அத்தியாயம் 5.1_தேவனுக்கேற்ற தேவியோ_கார்த்திகா கார்த்திகேயன்
அத்தியாயம் 5
நீ நான் என்றில்லாமல்
நமக்காக ஒரு தனி
Advertisement
உலகம் படைப்போம் வா!!!
ரதியும் சரி அமரும் சரி இருவரும் இன்று வரைக்கும் தங்கள் உணர்வுகளை காதல் என வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. ஆனால் தங்கள் நினைப்பு, மற்றவருக்குள் ஓடுகிறது என அவர்களுக்குத் தெரியும்.
Advertisement
Advertisement
அவளுக்கும் அவனிடம் பேசப் பிடிக்கும், ஆனால் பேச பெரும் தயக்கம். அந்த தயக்கம் அவள் வாயைக் கட்டிப் போட்டிருந்தது. அவனுடனே இருக்க ஆசை இருந்தாலும் அதை அவனிடம் வெளிபடுத்த தைரியம் இல்லை.
ஆனால் அவன் பார்வைகள் அவளுக்குள் மயிலிறகால் வெண்சாமரம் வீசுவதை அவள் உணர்ந்து தான் இருந்தாள். அவள் பயந்து ஓடிப் போவதால் அமரும் அவளை பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டான்.
Advertisement
அவர்களே ஒரு முடிவு இல்லாமல் இருக்கும் போது திவ்யா வேறு கேள்வி கேட்டால் ரதி என்ன சொல்வாள்? அவள் திருதிருவென்று விழிக்க “உன் முழியே சரி இல்லை. எனக்கு இப்ப என்னன்னு தெரிஞ்சாகனும். இல்லைன்னா அம்மா கிட்ட சொல்லிருவேன்”, என்று வேறு மிரட்ட தங்கையின் கிடுக்கு பிடியில் ரதி என்ன சொல்ல என்று தடுமாற ரதியின் முகத்தில் இருந்த தடுமாற்றம் திவ்யாவுக்கு சிறு சுவாரசியத்தைக் கொடுத்தது.
“ஏய் ரதி ஒழுங்கா சொல்லு. என்ன ஆச்சு?”
ரதிக்கு தங்கை தான் தோழி போல என்பதால் “ஒரு விஷயம் ரொம்ப குழப்பமா இருக்கு திவி. அதுல இருந்தே நான் நானாவே இல்லை. அதுல இருந்து வெளிய வரணும்னு நினைக்கிறேன். ஆனா முடியலை”, என்றாள்.
“இப்படி சொன்னா எப்படிக்கா? என்ன ஆச்சு ஏதாவது பிரச்சனையா?”
“கிட்டதட்ட அப்படி தான். நான் என்ன நடந்துச்சுன்னு சொல்றேன். அப்புறம் என்னன்னு சொல்லு”, என்று ஆரம்பித்தவள் அனைத்தையும் சொல்ல தன்னை போலவே ரதியின் மனதில் எழுந்த சலனமும் புரிந்தது திவ்யாவுக்கு.
ஒரு பெண்ணாக சாணக்கியனின் நினைவு தன்னை வருத்துவது புரிந்த திவ்யாவுக்கு ரதியை தெள்ளத் தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது.
“உனக்கு அமரை பிடிச்சிருக்கா அக்கா?”
“அவங்க பேசுற வரைக்கும் எனக்கு ஒண்ணும் தோனினது இல்லை. ஆனா அதுக்கு அப்புறம் என்னால அதை மறக்கவே முடியலை திவி. அவங்க கிட்ட பேசணும் போல இருக்கு. பாக்கணும் போல இருக்கு. ஆனா என் மனசாட்சி அதை தப்புன்னு சொல்லுது. பயமாவும் இருக்கு”
“நான் ஒண்ணு சொல்லவா அக்கா?”
“சொல்லு”
“உன் மனசுக்கு தப்புன்னு தோணுறது எதனால தெரியுமா? நம்ம குடும்பத்தை நினைச்சு தான் இருக்கும்? ஆனா உன் மனசுக்கு அமரை பிடிச்சிருக்கு. நீ அமரை காதலிக்கிற”, என்று திவ்யா சொல்ல அதிர்ந்து போய் தங்கையைப் பார்த்தாள் ரதி.
“நீ பண்ணுறது சரி தான்னு நான் சொல்றது கூட தப்பு தான். அது நான் உன்னை தப்பா வழி நடத்துற மாதிரி ஆகிரும்”
“இப்ப என்ன சொல்ல வர திவி. பண்ணுறது தப்புன்னு சொல்லுறியா?”
“அது தப்பா சரியான்னு உன் மனசாட்சி கிட்டயே கேளு. உன்னால அமர் இல்லாம அவனை நினைக்காம இருக்க முடியும்னா இதுல இருந்து வெளிய வந்துரு. அப்படி இல்லையா அவன் கிட்ட தெளிவா பேசு. அவன் என்ன நினைக்கிறான்னு கேளு. அவனுக்கும் உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான்னா அடுத்த லெவல்க்கு போங்க. நீ அவன் கிட்ட இருந்து பயந்து ஓடினா இதுக்கு முடிவே கிடைக்காது. நீயும் நிம்மதியா இருக்க மாட்ட. உன்னால வேற எதுலயும் கவனம் செலுத்த முடியாது. நீ இப்படி இருந்தா அம்மாவே உன்னைக் கண்டு பிடிச்சிரும். அதனால அமர் கிட்ட பேசு”
“நீ சொல்றது சரி தான். பேச தான் செய்யணும். ஆனா பயமா இருக்கே?”
“காதலிச்சா பயம் எல்லாம் ஓடிப் போயிறணும் மேடம்”
“எனக்கு அம்மாவை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. இந்த விஷயம் தெரிஞ்சா அடி வெழுத்துரும்”
“அப்படின்னா அமரை இப்பவே விட்டுரு அக்கா. அம்மா அப்பா உனக்கு வேற பையனை கட்டி வைப்பாங்க. அமர் கிட்ட சொல்லிரு. என் மனசுல எந்த தப்பான எண்ணமும் இல்லை. இனி என்னை தொல்லை பண்ணாதன்னு சொல்லிரு. இல்லை உனக்கு பயமா இருந்தா நான் வேணும்னா சொல்றேன்”
“இல்லை இல்லை வேண்டாம். வேற யாரையும் எனக்கு பிடிக்காது. எனக்கு அவங்களை மட்டும் தான் பிடிக்கும்”
“அப்படின்னா நீ நம்ம வீட்ல போராட தான் செய்யணும் அக்கா. காதலுக்காக அம்மா கிட்ட நாலு அடி கூட வாங்கலைனா எப்படி?”, என்று கேட்க ரதி அழகாக புன்னகைத்தாள்.
“நீ எப்பவும் இப்படியே சிரிச்சிக்கிட்டே இருக்கணும் அக்கா. உன்னோட காதலாவது கல்யாணத்துல முடியனும்”, என்று மனதார வேண்டிக் கொண்டாள்.
எப்படி அமரிடம் பேச என்று இரண்டு பேரும் பல திட்டங்களை வகுத்து கடைசியாக அமருக்கு ரதியின் எண்ணில் இருந்து “எனக்கு உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று தகவல் பறந்தது.
அதைப் பார்த்த அமருக்கு சந்தோஷத்தில் தலை கால் புரிய வில்லை. அந்த வயதுக்கே உரிய இளைஞனின் துடிப்பல்லவா?
எங்க பேசணும்? எப்படி? என்ன? என்று பல கேள்விகள் அவனிடம் இருந்து உடனடியாக வர ரதி திவ்யாவிடம் கேட்டு “நாளைக்கு காலேஜ் முடிஞ்ச அப்புறம் கேன்டீன்ல வச்சு பேசலாம்”, என்று அனுப்பி வைத்தாள்.
கேன்டீனா என்று எண்ணி அமருக்கு திகைப்பு தான். அவனது நண்பர்கள் பார்த்தால் என்ன ஆவது என்ற பயம் எழுந்தது. அதுவும் தன்னால் ரதிக்கு எந்த கெட்ட பெயரும் வரக் கூடாது என்று தான் அவ்வளவு யோசித்தான்.
கடைசியில் அவன் ஆசை கொண்ட மனதும் ஒரு முறை பார்த்து பேசுவதால் எதுவும் ஆகி விடாது என்று எண்ணி “சரி கண்ணம்மா, நாளைக்கு பேசலாம்”, என்று பதில் அனுப்ப ரதி முகம் வெட்கத்தில் மிளிர்ந்தது. அதைக் கண்டு அவளை கிண்டல் செய்து கொண்டிருந்தாள் திவ்யா.
அடுத்த நாள் மாலை கல்லூரி முடிந்ததும் அமர் அவளுக்காக காத்திருக்க “நீ போய் பேசிட்டு எனக்கு மெசேஜ் பண்ணு அக்கா. நான் அது வரைக்கும் லைப்ரேரில இருக்கேன். தைரியமா உன் மனசுல இருக்குறதை சொல்லு”, என்று சொல்லி விட்டு சென்றாள் திவ்யா.
தயக்கத்துடன் ரதி கேன்டீன் நோக்கிச் சென்றாள். தூரத்தில் வரும் போதே அவன் அவளைப் பார்த்து விட்டான். அவளும் அவனைப் பார்த்து விட அவனை நெருங்க நெருங்க அவளுக்கு கால்கள் பின்னியது.
அனைவரும் கல்லூரி முடிந்து செல்லும் நேரம் என்பதால் அங்கே கூட்டம் அதிகம் இல்லை. ஆனாலும் சில பேர் இருந்தார்கள்.
ரதி தயங்கிய படியே அவன் எதிரே போய் நின்றாள். அவனை நிமிர்ந்து பார்க்கவே அவ்வளவு தயக்கமாக இருந்தது.
அவள் பதட்டத்துடன் எதிரே வந்து நிற்க அவளை அப்படியே இழுத்துக் கட்டிக் கொள்ள அவன் கைகள் பரபரத்தது.
“என் கிட்ட என்ன பயம் ரதி மா? வா இங்க உக்காரு“, என்று சொல்ல அவன் எதிரே அமர்ந்தாள். அப்போதும் பயப்பார்வையும் வெட்கமுமாக அவள் இருக்க அவனுக்கு அவளது பதில் எதுவுமே தேவை இருக்க வில்லை.
தன் மீது அவள் வைத்திருக்கும் நேசத்தை அவள் கண்களும் வெட்கம் ததும்பிய முகமும் காட்டிக் கொடுத்து விட அவனுக்கு வேறு என்ன வேண்டுமாம்?
“ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வரட்டா ரதி?”, என்று கேட்டான்.
“இல்லை எனக்கு எதுவும் வேண்டாம்”, என்று சிறு குரலில் பதில் சொன்னாள்.
“முதல்ல என்னை நிமிந்து பாரு ரதி மா”, என்று சொல்ல அவனைப் பார்த்தவள் ஒரு நொடிக்கு மேல் அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் பார்வையைத் திருப்பிக் கொள்ள அவனுக்கோ அவளை அப்போதே தனக்குள் பொதிந்து கொள்ள வேண்டும் என்று ஆவல் பிறந்தது.
அவளை காற்றுக்கு கூட இடமில்லாமல் இறுகத் தழுவி, அவள் இதழ்களுக்குள் தொலைந்து அவளது நெஞ்சுக்குழியில் கரைந்து காணாமல் போக வேண்டும் போல பல எண்ணங்கள் அவனுக்குள் குமிழிட்டது.
“ரதி”, என்று வார்த்தைக்கு வலிக்குமோ என்று அழைத்தான்.
“ஆன்?”
“நேரம் ஆச்சு வீட்டுக்கு போ”, என்று சொல்ல அவனை திகைப்பாய் பார்த்தாள். பேச வேண்டும் என்று வந்து இரண்டு நிமிடங்கள் கூட ஆக வில்லை. பேச வேண்டிய விஷயத்தையும் பேச வில்லை. அதற்குள் போக சொன்னால் அவள் என்ன நினைக்கவாம்?
“என்ன?”
“வீட்டுக்கு போன்னு சொன்னேன் டா”
“நாம பேசவே இல்லையே? அதுக்குள்ள போகனுமா?”
“நீ பேசுறதை விட உன் கண்ணு அழகா பேசிருச்சு. எனக்கு வேற என்ன தெரியனும்? அப்புறம் உன்னை போக சொல்ல ஒரு காரணம் இருக்கு”
“என்ன?”
“இவ்வளவு நாள் உன்னைப் பாத்துட்டே இருக்கணும்னு தோணும். சில நேரம் உன் கிட்ட பேசிக்கிட்டே இருக்கணும்னு கூட தோணிருக்கு. ஆனா இப்ப.. உன்னை கட்டிப் பிடிக்கணும், முத்தம் கொடுக்கணும்னு எல்லாம் தோணுது டி. அதான் போகச் சொல்றேன்”, என்று ஆழ்ந்த குரலில் உரைக்க அதைக் கேட்டு ஒரு மாதிரி திணறிப் போனாள் ரதி.
பொது இடத்தில் அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை இருந்தாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவே அவ்வளவு போராட்டமாக இருந்தது அவளுக்கு. அந்த இடமே சூடாகிப் போன உணர்வு. அவள் முகம் மொத்தமும் சிவந்து விட்டது.
அது அவன் கண்களுக்கு இன்னும் அவள் அழகு கூடியது போன்ற உணர்வைக் கொடுக்க “இதுக்கு தான் சொன்னேன் இங்க இருந்து போன்னு. என்ன டா பேசணும்னு சொன்னோம். என்ன ஏதுன்னு கேக்கலையேன்னு நினைக்காத. இப்ப என் கிட்ட நீ பேசணும்னு நினைச்சாலும் உன் மனசுல இருக்குறதை சொல்ல முடியாது கண்ணம்மா. ரொம்ப பதட்டமா இருக்க. நீ என்ன நினைக்கிறியோ அதை கால் பண்ணும் போது சொல்லு. வீட்டுக்குப் போய் எப்ப பேச முடியுமோ அப்ப பேசு ஓகே வா?”, என்று கேட்க சரி என்னும் விதமாய் தலையசைத்து விட்டு எழுந்து கொண்டாள்.
அவன் சொல்வதும் நூறு சதவீதம் சரி என்று அவளுக்கும் தெரிந்தது. தொண்டையை தாண்டி ஒரு வார்த்தை கூட வெளி வர மறுக்க அவனிடம் எப்படி வாழ்க்கையைப் பற்றி பேசவாம்?
“பாத்து போ. பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் கூட வரவா?”
“இல்லை, திவி லைப்ரேரில இருக்கா. அவளை கூட்டிட்டு போகணும்”
“சரி”, என்று அவன் சொல்ல அவளும் அவனைப் பார்த்த படி சென்று விட்டாள்.
அவளைக் கண்ட திவ்யா “என்ன பேசுனியா? என்ன பேசுனீங்க? அதுக்குள்ள வந்துட்ட?”, என்று ஆர்வமாக கேட்க நடந்ததை அரைகுறையாக சொல்லி முடித்தாள்.
“சூப்பர், இப்ப நேரா வீட்டுக்கு போறோம். போனதும் நம்ம ரூம்ல வச்சு அமர் கிட்ட பேசு. நான் அம்மா அப்பா கூட இருந்து அவங்க பார்வை உன் பக்கம் பாயாத மாதிரி பாத்துக்குறேன்”, என்று சொல்ல ரதியும் சிரித்தாள்.
“ஆனாலும் கண்ணம்மா கொஞ்சம் ஓவர் தான்”, என்று வேறு திவ்யா சொல்லி சிரிக்க ரதிக்கு மீண்டும் முகம் சிவந்தது.
வீட்டுக்குச் சென்றதும் சொன்னது போலவே அறைக்குள் சென்று ரதியை போன் செய்ய சொல்லி விட்டு அன்னையிடம் சென்று விட்டாள் திவ்யா. ரதியை கேட்ட அன்னை தந்தையிடம் “அவளுக்கு தலை வலி, படுத்திருக்கா”, என்று சொல்லி சமாளித்தாள்.
ரதி அழைத்ததும் உடனே எடுத்து விட்டான் அமர். வீட்டு பக்கம் சென்று விட்டான் தான். ஆனால் உள்ளே செல்லாமல் ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி ஸ்டாண்ட் போட்டவன் அதில் ஏறி அமர்ந்த படி அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“ரதி”, என்று அவ்வளவு மென்மையாக அழைக்க அந்த அழைப்புக்கே உருகிப் போனாள் பெண்.
“ம்ம்”, என்று முணுமுணுக்க “நீ ரொம்ப சாஃப்ட் டி. எனக்கு உன்னை கொஞ்சிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு. நமக்கு பொண்ணு பிறந்தா உன்னை மாதிரி தான் இருக்கணும். முதல்ல பொண்ணு தான் எனக்கு வேணும்”, என்று அவன் பேசிக் கொண்டே செல்ல அவள் தான் நே என்று விழித்தாள்.
அவள் அமைதியாக இருக்க “சாரி கண்ணமா, ரொம்ப பேசுறேனா? உன் கிட்ட மட்டும் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆகிறேன் டி. சரி சொல்லு. நீ என்ன பேசணும்னு வந்த?”, என்று கேட்டான்.
“அது அது வந்து.. அன்னைக்கு நீங்க எதுக்கு அப்படி எல்லாம் பேசுனீங்கன்னு கேக்க தான் வந்தேன்”
“ஒழுங்கா காதலை சொல்லு டா மாடுன்னு சொல்ல வரியா?”
“ஐயோ அப்படி இல்லை”, என்று பதற “பதறாத பாப்பா”, என்று சொல்லி மேலும் திகைக்க வைத்தான்.
“பாப்பாவா?”, என்று அவள் அதிர்ந்து விழிக்க “ஆமா நீ என்னோட செல்ல பாப்பா தான், சின்ன கண்ணம்மா, இந்த அமரோட ரதி. உன்னை ஒரு பத்து மாசத்துக்கு முன்னாடி தான் பாத்தேன் டி. பாத்ததுல இருந்து அப்படி திணறிட்டு இருக்கேன். நான் நானா இல்லைன்னா பாத்துக்கோ. பர்ஸ்ட் சைட்லே எனக்குள்ள பதிஞ்சிட்ட. அப்புறம் கூட உன்னை சைட் தான் அடிக்கிறேன்னு நினைச்சேன். ஆனா நாள் ஆக ஆக எனக்குள்ள ஆழமா வந்துட்ட பாப்பா”, என்று சொல்ல அவளோ மெய் மறந்து அவன் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
இவ்வளவு காதலைக் கொட்டினால் யாருக்கு தான் பிடிக்காது? “நீ எனக்கு வேணும் ரதி, நான் கொஞ்ச, காதலிக்க, ஆராதிக்க எனக்கு நீ வேணும் டா. உனக்கு என்னை பிடிச்சிருக்கா? முதல்ல உனக்கு பிடிக்கலைனா விலகிறலாம்னு தான் நினைச்சேன். ஆனா உன் முகத்துல தெரியுற வெட்கம் எனக்கு உன் மனசை லேசா புரிய வச்சது. இருந்தாலும் உன் மனசுல இருக்குறதை சொல்லேன். பிடிக்கலைனா கூட சொல்லிரு கண்ணம்மா”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுருவீங்களா?”, என்று கேட்க அழகான சிரிப்பு அவனிடத்தில். “எப்பவும் உன்னை விட மாட்டேன் டி. ஆனா உனக்கு பிடிக்கலைனா தள்ளி இருந்து உன்னை நேசிப்பேன் அவ்வளவு தான்”, என்றான்.
“நான் பிடிச்சிருக்குன்னு சொன்னா..”
“சத்தியமா என்னால உன்னை விட்டு தள்ளி இருக்க முடியாது”, என்று சொல்ல மீண்டும் முகம் சிவந்து போனாள்.
அவள் அமைதியாக இருக்க “என்னை பிடிச்சிருக்கா? இல்லை சொல்ல நாள் வேணுமா? என்னைப் பத்தி எதுவுமே நான் உன் கிட்ட சொன்னது இல்லை. இப்ப சொல்லவா? கொஞ்ச நாள் பழகி பாத்துட்டு கூட உன் முடிவை சொல்லு”, என்றான்.
“பழகி பாத்துட்டு முடிவு சொன்னா அங்க காதல் எங்க இருந்து வரும்?”
“ஹேய் நீ இவ்வளவு பேசுவியா டி?”, என்று ஆச்சர்யத்தில் வியக்க “உங்க கிட்ட மட்டும் இப்படி பேசுறேன் போல?”, என்றாள்.
“கல்யாணம் பண்ணிக்கலாமா டி? இப்ப இல்லை. படிச்சு நல்ல நிலைமைக்கு வந்த அப்புறம்?”
“ம்ம்”, என்று சொல்ல அவனுக்கும் அவ்வளவு சந்தோஷம்.
அதற்கு பின் வெகு நேரம் பேசினார்கள். என்ன பேசினார்கள் என்று அவர்களுக்கே தெரியாமல் தான் போனது. இரவு உணவுக்கு அவளை அழைக்க வந்த திவ்யா “அடப்பாவி, நீ இன்னும் பேசிட்டு தான் இருக்கியா? ஒழுங்கா டிரஸ் மாத்திட்டு சாப்பிட வா. முகத்தை சோகமா வச்சிக்கோ. இப்படி வெக்கப் பட்டுட்டு வந்தா அம்மா கண்டு பிடிச்சிரும்”, என்று சொல்ல திவ்யா பேச்சைக் கேட்ட அமரும் “சரி ரதி மா, பாரு, நானும் அப்புறம் பேசுறேன்”, என்று சிரிப்புடன் போனை வைத்து விட்டு தான் வீட்டுக்குச் சென்றான்.
அதற்கு பின் நாளும் பொழுதுமாக அவர்கள் காதல் வளர்ந்தது. அதற்கு திவ்யா உதவினாள் என்று சொன்னால் அது மிகை இல்லை.
காதலர்கள் சந்தோஷமாக இருந்தாலும் அமரின் நடவடிக்கையை கவனித்த பிரியாவுக்கும் இந்த விஷயம் தெரிந்தது. அமரை ஒரு தலையாக காதலித்து வந்தவளுக்கு அவ்வளவு கோபம் வந்தது. அதனால் அவள் நேரடியாக ரதியிடம் சென்று “அவன் என்னோட ஆள். இனி அவன் பக்கம் கூட திரும்பக் கூடாது”, என்று மிரட்ட கல்லூரிக்கே கொஞ்சம் அவர்கள் காதல் தெரிய வந்தது. ரதிக்கோ திகைப்பு தான்.
எப்படி அவளால் அவளுடைய அமரை விட்டுக் கொடுக்க முடியுமாம்? அவள் திணறும் போதே அங்கு வந்த அமர் பிரியாவை அவ்வளவு திட்டி அவளது நட்பையை உதறித் தள்ளினான். அந்த இடத்தில் ரதி தனக்கு எவ்வளவு முக்கியமானவள் என்று பிரியாவுக்கு மட்டும் அல்ல. அங்கிருந்த அனைவருக்குமே புரிய வைத்தான்.
அமரின் பெரிய நட்பு வட்டாரமே இரண்டாக பிரிந்து தான் போனது. ரதி அதற்கு பிறகு அமரின் காதலியாக தான் அனைவருக்கும் தெரிந்தாள். அது அமருக்கு வருத்தம் தான் என்றாலும் இதில் ஒன்றும் செய்ய முடிய வில்லை. விஷயம் தெரிந்த அரவிந்தோ துடித்து தான் போனான். ஆனால் ரதியிடம் வந்து எதுவுமே கேட்க வில்லை. திவ்யாவிடம் விசாரித்ததோடு முடித்துக் கொண்டான். ஆனாலும் அவனுக்கு அவ்வளவு வேதனையாக தான் இருந்தது. சிறு வயதில் இருந்து அவள் தனக்கு தான் என்று அவனும் சரி அவனது அன்னையும் சரி நினைத்துக் கொண்டிருக்க இப்படி ரதி வேறு ஒருவரின் மீது காதலில் விழுவாள் என்று அவன் கனவிலும் நினைக்க வில்லை.
தன்னுடைய காதல் கானல் நீர் என்று அறிந்து தவித்து தான் போனான். அமர் வேறு அவனுடைய கிளாஸ் என்பதால் அவனைக் காணும் போதெல்லாம் தன்னுடைய இழப்பு அவனுக்கு பூதாகரமாக தான் தெரிந்தது.
