழைப்பை எடுக்காதது கஷ்டமாக இருந்தாலும் விடாமுயற்சியாக மூன்றாவது முறை அவனை அழைக்கும் போது போனை பட்டென்று எடுத்தவன் “ஹலோ”, என்று படபடப்பாக சொன்னான்.

 

“நான் திவ்யா பேசுறேன்”, என்று சொல்ல அவன் படபடப்பு கூடி கையில் இருந்த போன் நழுவி தரையில் விழுந்தது. அதிரவென்றால் அப்படி ஒரு அதிர்வு.

 

மீண்டும் போனை கையில் எடுத்தவன் “திவி நீயா? உண்மைலே நீயா? எப்படி இருக்க? எங்க இருக்க? உன்னைப் பத்தின ஒரு தகவலும் கிடைக்கலை டி. நல்லா இருக்க தானே? என்ன இந்த நேரம் கூப்பிட்டுருக்க?”, என்று கேள்விகளை அடக்கினான்.

 

அவனுடைய எந்த கேள்விக்கும் பதில் சொல்லாதவள் “உடனே கிளம்பி திருநெல்வேலிக்கு வா. நான் லொகேஷன் அனுப்புறேன்”, என்றாள். வேறு எதுவுமே அந்த நிமிடம் சொல்லத் தோன்ற வில்லை அவளுக்கு.

 

“என்ன? என்ன மா சொல்ற?”

 

“உன்னை இங்க வான்னு கூப்பிட்டேன்”

 

“வரேன், கண்டிப்பா வரேன். என்ன ஆச்சு மா? அழுதியா? குரல் ஒரு மாதிரி இருக்கு?”

 

“இப்ப எதுவும் கேக்காத. நீ நேர்ல வா. நான் தானே உன்னை இனி என் வாழ்க்கைல வரக் கூடாதுன்னு சொன்னேன். இப்ப நான் சொல்றேன். இங்க வா. எனக்கு நீ வேணும், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வா”, என்று சொல்லி விட்டு போனை வைத்து விட்டாள்.

 

இதற்கு பிறகும் கிளம்பாமல் இருப்பானா என்ன? அடுத்த அரை மணி நேரத்தில் அவன் கார் மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அவசரமாக கிளம்பிச் சென்ற அண்ணனைத் திகைப்பாக பார்த்தான் அமர்.

 

அவன் போனை வைத்தது தான் தாமதம் அடுத்த நொடி அங்கிருந்த தங்கம் அறைக்குச் சென்று கதவை பூட்டியவள் இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை வெடித்து சிதறியது போல அழுதாள். “கடவுளே நான் யாருக்கு என்ன பாவம் செஞ்சேன்? ஏன் எனக்கு மட்டும் இப்படி நடக்குது?”, என்று கதறி அழுதவள் சுவற்றோடு சாய்ந்து அமர்ந்து கால் இரண்டையும் மடித்து வைத்து அதில் முகம் புதைத்து ஏங்கி ஏங்கி அழுதாள். சேலை வெளியே கிடக்க அதை எடுத்து கட்ட வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் அவளுக்கு வரவே இல்லை.

 

மொத்த கவலையையும் கண்ணீரில் கரைப்பவள் போல அவள் ஏங்கி ஏங்கி அழ கிளம்பிய சாணக்கியனுக்கோ அவளுக்கு என்ன ஆனதோ என்று பயமாக இருந்தது. இந்த நேரத்தில் அவள் அழைப்பதும் அவள் குரலில் இருந்த நடுக்கமும் அவனை ஒரு மாதிரி பதட்டத்துக்கு உள்ளாக்கியது.

 

முதலில் பிளைட்டில் செல்ல தான் நினைத்தான். இப்போது விமானம்  இருக்கிறதா இல்லையா என்று சோதித்து அதற்கு பின் பல அடுக்கு பாதுகாப்புக்கு பிறகு உள்ளே சென்று அது எத்தனை மணிக்கு கிளம்பும் என்று கூட தெரியாமல் ஒரு சூழ்நிலை வருவதற்கு காரிலே செல்லலாம் என்று எண்ணியவன் வீட்டில் கூட யாருக்கும் சொல்லாமல் சென்றே விட்டான். வேகமென்றால் அப்படி ஒரு வேகம். இப்போதே அவள் கண் முன் சென்று நிற்க வேண்டும் என்ற வெறி. என்ன ஆனாலும் அவளைக் காப்பாற்ற வேண்டும் என்ற படபடப்பு.

 

ஆனால் அவன் என்ன தான் வேகமாகச் சென்றாலும் தூரம் என்ற ஒன்று இருக்கிறதே. அவ்வளவு வேகத்தில் அமர் அவனுக்கு அழைத்ததைக் கூட பார்த்தவன் அதை எடுக்க வில்லை. அதிகாலை மூன்று மணிக்கு அவள் அனுப்பிய விலாசத்துக்கு முன் வந்து நின்றவன் அவளுக்கு அழைத்தான்.

 

அவளும் அவசரமாக போனை எடுக்க “திவி வந்துட்டேன். வீட்டு வாசல்ல தான் நிக்குறேன். கதவைத் திற”, என்று சொல்ல அடுத்த நொடி மின்னல் வேகத்தில் ஓடிச் சென்றவள் கதவைத் திறக்க அவன் வாசலில் வந்து நின்றான்.

 

சூரியனைக் கண்ட தாமரை போல கண்ணீருடன் அவனைக் கண்டு புன்னகைத்தவள் அடுத்த நொடி அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

 

அவள் கோலமும் சரி அவள் செயலும் சரி அவனை ஒரு மாதிரி திகைப்புக்கு உள்ளாக்க அடுத்த நொடி அவளை அணைத்த படியே உள்ளே வந்து கதவை பின் பக்கம் கையை கொண்டு சென்று சாற்றி வைத்தான்.

 

என்ன தான் வெளியே இருட்டாக இருந்தாலும் வெளியே அவர்கள் அந்த கோலத்தில் நின்றால் யாரும் பார்க்க வாய்ப்பு இருக்கிறதே.

 

அவளோ அவன் மார்பில் சாய்ந்தவள் தான் நிமிரக் கூட செய்யாமல் அப்படி அழுதாள். அவளது ஒரு கை அவன் சட்டைக் காலரை இறுகப் பற்றி இருக்க மற்றொரு கரம் அவன் முதுகை வளைத்திருந்தது. அன்னையைப் பிரிந்த குழந்தையாக அவன் மார்பில் இளைப்பாறினாள்.

 

“ஏய், திவி. டேய், என்ன மா என்ன ஆச்சு? அழாத டி கஷ்டமா இருக்கு. அதான் நான் வந்துட்டேன் தானே?”, என்று அவன் என்ன சமாதானம் சொன்னாலும் அவள் கேட்கவே இல்லை என்றதும் அவன் கண்கள் அந்த அறையைச் சுற்றி அலசி ஆராய்ந்தது.

 

அவளது திருமண புகைப்படம் அவன் கண்ணில் பட இவன் தான் அவள் கணவனா என்று எண்ணியவன் மீண்டும் அந்த அறையைப் பார்வையிட்டான்.

 

அவள் நிற்கும் கோலம் அவனுக்கு விபரீதமாக ஏதோ நடந்திருப்பதை உணர்த்த அப்போது தான் தரையில் கால்களை பரப்பிக் கிடந்த பாண்டியன் அவன் கண்ணில் பட்டான்.

 

மற்றொரு பக்கம் அவள் சேலை கிடக்க அதன் ஒரு முனையைப் பற்றிய படி சுந்தர் குப்புற கிடக்க மற்றொரு புறம் வசந்த் மல்லாக்க கிடந்தான்.

 

அவர்கள் கோலம் கண்டு என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்தவனுக்கு அவள் கணவனை கொன்று போட வெறியே வந்தது.

 

அவர்களுக்கு அவன் என்ன செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் இது அதற்கான நேரம் இல்லை என்று உணர்ந்தவன் “ப்ச் அழாத திவி. இப்ப இங்க என்ன நடந்திருந்தாலும் எப்பவும் நான் உன் கூட இருப்பேன். முதல்ல இவனுங்களை கொன்னு போட்டா தான் எனக்கு நிம்மதி. அதுக்கு முன்னாடி சில வேலை இருக்கு, என்னன்னு பாக்க விடு மா”, என்றவன் அவளை விலக்கி நிறுத்த முயன்றான்.

 

அவள் அப்போதும் விலகாமல் இருக்க அவளை வலுக்கட்டாயமாக தன்னை விட்டு விலக்கி நிறுத்தியவன் அடுத்த நொடி அவர்களை நெருங்கினான்.

 

அவள் அவனை பார்த்துக் கொண்டிருக்க “அந்த சேலையை எடுத்து கட்டு திவி”, என்றான்.

 

அவள் கட்ட ஆரம்பிக்க அவள் அடித்த அடியில் மயங்கி பின் தூங்கிப் போன வசந்தை எட்டி நாலு மிதித்தவன் சுந்தரை மிதிக்க அவனோ அசைவற்றுக் கிடந்தான்.

 

எத்தனை பேரைக் கொன்னிருப்பான் அடித்திருப்பான்? அவனுக்கு தெரியாதா ஒருவனின் நாடி நரம்பு எல்லாம் எப்படி துடிக்கும் என்று.

 

திவ்யா அடித்த அடியிலே சுந்தர் உயிர் போய் வெகு நேரம் ஆகி இருந்தது புரிந்தது. அவள் பார்க்காத நேரம் அவனது மூச்சை சோதிக்க அவனது உடலோ ஜில்லென்று இருந்தது. அதை அவளுக்கு காட்டாமல் மறைத்தவன் இப்போது அரை போதையில் கிடந்த பாண்டியனை உதைக்க ஆரம்பித்தான். நிலைமையின் தீவிரம் அவனுக்கு நன்கு புரிந்தது. அவளைத் தேற்றுவதை விட நிலைமையைச் சமாளிப்பது அவசியம் என்பதை உணர்ந்தான். என்ன ஆனாலும் திவ்யாவுக்கு இதில் சிக்கல் எதுவும் வரக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

 

இன்னும் சற்று நேரத்தில் விடிந்து விடும். அதற்குள் எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று எண்ணியவன் தன்னவளை இப்படி ஒரு இக்கட்டில் நிறுத்தி வைத்த பாண்டியனை சரமாரியாக மிதிக்க ஆரம்பித்தான். அவன் அரை மயக்கத்தில் ஆ என்று அலறினானே தவிர அவனால் எழுந்து நிற்க கூட முடியவில்லை.

 

இதற்கு மேல் அவர்கள் இங்கே இருந்தால் திவ்யாவுக்கு நல்லது அல்ல என்று எண்ணியவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று முடிவு எடுத்தான்.

 

“திவி ஒவ்வொர்த்தனையாக கையை பிடிச்சு வாசல் வரைக்கும் இழுத்துட்டு வா”, என்றவன் அவள் சுந்தரை நெருங்கும் முன் வேகமாக அவன் சுந்தரை தூக்கி தன்னுடைய தோளில் போட்டுக் கொண்டான். அவள் அவன் உடலைத் தொட்டால் அவன் இறந்ததை கண்டு பிடிக்க வாய்ப்பு இருக்கிறதே.

 

சுந்தரை தூக்கிச் சென்றவன் அந்த இருட்டில் தன்னுடைய காருக்குள் போட்டான். அடுத்து பாண்டியன் மற்றும் வசந்தையும் உள்ளே தூக்கிப் போட்டவன் மீண்டும் உள்ளே வந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!