Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 22.1

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம்.

கடந்த ஒரு வாரமாக பைனான்ஸ் கம்பெனி, பேங்க், வட்டிக்கடை என ஏறி இறங்காத இடம் இல்லை. தெரிந்த மொத்த இடத்திற்கும் சென்றாகிவிட்டது எங்கும் தெளிவான பதில் இல்லை. எங்கு சென்றாலும் ஏதோ ஒரு இடத்தில் முட்டி நிற்கும் பிரம்மை.

கைபேசி சினுங்க, அழைப்பவர் எவர் என்றும் பாராமல் எரிச்சலோடு, “ஹலோ” என்றான்.

“ஹலோ ஆதி தான பேசுறது? வட்டிக்கு பணம் கேட்டுட்டு இருக்கன்னு கேள்வி பட்டேன். கந்துவட்டி ஓகேவா?”



Advertisement

கந்துவட்டி என்று யோசனை இருந்தாலும் கிடைத்த ஒன்றையாவது விட வேண்டாமென்று, “எந்த ஏரியா?”

“கூவம் பிரிட்ஜ் வந்து இதே நம்பர்க்கு கால் பண்ணு, நான் அங்க தான் இருக்கேன்” என்றவன் பேச்சிலே அடாவடி தனம் இருந்தது.

“நான் யோசிச்சிட்டு நாளைக்கு கால் பண்றேன்” என்று இணைப்பை துண்டித்துவிட்டான். இப்பொழுது எங்கு செல்வதென்று தெரியவில்லை. மீண்டும் கைபேசியோலிக்க எடுத்துப்பார்த்தான்.

Advertisement

இது தமிழின் தந்தை நந்தன் தான். அழைப்பை ஏற்காமல் அப்படியே விட்டு பாக்கெட்டிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்தான். சூடான புகை உள்ளே சென்றதும் இதம் பரவுவதற்கு பதில் வழக்கம் போல் தன்னையே தண்டிக்கும் எண்ணம் மட்டுமே. மீண்டும் நந்தன் அழைத்தார்.

Advertisement

உச்சகட்ட எரிச்சலில் அழைப்பை ஏற்று, “ப்பா வெளிய இருக்கேன் என்ன தான் வேணும் உங்களுக்கு?” பேசிய வார்த்தை புரிபட தலையில் அடித்து, “வேலைல இருக்கேன் ப்பா” அமைதியாக பதிலளித்தான் கையிலிருந்த சிகரெட்டை காலில் போட்டு நசுக்கி.

“டேய் வீட்டுக்கு வாடா” அவரும் கட்டமாகவே பேசினார்.

“புரிஞ்சுக்கோங்க ப்பா… என்ன பண்றதுனே தெரியாம நானே பைத்தியம் புடிச்ச மாதிரி அலைஞ்சிட்டு இருக்கேன்” குரலில் அத்தனை சோர்வு.

Advertisement

“ஆதி ஒரு தடவ சொன்னா புரியாதா வீட்டுக்கு வர்றியா இல்லையா?”

ஆழ்ந்த மூச்சை எடுத்தவன், “இன்னும் ஒரு பேங்க் மிச்சமிருக்கு, முடிச்சிட்டு வர்றேன் ஒரு மணி நேரத்துல” அதற்குமேல் பேசினால் நிச்சயம் அவன் எண்ணங்களை மாற்ற வைத்துவிடுவார் என்று ஆதி கேசவன் உடனே இணைப்பை துண்டித்தான்.

தனியார் வங்கிக்கு சென்றபொழுது அங்கிருந்த ஒரு வாங்கி அதிகாரி ஒரு திட்டத்தை பற்றி கூறி அதை அரசு வங்கிகளில் விசாரிக்க கூறினார். அரசு வங்கிக்கு வந்த ஆதி அரை மணி நேரமாக பொறுமை இல்லாமல் அங்கும் இங்கும் உலாவிக்கொண்டே இருந்தான்.

“சார் உள்ள போங்க” அப்பாடா என்று ஒரு அடி எடுத்து வைத்தவன் கால்கள் தனக்கு பின்னாலிருந்தவன் உள்ளே செல்வதை பார்த்ததும் அப்படியே நின்றது, அதன் பலன் அவன் கைகள் கோவத்தில் இறுகி, அந்த ப்யூனை பார்வை தீயால் சுட்டான்.

“நான் வந்து அரை மணி நேரமாச்சு எனக்கடுத்து வந்தவன்லாம் உள்ள போய்ட்டு இருக்கான்”

ஏளனமாக சிரித்தவன், “சார் இது என்ன உங்க வூட்டு சமையல்கட்டா நெனச்ச ஒடனே தோசை பறந்து வந்து தட்டுல விழ? பொறு சார் கூப்புடுவாங்க” பார்வை இறுதியாக விழுந்ததோ ஆதியின் சட்டை பாக்கெட்டில் தான்.

உடனே புரிந்துகொண்டவன், “யோவ் இத வாய் விட்டே கேட்ருக்கலாம்ல, எவ்ளோ நேரம் தான் வெட்டிப்பயே மாதிரி நிக்கனுமாயா” எரிச்சலோடு அவன் கையில் இருநூறு ருபாய் காகிதத்தை வைத்தவன் மீண்டும் சென்று இருக்கையில் அமர்ந்து முகத்தி மூடிக்கொண்டான்.

அங்கிருந்த ஒவ்வொரு நொடியும் பல மணி நேரங்களாக தெரிந்தது, சென்றவன் சென்ற வேகத்திலே மீண்டும் வந்து, “சார் மேனேஜர் பிஸி, மத்த ஆளுங்க இருக்காங்கல்ல பேசுறியா சார்?”

அருகில் காலியாக இருந்த இருக்கையை காட்டி, “ஏன் நீ இங்க ஒக்காறேன் உங்கிட்ட பேசிட்டு கிளம்புறேன்”

அவன் புரியாமல் ஆதியை பார்க்க எழுந்து அவன் தோளில் கை போட்டு வெளியில் அழைத்துசென்றவன், “நான் லோன் வாங்க பேச வந்துருக்கேன்… நீ சொல்ற மாதிரி கிளெர்க் கிட்ட போய் கேட்டா என்ன சொல்லுவான்?”

“மேனேஜர் கிட்ட கேளுங்கன்னு சொல்லுவான்”

“ம்ம்ம் இப்ப” அவன் பாக்கெட்டிலிருந்து தான் கொடுத்த பணத்தை எடுத்தவன், “சார்…” என்ற பதறலையும் கண்டுகொள்ளாமல், “சொல்லு நான் யாரை பாக்கணும்?”

அவன் கையிலிருந்த பணத்தையே பார்த்தபடி, “அசிஸ்டன்ட் மேனேஜர் பிரீ தான் சார் பாக்குறியா?”

அவன் பாக்கெட்டில் பணத்தை வைக்க போனவன் பிறகு தன் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு, “உன்ன நம்ப முடியல… மேனேஜர பாத்துட்டு அப்றம் டிப்ஸ் தர்றேன்”

அசிஸ்டன்ட் மேனேஜர் அறையை நோக்கி நடந்தவனின் முதுகை பார்த்து, ‘காசு தருவானா? மாட்டானா?’ சந்தேகம் குடிகொண்டது.

நான்கு கனபாடிகள் ஒரு ஆள் உயரத்திற்கு மட்டுமே மறைத்திருந்தது அந்த அசிஸ்டன்ட் மேனேஜர் அறையில். அறை கூட இல்ல அது, இங்கே பேசினால் வெளியே கூட கேட்கும்.

“உக்காருங்க சார்” என்ற அசிஸ்டன்ட் மேனேஜருக்கு ஆதியை விட இரண்டு வயதே அதிகமிருக்கும்.

நாற்காலியில் அமர்ந்தவன், “பிஸ்னஸ் லோன் விசயமா பேச வந்தேன் சார்”

“ம்ம்ம் சொல்லுங்க என்ன பிளான் எவ்ளோ லோன் அமௌன்ட் வேணும்?” பேசிக்கொண்டிருந்தவர் ஏதோ ஒரு கோப்பை மும்முரமாய் சரி பார்த்துக்கொண்டிருந்தார்.

“CGTMSE ஸ்கீம்ல லோன் வாங்கலாம்னு ஐடியா, மினிமம் அம்பது லட்சம் வேணும்… மாக்ஸிமம் டூ சி மேல வேணும்”

அவனை நிமிர்ந்து பார்த்த மேனேஜர், “என்ன பிசினஸ் பண்ண போறீங்க?”

“கான்ஸ்ட்ரக்ஷன் ஒர்க் சார்”

அவன் நனைந்த சட்டையை பார்த்தவன், “ஓ சிவில் என்ஜினீயரா… எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்?”

“ஆறு வருஷம் சார்… லோன் ப்ராஸஸ், ரெக்குவயர்மன்ட்ஸ் என்ன-னு கொஞ்சம் சொல்றிங்களா?”

“பேசலாம் சார்… உங்க பேர்ல இல்லனா உங்க அப்பா அம்மா பேர்ல ஏதாவது ப்ராபர்ட்டி ஏதாவது?”

“ப்ராபர்ட்டி எதுவும் இல்ல சார்… இது கவர்மெண்ட் லோன் ஸ்கீம் சோ ப்ராபர்ட்டி எதுவும் நடுல வராதுன்னு தான் இந்த ஸ்கீம் பத்தி கேக்க வந்தேன்” உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக தீயின் வீரியம் ஏறிக்கொண்டே சென்றதை எவ்வளவு நேரம் கட்டுப்படுத்த முடியுமென்று தெரியவில்லை ஆதிக்கு.

அதனால் தன்னுடைய கையிலிருந்த அவன் சார்ந்த தகவல் மொத்தத்தையும் அடங்கியிருந்த ஒரு பைலை அந்த அசிஸ்டன்ட் மேனேஜர் கையில் கொடுத்தான். அவன் கொடுத்ததை திறந்து பார்த்தவர், “கவர்மெண்ட் ஆயிரம் சொல்லும் மீடியால, வெப்பேஜஸ்ல எல்லாம்… அது எதுவும் அப்டியே நூறு சதவீதம் ரியாலிட்டில இருக்காது மிஸ்டர் ஆதி கேசவன், எங்களுக்கு நீங்க பணம் குடுக்க முடியலைன்னா எப்படி உங்ககிட்ட வாங்க முடியும்? நீங்க கட்டி குடுக்குற பில்டிங் யாருக்கோ, அவன் காசு குடுத்து வாங்கிட்டு போய்டுவான் நாங்க என்ன அவன்கிட்டயா போய் நிக்க முடியும்? முடியாதுல”

எதுவும் பேச முடியாத நிலை, கையில் சேமிப்பாக சில லட்சங்கள் கூட இல்லை, அனைத்தும் கடனை அடைப்பதிலும், சகோதரிக்கு நகைக்கு சேமிப்பதிலுமே கழிந்தது. இதில் எங்கு அவன் சொத்துக்களை வாங்கி போட முடியும்? ஆதியின் வங்கி அக்கௌன்ட் எண்ணை தன்னுடைய கணினியில் போட்டு பார்த்தவர், “லோன் இது வர எடுத்ததே இல்லையா நீங்க?”

“அவசியம் இருந்ததில்லை” என்றான் கோவத்தை அடக்கி.

“லோன் எடுக்காம இருந்தா எப்படி சார் சிபில் ஸ்கோர் இருக்கும்? இந்த பேங்க் இல்ல எந்த பேங்க் நீங்க போனாலும் முதல செக் பண்றது உங்க சிபில் ஸ்கோர் தான். சரி உங்க கூட பிசினஸ் பண்ற பார்ட்னர்ஸ் டீடெயில்ஸ் தாங்க அவங்களோடத பாக்கலாம்”

இருக்கையில் சாய்ந்து அமர்த்திருந்தவன் பற்களை கடித்து சற்று முன்னாள் நகர்ந்து அமர்ந்தான், “சார் நான் தெளிவா சொல்றேன். எனக்கு சொத்து எதுவும் இல்ல, சொந்தமும் இல்ல, பார்ட்னர்ஸும் இல்ல. படிப்பு, அறிவு இது மட்டும் தான் என்கிட்ட இருக்கு. இதுக்கு லோன் கிடைக்குமா கிடைக்காதா?”

ஆதியின் பொறுமையின்மையை பார்த்தவன் அவனை வேண்டுமென்றே சீண்டும் பொருட்டு, “உங்க பிசினஸ் ஐடியா இருக்கா? பக்காவா இருக்கனும்”

தன்னுடைய அவசரத்தை புரிந்தவன் என்று ஆதியும் தான் யோசித்து வைத்திருக்கும் எண்ணத்தை நினைத்து, “இருக்கு”

“ம்ம்ம் அத தெளிவா சொல்லுங்க நான் அப்ப தான் மேனேஜர்கிட்ட பேசி என்ன பண்ணலாமான்னு கேக்க முடியும்” ஏதோ ஒரு வழி பிறந்ததில் சற்று ஆசுவாசமானவன் அடுத்த பதினைந்து நிமிடங்களில் கூறவேண்டிய திட்டங்கள் சிலவற்றை மட்டும் கூறி எடுத்துரைத்தான்.

அடுத்த சில நிமிடங்கள் அவரும் தன்னுடைய சந்தேகங்களை கேட்டு ஆதியிடம் தெளிவுபடுத்திக்கொண்டார்.

“ம்ம்ம் ஐடியா ரொம்பவே நல்லா இருக்கு ஆதி கேசவன் பட் ஒரு சின்ன பிரச்சனை இப்ப தான் எனக்கு நியாபகம் வருது”

சிறியது என்றதும் எப்படியும் சமாளித்துவிடலாம் என்ற எண்ணம், “சமாளிச்சுக்கலாம் சார் சொல்லுங்க” என்றான்.

“நீங்க சொல்றத பாத்தா கண்டிப்பா உங்களுக்கு இந்த ஒரு கோடி, ரெண்டு கோடி எல்லாம் பத்தாது, இந்த ஸ்கீம்ல மாக்ஸிமம் அமௌன்ட் ரெண்டு சி தான்”

அவ்வளவு தானா என்று நிம்மதி மூச்சு ஒன்றை விட்டு, “எனக்கு இப்போதைக்கு பிசினஸ் ஸ்டார்ட் பண்ண ஒரு பேஸ் அமௌன்ட் அவ்வளவு தான் சார், எப்டியும் காண்ட்ராக்ட் எடுத்துட்டா கண்டிப்பா அவங்க அட்வான்ஸ் அமௌன்ட் தருவாங்க அத வச்சு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன் சார்”

தைரியமாய் பேசியவனை வியப்புடன் பார்த்தவர், “உங்க கான்பிடென்ட் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு பட் இந்த ஸ்கீம் இஸ் ஒன்லி பார் சர்வீஸ் அண்ட் மேனேஜ்மென்ட் சம்மந்தப்பட்ட பிசினஸ்க்கு மட்டும் தான். கான்ஸ்ட்ரக்ஷன் இது ரெண்டுளையும் வராதுல ஆதி?” முகத்தில் குடிகொண்டிருந்த மகிழ்ச்சி மொத்தமாய் வடிவது போன்று இருந்தது.

ஆனால் இவை அனைத்தயும் முதலிலே தெரிந்துகொண்டு தன்னை இவ்வளவு நேரம் வைத்து கைப்பாவையாக விளையாடியவனை பார்க்க பார்க்க ஆத்திரம் எல்லையே இல்லாமல் அதிகரித்துக்கொண்டே சென்றது.

அமைதியாக அந்த மேனேஜர் கையிலிருந்த பைலை வாங்கியனை பார்த்து, “பேங்க்கு எல்லாம் வராதா இருந்தா ஈகோ, அவசரத்தை எல்லாம் வாசலையே வச்சிட்டு வந்துடுங்க… ஓகே?”

தெரிந்தே தான் இவ்வளவு நேரம் ஒருவரின் ஆசையையும் தூண்டிவிட்டு, நேரத்தையும் விரையமாகியிருந்தான். “இது மட்டும் பேங்க்கா இல்லாம இருந்து, நீ பப்ளிக் சேர்வேன்ட் இல்லாமா இருந்ததுன்னு வை மவனே… உன் மூஞ்சி மொகரைய உன் குடும்பத்துக்கே அடையாளம் தெரியாத மாதிரி ஒடச்சு, கிழிச்சு நாறு நாராக்கிருப்பேன்” இவ்வளவு நேரம் மரியாதைக்காக சட்டையின் கையை மடக்கி எழுந்தவன், “இவ்வளவு நேரம் கிறுக்கன் மாதிரி என்ன பேச விட்டு வேடிக்கை பாத்துருக்க? கோத்தா நீ வெளிய வாடா… டீ கடைல தான் இருப்பேன்”

அசிஸ்டன்ட் மேனேஜர் முகத்தில் அப்பட்டமான பயம் தெரிந்தாலும், “என்னையா ஓவரா பேசுற? செக்யூரிட்டிய கூப்புடவா?”

ஆதியை பயம் காட்டி இருக்கையிலிருந்து எழ பார்த்தவனை அமர வைத்து, “அடங்குடா… எவ்வளோ பெரிய புடுங்கி வந்தாலும் நான் ஒன்னும் சொம்ப இல்ல”

குரல் வந்த பொழுது இருந்ததே, ஆனால் தன்னை சோதனைப்படுத்தி பார்த்தவனுக்கு, விட்டால் அந்த இடத்திலே முடிவு கட்டிருப்பான். அதற்குமேல் அங்கிருந்தால், அவனை அடிதட்டுவிடும் நோக்கில் ஆதி வேகமாக வெளியேற, வழியில் ஆதியை மடக்கிய ப்யூன், “சார் காசு” என்றான்.

“அசிங்கமா பேசிடுவேன் போய்டு” அவன் நினைத்தது நிறைவேறவில்லை போலும் என்று அந்த மனிதனும் விட்டுவிட்டான்.

தமிழின் வீட்டிற்கு செல்ல மனமும் இல்லை, மீண்டும் நந்தனின் பேச்சை உதாசீனம் செய்யவும் மனமில்லாமல் கைபேசியை அணைத்துவைத்து எப்பொழுதும் அமர்ந்திருக்கும் டீ கடையில் சென்று அமர்ந்து தன்னை கடந்து செல்லும் வாகனங்களை இலக்கே இல்லாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

ஒரு வாரமாக மாறி மாறி நிராகரிப்பையும், அவமானங்களையும் மட்டுமே சந்திக்கும் அவன் இதயத்திற்கு என்ன ஆறுதல் தேவைப்பட்டதென தெரியவில்லை, நிலையில்லாமல் மனம் தவித்தது.

அடர்ந்த இருளில் கண்களில் கூறிய வெளிச்சம் படிய முகத்தை சுளித்து கண்களில் விழுந்த வெளிச்சத்தை மறைத்து, ஒளி வீசிய வாகனத்தை பார்த்தான், “டேய் கிறுக்கு பு…”

பொது இடமென கருதி வேகமாய் வாயை மூடிய கெளதம், “அசிங்கமா வாயில வருது. எங்கடா இருந்த இவ்ளோ நேரம். மணி என்னனு பாத்தியா பத்து ஆக போகுது. வீட்டுல ஒரு பொண்ண வச்சிட்டு இப்டி பொறுப்பே இல்லாம ஊர் மயிறு சுத்திட்டு இருக்க” ஆத்திரமாய் நண்பனை வசைபாடினான் கெளதம்.

“அவனுக்கு அதெல்லாம் ஒரு கவலையும் இல்ல, போன ஆப் பண்ணி வச்சிட்டு இப்டி தெருவுல ஒக்காந்து அவனை பத்தி மட்டும் தான் யோசிப்பான்”

எதுவும் பேசாது அமைதியாக இருந்தவனை பார்த்து தன்னையே நிதானப்படுத்தி, “ஆதி என்னடா பிரச்னை சொல்லு நாங்க ஹெல்ப் பண்றோம்” என்றான் கனிவாக.

“ஆஹ் நொட்டுவிங்க”

ஏற்கனவே மனமே சரியில்லாமல் இருக்க நண்பர்களிடம் பேசும் மனநிலையில் இல்லாது போக வாகனத்தை எடுத்து அங்கிருந்து சென்றான். “டேய்… ஆதி” இருவரின் அழைப்பும் காற்றில் தான் கரைந்தது.

மனம் நிலையில்லாது தவித்து நிற்கும் நேரங்களில் வந்து சேரும் அதே இடத்திற்குத் தான் இப்பொழுதும் அவன் கால்கள் வந்து சேர்ந்தது. உதய்யின் பழைய இல்லம் இருக்கும் தெருவின் முனையில் இருக்கும் காலி மைதானம் இரவு பத்தரை ஆகியிருந்தும் அந்த மொத்த மைதானமும் இன்னும் பல இளைஞர்களை தன வசம் இழுத்துவைத்திருந்தது. சிலர் கேலி கிண்டலில், சிலர் இன்னும் வியர்வை சொட்டச் சொட்ட விளையாட்டில்…

வண்டியில் அமர்ந்திருந்த வாக்கிலே சில சிறிய வீடுகள் தள்ளியிருந்த உதய் வீட்டையே பார்த்திருந்த இதயம் நிம்மதியைத் தொலைத்து மனம் கலங்கி வண்டியின் ஹாண்ட்பாரில் தலையை வைத்துப் படுத்தான் பழைய நினைவுகளில், மெல்லிய இரவு காற்று தாயின் தாலாட்டாய் மாறாதா என்ற பேராசையுடன். அன்னை மடியைப் பெரிதாக நினைக்காதவனுக்கு ஒன்பதாம் வகுப்பில் பேரிடியாக இருந்தது தந்தை, அன்னையின் மறைவு…

அதுவரை சுதந்திர காற்றை மட்டுமே சுவாசித்தவனுக்குத் தங்கை என்னும் பெரும் பொறுப்பு தோளில் வந்தமரத் திக்கு தெரியாமல் ஸ்தம்பித்துப்போனான். தந்தையாய் மாறி சகோதரியைப் பாதுகாத்தாலும் சஹானாவின் சில தயக்கங்கள் நீ தந்தையாய் இருக்கலாம் அன்னையாக முடியாது என்று அவனை ஒரு பாதுகாவலனாகத் தோல்வியுறவைக்கும். ஒரு பக்கம் குடும்பமாகிய சகோதரி, மறு பக்கம் அடுத்த வேலை உணவிற்கு அவன் தயாரிக்க வேண்டிய பணம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!