Skip to content
Post Views: 2,078
மாலை லஷ்மி சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அவளை அலுவலகத்தில் போய் பிக்கப் செய்து கொண்டு மருத்துவமனை சென்று விட்டான் வாத்சல்யன்..
தீக்ஷன்யா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை..! கைராசிக்கார மருத்துவர் டாக்டர் இந்திரஜா தொட்டு பேசினால் கூட குழந்தை பிறந்து விடுமாம். சொந்தக்கார அத்தைக்காரி ஒருத்தி.. ‘ஒரு முறை போய் பாத்துட்டுத்தான் வாயேன்..’ என்று வலியுறுத்தி விட்டு சென்றதன் விளைவாக இதோ இங்கு வந்து அமர்ந்திருக்கிறார்கள் தம்பதிகள் இருவரும்.
ஒருமுறை போய் பார்ப்பதால் பிரச்சனை ஒன்றுமில்லைதான்.. ஆனால் பல்வேறு மருத்துவமனைகளில் தன் உடல் கூறு முழுவதையும் பரிசோதித்து வைத்திருக்கும் மருத்துவ அறிக்கைகள் எதுவும் செல்லாது என்ற நிலையில் மீண்டும் சோதனைகளை அடித்தளத்திலிருந்து தொடங்க வேண்டுமெனும் போதுதான் சலிப்பு தட்டி விடுகிறது.
குழந்தை பிறக்கணும்னா கஷ்டப்பட்டுத்தான் ஆகணும்..
Advertisement
ஏன் கஷ்டப்படாமலா இருக்கிறோம்..! இந்த பத்து வருடத்தில் அவள் அனுபவிக்காத வேதனைகள் இல்லை.. முக்கால்வாசி இந்த சமுதாயத்தாலும் சுற்றத்தாலும் கொடுக்கப்படும் அழுத்தங்கள்..
குழந்தை இல்லா தம்பதிகள் மனமுடைந்து தற்கொலை என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு.. “இதுக்கெல்லாமா தற்கொலை பண்ணிக்குவாங்க..!” என கணவனின் தோள் சாய்ந்து அந்த தம்பதிகளின் முட்டாள்தனத்திற்காக கவலைப்பட்ட சந்தான லஷ்மி.. அடுத்த ஒரு சில வருடங்களிலேயே.. கவனிப்பாரற்று கிடக்கும் நிலத்தில் பரவி ஆக்கிரமிக்கும் விஷத்தன்மை வாய்ந்த பூஞ்சை செடிகளை போல்.. அதே ஏச்சு பேச்சுகளையும்.. மன உளைச்சலையும் அனுபவிக்க ஆரம்பித்திருந்தாள்.
எத்தனை யுகங்கள் மாறினாலும் டெக்னாலஜி வளர்ந்தாலும் மக்கள் மாறப்போவதில்லை.. ஆனால் அவர்களை சொல்லியும் குற்றமில்லை என தோன்றியது. திருமணம்.. அடுத்து குழந்தைதானே..! அப்போதுதான் அந்த குடும்ப வட்டம் பூரணமடையுமாம்.. என்ன ஏதாவது விசேஷம் உண்டா..? அவர்கள் மிக சாதாரணமாக கேட்கும் ஒரு விஷயம் கூட.. இயலாமையின் காரணமாக தனக்குத்தான் பெரிய குற்றமாக தன்னை குத்திக் காட்டுவதாக தோன்றுகிறதோ என ஒரு சில நேரங்களில் நினைப்பதுண்டு.
Advertisement
இவர்களின் பக்கத்தில் ஒரு இளந்தந்தை தனது மூன்று வயது மகனை மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்க.. வாத்சல்யன் அவர்களோடு கலகலத்து கொண்டிருந்தான்.
Advertisement
சின்னவன் மழலையில் வளவளவென்று ஏதோ பேச.. அதை தங்கள் பாஷையில் மொழிபெயர்த்து கொண்டிருந்தான் தகப்பன்.. வாத்சல்யன் இதை சுவாரசியத்தோடு கேட்டுக் கொண்டிருந்தான்.. அவன் விரல்கள் அடிக்கடி குட்டி பையனின் கன்னத்தை வாஞ்சையோடு தொட்டு வருடியது.
தன் கணவனுக்காகவேனும் எப்பாடுபட்டாவது ஒரு குழந்தையை பெற்று தந்துவிட வேண்டும் என்ற தீவிரம் சமீப காலங்களாக அவள் நெஞ்சில் பரவி வேருன்றி நிற்கிறது..
சின்ன குழந்தைகளை பார்க்கும்போது அவன் கண்கள் மின்னுவதையும்.. சந்தான லஷ்மி அவனை உற்று கவனித்து விட்டால்.. எங்கே தன் மனைவி வேதனை படுவாளோ என தன் குழந்தை ஆசையை அடக்க முடியாமல் திணறுவதையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.
Advertisement
இந்த குழந்தை பேறுக்காக போகாத கோவில்கள் இல்லை ஏறாத மருத்துவமனைகள் இல்லை.. இதில் துரதிர்ஷ்ட நிலை என்னவெனில் இதுதான் குறை என்று கண்டறிந்து சொல்லிவிட்டால் அதற்கான வழியை தேடலாம்.
இரண்டு பேருக்கும் எந்த குறைகளும் இல்லையாம்..! நிச்சயமாக குழந்தை பிறக்குமாம்.. இப்படிச் சொல்லிச் சொல்லியே ஐந்து வருடங்கள் ஓடிவிட்ட நிலையில்.. செயற்கை கருத்தரிப்புக்கு முயற்சி செய்யலாமே என்ற மருத்துவரின் ஆலோசனை பெயரில் IUI, IVF.. இரண்டையும் கூட முயற்சி பண்ணி பார்த்தாயிற்று.. எந்த பலனும் இல்லை.. அழுகையும் கண்ணீரும்.. செலவழிந்து போன பணமும் மன உளைச்சலும் மட்டுமே மிச்சம்.
வொர்க் அவுட் ஆகலையா..? எங்களுக்கே ட்ரீட்மெண்ட் லதான் குழந்தை பிறந்தது. எங்க நவீனுக்கு இப்ப அஞ்சு வயசு..! என்று சில அக்கம் பக்கத்து அல்லது அலுவலக பெண்கள் ஆச்சரியப்படும்போது.. நெஞ்சுக்குள் சீழ் பிடித்த போயிருக்கும் ரணம்.. குத்தலெடுப்பதை தாங்கவே முடிவதில்லை.
அதற்குள் காலம் இரண்டு வருடங்களை விழுங்கி இருந்தது..
உங்க குடும்பத்துக்கோ எங்க குடும்பத்துக்கோ ஏதாவது சாபம் இருக்கலாம்.. என நேர்த்திக்கடன்.. குலதெய்வ வழிபாடு.. பூ மிதிக்கணும்.. பால்குடம் எடுக்கணும்..! இன்னும் என்னென்னவோ..!
அத்தனையும் செய்து பார்த்தாயிற்று..
“உனக்கு தெரியாதுல்ல..! இந்த வீட்டு ஆளுங்க.. இவங்க முப்பாட்டன் காலத்துல.. வரிசையா பொறந்த பொம்பள பிள்ளைகளை கள்ளிப்பால் ஊத்தி கொன்ன சம்பவமெல்லாம் இருக்குது. இதெல்லாம் வெளியே யாருக்கும் தெரியாது.. நான் சொன்னேன்னு உன் மாமியார் கிட்ட சொல்லிடாத.. ஏற்கனவே அவளுக்கும் எனக்கும் ஆகாது.. அந்த பாவந்தான் உனக்கு பிள்ளை பிறக்கலையோ என்னவோ..!” கடைத்தெருவுக்கு சென்று வரும் வழியில்.. தங்கள் வீட்டிலிருந்து மூன்று வீடு தள்ளி.. அந்த வீட்டின் வயதான கிழவி லஷ்மியை அழைத்து இப்படி ஒரு கதையைச் சொல்ல.. கூடுதலாக ஒரு பாரம் ஏறிக் கொண்டது மனதில்.
‘ஒருவேளை அப்படி ஒரு சாபம்தான் எனக்கு குழந்தை பிறக்கலையா என்ன..? குடும்பத்துக்கே சாபம்ன்னா முரளிக்கு குழந்தை பிறந்திருக்குதே..! அவரும் இந்த வம்சத்து வாரிசுதானே..? இந்தக் கிழவி சொல்றதெல்லாம் கட்டுக்கதை.. ஏதாவது பேசணும்னு பேசி மனசை குழப்புது..!
ஆனாலும் பெண் சிசுக்களை கொல்லுவது எவ்வளவு கொடுமையான செயல்.. இதொன்னும் அந்த காலத்துல நடக்காதது இல்லையே..! ஒருவேளை பாட்டி உண்மையைத்தான் சொல்லுதோ.. அப்படின்னாலும் அந்த பாவம் என் தலையிலயா வந்து விழனும்.. ஒருவேளை உண்மையிலேயே இதுதான் காரணம்ன்னா.. அந்த குடும்பத்தில் இறந்து போன அத்தனை பெண் குழந்தைகளும் எனக்கே வந்து பிறக்கட்டும்..! நான் என் கண்ணாக வளர்க்கிறேன்..” என கண்மூடி மனதுருகி நினைத்துக் கொண்டாள்.
“சந்தா..! அவன் கை தொட்டு அழைக்க..ஹான்..?” என விழித்தாள் சந்தான லஷ்மி.
“டாக்டர் கூப்பிடுறாங்க வா..!” மனைவியை அழைத்துக் கொண்டு கை நிறைய மருத்துவ சோதனை அறிக்கை பேப்பர்களை வைத்துக்கொண்டு.. மருத்துவரின் முன்பு அமர்ந்தான் வாத்சல்யன். லக்ஷ்மி ஆர்வமற்று மருத்துவரின் முகத்தை பார்த்திருந்தாள்.. அவர் நெற்றி ரேகைகளில் தெரிந்த குழப்பம் என்ன பதில் சொல்லப் போகிறார் என்பதை முன்னமே உணர்த்திவிட்டது அவளுக்கு.
“வழக்கம்போல் தான்..! உங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.. ஆனா ஏன் இவ்வளவு டிலே ஆகுதுன்னு எங்களுக்கும் புரியல..!” என்று இருவரையும் பார்க்க.. “போகலாமா எனக்கு தலை வலிக்குது!” என கணவனிடம் முணுமுணுத்தாள் லக்ஷ்மி..
கர்ப்பப்பையில் சிஸ்ட் இருக்கு..! கர்ப்பப்பை சரியா வளர்ச்சி அடையவில்லை.. ஒரு குழந்தையை தாங்கற அளவுக்கு உங்க கர்ப்பப்பைக்கு சக்தி இல்லை.. ஃபெலோபியன் ட்யூப் வீக்கா இருக்கு.. இப்படி ஏதாவது காரணங்களை சொல்லி இருந்தால் கூட ஆறுதல் அடைந்திருப்பாளோ என்னவோ.. இதற்கான சிகிச்சையை செய்து கொண்டு, குழந்தை பெறுவதற்காக காத்திருக்கலாமே..!
ஒரு நோயும் இல்லாமல் உடம்பு ரீதியான கோளாறுகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் புரியாத புதிரான இந்த சித்ரவதை கொடுமையாய் இருந்தது.
“இன்னொரு முறை வேணா செயற்கை கருத்தரிப்பு முயற்சி பண்ணி பார்க்கலாம்..”
“இல்ல வேண்டாம்..! புறப்படலாம் வாத்சா..!” சொல்லிவிட்டு முன்னால் நடக்க.. திகைப்போடு டாக்டரையும் தன் மனைவியையும் மாறி மாறி பார்த்தவன்..
“சாரி டாக்டர்..! அவ கொஞ்சம் மூடு அவுட்ல இருக்கா..!” என்று அசடு வழிந்து.. “பரவாயில்லை எனக்கு புரியுது.. நீங்க அவங்களை பாருங்க” என டாக்டரின் பெருந்தன்மையான பதிலை வாங்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
காரில் ஏறி அமர்ந்திருந்தாள் சந்தான லஷ்மி..
கோபத்தோடு அவளைப் பார்த்துக் கொண்டே வந்து காரில் ஏறியவன் கதவை அறைந்து சாத்தினான். அதை கண்டுகொள்ளாதவள் போல் மறுபக்கம் திரும்பியிருந்தாள் அவன் மனைவி.
“உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்காடி..! படிச்சவதானே நீ.. இப்படித்தான் பிஹேவ் பண்ணுவியா..?” காரைக் கிளப்பி கொண்டே அவளிடம் கேட்டான்.
“இப்ப என்ன பண்ணிட்டேன்.. டாக்டரை திட்டினேனா இல்ல ஓங்கி அறைஞ்சிட்டேனா..! எனக்கு அங்கிருக்க பிடிக்கல.. டீசண்டா எழுந்து வெளியே வந்தது ஒரு தப்பா..!”
“அவங்க நமக்கு ஹெல்ப் பண்றாங்க உனக்கு புரியலையா..?”
“இருக்கட்டும்.. அவங்களுக்குத்தான் இந்த பதில் புதுசு.. ஆனா எனக்கு? ஏழெட்டு வருஷமா கேட்டு கேட்டு சலிச்சுப் போன ஒரு தேவையில்லாத வார்த்தை.. திரும்பத் திரும்ப இதையே கேட்க நான் தயாரா இல்லை.”
அவள் உணர்வுகளை வாத்சல்யனால் புரிந்து கொள்ள முடிந்தது. நெஞ்சுக்குள் மண்டி கிடந்த துயரத்தோடு..
“அம்மு..! இன்னொரு முறை ட்ரை பண்ணி பார்க்கலாம்ன்னு சொன்னாங்களேடா..!” குரல் இளகினான்.
“போதும் வாத்சா..! திரும்பத் திரும்ப.. வலி வேதனை எதிர்பார்ப்பு ஏமாற்றம் இதை அனுபவிக்க நான் தயாரா இல்லை.. எனக்கு பயமா இருக்கு.. அப்படி கண்டிப்பா உங்களுக்கு குழந்தை வேணும்னா நீங்க சுமந்து பெத்தெடுங்க..!” கோபத்தில் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் படபடத்தாள் லஷ்மி.
வாத்சா அந்த டென்ஷனிலும் சிரித்தான். “என்னால முடிஞ்சா நான் உனக்கு பெத்து கொடுக்க மாட்டேனா..?
“அப்போ என்னால முடியல..! அதைத்தானே சொல்ல வர்றீங்க..!”
“சாதாரணமா பேசற வார்த்தையை இழுத்து வச்சு சண்டை போடாதடி..! அப்படியெல்லாம் யோசிச்சு பெர்ஃபெக்டா எனக்கு பேச தெரியாது..”
“உங்களுக்கு குழந்தை வேணும்னா தாராளமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்களேன்..! நானா வேண்டாம்னு சொல்றேன்..”
“நானும் வேண்டாம்ன்னு சொல்லல.. நீதான் எனக்கு பொண்ணு பாரேன்..! எனக்கு என்ன வேணும், வேண்டாம்னு உனக்குத்தானே தெரியும்..!” வாத்சா கண்சிமிட்டி சற்று நகர்ந்து வந்து அவள் தோளோடு இடித்து சீண்டினான்.
“ஹான்..! பாக்கறேன் பாக்கறேன்.. வாய தொறந்தாலே தூக்கி போட்டு மிதிக்கற பொண்ணா பாக்கறேன்..”
“ஐயோ..! அதுக்குத்தான் நீ இருக்கியே..! அடுத்தவளாச்சும் சாந்தமா அடக்க ஒடுக்கமா இருந்தாத்தானே வாழ்க்கை ரம்யமாக போகும்..!” சொல்லி முடித்த கையோடு பல அடிகளை அவளிடமிருந்து வாங்கி கட்டிக் கொண்டான்.
“ஏ….ய் அடிக்காதடி.. ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன்..” வாத்சா சிரித்தான்.
“மாப்பிள்ளைக்கு இன்னொரு பொண்ணு கேக்குதோ..! எவ்வளவு திமிரு.. எங்கிட்டயே பொண்ணு பார்க்க சொல்லுற..! பொண்டாட்டி என்ன நினைப்பா.. எவ்வளவு வருத்தப்படுவா எதையும் யோசிக்கிறதில்லை..! மனசுல உள்ள எண்ணந்தான் வார்த்தையா வெளியில வருது..!”
“ஏய்.. லுசு..! எப்பவும் இதையே சொல்லிட்டு இருந்தா எனக்கும் கோபம் வருதுல்ல.. உன்னை திட்ட மனசு வரமாட்டேங்குது.. அதான் இப்படி விளையாட்டா பேசி கடுப்பாக்கினாலாவது அடுத்த முறை இப்படி பேச மாட்டியேன்னு ஒரு நப்பாசை!”
“நான் சீரியஸாத்தான் சொல்றேன் வாத்சா..! பேசாம நீங்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்களேன்.. உங்கம்மாவும் தங்கச்சியும் போன வருஷமே இந்த பேச்சை ஜாடை மாடையா ஆரம்பிச்சிட்டாங்களே..!”
“எரிச்சல் பண்ணாம அமைதியா இரு..!” மிளகாயை கொட்டியது போல் அவன் முகம் கடுகடுவென சிவந்தது.
“வாத்சா..!”
“உன்னை பேச கூடாதுன்னு சொன்னேன்.. ஒரு விஷயம் மட்டும் தெரிஞ்சுக்கோ.. இதுவரைக்கும் நமக்கு எந்த குறையும் இல்லை. அப்படித்தான் ரிப்போர்ட்டும் சொல்லுது.. ஒருவேளை பிரச்சனை உனக்கோ இல்ல எனக்கோ இருந்தாலும் சரிதான்.. அதை நம்ம பிரச்சினையா பார்க்கனும்.. ஃபேஸ் பண்ணனும்.. அப்படித்தான் நான் நினைக்கறேன். ஒருவேளை எனக்கு குறை இருக்கறதா தெரிய வந்துச்சுன்னா.. நீ வேணும்னா இன்னொரு கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கோ..!” சொல்லி முடிக்கையில் அவளிடமிருந்து விம்மல் சத்தம் கேட்டது.
வாத்சல்யன் லஷ்மியை சமாதானப் படுத்தவில்லை.. இறுகிய வதனத்தோடு காரோட்டிக் கொண்டிருந்தான்.. அவள் பேசிய வார்த்தைகளின் வீரியமும் கோபமும் அவன் முகத்தில் தெரிந்தது. அவளே அழுது அடங்கி.. பிறகு அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்..
இமை தாழ்த்தி பார்த்தவனின் கண்கள் கனிந்து ஈரப்பதத்தோடு பளபளத்தது.
இருவருக்குமிடையில் நீடித்த அந்த மௌனம் அவர்கள் புரிதலை சொல்லாமல் சொல்லியது.
தொடரும்.
error: Content is protected !!
நல்ல கணவன், மனைவி தான் நீங்க ஆனால் பிள்ளை வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்குதான் கடவுள் பிள்ளை வரம் தருவதில்லை
இந்த ஊர், உலகம் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் நீங்க ஒருவருக்கு ஒருவர் அன்பா, ஆசையாக புரிஞ்சி நடந்துக்கும் போது யாரும் குறுக்குல வரமுடியாது
வாத்சல்யன் அல்டிமேட் கேரக்டர்
வாத்சா லக்ஷ்மி இரண்டு பேரும் இப்படியே புரிதலோட இருங்க, பேசறவங்க ஆயிரம் பேசட்டும். அதுங்க எல்லாம் திருந்தாத ஜென்மங்க. இவங்களோட புரிதல் பாக்க ரொம்ப அழகா இருக்கு writer Ji
என்னடா கொடுமை இது லஷ்மி நினைப்பது போல எதாவது பிரச்சனையா இருந்தா கூட பரவால்ல ன்னு சொல்லலாம் ஆனா எந்த பிரச்சனையும் இல்லாமல் குழந்தை பாக்கியம் கிடைக்காம இருப்பது எவ்வளவு வேதனை 😔😔😔
வாத்சா உன்ன ரொம்ப பிடிக்குது பா ரொம்ப அருமையான கேரக்டர் மட்டும் இல்ல ரொம்ப ரொம்ப அருமையான கணவன் நீ 🥰🥰🥰❤️❤️
நம்பிக்கையோட இருங்க…நல்லதே நடக்கும்…😔😔😔
இப்போதெல்லாம் கள்ளக்காதலுக்கு இடையூராக இருப்பாதாக நினைச்சு பச்சைக் குழந்தை ய கொலை செய்ற சம்பவம் அடிக்கடி நடக்குறத படிக்கிறப்போ என்ன சொல்றது னே தெரியல. இந்த எபிசோட் குழந்தையில்லாத தம்பதியின் வலி ய காட்டுது
இது ரொம்ப கொடுமை… ரெண்டு பேத்துக்கு எந்த பிரச்சனையும் இல்ல…ஆனால் குழந்தை இல்லை… 💔
இந்த குடும்பத்துல இறந்து போன அத்தனை பெண் குழந்தைகளும் எனக்கே வந்து பிறக்கட்டும்… இதை படிக்கும்போது உடம்பு சிலிர்த்துடுச்சு.🥺
Illa illa velaiya irundhu vara pressure eh avangala peaceful ah vidathu 😟😟😟😟😟