Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 4-1 : எனைச் சுற்றி ஏகாந்தம்

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 4

பேருந்து பயணம் தொடர்ந்தது. தமிழ் அமைதியாக இருந்தான். அவனை ஆர்வமாக பார்த்தாள் கயல்விழி. அவள் வயது இருபத்தி ஆறு. தமிழின் ஊருக்கு பக்கத்து ஊர் தான். ஈ.பியில் ரீடிங்க் எடுக்கும் வேலை செய்கிறாள். அவளது தந்தை சமுத்திரம். தாய் கலைச்செல்வி.



Advertisement

கலைச்செல்வி கயலை வயிற்றில் சுமந்து மசக்கையால் அவதிப் படும் போது கலைச்செல்வியின் தங்கை வேணி அக்காவுக்கு துணையாக வந்து இருந்தாள். ஆனால் அக்காவைக் கவனிக்காமல் மாமாவைக் கவனித்ததால் வந்த வினை கயல்விழி பிறக்கும் போது  வேணியும் மூன்று மாத கருவை வயிற்றில் சுமந்தாள்.

Advertisement

முதலில் கியோ முயோ என்று கத்திய சொந்தக்காரர்கள்  “இதெல்லாம் பெரிய விஷயமா? ஊர் உலகத்துல நடக்காததா”, என்று பேசியே சமுத்திரத்துக்கு வேணியை இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தார்கள் கலைச்செல்வியின் சம்மதம் இல்லாமலே.

Advertisement

கலைச்செல்வியை சொந்த அக்கா என்று கூட பாராமல் அந்த வீட்டில் ஓரம் கட்டி விட்டாள் வேணி. புது விளக்குமாறு நன்றாக பெருக்கும் என்பது போல சமுத்திரம் வேணி பின்னே சுற்ற கண்ணுக்கு முன்னாலே கட்டிய கணவன் இன்னொரு பெண்ணுடன் வாழ்வதை தாங்கிக்க முடியாமல் போனது கலைச்செல்விக்கு.

Advertisement

குழந்தைக்காக பிறந்த வீட்டுக்கு சென்று வாழத் தான் நினைத்தாள். ஆனால் பெற்றவர்களோ “உன் தங்கை தானே அனுசரிச்சு போ”, என்று பேசி இங்கு துரத்தி விட அவளுக்கு வாழும் ஆசையே போய் விட்டது. அங்கே வாழப் பிடிக்காமல் கயல்விழிக்கு ஐந்து மாதம் இருக்கும் போதே தூக்கு போட்டு இந்த வாழ்வை முடித்துக் கொண்டாள் கலைச்செல்வி.

அவள் மன நிம்மதிக்காக சாவைத் தேடிக் கொண்டாலும் கயலை புதை குழியில் தீரா துயரில் தள்ளி விட்டாள். விளைவு கயலின் வாழ்க்கை பாதிக்கப் பட்டது. சொந்த அக்காவை பற்றி கவலைப் படாமல் அவள் வாழ்வை தட்டிப் பறித்த வேணியா அக்கா மகளை கவனிக்கப் போகிறாள்?

தாய்பால் உண்ணும் வயதிலே மாட்டுப் பால் தான் கயல்விழிக்கு. அதுவும் ஏழு வயது வரை பாட்டி தாத்தா வீட்டில் தான் இருந்தாள்.

ஆனால் அவர்களும் ஒவ்வொருவராக இறந்து போக கயல்விழி மீண்டும் தந்தை வீட்டுக்கு வந்தாள். சொந்த வீட்டிலே அண்டிப் பிழைப்பது போல தான் அவள் வாழ்க்கை.

அந்த வீட்டில் கயல்விழி சம்பளம் இல்லாத வேலைக்காரி அவ்வளவே. வேணிக்கும் சித்ரா என்ற பெண் இருக்கிறாள். அந்த வீட்டில் சித்ரா தான் இளவரசி, கயல்விழி என்றுமே வேலைக்காரி தான். சித்தி கொடுமை, தங்கையின் உதாசீனம், இருக்கா இல்லையா என்று தெரியாத தந்தை பாசம் என்ற சூழ்நிலையில் தான் கயல்விழி வாழ்ந்தாள்.

பள்ளிக்கூடம் சென்றது கயலுக்கு கொஞ்சம் நிம்மதி தந்தது. அவ்வப்போது சித்ரா தவறு செய்தாலும் மாட்டிக் கொள்வது கயல் தான். அதற்கு அவள் விளக்கம் கூற வந்தாலே தொடையில், கணுக்காலில் என்று சூடு தான் விழும். தீமூட்டிக் குழலை வைத்து வேணி அவள் காலில் சூடு வைக்கும் போது எரிச்சலும் அதற்கு பின் அந்த புண் ஆறும் வரை இருக்கும் ரணமும் சேர்ந்து தான் அவளை ஊமையாக்கியது.

எதிர்த்து பேசினால் தானே இந்த ரணம்? வாயை மூடிக் கொண்டால் நான்கு அடி, கொஞ்சம் சுடு சொல்லோடு போய் விடும் என்பதால் அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டாள்.

பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த உடன் அருகில் இருந்த மில்லுக்கு வேலைக்குச் செல்ல அவ்வப்போது கவர்ன்மெண்ட் பரிட்சைகளும் எழுதிக் கொண்டிருந்தாள். அதில் கிடைத்தது தான் இந்த ஈபி வேலை. அவள் இப்போது வேலைக்கு சேர்ந்து எட்டு மாதம் தான் ஆகிறது. இப்போது அவளது மாத சம்பளம் பதினேழாயிரம். ஒரு வருடத்துக்கு பிறகு கூடும் என்று கூறியிருக்கிறார்கள்.

காலையில் முதல் பஸ்ஸுக்கே வேலைக்கு வருபவள் அலுவலகத்தில் கிடக்கும் சைக்கிளில் அவர்கள் கொடுக்கும் ஏரியா  சென்று வீடு வீடாக ரீடிங்க் எடுக்க வேண்டும். பின் அலுவலகத்தில் ஏதாவது வேலை இருந்தால் செய்ய வேண்டும்.

மொத்த சம்பளத்தையும் வேணியிடம் கொடுக்க வேண்டும். அவள் தான் தினமும் பஸ்ஸுக்கு என்று கொடுப்பாள். சரியான சாப்பாடு மட்டும் கிடைத்து விடும். ஏனென்றால் அவள் தானே சமையல் செய்கிறாள்? உடல்நிலை சரியில்லை என்றால் மருத்துவமனைக்கு கூட அவளை அழைத்துச் செல்ல மாட்டார்கள். எப்போதும் இவளுக்கு மட்டும் வீட்டு வைத்தியம் தான். ஓய்வு என்று அவளுக்கு கிடையவே கிடையாது.

ஆனால் இப்போதெல்லாம் இவளுக்கு இது பழகிப் போன ஒன்று தான். அதனால் அதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இந்த சூழ்நிலைக்கு பழகிக் கொண்டாள்.

அவளது குடும்ப சூழ்நிலை தெரிந்த ஒரே ஒரு ஆள் உண்டு என்றால் அது சேகர் தான். அவன் தான் அவள் வேலை செய்யும் அலுவலகத்தில் சீஃப் இன்ஜினியர் என்பதால் அவளைப் பற்றி அவனுக்கு நன்கு தெரியும். அவனுக்கு இவள் கூடப் பிறவாத தங்கை தான். இருவரும் பக்கத்து ஊர் என்றாலும் இது வரை அவள் சேகர் வீட்டுக்கு எல்லாம் சென்றதில்லை. அதற்கு எல்லாம் வேணியிடம் அவளுக்கு சுதந்திரமும் கிடைப்பது இல்லை.

சேகரும் அலுவலகத் தொடர்பு அலுவலகத்தில் மட்டும் என்பதால் அவ்வப்போது கயலைப் பற்றி வைஷ்ணவியிடம் சொல்வானே தவிர தீவிரமாக எல்லாம் பேச மாட்டான். அதனால் அவளைப் பற்றி தமிழுக்கும் தெரிய வில்லை. இப்போது இருவரையும் விதி சந்திக்க வைத்திருக்கிறது. இது நல்லதற்கா கெட்டதற்கா?

கயல் விழியின் நிறுத்தம் வருவதற்கு முன்பே “வர ஸ்டாப்ல நான் இறங்கணும். திருப்பியும் சொல்றேன். ரொம்ப தேங்க்ஸ் எனக்காக பேசினதுக்கு”, என்று தமிழிடம் சொன்னாள் கயல்.

“பரவால்லங்க, பாத்துப் போங்க. ரொம்ப சோர்வா தெரியுறீங்க. வீட்டுக்கு போய் ஒரு லெமனைப் பிழிஞ்சு குடிங்க”, என்று சொல்ல அவனை வியப்பாக பார்த்தாள்.

“என்ன அப்படி பாக்குறீங்க? எனக்கும் மூணு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க கூட வளந்தவனுக்கு பொண்ணுங்க கஷ்டம் புரியும்”, என்று சொல்ல அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

ஏனோ அவனை அவளுக்கு அன்னியமாக நினைக்க தோன்ற வில்லை. அவள் வாழ்விலே அவளுக்காக பேசியது அவன் ஒருவன் தான் என்பதாலா? இல்லை அவன் கண்களில் வழிந்த உண்மையான அக்கறையாலா? ஏதோ ஒன்று அவள் மனதில் அவனுக்காக சிறு இடத்தை ஒதுக்கி வைத்தது அவள் மனது. அவனுடனே இந்த பயணம் தொடரக் கூடாதா என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது.

பஸ் நிற்க கண்களால் அவனிடம் மீண்டும் விடை பெற்று இறங்கியவள் மீண்டும் அவனைப் பார்த்தாள். அவன் அவளைக் கண்டு தலையாட்ட அவளும் அன்று புது உற்சாகத்துடன் வீட்டுக்கு சென்றாள். ஏதோ இருந்த சோர்வு கூட அவளிடம் விடை பெற்றுச் சென்றிருந்தது.

“நல்ல பொண்ணு”, என்று எண்ணிய தமிழ் அதற்கு பிறகு அவளை மறந்து வீட்டைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான்.

அவனுக்கு வீட்டுக்குச் செல்ல ஒரு சதவீதம் கூட விருப்பம் இல்லை. அங்கே சென்றால் நிச்சயம் நிம்மதி போகும் என்பதில் துளி கூட சந்தேகம் இல்லை. அதனால் அவன் சென்று நின்றது சிதம்பரம் வீட்டின் முன்பு தான்.

யாரோ எவரோ என்று எண்ணி வெளியே வந்த மீனாட்சி அவனைக் கண்டதும் அப்படியே அதிர்ந்து சுவரோடு சாய்ந்து நெஞ்சில் கை வைத்த படி நின்றாள். அவனைக் கண்டு அவள் கண்கள் மட்டும்  கண்ணீரைச் சொறிந்தது. எவ்வளவு வருடங்கள் ஆயிற்று அவனைக் கண்டு.

வாசலில் நின்று அழுது கொண்டிருக்கும் அத்தையைக் கண்டு அவன் கண்களும் கலங்கியது. “உள்ள கூப்பிட மாட்டியா அத்தை?”, என்று தமிழ் கேட்ட பிறகு தான் நடப்புக்கு வந்த மீனாட்சி “வாயா, இப்ப தான் இந்த அத்தையை பாக்க வரணும்னு தோணுச்சா? வரவே மாட்டியோன்னு பயந்துட்டேன் கண்ணப்பா?”, என்ற படியே அவனை அணைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

அங்கே வந்த சிதம்பரமும் “மாப்ள”, என்று அணைத்துக் கொண்டார். அவன் வரவு அதிர்ச்சியாக இருந்தாலும் ஆனந்தமாக இருந்தது மட்டும் உண்மை.

உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்து உபசரித்து பேசிக் கொண்டிருந்தனர். முற்றிலும் மாறிப் போயிருந்த அவன் தோற்றத்தைக் கண்டு கண்ணீர் வடித்தார்கள்.

“சரி மாப்ள, முதல்ல உன் வீட்டுக்கு போ”, என்றார் சிதம்பரம்.

“அங்க போகப் பிடிக்கலை மாமா. உன் இன்னொரு வீட்டுச் சாவி கொடேன். நான் அங்க போறேன்”, என்றான் தமிழ்.

“அது உன் வீடு தமிழ். நாளைக்கே போய் பத்திரம் பதிஞ்சிறலாம். ஆனா இப்ப உன் அம்மா இருக்குற வீட்டுக்கு போ மாப்ள. அது தான் முறை”

“முறையோட இங்க எதுவுமே நடக்குறது இல்ல மாமா. வந்த உடனே நான் பிரச்சனையை சந்திக்க விரும்பலை”, என்றவனை வற்புறுத்தி அனுப்பி வைத்தார்கள்.

அவன் வீட்டுக்குச் சென்றதும் தேவி மற்றும் சரோஜா இருவரும் திகைத்து நின்றார்கள். அன்னையை திரும்பி கூட பார்க்காதவன் “தேவி, எப்படி இருக்க டா?”,. என்று தங்கையை அன்புடன் அழைத்தான். “அண்ணா”, என்ற படி அவளும் அவனை அணைத்துக் கொண்டாள்.

ஐந்து வருடங்கள் கழித்துப் பார்க்கும் மகனை எப்படி இருக்க என்று கூட கேட்காமல் உள்ளே சென்ற தாயை வேதனையாக பார்த்தான் தமிழ்.

அன்றைய நாள் தமிழுக்கு சாதாரணமாக கடந்தது. சரோஜா எதுவும் பேசாததால் அவனும் தேவியுடன் மட்டுமே பேசிக் கொண்டிருந்தான். மற்ற தங்கைகளுக்கும் அழைத்து வீட்டுக்கு வரும் படி பேசினான். நாளை வருவதாக சொன்னார்கள். வைஷ்ணவி மற்றும் சேகரிடம் பேசியவன் நாளை வீட்டுக்கு வருவதாக சொன்னான். பின் இரவு உணவை முடித்து விட்டு மொட்டை மாடிக்குச் சென்று படுத்து விட்டான். அவனுக்கு அன்றைய நாள் அப்படிக் கடந்தது என்றால் கயலுக்கு வேறு மாதிரி.

வீட்டுக்குச் சென்றதும் டீ குடித்து விட்டு அப்பாடி என்று இரவு உணவு வரை அமரலாம் என்று எண்ணி சென்றாள். ஆனால் அவளை வரவேற்றது குவிந்து கிடந்த பாத்திரங்கள் தான்.

கடவுளே இதை எல்லாம் விலக்கி, அப்புறம் சாப்பாடு செஞ்சு அதை விலக்கி, அப்புறம் சாப்பிட்ட அப்புறம் அதையும் விலக்கணுமே என்று கவலையுற்றாள். ஆனால் அவள் கவலையைத் துடைப்பது யாராம்?

சோம்பி நின்றால் இரவு கூட ஓய்வு கிடைக்காது என்று எண்ணியவள் அவசரமாக அவளது அறைக்குச் சென்று சுடிதாரை மாற்றி நைட்டி அணிந்தவள் முகம் கழுவி விட்டு அடுப்படிக்கு சென்று டீ போட்டாள்.

போட்டு ஒரு ஓரத்தில் வைப்பது மட்டுமே அவள் வேலை. வேணி மற்றும் சித்ராவுக்கு எப்போது வேண்டுமோ அவர்கள் வந்து எடுத்துக் கொள்வார்கள் என்பதால் ஒரு டம்பலரில் மட்டும் ஊற்றிக் கொண்டு வீட்டின் பின் பக்கம் பாத்திரம் விலக்கச் சென்றாள்.

சூடாக இருந்த டீயை ஒரே மூச்சில் குடித்து முடித்து விட்டு எல்லா பாத்திரங்களையும் விலக்கிப் போட்டாள்.

வேணி மதியம் மீன் வாங்கி சுத்தப் படுத்தி இருப்பாள் போல? அருவாமனை, மீன் கழுவிய மண் சட்டி என அது ஒரு பக்கம் கிடக்க அங்கேயும் கிளீன் செய்தாள். பின் அங்கு கிடந்த தந்தையின் அழுக்குத் துணி, வேணியின் சேலை, சித்ராவின் சுடிதார் என அனைத்தையும் துவைத்து போட்டாள். அப்படியே அன்று தான் அணிந்திருந்த சுடிதாரையும் துவைத்துப் போட்டாள். இதை எல்லாம் முடிக்கும் போது மணி ஏழு ஆகியது.

அவசரமாக உள்ளே சென்றவள் கண்ணில் விழுந்தது மற்றவர்கள் காபி குடித்த எச்சில் டம்பல்ரும் மிச்சர் உண்ட கிண்ணங்களும் தான். இதை இப்போது விலக்கினால் இரவு உணவு செய்ய நேரமாகி விடும் என்பதால் சமையலை ஆரம்பித்தாள்.

இத்தனை வருடத்தில் யாருக்கு என்ன பிடிக்கும் என்று அவளுக்கே தெரியும் என்பதால் அவளுக்கு தோன்றியதை தான் செய்வாள். அவள் என்ன சமைத்தாலும் மூவரும் சாப்பிடுவார்கள். ஆனால் என்றாவது சுவை குறைவாக இருந்தாலோ உப்பு அதிகரித்து விட்டாலோ அன்று கயலுக்கு மண்டகப் படி கிடைக்கும்.

பிரிட்ஜில் மீன் சுத்தம் செய்து வைத்திருக்க அதை வெளியே எடுத்து குழம்பு வைக்க ஆரம்பித்தாள். பொரிப்பதற்கு என்று தனியே எடுத்து மசால் போட்டு வைத்தாள். ஒரு அடுப்பில் சோறு வெந்து கொண்டிருக்க மற்றொரு அடுப்பில் குழம்பு வைத்து முடித்தவள் மீனையும் பொறித்தாள். பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஐந்து தோசையும் சுட்டு வைத்தாள். தோசை யாராவது சாப்பிட்டால் சாப்பிடட்டும், இல்லையென்றால் தான் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி.

பின் கிடந்த பாத்திரங்களை விலக்கி விட்டு தனதறைக்குச் சென்று குளிக்கச் சென்றாள். குளித்து முடித்து வரும் போது வெளியே சிதம்பரம் மற்றும் வேணி சாப்பிடுவது தெரிந்தது. அதனால் வயிறு பசித்தாலும் அறையில் இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டாள்.

உடல் உடனே படுக்க தான் கெஞ்சியது. ஆனால் உணவு உண்ண வில்லை என்றால் சரியான தூக்கம் வராது என்பதால் சாப்பிடுவதற்காக காத்திருந்தாள். இப்போது அங்கே சென்றால் நிச்சயம் ஏதாவது திட்டு விழும் என்பதால் அமைதியாக இருந்தாள்.

அவர்கள் சாப்பிட்டு முடித்து விட்டு டி‌வி பார்க்க அமர இவள் எழுந்து சாப்பிடச் சென்றாள்.

சமுத்திரம் ஒரு சோபாவில் அமர்ந்திருக்க மற்றொரு சோபாவில் வேணி அமர்ந்திருந்தாள். அவள் மடியில் படுத்திருந்த சித்ரா டி‌வி சேனலை மாற்றிக் கொண்டிருந்தாள்.

கயலுக்கு ஏனோ அவர்கள் மட்டும் குடும்பமாகவும் தான் யாரோ போலவும் தோன்றியது.

இப்போது அங்கே சென்று அவள் தரையில் அமர்ந்து டி‌வி பார்த்தாலும் “என்ன வேலையை விட்டுட்டு டி‌வி பாக்க உக்காந்துட்ட? எழுந்து போ”, என்று வேணி விரட்டுவாள் என்பதால் சமையல் அறையிலே சாப்பிட அமர்ந்தாள்.

பொறித்த மீன்கள் எல்லாம் காலியாகிருக்க குழம்பில் ஒரு துண்டும் இரண்டு மண்டையும் கிடந்தது. மண்டை அவளுக்கு சாப்பிடத் தெரியாது என்பதால் அந்தக் சிறு துண்டை மட்டும் எடுத்து வைத்து சாப்பிட அமர்ந்தாள். சிறிது சோறும், ஒரு தோசையும் மிச்சமிருக்க உண்டு முடித்தவள் மீதம் இருந்த குழம்பை சூடு செய்து விட்டு மற்ற பாத்திரங்களை விலக்கி போட்டு விட்டு அறைக்குள் வரும் போது ஒன்பது நாப்பது ஆகி இருந்தது. மற்றவர்கள் எல்லாம் தூங்கச் சென்றிருந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!