Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

அத்தியாயம் -14 part-1

அத்தியாயம் -14

   தண்ணீர் தடாகத்தில் அன்றலர்ந்த அல்லி மலர் போல கடலன்னையின் தடாகத்தில் மஞ்சள் நிலவன் புதிதாய் பிறந்து தவழ்ந்த காலை பொழுது அழகாய் பூத்து மணம் பரப்பி கொண்டிருந்தது.

அன்றைய விடியலில் பெரிய வீடே பரப்பரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. இன்று தான் வெற்றியின் திருமணத்தை உறுதிப்படுத்தும் நாள். அதனால் காலையிலேயே வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன.

நாச்சியாரை கையில் பிடிக்க முடியவில்லை. அனைவருக்கும் வேலைகளை உற்சாகத்துடன் ஏவி கொண்டிருந்தார்.



Advertisement

அடிக்கடி, மாடிப்படியை எட்டி பார்க்கவும் தவறவில்லை அவர். வெற்றியின் வருகைக்காக தான் ஆவலாக காத்து கொண்டிருந்தார்.

அன்று வெற்றியிடம் பேசிய பின், அவர் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது.

விஷயத்தை உடனே மகளிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மனம் பரப்பரத்தது. ஆனால், நேரத்தை பார்த்தால் அதுவோ நள்ளிரவை தொட்டு கொண்டிருக்க, சரி காலை அழைப்போம் என அதே சந்தோஷத்துடனே உறங்க சென்றார்.

Advertisement

காலை எழுந்ததும், முதல் வேலையாக பூஜை செய்து தெய்வத்திற்கு நன்றி தெரிவித்து விட்டு, மகளுக்கு தான் அழைத்தார்.

Advertisement

“அமுதா, வெற்றி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டான் டி” என அவர் உற்சாகமாக கூற, எதிர்முனையில் இருந்த அமுதவல்லியோ,

“என்ன ம்மா சொல்ற? நிஜமாவா? வெற்றி சம்மதம் சொல்லிட்டானா?” என சந்தேகமாய் கேட்டார். கேட்ட செய்தியை அவராலே நம்ப முடியவில்லை. 

“அட எவடி இவ, எல்லாத்துக்கும் சந்தேகப் பட்டுகிட்டு. உண்மையா தான் சொல்றேன். நேத்தைய ரா பொழுதில், நான் போய் அவன் கிட்ட பேசினேன். அவனும் சரி அப்பத்தா, உங்க இஷ்டம் போல செய்யுங்க. வெள்ளிக்கிழமை எல்லார் முன்னாடியும் என் முடிவை சொல்றேன் சொன்னான்” என அவர் பூரிப்புடன் கூற, அமுதவல்லிக்கு ஒன்னும் புரியவில்லை.

Advertisement

“ம்மா, இரு, இரு. நீ அவன் கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான் தானே சொன்ன, இப்போ என்ன வெள்ளிக்கிழமை சொல்ல போறான் சொல்ற? என்ன ம்மா போட்டு குழப்புற?” என கேட்க,

“அடியேய், வெள்ளிக்கிழமை எல்லார் முன்னாடியும் சொல்றேன் சொல்லி இருக்கான். அப்படினா என்ன அர்த்தம் அவனுக்கு கல்யாணத்துல சம்மதம் தானே அர்த்தம். இஷ்டம் இல்லைனா, எதுக்கு வெள்ளிக்கிழமை சொல்றேன் சொல்ல போறான்? நேத்தைக்கே சொல்லி இருப்பான்ல” என அவர் எடுத்துரைக்க, அமுதவல்லிக்கு குழப்பமாகவே இருந்தது. 

“சரி ம்மா, நீ என்னமோ சொல்ற? நான் நம்புறேன். எல்லாம் நல்லபடியா நடந்தா போதும்” என்றவர்,

“அவர் கிட்ட சொல்றேன் ம்மா. வெள்ளிக்கிழமை எல்லாரையும் வர சொல்லிடு” என அன்னையிடம் கூற, அவரும்,

“எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ கவலைப்படாதே! நான் எல்லாரையும் வர சொல்லிறேன்” என உற்சாகமாக கூறியவர் அலைபேசியை துண்டிக்க, இங்கு அமுதவல்லிக்கோ ஒரே சஞ்சலமாக இருந்தது.

நேராக கணவரிடம் வந்தவர், 

“ஏங்க வெற்றி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டதா அம்மா சொன்னாங்க. வர வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலில், நம்ம சொந்தகாரங்க முன்னாடி வச்சு பேசி முடிவு பண்ணி நாள் குறிக்கலாம் சொல்லி இருக்காங்க” என அவர் தயங்கி தயங்கி கூற, இளங்கோவிற்கோ எல்லையற்ற மகிழ்ச்சி.

“அப்பா, இப்போ தான் நிம்மதியா இருக்கு. எங்கே நடந்ததை மனசில் வச்சிட்டு ஏதாச்சும் சொல்வானோனு நினைச்சேன்.

பரவாயில்ல, சம்மதம் சொல்லிட்டானே!! சரி ஆக வேண்டிய வேலைகளை பாரு” என அவர் உற்சாகமானார். மனதில் அவர் போட்ட கனவுகள் வெற்றி அடைய போகிற மகிழ்ச்சி அவருக்குள் பெருக்கெடுத்தது. 

ஆனால் அமுதவல்லி குழப்பமாகவே சுற்றி வந்தார். வெற்றி இந்த திருமணத்திற்கு சம்மதம் சொல்வானா? மாட்டானா? என சதா அதைப்பற்றிய யோசனையிலேயே அவர் இருந்தார். 

அதன் பின் இந்த விஷயத்தை திருநாவுக்கரசு, விசாலாட்சி அவர்களிடமும் நாச்சியார் பகிர்ந்து கொள்ள, இருவருக்குமே அதிர்ச்சி தான்.

“வெற்றி சரின்னு சொல்லிட்டானா? உண்மையாவா சொல்றீங்க அத்தே” என  விசாலாட்சி அதிர,

“ஹ்ம்ம்.. உன் கிட்ட பொய் சொன்னா பத்து லட்சம் தரேன்னு சொன்னாங்க அதான் சொல்லிட்டு இருக்கேன்” என நாச்சியார் நக்கலடிக்க, விசாலாட்சியோ முகத்தை திருப்பிக்கொண்டார்.

‘இந்த மாமியாருக்கு வர வர நக்கல் அதிகமா தான் ஆகிடுச்சு’ என அவர் மனதில் வசைபாட, அதற்குள் வெற்றியே அவ்விடம் வந்து அமர்ந்தான். திருநாவுக்கரசோ, அவனிடம், 

“என்ன வெற்றி? அம்மா சொல்றதெல்லாம் உண்மையா? ராகினியை உனக்கு பிடிச்சு இருக்கா? அவளை கல்யாண பண்ணிக்க சம்மதமா? பேசி முடிவு பண்ணிடுவோமா?” என கேட்க,

“இப்போ இந்த கேள்வி எதுக்கு ப்பா? அப்பத்தா தான் எல்லாம் சொல்லிட்டாங்களே!. வெள்ளிக்கிழமை நம்ம சொந்தக்காரங்க எல்லாரையும் வச்சு பேசி முடிவு பண்ணுவோம் சொல்லி இருக்காங்க, நானும் அப்படியே செய்ங்கனு சொல்லிட்டேன். மறுபடியும் அதையே கேட்டா நான் என்ன சொல்றது? என அவன் சலித்து கொள்ள, விசாலாட்சிக்கோ அவன் பேசியது ஒன்றுமே புரியவில்லை. 

“வெற்றி நீ சொல்றது ஒண்ணுமே புரியல டா. நீ என்ன தான் சொல்ல வர?” என விசாலாட்சி கேட்க, நாச்சியாரோ,

“அவன் தான் சரினு சொல்லிட்டான்ல சும்மா எதுக்கு அதையே திரும்ப திரும்ப கேட்கிற நீ? போ வெள்ளிக்கிழமைக்கு ஆக வேண்டிய வேலையை பாரு” என விரட்ட, விசாலாட்சிக்கு கடுகடுவென இருந்தது.  ‘என் பிள்ளை கிட்ட நான் பேச கூடாதா? என்னமோ இவங்க தான் பெத்து வளர்த்த போல எல்லா முடிவையும் இவங்களே எடுக்குறாங்க” என அவர் மனதில் பொரிந்து தள்ளி கொண்டிருந்தார். 

ஆனால், திருநாவுக்கரசிற்கு மகன் மனம் அவன் சொல்லாமலே புரிந்தது. அவன் எதையோ உள் வைத்துக்கொண்டு பேசுகிறான் என்பது மட்டும் அவருக்கு தெரிந்தது.

“சரி ம்மா, ஏற்பாடு பண்ணுங்க. யார் யார் கிட்ட சொல்லணும்னு லிஸ்ட் கொடுத்தீங்கன்னா, நான் சொல்லிடுவேன்” என அன்னையிடம்  அவர் கூற, உடனே நாச்சியார்,

“இரு பா, நான் போய் எல்லாம் எழுதி எடுத்துட்டு வரேன் என உள்ளே சென்றார்.

இங்கு மகனை யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தார் திருநாவுக்கரசு. விசாலாட்சியோ, மாமியார் தலை மறைக்கிதா? என எட்டி எட்டி பார்த்தவர், அவர் உள்ளே சென்றதும், வெற்றியின் அருகில் வந்து அமர்ந்தவர்,

“வெற்றி, உண்மையாலுமே அந்த ராகினியை தான் கல்யாணம் பண்ணிக்க போறீயா? எனக்கு அவளை சுத்தமா பிடிக்கல டா. எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பமே இல்ல. அம்மாவுக்கு பிடிக்கலைன்னா உனக்கும் பிடிக்க கூடாது. முடியாதுன்னு சொல்லிடு டா” என அவர் கெஞ்ச, சிரிப்பு தான் வந்தது வெற்றிக்கு.

“சரி, ராகினி வேண்டாம். வேற யார் வேணும் உங்களுக்கு” என அவன் திருப்பி கேட்க, என்ன சொல்வதென்று தெரியாமல் திருத்திருத்தார் விசாலாட்சி. அவரை பார்த்து புன்னகைத்தவன், 

“ம்மா, நீங்க கவலைப்படாமல் வேலையை பாருங்க. எல்லாம் நல்லபடியா நடக்கும். அதுவும் உங்களுக்கு பிடிச்ச மாதிரியே” என்றவன் அங்கிருந்து எழுந்து செல்ல, மீண்டும் குழம்பி போய் அமர்ந்திருந்தார் விசாலாட்சி.

“ஏங்க, இவன் சொன்னத்தை கேட்டீங்களா? ஏதாச்சும் புரியுதா?  எனக்கு ஒன்னுமே புரியலைங்க” என விசாலாட்சி கணவரிடம் குறை பட்டு கொள்ள, திருநாவுகரசோ,

“நீ யோசிச்சு மனசை போட்டு குழப்பிக்காதே!! அன்னைக்கு நீ சொன்னதை தான் இன்னிக்கு அவன் சொல்லிடு போறான்” என்றவரிடம்,

“அன்னைக்கு நான் என்ன சொன்னேன்? என புரியாமல் கேட்டார் விசாலாட்சி.

“அன்னைக்கு அம்மா வந்து நம்ம கிட்ட ராகினியை வெற்றிக்கு கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டு போன போது, நீ என்ன சொன்ன? வெற்றி கண்டிப்பா இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டான். அவன் மனசு எனக்கு தெரியும் அப்படின்னு சொன்னல. அதைத்தான் அவனும் சொல்லிடு போறான்” என திருநாவுகரசு விளக்கம் கொடுக்க, மேலும் குழம்பி போனார் விசாலாட்சி.

“ஐயோ, எனக்கு மண்ட வலிக்குது.  ஒண்ணுமே புரியல. நீங்க சொல்றதுக்கும், அவன் சொன்னத்துக்கும் ஏதாச்சும் சம்மந்தம் இருக்கா?  

அவன் தான் கல்யாணத்துக்கு சரின்னு சொல்லிட்டு ஏற்பாடு பண்ண சொல்றானே! அப்புறம் நான் சொன்னது எப்படி நடக்கும்?

என அவர் கேள்வியாய் கேட்க, 

“விசாலாட்சி, நீ கொஞ்சம் நிதானமா யோசி. இல்லையா, வெள்ளிக்கிழமை வரை காத்துட்டு இரு. எல்லாம் கண் முன்னே நடக்கும் போது, உனக்கே புரியும்” என அவர் பொறுமையாக எடுத்து சொல்ல, விசாலாட்சி தலையில் கைவைத்து கொண்டார்.

அதற்குள் நாச்சியார் யார் யாரை அழைக்க வேண்டும் என்பதை எழுதி கொண்டு வர, விசாலாட்சி இப்படி அமர்ந்திருப்பதை கண்டவர்,

“ஏன் டி விசாலாட்சி, என்ன டி இப்படி உட்கார்ந்து இருக்க, வீட்டில் நல்லது நடக்க போது, என்னமோ கப்பல் கவுந்த போல இப்படி உட்கார்ந்து இருக்க” என கோபமாய் கத்த, அடித்து பிடித்து எழுந்து நின்றார் விசாலாட்சி.

“ம்மா, எதுக்கு அவளை இப்படி கத்துறீங்க? தலைவலிக்குதுன்னு சொன்னா, அதான் அப்படி இருக்கா?” என திருநாவுக்கரசு மனைவிக்கு பரிந்து பேச, 

“அதானே, இந்த வயசிலும் பொண்டாட்டியை விட்டு கொடுக்க மாட்டீயே நீ!” என நாச்சியார் முகத்தை சுழித்து கொண்டார்.

“எந்த வயசா இருந்தா என்ன ம்மா? எப்பவும் அவ தானே என் பொண்டாட்டி,”என்றவர் 

“சரி லிஸ்ட் கொடுங்க, பார்ப்போம்” என கேட்க, நாச்சியாரும் அந்த காகிதத்தை அவரிடம் கொடுத்தார். 

அவர் எழுதி கொடுத்த பெயர்களை பார்வையிட்டவர்,

“சரி ம்மா, எல்லாரையும் நான் கூப்பிட்டுறேன். நீங்களும் ஒரு வார்த்தை எல்லாரையும் கூப்பிட்டுடுங்க” என அன்னையிடம் கூறிய திருநாவுக்கரசு, மனைவியின் புறம் திரும்பி,

“நீ எதையும் யோசிச்சு மேலும் தலைவலி வர வச்சுக்காதே. போய் ரெஸ்ட் எடு” என கூறியவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

விசாலாட்சி அமைதியாக உள்ளே சென்று விட, நாச்சியார் உற்சாகமாக அனைவருக்கும் அழைத்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!