Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உறவாடும் கனவே தொடருதே

PART- 2

PART-2

இங்கு வெண்பாவின் வீட்டில், அனைவரும் கோவிலுக்கு  செல்ல தயாராகி கொண்டிருந்தனர்.

வெண்பாவும் அவன் கொடுத்த புடவையை தான் கட்டி இருந்தாள். வேண்டாம் என மறுப்பு சொல்ல தோன்றவில்லை அவளுக்கு. அவன் தான் தனக்கு இல்லை என்றாகி விட்டது. அவன் ஆசையாய் எடுத்து கொடுத்த புடவையாவது தன்னோடு இருக்கட்டும் என நினைத்து விட்டால் போலும்.



Advertisement

மனதை எத்தனை தூரம் அடக்கி வைத்தாலும், அதுவோ, நீரில் அமிழ்த்தும் பந்து மீண்டும் மேலெழுவது போல், மீண்டும் மீண்டும் அவன் மீதான நினைவை நியாபகப்படுத்தியே, அவளை வாட்டியது.

அதன் வெளிப்பாடு கண்கள் அடிக்கடி கலங்கி நிற்க, அதனை மறைக்க பெரும் பாடு தான் பட்டாள் வெண்பா.

இமை தட்டி கண்ணீரை உள்ளிழுக்கும் வித்தையை கற்றறிந்தவள், அதில் தேர்ச்சியும் பெற்றாள். எல்லாம் கைமீறி போன பின்பு அவளால் என்ன செய்ய முடியும்?

Advertisement

கோவிலுக்கு கிளம்பிய கனகவல்லி, வீட்டை விட்டு வெளியே செல்லாது, வீட்டுக்குள்ளே அமர்ந்திருக்க, சண்முகமோ,

Advertisement

“என்ன கனகா? உட்கார்ந்திட்டா, கோவிலுக்கு போக வேண்டாமா? என கேட்க,

“போகணும் தான் ங்க. சீக்கிரம் போய் என்ன பண்ண போறோம்? தேவையில்லாத பேச்சு தான் வாங்கணும்.

முடியும் போது போனா, வெற்றிக்கு நடக்கிற நல்லதை பார்த்துட்டு உடனே கிளம்பிடலாம். அதான் உட்கார்ந்துட்டேன்” என விளக்கம் கொடுக்க, அதுவே சரியென பட்டது சண்முகத்திற்கு.

Advertisement

தயாராகி வெளிவந்த வெண்பாவை திரும்பி பார்த்த கனகவல்லியும், சண்முகமும் அவளழகில் ஒரு நொடி ஸ்ம்பித்து போயினர்.

“என்ன ம்மா? இன்னும் கிளம்பலையா?” என கேட்டப்படி அவள் அவரருகில் வர, அவளின் கைப்பிடித்து தன்னருகே அமர்த்தி கொண்டவருக்கு கண்கள் பனிந்தன.

“என் கண்ணே பட்டுடும் போல இருக்க வெண்பா. நீ தான் கல்யாண பொண்ணு போல அத்தனை அம்சமாக இருக்க” என கனகவல்லி மகளை சீராட்ட, தலை குனிந்து கொண்டாள் வெண்பா.

“ஹ்ம்ம், வெற்றி நான் தூக்கி வளர்த்த பையன் தான். சின்ன வயசிலே, அவனை உனக்குp கல்யாணம் பண்ணி வைக்கணும்னு தான் ஆசைபட்டேன். ஆனால், நாம நினைக்கிறது எல்லாம் நடந்துடுமா? கடவுள் முடிவு பண்ணனுமே!!” என அவர் குமுறலை கொட்ட, சண்முகமோ,

“கனகா, இப்போ இந்த பேச்செல்லாம் எதுக்கு? யாருக்கு யார்னு கடவுள் எழுதி வச்சு இருக்காரே அதான் நடக்கும். சரி கிளம்புவோமா” என அவரை அழைக்க, கனகவல்லியும் ஒரு பெரு மூச்சுடன் எழுந்து கொண்டார்.

அவர் பேசி முடிக்கும் வரை வெண்பாவின் தலை நிமிரவே இல்லை. அவள் கண்கள் தான் கலங்கி கொண்டே இருக்கிறதே! அதனை மறைக்க அவளுக்கு வேற வழி தெரியவில்லை.

கனகவல்லி எழுந்து நடக்க ஆரம்பித்ததும், கண்களை துடைத்து கொண்டு, உதட்டில் புன்னகையை வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்து கொண்டு அவர் பின்னாலே சென்றாள் வெண்பா.

மூவரும் கோவிலை வந்தடைய, அவர்களை வாயிலேயே கண்ட, வெற்றி, புன்னையுடன் வேகமாக வாயிலுக்கு ஓடினான்.

“வாங்க அத்தே, வாங்க மாமா, வா தமிழ். இதான் வர நேரமா? இவ்வளவு லேட்டாவா வரது” என அவன் கேட்க, 

“அது.. வந்து.. அது வந்து மாமா.., ஏன் லேட்டுன்னா” என அவள் தயங்கி தயங்கி என்ன சொல்வதென்று தெரியாமல் திணற, கனகவல்லியோ,

“கொஞ்சம் வேலை இருந்துச்சு வெற்றி. அதான் வர லேட்டாகிடுச்சு. விசேஷம் முடிஞ்சுடுச்சா?” என பேச்சை மாற்றினார். 

“நீங்க வராமல் ஆரம்பிக்க விட்டுடுவேணா!! எல்லாரும் உங்களுக்காக தான் காத்துட்டு இருக்காங்க வாங்க” என அவர்களை அழைத்து கொண்டு உள்ளே செல்ல,

“என்ன வெற்றி? எதுக்கு எங்களுக்காக எல்லாரையும் காத்திருக்க வைக்கிற? நீ ஆரம்பிக்க வேண்டியது தானே!! நாங்க இடையில வந்து கலந்துட்டு இருப்போம்ல” என கனகவல்லி சங்கடப்பட, 

“இருக்கட்டும் அத்தே! எனக்கு நீங்க முன்ன நின்னு நடக்கணும்னு ஆசை அதான். உள்ள வாங்க. உட்காருங்க” என அவர்களை வரவேற்று அமர செய்தான் வெற்றி.

அனைவரும் அவர்களையே பார்க்க, அவர்களுக்கோ ஒருமாதிரி இருந்தது. வெற்றி இப்படி செய்வான் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

வெண்பாவை கவனித்த வெற்றி,

“என்ன தமிழ் கண்ணெல்லாம் சிவந்து இருக்கு, அழுதியா?” என சரியாய் கேட்க, திக்கென்று இருந்தது அவளுக்கு.

“இ. ல்..ல மாமா, அது.. வரும் போது தூசு விழுந்துச்சு. அதான் அப்படி தெரியுது” என எதையோ கூறி சமாளிக்க, 

“உண்மையாவா?” என சந்தேகப்பட்டு கேட்டான் வெற்றி. அவளை பற்றி அவனுக்கு தெரியாததா?!!

“ஆமா, உண்மையா தான்” என சமாளித்தாள் வெண்பா.

அவர்களிடம் பேசுவதை கண்ட நாச்சியாருக்கும், இளங்கோவிற்கும் புகைந்தது. அதுவும் இத்தனை நேரம் அவன் காத்திருந்த முக்கியமானவர்கள் இவர்கள் என்றதும், கடுகடுவென இருந்தது இருவருக்கும்.

வெற்றி அவர்களை உபசரிப்பதை கண்ட இளங்கோவிற்கு இன்னும் கோபம் மூண்டது. தன்னை வாங்க என்று கூற கூட வாய் திறக்காதவன், இவர்களை இப்படி விழுந்து விழுந்து கவனிப்பது எரிச்சலாக இருந்தது அவருக்கு.

எல்லாம் இந்த திருமணத்திற்க்காக தான் என பொறுத்து கொண்டு இருந்தார்.

கனகவல்லி குடும்பத்துடன் வந்ததும் மலர்ந்து போய் வரவேற்ற மகனை கண்ட விசாலாட்சி திரும்பி கணவனை பார்க்க, அவரும் அந்நேரம் மனைவியை தான் பார்த்தார்.

‘நான் சொன்னேன்ல’ என்பது போல அவர் பார்வை இருக்க, விசாலாட்சி நடப்பதை வேடிக்கை பார்க்க தயாரானார்.

“வெற்றி, இப்பவாவது வந்து சபையில் உட்காருரியா? இல்ல இன்னும் யாராச்சும் வரனுமா? என நாச்சியார் கேட்க, அப்பட்டமாக அவரின் எரிச்சல் அதில் தெரிந்தது.

“அவ்வளவு தான் அப்பத்தா. எனக்கு வேண்டப்பட்டங்க வந்தாச்சு. இனி ஆரம்பிக்கலாம்” என சலிக்காமல் அவருக்கு பதிலடி கொடுத்தான்.

“சரி இங்க வந்து உட்காரு பா” என அவனை அழைக்க, அவனும் சபை நடுவில் உள்ள நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டான்.

அவனுக்கு பக்கத்தில் கீழே ராகினியை அமர சொல்ல, இரு குடும்பமும் நேர் எதிரே அமர்ந்து கொண்டனர். வந்திருந்த சொந்தங்கள் அவர்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருக்க, கடைசியில் கனகவல்லி கோவில் தூணில் சாய்ந்தபடி கால் நீட்டி அமர்ந்து கொண்டார். அவர் பக்கத்தில் சண்முகமும் அமர்ந்து கொள்ள, வெண்பா எல்லாவற்றையும் பார்த்தப்படி நின்றிருந்தாள்.

இரு குடும்பத்தின் மூத்தவராக நாச்சியார், சபை நடுவே அமர்ந்து,

“ஏற்கனவே பேசினது தான். வெற்றிக்கும், என் மூத்த மக பொண்ணு ராகினிக்கும் கல்யாணம் பண்ணலாம்னு. ரெண்டு குடும்பமும் பேசி முடிவு பண்ணோம்.

இப்போ, உங்க எல்லார் முன்னாடியும் ஊர்ஜிதப்படுத்த தான் உங்க எல்லாரையும் கூப்பிட்டது” என ஆரம்பித்தார்.

“என்ன மாப்பிள்ளை உங்களுக்கு இதில் சம்மதமா?,” என மருமகனை கேட்க, இளங்கோவும்

“எனக்கு முழுசம்மதம் அத்தே” என்றார்.

“என்ன திரு உனக்கு இதில் சம்மதமா?” என மகனையும் கேட்க,

அவரோ, “என்னோட முடிவை விட, வெற்றியோட முடிவு தான் இதில் முக்கியம் ம்மா. வாழ போறது அவன் தான். அதனால் அவன் கிட்ட கேளுங்க. கூடவே ராகினி கிட்டயும் கேளுங்க” என கூற, அனைவரும் வெற்றியை பார்த்தனர்.

“ராகினியை கேட்க வேண்டிய அவசியம் இல்ல. நான் யாரை சொல்றேனோ, அவங்களை கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணிப்பா. நான் கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டா. என் பொண்ணை நான் அப்படி தான் வளர்த்து இருக்கேன். என்ன ராகினி நான் சொல்றது உண்மை தானே!!” என இளங்கோ சிலாகித்து பேச, அதற்கேற்றார் போல் ராகினியும் ஆமாம் என தலையாட்ட, கர்வமாய் மீசையை நீவி கொண்டார் இளங்கோ.

அவரை அலட்சியமாக பார்த்தப்படி அமர்ந்திருந்தான் வெற்றி.

“நான் உங்களபோல முடிவு பண்ண முடியாது மாப்பிள்ளை. நான் சொல்றதையும் வெற்றி கேட்பான் தான். அதுக்காக எல்லாத்துக்கும் என் பேச்சை தான் கேட்கணும்னு நான் சொல்ல மாட்டேன். அவனோட வாழ்க்கைக்கு அவன் தான் முடிவெடுக்கணும். கல்யாணம்ன்றது அவன் வாழ்க்கையோட முக்கியமான அங்கம். காலம் முழுக்க அவன் தான் வாழ போறான். அதனால் அவனோட முடிவு தான் முக்கியம்னு நான் நினைக்கிறேன்” என அவர் தெளிவாக பேச, இளங்கோ எதுவும் பேசவில்லை.

“சரி என்ன இப்போ? வெற்றி சொல்லணும் அவ்வளவு தானே! அவன் கிட்ட நேரடியாவே கேட்டுடுவோம்”

என கூறிய நாச்சியார், வெற்றியின் புறம் திரும்பி,

“நீ சொல்லு ராசா, ராகினியை கல்யாணம் பண்ண உனக்கு சம்மதமா?”  என கேட்டார்.

வெற்றியோ சாவகாசமாக ஒவ்வொருவரையும் பார்த்தவன், தூரத்தில் கலங்கிய விழிகளுடன் நின்றிருந்த வெண்பாவையும் பார்த்தான்.

அவளோ பக்கவாட்டாக திரும்பி திரும்பி, கண்களை துடைத்து கொண்டு நடப்பதை பார்த்து கொண்டிருந்தாள்.

அவளையே சில நிமிடம் பார்த்தவன், அவள் அவனை பார்த்ததும், கண்களாலே ‘இங்க வா’ என அழைத்தான்.

அவளோ மிரட்சியாக அவனை பார்க்க, மீண்டும் கண்களாலையே அழைத்தான் வெற்றி. அவளோ சுற்றும் முற்றும் பார்த்தப்படி தலையை குனிந்து கொள்ள, வெற்றியோ

‘இவளை, கூப்பிட்டா வராளா பாரு’ என மனதிற்குள் புலம்பியவன்,

“தமிழ், இங்க வா” என சத்தமாகவே அழைக்க, அதிர்ந்து விட்டாள் வெண்பா. சுற்றும் முற்றும் பார்த்தவளுக்கு பயமாக இருந்தது. எதற்கு தன்னை அழைக்க வேண்டும் என அவளுக்கு படப்படப்பாக வந்தது.  

“வா னு  கூப்பிறேன்ல, இங்க வா” என அழுத்தி கூப்பிட, அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

எதற்கு வெற்றி வெண்பாவை அழைக்கிறான் என அனைவரும் பார்க்க, வெண்பாவோ தயங்கியே நின்றிருந்தாள்.

“இங்க வா தமிழ்” என மீண்டும் கூப்பிட, அவளோ மெதுவாக அவனருகில் நடந்து வந்தாள்.

“எதுக்கு அவளை இப்போ கூப்பிற வெற்றி” என நாச்சியார் கேட்க, 

“காரணம் இருக்கு அப்பத்தா. வரட்டும் சொல்றேன்” என அவருக்கு அசராமல் பதில் கூறினான்.

வெண்பா அவனருகில் வந்ததும், இருக்கையில் இருந்து எழுந்து கொண்டவன், பார்த்து புன்னகைத்து, சட்டென்றுஅவளை தோளோடு அணைத்து கொண்டு நின்றான். அவளோ மிரட்சியாக அவனையும் அவன் கைகளையும்  பார்க்க, வெற்றியோ, சபை நடுவே கம்பீரமாக

“எனக்கு தமிழை தான் பிடிச்சுருக்கு. அவளை கல்யாணம் பண்ணிக்க தான் ஆசைப்படுறேன்” என்றதும் அவனை அதிர்ந்து பார்த்தாள் வெண்பா.

அவள் மட்டுமல்ல, அனைவருக்குமே உச்சகட்ட அதிர்ச்சி தான். அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, நாச்சியாருக்கு அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை. இளங்கோ கொதித்தெழுந்து விட்டார்.

“என்ன கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்துறீங்களா? என் பொண்ணை நிச்சயம் பண்றதா சொல்லிட்டு, இப்போ இவளை கைகாட்டி பிடிச்சு இருக்குன்னு சொல்றீங்க. என்னை என்ன கேன பய நினைச்சீங்களா.

காட்டுறேன், நான் யாருன்னு உங்க எல்லாருக்கும் காட்டுறேன். இந்த கல்யாணம் எப்படி நடக்குதுன்னு நானும் பார்க்கிறேன்” என அவர் கோபப்பட, அவரை எப்படி சமாதனப்படுத்துவது என்றே யாருக்கும் தெரியவில்லை.

இன்னமும் யாரும் வெற்றி சொன்னதில் உண்டான அதிர்ச்சியில் இருந்து வெளிவராமல் இருக்க, அதற்குள் அடுத்த குண்டை இறக்கினான் அவன்.

“மாமா, என் முடிவை எல்லார் முன்னாடியும் சொல்றேன் தான் சொன்னேன். அதுக்கு தான் ஏற்பாடு பண்ணாங்க. எனக்கு யாரை பிடிச்சு இருக்குன்னு சொல்லனும்ல, அதான் சொன்னேன்.

எனக்கு தமிழை தான் பிடிச்சுருக்கு, அவ தான் என் பொண்டாட்டி. என அவளை பார்த்து கொண்டே கூற கண்கள் கலங்க இமைக்க மறந்து அவனையே பார்த்தப்படி இருந்தாள் வெண்பா.நடப்பது கனவா? நனவா? ஒன்றும் புரியாது பேயறைந்தது போல் நின்றிருந்தாள். 

“அப்புறம் என்னமோ சொன்னீங்களே! எங்க கல்யாணம் எப்படி நடக்குதுன்னு பார்க்கிறேனு. இப்படி தான் நடக்க போது பார்த்துட்டே போங்க”

என்றவன் மற்றவர்கள் என்னவென்று யோசிக்க கூட அவகாசம் கொடுக்காது, தன் சட்டை பையில் இருந்து கொண்டு வந்திருந்த தாலியை எடுத்து, அவளை நேருக்கு நேர் பார்த்து, காதலுடன், மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தங்க தாலியை அவள் கழுத்தில் சூட்டி, மூன்று முடிச்சிட்டு அனைவர் முன், தன்னவளாக்கி கொண்டான் திரு. தமிழ் வெற்றித்திருக்குமரன்.

நாளை விடியல் எப்போ எப்போ

என கேட்டு கொண்டே இருக்கிறேன்!

ஏனென்றால்

இன்றைய நாளை விட,

நாளை கொஞ்சம் அதிகம் காதல்

செய்ய வேண்டும் என்பதற்கே!!

கனவுகள் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!