Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

எனைச் சுற்றி ஏகாந்தம்

அத்தியாயம் 4-3 : எனைச் சுற்றி ஏகாந்தம்

“எனக்கும் சரி வரும்ன்னு தான் தோணுது மாப்பிள்ளை. ஆனா எப்படி நம்மளா போய் அவங்க வீட்ல பேச? அவங்க அந்த பொண்ணுக்கு மாப்பிள்ளை பாக்குறதா சொல்லிருந்தா நாம பேசலாம். ஆனா இப்ப எப்படி?”

“அந்த ஊர் தரகரை பிடிச்சு பேசலாம் மாமா”, என்று சொல்ல அவரும் சரி என்றார்.



Advertisement

அடுத்த நாள் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு தனியாகவே கிளம்பி விட்டார் சிதம்பரம். கயலின் தங்கை சித்ராவுக்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருந்த தரகரை பிடித்தவர் அந்த குடும்பத்தைப் பற்றி மேலும் விசாரித்து விட்டு, தான் சொல்வது போல அவர்கள் வீட்டில் சென்று பேசச் சொன்னார்.

தரகரும் நேராக கயல் வீட்டுக்கே சென்றார். “வாங்க ஐயா”, என்று வரவேற்றார் சமுத்திரம்.

Advertisement

Advertisement

“ஏதாவது வரன் வந்திருக்கா என் பொண்ணுக்கு?”, என்று கேட்டாள் வேணி.

“உங்க பெரிய பொண்ணுக்கு தான் மா வந்திருக்கு”

Advertisement

“அவளுக்கு அப்புறமா தாங்க பாக்கப் போறோம். சித்ராவுக்கு வந்தா சொல்லுங்க. இல்லைன்னா பேச வேண்டாம்”, என்று வேணி சொல்ல “அவசரப் படாதீங்க மா. நான் சொல்ல வரதைக் கேளுங்க. உங்க பொண்ணு கல்யாணம் முடியணும்னா முதல்ல மூத்த பொண்ணுக்கு முடிச்சு அனுப்பிருங்க. வரவங்களும் மூத்த பொண்ணு இருக்க எதுக்கு ரெண்டாவது பொண்ணுக்கு பாக்குறாங்கன்னு பேசுவாங்க. ஊரும் அப்படியே பேசும். நீங்க மூத்தவளுக்கு முடிச்சிட்டா அப்புறம் நாம ஆற அமர நல்ல இடமா ரெண்டாவது பொண்ணுக்கு பாக்கலாம்ல? யோசிங்க“, என்று நயமாக பேசினார்.

“நீங்க சொல்றது சரி தான். ஆனா மூத்தவளுக்கு இப்ப ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணி வச்சிட்டா என் பொண்ணுக்கு கல்யாணம் எப்படி பண்ண?”, என்று வேணி கேட்க சமுத்திரம் மூச்சே விட வில்லை.

“இப்ப ஒரு சம்மந்தம் வந்திருக்கு மா. நீங்க எந்த நகை நட்டும் போட வேண்டாம்னு சொல்றாங்க. பொண்ணை ஈ.பி. ஆஃபிஸ்ல பாத்துருப்பாங்க போல? அங்க விசாரிச்சு என் கிட்ட வந்தாங்க. சும்மா ஏதோ பேருக்கு போட்டு முடிச்சி விட்டுட்டீங்கன்னா உங்க கடமையும் முடிஞ்சிரும் பாருங்க”

“ஏங்க, நீங்க என்ன சொல்றீங்க?”, என்று வேணி கேட்க “நான் என்னைக்கு உன் பேச்சுக்கு மறுப்பு சொல்லிருக்கேன்?”, என்று கேட்டார் சமுத்திரம்.

அவர்கள் சம்மதம் சொல்ல பெண் பார்க்கும் நாள் முடிவு செய்யப் பட்டது. சேகர் மற்றும் சிதம்பரம் இருவரும் தமிழிடம் விஷயத்தைச் சொல்ல அவனும் சரி என்றான். ஆனால் யார் சரோஜாவிடம் பேச என்று குழப்பம் வந்தது.

ஆனால் தமிழோ “இப்ப எதுவும் சொல்ல வேண்டாம் மாமா. நானு, நீங்க, அத்தை, மூணு பேரும் போய் பாத்துட்டு வந்துருவோம். முடிவாயிட்டுன்னா அப்புறம் அம்மா கிட்ட சொல்லலாம். முடிவாகலைன்னா இந்த பேச்சே வேண்டாம்”, என்றான்.

அவன் சொன்னது சரி என்று பட்டாலும் சரோஜாவின் வாய் எப்படி பேசும் என்று பயமாக தான் இருந்தது. சேகர் வரவில்லை. அவனும் வந்தால் ஏதாவது சந்தேகம் வரும் என்று எண்ணி இவர்கள் மூவரும் சென்றார்கள்.

கயலும் தன்னுடைய அன்னையின் ஒரு சாதாரண சேலையை எடுத்துக் கட்டிக் கொண்டு தயார் ஆனாள். “ஏய் என்ன டி இதைக் கட்டிருக்க? வந்தவங்களுக்கு உன்னை பிடிக்க வேண்டாமா? நல்ல சேலையா எடுத்து கட்டு”, என்று வேணி சொன்னதும் சரி என்று எடுத்துக் கட்டினாள். சித்தியின் இந்த கவனிப்பு அவளுக்கு எதற்கு என்று தெரியாதா என்ன?

கயல்விழியின் அன்னையின் நகையை வேணி எடுக்காமல் போனாலும் சமுத்திரம் அவளுக்கு ஒரு பவுன் கூட எடுத்துக் கொடுக்க வில்லை. அவர் சம்பாதிக்கும் பணம் அனைத்துமே சித்ராவுக்கு மட்டுமே என்பது தான் வேணியின் எண்ணம். அன்னையின் நகை இருப்பதே கயல்விழிக்கு போதுமானது.

அன்னையின் சேலையையும் நகையையும் அணியும் போது “அம்மா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்”, என்று மனதுக்கு கஷ்டமாக தான் இருந்தது. சிறிது நேரத்தில் தன்னை சரி செய்து தயார் ஆகி விட்டாள்.

“வருபவன் எப்படி இருப்பான்? அவனுக்கு என்னைப் பிடிக்குமா? சேகர் அண்ணன் அவர் ரொம்ப நல்லவர்ன்னு சொன்னாங்களே? என்னை நல்லா பாத்துக்குவாங்களா? அவங்க கூட பிறந்தது எத்தனை பேர்னு எதுவுமே கேக்காம விட்டுட்டோமே? அன்னைக்கு பஸ்ல வந்தவங்க மாதிரி என்னை அக்கறையா கவனிச்சிக்கிட்டா நல்லா இருக்கும்ல?”, என பல கேள்விகள் அவளுக்குள் எழுந்தது.

மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் வந்ததும் அவர்களை வரவேற்று அமர வைத்தார்கள் சமுத்திரமும் வேணியும். சித்ரா அறைக்குள் இருந்து வெளியே வரவே இல்லை.

மீனாட்சி பெண்ணை அழைக்க வெட்கத்துடன் வந்து நின்றாள் கயல். மெல்லிய கொடி போன்ற உடல் அமைப்புடன், குழந்தை போன்ற முக வடிவிலும், பெண்களே பொறாமைப் படும் பேரெழிலில் பொம்மை போல இருந்தவளை மீனாட்சி மற்றும் சிதம்பரம் ரசித்து பார்த்தார்கள் என்றால் அவளைக் கண்டு கண்கள் தெறித்து விடும் போல பார்த்தான் தமிழ்.

“நான் பாக்க வந்தது இந்த பொண்ணா?”, என்பது தான் அவனது எண்ணம். அவளோ அவனை நிமிர்ந்து பார்க்க வில்லை. தலை குனிந்தே இருந்தாள். மூன்று பேர் அமர்ந்திருப்பது தெரிந்தது. ஆனால் நிமிர்ந்து பார்க்க தயக்கமாக இருந்தது.

அவளது கூச்சத்தையும் மென்மையையும் ரசித்தவன் மனதில் இவள் தான் தனக்கு என்று முடிவு எடுத்து விட்டான். “என்ன தமிழ் பொண்ணு பிடிச்சிருக்கா?”, என்று கேட்டார் சிதம்பரம்.

“நான் பொண்ணு கிட்ட கொஞ்சம் தனியா பேசணும் மாமா”, என்று சொல்ல “தம்பியை பின்னாடி தோட்டத்துக்கு கூட்டிட்டு போ கயல்”, என்றாள் வேணி. அவனது குரலை பதட்டத்தில் அவள் அப்போது சரியாக கவனிக்க வில்லை.

தோட்டத்தில் இருந்த மாமரத்தின் அடியில் போய் நின்றார்கள். ஜில்லென்ற குளிர் தென்றல் அவர்களை தீண்டியது. மனதை மயக்கும் மல்லிகை வாசத்துடன் தன்னருகே நின்றவளை ஊன்றிப் பார்த்தான் தமிழ். அவள் இன்னும் தலை குனிந்த படியே இருக்க “கொஞ்சம் நிமிந்து பாக்கலாமே?”, என்றான் தமிழ்.

“இந்த குரலை… எங்கோ கேட்டுருக்கோமே?”, என்று எண்ணி அவள் அவசரமாக நிமிர்ந்து பார்க்க புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

“நீங்க… நீங்க … நீங்களா?”, என்று அவள் குரல் தந்தி அடிக்க “நானே தான். எப்படி இருக்கீங்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு”, என்றான்.

“நல்லா இருக்கேன். நீங்க தான் மாப்பிள்ளைன்னு நான் எதிர் பார்க்கவே இல்லை”

“நானும் தான். கடவுள் நமக்கு முடிச்சு போட்டதுனால தான் அன்னைக்கு சந்திக்க வச்சார் போல? சரி இப்ப பேசலாம். என்னைப் பத்தி தெரியுமா?”

“தெரியாது”

“என் பேர் தமிழ், உங்க பேர்?”

“என் பேர் கயல்விழி”, என்று சொன்னவளின் குரல் குயில் போலவே அவனுக்கு தோன்றியது.

“என்னைப் பிடிச்சிருக்கா?”, என்று சிறு தடுமாற்றத்துடன் கேட்டான்.  இது வரை லவ் பற்றி எல்லாம் எந்த எண்ணமும் அவனுக்கு வந்ததில்லை. அதற்கான சூழ்நிலையும் அவனுக்கு இல்லை. வீட்டில் பார்த்து வைக்கும் பெண் தான் மனைவி என்று உறுதியாக இருந்தவன்.

ஆனால் இப்போதோ சொல்ல முடியாத உணர்வு ஒன்று எழுந்தது. அவள் சரி சொல்ல வேண்டும் என்று அவன் மனம் ஏங்கியது. ஏனோ அவளைக் காணும் போது மனதில் அமைதி வந்தது. பாலைவன இரவில் பவனி வரும் நிலவு போல அவள் அவன் கண்களுக்குத் தெரிந்தாள். அப்படி ஒரு மதி மயக்கம் தந்தது அந்த நிலவின் முகம்.

அவள் அமைதி அவனை பாதிக்க “அன்னைக்கு நன்றி சொல்லவாது பேசுனீங்க? இன்னைக்கு என்ன நிமிரவே மாட்டுக்கீங்க? பிளீஸ் பதில் சொல்லுங்க”, என்று கேட்க அவனை தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். ஆனாலும் என்ன சொல்ல என்று தெரிய வில்லை. அவளுக்கு அவனை பிடித்திருக்கிறது தான். இப்போது அல்ல, அன்றே அவன் அவள் மனதில் நுழைந்து விட்டான். ஆனால் சம்மதம் எப்படி சொல்லவாம்? அவள் சம்மதம் சொன்னாலும் வேணியும் சமுத்திரமும் திருமணம் செய்து வைப்பார்களா என்று பயமாக இருந்தது.

“எனக்கு உங்களை பிடிச்சிருக்கு கயல். உங்களைக் கல்யாணம் பண்ண எனக்கு மனப்பூர்வமா சம்மதம். நீங்க உங்க முடிவைச் சொல்லுங்க. என்னை பிடிச்சிருக்கா? பிடிக்கலைன்னா கூட சொல்லிருங்க. நான் எதுவும் நினைக்க மாட்டேன்”, என்று அவன் சொல்ல அவசரமாக “எனக்கு பிடிச்சிருக்கு”, என்று சொன்னாள் கயல்.

அவன் உதடுகள் மலர “நல்லா பாத்து சொல்லுங்க. ரொம்ப கருப்பா இருக்கேன், வயசானவன் மாதிரி இருக்கேன், உங்க கூட வந்தா பெரியப்பா மாதிரி இருப்பேன்னு சொல்ல முடியாது. ஆனா அண்ணன் மாதிரி இருப்பேன். என்னைக் கல்யாணம் பண்ணுறது உங்களுக்கு பரவால்லயா? முடிவு எடுத்துட்டு வருத்தப் படாதீங்க”, என்றான்.

“நீங்க ஒண்ணும் ரொம்ப கருப்பு இல்லை. வயசானவன் மாதிரி எல்லாம் இல்லை. என்னை விட பெரிய பையனா இருக்கீங்க. அது நல்லது தானே? எப்பவுமே பொண்ணை விட பையன் மீறி தான் இருக்கணும். சரிக்கு சமமா இருந்தா நல்லா இருக்காது. எனக்கு பிடிச்சிருக்கு”, என்று அவள் பட்டென்று சொல்ல அவன் உதடுகள் இன்னும் மலர்ந்தது.

“உங்க தலைவிதில எனக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு இருக்கு போல?”, என்று அவன் சிரிக்க “அப்படி எல்லாம் இல்லை”, என்றாள் கயல்.

“இப்பவே பேசி முடிச்சிறலாமா?”

“ம்ம்”

“முதல் முகூர்த்ததுலே கல்யாணம் பண்ணிக்கலாமா?”

“சரி”

“சரி வா போகலாம்”, என்று உரிமையாக அழைத்தான்.

அப்போது “ஒரு நிமிஷம்”, என்று தயக்கத்துடன் அழைத்தாள் கயல்.

“என்ன கயல் சொல்லு?”

“இந்த கல்யாணம் நடக்கும் தானே? இல்லை அப்பா சித்தி….”, என்று தவிப்புடன் வந்தது அவள் குரல். அவள் தவிப்பில் அவளது மன உணர்வுகள் அவனுக்கு லேசாக புரிந்தது. என்ன ஆனாலும் இவளை விட்டுக் கொடுக்க கூடாது என்று முடிவு எடுத்தவன் “கட்டாயம் நடக்கும் கயல். யார் குறுக்கே வந்தாலும் நான் உன்னை விட மாட்டேன்”, என்று உறுதி கொடுக்க அப்போதும் “நான் இதை நம்பலாமா?”, என்று தான் கேட்டாள்.

“நம்பு கயல். இனி நீ என்னோட பொண்டாட்டி. யாருக்காகவும் நான் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்”, என்று சொன்னவன் அலைப்புறுதலுடன் நின்றவளின் அருகில் வந்து அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து விட்டு வீட்டுக்குள் சென்றான். அவன் முத்தத்தால் திகைப்பில் நின்றவள் இயல்புக்கு திரும்ப சில நிமிடங்கள் ஆனது. அதற்கு பின் தான் வீட்டுக்குள் சென்றாள். அவன் கண்கள் அவளையே வட்டம் இட்டது. இப்போது தயக்கம் உதறி வெட்கத்துடன் அவனை பார்த்தாள்.

“என்ன தமிழ் பொண்ணு கிட்ட பேசிட்டியா?”, என்று கேட்டார் சிதம்பரம்.

“பேசிட்டேன் மாமா. எனக்கு பொண்ணை ரொம்ப பிடிச்சிருக்கு. கல்யாணத்துல எனக்கு சம்மதம் மாமா. பேசி முடிங்க”, என்றான். கயல் குடும்பமும் நிம்மதி அடைந்தது.

அதற்கு பின் வெகு நேரம் அமர்ந்து எல்லா விசயங்களும் தெளிவாக பேசி முடிக்கப் பட்டது. கல்யாண நாளைக் குறித்து, என்று சேலை தாலி எடுக்க வேண்டும் என்றும் பேசப் பட்டது. மண்டபம் வேண்டாம் கோவிலில் திருமணத்தை வைத்து விட்டு ஊரில் இருக்கும் திருமண மண்டபத்தில் உணவு வைத்துக் கொள்ளலாம் என்பது வரைக்கும் எல்லாம் பேசி முடிவு எடுத்து விட்டு மூவரும் எழுந்து கொண்டார்கள்.

அப்போது “ஆமா பையனுக்கு அம்மா தங்கைகள் எல்லாம் இருக்காங்கன்னு தரகர் சொன்னாரே. ஆனா யாருமே வராம நீங்களே பேசி முடிவு பண்ணிட்டீங்க?”, என்று கேட்டாள் வேணி.

சிதம்பரம் மற்றும் மீனாட்சி இருவரும் என்ன சொல்ல என்று திகைக்க “எங்க குடும்பத்துல மாமா தான் அத்தை மூத்தவர். அவர் சொல் படி தான் நாங்க கேப்போம். எனக்கு அப்பா மாதிரி. அதனால தான் அவரைக் கூட்டிட்டு வந்தேன். அம்மாக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை. அதான் கூட்டிட்டு வர முடியலை. திடீர்னு வந்ததுனால மூணு தங்கைகளுக்கும் சொல்லவும் இல்லை. வேணும்னா இன்னொரு நாள் எல்லாரையும் கூட்டிட்டு வரேன்”, என்றான் தமிழ். வேணியையும் அத்தை என்று உரிமையாக அழைத்தான். வேணி கயலை படுத்திய கஷ்டங்கள் எல்லாம் இன்னும் தமிழுக்கு சொல்லப் பட வில்லை. தெரிந்திருந்தால் அத்தை என்று அழைத்திருப்பானா?

தமிழ் நயமாக பேசியதும் அவர்களும் சரி என்று சொல்ல கயலிடம் கண்ணைக் காட்டி விட்டு கிளம்பினான் தமிழ். அவர்கள் சென்றதும் கயல் அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு கனவில் திளைக்க “சே இந்த மாப்பிள்ளை நல்லாவே இல்லை. கருப்பா இருக்கான். யூத் மாதிரியே இல்லை. எனக்கு எல்லாம் இப்படி பாக்காதீங்க மா”, என்று சித்ரா கத்துவது அவளுக்கு கேட்டது.

“கயலுக்கு இவன் போதும் சித்து. நான் என்ன விருப்பப் பட்டா அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்கிறேன்? அவ இங்க இருந்து போனா தான் உனக்கு நான் எல்லாம் பாத்து பாத்து செய்ய முடியும்? அவன் எப்படி இருந்தா நமக்கு என்ன? உனக்கு ராஜ குமாரன் மாதிரி மாப்பிள்ளை பாப்பேன் டி ராஜாத்தி”, என்று வேணி சொல்வது கயலுக்கும் கேட்டது, உள் அறையில் இருந்த சமுத்திரத்துக்கும் கேட்டது.

சமுத்திரம் மனதில் கயலுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என்று எண்ணினார் என்றால் கயலோ “நீங்க அவரோட அழகைப் பாக்குறீங்க? ஆனா நான் அவர் மனசைப் பாக்குறேன். அவர் என்னை நல்லா பாத்துக்குவார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. எனக்கு அது போதும். கருப்பா இருந்தாலும் என்னோடதாக்கும்”, என்று நிம்மதியாக எண்ணிக் கொண்டாள்.

தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!