Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

57.கார்த்திகா கார்த்திகேயன்-தேவனுக்கேற்ற தேவியோ

அத்தியாயம் 12.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்

அத்தியாயம் 12

 

கனவுகள் தான் உன்னை தேடி

அலைகிறது என்றால் எந்தன்



Advertisement

கண்களும் அதையே செய்கிறது!!!

 

திவ்யா சட்டென்று தாலியை கழட்டி எறிவாள் என்று யாருமே எதிர் பார்க்க வில்லை. தாமோதரன் மஞ்சு கூட அவளை அதிர்ந்து பார்க்க தங்கத்துக்கு பேச்சே வரவில்லை. மஞ்சு மகளை எதுவோ சொல்ல வர தாமோதரன் அவள் கையை பற்றி பேச விடாமல் செய்து விட்டார்.

Advertisement

 

Advertisement

“எதுக்கு திவ்யா இப்படி பண்ணுற? ஏற்கனவே பாண்டிக்கு என்ன ஏதுன்னு ஒண்ணும் புரியலை. நான் ஏதாவது தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிக்கோ மா. நீ என் தம்பி பொண்ணு டா. அவன் வந்ததும் பேசிக்கலாம். தாலியை கழுத்துல போடு”, என்று சமாதானமாக பேசி பார்த்தாள் தங்கம்.

 

“ஆமா உன் மகன் நாலு நல்ல காரியம் பண்ணிட்டு ஆஸ்பத்திரில போய் படுத்துருக்கான். அவன் வந்ததும் பேச வேண்டியது தான். நான் பேச வேண்டியதை இப்பவே பேசிறேன். இனி உங்க குடும்பத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. நான் டைவர்ஸ் வாங்க போறேன். எனக்கு அவன் கூட வாழ பிடிக்கலை, அவ்வளவு தான். நான் கிளம்புறேன்”, என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்றவள் ஒரு சுடிதாரை எடுத்து அணிந்து கொண்டு ஒரு பையில் தன்னுடைய முக்கியமான பொருள்களை எடுத்துக் கொண்டு வந்தாள்.

Advertisement

 

“மதினி அவ ஏதோ கோபமா இருக்கா. இப்போதைக்கு நீங்க பாண்டி மாப்பிள்ளை குணமாகுறதை பாருங்க. இப்ப நாங்க திவ்யாவை கூட்டிட்டு போறோம். கோபம் குறைஞ்சதும் அவளை இங்க கூட்டிட்டு வறோம்”, என்று கணவரின் எச்சரிக்கையையும் மீறி சொன்னாள் மஞ்சு.

 

தாமோதரன் அவளை முறைக்க “என்னங்க திவி கையில இருக்குற பையை வாங்குங்க. நம்ம போவோம்”, என்றாள்.

 

“நான் உங்க கூட வாறேன்னு யார் சொன்னா?”, என்று திவ்யா கேட்க அனைவருக்கும் அதிர்ச்சி தான்.

 

“எங்க கூட வராம?”

 

“எதுக்கு? உன் கூட வந்து அக்கா மாதிரி நானும் உன் கிட்ட பேச்சு வாங்கவா? அவளுக்கு இருக்குற பொறுமை எல்லாம் எனக்கு இல்லை. என்னை ஏதாவது சொன்னா உன்னைக் கொல்லக் கூட தயங்க மாட்டேன்”

 

“அவ பண்ணின தப்புக்கு பேசாம கொஞ்சுவாங்களா? உன்னை எதுக்கு டி நான் திட்ட போறேன்?”

 

“நீ எப்ப எப்படி இருப்பேன்னு தான் யாருக்கும் தெரியலையே மா? அவ பண்ணது தப்புன்னு அவ உணராமலா இருக்கா? அதை விடு, அந்த தப்புல அதிகம் பாதிக்கப் பட்டது நீயா அவளா? வயித்துல பிள்ளை இருக்குன்னு கூட பாக்காம அவளை என்ன பேச்சு பேசின? என் வயித்துல பிள்ளை இல்லைன்னு என்ன எல்லாம் பேசுவியோ? போதும் உங்க சங்காத்தமே வேண்டாம். தப்பு தப்புன்னு சொல்ற? நீ என் வாழ்க்கையை கெடுத்து பெரிய தப்பு பண்ணிருக்க? அப்ப நான் வாழ்க்கை முழுக்க உன்னை பேசவா? நான் பேசினா நீ தாங்குவியா?”, என்று கேட்க மஞ்சுவால் பதில் பேச முடியவில்லை.

 

“இப்ப எதுக்கு வாக்குவாதம் பண்ணனும்? நான் என் வாழ்க்கையை பாத்துக்குறேன். நான் இப்ப வேற ஊருக்கு போறேன். ஏதாவது வேலைக்கு போய் வாழ்ந்துக்குவேன். எனக்கு பிடிச்சவனை கல்யாணமும் பணணிப்பேன். நீங்க எல்லாம் கேள்வி கேக்குற இடத்துல நான் இருக்க விரும்பலை”, என்று முடிவாக திவ்யா சொல்ல மஞ்சு வாயடைத்துப் போனாள்.

 

“அம்மாடி திவி உனக்கு பிடிச்ச எல்லா விஷயத்தையும் செய். ஆனா எங்க கூட இருந்து செய் டா. இனி உன்னை எதுவும் சொல்ல மாட்டோம், உன் அம்மாவையும் சொல்ல விட மாட்டேன். யாரும் உன் கிட்ட கேள்வி கேக்க மாட்டோம். தப்போ சரியோ உனக்கு பிடிச்சதை செய். படிக்கணுமா படி, வேலைக்கு போகனுமா போ. ரதி மாதிரி உனக்கு வேற யாரையும் பிடிச்சிருந்தா சொல்லு. அவனையே கல்யாணம் கூட பண்ணி வைக்கிறோம். முதல்ல இவன் கிட்ட இருந்து விவாகரத்து வாங்கி கொடுத்து உனக்கு வேற நல்ல வாழ்க்கையை அமைச்சு கொடுக்க வேண்டியது இந்த அப்பா பொறுப்பு டா பாப்பா. என்னை நம்பி வா”, என்றார் தாமோதரன்.

 

அன்னையிடம் பேசியதை போல தந்தையை எடுத்தெறிந்து பேச முடிய வில்லை. அதனால் அமைதியாக அவர்களுடன் கிளம்பினாள்.

 

“என் பொண்ணுக்கு போட்ட அத்தனை நகையும் விவாகரத்து கிடைக்கிறதுக்குள்ள நீ ஒப்படைச்சிருக்கணும். இல்லைன்னா அம்மா மகன் ரெண்டு பேரையும் உள்ள தூக்கி வச்சிருவேன். இனி அக்கான்னு கூட பாக்க மாட்டேன்”, என்று சொன்ன தாமோதரன் மகளை அழைத்துக் கொண்டு சென்றார்.

 

தங்கம் மட்டும் உணவுடன் மருத்துவமனைக்கு தனியாக வர பாண்டியன் கண்கள் மனைவியை தேடியது.

 

“அவளை எங்க மா, நீ மட்டும் வந்திருக்க?”, என்று கேட்டான். தன்னுடைய நண்பர்கள் நடத்தையால் அவள் கோபமாக இருப்பாள் என்று தெரியும். ஆனால் வீட்டில் என்ன சொல்லி இருக்கிறாள் என்று தெரியாதே. கூடவே அவர்கள் அப்படி நடந்து கொள்வார்கள் என்று எனக்கு தெரியாது என்று சொல்லி தப்பித்துக் கொள்ளலாம் என்று தான் எண்ணினான். ஆனால் அவள் அவனுக்கு அந்த வாய்ப்பையே கொடுக்கப் போவதில்லை என்று அறிய மறந்தான்.

 

“அவ இனி வர மாட்டா டா”, என்று ஆரம்பித்த தங்கம் நடந்ததைச் சொல்ல எரிச்சல் ஆனவன் “அவளுக்கு டைவர்ஸ் கொடுத்தா தானே எவனையாவது கட்டிக்கிட்டு நல்லா வாழுவா. என்னைக்கா இருந்தாலும் அவ தான் என் பொண்டாட்டி. நீ சோத்தை போடு. நான் பாத்துக்குறேன்”, என்றான்.

 

சில ஜென்மங்கள் வாழவும் செய்யாது வாழவும் விடாது. பாண்டியன் அப்படி பட்டவன் தான்.

 

வீட்டுக்கு வந்த தங்கையை அணைத்துக் கொண்டாள் ரதி. அங்கே மறுபடி ஒரு பாசப் போராட்டம் நடக்க “சித்தி”, என்ற அவினாஷின் குரலிலில் அனைவரின் கவனமும் அவன் பக்கம் சென்றது. இருவரும் வீடியோ காலில் அடிக்கடி பேசி இருந்ததால் அந்த ஒட்டுதல் இருந்தது.

 

திவ்யா வெகு நாட்களுக்கு பிறகு சந்தோஷமாக பிள்ளையை தூக்கி “செல்லத்துக்கு காச்சலா? அது எப்படி என் குட்டி பையனை பிடிக்கலாம்? அடிச்சு விரட்டிறலாமா?”, என்று பேசிய படியே அறைக்குள் சென்று விட்டாள். ரதியும் அவர்கள் பின்னே சென்று விட்டாள்.

 

“என் ரெண்டு பொண்ணுங்க வாழ்க்கையும் போச்சே”, என்று மஞ்சு புலம்ப “இங்க பாரு மஞ்சு இன்னொரு தடவை என் பொண்ணுங்க மனசு வருத்த படுற மாதிரி ஏதாவது பேசினா நான் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். ஒரு அம்மாவா உன் வேதனை புரியுது. அது உண்மையான வருத்தம்னா அவங்களுக்கு ஆறுதலா இருக்கணுமே தவிர அதை கிண்டி கிளறி காயப் படுத்தக் கூடாது. உன்  பொண்ணுங்க உன்னை அம்மாவா நினைக்கணும்னா நீ நல்ல அம்மாவா இரு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் தாமோதரன்.

 

தங்கம் மருத்துவமனைக்கு வரும் போது அவளும் பாண்டியனும் பேசுவதை வெளியே இருந்து அரவிந்த் கேட்டுக் கொண்டு தான் இருந்தான். அவர்கள் குணம் அப்படி தான் என்று புரிந்தவன் உள்ளே சென்று “அம்மா இவனை இன்னைக்கு நைட்டும் நாளைக்கு பகல்லயும் பாத்துக்கோ. நாளைக்கு நைட் நான் வந்துறேன். இவனுக்கு எல்லாம் துணையா இருக்கணும்னு எனக்கு தலையெழுத்தான்னு தான் இருக்கு. ஆனா கூட பிறந்த பாவத்துக்கு பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு தான் கிளம்பினான்.

 

வெயில் அதிகம் என்பதால் சோர்வாக ரதி வீட்டுக்கு வந்தான் அரவிந்த். அனைவருமே அவனை வரவேற்றார்கள். அவனை வெறுக்க யாரால் முடியும். திவ்யா ரதி அனைவரும் அங்கே இருக்க திவ்யா மடியில் சுருண்டு படுத்திருந்தான் அவினாஷ்.

 

மஞ்சு அவனுக்கு உணவு எடுத்து வந்து கொடுக்க “ஒரு வழியா மேடம்க்கு வீரம் வந்துருச்சு போல?”, என்று திவ்யாவை வம்பிழுத்த படி தான் உண்டான் அரவிந்த்.

 

பேருக்கு தாமோதரன் பாண்டியன் பற்றி விசாரிக்க அவனும் பாண்டியன் உடல் நிலை பற்றியும் ஒரு வாரத்தில் வீட்டுக்கு போய் விடுவான் என்றும் சொன்னவன் திவ்யா எடுத்த முடிவு நல்லது என்றும் சொன்னான்.

 

“டைவர்ஸ்க்கு தேவையான எல்லா விஷயத்தையும் நான் பாத்துக்குறேன். நீ உன் படிப்பை தொடருறதுக்கு பாரு திவி”, என்று சொல்ல அக்கா தங்கை இருவரும் அவனை நெகிழ்வுடன் பார்த்தார்கள்.

 

“சித்தப்பா சித்தி படிக்க போறாளா? என் ஸ்கூல்ல சேத்துரு. நான் அவளைக் கூட்டிட்டு போறேன்”, என்று அவினாஷ் சொல்ல அங்கே சிரிப்பலை எழுந்தது. மழலை பேச்சுக்கு மயங்காதவர் உண்டோ?

 

“காச்சல்ல கிடந்தாலும் நீ வாயாடி தான் டா. அப்படியே என் மஞ்சு அத்தை வாரிசு தான் நீ”, என்ற சொல்ல மஞ்சு அவனை முறைத்தாள்.

 

“காச்சல் குறைஞ்சிருக்கா ரதி? டாக்டர் கிட்ட எப்ப போகணும்?”, என்று கேட்டான் அரவிந்த்.

 

“சாயங்காலம் போகணும் அர்வி. இன்னும் சூடா தான் இருக்கு”

 

“அப்படின்னா நானே உங்களை கூட்டிட்டு போறேன். இப்ப கொஞ்ச நேரம் தூங்குறேன்”, என்றவன் அந்த வீட்டில் அவனுக்கு இருக்கும் அறைக்கு சென்று படுத்து விட்டான்.

 

“அவன் ஆஸ்பத்திரில இருந்து வீட்டுக்கு வரட்டும் திவி மா. நான் லாயர் கிட்ட பேசுறேன்”, என்றார் தாமோதரன்.

 

“சரிப்பா”, என்று மட்டும் சொன்னாள் திவ்யா.

 

 

 

அன்று மாலை திருநெல்வேலிக்கு வந்து இறங்கிய அமர் அண்ணன் தங்கி இருக்கும் லாட்ஜுக்கு காரில் சென்று கொண்டிருந்தான்.

 

அதே நேரம் குழந்தையை டாக்டரிடம் காட்டி விட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ரதி அரவிந்துடன் நின்று ஒரு கரும்பு ஜூஸ் கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்தாள்.

 

வெளியே பார்வையை பதித்திருந்த அமர் கண்ணில் அவர்கள் விழ “அண்ணா ஒரு நிமிஷம் காரை நிறுத்துங்க”, என்றவன் திகைத்த படி அவர்களை பார்த்தான்.

 

அவன் பதட்டத்தில் என்ன உணர்ந்தாரோ காரை சாலையின் ஓரமாக நிறுத்தி விட்டார் அந்த டிரைவர். அவனால் அவன் கண்ணையே நம்ப முடியவில்லை. வெகு நாட்களுக்கு பின்னான அவளின் சந்திப்பு அவனை மொத்தமாக பிரட்டி போட்டது. அவள் அருகே இருந்த அரவிந்தும் அவள் கையில் இருந்த குழந்தையும் அவன் கண்ணில் பட தன்னுடைய இழப்பு அமருக்கு பூதாகரமாக தெரிந்தது.

 

அரவிந்த் ஏதோ சொல்ல அவனைப் பார்த்து புன்னகைத்தாள் ரதி. ஊசி போட்டதால் அவள் தோளில் தூங்கிக் கொண்டிருந்த மகனை தான் அவன் கேட்டான். அவள் வேண்டாம் என்று புன்னகையுடன் மறுத்தாள். ஆனால் அவர்கள் பேச்சு அமருக்கு கேட்க வில்லையல்லவா.

 

கணவன் மனைவி என அவர்கள் நிற்பதும் அவள் கையில் இருந்த குழந்தையும் அவர்களை தனி குடும்பமாக அமருக்கு காட்டியது. லேசான பூரிப்பு மிளிர்ந்த அவள் முகத்தை அவன் பார்வை ஆதுரமாக வருடிச் சென்றது. அவன் பார்க்கும் போது ஒரு முழு நிலவு எப்படி புன்னகைக்குமோ அப்படி இருந்தது அவள் முகம்.

 

 

ஏதேதோ நினைவுகள் அவன் மனதுக்குள் சூறாவளியாக வந்து போக அவள் மேல் பார்வையை நிலைக்க விட்டான். இமைக்க மறந்தால் கூட மறைந்து விடுவாளோ என்று பயமாக இருந்தது.

 

சாதாரண சுடிதார் தான் அணிந்திருந்தாள். அவள் நெற்றியில் இருந்த கீற்றான குங்குமம், கழுத்தில் இருந்த தாலிசெயின், காலில் இருந்த மெட்டி எல்லாம் அவன் கண்ணுக்கு தெரிந்தது. அவன் அணிவித்த செயினும் உள்ளே இருக்க அது அவன் கண்ணில் பட வில்லை.

 

அவளை மாற்றானின் மனைவியாக பார்க்க பார்க்க ஒரு மாதிரி இதயம் துடித்து பதட்டத்தைக் கொடுத்தது. அவள் வேறு யாருக்கோ சொந்தமாகி விட்டாள் என்ற உண்மை அவனுக்கு அவ்வளவு கஷ்டமாக இருந்தது. அவள் கணவன் குழந்தை என நன்றாக இருப்பது அவனுக்கு சந்தோஷம் தான் என்றாலும் அவன் காதல் கொண்ட மனமோ அவளால் என்னை எப்படி மறக்க முடிந்தது என்று கேள்வி எழுப்பியது.

 

இரண்டு விதமான எண்ணங்களுக்கு இடையில் போராடியவன் இறுதியில் அவளாவது நிம்மதியாக இருக்கட்டுமே என்றும் எண்ணிக் கொண்டான்.

 

ஒரு கையால் அவள் ஜூஸ் குடிக்க கஷ்ட படவும் அவள் தோளில் இருந்த மகனை வாங்கிக் கொண்டான் அரவிந்த்.   அவனிடம் கொடுத்தவள் மகனின் தலையை வருடி விட “உன் மகனுக்கு கிடைச்ச உன்னோட பாசம் உன் பொண்ணுக்கு இல்லாம போச்சே ரதி”, என்று எண்ணிக் கொண்டான் அமர்.

 

ஏனோ மனம் முழுக்க ஒரு வித பதட்டம் வேதனை அவனைச் சூழ்ந்தது. “இங்கிருந்து போ, அவளைப் பார்த்து பார்த்து கஸ்டப் படாதே”, என்று அவன் மனம் எச்சரித்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசையும் அவனை அங்கிருந்து நகர விட வில்லை. அவள் வேறு வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதையும் அவனால் கண் கொண்டு பார்க்க முடியவில்லை.

 

பொறாமை என்ற உணர்வை இரண்டாவது முறையாக மீண்டும் அனுபவித்தான். முதல் முறையும் அதே அரவிந்தை வைத்து தான் பொறாமை உணர்வு அவனுக்கு வந்தது.

 

அவள் ஏதோ சொல்வதற்கு அரவிந்த் அவள் தலையில் கொட்ட வர அதற்கு முன்னே அதை கண்டு கொண்ட அவினாஷ் அரவிந்த் தலையில் ஒரு அடி அடித்தான். “குட்டிக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் போல?”, என்று எண்ணிக் கொண்டான் அமர். அரவிந்தைப் பார்க்கும் போது கோபமாக வந்தாலும் ரதியின் மகனைப் பார்க்க வேண்டும் போல ஆசையாக இருந்தது. ஆனால் அவனுக்கு அவன் முகம் தெரிய வில்லை.

 

வெகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தான் அவன் கண்ணம்மாவை. இன்னொருவனின் மனைவியாக இருக்கும் அவளைப் பார்ப்பது தவறு என்றாலும் இந்த சந்தர்ப்பம் அவனுக்கு எப்போது வருமோ என்று தெரியாதே.

 

ஜூஸ் குடித்ததும் “போகலாமா ரதி”, என்று கேட்டான் அரவிந்த்.

 

“சரி”, என்றவள் மகனை வாங்கிக் கொள்ள அரவிந்த் வண்டியைக் கிளப்பினான். அவள் மகனுடன் பின்னால் ஏறி அமர்ந்ததும் அவன் வண்டி கிளம்பியது.

 

என்ன நினைத்தானோ “அண்ணா அந்த வண்டியை பாலோ பண்ணுங்க”, என்றவன் பரபரப்பாக அவர்களைப் பார்த்தான்.

 

முடிவில் அவர்கள் ஒரு வீட்டின் முன்னால் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியதைப் பார்த்தவன் “இப்ப ஹோட்டல்க்கு போங்க”, என்று சொல்லி விட்டு அப்படியே சீட்டில் சாய்ந்து அமர்ந்தான். ஏனோ அவன் மனதில் பாரம் ஏறி அமர்ந்திருந்தது. பார்க்காத வரைக்கும் வலி அவ்வளவு இல்லை. பார்த்த பிறகு தாங்க முடியாததாக இருந்தது.

 

அதே நேரம் திவ்யாவிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை என்ற டென்சனில் இருந்தான் சாணக்கியன். அவன் பார்த்துக் கொள்வதாக சொல்லி விட்டான் தான். ஆனால் அவன் என்ன செய்வதாக இருந்தாலும் அதற்கு அவள் அனுமதி வேண்டுமே. ஒரு ஆபத்தில் தன்னை அழைத்தாள், அவனை வேண்டும் என்றும் சொன்னாள். ஆனால் அவள் மனதில் என்ன இருக்கிறது என்று பேசவில்லையே.

 

அவள் சூழ்நிலை தெரியாமல் அவள் எண்ணுக்கு அழைக்கவும் பயமாக இருந்தது. அதனால் தான் சென்னைக்கு கூட செல்லாமல் அங்கேயே இருந்தான். அமர் வருவதும் அவனுக்கு தெரியும். தம்பியுடன் திரும்பி செல்வதற்கு முன் திவ்யாவிடம் பேச வேண்டும் போல இருந்தது.

 

அவன் அவளைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்க அவனது எண்ணத்தின் நாயகியே அவனை அழைத்தாள். அவளுக்கு அப்போது தான் தனிமை கிடைத்தது.

 

“திவி”, என்று அவன் குரல் மென்மையாக வர அவளுக்குள் சில மின்னல்கள்.

 

“எங்க இருக்க?”, என்றாள்.

 

“டவுண்ல இருக்கேன் டி, *** ஹோட்டல்ல. உன் போனுக்காக தான் வெயிட் பன்றேன். அங்க எல்லாம் ஓகே தானே? எதுவும் பிரச்சனையா மா?”

 

“நீ இருக்கும் போது என்ன பிரச்சனை எனக்கு வரப் போகுது?”, என்று கேட்க அவன் மனதில் அப்படி ஒரு சந்தோஷம். அவன் மீது அவள் வைத்திருக்கும் நம்பிக்கையே அந்த கேள்வி.

 

“என்ன நடந்துச்சு திவி? உனக்கு கல்யாணம் ஆகி இருக்கும்னு நினைச்சேன். ஆனா, இப்படி ஒரு வாழ்க்கை நீ வாழ்வேன்னு நினைக்கலை. முடிஞ்சா என்ன நடந்துச்சுன்னு சொல்லேன். ஆனா என்னால உன்னை விட்டுக் கொடுக்க முடியாது. என் அப்பாவே தடுத்தாலும் என்னால உன்னை விட்டு போக முடியாது. எல்லாத்தையும் சொல்லு மா”, என்றான்.

 

அவர்களை கொல்ல தருமர் ஆள் அனுப்பியதைப் பற்றி தான் முதலில் ஆரம்பித்தாள். ஏற்கனவே அடியாள் மூலம் அது தெரிந்த சாணக்கியன் அமைதியாக இருக்க “ரதி அக்காவுக்கும் ஆபத்துன்னு தெரிஞ்சதும் என்னால அதை சும்மா விட முடியலை. அதனால ரதிக்கே தெரியாம உன் அப்பாவைப் போய் பாத்தேன்”, என்றாள்.

 

“என்னது? அப்பாவையா? எப்ப?”

 

“அன்னைக்கு கார்ல வச்சு நான் படிப்பு முக்கியம்னு பேசினது உண்மை தான். ஆனா எனக்கு உன் காதல் பிடிச்சிருந்தது. நீ எங்களைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்க மாட்டேன்னு தெரியும். அதனால உன் கிட்ட அப்படி பேசினாலும் அவரைப் பாக்க போனேன். அவர் என்கிட்ட உன்னை விட்டுறணும் இல்லைன்னா அக்காவை ஏதாவது பண்ணிருவேன்னு சொன்னார். உனக்கு வேற பொண்ணு பாத்துருக்குறதா வேற சொன்னார். நானும் என்ன தான் நடக்குன்னு பாப்போம்னு வந்துட்டேன். அப்புறம் தான் அமர் மச்சான் உன் கல்யாணம் பத்தி சொன்னாங்க. நான் வேண்டாம்னு சொன்னதும் உடனே போயிருவியா டா நீ?”, என்று கேட்க அவன் முகத்தில் புன்னகை.

 

“அந்த கல்யாணம் பண்ணலைனா கண்டிப்பா என்னால உன்னை விட்டு விலகி இருக்க முடிஞ்சிருக்காது டி. என்னை நினைச்சு எனக்கே பயம். உன் மனசை தெளிவா சொன்ன அப்புறம் உன்னை காய படுத்த எனக்கு மனசு இல்லை. அதான் அப்பா சொன்னதும் ஓகே சொன்னேன்”

 

“இப்பவும் போன்னு சொன்னா போயிருவியா?”

 

“இனி நமக்குள்ள எந்த தடையும் இல்லைன்னு நினைக்கிறேன். சத்தியமா போக மாட்டேன். நீ எனக்கானவ திவி. அதான் மனுசங்க என்ன நினைச்சாலும் விதி உன்னை என் கிட்ட கூட்டிட்டு வந்துருக்கு. சொல்லு அப்புறம் என்ன ஆச்சு?”, என்று கேட்க வாழ்வில் நடந்ததை ஒன்று விடாமல் சொன்னாள்.

 

எல்லாம் கேட்டவனுக்கு பாண்டியனை கொன்று போட வேண்டும் என்ற வெறியே வந்தது. “மூணு நாய்ல ஒண்ணு செத்துருச்சு”, என்றான் சாணக்கியன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!