Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மனதிலோர் மோகன ராகம்

மனதிலோர் மோகன ராகம் 21

மனதிலோர் மோகன ராகம்

அத்தியாயம் 21

மிருதுவைத் தூண்டி விட்டு அந்த நெருப்பில் தான் குளிர் காய நினைப்பது தவறு என்று ராகாவிற்குத் தெரியாமல் இல்லை. அன்றைய தினம் மாலை வரையிலும் “ஐய்யோ தப்பு பண்ணிட்டமே! வாய வச்சுகிட்டு சும்மா இருந்திருக்கலாம். நானே எனக்கு ஆப்பு வச்சுக்க முயற்சி பண்ணியிருக்கேனே” என்றெல்லாம் பிதற்றிக் கொண்டு தான் இருந்தாள்.



Advertisement

மாலை கழிந்து இரவு சூழத் துவங்க, நொடிக்கொரு முறை கைப்பேசியை எடுப்பதும், அதில் சத்யாவிடமிருந்து எதாவது செய்தி வந்துள்ளதா என்று பார்ப்பதும், அவன் ஆன்லைனில் இருக்கிறானா என்று தேடுவதும், ஒரு வேளை ஆன்லைனில் இருந்தால், “ஐய்யோ மெசேஜ் பண்ண மாட்டேங்கறானே” என்று தவிப்பதுமாகாவே நேரம் கழித்தாள்.

இரவு வழக்கமான நேரத்தில் இன்றும் அவனிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வராது போக, அவள் தவிப்பெல்லாம் தன் மீதே கோபமாக உருமாற்றம் கொண்டது.

“பேசாம நானே கால் பண்ணி பேசிடவா? ஃபோன்லையே பேசவா இல்ல நேர்ல எங்கையாச்சும் வர சொல்லி பேசவா? நான் அப்படிக் கூப்பிட்டா வருவானா? வேலை இருக்குன்னு சொல்லி அவாய்ட் பண்ணிட்டா?”

Advertisement

“அதெப்படி பண்ணுவான்? அவன் கூப்பிட்டு எவளோ நான் வெளிய போயிருக்கேன். நான் வரசொல்லறப்போ வரமாட்டானாமா?”

Advertisement

“சரி, வர்றான்னே வை, என்ன பேசுவ? அன்னைக்கு என்னை நீ கட்டி பிடிச்சல, அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கோன்னு சொல்லுவியா?” என்ற கேள்வி மனதில் உருவாக, அவளுக்கே சிரிப்பாக வந்தது.

“சே, எவளோ சில்லியா யோசிக்கறேன். ஏதோ ஒரு வீக் மொமெண்ட்ல கட்டி பிடிச்சான் தான். அதுக்காக உடனே கிடக்கறது எல்லாம் கிடக்கட்டும் கிழவியத் தூக்கி மனையில உட்கார வைங்கற கதையா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு என்னைக் கல்யாணம் பண்ணிக்குவானா?”

இப்படியான குழப்பத்தில் யோசித்து யோசித்துச் சலித்துப் போனாள். கொஞ்சம் நேரம் உறக்கம் வராமல் இப்படியும் அப்படியுமாகப் புரண்டு விட்டு, வேறு வழி இல்லாமல் தன் ஆபத்துதவியான ரேணுவின் எண்ணிற்கு அழைத்தாள்.

Advertisement

ரேணு இவள் அழைப்பை எடுக்கவில்லை. திரும்ப அழைக்கவும் இல்லை. கைப்பேசியின் கடிகாரம் இரவு 12.30 என்று காட்டியது. “அதுக்குள்ள இந்தக் குந்தாணிக்கு என்ன அப்படி ஒரு தூக்கம்?இவ எங்கண்ணனை லவ் பண்ணறப்போ ராத்திரி நேரம் காலம் தெரியாம எனக்கு ஃபோன் பண்ணி எப்படியெல்லாம் புலம்பியிருக்கா! இப்போ எனக்கு ஒரு பிரச்சனைன்னா இவ ஃபோன் எடுக்க மாட்டாளாமா?” என்று எண்ணிக் கொண்டவள், இம்முறை தன் அண்ணன் ப்ரதீப்பீற்கு அழைத்தாள்.

“ஏ என்னடீ இந்த நேரத்தில கூப்பிட்டிருக்க, எதாச்சும் பிரச்சனையா?” என்று தான் கைப்பேசியை எடுத்ததும் வினவினான்.

“உன் பொண்டாட்டி எங்க? அவள ஃபோன் எடுக்கச் சொல்லு” என்று ப்ரதீப்பை ஏவினாள்.

“அவள எழுப்பறதுக்காடீ எனக்கு ஃபோன் பண்ணி டார்சர் பண்ணற?சனியனே! அறிவே இல்ல உனக்கு?” என்று திட்டியவன் ராகா மேலே பேசும் முன்னர், ரேணுவை எழுப்பியிருந்தான்.

“ஏ, ரேணும்மா, உன் ஃபோன்னை ஏன் சைலண்டில போட்டு வச்ச, அந்தச் சைத்தான் கூப்பிடுது. எடுத்து பேசு.. ஏ பால்கனி போயிருடீ. இந்த இருந்துட்டு குசுகுசுன்னு பேசிட்டு என் தூக்கத்தைக் கெடுக்காத” என்று மனைவிக்குச் சொல்லிவிட்டு தன் மகனின் போர்வையை இழுத்து போட்டுக் கொண்டு தானும் சுருண்டு கொண்டான்.

“சே, இந்த லூசு கால் பண்ணி டார்சர் பண்ணும்னு நினைச்சு என் ஃபோனை லைசண்டில போட்டேன், அவர் ஃபோனை போட மறந்துட்டேன். நாளைக்கு லேண்ட் லைன் மொதர்கொண்டு ஆஃ பண்ணிற்றேன் இரு” என்று கருவி கொண்டே தன் கைப்பேசியுடன் பால்கனிக்கு வந்த ரேணு, வேண்டுமென்றே, “சொல்லித் தொலை! இப்போ என்ன பிரச்சனையாம் உனக்கு? எந்த ஹோட்டல் காரன் துரத்தறான்?” என்று கொட்டாவி விட்டுக் கொண்டே வினவினாள்.

“ஒரு நாத்தனார் தன்னோட அண்ணிகிட்ட தன் கஷ்டத்தைப் பகிர்ந்துக்கக் கூட இந்த நாட்டில உரிமை இல்லையா?” என்று தன் ஆலாபனைத் துவங்கினாள் ராகா.

“அம்மா என் அருமை நாத்தனாரே! தயவு செஞ்சு கடுப்பேத்தாத! ஏற்கனவே இன்னைக்கு நைட் உங்கம்மா என்னை வேணும்கற அளவுக்கு எரிச்சல் ஆக்கிட்டாங்க. நானும் பொம்பள புள்ளையா அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு ஆசைப்படறேன். என்னை அப்படியே இருக்க விட்ரு.”

“ஐய்யயோ..அம்மம்மா… உங்க அடக்க ஒடுக்கம் பத்தி எனக்குத் தெரியாதா? நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளு. இன்னைக்குக் காலையில என்னாச்சுன்னா” என்று துவங்கி, மிருதுவிடம் தான் பேசிய மொத்த கதையையும் சொல்லி முடித்தாள் ராகா.

ரேணு மறுமுனையில் இவளைத் திட்ட கெட்ட வார்த்தை தேடுவது தெரிந்தது. “கருமமே, சனியனே! எரும, சூனியக்காரி! அறிவிருக்கா? மனசாட்சி இருக்கா? உனக்குலாம் நல்ல புத்தியே கிடையாதா?” இப்படி நீ என்ன வேணா சொல்லலாம். எனக்கு எல்லாமே சூட் ஆகும்” என்று சன்னமான சிரிப்புடன் ராகா கூறினாலும், அவள் வார்த்தையின் பின்னால் இளையோடிய குற்ற உணர்வை ரேணு புரிந்து கொண்டாள்.

“உன்னை நீயே திட்டிக்க முடியாதுன்னு, உன் மனசாட்சி உருத்தாம இருக்க என்னைத் திட்டச் சொல்லற? அதானேடீ?” என்ற ரேணு, “இதப்பாரு ராகா, செஞ்சதை நினைச்சு ஃபீல் பண்ணாத விடு. இதை எப்படிக் கரெக்ட் பண்ண முடியும்னு யோசி. மிருது எதாவது முடிவெடுத்திருக்காங்களா? சத்யா கிட்ட பேசினாங்களா? ஏதாவது தெரியுமா உனக்கு?”

“இல்ல ரேணு! தெரியாது. எதுவும் தெரியாத இடத்தில நின்னுகிட்டு, எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு எதிர்பார்க்கறது கொடுமையா இருக்குடீ. சத்யா என்ன நினைக்கறான்னு தெரியலை. என் மேல பாசம் இருக்கா? காதல் இருக்கா? எனக்காகத் தன்னோட கல்யாணத்தைக் கேன்சல் பண்ணிட்டு வர்ற அளவுக்கு என்னைப் பிடிக்குமா? இல்ல, ஒரு கம்ஃபர்ட் சோன் பர்சன்னு ஜாலியா பேசி சிரிச்சுட்டு இருந்தானா? எதுவுமே தெரியலை” என்று சொல்ல சொல்ல, ராகாவின் குரல் வெகுவாய் கம்மியது.

“சரி, சரி, விடு. இப்போ ஃபீல் பண்ணி என்னாகப் போகுது, எதைப் பத்தியும் ரொம்ப யோசிச்சுக் காம்ப்ளிகேட் பண்ணிக்காத ராகா! விடு, எல்லாரும் சில நேரம் தப்பா வார்த்தைகள் விடறது தான். அது அந்த நேரத்திய மனநிலை தான். இதுல சரி தப்புன்னு யோசிக்க எதுவுமே இல்லை”

“ஆனாலும் நான் மிருதுவை தூண்டி விட்டிருக்கக் கூடாதுல ரேணு! அவளை வச்சு நான் குளிர்காய நினைச்சுட்டேன். அது தப்பு தான்.”

“கண்டிப்பா தப்பு தான் இல்லைன்னு சொல்ல முடியாது. அதையே நினைச்சு நினைச்சு வருத்தப்பட்டு உடம்பை கெடுத்துக்காத! விடு. போய் அடுத்த வேலையைப் பாரு!”

“என்னால அவங்க கல்யாணம் நிக்கற மாதிரி ஆகிட்டா, என்னைப் பத்தி எல்லாருமே தப்பா தானே பேசுவாங்க! சத்யாவோட சொத்துக்காக அவனை ப்ராக்கெட் போட்டு மடக்க நினைச்சேன்னு சொல்ல மாட்டங்களா?” என்று கேட்டாள் ராகா தவிப்பாக.

“ஓ, அப்போ நீ சத்யாவோட சொத்துக்காக இந்த ப்ளானைப் பண்ணலையா?” என்று ரேணுவும் ராகாவை சிரிக்க வைக்கும் பொறுட்டு வினவினாள்.

“ஏ, ஏண்டி நீயே இப்படிக் கேட்கற? நான் அவளோ கெட்டவளா டீ” என்று ராகா கேள்வி கேட்கும் முன்னர் அவள் குரல் வெகுவாகத் தழைந்து போயிற்று.

“ஏ, சும்மா சொன்னேடீ. உடனே டவுன் ஆகாத! இதப்பாரு ஊர் உலகம் சொல்லறதைப் பத்திலாம் நாம எதுக்கு யோசிக்கணும் சொல்லு. இங்க யாருமே நல்லவங்களும் இல்ல, கெட்டவங்களும் இல்ல, அந்த அந்தச் சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி அவங்க நடந்துப்பாங்க. அவளோ தான்.”

“ஆனா நான் சத்யாவுக்குப் புரிய வைக்கத் தான் நினைக்கறேன் ரேணு. அவனுக்கு என் மேல இருக்கறது லவ் தான், சும்மா டைம் பாஸ் ரிலேஷன்ஷிப் இல்லைன்னு எப்படிச் சொல்லறது?”

“இதெல்லாம் ஒருத்தர் இன்னொருதருக்கு புரிய வைச்சா தான் நடக்கும்னு இல்ல. உனக்குப் பிடிச்ச தலைவர் டயலாக்கே சொல்லறேன். டயலாக் பழசு தான் ஆன, விஷயம் சூட் ஆகும். “கிடைக்கறது கிடைக்காம இருக்காது, கிடைக்காம இருக்கறது கிடைக்காது.” புரியுதா? உனக்குன்னு என்ன எழுதியிருக்கோ அது உன்கிட்ட வந்து சேரும். சேரலைன்னா அது உன்னோடது இல்ல. சரியா” என்று ரேணு பெருமளவு ராகாவை சமாதானம் செய்திருந்தாள்.

இன்னும் கொஞ்ச நேரம் பேசிவிட்டு, ரேணு சென்றுவிட, ராகா அன்றைய இரவு முழுக்க உறக்கம் வராமல் தவியாய் தவித்தாள். அடுத்தத் தினம் விடிந்தும் விடியாத பொழுதே எழுந்து தயாராகி, நேரே மிருதுவைத் திரும்பச் சந்திக்க மருத்துவமனை சென்றிருந்தாள்.

கைப்பேசியில் தான் காபிடேரியாவில் அமர்ந்திருப்பதாய் சொல்லவும், மிருது பத்து நிமிடத்தில் கீழே இறங்கி வந்துவிட்டாள். இன்றும் ராகாவைத் தோளோடு அணைத்து, “தேங்க்யூ ஃபார் கமிங்” என்று சிரிப்பை உதிர்த்தாள். மிருதுவின் இந்த உபசரிப்பைக் காண ராகாவிற்குச் சங்கடமாக இருந்தது. “ஐய்யோ இத்தனை நல்ல பெண்ணின் திருமணத்தை நிறுத்த வேண்டுமென்று எனக்கு ஏன் தோன்றியது?” என்று தன்னைத் தானே கேவலமாய்த் திட்டிக் கொண்டு தான் அமர்ந்திருந்தாள்.

“ராஜமாணிக்கம் சாருக்கு இப்போ எப்படி இருக்கு மிருது? இஸ் ஹீ ஒ.கே?” என்று எட்ட இருந்த மிருதுவின் கைகளைப் பிடித்துக் கொண்டு இம்முறை உண்மையான அக்கறையுடன் வினவினாள் ராகா.

“டாடி இஸ் மச் பெட்டர். செரிபெல்லம்ல தான் மைல்ட் ஸ்டிரோக் வந்திருக்கு. இதுவே கொஞ்சம் ஜாஸ்தி வந்திருந்தா பராலிசஸ் அட்டாக் மாதிரி ஆகியிருக்கும்னு சொன்னாங்க. இன்னும் ஒரு மூணு நாள்ல வீட்டுக்கு அனுப்பிடுவாங்க”

“ஓ. குட் டு ஹியர்.”

“தேங்க்யூ ராகா! எனக்குத் தீப்தியும் மின்னியும் தவிரப் பெருசா ஃப்ரெண்ட்ஸ் சர்கிள்னு கிடையாது. கொஞ்ச நாள் பழக்கம் தான்னாலும் நீங்க இவளோ கேர் பண்ணி, எனக்காக இவளோ டைம் ஸ்பெண்ட் பண்ணறீங்கன்னு நினைக்கறப்போ ஐ ஃபீல் ப்ளஸ்ட்” என்று மிருது கூற, ராகாவிற்குத் தர்மசங்கடமாகியது.

“அய்யோ, தப்பு பண்ணிட்டமே” என்று மீண்டும் உருத்தல் எழுந்தது. வயிற்றில் அமிலம் சுரக்கத் துவங்க, வாயெல்லாம் கசந்து போனது. “சத்யாவிடம் சீக்கிரம் நிச்சயம் வைத்துக் கொள்ளலாம்” என்று இந்தப் பெண்ணின் மனதில் விதைத்திருக்கக் கூடாது. எப்படியாவது இது பைத்தியக்கார எண்ணம், இது வேண்டாம் என்று சொல்லிவிட வேண்டும்.

“வந்து.. மிருது.. நான் நேத்து சொன்னேனே, சீக்கரம் உங்க எங்கேஜ்மெண்ட் வச்சுக்கலாம்னு நீங்க சொல்லுங்கன்னு. ஐ திங், அது கரெக்ட் இல்லை மிருது. உங்க டாடி இன்னும் நல்லா ரெகவர் ஆகி வந்து, ஃபன்ஷன்ல அங்க இங்கன்னு நடமாடினா தானே உங்களுக்குச் சந்தோஷமா இருக்கும்” என்று மெல்ல மென்று விழுங்கி பேச்சைத் துவங்கினாள் ராகா.

“ஆக்ட்சுவலி, இதைப் பத்தி நானே உங்ககிட்ட பேசணும்னு நினைச்சேன். நேத்து நீங்க சொன்ன விஷயத்தை நான் யோசிச்சுப் பார்த்தேன். நீங்க சொல்லற மாதிரி டாடிகிட்ட சொல்லாம்னு தான் இருந்தேன்”

“உங்க அப்பா கிட்ட சொல்லிட்டீங்களா? என்ன சொன்னார்?” என்று மனது நிறையப் பதற்றத்துடன் வினவினாள்.

“இல்ல, ராகா! என்னால அப்பாகிட்ட இதைப் பத்தி பேச முடியலை. அவர் இப்போ இருக்கற நிலைமையில இதைப் பத்தியெல்லாம் எதுக்குப் பேசணும். ஐ டோண்ட் ஃபீல் இட் இஸ் குட்” என்று சொல்லி ராகாவின் வயிற்றிற்குப் பால் வார்த்தாள்.

“நல்ல முடிவு மிருது. நானும் அதான் சொல்ல வந்தேன். இப்போதைக்கு ஏன் இதையெல்லாம் பேசி காம்ப்ளிகேட் பண்ணிக்கணும். அப்பாவோட ஹெல் தான் இப்போ முக்கியம். முதல்ல அவர் நல்லபடியா வீட்டுக்கு வரட்டும்” என்று மிருதுவின் கைகளை ஆதுரமாய்ப் பற்றி ஒரு முறை அழுத்தி, மொழிந்தாள்.

ராகாவின் பேச்சைக் கேட்கவும் மிருதுவின் கண்கள் லேசாகக் கரிக்கத் துவங்கின. “தேங்க்யூ வெரி வெரி மச் ராகா. இப்படி ஆறுதலா நாலு வார்த்தை கேட்க ஐ ஃபீல் சோ ஸ்டிராங்க். அம்மா ஒரு பக்கம் அழுதுட்டே இருக்காங்க, அவங்களையும் என்னால கன்சோல் பண்ண முடியல. அப்பாவோட ஆஃபீல் வர்க்ஸ் வேற நிறையப் பெண்டிங் இருக்கு. ஒரு பக்கம் நா அதையும் பார்க்கணும்னு அம்மா சொல்லறாங்க. ஐ ஃபீல் சோ ஸ்டிரெஸ்ட்.”

“அதெல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிடும் மிருது. இது கொஞ்சமும் என்ஸ்பெக்ட் பண்ணாத விஷயம் இல்லையா. அதனால உங்களுக்கும் உங்க அம்மாவுக்கும் அந்த ஷாக் அதிகமாவே இருக்கும். நல்ல நல்ல டாக்டர்ஸ் இருக்காங்க. நல்ல ட்ரீட்மெண்ட் இருக்கு. சரியாகிடும்”

“எஸ் ராகா! சத்யா கூட உங்களை மாதிரியே தான் என்னைச் சீயர் அப் பண்ணறாங்க. டெய்லி அவங்க ஆஃபீஸ் வேல முடிச்சிட்டு, என் அப்பா ஆபீஸ் போய் இம்பார்டெண்ட் வர்க் எதாச்சும் இருந்தா அதைப் பார்த்துட்டு, பேங்க் பே மெண்ட்ஸ் பாஸ் பண்ணிட்டு வர்றாங்க. அப்போவும் நேரா வீட்டுக்குப் போகாம, இங்க ஹாஸ்பிடல் வந்து என்னையும் மம்மியையும் விசாரிச்சுட்டு, பிறகு தான் வீட்டுக்கு போறாங்க!” என்று சத்யாவின் பெருமைகளை மகிழ்ச்சியுடன் ராகாவிடம் பகிர்ந்து கொண்டாள்.

சத்யாவைப் பற்றி மிருது மிகவும் உரிமையுடன் பேசுவதைக் கேட்கக் கேட்க என்னவோ போல் ஆகிவிட்டது ராகாவிற்கு. எவ்வளவு கனவுகளுடன் பேசுகிறாள். அவன் மீது எத்தனை நம்பிக்கை வைத்துள்ளாள். அவனும் தான் தன் அலுவல்களை முடித்துவிட்டு, இங்கே இவர்களது கம்பெனியையும் ஒரு கண் பார்த்துக் கொள்கிறான்.

“ஆமா, ஆமா, அதனால தான் உனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்பலை இப்போ வரைக்கும்.” என்று முகத்தைத் தாவாயில் இடித்த மனசாட்சியின் நக்கலை ராகா கண்டு கொள்ளவில்லை.

“சரி, மிருது! நான் கிளம்பறேன். எனக்கு ஆபீஸ்க்கு டயமாச்சு. ப்ளீஸ் டே கேர். எதாவது ஹெல்ப் வேணும்னா கால் பண்ணுங்க. ஹெல்ப் வேணும்னா மட்டும் இல்ல, யார்ட்டையாவது சும்மா பேசினா நல்லா இருக்கும்னு நினைச்சாலும் ப்ளீஸ் கால்” என்று சம்பிரதாயமாக உரைக்காமல், உண்மையான அக்கறையுடன் பேசி விடைபெற்றாள் ராகா.

மிருதுவும் ராகாவை ஒரு முறை கட்டி அணைத்து விடை கொடுத்தவள், ராகா செல்லும் சமயம், “யு நோ ராகா! நீங்க சொன்னீங்கள்ல நிச்சயத்தைச் சீக்கிரம் வச்சுக்கோங்கன்னு. இந்த விஷயத்தை நான் சத்யாகிட்ட சொன்னேன்.” என்று க்ளைமேக்ஸ் ட்விஸ்ட் போலக் கூற, ராகா பதில் பேசாமல் மிருதுவின் வாயையே பார்த்து

“சத்யா சார் என்ன சொன்னார்?” என்று மெல்லமாக வினவினாள். “இதை முன்னாடியே சொல்லாம, இப்போ ஏண்டி சொல்லற?” என்று சாடிக் கொண்டே.

“நான் இந்த விஷயத்தைச் சொன்னதும், அவர் திட்டப் போறார், அன்னைக்கு மாதிரி அக்கா வரட்டும்னு சொல்லப் போறார்னு தான் நினைச்சேன். பட்..”

“பட்?”

“பட், ஹீ செட் ஒ.கே! உன் விருப்பம் எதுவோ அப்படியே செய்யலாம்னு சொன்னார். கேன் யூ பிலீவ் இட்? என்னால சத்யாவை புரிஞ்சுக்கவே முடியலை. அன்னைக்கு என்னடான்னா அக்கா வரணும்னு அவளோ சண்டை போட்டார். இப்போ என் டாடிக்கு உடம்பு முடியலை, சோ, சீக்கரம் எண்கேஜ்மெண்ட் வச்சா நல்லா இருக்கும்னு நான் சும்மா ஒரு பேச்சுக்கு தான் சொன்னேன். உடனே ஒ.கே சொல்லிட்டார்.” என்ற சற்றே பெருமை பொங்க கூறிய மிருது, “ஒ.கே பை ராகா! சீ யூ” என்று விடைபெற்று உள்ளே சென்றுவிட்டாள்.

ராகாவின் கால்கள் தரையில் ஆணி அடித்தது போன்று அப்படியே நின்று போயின. “அப்போ! உனக்கு என் மேல துளி கூட இண்டிரெஸ்ட் இல்லையா? நானா தான் கற்பனை பண்ணிட்டு உன்னை நினைச்சு ஏங்கிட்டு என் டைமை வேஸ்ட் பண்ணறேனா? அன்னைக்கு நடந்தது உன் வரையில ஒரு விஷயமே இல்லையா? நான் உன் லைஃப்ல தேவை இல்லையா சத்யா?” என்று நினைக்க நினைக்க, நெஞ்சை கத்தியால் ஆழமாய்ச் சொருகி மெல்ல திருப்புவது போன்று வலித்தது.

மிருது சென்று நீண்ட நேரமாகியும் அங்கேயே நின்றிருந்த ராகா, எப்படி அன்றைக்கு அலுவலகம் வந்து சேர்ந்தாள் என்று கொஞ்சமும் நினைவில்லை. அவள் முகம் பார்க்கவுமே மைக்கிலும் வனிஷாவும் ஏதோ பிரச்சனை என்று மட்டுமாய்ப் புரிந்து கொண்டு, அதிகம் அவளை நோண்டாமல் விட்டுவிட்டனர். தன் இருக்கையில் வந்து அமர்ந்தவள் நீண்ட நேரம் திறந்து வைத்திருந்த வெற்று கணினியின் திரையை வெறித்தாள்.

திரையில் நிழலாய் தெரிந்த அவள் பிம்பம் அவளைப் பார்த்துச் சிரிப்பதாய் தோன்றியது. அவளைக் கடந்து சென்ற வனிஷா அவளைப் பார்த்துக் கொக்கரித்துச் சிரிப்பதைப் போன்று மாயை உண்டாகியது. மைக்கின் சாதாரணப் பார்வைகள் கூட “நல்லா வேணும் உனக்கு. கோல்ட் டிக்கர்” என்று சாடுவது போலத் தோன்றியது.

என்ன செய்ய என்ற குழப்பமும், எதுவும் செய்ய வேண்டாம் என்ற ஆத்திரமும், ஏதாவது செய்யேன் என்ற தவிப்பும் ஒன்று சேர்ந்து அவளைக் கலங்கடித்தன.

கொஞ்சமும் யோசனை இல்லாமல், சத்யாவிடம் பேச வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே பிரதானமாய்த் தோன்றியிருக்க, அவன் எண்ணிற்கு இரண்டு நாட்கள் கழித்து அவளாகவே அழைத்தாள்.

எப்படியும் சத்யா பேசுவான், நிலைமையைச் சரி செய்வான் என்ற நப்பாசை மனதின் மூலையில் சுடர் விட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால் ராகா முற்றிலும் எதிர்பாராத விதமாக, முதல் அழைப்பிலேயே சத்யா அவளது அழைப்பைத் துண்டித்தான்.

மீண்டும் சிலமுறை அழைத்த போதும், அவன் அழைப்பை ஏற்கவில்லை. ஒவ்வொரு முறையும் அழைப்பு துண்டிக்கப்படவும், கண்ணீர் தழும்பும் கண்களுடன் கைப்பேசியினை ஆத்திரமாய் டேபிளின் மீது எரிந்தாள் ராகமாலிகா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!