அத்தியாயம் 11.2_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அவள் அவனை மிரண்ட பார்வையுடன் பார்க்க அவள் அருகே வந்து அவள் கையைப் பற்றிக் கொண்டவன் “இங்க பாரு, எதை நினைச்சும் பயப்படாத. என் திவி ரொம்ப ஸ்ட்ராங்ன்னு எனக்கு தெரியும். என்ன நடந்தாலும் நான் உன் கூட இருப்பேன். அடுத்தவங்களைப் பொறுத்த வரைக்கும் இங்க எதுவும் நடக்கலை சரியா? வீட்டை சுத்தம் பண்ணு. அவங்க குடிச்ச எந்த தடமும் இங்க இருக்க கூடாது. பாட்டீல் எல்லாம் நான் கொண்டு போறேன். ரத்த கறை எல்லாத்தையும் சுத்தம் பண்ணு. யாராவது வந்து கேட்டா உன் புருஷன் நைட் வீட்டுக்கு வந்துட்டு உடனே போய்ட்டான்னு மட்டும் சொல்லு சரியா?”, என்று சொல்ல அவள் தலை தன்னால் ஆடியது.
ஏனோ ஒரு குழந்தை பரிதவிப்பாக இருப்பது போல அவள் நிற்க அடுத்த நொடி என்ன நினைத்தானோ அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவளும் அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். இந்த நேரம் அந்த அணைப்பு அவளுக்கு தேவையாக கூட இருந்தது.
Advertisement
“உன்னை விட்டுட்டு போக கஷ்டமா இருக்கு. ஆனா புரிஞ்சிக்கோ டி. உனக்கு நான் இருக்கேன். எப்பவும் இருப்பேன். கதவைப் பூட்டிக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
Advertisement
அவன் சொன்ன எல்லா வேலையும் செய்தவள் இனி அவன் பார்த்துக் கொள்வான் என்ற நிம்மதியில் குளியல் அறைக்குச் சென்று தலை முழுகி விட்டு மெத்தையில் படுத்து நிம்மதியாக தூங்கினாள். வெகு நாட்களாக அவளுக்கு எளிதில் கிடைக்காத பொக்கிஷமான தூக்கம் என்று அவளை தழுவிக் கொண்டது.
Advertisement
என்ன செய்ய என்று தெரியாமல் காரை சென்னை நோக்கி திருப்பினான் சாணக்கியன். ஒருவன் இறந்து போனாலும் மற்ற இருவரும் எப்போது வேண்டுமானாலும் கண் விழிக்கலாம் என்று புரிந்தது.
Advertisement
அவர்களை சென்னைக்கு அழைத்து செல்வதும் நல்லது இல்லை என்று புரிந்து மீண்டும் திரும்பி அவர்கள் ஊர் பக்கமே வந்தவன் காரை ஒரு காட்டுக்குள் சென்று நிறுத்தினான். பின் அவனது அடியாளைத் தான் அழைத்தான்.
அவனும் இவனும் சேர்ந்து தான் தருமருக்கு எல்லா இல்லீகல் வேலையும் செய்வது. சாணக்கியனுக்கு குருவே அவன் தான். தந்தைக்கு தெரியாமல் அவனிடம் உதவி கேட்கலாம் என்று எண்ணி தான் அழைத்தான். ஆனால் அவனுக்கு தெரியாது, திவ்யா மற்றும் ரதியை கொல்ல வந்தது அவன் தான் என்று.
“சொல்லுண்ணா என்ன இந்த நேரத்துல?”, என்று தூக்க கலக்கத்தில் பேசினான்.
“ஒரு சின்ன பிரச்சனை டா. எனக்கு தெரிஞ்ச பொண்ணைப் பாக்க திருநெல்வேலிக்கு வந்தேன். இங்க ஒரு சம்பவம் ஆகிருச்சு. ஒருத்தன் ஸ்பாட் அவுட். ஆக்ஸிடெண்ட் மாதிரி மாத்தனும். இப்போதைக்கு அப்பாவுக்கு தெரிய வேண்டாம். என்ன பண்ணலாம்?”, என்று கேட்க அவன் தூக்கம் பறந்தது.
“எங்க அண்ணா, எந்த இடம் சொன்னீங்க?”
“திருநெல்வேலி”
“அங்க எதுக்கு அண்ணா போன? ஐயாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா?”
“இது வரை தெரியாது. இனியும் தெரியக் கூடாது”
“சரி இப்ப எங்க வச்சு இதை செய்யலாம்? அதுக்கு வண்டி ஏதாவது வேணும். அவங்க பேர்ல உள்ள வண்டினா சந்தேகம் வராது. இல்லைன்னா பிரச்சனை வரும்”
“ஆமா டா, அப்படின்னா குடி வெறில இவனுங்களே ஒருத்தரை ஒருத்தர் அடிச்சிக்கிட்டாங்கன்னு சொல்ற மாதிரி செட் பண்ணிறவா?”
“நல்ல ஐடியா தான். இன்னும் விடியலை. அவங்க இருக்குற ஊருக்கு ஒதுக்கு புறமா இல்லை சுடுகாடு இருந்தா அங்க போய் அவனுங்களைப் போட்டுரு. உன் கை தடம் எதுவும் அங்க இருக்க வேண்டாம். சீக்கிரம் பண்ணு, விடிய போகுது. இரு இரு. ஒண்ணு அவங்களே சண்டை போட்டு அடிச்சிக்கிட்ட மாதிரி இருக்கணும். இல்லைன்னா யாராவது நாலு பேர் அவங்களை அடிச்சி போட்டுட்டு போன மாதிரி இருக்கணும். எப்படி பண்ணணும்னு யோசிச்சிக்கோ”
“சரி, நான் ஊர் பக்கத்துல தான் இருக்கேன். ரெண்டு நிமிஷத்துல அங்க போயிருவேன்”
“சரி அந்த பொண்ணு யாரு அண்ணா?”
“அவ பேர் திவ்யா டா. எனக்கு தெரிஞ்ச பொண்ணு. உனக்கு அவளைத் தெரியாது டா”, என்று அவன் சொல்ல “அந்த பொண்ணு கூட இன்னுமா பேசுற நீ? அவளை இன்னும் உயிரோட ஐயா விட்டு வச்சதே பெருசு. அவளுக்கு நீ எதுவும் செய்ய வேண்டாம். ஒழுங்கா நீ கிளம்பி வா”, என்று பட்டென்று உளறி இருந்தான்.
காரை பிரேக் போட்டு நிறுத்திய சாணக்கியன் “இப்ப நீ என்ன சொன்ன?”, என்று கேட்டான்.
“அது.. அது ஒண்ணும் இல்லை. சரி நீ முடிச்சிட்டு வா அண்ணா. நான் ஏதோ தூக்கத்துல உளறுறேன் போல?”, என்று பின் வாங்கினான்.
“இங்க பாரு, உன்னை எனக்கு பல வருஷமா தெரியும். நீ இப்ப உளறின தான். ஆனா அது தூக்க கலக்கத்துல இல்லைன்னு எனக்கு தெரியும். சொல்லு என்ன நடந்துச்சு? திவ்யாவை உனக்கும் அப்பாவுக்கும் தெரியுமா?”, என்று சொல்ல அவன் தருமர் செய்த அனைத்தையும் சொல்லி விட்டான்.
அப்படி என்றால் இது எல்லாவற்றுக்கும் காரணம் தருமர் தானா? தன்னுடைய வாழ்வைக் கெடுத்து தம்பியின் வாழ்க்கையையும் கெடுத்தவர் அவர் தானா? தான் மனதில் நினைத்த ஒரு காரணத்துக்காக கொலை செய்யும் அளவுக்கு போவாரா என்று எண்ணியவன் “நீ இப்ப பேசினது அப்பாவுக்கு தெரிய வேண்டாம்”, என்றான்.
“அப்பாடி, நீ சொல்லாம இருந்தா போதும் அண்ணா. நான் உளறினேன்னு தெரிஞ்சது ஐயா என்னை கொன்னுருவாங்க. சரி சீக்கிரம் போ, விடிய போகுது. அங்க முடிச்சிட்டு கிளம்பிரு. அங்கயே இருக்காத”, என்று சொல்ல சரி என்று சொல்லி போனை வைத்தவன் அவர்களின் ஊருக்கு ஒதுக்கு புறமாக மூவரையும் கொண்டு போட்டான்.
காரில் ஏற்கனவே வைத்திருந்த சரக்கு பாட்டீல்களை வைத்து அங்கே எல்லாம் செட் செய்தவன் அடிதடி போல எல்லாவற்றையும் மாற்றி அமைத்தான். அது அவனுக்கு கஷ்டமாகவும் இல்லை. கிளம்பலாம் என்று எண்ணியவன் பின் என்ன நினைத்தானோ பாண்டியனின் காலை உடைத்து வசந்தின் கையையும் முறித்து வைத்தான். அவர்கள் ஆ என்று அலற அவர்கள் வாயை கர்ச்சிப்பால் மூடி அவன் நினைத்ததை சாதித்துக் கொண்டான்.
அவன் எல்லாம் முடிக்கும் போது மணி நாலரை ஆகி இருக்க அதற்கு மேல் பாத்ரூம் செல்பவர்கள் அங்கே வர வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணி வேகமாக காரை எடுத்துக் கொண்டு சென்றவன் திருநெல்வேலி டவுனில் இருந்த ஒரு ஹோட்டலில் ரூம் எடுத்து விட்டு உள்ளே சென்றான்.
திவ்யாவைப் போலவே முதலில் தலைக்கு குளித்தவன் வேறு உடை மாற்றி விட்டு கட்டிலில் சென்று அமர்ந்தான். தந்தையின் செயல் நினைவு வர தன்னிடம் இருந்த வேறு ஒரு சிம்மை எடுத்து போலீஸ்க்கு அழைத்து “அஞ்சாரு பேர் சேந்து மூணு பேரை அடிக்கிறாங்க. ஏதோ பிரச்சனை போல?”, என்று மட்டும் மொட்டையாக விஷயத்தையும் இடத்தையும் சொல்லி விட்டு போனை அணைத்தவன் அந்த சிம்மை உடைத்து டாய்லெட் உள்ளே போட்டு பிளஷ் செய்தான்.
அப்போது பார்த்து அமர் அவனை அழைக்க அதை எடுத்தவன் “சொல்லு டா அமரா”, என்றான்.
“நீ எங்க இருக்க? எங்க கிளம்பி போன? நீ ஓகே வா? கால் பண்ணினாலும் எடுக்கலை?”
“மூச்சு விட்டுட்டு பேசு டா. நான் நல்லா தான் இருக்கேன். ஒரு முக்கியமான வேலை அதான் திருநெல்வேலி வரைக்கு வந்தேன்”
“ஓ, ஒண்ணும் பிரச்சனை இல்லை தானே? யார் உனக்கு கால் பண்ணினா? என்ன ஆச்சு?”, என்று கேட்க ஏனோ அவனிடம் மறைக்கத் தோன்றாமல் திவ்யா கொலை செய்ததை மட்டும் மறைத்து மற்ற அனைத்தையும் சொன்னான்.
அதைக் கேட்ட அமருக்கு அப்படி ஒரு அதிர்ச்சி. கூடவே திவ்யா வாழ்வை பற்றி ஒன்றும் தெரிய வில்லை என்றாலும் இப்போது திவ்யாவும் சரி சாணக்கியனும் சரி பேராபத்தில் இருக்கிறார்கள் என்று புரிய “நான் உடனே வரேன்”, என்று சொன்னவன் சாணக்கியன் மறுக்க மறுக்க அதை கேட்காமல் கிளம்பி விட்டான். சாணக்கியனும் சரி என்று விட்டுவிட்டான்.
அமர் போனை வைத்ததும் தந்தையின் குள்ளநரித்தனத்தை ஒரு நொடி எண்ணியவன் அடுத்து அவருக்கு எங்கு செக் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்து விட்டு கட்டிலில் படுத்தவன் அப்படியே உறங்கி விட்டான்.
அடுத்த நாள் விடிந்ததும் சாதாரணமாக இருப்பது போல காட்டிக் கொண்டாலும் திவ்யாவுக்கு என்ன ஆனதோ என்று பதட்டமாக தான் இருந்தது. எப்போது எப்படி யார் மூலமாக என்ன தகவல் வரும் என்று காத்திருந்தாள்.
அங்கே காட்டிலோ காலையில் முதலில் கண் விழித்தது வசந்த் தான். உடல் எல்லாம் வலித்தது. தலை வேறு விண்விண்ணென்று தெரித்தது. சாணக்கியன் முறித்த கையையோ அசைக்க கூட முடியாமல் வலி உயிர் போனது. இருக்கும் இடம் வேறு குழப்பத்தைக் கொடுக்க அவனுக்கு திவ்யா அடித்த அடி வரை தான் நினைவு இருந்தது. அதற்கு பிறகு என்ன ஆனது என்று கூட தெரியவில்லை.
வலியோடவே சுற்றி பார்வையை செலுத்தினான். சுந்தர் மற்றும் பாண்டி இருவரும் தூங்கிக் கொண்டிருக்க “டே சுந்தர் எந்திரி டா, டேய் பாண்டி”, என்று கத்தி இருவரையும் எழுப்பினான். பாண்டியன் தான் எழுந்தான். அவனுக்கும் உடல் வலித்தது. காலை அசைக்க கூட முடியவில்லை. அவனுக்கும் என்ன ஆனது என்று துளி கூட நினைவு இல்லை.
“டேய் வசந்த் நம்ம எப்படி இங்க வந்தோம்?”
“அதான் எனக்கும் தெரியலை. உன் வீட்ல தான் இருந்தோம். இவன் வேற எந்திக்க மாட்டிக்கான். என் கை வேற உடைஞ்சிருக்கு. டேய் சுந்தர் எந்திரி டா”, என்று சொல்ல அப்போது தான் அவன் பேச்சு மூச்சே இல்லாமல் இருப்பது தெரிந்தது. கல்லைத் தூக்கி எறிந்தார்கள். குச்சியை தூக்கி போட்டார்கள் அவனிடம் அசைவே இல்லை என்றதும் மெதுவாக நகர்ந்து அவன் அருகே சென்று அவனை சோதிக்க அவன் உயிர் எப்போதோ அவனை விட்டுச் சென்றிருந்தது.
“டேய் பாண்டி, இவன் செத்துட்டான் டா. ஐயோ இன்னும் கொஞ்ச நேரத்துல போலீஸ் வரும். என்ன ஆச்சு? என்ன நடந்துச்சுன்னு ஒண்ணுமே தெரியலை”
“எனக்கும் தெரியலை டா. வீட்ல என்ன தான் ஆச்சு?”, என்று கேட்ட பாண்டியனுக்கு அப்படி ஒரு பதட்டம். கொலை சாவு என்றால் பயம் வருவது இயல்பு தானே? அதுவும் தங்களுடன் இருந்த ஒருவன் திடீரென்று இறந்து கிடந்தால்.
“என்ன டா வசந்த் நடந்துச்சு?”, என்று மீண்டும் கேட்டான் பாண்டியன்.
“என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியலை டா. ஆனா உன் வீட்ல போய் தண்ணி அடிச்சோம்ன்னு மட்டும் யார் கிட்டயும் சொல்லிறாத. திவ்யா கிட்ட சுந்தர் கொஞ்சம் மோசமா நடந்துக்கிட்டான் டா. அவ தான் அவனை பாட்டீல் வச்சு அடிச்சா. நான் வேண்டாம்னு சொல்லியும் அவன் கேக்கலை டா. ஆனா அது இப்ப யாருக்கும் தெரிய வேண்டாம். அவனோட வீட்டுக்கு தெரிஞ்சா தப்பா நினைப்பாங்க. செத்துட்டான். அதுக்குன்னு கெட்ட பேர் வாங்கிட்டு சாக வேண்டாம்”, என்று சொல்ல அவனும் சரி என்று கேட்டுக் கொண்டான்.
ஆனால் மனைவியிடம் தவறாக நடந்து கொண்டிருக்கிறான் என்ற கோபம் எல்லாம் பாண்டியனுக்கு வரவில்லை. “அவ ஏதாவது சொல்லிட்டா என்ன பண்ணுறது?”, என்று கேட்டான்.
“சொல்ல மாட்டா. எனக்கு என்னமோ அவ தப்பிக்க தான் நம்மளை இங்க தூக்கிட்டு வந்து போட்டுருக்கான்னு தெரியுது. ஆனா உன் பொண்டாட்டி இப்ப நம்மளை தான் சிக்க வச்சிருக்கா”
“என்ன டா சொல்ற?”
“ஆமா இப்ப அவன் பாடி நம்ம கிட்ட தான் இருக்கு. இப்ப வந்து போலீஸ் நம்மளை தான் விசாரிக்கும். எந்திச்சு ஓட முடியாத படி நம்மளையும் அடிச்சு போட்டுருக்கா. எப்படி டா ஒரு பொம்பளையால இப்படி செய்ய முடிஞ்சது? இப்ப போலீசும் சரி ஊர் மக்களும் சரி இவனைக் கொன்னது நம்ம தான்னு நம்புவாங்க. இதுல இருந்து எப்படி தப்பிக்க?”, என்று கேட்டான்.
“நம்ம தண்ணி அடிச்சிட்டு இருந்தோம். யாருன்னே தெரியாத அஞ்சாறு பேர் வந்து நம்மளை அடிச்சி போட்டுட்டு அவனையும் கொன்னுட்டு என் கிட்ட இருந்த ஒரு லட்சம் பணத்தை எடுத்துட்டு போய்ட்டதா சொல்லிறலாம். அப்ப தான் தப்பிக்க முடியும்”, என்று சொல்ல அவனும் சரி என்றான்.
அவர்கள் எண்ணிய படியே தான் எல்லாம் நடந்தது. ஆனால் இது அனைத்தும் சாணக்கியன் போட்ட திட்டம் தான் என்று தெரியாமலே அவன் விருப்ப படி பேசிக் கொண்டிருந்தார்கள். போலீஸ் வந்ததும் அந்த ஊரே பரபரப்பாக தான் இருந்தது. அவர்கள் என்ன தான் சொன்னாலும் நண்பர்களுக்குள் நடந்த தகறாரா என்றெல்லாம் விசாரிக்கப் பட்டது. அப்படி பிரச்சனை அவர்களுக்குள் இல்லை என்றும் அவர்கள் உயிர் நண்பர்கள் என்றும் அனைவரும் சொன்னார்கள். தப்பிச் சென்றவர்களை தேட நான்கு பக்கமும் தனிப்படை வேறு அனுப்ப பட்டது.
மூவரையும் போலீஸ் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல அதற்கு பிறகு தான் திவ்யாவுக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் சொன்ன செய்தியில் தான் சுந்தர் இறந்தது கூட தெரிந்தது. அதுவுமே சாணக்கியன் தான் அவனைக் கொலை செய்திருப்பான் என்று எண்ணிக் கொண்டவள் அரவிந்த்க்கு அழைத்து தகவல் சொன்னாள். ஆனால் அவனிடமும் முந்தைய நாள் நடந்ததை சொல்ல வில்லை. அதை அப்படியே மறைத்து விட தான் சாணக்கியன் சொல்லி இருந்ததால் யாரிடமும் சொல்ல வில்லை.
அதைக் கேட்டு அவனுக்கும் அதிர்ச்சி தான். தாமோதரன் மற்றும் மஞ்சுவை அழைத்துக் கொண்டு அங்கே வந்தான் அரவிந்த்.
“உன் வாழ்க்கையை இந்த கேடு கெட்டவனுக்கு கொடுத்து தொலைச்சிட்டோமே”, என்று மஞ்சு புலம்ப தங்கமும் சிறிது நேரத்தில் வந்து விட்டாள். திவ்யா அதற்கு பிறகு எதுவும் பேச வில்லை.
போலீஸ் விசாரித்த போது கூட “ஆமா நைட் வீட்டுக்கு வந்தாங்க. சாப்பிடச் சொன்னேன். வெளிய சாப்பிட போறேனு சொல்லிட்டு போய்ட்டாங்க”, என்று மட்டும் சாணக்கியன் சொல்லிக் கொடுத்தது போலவே சொன்னாள்.
யாருக்கும் என்ன நடந்தது என்று தெரிய வில்லை. அவர்கள் மூவரின் நட்பை அறிந்த போலீசும் வேறு யாரோ தான் கொலை செய்திருக்கிறார்கள். ஜூஸ் கடை வருமானத்தை கொள்ளையிடும் முயற்சியில் தான் கொலை நடந்திருக்கிறது என்ற கோணத்தில் வழக்கை விசாரித்தார்கள். கேசும் அப்படி தான் எழுதப்பட்டது.
சுந்தருக்கு கடைசி காரியங்கள் நடக்க சாணக்கியன் அடித்த அடியில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார்கள் பாண்டியனும் வசந்தும். அவர்களுக்கு இப்போது வரை அடித்தது யாரென்று தெரியவில்லை. நண்பன் மறைவு வருத்தத்தை அளித்தாலும் தாங்கள் கொலைப் பழியில் இருந்து தப்பித்து விட்டோம் என்ற நிறைவு தான் அவர்களுக்கு.
தங்களை அடித்தது திவ்யா தான் என்பதிலும் அவர்களுக்கு பிரமிப்பு தான். இந்த அளவுக்கு ஒரு பெண்ணால் செயல்பட முடியுமா என்று இருந்தது.
திவ்யா அன்னை மடியில் தலை வைத்து படுத்திருந்தாள். தாமோதரன் அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் அமர்ந்திருந்தார். அரவிந்த் தான் கேஸ் விஷயமாக அலைந்து கொண்டிருந்தான்.
திவ்யாவுக்கு நடந்தது யாருக்குமே தெரிய வில்லை. பாண்டியனுக்கு நடந்தது தெரிந்து ரதி தங்கைக்கு துணையாக உடனே வர வேண்டும் என்று தான் நினைத்தாள். ஆனால் அவினாஷ் காய்ச்சலில் விழுந்திருக்க மகனை தூக்கி கொண்டு செல்ல முடிய வில்லை.
தங்கம் ஒரு பக்கம் மகனை நினைத்து புலம்பிக் கொண்டிருக்க திவ்யாவின் பெற்றோர்களால் அவளிடம் சண்டை போட முடியவில்லை. மகனுக்கு என காரசாரமாக சமைத்து எடுத்து கூடையில் அடைத்த தங்கம் “திவ்யா வா ஆஸ்பத்திரிக்கு போய் பாண்டியைப் பாத்துட்டு வரலாம். அரவிந்த் இன்னைக்கு வீட்டுக்கு வரட்டும், நீ இன்னைக்கு நைட் உன் மாமனுக்கு துணைக்கு இருந்துக்கோ. நாளைக்கு பகல்ல நான் போய் இருக்கேன்”, என்று சர்வ சாதாரணமாக பேசினாள் தங்கம்.
மஞ்சுவும் தாமோதரனும் வேறு வழி இல்லாமல் எழுந்து கொண்டார்கள். அவர்களுக்கு என்ன செய்ய என்ன சொல்ல என்று கூட அந்த நேரம் தெரிய வில்லை.
பாண்டியைப் பார்க்க அன்னை எழுந்ததால் வேறு வழியில்லாமல் எழுந்த திவ்யாவும் “அவனைப் பாக்க நான் எதுக்கு வரணும்?”, என்று நிதானமாக கேட்டாள்.
“பின்ன அவனை யாரு பாக்க? நீ தானே அவன் பொண்டாட்டி?”
“உன் மகனை நீ பாரு. நான் எதுக்கு பாக்கணும்?”, என்று கேட்ட திவ்யாவிடம் மரியாதை எல்லாம் தூரப் போயிருந்தது.
“என்ன டி என் மகன் ஆஸ்பத்திரில இருக்கான்னு பயம் விட்டுப் போச்சா? நீ வா போன்னு பேசுற?”
“அப்படி தான் பேசுவேன். இனி நீங்க யாரு எனக்கு? இனி எனக்கும் உங்க குடும்பத்துக்கும் உங்க மகனுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இந்தா உன் மகன் கட்டின தாலி”, என்று சொன்னவள், தாலிக் கயிரைக் கழட்டி தூர எறிந்தாள்.
தொடரும்..
