Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இணையா துருவங்கள்

அத்தியாயம் – 35.2

“பாய்” அவன் சிரிப்பில் மயங்கியவள் இதழிலும் சிரிப்பு தான். ஆனாலும் வெளியில் செல்ல முடியவில்லை அவன் மான்குட்டியால்.

“விட்டு போகவே மனசில்லை, வர்றியா வீடு வரைக்கும்? பைக்ல ஒரு ரவுண்டுஸ் போகலாம்…” – ஆதி

“அப்பாகிட்ட வந்து பெர்மிஷன் கேளுங்க… வர்றேன்” அவனுக்கு ஏற்றபடி வாயாடினாள் கிண்டலாக.

ஒரு சில நொடிகள் யோசித்தவன் அவள் கையை விட்டு வாகனத்திலிருந்து இறங்கி வந்து மணிமேகலை பக்கம் வந்து நின்றான். அவன் இறங்கியதும் அவளும் இறங்கி ஆதியின் முகத்தை கேள்வியாய் பார்த்தாள். அவள் கை பற்றி அவள் வீட்டினுள் அழைத்து செல்ல பார்க்க அவன் நோக்கம் புரிந்தவள் கால்களை நிலத்தில் அழுத்தி பதித்து, “தெரியாம சொல்லிட்டேன்… ப்ளீஸ் வேணாம்” கெஞ்சினாள் வீட்டினுள் செல்லாமல்.



Advertisement

“இல்ல டா மான்குட்டி இன்னைக்கு என் மாமன்கிட்ட பேசிட்டு தான் அடுத்த வேலை” – ஆதி

“ப்ளீஸ் ப்ளீஸ் தெரியாம சொல்லிட்டேன். இன்னொரு நாள் பேசுங்க. அப்பா ஏற்கனவே அப்செட்டா இருக்காங்க” – மணிமேகலை அவன் கையை பிடித்து வீட்டிற்குள் செல்லாமல் இழுத்தாள்.

அவனோ அவள் இழுவைக்கெல்லாம் சிறிதும் பாதிப்படையவில்லை, “அப்ப இது தான் நல்ல சந்தர்ப்பம், மாமனை சிரிக்க வச்சு மயக்கிட வேண்டியது தான்” – ஆதி

Advertisement

“ஐயோ கடவுளே… ப்ளீஸ் ஆதி” – மணிமேகலை

Advertisement

“ப்ளீஸ் டா மான்குட்டி” – ஆதி

இவன் சொன்னால் அடங்க மாட்டான் என்று அறிந்தவள் அவனை அமைதியாக்க இருக்கும் ஒரே வித்தையை கையிலெடுத்தாள். திமிறி நின்ற அவன் தோளை பற்றி அவனே சுதாரிக்கும் முன்னர் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை வைத்து அவன் திகைத்த நொடியை தனக்கு சாதகமாக்கி, “பாய் ஆதி” என்று வீட்டிற்குள் நுழைந்து மாயமானாள்.

வெளியில் அவள் இதழ்கள் தந்த தித்திப்பில் ஒரு நிமிடம் தன்னை மறந்து நின்ற ஆதிக்கு உடல் எங்கும் மின்சார அதிர்வு எப்பொழுதும் போல். சிறு பிள்ளையாய் துள்ளி அவன் மனதை கொள்ளையிடும் அவன் மேகா செய்யும் சிறு சேட்டையோ, ஆசையோ அவன் மனதில் என்றும் மலைச்சாரலாய் இதத்தை மட்டுமே கண் மூடி தந்தது… என்றும் தரும்…

Advertisement

ஏழு மாதங்கள் பிறகு

ஆவடியில் உள்ள அந்த ஆலிவ் கார்லாண்ட் என்ற இடமே அமர்களப்பட்டிருந்தது. மொத்தமும் வெட்டவெளியாக கிடந்த அந்த இடம் இப்பொழுது விளக்குகள், வண்ண பட்டு துணிகள், பூக்கள் கொண்டு அரண்மனை போல் பிரமாண்டமாய் இருந்தது.

எங்கு திரும்பியும் வண்ண வண்ண ஆடைகள், இளசுகள், பெரியவர்களின் சிரிப்பலைகள் என மொத்தமும் அமளி துமளி நிலை தான். நேற்று இரவு நடந்தேறிய நிச்சியத்தை தொடர்ந்து இன்னும் சில நிமிடங்களில் திருமணம் நடப்பதற்கான மொத்த மேடை அலங்காரங்களும் தயார் நிலையில் வைத்து இருந்தனர்.

மேடையின் பின்னணியில் மொத்தமும் வெள்ளை மற்றும் சிகப்பு நிற ரோஜாக்கள் அலங்கரித்திருக்க, மேடையின் மேல் கூரை மொத்தமும் மஞ்சள் விளக்குகள் ஆங்காங்கே தொங்கி வண்ணமயமாய் ஒளிர்ந்தது. மேடையின் நடுவில் சிறு கல் மண்டபம் போல் அமைத்து அதில் திருமணத்திற்கான ஹோமம் வளர்க்கும் சடங்குகள் துவங்கப்பட்டிருந்தன.

“வசதி கம்மி தான் ஆனா பொண்ணு அழகு…”

“ஆமா ஆதவன் இத்தனை வருஷம் இந்த பொண்ணுக்காக வெயிட் பண்ணதுல தப்பே இல்ல”

“ஆமா ஷர்மி, ஜோடி பொருத்தம் அமோகமா இருந்தது. வசதியா முக்கியம்? கட்டுக்கோப்பான குடும்பத்துக்கு பொண்ணும் அதே குணத்துல கிடைச்சிருக்குதுல அதுவே மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் ராம் குடுத்து வச்சிருக்கணும்”

பெண்களின் உரையாடலை கேட்டுக்கொண்டே அருகிலிருந்த ஒரு மேஜையில் நடுவில் அமைக்கப்பட்டிருந்த மின்விளக்கில் மின்சாரம் கசியவில்லை என்பதை உறுதி செய்துகொண்டிருந்தான் ஆதி. தாய் தந்தை இல்லை என்றாலும் சகோதரி மூன்றாம் நபரிடம் வாங்கும் பெயர் எல்லாம் சகோதரனானவனுக்கு பெருமை தான்.

இடத்தை விட்டு சிரிப்போடு அகன்றவன் சமையலறை நோக்கி செல்லும் வழியிலேயே மேளத்திற்கு அழைத்தான், “அண்ணே எங்க இருக்கீங்க? முகூர்த்தத்துக்கு நேரமாகிட்டே இருக்கு ஆளுங்க வேற வந்துட்டே இருக்காங்க…”

அந்த பக்கம் ஏதோ தகவல் வர, “சரிண்ணே சீக்கிரம் வாங்க” நடையிலேயே ஓடிய ஆதி சமையலறையை அடைந்திருந்த நேரம் உள்ளே நின்று உணவின் சுவையை பரிசோதித்துக்கொண்டிருந்தான் உதய்.

வழக்கமாய் அவன் அணியும் வெள்ளை சட்டை தான் ஆனால் இன்று சற்று மாறி வேஷ்டியை மடித்து கட்டி கம்பீரமாய் நின்றான். “தம்பி ஸ்பூன் கொண்டு வரவா?”

தட்டிலிருந்து உணவை உதடு குவித்து ஊதிக்கொண்டிருந்தவன், “வேணாம் ண்ணே…” என்று சுட சுட ஆவி பறக்கும் கேசரியை உண்டவன் நெற்றியில் சமைலறையின் சூட்டில் வியர்வை வழிந்தது.

“ண்ணே நெய் பத்தலையே… வாசனை கூட வரல” – உதய்

“ஊத்திடலாம் தம்பி” – சமையல் மாஸ்டர்

“சில்லி பரோட்டா எனக்கு டேஸ்ட் ரொம்ப கம்மியா தெரியுது. ஏதாவது பண்ண முடியுமா பாருங்க” – உதய்

“தம்பி… அது… நாம பேசுன மாஸ்டர் வரல ப்பா. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே” தயக்கத்தோடு கூறினார் சமையல் மாஸ்டர்.

“மாஸ்டர் வரலையா? என்ன ண்ணே இது இப்டி சொல்றிங்க? நேத்து பேசுனப்ப கூட வந்துடுவாருனு சொன்னிங்க. காச பத்தி பிரச்சனை இல்ல டேஸ்ட் தான் முக்கியம்ன்னு சொன்னேன்ல? இப்ப மாஸ்டர் வரலன்னு சொல்றிங்க?”

சட்டையை மடித்து விட்டு சண்டைக்கு சென்ற நண்பனை தடுத்த ஆதி, “டேய் ஏன்டா கோவம் வருது? விடு. பரோட்டா மாஸ்டர் பொண்ணுக்கு ஏதோ பிரச்சனை போல… நைட் மாவு பிணஞ்சு வச்சிட்டு இருந்தப்ப தான் போன் வந்துச்சு. நான் தான் கிளம்ப சொன்னேன்” – ஆதி

“அப்ப சாப்பாடை டேஸ்ட்டா கொண்டு வர முடியல-னு சொல்லி அந்த ஐட்டம நிறுத்திருக்கணும்”

பற்களை கடித்து கூறியவன் சமையல் மாஸ்டர் பக்கம் திரும்பி, “இது இலைக்கு வர கூடாது. வேற ஏதாவது ஒரு ஐட்டம் இலைக்கு வரணும்” என்ன செய்தாலும் அதில் திருத்தம் எதிர்பார்க்கும் உதய்க்கு உணவில் கவனக்குறைவாக இருப்பது புடிக்கவில்லை.

“ஒரு மணி நேரத்துல எப்படி டா புதுசா ஒன்னு செய்ய முடியும்? உன்ன மொத யார் இங்க வர சொன்னது? அண்ணே நீங்க போங்க… இருக்குறத பரிமாருங்க” நண்பன் கையை பிடித்து சமையலறை விட்டு வெளியில் வந்த ஆதி அவன் நெற்றியில் இருந்த வியர்வையை துடைக்குமாறு தன்னுடைய கைக்குட்டையை கொடுத்தான்.

“என்னடா இது கோலம் இன்னும் குளிக்கலயா நீ?” சாதாரண ட்ராக் பாண்ட், டீ-ஷர்ட் அணிந்து முகம் மொத்தமும் களைந்து இருந்தான்.

சகோதரியின் திருமணம் ஆயிற்றே… அத்தனை வேலைகளையும் நின்று பார்க்க வேண்டிய கடமை. இரவு அரை மணி நேரம் மட்டுமே உறங்கியிருப்பான். அவன் எழுந்ததும் ஆதவன் அறையில் இருந்த உதய்யும் உடனே எழுந்து நண்பனுக்கு உதவி செய்ய சென்றுவிட்டான் ஆதவனை மிரட்டி உறங்க வைத்து.

“குளிக்கிறேன். உன்ன தான் நான் கொஞ்ச நேரம் படுக்க சொன்னேன்ல… யார் இங்க வர சொன்னது? நிம்மதியா சமைக்க விடுடா அந்த மனுசனை” – ஆதி

“எனக்கு ஒடம்பு சரியாகி மூணு மாசத்துக்கு மேல ஆச்சு ஆதி. சும்மா இன்னும் பேஷண்ட் மாதிரி ட்ரீட் பண்ணிட்டு இருக்காத. இது என்னோட தங்கச்சி கல்யாணமும் தான். சமையல் எப்படி இருக்கணும்னு சொல்ல எனக்கும் உரிமை இருக்கு. போய் குளிச்சிட்டு வா”

நேரமாவதை உணர்ந்து சரி என தலையை ஆட்டியவன் அறையை நோக்கி செல்ல, “ஆதவன் ரூம்க்கு போகாதடா… உன்னோட டிரஸ் எல்லாம் ஹரி ரூம்ல இருக்கு” – உதய்

“சரி ஸ்டேஜ்ல போய் நில்லு. நான் பத்தே நிமிசத்துல வந்துடுவேன்” இதற்கு மேல் வேலை ஏதாவது செய்தாய்… என்ற முறைப்போடு ஆதி சென்றான்.

ஏழு மாதங்களில் நண்பர்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிறையவே நிகழ்ந்திருந்தது. உதய் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் முதலில் செய்தது சஹானாவை தனது சிற்றன்னையோடும் ஆதியோடும் சிகிச்சைக்காக ஒரு மாதம் ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தான். ஆதிக்கு வேலையை கவனிக்க வேண்டிய கட்டாயம் வந்தால் சகோதரர்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைத்து ஆதியை தாயகம் திரும்ப கூறிடுவான்.

மருத்துவரின் கண்காணிப்பில் எந்நேரமும் இருந்த சஹானாவிற்கு நிறையவே முன்னேற்றம் தெரிந்தது. ஒரு மாதத்திற்கு பிறகு மாதம் இரண்டு முறை மட்டும் ஆஸ்திரேலியா சென்று வர வேண்டும் என்று கூறிவிட, ஆதவனின் அன்னை தானே அழைத்து செல்வதாக கூறியும் வீராப்புடன் திரிந்தவன் கோவத்தை பார்த்து ஒரு நாள் ஆதவனின் தந்தையே ஆதியின் வீட்டிற்கு வந்து பெண் கேட்டுவிட்டார்.

நேரடியாகவே தங்களுக்கு இந்த திருமணத்தில் முழு மனதோடு சம்மதம் இருந்தால் மட்டும் திருமண பற்றி மேலே பேசலாம் என்று கூறிவிட்டான். அடுத்து ஆக வேண்டிய வேலைகளை உடனே ஆதவன் குடும்பம் செய்ய நெருங்கிய சொந்தங்கள் மட்டும் அழைத்து சிறிய அளவில் பூ வைக்கும் நிகழ்ச்சியை மகிழ்ச்சியாக முடித்து வைத்தனர்.

இதனிடையே தமிழ்-மகிழி திருமணமும், கெளதம் – பவித்ரா திருமணமும் நடந்து முடிந்தது.

சிகிச்சை தொடங்கி ஐந்தே மாதத்தில் சஹானா ஓரளவிற்கு நன்றாகவே நடந்திருக்க அவளை பார்க்கும் ஆதிக்கு தான் தன்னையே அறியாமல் கண்கள் கலங்கிவிடும்.

மகனின் மனம் புரியாமல் அவனை வார்த்தைகளால் வதைத்த ரகுநந்தன் கண்ணீர் மல்க மகனின் கை பிடித்து தான் பேசியதை எல்லாம் மறந்து மீண்டும் அலுவகம் வருமாறு கூற கண்கள் கலங்க தந்தையின் அழுகையை பார்த்தும் அவர் பேசியதை எல்லாம் பின்னுக்கு சென்று தந்தையின் கை பற்றி இவ்வாறெல்லாம் பேச வேண்டாம் என்று ஆணையை கூறிவிட்டான் உதய்.

அன்று ஆள் நடமாட்டமே இல்லாத காட்டில் விட்டு வந்த ஈஸ்வரன் பற்றிய தகவல் சில நிமிடங்களிலேயே மொத்த குடும்பத்தினருக்கும் தெரிய வந்தது. எந்த மகளுக்காக சொந்தங்களையே ஏமாற்றினாரோ அந்த மகளின் மணக்கோலத்தையே காணாமல் விண்ணுலகை அடைந்தார் பசி பட்டினியுடன். அவரின் மரணத்தில் சந்தேகமிருந்த காவல்துறையினரை உதய்யின் ஆட்கள் கவனித்துக்கொண்டனர்.

நீரஜ் தழல் நிலையை தந்தையாய் ரகுநந்தன் கையில் எடுக்க அவரின் கடுமையை புரிந்திருந்த நீராஜின் தந்தை அவனை இனி உதய் பக்கமே வர விட மாட்டேன் என்று சாத்தியங்கள் பல செய்திருந்தார்… காரணம் மகனை அன்று ஒரு நாள் முழுதும் காணாமல் தவித்த பாசம். உடனே நீரஜை நாடுகடத்துயிருந்தார்.

அதன் பிறகே தந்தையானவருக்கு மனம் சற்று நிம்மதியானது ஆனாலும் இனி உதய் மேல் என்றும் ஒரு கண்ணை வைத்திருக்க வேண்டும் என்ற முடிவில் இருந்தார் ரகுநந்தன். உதய் உடல் நிலை கருதி ரகுநந்தன் புதல்வர்களை தன் பார்வைக்குலேயே வைத்து ஆறு மாதமாக பார்த்துக்கொள்கிறார்.

யாழினியின் வீட்டில் மகனின் விருப்பத்தை உணர்ந்து மொத்த குடும்பமும் சென்று பெண் கேட்க முதலில் தயங்கிய யாழினியின் அன்னை பிறகு நளினியின் நல்ல விதமான பேச்சில் மகளுக்கு எந்த விதமான மன கசப்பும் ஏற்பாடாதென்று உணர்ந்து சம்மதித்தார். திருமணத்தை சஹானாவின் திருமணத்திற்கு பிறகு வைத்துக்கொள்ளலாம் என்று முடிவானது.

ஆனால் யாழினியின் வரவு மட்டும் உதய்யின் இல்லத்தில் அடிக்கடி நிகழ்வதாயிற்று. அவளும் முதலில் ரகுநந்தன் மேல் சற்று மரியாதையுடன் நடக்க ஒதுங்கி இருந்தாள். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவள் சேட்டையிலிருந்து அவராலும் தப்பிக்க இயலாமல் போனது. எவரையும் விட்டுவைக்கவில்லை.

அனைவரிடமும் தன்னுடைய வார்த்தை ஜாலத்தை கட்டி மிரளவும் வைப்பாள் சிரிக்கவும் வைப்பாள்.

மகிழ்ச்சியாகவே செல்லும் அவர்கள் வாழ்க்கையில் ஆதி ஒருவனே, “என்ன எவனாவது கவனிங்கடா… எனக்கு மான்குட்டி வேணும்” என்று நண்பர்களை நச்சரித்தே உதய்யோடு நண்பர்கள் பட்டாளம், அவர்கள் குடும்பம் என இருவது பேர் மணிமேகலையின் வீட்டிலே தர்ணா போராட்டம் நடத்தி மணிமேகலையின் தந்தையை ஒப்புக்கொள்ள வைத்தனர்.

இதோ நேற்று நடந்த சஹானாவின் நிச்சய விழாவில் கூட தாய்மாமன் முறையில் அமர்ந்தது எல்லாம் செந்தமிழரசன் தான்.

மகிழ்ச்சியில் திளைத்து போனான் ஆதி. எந்த சொந்தங்கள் தன்னையும் தன்னுடைய சகோதரியையும் வேண்டவே வேண்டாம் என்று உதறி தள்ளியதோ, இப்பொழுது அதே உறவுகள் அத்தனை மனிதர்களையும் அழைத்து அவர்கள் முன்னாள் தனக்கும் பெரிய சொந்தங்கள் இருக்கின்றது என்று கட்டியிருந்தான்.

மொத்த காரணமும் உதய் மட்டுமே இருந்தான். திருமணத்தை எளிதாக நிகழ்த்திவிடலாம் என்று அனைவரும் நினைத்திருக்க உதய் தான் குறுக்கிட்டு, ‘நடந்தால் விமர்சையாக மட்டுமே நடக்கும்’ என்று சஹானாவின் சகோதரனாக மாறி தன்னுடைய தாய் மாமனிடம் சஹானாவிற்கும் தாய் மாமன் முறையில் அமர்ந்திருக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்க உதய் வார்த்தையை தட்டாமல் செய்பவருக்கு இப்பொழுது ஆதியும் மருமகனாகிவிட மகிழ்ச்சியோடு தம்பதி சமயோஜிதராய் அனைத்தையும் செய்தார்.

நளினி, ஜெயநந்தன் தாய் தந்தையாய் நின்று தாம்பூலம் மாற்றிக்கொள்ள உதய் சகோதர சகோதரிகள் அட்டகாசத்துடன் எந்த விதமான தடங்கலும் இன்றி சிறப்பாகவே அத்தனையும் நிகழ்கின்றது. அந்த ரிசார்ட்டில் தங்குவதற்கென்று விடுதியிலிருந்து பாதிக்கும் மேற்பட்ட அறைகளை முன்பதிவு செய்து வைத்திருந்தனர்.

வீட்டிற்கு சென்று மீண்டும் இங்கு வர நேரமெடுக்கும் என்பது ஒரு காரணமாக இருக்க நண்பர்கள் கதை பேச ஒன்றாக இருக்க என மகிழ்ச்சியில் திளைக்க தான் இந்த ஏற்பாடு. நேரம் ஆகிக்கொண்டே செல்வதை உணர்ந்து ஆதி ஓட்டமும் நடையுமாக ஹரி விஷ்ணு தங்கியிருக்கும் அறைக்கு செல்ல கதவு கொஞ்சம் திறந்திருந்தது.

‘பரவால்ல எந்திரிச்சிட்டாய்ங்க போல’ என்று பாராட்டியபடியே உள்ளே சென்ற ஆதிக்கு நடக்க கூட வழி இல்லாமல் போனது. கதவின் ஓரம் கெளதம் குப்புற படுத்து ஓரமாக கிடந்த காலணிகளை கட்டிப்பிடித்து உறங்கிக்கொண்டிருக்க, அவனுக்கு சற்று தள்ளி விஷ்ணு வாயை திறந்து வைத்து உறங்கிக்கொண்டிருந்தான்.

அவன் முகத்திற்கு நேராக அருகிலிருந்த கட்டிலில் படுத்திருந்த ஹரியின் கால்கள் தொங்கியது. ஹரிக்கு அருகிலே தமிழ் சட்டையை அவிழ்த்து நிம்மதியாக துயில் கொண்டிருந்தான். அமைதியாக நால்வரின் கைப்பேசியையும் ஒழித்து வைத்து அறையிலிருந்த கடிகாரத்தில் எல்லாம் நேரத்தை மாற்றி வைத்து கதவையும் உள் வழியாக பூட்டி குளியலறை சென்றவன் ஒரு வாளி நிறைய சில்லென்று வந்த தண்ணீரை பிடித்து வெளியில் வந்தவன் முதலில் ஹரியின் முதுகில் ஓங்கி அடி ஒன்றை வைக்க பதறியவன் கால்கள் எதேர்ச்சியாக வேகமாக எழ பார்க்க சரியாக ஹரியின் ஷூ கால்கள் விஷ்ணுவின் முகத்தில் ஓங்கி விழுக வலியில் கதறி மூக்கை பிடித்துக்கொண்டே விஷ்ணு எழும் முன் வாளியில் இருந்த மொத்த தண்ணீரையும் நண்பர்கள் முகத்தில் ஊற்ற நால்வரும் பதறி தான் எழுந்தனர்.

“லூசு பயலே…” – கெளதம்

“வெண்ண… இப்படியாடா காலைல எழுப்புவ?” என தமிழும் ஆதியை திட்ட, ஹரி விஷ்ணுவின் வீங்கிய மூக்கை பார்த்து அந்த நிலையிலும் சிரித்துக்கொண்டிருந்தான்.

“காலைலயா? எவன்டா சொன்னான் காலைல-னு? மணி இப்ப பதினொன்னு இருபத்தி மூணு” பொய் கூறுவதற்கான எந்த தடயமும் முகத்தில் இல்லை, மாறாக முகத்தை கோவமாக வைத்துக்கொண்டான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!