Skip to content
Post Views: 3,311
அத்தியாயம்..15
part-1
Advertisement
“விசாலாட்சி, பூஜைக்கு எல்லாம் தயாரா எடுத்து வச்சுட்டியா? குல தெய்வத்தை கும்பிட்டு தான் கிளம்பணும்” என நாச்சியார் மாடியில் ஒரு கண் வைத்து கொண்டே மருமகளை வேலை ஏவ, அவரோ,
“ஹ்ம்ம்.. ஹ்ம்ம்.. எல்லாம் எடுத்து வச்சுட்டேன்” என சுரத்தையே இல்லாமல் பதில் கூறினார்.
Advertisement
Advertisement
அவரை திரும்பி பார்த்த நாச்சியார், “அங்க கோவிலுக்கு தேவையானதை எடுத்து வச்சியா? அம்மனுக்கு பூஜை பண்ணனும், வெத்தலை பாக்கு தட்டு வைக்கணும், வரவங்களுக்கு தாம்பூலம் கொடுக்கணும்..”
என அவர் அடுக்கி கொண்டே போக, எல்லாத்துக்கும்
Advertisement
“ஹ்ம்ம்.. எடுத்து வச்சுட்டேன்” என சலிப்பாகவே பதில் கூறிக் கொண்டிருந்தார் விசாலாட்சி. தற்பொழுது அவரை நன்றாக திரும்பி பார்த்த நாச்சியார்,
“ஏன் டி? என்னாச்சு உனக்கு? நடக்க போறது உன் பையனோட விசேஷம், நீ என்னமோ, யாருக்கோ நடக்கிற போல இருக்க” என கேட்க,
“என் பையன் விசேஷம் தான். யார் இல்லைன்னு சொன்னது? அதான் நீங்க சொன்னது எல்லாம் எடுத்து வச்சுட்டேன் சொல்றேன்ல, அப்புறம் என்ன? என அவர் அலட்சியமாக பதில் கூற, நாச்சியார் கொஞ்சம் கொஞ்சமாக கடுமைக்கு மாறினார்.
“இதோ பாரு, நல்ல விஷயம் நடக்கும் போது, எதுவும் பிரச்சனை வந்துட கூடாதுனு தான் அமைதியா இருக்கேன். என்னை நீ ரொம்ப சோதிக்கிற, அப்புறம் நான் வேற மாதிரி நடந்துக்க வேண்டி வரும்”
என அவர் எச்சரிக்க, “க்கும்” என முகத்தை திருப்பி கொண்டார் விசாலாட்சி.
‘ஏதாச்சும் பிரச்சனை வந்து இந்த விசேஷம் நிற்கனும் தானே, நானே ஆர்வமா இருக்கேன். எங்க ஒன்னும் நடக்க மாட்டேங்குதே! என அவர் முணுமுணுக்க,
“என்னடி அங்க முணுமுணுக்கிற” என அதட்டினார் நாச்சியார்.
“ஒன்னுமில்ல, எல்லாம் எடுத்து வச்சுட்டேன்னா சொல்லி பார்த்துட்டு இருக்கேன்” என விசாலாட்சி பதிலளிக்க, அதற்குள், பட்டு வேட்டி சட்டையில், கையில் இருந்த காப்பை ஏற்றி விட்டவாறு கம்பீரமாக இறங்கி வந்தான் வெற்றிதிருக்குமரன்.
வெற்றியை கண்டதும் விசாலாட்சியை மறந்தவர், அவனருகில் முகம் கொள்ள புன்னகையுடன் ஓடி வந்தார் நாச்சியார். அவன் கன்னம் பற்றி,
“என் ராசா, எம்புட்டு அழகா இருக்க தெரியுமா?!! என் கண்ணே பட்டுடும் போல இருக்க” என நெட்டி முறித்தவர்,
“என் ராசா முகத்தில இப்பவே கல்யாண களை வந்துடுச்சு” என பூரிப்புடன் கூற, இதழ் விரித்து புன்னகைத்தான் வெற்றி.
“வா ராசா, சாமி கும்பிட்டுட்டு கிளம்புவோம்” என அவனை கையோடு பூஜை அறைக்கு அழைத்து வந்தவர்,
“எல்லாரும் வாங்க சாமி கும்பிடலாம்” என அனைவரையும் அழைத்தார்.
வெற்றி, திருநாவுக்கரசு, விசாலாட்சி, கதிர்வேல், மீனாட்சி என மொத்த குடும்பமும் பூஜை அறையில் நிற்க, கற்பூர ஆரத்தி காட்டினார் நாச்சியார்.
“எல்லாம் நல்லபடியா நடத்தி கொடுத்துடு மீனாட்சி தாயே ” என மனதார வேண்டி கொண்டவர்,
“வாங்க நல்ல நேரம் முடியறதுக்குள் கோவிலுக்கு கிளம்புவோம்” என அனைவரையும் அழைத்து கொண்டு, புறப்பட்டார்.
அனைவரும் காரில் ஏறி அமர, கார் அங்கிருந்து புறப்பட்டது. சிறிது நேரத்திற்கெல்லாம் நாச்சியாரோ,
“விசாலாட்சி, அமுதாவுக்கு ஒரு போன போட்டு நல்ல நேரம் முடியறதுக்குள் வீட்டிலருந்து கிளம்ப சொல்லேன்” என கூற,
“நான் சொல்ல மாட்டேன், வேணும்னா நீங்களே சொல்லிக்கோங்க” என வெடுக்கென்று பதில் கூறினார் விசாலாட்சி. அவரை ஏற இறங்க பார்த்தவர், மகன் புறம் திரும்பி,
“திரு, என்ன டா ஆச்சு உன் பொண்டாட்டிக்கு? காலையிலிருந்து அவ முகமும் சரியில்லை. அவ பேசுறதும் சரியில்லை. என்னவாம்?” என கேட்க, திருநாவுகரசோ,
“அவளுக்கு கொஞ்சம் தலைவலினு சொன்னா ம்மா. இருங்க நான் அமுதாவுக்கு போன் பண்ணி சொல்றேன்” என அவர் சமாளிக்க,
“உன் பொண்டாட்டிக்கு நல்ல விஷயம் நடக்குதுன்னா, உடனே தலைவலி வந்துருமே!” என விசாலாட்சியை பார்த்து நொடித்து கொள்ள, அவரோ,
“அதுவும் நீங்க ஏற்பாடு விசேஷம்ன்னா இரட்டை தலைவலி வந்துருது என்ன பண்றது? “ என பதிலடி கொடுக்க, அங்கோ பெறிய போர்க்களமே உண்டாகும் வாய்ப்பு ஏற்பட்டது.
கதிர்வேலும், மீனாட்சியும் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டு இருக்க, நிலைமையின் தீவிரதத்தை உணர்ந்த திருநாவுக்கரசு,
“விசாலாட்சி..” என அழுந்த குரல் கொடுக்க, அவரும் கணவரின் பேசுச்சுக்கு மதிப்பு கொடுத்து அமைதியானார்.
அதன் பின் எந்த சலசலப்பும் இல்லாமல் அனைவரும் கோவிலுக்கு வந்திறங்கினர். அங்கு ஏற்க்கனவே அவர்களது சொந்த பந்தங்கள் சிலபேர் வந்திருக்க, அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து, வரவேற்று, நலம் விசாரித்தார் நாச்சியார்.
வந்தவர்களுக்கு டீ, காபி, குளிர்பானம் கொடுக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர் திருநாவுகரசும், கதிர்வேலும்.
வெற்றி, ஓரமாக சென்று அமர்ந்து அலைபேசியை பார்த்து கொண்டிருந்தான். ஒரு கண் அலைபேசியிலும், மற்றொரு கண் வாசலிலும் தான் இருந்தது அவனுக்கு.
சிறிது நேரத்திற்கெல்லாம் இளங்கோ, அமுதவல்லி, ராகினி மூவரும் கோவிலுக்கு வர, அவர்களை கண்டதும் வாசலுக்கே ஓடிச்சென்று வரவேற்றார் நாச்சியார்.
“அமுதா, வா, வா.., என்றவர், ராகினியை பார்த்து,
“வா மா கல்யாண பொண்ணு” என பூரிப்படைந்தார்.
“வாங்க மாப்பிள்ளை, உள்ள வாங்க” என மூவரையும் அழைத்து கொண்டு உள்ளே வந்தவர், அங்கே சொந்தங்களுடன் பேசி கொண்டிருந்த திருநாவுகரசை,
“திரு.., இங்க வா பா, யார் வந்திருக்காங்கன்னு பார்” என அழைத்தார். அவரும் அவர்கள் அருகில் வந்து,
“வாங்க மாப்பிள்ளை, வா அமுதா.., வா மா ராகினி” என வரவேற்றார்.
“ராகினி நீ போய் மீனாட்சி கூட இரு” என்ற நாச்சியார், அமுதவல்லியிடம்,
“விசாலாட்சி எல்லாம் எடுத்து வச்சுட்டு இருக்கா, அவளுக்கு உதவி செய்” என அவரையும் அனுப்பி வைத்தார்.
விசாலாட்சி அருகில் வந்த அமுதவல்லி,
“எப்படி இருக்கீங்க அண்ணி” என நலம் விசாரிக்க,
“க்கும் உங்க வீட்டில் வாக்கப்பட்டு வந்து இருக்கேனே எங்க இருந்து நல்லா இருக்கிறது” என அவர் சலித்து கொள்ள, அமுதவல்லியோ
“என்ன அண்ணி என்ன இப்படி சொல்றீங்க? அப்படி என்ன ஆச்சு?” என அவர் புரியாமல் கேட்க,
“வேற என்ன சொல்ல சொல்ற? உங்க வீட்டில் நான் சொல்றதை யார் தான் கேட்கிறா? என் பேச்சுக்கு ஒரு மரியாதையும் இல்ல” என குறைபட்டு கொண்டார்.
“ஏன் அண்ணி இப்படிஎல்லாம் சொல்றீங்க? அப்படி என்ன கேட்கல” என்ற அமுதவல்லிக்கு,
“ஹ்ம்ம், இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்லைனு சொன்னேன். உன் பொண்ணு என் வீட்டுக்கு மருமகளா வரது எனக்கு பிடிக்கலைனு சொன்னேன், எங்க கேட்கிறாங்க. ஒருத்தரும் மதிக்கலையே!! ” என்றவர் அங்கிருந்து எழுந்து செல்ல, அமுதவல்லிக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது.
ஏற்கனவே அவருக்கு இந்த திருமணம் நடக்குமா? நடக்காதா? என்ற பயம் அரித்து கொண்டிருந்தது. இதில் விசாலாட்சி வேறு இப்படி பேசிவிட்டு போக, திக்கென்று இருந்தது அமுதவல்லிக்கு.
சொந்தங்களுடன் பேசி கொண்டிருந்த இளங்கோ வெற்றியை பார்க்க, அவனோ இவரை மதிக்கவே இல்லை. கடமைக்கு கூட வாங்க என்று அழைக்கவில்லை. “ஒரு வார்த்தை பேசுறானா பாரு” என அவர் மனம் வெற்றியை பார்த்து பார்த்து பொருமியது.
அவர் வெற்றியை பார்ப்பதும், அவன் அலட்சியமாக இருப்பதும் நாச்சியார் கண்ணில் பட, நிலைமையை சமாளிக்க, அவரோ,
“வாங்க மாப்பிள்ளை, இப்படி வந்து உட்கார்ந்து பேசுங்க”
என அவரை அழைத்து அமர செய்தார்.
ஓரளவிற்கு அனைவருமே வந்திருக்க, நாச்சியாரோ,
“அப்புறம் மாப்பிள்ளை எல்லாரும் வந்தாச்சு. ஆரம்பிக்கலாமா?” என இளங்கோவிடம் கேட்க,
அவரோ, “அதுக்கு தானே வந்தது. நல்ல நேரம் முடியறதுக்குள் சீக்கிரம் ஆரம்பிங்க” என்றார்.
“வெற்றி, இங்க வந்து சபைக்கு நடுவில் உட்காரு பா. ராகினியையும் உட்கார வைங்க” என நாச்சியார் கூற, அவனோ,
“இருங்க அப்பத்தா, முக்கியமானவங்க இன்னும் வரல. அவங்க வந்ததும் ஆரம்பிப்போம்” என்ற வெற்றியை யோசனையுடன் பார்த்தவர்,
“அதான் எல்லாரும் வந்தாச்சே பா, இன்னும் யாரு வரணும்? நல்ல நேரம் முடியறத்துக்குள் ஆரம்பிப்போமே பா” என நாச்சியார் அவசரப்படுத்தினார்.
“அப்பத்தா, நான் தான் முக்கியமானவங்க வரணும் சொல்றேன்ல, அவங்க வர நேரம் தான் எனக்கு நல்ல நேரம் அதுவரைக்கும் வெயிட் பண்ணுங்க. அவசரம் சொல்றவங்களை கிளம்பி போக சொல்லுங்க” என இளங்கோவை பார்த்து கொண்டே கூற, முகத்தை திருப்பி கொண்டார் இளங்கோ.
அவரோ கடுகடுவென முகத்தை வைத்து கொள்ள, நாச்சியாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. வெற்றியின் மனதை சுத்தமாக கணிக்க முடியவில்லை அவரால்.
“அவனுக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க போல அதான் காத்திட்டு இருக்கான். கொஞ்ச நேரம் காத்திருப்போம்” என நாச்சியார் சமாதானம் சொல்ல, அனைவரும் தங்களுக்குள் முணுமுணுத்து கொண்டனர்.
அமுதவல்லியை தனியாக அழைத்த இளங்கோ,
“என்ன அமுதா இது? கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறாங்களா? கல்யாணம் பேசி முடிவு பண்ணலாம் சொல்லிட்டு, எதையும் பண்ண விட மாட்டேங்கிறாங்க” என அவர் வார்த்தைகளை கடித்து துப்ப,
அமுதவல்லியோ, “கோவப்படாதீங்க, வெற்றி தான் யாரோ முக்கியமானவங்க வரணும் சொல்றானே!! வந்ததும் ஆரம்பிச்சுடுவாங்க. கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோங்க” என சமாதானப்படுத்த, அவரை முறைத்து கொண்டே அவ்விடம் விட்டு நகர்ந்து கொண்டார்.
அமுதவல்லியோ கைகளை பிசைந்தபடி நாச்சியாரின் அருகில் வந்து நின்று கொண்டார்.
அனைவரும் காத்து கொண்டிருக்க, விசாலாட்சியின் அருகில் வந்த திருநாவுக்கரசு,
“விசாலாட்சி, வெற்றி யாருக்காக காத்திருக்கிறானு உனக்கு தெரியுமா?” என கேட்க,
“எனக்கென்னங்க தெரியும். யாருக்காக காத்துட்டு இருக்கான்? என அவரிடமே திரும்பி கேட்டார் விசாலாட்சி.
“எல்லாம் வெண்பாகாக தான். கனகா இன்னும் வரலையே! அவங்க வரவை தான் எதிர்பார்த்துட்டு இருக்கான்,” என்றவரை யோசனையாய் பார்த்தார் விசாலாட்சி.
“ஏங்க, அவங்க வரணும் ன்றது முக்கியம் தான். இருந்தாலும், அவங்களுக்காக எல்லாரையும் காக்க வைக்கிறது சரியா படல. இவன் ஏன்ங்க இப்படி பண்றான்?” என விசாலாட்சி கேட்க,
“ராகினிக்கும் வெற்றிக்கும் கல்யாணம் முடிவு ஆகும்னு எனக்கு தோணல. இங்க வேற என்னமோ நடக்க போற போல இருக்கு” என அவர் பூடகமாக பேச, திகைத்து போய் போய் பார்த்தார் விசாலாட்சி.
“என்னங்க, என்னென்னமோ சொல்றீங்க?” என அவர் அதிர,
“நீ கொஞ்சம் பொறுமையா இரு பார்ப்போம்” என அவரை அமைதி படுத்தினார் திருநாவுக்கரசு.
error: Content is protected !!