அத்தியாயம் – 3.2
“என்னத்துக்கு இப்ப நீ நடு ரோட்ல நிக்கிற இந்த நேரத்துல?” மணி நள்ளிரவை கடந்தும் கவலை இல்லை, இந்த பனியும் கவலை இல்லை அவனுக்கு, அதனால் தான் அவனுக்கு ஏற்படுத்திய காயத்தின் வீரியம் சிறிதேனும் இந்த பனியும், இருளும் தருகிறதா என்று ஆதியின் வீடு அமைந்துள்ள தெரு கோடியில் நின்று கொண்டு இருந்தான் தமிழ்.
“உன்ன தான் டா கேக்குறேன் பதில் சொல்ல முடியலையா?” குரலைச் சற்று உயர்த்தி கேட்டான் ஆதி.
“இல்ல உன்னப் பாத்துட்டு போகலாம்னு தான் வெயிட் பண்றேன்” தலை குனிந்தே பேசினான் தமிழ்.
“ஏன் துறைக்கு மூஞ்சிய பாத்து பேச முடியாதோ” ஒரு நிமிடம் தாமதிக்க வில்லை ரெண்டே அடியில் ஆதியை இறுக அணைத்து பேசாமல் கண்களை மூடி நின்றான், “மன்னிச்சிரு டா” என்ற ஒரு வார்த்தையை தவிர வேறு எதுவும் அவனிடம் பேச தோணவில்லை.
Advertisement
“இந்நேரத்துல யாராச்சும் நம்மல இப்படி பாத்தா நாம அப்படியோன்னு யோசிச்சிருவாங்க. உன்ன எப்படி நெனச்சாலும் பரவால்ல என்ன யாரும் அப்படி நினைக்கக் கூடாது. ச்சீய் போ அங்குட்டு” என்று தமிழை தள்ளிவிட்டு தன்னுடைய வழக்கமான பேச்சால் நண்பனை சிரிக்க வைத்தான் ஆதி.
“சரி வீட்டுக்கு கெளம்பு எனக்கு தூக்கம் வருது”
“ஏன் டா தொரத்தி விட்றதுலயே இருக்க”
Advertisement
“தூக்கம் வருது டா என்ன பண்ண சொல்ற, இப்டி நடு ரோட்ல ஒக்காந்து பேச சொல்றியா? கெளம்பு டா” என்று கூறி இரண்டு அடி எடுத்து வைத்தவனை, “எங்க இருந்த இவ்ளோ நேரம்?” என்ற கேள்வி நிறுத்தியது.
Advertisement
“உன் தங்கச்சி கல்யாணத்துக்கு மண்டபம் புக் பண்ணே போனேன்”
‘இந்த திமிர் பேச்சுக்கு மட்டும் கொறச்சலே இல்ல’ திட்டியவாறே தன் பைக்கில் ஏறி அமர்ந்தவன் திரும்பி ஆதியை பார்த்தான்.
ஒரு சிறிய கல்லை காலில் கால்பந்தாய் மிதித்து கொண்டே அதை கீழே விழ விடாமல் முழு கவனத்தையும் அதில் பதித்து உலகத்தை மறந்தவாறே அந்த கல்லில் கவனத்தை செலுத்தியவன் வீட்டை தாண்டி சென்றது கூட கவனிக்காமல் சென்றதை பார்த்த தமிழ், “ரொனால்டோ சார் வீட்டை தாண்டி போயிட்டீங்க” என்றான்.
Advertisement
பள்ளி முதல் கல்லூரி வரை கால்பந்து என்றால் ஆதி என்ற பெயர் மட்டுமே அனைவர்க்கும் நினைவில் வரும், அவ்வளவு திறமைசாலி. அந்த பந்தை கையில் எடுத்தால் அவன் முகத்தில் இருக்கும் அந்தப் பொலிவு அவனுடைய அழகை மேலும் அழகு படுத்தும், இடை விடாத பயிற்சியில் ஏறிய அந்த கட்டுமஸ்தான உடலில் வேர்வையால் இரண்டாம் ஆடை போல் ஒட்டி கொள்ளும் அவன் சட்டை செதுக்கி வைத்த அவன் உடலை மேலும் கம்பீரமாக காட்டும். அந்த நேர்த்தியான தோற்றத்தையும், வெற்றியோ தோல்வியோ முகத்தில் படரும் அந்த கண்களை கவரும் சிரிப்பை பார்க்கவே பெண்கள் கூட்டமே நிற்கும். தங்கள் பக்கம் திரும்பி ஒரு புன்னகையுடன் கண்ணடித்து செல்பவனிற்கு மயங்காத ஆட்கள் இருந்தது இல்லை.
மாநிறம், ஆறடி உயரம், மாய புன்னகை, கூறிய விழிகள், எதற்கும் அஞ்சாத மன தைரியம். ஆண் அழகன் அல்லத் தான் ஆனால் அவனுக்கு பலபேர் மயங்கி தான் போனார்கள். போதாக் குறைக்கு விளையாட்டில் ஆர்வம் இருப்பவன் ஒரு கம்பீரத்தோடு தான் இருப்பான். ஆனால் ஏதேனும் பிரச்சனை என்று வந்தால், கையில் இருக்கும் அந்த வெள்ளி காப்பை முறுக்கி வருபனை பார்த்து அனைவரும் நடுங்கி தான் போவர். அவ்வளவு கோவம், பொறுமையின்மை இவை எல்லாம் தாண்டி ஒன்று ஒரு முடிவு எடுத்தால் அதற்கு மறுபரிசீலனை இல்லை. அவன் மனதில் இருக்கும் அணைத்து கோவங்களையும் விரக்தியையும் அந்த மைதானம் உள் வாங்கிக்கொள்ளும்.
ஏனோ அந்த கோவமும் வைராக்கியமும் தான் அவனை விளையாட்டில் முன்னேற செய்தது, ‘உன்னால முடிஞ்சத பண்ணிக்கோ’ என்று எதிர் அணியினருக்கு அவன் கண்ணால் விடும் சவால்களே சிறு ஆட்டம் காட்டும். எவ்வளவு கடினமான நேரமாக இருந்தாலும் ‘ஆதி பாத்துக்குவான்’ என்ற நம்பிக்கையே அவனது அணியை இந்திய அளவிலான போட்டிகளுக்கு அழைத்துச் சென்றது. ஆனால் அவன் விதி அவனை அதற்குமேல் முன்னேற விடாமல் நிறுத்தியது.
நண்பன் கூறவும் தான் அதை உணர்ந்தவன், ‘போயும் போயும் இவன்கிட்ட எல்லாம் அசிங்க பட வேண்டி இருக்கு, சமாளிப்போம்’ என்றவாறே நண்பனை பார்த்து திரும்பி, “வாத்தியாரே, பாடம் லா நல்ல தான் எடுக்குறீங்க. ஆனா என்ன கொஸ்டின் பேப்பரே தப்பு நான் பக்கத்து வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்துருக்குணு சொன்னேன்ல, அத பாக்க போறேன்” என்றான் ஏளனத்துடன் கண்ணை அடித்து.
“ஐயோ நடிப்பை போட்டது போதும் டா நாயே , நீ எவ்ளோ பெரிய பிராடுனு எனக்கு தெரியும் ஒழுங்கா விளையாடாம உள்ள போ இல்லனா அவ அப்பாட்ட சொல்லி குடுத்துருவேன்””
“போடா போடா நாளைக்கு வந்து அப்பாகிட்ட நீ என்ன ‘அநாதை’ சொன்னனு சொல்லுவேன், அதுக்கு ஏதாச்சு சமாளிக்க ரெடி பண்ணி வச்சுகோ… டாடா”
“டேய் அவரு என் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டுடுவாரு டா, அப்படிலா சொல்லித் தொலச்சுறாத ” அதை அவன் கவனிக்க இருந்தால் தானே . அப்பொழுதே உள்ளே சென்று விட்டான், “நாளைக்கு என்ன என்ன கூத்து பண்ண போகுதோ இந்த பரதேசி” புலம்பி கொண்டே வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான் தமிழ்.
காலையில் எழுந்தவன் உணவு கூட உண்ணாமல் கௌதமை அழைத்து தமிழ் வீட்டிற்கு சென்றான், பவித்ராவுக்கு கை கால் எல்லாம் நடுங்கியது.
“என்ன ஆதி சஹானாவை கூடிட்டே வர மாட்டிக்கிற” என்றார் தமிழின் தந்தை நந்தன்.
“வீட்டுல ஒரு விசேஷத்தை வையுங்க கூட்டிட்டு வந்துறேன் ” அவர் கையில் இருந்த நாளிதழை வாங்கி அவருக்கு எதிரில் அமர்ந்தான், “டேய் படிச்சிட்டு தரேண்டா”
‘ஆத்தி வந்த ஒடனே வேலைய ஆரம்பிச்சிட்டானே’ கெளதம் தமிழை பார்த்து நடுங்கினான், ஆதி சென்ற பிறகு வெளியில் சென்றவன் தான் ஒரு வார்த்தை கூட கௌதமிடம் பேசவில்லை அதற்கு பிறகு.
“என்ன ஆச்சு கெளதம் உனக்கு” பதறினார் தமிழின் தாயார், “சாக்கடைல விழுந்துட்டான் மா” என்றான் ஆதி.
“ஐயோ இல்லமா சின்ன பசங்க அடிச்சிட்டாங்க, அதான் திருப்பி அடிக்க மனசு இல்லாம வாங்கிட்டேன்”
“அதுக்கு நீ சாக்கடைல விழுந்திருக்கலாம்” சிரித்தார் நந்தன்.
கையை நீட்டியவாறே, “ஐயோ அப்பா அத தான் நானும் சொன்னேன்” ஹை-பை அடித்தான் ஆதி நந்தனுடன்.
“டேய் போதும்டா புள்ளைய வம்பிழுக்காதீங்க” என்ற ஷீலா ஆதியிடம் திரும்பி, “ஏண்டா இப்ப நடந்த நிச்சயத்துக்கே பிள்ளையை கூட்டிட்டு வரல இதுல நீ அடுத்து அவன் கல்யாணத்துக்கு தான் கூட்டிட்டு வருவியாக்கோம்? சொந்த வீட்டுக்கு வர்ரதுக்கு எதுக்குடா காரணம்”
“இல்லமா அவளுக்கு அன்னைக்கு ஒரு எக்ஸாம் இருந்துச்சு அதான் கூட்டிட்டு வரல இப்ப என்ன நிச்சயத்துக்கு அவ வரணும் அவ்வளோ தான. நிச்சயம் வைங்க கூட்டிட்டு வந்துரேன் ” என்றான் ஆதி.
“ஐயோ என்னால எல்லாம் இன்னொரு நிச்சயம் பண்ணிக்க முடியாது பா” அலட்டிக்கொண்டவனை காரி துப்பினான் ஆதி, “உன் மூஞ்சிக்கு இன்னொரு கல்யாணம் வேற கேக்குதோ, அடங்குடா கோண மூக்கா”
“வேற யாருக்கு நிச்சயம் பண்ணனும்?” கேட்டார் நந்தன் ஏளன சிரிப்போடு.
“ரொம்ப தான் ஆசை, எனக்கு இல்ல, உங்க பொண்ணுக்கு”
ஆச்சிரியதுடன், “எதுக்கு இப்ப அவளுக்கு, ஆமா எதும் மாப்பிள்ளை பாத்து வச்சிட்டியா?” என்றார் வழக்கமாக பேசும் கேலியான தோரணையில்.
தன்னைத் தான் கூறுவான் என்று கெளதம் சட்டை காலரை சரி செய்தவன் ஒரு பெருமித சிரிப்போடு தமிழை பார்த்தான், தான் கொடுத்த சிரிப்பு அனலாக மாறி வருகிறது என்று தெரிந்தபின் அப்படியே கண்டுக்காத படி நந்தந்தனின் புறம் திரும்பினான்.
“அவளையெல்லாம் யார் கல்யாணம் பண்ணிக்குவா அப்படி பண்ணுனா அந்த இளிச்ச வாயன் பாவம் தான்” – ஷீலா
‘ஐயையோ அவசர பட்டுட்டோமோ’ என்றவாறு பவித்ராவை பார்க்க அவள் கண்களை சுருக்கி தாயையும் அவனையும் சிறு விளையாட்டு கோவதோடு பார்த்தாள், ‘ச்சா ச்சா நாம ஆளு ராச்சசி இல்ல கொஞ்சம் திமிரு அவளோ தான்’ ஒரு காதலோடு அவன் பார்வை அவள் மீதே இருந்தது.
“அதான் இவன் இருக்கான்ல?” என்றான் கௌதமை கை காட்டி.
நந்தன், ஷீலா இருவரும் அதிர்ந்து போயினர், “என்ன சொல்ற ஆதி”
“கௌதம பவித்ராக்கு கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்றேன்”
என்ன பேசுவது, என்ன நடக்கிறது ஒன்றும் புரியவில்லை இருவருக்கும் ஆனால் ஒருவிதமாக யூகித்தனர் இது தான் நடந்திருக்கும் என்று, “எவ்ளோ நாள்?” என்றார் நந்தன் கௌதமை பார்த்து, அவர் பேச்சில் இருந்த விளையாட்டு மாறி ஒரு தந்தையாக பேசினார்.
“ஒரு வருஷம் பா” என்றான் ஆதி.
“ஏண்டா கெளதம் உனக்கு வாய் வராதா?”
“ஐயோ அப்பா சூப்பரா வரும், வேணா ஒரு பட்டு பாடவா?” ஷீலா அருகில் இருந்த வெங்காயத்தை அவன் தலையில் எறிந்தான் தமிழ், “டேய் சீரியசா பேசுடா” என்றான் வாயை அசைத்த படியே.
“அப்ப உனக்கு ஒகேயா?” என்று கேட்டான் அசைவிலேயே, பதில் கூறாமல் ஆதியைபப் பார்த்தான் தமிழ். புரிந்தது கௌதமிற்கு.
“என்னடா உங்களுக்குள்ளயே பேசுறீங்க, டேய் தமிழ் உனக்கு எப்படா தெரியும் இது?”
“நேத்து பா”
“உனக்கு எப்படா தெரியும்?” என்றார் ஆதியை பார்த்து, “ஒரு அஞ்சு வருஷம் இருக்கும்” என்றவனை ஆச்சிரியமாக பார்த்தார், “அப்ப ஏண்டா அவனை தடுக்கல நீ?”
“அவன் உங்க பசங்களோட பிரின்ட் பா, தப்பானவன் இல்ல. உங்கள விட நல்லாவே பாத்துக்குவான். ஒரு நாள் கூட வெளிய தனியான்னு இந்த ஒரு வருசத்துல பவித்ராவை கூட்டிட்டு போனது இல்ல. எல்லாத்துக்கும் மேல பவித்ரா படிப்பு கெட்டு போயிர கூடாதுனு நாலு வருசமா அவளை பாக்குறதோட சரி அதுக்கு மேல ஒரு பேச்சு பேசுனதுல இல்ல லவ் பன்றேன்னு தொல்லை பண்ணி. அவளுக்கு அவன்மேல் இன்டெரெஸ்ட் இருக்குனு தெரிஞ்சும் அவன் அவ படிப்பு முடியட்டும்னு வெயிட் பண்ணுனான். என் தங்கச்சிக்கு அவனை விட வேற யாருப்பா நல்ல பையனா வர முடியும்? தமிழ் கிட்ட சொன்னது தான் உங்கட்டயும் சொல்றேன் அவங்க இதுல இறங்குறதுக்கு முன்னாடி பல தடவ யோசிச்சு தான் பன்னிருப்பாங்க, தேவ இல்லாம எதுக்குப்பா பிரிக்கணும். நம்ம பவித்ராவை அம்மா மாதிரி பாத்துக்குவான் பா”
ஆழ்ந்த யோசனையில் மூழ்கினார் நந்தன். அவர் அருகில் வந்த ஷீலா கணவரின் தோளில் கை வைக்க, மனைவியின் பக்கம் திரும்பியவர் என்ன செய்வது என்று கண்ணிலே கேட்டவரிடம் சிறிய கண் சிமிட்டலில் சம்மதத்தை தெரிவிக்க கௌதமை நோக்கி, “ஏன் எதுவும் பேச மாட்டிக்கிற கெளதம்?” என்றார்.
“ரொம்ப வருசமா லவ் பண்றேன் பா. தங்கச்சி மாதிரிதா பாக்கணும்னு பல தடவ என்னையே திட்டிருக்கேன் ஆனா நெட்டை கொக்குனு அவ என்ன கூப்புடுறப்ப அப்டியே எல்லாமே மறைஞ்சிடும். ஆனாலும், பெத்த பிள்ளையை பாக்குற மாறி நெனைக்கிற உங்களையும், வீட்டுல ஒருத்தரா நெனைக்கிற தமிழையும் யோசிச்சு, யோசிச்சு எல்லாத்தையும் உள்ளயே வச்சேன். ஆனா ஏக்கமா பவித்ரா என்ன பாக்குறப்ப எல்லாம் என்னமோ பண்ணும் மனசு. அவ என்ன மூணு வருசமா லவ் பண்ரா ஆனாலும் ஒரு வார்த்தை கூடச் சொன்னது இல்ல நேரடியா, எங்க பிரண்ட்ஷிப்பை நெனச்சு.
என்ன என்னமோ பண்ணி பாத்தும் முடியலபா அவளை தவற வேற யாரையும் மனசு தேடலை, அதான் உங்க கைல கால விழுந்து ஆச்சும் கல்யாணம் பன்னிக்கனும்னு தைரியமா லவ் சொன்னேன். இப்ப கூட நீங்க முடியாதுனு சொன்னா என்னால உங்ககிட்ட வாதாட முடியாது ஆனா அவளுக்காக எவ்ளோ வருஷம் நாலும் நா வெயிட் பண்ணுவேன். ஆனா எங்க கல்யாணம்னு ஒன்னு நடந்த அது உங்க எல்லாரோட சம்மதம் இருந்தா மட்டும் தான் நடக்கும். ஒன்னு மட்டும் சொல்றேன்பா ராணி மாதிரி பாத்துக்குவேன்னு சொல்ல என்கிட்ட எதுவும் இல்ல ஆனா என் மனைவியா அவளை சந்தோசமா வச்சுக்குவேன், அம்மா இல்லாத குறைய அவ தான் என் வாழ்க்கைல தீத்து வைக்கணும்னு காத்துட்டு இருக்கேன்”
நீண்ட பெருமூச்சு விட்டு, “ஆத்தி, எவ்ளோ பெரிய ஸ்பீச்” என்று கண்ணை மூடி திறந்த ஆதியின் வார்த்தை விறைப்பாக இருந்த தமிழையும் சிரிக்க வைத்தது.
“சரிம்மா வாங்க இட்லி ரொம்ப நேரமா அடுப்புல இருக்கு கறி கொளம்பு வாசனை வேற ரொம்ப நேரமா கூப்புடுது, சட்டு புட்டுன்னு போட்டா சாப்பிட்டே படம் பாக்கலாம்ல” என்று ஷீலாவை சமையல் அறைக்குள் இழுத்தான்.
“டேய் ஆதி ப்ளீஸ் டா” கெஞ்சினான் கெளதம், “அவங்கள பேச விடு”.
“டேய் குருட்டுப் பயலே, அங்க பாரு எப்படி கண்ணு மின்னுதுன்னு” என்று நந்தனை காட்டினான் ஆதி, “அவர் அப்பயே ஓகே சொல்லிட்டாருடா நீ பேசுறியான்னு தெரிஞ்சுக்கதா உன்ன பேச விட்டு வேடிக்கை பாத்துருக்காரு பெருசு”
“ஆமா கெளதம்…” என்றவரை இடை நிறுத்தி, “அப்பாவை வந்து பேச சொல்லணும் அது தான?” என்று ஆதி கேட்க ஆமாம் என்று நந்தன் தலை அசைத்தார், “அவர் தெரு முக்குல தான் நிக்கிறாரு போய் கூட்டிட்டு வாங்க, குடும்பமே பிளனோட தான் வந்துருக்காங்க. இப்ப நீங்க இவனுக்கு ஓகே சொல்லாட்டி அவர் வந்து பேசியிருப்பார்” ஷீலாவிடம் திரும்பியன், “இப்ப கறிக் குழம்பு போட முடியுமா முடியாதா?” என்றான் வெற்று கோபத்துடன்.
“இவன் ஒருத்தன் மாமிசத்தை கட்டியே அழுகுறான், வா எடுத்து வைக்கிறேன்” என்று திட்டிக்கொண்டே உள்ளே சென்றார் ஷீலா.
“ஐய் அப்ப நான் இந்த வீட்டுக்கு மாப்பிள்ளை ஆகிட்டேனா” மூஞ்சில் பெரிய பல்பு எரிந்தது கௌதமிற்கு, “மா அந்த நல்லிய எடுத்து உங்க மாப்பிள்ளைக்கு வைங்க” என்றான் சந்தோசத்துடன்.
“எப்ப பாத்தாலயும் கனவுலயே இருக்க. நீ மாப்பிள்ளையாவே இருந்தாலும் எனக்கு தா நல்லி எலும்பு பொழச்சு போ வேணும்னா உனக்கு சாறு ஊத்தச் சொல்றேன்” தலையை முடியாது என்று ஆட்டிய கெளதம், “அதெல்லாம் இல்ல எனக்கு தான் வேணும்” என்று அடம் பிடிக்க, “டேய் ஒத்துக்க வச்ச எனக்கு பிரிச்சு விடவும் தெரியும் பண்ணவா?” என்றான் ஆதி புருவத்தை உயர்த்தி.
“என்ன மாப்ள எனக்கு சாறு கூட வேணா வெறும் இட்லி போட்டா போதும்” என்று சமையல் அறையை நோக்கி ஓடினான், “டேய் கெளதம் அந்த பாயை எடுத்து விரி” என்றான் ஆதி வெட்டி முறித்த அலுப்பில்.
“இந்தா எடுத்துட்டு வரேன்” உள்ளே இருந்து வந்தது கௌதமின் குரல், “அப்பாடா அடுத்த அடிமை சிக்கிட்டான்” மனதில் இருந்த நிம்மதியை உணவு உண்டு அடக்கி வைத்தான் ஆதி.
Story pudichirukaa?? Comment please…
First chapter ku vantha interest 2nd chapter ku illa… any reasons?
