Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 31.1

“ஆதவா…”

பேச வந்த உதய்யை நிறுத்தினான், “சொல்லாதடா என் பேர” விஷத்தை நாவில் தடவி ஆதவன் பேச அவனை அடக்க வந்தான் தமிழ்.

“ஆதவா பொறுமையா இரு… நீ பேசுறது செய்றது எதுவுமே சரியில்ல”

“சரியில்லாமயே இருந்துட்டு போகட்டும். இவன மாதிரி மனுஷ மிருகங்ககிட்ட எல்லாம் இப்டி தான் கைல பேசணும்” – ஆதவன்



Advertisement

ஆதவன் பற்றியிருந்த உதய்யின் சட்டையை விட்டு பிரித்த கெளதம், “என்னடா ரொம்ப தான் பண்ற.. நானும் வந்ததுலயிருந்து பாக்குறேன் பைத்தியம் மாதிரி நடந்துக்குற” ஆதவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டான் கெளதம்.

ஒரு அடி பின்னால் சென்ற ஆதவனின் கால்கள் தடுமாற உதய்யின் கைகள் தன்னிச்சையாக அவனை பிடிக்க செல்ல அதற்குள் தானே சுதாரித்தான் ஆதவன் கால் ஊன்றி நின்றுகொண்டான்.

உதய் பக்கம் வந்து நின்ற ஆதவன் தந்தை அவன் தோள் பற்றி, “என்ன ஆச்சு உதய்? ஏன் இவன் உன் மேலயே கோவமா இருக்கான்?” என்றார் அவன் சட்டையை சரி செய்து.

Advertisement

உதய் மீது ஆதவனின் தந்தைக்கு அவ்வளவு மரியாதை உண்டு, தொழில்ரீதியான முறையில் மட்டுமல்ல. தன்னை கொலை செய்யவும் துணிந்து நிற்கும் நண்பன் அந்நியமாகிப்போனான் உதய்க்கு, “தெரியல அங்கிள் காதல் கண்ண மறச்சிடுச்சு போல”

Advertisement

உதய்யின் வார்த்தையில் இன்னும் கோவம் வர, “ஆமா டா.. மறச்சிடுச்சு. உன் கண்ண எப்படி பழி மறச்சிடுச்சோ அதே மாதிரி பதினஞ்சு வருஷம் லவ் என்னோட கண்ண மறச்சிடுச்சு”

சீறி அந்த வளாகமே அதிரும் வகையில் கத்தினான். அப்பொழுதும் பொறுமையாக நின்ற உதய் ஆதவன் அருகில் சென்று அவன் தோளில் கை போட்டு, “ஆதவா பொறுமையா இரு. யோசிச்சு பேசுற நிலமைல நீ இல்ல”

அவன் கையை தட்டிவிட்ட ஆதவன், “நான் நல்லா நிதானமா தெளிவா தான் இருக்கேன்” தன்னுடைய பாண்ட் பாக்கெட்டில் இருந்து ஒரு கவரை எடுத்து உதய்யின் முன் எறிந்தான்.

Advertisement

சில புகைப்படங்கள், ஒரு நாணயம் வடிவிலான வட்ட முத்திரை பதித்திருந்த வெள்ளி உலோகம் ஒன்றும் உடன் இருந்தது. அதை பார்த்த உதய் கையில் எடுத்த பொழுது ஆதவனின் ஆத்திரம் புரிந்தது. அது உதய்யின் நெருங்கிய பாதுகாவலர்கள் மட்டுமே வைத்திருக்கும் வெண்கல நாணயம். உதய்க்காக சிலர் அவன் அனுமதியோடு சில இல்லீகல் வேலைகளை நிழலுலகில் செய்வதற்கு என்றே தனியாக நியமிக்கப்பட்டிருந்த சில காவலர்களுக்கு கொடுக்கும் நாணயம் அது. அலுவலக முத்திரை பதித்திருந்த அந்த நாணயத்தின் கீழ் உதய் மாதவன் என்ற அவன் பெயரும் இருந்தது.

இதை போல் உதய்யின் தந்தைக்கும், சித்தப்பாவும் சில ஆட்கள் இருப்பதுண்டு. அதை போலவே அந்த புகைப்படங்களில் உதய் மாதவனின் ஆட்கள் பிரத்யேகமாக பயன்படுத்தும் வாகனத்தின் அடையாளமாக அந்த வாகனத்தின் ஸ்டியரிங் வீலில் மாட்டியிருந்த தங்கத்தில் செய்திருந்த கார் வடிவ சிறிய அலங்கார பொருள்.

“என்ன பேச முடியலல? எப்படி பேசுவ? கொலை பண்ண ஆள் அனுப்புனவன் மாட்டிக்கிட்டா பேச்சு எப்படி வரும்?” – ஆதவன்

“முட்டாள் மாதிரி பேசுற ஆதவா… அவன் எதுக்குடா தேவையே இல்லாம சஹானாவை கொலை பண்ண போறான்?” – தமிழ்

“இத அவன்கிட்ட நீயே கேளு… நிறம் வெளுத்துக்கு அப்றம் உண்மை வெளிய வர தானே செய்யும்?” – ஆதவன்

“நீ ஏதோ தப்பா புரிஞ்சுக்குற ஆதவா… இதெல்லாம் என்ன எதுன்னு எனக்கு சாத்தியமா தெரியல”

தன்னிலை விளக்கத்தை கூறும் முன், “போதும்டா… உனக்குள்ள இவ்ளோ வன்மம் இருக்குன்னு தெரியாம போச்சு. ஆதி உன் தம்பிய ஜெயில்ல தள்ளுனத்துக்கு அவன் லவ் பண்ற பொண்ண நீ பொண்ணு கேட்டு போயிருக்க, அப்பவும் அடங்காம உன்கிட்ட தன்னோட அண்ணனோட லைப்காக சண்டை போட்டு நின்ன சஹானாவை கத்திய வச்சு குத்தி ஆக்சிடென்ட் பண்ணிட்ட… சோ உன்ன எதிர்த்து யார் நின்னாலும் அடுத்த கொஞ்ச செகண்ட்ல அவங்கள ஏதாவது ஒரு வகைல அமைதியாக்கிடனும்? அப்டி தான?” நிச்சயம் இதை எல்லாம் உதய் எதிர்பார்க்கவே இல்லை.

என்ன நிகழ்த்திருந்தாலும் உன் மேல் தவறில்லை என்று வந்து நிற்கும் நண்பனை தானே எதிர்பார்த்தது அவன் நெஞ்சம்… மீண்டும் அந்த பாவப்பட்ட நெஞ்சத்தில் ஒரு ஈட்டி குத்து.

“அவன் அப்டி எல்லாம் பண்ணிருக்க மாட்டான்” கெளதம் அடித்து கூறினான்.

“எங்க அவனை இல்லனு சொல்ல சொல்லு” ஆதவன் உதய்க்கு சவால் விட்டான்.

எதுவும் பேசாத உதய் ஆதியை பார்த்தான், அவனோ இங்கு நடப்பவை அத்தனையும் காதில் வாங்கினாலும் எதுவும் பேசும் நிலையில் இல்லை.

“உதய்…” மௌனமே சமதமாய் எண்ணி தமிழ் வியக்க, கௌதமின் மனதிலும் அதே நிலை. எல்லாம் பொய்த்துப்போனது போல்.

“தப்பு உதய் நீ பண்றது… ரொம்ப பெரிய தப்பு” கெளதம் ஒரே நொடியில் மாறிவிட அதை எதிர்பார்த்தே ஆதியிடமிருந்து கண்களை திருப்பினான் உதய்.

“மனசுல எப்ப உதய் உனக்கு இப்டி ஈரமே இல்லாம போச்சு?” மீண்டும் கெளதம்.

“ஆதி முகத்துல பணத்தை தூக்கி எறிஞ்சப்பவா? இல்ல… ஆதி அப்பா மேல பழியை போடப்பாவோ… எப்பயோ போச்சு” – தமிழ்

“வாழ வேண்டிய பொண்ணு உதய் அது… ஆதிக்காக இல்லனாலும் அட்லீஸ்ட் ஆதவனுக்காக நீ சஹானாவை விட்ருக்கலாம்” கண்களை துடைத்துக்கொண்டே விசும்பினார் ஆதவனின் அன்னை.

மனைவியை சமாதானப்படுத்திய அவர் கணவர், “உன்கிட்ட நான் இத எதிர்பாக்கல” ஏமாற்றம் கண்ணில் தெரிந்தது.

புறக்கணிந்தான் அனைவரையும், நம்பிக்கையோடு ஆதி பக்கம் பார்வை செல்ல, நாவோ, “ஆதி…” ஏகமாய் உச்சரித்தது.

“அவனை ஏண்டா கூப்புடுற? யாருக்காக இத்தனை வருஷம் மாடா உழைச்சானோ அவளே இன்னைக்கு இந்த நிலமைல இருக்குறா.. இன்னும் பேசி அவனையும் எங்ககிட்டயிருந்து பிரிச்சிடாத”

“எதையும் தெளிவா பாக்காம பேசாத ஆதவா… தப்பு அவன் மேல இல்லனா எங்க போய் மூஞ்சிய வப்ப?” தமிழின் அன்னை ஷீலா ஆதவனை கடிந்தார்.

“கைல எல்லா ஆதாரமும் இருக்கு மா… இனி என்ன வேணும் அவனை நிரூபிக்க?” – ஆதவன்

“அவ்ளோ தானே டா உங்களுக்கு என் மேல இருக்க நம்பிக்கை?” தன்னை பொருட்டாய் கூட மதிக்காதவரிடம் தன்னுடைய உணர்ச்சிகளை காட்டி என்ன பலன்? இறுகியது முகத்தோடு அவன் இதயமும்.

“நாலு போட்டோவ பாத்துட்டு என்ன தூக்கி எரிஞ்சவனுக எனக்கு வேணாம். இன்னைக்கு சொல்றேன் நல்லா கேட்டுக்கோங்க… உதய் மாதவன்ற ஒருத்தன் இன்னையோட உங்க வாழ்க்கைல இனிமே இல்ல… அவன் செத்து அஞ்சு நிமிஷம் ஆச்சு. செத்தா கூட என்ன பாக்க வந்துடாதீங்க”

கழுத்தில் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியில் மாட்டியிருந்த வெள்ளி மோதிரத்தை அவிழ்தவன் அதை ஆதியின் காலடியில் தூக்கி எறிந்தான். அந்த மோதிரம், பள்ளி பருவத்தில் உதய் தனக்காக கொடுத்த வெள்ளி சங்கிலியை போலவே அவனுக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆதி பள்ளி விடுமுறை நாட்களில் வேலைக்கு சென்று வாங்கி கொடுத்தது. இன்று வரை அதை உதய் அணிந்திருப்பான் என்ற ஒன்றே அத்தனைபேருக்கும் ஆச்சிரியம் தான் தந்தது.

ஆனால் ஆதியோ தன் காலடியில் விழுந்த மோதிரத்தை கூட கவனிக்கவில்லை. சிகப்பு நிற விடி விளக்கு எறிந்த அந்த ஐ.சி.யூ கதவின் மீது மட்டுமே நிலைத்திருந்தது பார்வை, கவனம் எல்லாம்.

கோவத்தை காட்டாத அவன் குரலில் இருந்த தீவிரத்தை அனைவரும் உணரும் முன் வெளியேறிய உதய்யின் கால்கள் திரும்பியது, “என்ன சொன்ன நான் கொன்னேனா…”

இளக்காரமாக சிரித்தவன்,  “நான் உதய் மாதவன் டா… ஆள வச்சு எல்லாம் கொல்ல வேண்டிய அவசியம் இல்ல… நடு ரோட்டுல கன் எடுத்து, நெத்தி பொட்டுல சுட்டு, தற்காப்புன்னு சொன்னாலும் கோர்ட் வார்த்தை பேசாம தலையாட்டும்” அதே கர்வத்தோடு நடந்தவனின் நடையில் இருந்த வில்லத்தனம் அங்கிருந்தவர்கள் மூலையை உறையவைத்தது.

உதய் முன்னாள் நடக்க நடப்பவை அத்தனையையும் வேதனையோடு நின்று பார்த்துக்கொண்டிருந்த ஜெயன் ஆதவனிடம், “தப்பு பண்றீங்க சார்” திடமான குரலில் எச்சரித்தவன் உதயனை தொடர்ந்தான். அதே போலவே உதய்யின் ஆட்களில் ஒருவன் இங்கு நடந்தவை அத்தனையையும் உதய்யின் தந்தை ரகுநந்தனுக்கு தகவலாய் கூற அங்கு வீட்டையே இரண்டாக்கிக்கொண்டிருந்தார் அந்த பெரிய மனிதர்.

மதியம் மணி மூன்றை தாண்டி தான் காவல் நிலையத்தில் இருந்த அத்தனை சட்ட சடங்குகளையும் முடித்து உதய்யின் ஆள் ஹரியை வீட்டில் வந்து இறக்கிவிட்டிருக்க சில மணி நிமிடங்கள் ஓய்வில் இருந்த ஹரியே பெரியப்பாவின் என்றும் இல்லாத அதி கோவமான பேச்சை கேட்டு கீழே இறங்கினான். வரவேற்பறையில் தான் மொத்த குடும்பமும் இருந்தது… விஷ்ணு, பல்லவி, திவ்யா, தன்னுடைய தந்தை என மொத்த குடும்பமும் இருந்தது… அவன் அன்னையை தவிர.

“என்ன அடக்குறதுலையே இரு ஜெயா நீ… அவனை மாதிரி ஒரு புள்ளைய எதுக்குடா பெத்தோம்னு இருக்கு… பெத்துவிட்டுட்டு அவ போய்ட்டா இப்ப நான் தானே எல்லார் முன்னாடியும் அசிங்க படுறேன்”

ரகுநந்தன் கோவத்தில் கத்த, சமயலறையில் பாத்திரங்கள் கண்டமேனிக்கு உருளும் சத்தம் கேட்டு வேகமாக ஹரி கீழே இறங்கினான். படியின் இறுதியில் விஷ்ணு இருக்கும் பொழுதே சமையலறையிலிருந்து வேகமாக வெளியில் வந்தார் நளினி.

“என்ன நீங்க அசிங்கப்பட்டுட்டீங்க அவனால?” கோவமாக ரகுநந்தனுக்கு சரி சமமாய் நின்றார்.

“என்ன மா… அந்த யோகியானுக்கு நீ சப்போர்ட் பண்ற? ஆதி மணிமேகலையை லவ் பன்னிருக்கான்… தெரிஞ்சும் பொண்ணு கேட்ருக்கான், அதோட நிறுத்தாம அவன் தங்கச்சிய வேற கொலை பண்ண பாத்துருக்கான். இதுக்கும் மேல அவன் கொடுமை என்ன பண்ணனும்?” – ரகுநந்தன்

“உங்களுக்கு தெரியுமா அவன் தான் எல்லாத்தையும் பன்னானு?” – நளினி

“ஆதவன் எல்லாத்தையும் தெளிவா சொல்றான்” பல்லை கடித்து பொறுமையை கடைபிடித்தார் ரகுநந்தன், “என்னத்த புள்ளைய வளத்தேனோ”

“ஊர்ல இருக்குற எல்லாத்தையும் நம்புவீங்க ஆனா நீங்க பெத்த புள்ளைய நம்ப மாட்டீங்க… அப்டி தானே மாமா? அப்றம் என்னமோ புள்ளைய வளர்த்தது பத்தி பேசுனீங்களே… என்னைக்காவது ஒரு நாள் அவனுக்கு நல்லது கெட்டது சொல்லி குடுத்துருக்கீங்களா?”

“அளவுக்கு மீறி இப்ப உன் பேச்சு வருது நளினி… அண்ணன் கிட்ட பேசுற நீ” மனைவியை எச்சரித்தார் ஜெயநந்தன்.

“எனக்கு எல்லாமே தெரியுதுங்க… ஒரு நாள் கூட பிள்ளைங்களை பாத்துகாம குறை மட்டுமே சொல்லிட்டு இருக்குற ஒரு அப்பாகிட்ட பேசிட்டு இருக்கேன்” – நளினி

“என் பசங்கள நான் ஒழுங்கா கவனிக்கலனு சொல்றியா நளினி? என் பசங்களுக்கு என்ன தேவையோ அது எல்லாத்தையும் நான் அவங்க என்கிட்டே கேக்குறதுக்கு முன்னாடியே பண்ணிருக்கேன்” – ரகுவரன்

“பணம், பொருள் மட்டும் தான் சந்தோசம் தருமா மாமா? இப்ப ஹாஸ்பிடல்ல இருக்குற பொண்ணுக்கு உங்க காச வச்சு ஒரு கீறல் இல்லாம கொண்டு வர முடியுமா?” – நளினி

“அவன் பண்ண தப்புக்கு நான் பொறுப்பா மா?” – ரகுவரன்

“இது தான் மாமா உங்க தப்பு… உதயால நல்ல பேர் வந்தப்ப பெருமையா பேசுன நீங்க, அவன் தப்பு பண்றப்ப தட்டி குடுத்து சொல்லி குடுக்க தெரியல. உங்கள விட உதய் நல்லா பிஸ்னஸ் பண்ணான், நல்லா வீட்டை பாத்துக்குறேன், எல்லாத்துக்கும் மேல இந்த குடும்பத்தை பாத்துக்குவான். டெய்லி டைனிங் டேபிள்ல வந்து சாப்பாடு சாப்டுட்டு போறது மட்டும் தான் ஒரு ஆம்பளைக்கு கடமை இல்ல, என்ன தேவைன்னு பாத்து செய்றது”

விஷ்ணு அருகில் சென்ற நளினி, “உனக்கெல்லாம் கண்ணு இருக்குமா இருக்காதா விஷ்ணு? நமக்காக தன்னோட சந்தோஷத்தையே விட்டு குடும்பத்துக்காக வேலை பாத்தவன, வீட்டை விட்டே அனுப்பிட்டு சந்தோசமா இருக்க தான பா?” தன்னுடைய தவறை அந்த நேரமும் உணராமல் நளினியின் வார்த்தையில் தான் வருத்தம் உண்டானது.

“சோகமா முகத்தை வச்சாலும் நீ பண்ணது தப்பு தான் விஷ்ணு”

கணவனை பார்த்தவர், “இவனுங்க ரெண்டு பேரும் வாரத்துல மூணு நாலு நாள் தண்ணி அடிச்சிட்டு வீட்டுக்கு வருவாய்ங்க… தெரியுமா உங்களுக்கு? அத அந்த பையன் எவ்வளவோ சொல்லியும் கேக்காம இருந்ததும் தான் இன்னைக்கு போலீஸ் ஸ்டேஷன்ல ஒக்கார வச்சான் உதய். அத புரிஞ்சுக்க முடிஞ்சதா நம்மளால? அதுக்கும் அந்த பையன தப்பு சொல்லி வேலைய விட சொன்னது கூட பரவால்ல, கணக்கு கேட்டீங்க பாருங்க…”

பேசிக்கொண்டிருந்த பொழுது வந்த அழுகை எல்லாம் விசும்பலாய் வெடித்தது அவருக்கு, ஹரி வேகமாக வந்து அன்னையை அணைத்தான். அவரோ அவன் கையை உதறி, “கேட்ட எனக்கே மனசு அப்டி வலிச்சது… என் பையனுக்கு எப்படி இருந்துருக்கும்?”

“ம்மா…” அன்னையின் அழுகையை பார்க்க முடியாமல் பல்லவி அன்னையின் கையை பிடிக்க வர, அதையும் உதறினார், “அவனை பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்ல”

ரகுநந்தனை பார்த்து நளினி கூற, அவர் பேசியதை கோவத்தோடு கேட்டிருந்தவர், “நாலு காசு சம்பாதிச்சு குடுத்தா அவன் பண்ற எல்லாமே சரியா மாறிடுமா? பசங்க தப்பு பண்ணா எங்ககிட்ட சொல்லிருக்கலாமே… நாங்க அவங்கள கண்டிச்சிருப்போம். அத விட்டுட்டு ஜெயில்க்கு அனுப்புறது நல்லாவா இருக்கு? வெளிய தெரிஞ்சா குடும்ப கெளரவம் என்ன ஆகும்? இத நியாயப்படுத்த வேற நீ வர்ற ம்மா…” நளினியை கண்டித்தார் அவர்.

“உங்க பசங்க ஒருத்தன் மேல கார் ஏத்தி கொல்ல பாக்குறப்ப அது குடும்ப கௌரவத்தை கெடுக்காது, என் பையன் தப்பு செஞ்சவங்கள தண்டனை அனுபவிக்க விட்டா அது கௌரவ குறைச்சல்? அப்டியே அவன் தப்பு பண்ணிருந்தாலும் அவனை இத்தனை வருஷம் கவனிக்காம விட்ட நீங்க தான் முழுக்க முழுக்க காரணம்” – நளினி

“சித்தி நாங்க அவன் மேல வண்டிய ஏத்தவே இல்ல நாங்க…” – விஷ்ணு

“பேசாதடா நீ… நீங்க பண்றது எதுவும் தெரியாதுன்னு நினைக்காதீங்க. படிப்பு முடிச்சு எத்தனை வருஷம் ஆச்சு? இன்னும் வேலைய கத்துக்காம ஊர் சுத்திட்டு இருக்கீங்க. உங்க வயசுல அவன் அமெரிக்கா, லண்டன்ல இருக்க மொத்த பிஸ்னஸையும் ஒரே ஆளா நின்னு பாத்துகுட்டான். ஆனா உங்கள ஒரு வார்த்தை சொன்னதில்ல ரெண்டு வருஷம்… சரி தம்பிக தான் அனுபவிச்ச கஷ்டத்தை அனுபவிக்க கூடாதுனு விட்டான்.

அதுக்கு நீங்க காட்டுற விஸ்வாசம் அவனுக்கு திருடன் பட்டம் கட்டி, ஆபீஸ் விட்டு வெளிய அனுப்புனது” நளினி பிள்ளைகளிடம் கோவத்தை காட்டிக்கொண்டிருக்க, ரகுநந்தன் வேகமாக தன்னுடைய அறைக்குள் சென்று குடியேறிக்கொண்டார். கணவன் தன்னிடம் கோவமாக ஏதோ பேச வரும் முன் சமைலறைக்குள் புகுந்துகொண்டார் நளினி.

******************

ஆதி பேசிய வார்த்தைகள் அன்று வீடு வரும் வரை யாழினியின் மனதில் விடாமல் ஓடிக்கொண்டே அவளின் வேலைகளை செய்ய விடாமல் உதய் பக்கம் தள்ளியது. நேற்று கூட அவன் பேசியதில் ஏதோ ஒரு இனம் புரியாத வலி இருந்ததே… தெரிந்தும் தான் விட்டுவிட்டோமா?

எனக்கான பிரச்னையை நான் பேசுவதை வைத்தே செய்பனுக்கு அதே ஆறுதல் திரும்பி தாராவிடினும் தோள் சாய அருகில் இருந்திருக்க வேண்டுமோ? அவன் நிலை தான் என்ன? ஏற்கனவே குடும்பத்தின் மீது பாசம் அதிகம் வைத்திருப்பவன் அவர்கள் உதாசீனத்தால் உடைத்திருக்கிறான்…

இப்பொழுது அதை விட என்ன மன கஷ்டம் தனவனுக்கு என கேள்விகளால் தன்னுடைய மனதை குடைந்துகொண்டே நகத்தை கடித்து யோசனையில் இருந்தாள். ஆனால் அதை தாண்டிய கோவம், நான் மாட்டேன் என்ற சில நாட்களிலேயே வேறு பெண்ணை பார்க்க சென்றுவிடுவானா?

“நகத்தை கடிக்காத யாழினி” பள்ளி முடிந்து வந்த அன்னை கண்களுக்கு யாழினியின் சிறு வயது பழக்கம் இப்பொழுதும் மாறாமல் அப்டியே இருப்பது தெரிந்தது.

“என்ன இன்னைக்கு வேகமா வந்துட்ட?”

“வேலை பாக்க தோணல மா” – யாழினி

“சரி என்ன இவ்ளோ தீவிரமா யோசிக்கிற?” உச் கொட்டி சலித்தவள் மனதிற்கு இதை அன்னையிடம் சொல்லும் அளவு உதய் பற்றிய பேச்சுகள் இல்லை, அதனால் எழுந்து வழக்கம் போல் மொட்டை மாடிக்கு தஞ்சம் புகுந்திட தோன்றியது.

அன்னையோ மகள் நேற்று தங்களிடம் அதிகம் பேசியதால் வருந்துகிறாள் என்று எண்ணி, “நீ தப்பு செஞ்சா தான் யாழினி இவ்ளோ யோசிப்ப… தயங்காம தப்ப ஒத்துக்கோ… மனசு சந்தோஷமாகிடும்” தீ பொறி தட்டியது போல் வந்தது அன்னையின் வார்த்தைகள்.

அவள் மகிழ்ந்து பல நாட்கள் ஆகியது. எத்தனை வறுமை இருந்தாலும் மகிழ்வாக இருக்க காரணம் ஆயிரம் கிடைக்கும் அவளுக்கு, ஆணின் சில நாள் பழக்கம், பிரிவு மொத்த சந்தோஷத்தையும் பறித்து சென்றது.

“மா நான் வர லேட் ஆகும்” அன்னையின் பதிலுக்கு கூட காத்திராமல் ஓடிய மகளை பார்த்து அதிர்ச்சியானவர், “எங்க இவ்ளோ வேகமா போற? ஷாலாவது போட்டு போடி…”

“ம்ம்ம் உன் மருமகனை பாக்க தான்” அவள் வார்த்தைகளை அவர் கிரகிக்கும் முன் வெளியேறியிருந்தாள். உதய்யின் யோசனையில் இல்லம் வந்தும் கூட உதய் மாற்ற மனம் இல்லாமல் அப்டியே இருந்தது இன்னும் வசதியாக போனது சிரியவளுக்கு.

அன்னையிடம் துப்பட்டாவை வாங்கி கழுத்தில் மாட்டியவள் வேகமெடுக்க கால்கள் மெயின் ரோட்டில் தான் வந்து நிற்க அடுத்த சில நிமிடங்களில் ஓலா புக் செய்து உதய்யின் இல்லத்திற்கு விரைந்தாள். எப்படியும் இந்நேரமே வந்திருக்க மாட்டான் என்று தெரிந்து தான் விரைவாக அவன் இல்லம் நோக்கி சென்றதே…

உதய்யின் வீட்டிற்குள் வந்தவளை தடுக்க அங்கிருந்த எவருக்கும் உரிமையில்லாமல் போனது. துள்ளலோடு உள்ளே சென்றவள் கண்களுக்கு களையிழந்து காட்சியளித்த அந்த பெரிய மாளிகை வீட்டிற்கு சிறு அழகு சேர்க்க ஆங்காங்கு இருந்த அலங்கார விளக்குகளை மிளிரவிட்டு, மூடிக்கிடந்த ஜன்னல்கள் திரைசீலைகளை விலக்கியவள் கண்களுக்கு அழகாக காட்சியளித்தது, அந்த சிறிய தோட்டம்.

நன்றாக இருட்டியிருந்த நேரத்தில் பாதுகாப்பிற்கு எரிந்துகொண்டிருந்த விளக்குகள் மூலம் தெரிந்த பச்சை செடிகள் யாவும் பொறாமையூட்டும் வகையில் காட்சி தந்தது. கண்களை விலக்கியவள் அடுத்து பூஜாடியில் வாடிக்கிடந்த பூக்களை களைத்து, இரவானாலும் பரவாயில்லை என பூக்களிடம் மன்னிப்பு வேண்டி அழகாய் பூத்து குலுங்கிய மலர்களை அள்ளி வந்து அடுக்கினாள் தனக்கு தெரிந்த அழகில்.

அத்தனையையும் முடித்தவள் அன்று ஒரு நாள் உதய்யை ஹோட்டல் அழைத்து சென்ற பொழுது அவன் விரும்பி உண்டது பூரி, பண்ணீர் க்ரேவி ஒன்று. உடனே வேலைகளில் இறங்கினாள். மாவை பிணைந்து வைத்து, க்ரேவி தயாரித்து அவன் வந்ததும் பூரி செய்திட நினைத்தவள், வரவேற்பறையில் தொங்கிய கயாத்திரியின் படத்திற்கு பூ கட்டியவள் தூசியில்லாத அந்த படத்தை மீண்டும் ஒருமுறை துடைத்து மாலையிட்டு கீழ் இறங்கிய பொழுது வெளியில் வாகனம் வரும் சத்தம் கேட்க விரைவாக சமையலறை நுழைந்தாள், அவனுக்கு பூரி சுட.

எப்பொழுதும் இருக்கும் நடையைவிட சிறு தளர்வு வீட்டினுள் நுழைந்தவனிடம். ஆனால் ஒளிர்ந்த வரவேற்பறையை கண்டவன் கண்கள் அடுத்து அவன் அன்னையின் படத்திற்கு சென்றது. இருளை பிரதானமாக கொண்டவன் மனம் இந்த நிலவின் குளுமையான ஒளியை நிச்சயம் வீட்டிற்குள் எதிர்பார்க்கவில்லை. வீட்டை சுற்றி பார்த்தவன் கண்கள், சமயலறையில் சத்தம் கேட்க கால்கள் தன்னால் அந்த பக்கம் சென்றது. வாசல் வந்தவன் கால்கள் நின்றது அங்கு தெரிந்த உருவத்தில்.

அடர் நீல நிற பாட்டியாலா பாண்ட் அணிந்து, மேல் அதே நீல நிறத்தில் முட்டி மேல் இருந்த குர்த்தா அவள் எடுப்பான உடலை கட்டி தழுவியிருந்தது. இரண்டு தோள்களிலும் நுனியில் பிடித்திருந்த அந்த ஊக்கு கண்ணாடி துப்பட்டா அவள் கைகள் செல்லும் திசை எல்லாம் சென்றது. உதய்யின் கண்கள் தனக்கு முதுகை காட்டி நின்ற பெண்ணை பார்த்த உடன் மீண்டும் இறுக்கம் வந்து ஒட்டிக்கொண்டது.

ஆணின் பார்வை பெண்ணுக்கு புரிய, முகத்தில் வந்த வெட்க சிரிப்பை இதழ் கடித்து அடக்கியவள் சிரித்த முகத்தோடு கிண்ணத்தில் உப்பிய பல பூரிகளை எடுத்து திரும்பினாள்.

“சாப்பிடலாமா சார்?” அவனை கடந்து உணவு மேஜை இருந்த பக்கம் சென்றவள் சமைத்த உணவுகள் அத்தனையையும் அதில் அடுக்கினாள்.

“என்ன சார் அமைதியா இருக்கீங்க?”

மீண்டும் சமயலறையில் நுழைந்தவள், “சரி சரி பரவால்ல, நீங்க ரொம்ப டயர்டா இருப்பிங்க… ப்ரெஷ் ஆகிட்டு வாங்க சார். டின்னர் எல்லாமே ரெடி… நீங்க ஆசையா சாப்பிட்டீங்கல்ல அன்னைக்கு ஒரு நாள்… பூரி சன்னா மசாலா… அதோட கொஞ்சம் சிக்கன் க்ரேவி வச்சிருக்கேன். பரவால்ல நீங்க சிக்கன் அவாய்ட் பண்ணாலும். எனக்கும் ஜெயன் அண்ணாக்கும் சிக்கன் தா ரொம்ப புடிக்கும். அதுவும் நீங்க ஜப்பான் போன டைம்ல வீட்டுல இருந்து நான் கொண்டுவர்ற சாப்பாடுக்கு அவர் அடிக்ட் ஆகிட்டாருன்னா பாத்துகோங்களேன்… எல்லாம் அம்மா கை வண்ணம் தான். ஆயிரம் குடுத்து வெளிய சாப்பிட்டாலும் அம்மா செய்ற ஒரு பருப்புக்கு ஈக்வ…”

“ஜெயன்…” உதய் ஜெயனை அழைத்த குரலில் அவனை விட்டு சில அடி தூரம் தள்ளி நின்ற யாழினியின் இதயம் பயத்தில் ஓட்டமெடுத்தது.

அடுத்த சில நொடிகளில் ஜெயன் அவன் முன்னாள் நிற்க, “வெளிய போக சொல்லுங்க… இனி என்னோட வீட்டுக்குள்ள இவ வர கூடாது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!