Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 16.1

காலையிலிருந்து சிடு சிடுத்த முகத்துடன் வலம் வந்தவனை துளியும் அங்கிருந்தவர்களுக்கு புடிக்க வில்லை… கண்டிப்பை மட்டுமே தனது தொழிலாளர்களுக்கு தருபவன் இன்று அனைத்தையும் மீறி கோவத்தை, எரிச்சலை தத்தெடுத்திருந்தான்… காலையில் பேசிய வார்த்தைகள் எல்லை மீறி கடந்ததை அறிந்தே பேசினாலும் மனதில் பலமாக அடி வாங்கி இருந்தான் அதனை வெளிப்படுத்த இயலாமல் தனது மொத்த இயலாமையையும் கோவமாய் வெளிப்படுத்தினான்…

ஆறாவது முறையாக ஒரே பைலை எடுத்து வந்த யாழினியை பார்த்து முகம் சுளித்தவன், “அத இங்க வச்சிட்டு போங்க”

“இல்ல சார் இத இப்ப ஆர் & டி டிபார்ட்மெண்ட்க்கு மெயில் பண்ணனும்”

“சரி வாங்க” என்றான் அடக்கிய கோபத்துடன்…



Advertisement

அந்த பைலை கையில் வாங்கியவன் அதை திறக்கும் முன் ஜெயனை அழைத்தான்… இறுகிய முகத்துடன் வந்தவனிடம், “நீரஜ் ஓட ரிசார்ட் பத்தி விசாரிக்க சொன்னேனே என்ன ஆச்சு?”

“சார் ரெண்டு நாள் முன்னாடி தான் சார் நாம்ம கார்ட்ஸ் மூணு பேர அனுப்பி வச்சேன் இன்னும் சந்தேக படுற மாதிரி எதுவும் நடக்கல அங்க”

“ம்ம்ம் இன்னும் ஒரு மாசம் கழிச்சு அனுப்பி வச்சிருக்கலாம்ல ஜெயன்?”

Advertisement

கோவத்தை அடக்கி பொறுமையாய் கேட்டான் ஆனால் அதிலிருந்த அர்த்தத்தை அறிந்த ஜெயனுக்கு உடல் நடுங்கியது…

Advertisement

“சார்ர்ர்…” என்று எழுந்தவனை இடை மறித்து, “பத்து பில்லியன் யூ.எஸ் டாலர் ப்ராஜெக்ட் அது கொஞ்சமாவது அத நியாபகம் வச்சு செய்யணும். இன்னும் இருபத்தி நாலு மணி நேரத்துல எனக்கு நியூஸ் வரலைனா உங்க இடத்துல வேற ஒருத்தர வைக்க வேண்டி வரும்”

“அந்த பைலை அவனுக்கு அனுப்பாம இருந்தா இன்னேரம் இந்த 24 மணி நேரமே தேவை இல்ல” மனதில் நினைத்ததை சத்தமாய் கூறிவிட்டாள் யாழினி…

அடுத்த நிமிடம் உதய்யின் கையில் இருந்த கோப்பு ஜெயனுக்கும் யாழினிக்கும் இடையில் பறந்து சென்று சுவற்றில் மோதி தரையில் சிதறியது… திடுக்கிட்டு வாயில் கை வைத்து இரண்டடி பின்னால் அனிச்சை செயலாய் சென்றது அவள் கால்கள்…

Advertisement

“இங்க என்ன வேலை பாக்கணும், என்ன ஆர்டர் போடணும்னு எனக்கு தெரியும். நீ எனக்கு ஐடியா குடுக்குறது, அக்கறை காட்டுறதுன்னு இப்டி ஒரு வேலையையும் கிழிக்க தேவ இல்ல… குடுத்த ஒரு சின்ன வேலைய ஒழுங்கா பாக்க கூட தெரியாத உன்ன இத்தனை நாள் பொறுமையா வச்சிட்டு இருக்கேன் அத மனசுல வச்சிக்கிட்டு போய் ஒழுங்கா வேலைய மட்டும் பாக்கணும்” அமைதியாய் நிறுத்தி கூறினாலும் அவன் குரலில் இருந்த ஆழமும், கோபமும் ஜெயனையே உலுக்கியது…

அவன் வசம் மெல்ல மெல்ல மனதை கொடுத்த யாழினிக்கு தான் அவனது வார்த்தைகள் வேதனையை கொடுத்தது… அவள் நிலை இந்த வேலை அவளுக்கு அவசியம். இல்லையெனில் அந்த இடத்தை விட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். ஆனால் வீட்டின் சூழ்நிலையை எண்ணி அமைதியுடன் அவன் வீசி எறிந்த கோப்புகளை எடுக்க ஆரமித்தவளது மூளை அவனது வார்த்தைகளை மீண்டும் மீண்டும் அசைபோட ரணமாய் வலித்த இதயத்தையும் அவன் வார்த்தைகள் தூண்டி விட்ட உணர்ச்சிகளையும் கட்டுப்படுத்த சிரமப்பட்டாள்…

ஒன்று மட்டும் அவளுக்கு தெள்ள தெளிவாக புரிந்தது அவன் என்றும் அவள் நிலைக்கு இறங்க மாட்டான் தொழிலிலும் சரி, காதலிலும் சரி. தேவை இல்லாமல் அவனது உதவிகளை எண்ணி ஆசையை வளர்க்கும் அவள் மனதை பாடுபட்டு அடக்கி அவனிடம் அந்த கோப்பை வைத்தாள் உணர்ச்சிகளை அடக்கிய முகத்துடன்…

“சாரி சார்” அவளது எந்த வருத்தமும் அவன் காதுகளில் விழவில்லை…

மாறாக, “வச்சிட்டு கெளம்பு” என்று எரிந்து விழுந்தவன் அவளது கண்ணீரை காண வாய்ப்பு இல்லாமல் போனது. பாவம் அவளுக்கும் தெரியவில்லை, நண்பனை வேதனைக்குள்ளாக்கி தானும் வேதனைப்பட்டு, தன் மேல் இருந்த கோவத்தை தான் எப்படி வெளியேற்றுவது என்று தெரியாமல் அவளிடம் விட்டான் என்று.

“என்ன ஜெயன் எப்ப எனக்கு இன்பர்மேஷன் வரும்?” கதவை நோக்கி செல்லும் யாழினி மேல் பதித்திருந்த பார்வையை திரும்பியவன் ஒரு அன்னிய பார்வையை உதய் மீது வீசி, “இன்னைக்கு சொல்றேன் சார்”

“இன்னும் ஒரு நாள் தான் உங்களுக்கு டைம். அதுக்குள்ள எனக்கு பதில் வரணும்… புரியுதா?” வெறும் தலையை மட்டும் அசைத்தவன் அந்த இடத்தை விட்டு அகன்றான் உதய்யை சற்றும் ஏறிட்டு பார்க்காமல்…

வெளியில் வந்தவன் நேராக சென்றது யாழினியை பார்க்க தான்… வழக்கத்திற்கு மாறாக அமைதியாய் கையில் இருந்த கோப்பில் உன்னிப்பாய் மூழ்கி இருந்தவளது கண்கள் மட்டும் நீரை வெளியிட்டுக்கொண்டே இருந்தது… “யாழினி”

நிமிராமல், “சொல்லுங்க அண்ணா” என்றாள்…

“சார் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்காரு யாழினி. பொதுவா இப்புடி பேசவே மாட்டாரு எவ்ளோ கோவம் இருந்தாலும். இன்னைக்கு சூழ்நிலை அப்டி… பர்சனலா எடுத்துக்காத”

“ஐயோ அண்ணா… நான் எதுக்கு இத பெருசா எடுத்துக்க போறேன்… அவரு எனக்கு முதலாளி இதுல பர்சனல்லா எடுத்துக்க என்ன இருக்குது?” தனது வலியை காட்ட விரும்பாமல் புன்னகை முகத்துடன் கூற அவளை ஏமாற்றும் விதமாக இரு துளி நீர் அவளது விழிகளிலிருந்து வலிந்து ஓடியது…

மேலும் அவளை காயப்படுத்த விரும்பாமல் அந்த இடத்தை விட்டு ஜெயன் அகன்றான்… அவன் சென்றது தான் தாமதம் முகத்தை மூடி அழுதுவிட்டாள் யாழினி. காரணம் அறிந்தும் உணர விருப்பம் இல்லை…

அங்கு உதய்யின் நிலையோ சிக்கலாகி கொண்டே சென்றது. நிலையாக ஒரு வேலையில் மனமும் மூளையும் செல்ல மறுத்தது… அலைபாயும் எண்ணங்களை ஒரு நிலை படுத்த அறியாமல் மீண்டும் ஜெயனை அழைத்தான், “எஸ் சார்”

“ஆதி இப்ப எங்க இருக்கான்?”

மனதில் இருந்த கேள்வியை கேட்காமல், “பீச்ல இருக்காரு சார் மூனு மணி நேரமா”

“தனியாவா இருக்கான்?”

“இல்ல சார் அவர் பிரண்ட்ஸ் கூட இருக்காங்க”

“ஹாஸ்பிடல் எதுவும் போனானா?”

“போனாரு சார்”

“அவன் போட்டோ காமிங்க”

ஜெயனின் ஒரு அழைப்பில் அடுத்த நிமிடம் ஆதியின் புகைப்படம் அவன் கையில் இருந்தது அதனை பார்த்த உதய் ஆழ்ந்து அவனை ஆராய்ந்தான்…

அந்த புகைப்படத்தில் தமிழும் கௌதமும் மணலில் அமர்ந்து ஆதியை பார்த்திருந்தனர்… ஆதி கடலை வெறித்து நின்றான் அவனது அமைதியை காண்பதே அரிது… அவ்வாறு அவன் அமைதியாய் இருந்தால் மனதில் என்ன என்ன எண்ணங்கள் ஓடும் என்று உதய் அறிவான்… எந்நிலையிலும் ஆதரவாய் இருப்பதாய் சத்தியம் செய்து இன்று அவன் நிலைக்கு தானே காரணம் ஆனதை எண்ணி மனதில் உடைய ஆரமித்தான் உதய்… இன்னும் சிறிது நேரம் இதை பார்த்தல் கண்களில் உருவாகி கொண்டிருக்கும் கண்ணீரை ஜெயன் காண நேரும் என்று அவனிடம் அந்த டேப்பை கொடுத்தனுப்பினான்…

“சார் உங்க தம்பி விஷ்ணு இன்னைக்கு ஆபீஸ் வரல”

“ஏன்?”

“வீட்டுல நளினி மேடம் எல்லாரையும் திட்டுனாங்கன்னு கேள்வி பட்டேன் டீட்டைல் கேக்கல சார்”

தன்னுடைய கைபேசியை எடுத்து ஹரிக்கு அழைத்தான், “சொன்ன ஒர்க்க முடிச்சிட்டீங்களா ஹரி?”

அந்த பக்கம் கண்களை இறுக மூடி திறந்த ஹரி, “அண்ணா இப்புடி பேசாதீங்க ண்ணா கஷ்டமா இருக்கு”

“ஆபீஸ் விசயமா பேசுறப்ப பர்ஸ்னல் விசியம் அவசியம் இல்ல”

நீண்ட பெருமூச்சு ஒன்றை விட்டு, “இன்னும் கம்ப்ளீட் பண்ணல ண்ணா இன்னும் எலிவேஷன் ஒர்க் இருக்கு. விஷ்ணு ஆபீஸ் வரல இன்னைக்கு அதுனால இன்னும் கொஞ்ச வேலை மட்டும் பாக்கி இருக்கு ண்ணா… அவன் வந்ததும் வேகமா பண்ணிடுவோம்… ஆபீஸ்க்கு வந்து நாங்களே குடுத்தறோம் ண்ணா” வேண்டும் என்றே வர்த்திக்கு வார்த்தை அண்ணனை சேர்த்தான் ஹரி…

“ஏன் வரல?”

“அவனுக்கு கொஞ்சம் பீவர்” பொய் என்று தெரிந்தும் உதய் அவனுக்கு பதில் கொடுக்காமல் அணைப்பை துண்டித்து, “என்னமோ சரி இல்ல இவன் பேச்சுல விஷ்ணுவ மானிட்டர் பண்ணுங்க”

“சரி சார்… அப்றம் சக்தி ஜெர்மனில ஒரு கிளைன்ட் கிட்ட ஈஸ்வரன் சார் பெரிய அமௌன்ட்ல டீல் பேசி கம்பெனில பைல் பன்னுறப்ப அதுல 75 % தா காமிச்சிருக்காரு… அது டீடெயில்ஸ் கொஞ்சம் கலெக்ட் பண்ணிட்டான் இன்னும் மெயின் எவிடென்ஸ் கலெக்ட் பண்றது தா டைம் ஆகுது”

“கிடைச்ச வரைக்கும் வாங்கி வச்சுக்கோங்க பிண் வேக்னர்-னு (Finn Wagner) ஒருத்தன் பேஸ்கேம்ப் கஃபேல (FaceCamp Cafe) ஒர்க் பண்ணுவான் அவன் மாமாகிட்ட டூ யெர்ஸ் முன்னாடி ஒர்க் பண்ணுனான் பட் ஏதோ ப்ராப்லம் வந்து மாமா அவனை ஒர்க்ல இருந்து தூக்கிட்டாரு. அவன்கிட்ட போய் பேச வேண்டிய விதமா பேச சொல்லுங்க இன்னும் டீடெயில்ஸ் நமக்கு கெடக்கும்”

“ஓகே சார்… மிஸ்டர் வில்லியம் பிரவுன் இந்த வீக் எண்டுல இந்தியா வர்றாரு”

“எதுக்கு?”

“ஒரு பார்ட்டி அன்டன் பண்ண வர்றாரு சார்”

ஆஸ்திரேலியாவில் அடுத்து கிடைக்க கூடிய மிக பெரிய ஒரு ப்ரொஜெக்ட்டின் முக்கிய பங்குதாரர் தான் இந்த வில்லியம் பிரவுன்… கிட்ட தட்ட கையில் வந்த நிலை தான். ஆனால் இதுவரை உதய் நேரில் சென்று அவருடன் உரையாடாமல் இருந்ததே சிறு பயம்… பல லச்சம் கோடி கையில் சேரும் ப்ராஜெக்ட் அது…

“அப்பா சிக்ஸ்டீத் (60th)  பர்த்டே வருது இத சாக்கா வச்சு அவர இன்வைட் பண்ணிடலாம் அப்புடியே நீரஜ்கும் ஒரு இன்விடேஷன் அனுப்பிருங்க … யார் யாரை இன்வைட் பண்ணனும்-னு அப்பா கிட்ட லிஸ்ட் வாங்கிக்கோங்க என் சைடு லிஸ்ட் நா நாளைக்கு தர்றேன். யாழினிய உள்ள வர சொல்லுங்க”

ஜெயன் வெளியில் சென்ற சிறிது நேரத்தில் யாழினி வந்து அமைதியாக ஒரு பென், குறிப்பு அட்டையுடன் நின்றாள் உதய்க்கு எதிரில்… அவள் வந்தது கூட தெரியாமல் வேலையில் மும்முரமாக இருந்தவன் அவளது வரவை கவனிக்க மறந்தான். அவள் எப்பொழுதும் வந்தால் தனது வரவை தெரிவிக்க சிறிதும் அர்த்தமில்லாத கேள்வியை அவனை நோக்கி வீசுவாள். ஆனால் இன்று அமைதியாய் இருக்க, அவள் இன்னும் வரவில்லை என்றே நினைத்தான்…

நேரம் கடக்க மீண்டும் அவளை அழைக்கும் பொருட்டு விழியை உயர்த்தியவன் ஆச்சிரியதுடன் யாழினியை பார்த்தான்… சிறிதும் அவளுக்கு பொருத்தமில்லாத வலியை மறைக்கும் கண் இமைகள், சிவந்த நாசி, நிறுத்தாமல் அவனின் நினைவலைகளை ஆட்டிவைக்கும் அழகிய அதரங்களில் இன்று அநியாயத்திற்கு அமைதி… நொடி பொழுதில் அவளை அளந்தவன் காரணம் அறிய நினைத்த பொழுது தான் தன்னுடைய தவறு பலமாய் மீண்டும் வலியை தந்தது…

“ஒர்க் முடிச்சிட்டீங்களா யாழினி?” உதய்யின் கேள்விக்கு வெறும் தலை அசைப்பை மட்டுமே தந்து அவனிடம் அந்த பைலை தந்தாள்…

கடமைக்காக அதை பார்த்தவன் சரியாக இருப்பதாய் கூறி அவளிடம் வேறு பல வேலைகளை மாறி மாறி வழங்கினான். அதுவும் அவனுடைய அறையிலே அமர்ந்து செய்யுமாறு… எந்த வேலையிலும் அவனிடம் தேவைக்கு அதிகமாக ஒரு வார்த்தை கூட அவள் பேசவில்லை…

தனது பேச்சின் வீரியத்தில் எத்தனை இதயங்களை இன்று காயப்படுத்தி விட்டோம் என்று முழுமையாக உணர்ந்தாலும் அதை இனி திரும்ப பெற இயலாது என அறிந்து முதலில் தன்னுடைய காதலை சரி செய்ய எண்ணினான்.

“கிளம்புங்க யாழினி சைட்ட விசிட் பண்ணனும்”

‘மணி இப்பயே ஆறு ஆச்சு இதுக்கு மேல சைட் பாத்து வீட்டுக்கு போக 8க்கு மேல ஆகிடுமே’ என்று நொந்துகொண்டவள் அவனிடம் பேச முடியாமல் ஒருவாறு தலை அசைத்து அந்த ப்ரொஜெக்ட்டிற்கு தேவையான கோப்புகளை கையில் எடுத்து கிளம்பினாள்.

அவளது அசைவுகள் ஒவ்வொன்றையும் கண் இமைக்காது பார்த்தவன், “உங்க பேக்கயும் எடுத்துட்டு வாங்க யாழினி சைட்ல இருந்து வீட்டுல ட்ராப் பண்ணிட்றேன்”

“ஓகே சார்”

இருவரும் மின்தூக்கியை நோக்கி செல்ல அவர்கள் பின்னே வந்த ஜெயனை, “இன்னும் பார்டிக்கு மூணு நாள் தான் இருக்கு நீங்க கூட வர வேணாம் போய் தேவையான வேலைய பாருங்க”

“இல்ல சார் பிளானெர்ஸ் அரேஜ் பண்ணிட்டேன் நாளைக்கு மார்னிங் போய் செக் பண்ணுனா போதும்”

தீர்க்கமான பார்வையை அவனிடம் வீசி, “அப்ப என்கூட நீங்களும் வரீங்க அப்டி தான ஜெயன்?”, ‘நீ வர கூடாது’ என்னும் பார்வையோடு இருந்தது அந்த பார்வை…

புரிந்தும் புரியாமலும், “இல்ல சார் நீரஜ் பத்தி விசாரிக்கணும். அப்றம் இன்விடேஷன் டிசைன் பண்ணல. நா நம்ம கார்ட்ஸ்-ஸ அனுப்பி வைக்கிறேன்”

“ம்ம்ம் குட்” என்று தரை தளத்திற்குரிய பட்டனை அழுத்தினான். அவன் அருகில் நின்றிருந்த யாழினிக்கு தான் குழப்பமாக இருந்தது… எதற்காக ஜெயன் பொய் சொல்கிறான் என்று. ஏனெனில் அவள் தானே அழைப்பிதழ்களை அவனுக்கு அனுப்பி அதை முடிவு செய்த பின்னர் அச்சடிக்க கொடுத்தது.

கதவு தானாய் மூட ஒரு நொடிக்கு முன் யாழினி கதவிற்கு நடுவில் கை வைக்க கதவு மீண்டும் தானாய் திறந்தது, “அண்ணா நா தா அத பிரிண்ட் பண்ண குடுத்துட்டேனே” என்றாள் கேள்வியாய் அவனிடம்.

பின்னால் இருந்த சுவற்றில் வாகாய் சாய்ந்து மார்புக்கு குறுக்காய் கைகளை மடக்கி ஜெயனது மருண்ட விழிகளை பார்த்து உள்ளுக்குள் சிரித்து நின்றான் உதய்.

“இல்ல அதுல சாரோட பர்த்டே இயர் தப்பா இருந்துச்சு சோ அத கரெக்ட் பண்ணனும்”

“அத போன்லயே சொல்லிறலாமே”

தலையை நாலாபக்கமும் ஆட்டியவன், “எனக்கு வேற வேலை இருக்கு யாழினி நா வரல” என்றான் முடிவாய்.

ஆனால் யாழினிக்கு தான் அது சற்றும் புடிக்க வில்லை. உதய்யுடன் தனியாக இருக்க விரும்பாமல் தான் ஜெயனை எப்படியேனும் அழைத்து செல்ல வேண்டுமென்று துடிக்கிறாள். அதை உணர்ந்துகொண்ட உதய் வேகமாக மின்தூக்கியின் பட்டனை அழுத்தினான் ஜெயனிடமிருந்து மறு வார்த்தை வரும் முன். அந்த நிமிடத்திலிருந்து காரில் செல்லும் வரை அமைதி மட்டுமே. இருவருக்குமே அது புடிக்கவில்லை தான் ஆனாலும் இருவரும் பேச முன் வரவில்லை.

“எந்த சைட் பைலை எடுத்துட்டு வந்துருக்கீங்க?” முதலில் தானே இறங்கி பேசினான் உதய்.

“ஆன்கோயிங் ப்ராஜெக்ட்ஸ் எல்லாமே இருக்கு சார்” அவளிடமிருந்து பதில் வந்தது அவனை பார்க்காமலே இந்த முறையும்.

“ஒகே தென் வீ வில் விசிட் ஆல் தி சைட்ஸ் டுடே”

அந்த கூற்று அவளது முழு கவனத்தையும் ஈர்த்தது, ‘இத்தன சைட்டையும் போய் பாத்தா இன்னும் ரெண்டு நாள் ஆகுமே’ அதிர்ச்சியில் அவனை கண்கள் விரிய பார்த்தவள், “சார் அம்மா வீட்டுல தேடுவாங்க”

‘ம்ம்ம் அப்டியே அம்மாக்கு பயந்துட்டாலும்’ என்று நினைத்தவன், “போன் பண்ணி சொல்லிடுங்க”

“அப்பா திட்டுவாரு லேட்டா வீட்டுக்கு போனா”

“ஓ அப்டியா நா கூட நடு ராத்திரி வீட்டை விட்டு வெளிய போனா கூட உங்க வீட்டுல ஒன்னும் சொல்ல மாட்டாங்கன்னு நெனச்சேன்” அன்று அவனை பார்க்க ஜெயனிடம் மல்லுக்கு நின்றதை கூறினான்.

துப்படாவின் நுனியை பிசைந்து கொண்டிருந்தவள் அவனுக்கு பதில் கூறாமல் வெளியே வேடிக்கை பார்த்தள், தெளிவாக கூற வேண்டுமென்றால் அவனை தவிர்த்தாள்.

அவனிடமிருந்து ஏதோ ஒன்று அவளை வெகுவாய் ஈர்த்தது அதை மூளை அறிந்தாலும் மனம் அறிய விருப்பமில்லாமல் மீண்டும் மீண்டும் அவனது ஒரு பார்வைக்காக காத்திருந்தது. ஆனால் இன்று அவன் பேசியது வேலை சம்மந்தமாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்விலும் பொருத்தமாகும்.  அவளுக்கு சற்றும் சம்மந்தமில்லாத ஒரு இடத்தில தான் இருக்கிறாள், இருக்கவும் விரும்புகிறாள்.

இரக்கத்தின் பெயரில் அவன் காட்டும் அக்கறையை, பரிதாபத்தை, உணர்ச்சிகளாக மாற்றியது அவள் தானே? அப்பொழுது தவறும் அவளிடம் தானே? கனவுலகிலில் இருக்கும் சொர்க்கத்திலிருந்து வெளி வர விரும்பாமல் எத்தனை நாட்கள் தான் உறங்குவது? என்றாவது உறக்கம் களைய தானே வேண்டும்… அவனுக்கு அருகில் இருக்கும் வரை அவனை மனம் நாடாமல் இருக்க போவதில்லை. தீர்க்கமான ஒரு முடிவுடன் கண்களில் தேங்கி நின்ற கண்ணீரை இமைகள் சிமிட்டி உள்ளே தள்ளினாள் யாழினி.

சிறிது நேரத்தில் அவர்கள் பார்வையிட வந்த கட்டிடமும் வந்தது. இரவு மணி ஏழரையை தாண்டி இருந்ததால் அங்கு பணி புரிபவர்கள் யாரும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது… அதற்காக தானே அவளை அந்த நேரத்தில் அங்கு அழைத்து வந்தது. உதய் அவனுக்கே உரிய வேக நடையுடன் முன்னே செல்ல அவனுக்கு பின்னால் சில மீட்டர் இடைவெளியிலேயே யாழினி அவன் கூறிய திருத்தங்கள், சந்தேகங்களை குறிப்பெடுத்துக்கொண்டே வந்ததால் கீழே சில அங்குலங்கள் தரையிலிருந்து தூக்கி இருந்த இரும்பு கம்பியை கவனிக்க தவறினாள்.

அவனுடைய வேகத்திற்கு ஈடு கட்ட ஓட எத்தனித்தவள் அந்த கம்பியில் கால் இடறி அப்டியே கீழே சரிந்தாள். கீழே விழுந்தவளது கை, கால்களில் ஆணியும், கூர் கற்களும் முள்ளாய் இறங்க வலி தாளாமல், “அம்மா” என்று கத்திவிட்டாள்.

அவளது அலறலில் அவள் புறம் திரும்பிய உதய், அவள் கீழே விழுந்து கிடப்பதை பார்த்து ஓடி வந்து அவள் எழுந்து நிற்க அவளது தோளை பற்றினான், “எப்படி கீழ விழுந்திங்க?” என்னும் கேள்வியோடு. அவள் காயங்கள் தனக்கே விழுந்தது போல் வேகமாக துடித்தது அவன் இதயம். அவளுடன் நெருங்கி நின்றதை உணர்ந்த இதயம் மகிழ்ச்சியில் துள்ளல் ஆட்டம் போட மூளையோ நிகழ்காலத்தை உணர்த்தி அடுத்து செய்ய வேண்டிய வேலையை நினைக்க தூண்டியது.

கை, கால்களில் இருந்த வலியையும் தாண்டி அவன் ஸ்பரிசம் பட்ட இடம் மின்னலை பாய்ச்சியது அவள் முதுகு தண்டு வரை. அவளது உடலின் நாடகத்தை உணர்ந்தவன் ஆசையாய் அவளை பார்க்க தனது கையை ஆராய்ந்தவாறு கண்களை துடைத்து நின்றாள்… அவனை பார்த்திருந்தால் அதிலிருந்த காதலை அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும்…

உணர்ச்சிகளிலிருந்து வெளி வந்தவள், “கம்பியை கவனிக்கல சார்” என்றாள் சிறு விசும்பலுடன்.

கால்களிலும் கைகளிலும் இருந்த ரத்தம் அவனது கோவத்தை தூண்டி விட, “அறிவுன்றது கொஞ்சமாச்சும் இருக்குதா உனக்கு? எங்கயாச்சும் ஷார்ப்பான திங்க்ஸ்-ல இடிச்சிருந்தா என்ன ஆகியிருக்கும். எந்த வேலை செஞ்சாலும் அத ஒழுங்காப் பண்ணவே தெரியாது உனக்கு?” அவன் திட்ட திட்ட கண்ணீர் மட்டும் பெருகிக் கொண்டே சென்றது. ஆனால் அதிலிருந்த அக்கறையும் அன்பும் அந்த பேதைக்கு தெரியவில்லை…

“நடக்க முடியுமா முடியாதா?” அதே அதட்டும் கோவ குரலில் கேட்டான்.

அதில் மிரண்டவள் ‘முடியும்’ என்று தலை அசைக்க அவள் கையை மெதுவாக பற்றி காரை நோக்கி அழைத்து சென்றான். அவனது கோவத்தின் அளவை அறிந்து வலியை சொல்லாமல் கண்களை இறுக்க மூடி அவனுடன் நடந்தாள்.

காரில் பின்னிருக்கையில் அவளை அமர வைத்தவன் முதலுதவி பெட்டியை எடுத்து தானும் பின்னிருக்கையில் அமர்ந்து அவள் ஒரு காலை தூக்கி இருக்கையில் வைக்க அதில் பதறியவள், “ஐயோ சார் விடுங்க” என்று அவன் கையை தன் காலிலிருந்து எடுத்துவிட்டாள்.

“ப்ச்ச்ச்… அப்ப நீயே ட்ரெஸ்ஸிங் பண்ணு. பண்ண தெரியுமா?” கண்களில் நெருப்பை வைக்காத குறை தான் அவ்வளவு சிவந்திருந்தது அவன் கண்கள்.

மறுப்பாக அவள் தலை அசைக்க மீண்டும் அவள் காலை எடுத்து மேலே வைத்தான். சிறிதும் தயக்கம் இன்றி அவளது கால் சட்டையை மேலே தூக்க, அவன் கைகளுக்கு அணை கட்டினாள் யாழினி.

“இப்ப என்ன?” என்றான் எரிச்சலுடன். அவனுக்கு கவலை அவளது ரத்தத்தை நிறுத்த வேண்டும்… அது மட்டுமே.

“வேணாம் சார் நா வீட்டுக்கு போய் ஆயின்மென்ட் போட்டுக்குறேன்” என வாய் கூற கைகளோ அவன் சற்று உயர்த்தி இருந்த கால்ச்சட்டையை கீழே இழுத்தது.

எவ்வளவு பெரிய உயரத்தில் இருப்பவன் அவள் கால்களை தொடுவதா… ஐயோ இல்லை. இந்த எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் ஒரு பெண்ணாய் அவள் மனம் கவர்த்தவனின் கைகள் அவளை தொடுவது வேறு விதமான உணர்ச்சிகளை அவளுள் தூண்டின.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!