காதலும் கடத்தப்படும் – 14

காதலும் கடத்தப்படும் – 14
தனது முடிவு நெருங்கிவிட்டதை அறிந்திருந்தாள் போலும். தனக்கு பிடித்தமான புடவையில், தனக்கு பிடித்தமானவன் மடியிலே, இறுதியாக அவன் முகத்தினை கண்டபடி அவளது உயிர் பிரிந்தது. என்றும் அவள் இனி திரும்பப்போவதில்லை. அவன் எங்கு தேடியும் அவள் கிடைக்கப்போவதுமில்லை. காதலை மட்டுமே தேடிக்கிடந்தவள் இறுதி நொடி வரை காதலாகவே வாழ்ந்து முடித்தாள்.
Advertisement
மலர் மாலை சூட்டப்பட்டு, பூ வைத்து பொட்டு வைத்து நடுக்கூடத்தில் அவள் படுத்துக்கிடக்க, அவள் முகத்தினை பார்த்தபடியே இளமாறன் அமர்ந்திருந்தான். எத்தனை எத்தனை இன்பங்களை கொடுத்த வாழ்க்கை இப்படி அத்தனைக்கும் தீ வைக்கும் என்று அவன் கனவிலும் நினைக்கவில்லை. தனிமரமாக நின்றவனுக்கு துணை கொடுத்து, அதை மீண்டும் பறித்துக்கொண்டு மீண்டும் அவனை தனி மரமாக்கி வேடிக்கைப் பார்த்து சிரித்தது காலம். சாதாரண மனிதனால் என்ன செய்துவிட முடியும்! நினைவுகளைத் தவிர ஆகப்பெரும் மனித வாழ்வின் மிச்சம் என்ன இருந்துவிட முடியும்?! ‘அவள் இருக்கிறாள்’ என்ற நம்பிக்கையில் சுவாசித்துக்கொண்டிருந்தவன், இனி அவளது நினைவுகளைப் பற்றிக்கொண்டு வாழப் பழக வேண்டும். அவனது கண்ணீரை இனி அவளது கைகள் துடைக்கப்போவதில்லை. விடியற்காலையில் நெற்றியில் முத்தமிடப்போவதில்லை. அவன் மார் மீது படுத்துக்கொண்டு கனம் கூட்டப்போவதில்லை. ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா…’ – அவன் பாடினாலும் அவளது செவி சேரப்போவதில்லை. அவளது தயார் சபித்தது உண்மையாகிவிட்டது. இந்துவை பிரிந்து அவள் வருந்தியது போல, இனி இவனும் வருந்திட வேண்டுமென்று விதியாகிவிட்டது. வேதனையை அவன் சுமந்திடத்தான் வேண்டும். யாரோடு சண்டையிட்டு அவளை அவனால் மீட்டிட முடியும்?! காலத்தோடா? கடவுளோடா?
Advertisement
அத்தெருவில் வசிப்போர், அறிந்தோர், தெரிந்தோர் என்று அனைவரும் அவளுக்காக வருந்திவிட்டுச் சென்றனர். மாலை போட்டனர். மரியாதை செய்தனர். இட்டிலி கடைப் பெண் அவளது தலைமாட்டில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். பிள்ளைகள் ஒரு புறம் அழுது தேம்பிக்கொண்டிருந்தனர். “அம்மா உடம்பு சரியாயிடுச்சுன்னு சொல்லுச்சு… எதுக்கு பொய் சொல்லுச்சு?” என்று யாரிடமோ மதன் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான். அவள் அருகில் அமர்ந்திருந்த இளமாறன் இந்த இழப்பு கொடுக்கும் வலியை தாங்கமுடியாமல் தவித்தான். அன்பு மட்டுமே சுமந்துகொண்டிருக்கும் அவளது நெஞ்சம் முழுதும் புண்ணாகிப்போனதால் அவளுக்கு வலிக்கக்கூடுமோ என்று இத்தனை நாட்களில் ஒருமுறை கூட அவளது மார் மீது இவன் சாயவில்லை. அவளது நெஞ்சுக்கூட்டின் அரவணைப்பில் தான் அறிந்திடாத தனது தாயை உணர்ந்தவன், இறுதியாய் ஒருமுறை அந்த அரவணைப்பை வேண்டினான். இப்பொழுது அவன் அவள் மீது சாய்ந்துகொள்ளலாம். அவளுக்கு வலிக்கப்போவதில்லை. அவன் சாய்ந்தான். கண்மூடி கிடந்தான். உலகளவு காதலை அந்த சிறிய நெஞ்சுக்கூடு இத்தனை நாட்கள் எப்படி தாங்கியதோ!! அவன் சாய்ந்துகொள்ளும் வேளைகளில் அவளது இதயம் துடிக்கும் சத்தம், அவள் சுமக்கும் காதலை மொழிந்துகொண்டே இருந்தது. மெல்லிய இதயம் காதலைப் பேசிப்பேசி தளர்ந்து இன்று அமைதி கொண்டுவிட்டது.
Advertisement
இறுதி சடங்கிற்கு அவளை எடுத்துச்செல்ல ஏற்பாடுகள் நடந்தன. அர்ஜுன் தீச்சட்டியோடு அழுது கொண்டு நிற்க, இளமாறன் ஒற்றை ஆளாய் அவளை தூக்கிச் சென்று அவளது இறுதி படுக்கையில் படுக்க வைத்தான். ஏதோ ஞாபகம் வந்தவனாய், உள்ளே ஓடினான். ட்ரங்க் பெட்டியைத் திறந்து நெகிழிப்பையை எடுத்து வந்தான். அதிலிருந்த உலர்ந்த மலர்களை அவளது முந்தானையில் இருகக்கட்டினான். நெற்றியில் இறுதியாய் ஒரு முத்தம், ஒரேயொரு முத்தம் அழுந்த வைத்தான். அவளது கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டான். அவளது கால்களை பிடித்து அதில் முகம் புதைத்து அழுதான். இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இனி எப்பொழுதும் அவன் காண முடியாத காதல் முகத்தினை இறுதியாய் ஒருமுறை கண்டான். ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா…’ என்று பாடினான். முடிந்தளவு பாடினான். பூ போன்ற அவளது மெல்லிய மேனியில் தீவைத்துவிட்டு, முதல் முறை அவள் இல்லாத வீட்டிற்கு வேண்டா வெறுப்பாக வந்து சேர்ந்தான்.
Advertisement
அவள் படுத்திருந்த கட்டிலின் அருகே தரையில் அமர்ந்தவன், மெத்தையின் மீது கைவைத்தபடி, அவள் இறுதியாய் அணிந்திருந்த மஞ்சள் புடவையை தனது மாரோடு சேர்த்துக்கொண்டு கண்மூடிக்கிடந்தான். பிள்ளைகள் அவனது அருகே அமர்ந்துகொண்டன. வருவோரும் போவோரும் சமாதானம் கூறினர். படைத்தவனே ஆறுதல் கூறினாலும், ஈடு செய்ய முடியா இழப்பு! எப்படியும் அவனது நெஞ்சத்து அனல் ஆற்றுப்படுத்த முடியாது என்று அனைவருமே அறிந்திருந்தனர்.
ஏதோ மயக்கத்திலே கிடந்தவன், மறுநாள் காலை எழுந்தான். தரையில் படுத்திருந்த பிள்ளைகளைக் கண்டான். மெத்தை மீது இந்துவை காணவில்லை என்று பதறியபடி எழுந்து வந்தவன் அடுக்களைக்கு சென்றான். அவள் மஞ்சள் புடவையில் அங்கு நின்றிருப்பது போன்றொரு மாயை கொண்டான்.
“இந்து… இந்து… இந்து…” என்று கத்தினான்.
அர்ஜுன் ஓடிவந்து, “அப்பா… அப்பா…” என்று குரலெடுத்த அழுதபடி, இளமாறனை இறுகக் கட்டிக்கொள்ள, அவள் காற்றோடு கலந்துவிட்டதை அவன் அப்போதே உணர்ந்தான். சுற்றோர் சத்தம் கேட்டு அங்கு வந்து, அவர்களை சமாதானம் செய்தனர். இட்டிலி கடை பெண் அப்பிள்ளைகளுக்கு உணவு ஊட்டினாள். இளமாறன் சுக்கு நூறாக உடைந்து போயிருந்தான்.
நாட்கள் உருண்டோடியது. பிள்ளைகள் பள்ளிக்குத் திரும்பினர். அவன் என்ன செய்வது, இனி வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று கலங்கியபடியே அமர்ந்திருந்தான்.
“தம்பி இப்படியே போனவளை நினைச்சுக்கிட்டு இருந்தா என்ன அர்த்தம்? புள்ளைங்க எங்கய்யா போகும்?” அண்டை வீட்டார் சிலர் சமாதானம் கூறினர்.
“என்ன பண்றதுனு தெரியல… அவ தான் என்னை வாழ வச்சா. அவ இல்லாம…” – அவன் கண் கலங்கினான்.
“எழுந்து போய் ஏதாவது வேலை தேடுப்பா. உன்னை நம்பி ரெண்டு ஜீவனை விட்டுட்டு போயிருக்கா. அவ சாந்தியடைய வேண்டாமா?”
சற்று யோசித்தான். அழுதான். தரையில் அமர்ந்துகொண்டு அவள் படுத்திருந்த கட்டிலின் மேல் சாய்ந்தபடி கிடந்தான். ‘பிள்ளைங்களை கரை சேர்த்துடுங்க’ என்று அவளது குரல் கேட்டது. முகத்தினை துடைத்துக்கொண்டு கிளம்பினான். வேலை தேடி திரிந்தான். காய்கறி மண்டியில் லோடு இறக்கும் வேலை கிடைத்தது. ஏதோ சில்லறைகள் சேர்ந்தன.
“இளமாறா, என்னப்பா இங்க இருக்க? உன் மனைவியை பத்தி கேள்விப்பட்டேன். புள்ளைங்க எப்படி இருக்காங்க?”
வாஞ்சையோடு விசாரித்தான், வெகு வருடங்களுக்கு முன் அவன் பணி செய்த பாடல் குழுவில் இசைக்கலைஞனாய் பணி செய்த ஒருவன்.
“போய் சேர்ந்துட்டா. ரெண்டு புள்ளைங்கல வளர்க்கற பொறுப்ப கொடுத்துட்டு போயிட்டா. கிடைக்கற வேலையை செய்து ஏதோ பொழைக்கறோம்”
“அப்படி சொல்லாத இளமாறா. சுருதி சுத்தமா எவ்வளவு அழகா பாடுவ நீ. நான் எனக்கு தெரிஞ்ச இடத்துல உனக்காக கேட்டுப்பாக்கறேன். இந்த நம்பரை வச்சுக்க. என்னோட பி.பி. நம்பர். ஹவுஸ் ஓனரோடது. எப்ப எது வேனும்னாலும் ஃபோன் பண்ணு…”
நண்பன் கொடுத்த தாளினை பத்திரமாக பாக்கெட்டுக்குள் வைத்தான். அவனுடைய பாட்டுக்கு முதல் ரசிகையாய் இருந்தவள் சென்றபின், அவனுக்கு அதிலெல்லாம் நாட்டம் குறைந்து போனது.
“தம்பி, நம்ம தெருமுக்கு மாரியம்மன் கோவில் திருவிழா வருது” என்றபடி, கோவில் பூசாரியும் மற்ற முக்கியஸ்தர்களும் இளமாறனை தேடி வந்து பேசிக்கொண்டிருந்தனர்.
“என்னால முடிஞ்சதை தரேன்…”
“காசெல்லாம் கேட்டு வரல பா. கலை நிகழ்ச்சி வைக்கலாம்னு இருக்கோம். நீ தான் நல்லா பாடுவியே, உன்னை விட்டுட்டு எதுக்கு யாரோ ஒருத்தனுக்கு ப்ரோக்ராம் கொடுக்கணும்னு நினைக்கறோம். நீ என்ன சொல்ற?” என்றார் ஒருவர்.
“உன் புள்ள ஒன்பதாங்கிளாஸ் வந்துட்டான்ல. அவனும் நல்லா பாடறான்னு பேசிக்கறாங்க. நல்லபடியா நடத்திக் கொடுக்கறியா?”
யோசித்தான். அர்ஜுன் வளர்ந்துவிட்டதை அப்போதே உணர்ந்தான். இந்து இறந்து வருடங்கள் ஆனதையும் அப்போதே உணர்ந்தான். ‘பிள்ளையை கரை சேக்கணும். ஏதாவது செய்யணும்’ என்று எண்ணினான். என்றோ ஒரு நாள் அவனது நண்பன் கொடுத்த தொலைபேசி எண் குறிக்கப்பட்ட தாளினை ட்ரங்க் பெட்டியில் தேடினான். அவனை அழைத்தான். தெய்வாதீனமாக அவனுடன் பேசினான். மாரியம்மன் கோவில் விழாவைப் பற்றி கூறினான். நண்பன் சில இசைக்கலைஞர்களை அழைத்துக்கொண்டு வருவதாக உறுதியளித்தான். ஓரிரு முறை ஒத்திகை நடந்தது. இளமாறனை விடவும் அர்ஜுனின் குரல் ஈர்ப்புடையதாய் இருந்தது. திருவிழா சிறப்பாக நடக்க, கலை நிகழ்ச்சியும் உற்சாகமாக நடந்து முடிந்தது. பல வருடம் கழித்து கணிசமான தொகை ஒன்றினை பெற்றுக்கொண்டான், இளமாறன். இந்துவின் புகைப்படத்தின் அருகே வைத்து வணங்கினான்.
அவ்வப்போது ஒன்றிரண்டு வாய்ப்புகள் அவனுக்கு வர தொடங்கியது. தன்னோடு பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு நிகழ்ச்சிகளுக்கு சென்றான். அப்பா மெல்ல தேறி வருவதைக் கண்டு அர்ஜுன் ஆறுதல் கொண்டான். அப்பா சிரிப்பதை பார்க்க முடிந்தது. அம்மாவைப்பற்றி வர பேசுவதைக் கேட்க இன்பமாக இருந்தது. இசை அவரை மெல்ல மெல்ல மீட்டெடுத்தது.
“அப்பா படுக்கலயா? வாசல்ல எதுக்கு உட்கார்ந்திருக்க?”
இந்துவின் இடத்திலிருந்து அர்ஜுன் வினவினான்.
“அதோ பாரு நிலா. அங்க உன் அம்மா உட்கார்ந்திருக்கா தெரியுதா?”
“தெரியுது பா”
“அவகூடத்தான் பேசிக்கிட்டு இருக்கேன்”
“என்ன பேசறீங்க?”
“நேத்து ப்ரோக்ராம்ல ஒரு பாட்டு பாடுனியே… ரோஜா ரோஜானு… அதைத்தான் சொல்லிக்கிட்டு இருந்தேன். உன் அம்மாவுக்கு பெருமையா இருக்காம்…”
அவன் சிரித்துக்கொண்டான்.
“நீ பெரிய ஆளா வருவ அஜூ. சொந்தமா ட்ரூப் வச்சு உலகம் பூரா போய் பாடுவ. நானும் அம்மாவும் அந்த நிலாவுல உட்கார்ந்து நீ பாடறத கேட்டுக்கிட்டு இருப்போம்”
“அப்பா…” என்று அதட்டலாக கூறியவன், “இப்படியெல்லாம் பேசாத, எனக்கு கோவம் வந்துடும். வந்து படு” என்று வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றான். மதனும் அர்ஜுனும் படுத்திருக்க, மெத்தையை தடவி, அதன் மேல் இருந்து மஞ்சள் புடவையை எடுத்து அணைத்துக்கொண்டு சாளரம் வழியே நிலவினை பார்த்தபடி தரையில் அமர்ந்திருந்த இளமாறன், தன்னையும் அறியாமல் உறங்கிப்போனான்.
