Skip to content
Post Views: 5,519
அந்தியூரான் -12
நாட்கள் அதன் போக்கில் அழகாக நகர.ஒரு வேலையாக தணிகாசலம் கோவைக்குச் சென்று இருந்தான்.தொழில் ரீதியாக அவன் அமுதன் வேலை செய்யும் முதலாளியை தான் பார்க்க வந்திருந்தான்.
அங்கு தான் அமுதன் இருக்கின்றான் என்பது தெரியும் இருந்தும்.அவனை கண்டு விட்டு ஒரு அலட்சிய பார்வையுடன் கடந்து விட்டான்.அமுதனும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை.அமுதனுக்கு அவன் வரையில் அன்று தணிகாவிடம் நடந்து கொண்டது சரிதான் என்ற எண்ணம்.
Advertisement
தணிகாசலத்திற்கு தன் மேல் தவறாகவே இருந்தாலும் தன்னை விடப் பத்து வருட இளையவன் எப்படி தன்னை நிற்க வைத்துக் கேள்வி கேட்கலாம் என்ற கோபம் இன்னும் இருந்தது.அமுதனின் நியாயம் புரிந்தாலும், அவனது குணம் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்து நின்றது.அதனால் தான் அவனைப் பரம எதிரி போல் பார்த்து வைத்தான்.
Advertisement
இரு தினங்கள் கோவையில் இருந்து வேலைகளை முடித்துக் கொண்டு வந்தவன் வீட்டில் இறங்க.அங்கே அவனது அக்கா மார்கள், அவர்களது பிள்ளைகள், பேர குழந்தைகள், பெண் கொடுத்த மக்கள், பெண் எடுத்த மக்கள் என்று குடும்பமே கூடி நின்றது.
Advertisement
ராணி – கந்தன்,பவளம் – கணேசன்,வைரம் – பழனிச்சாமி,அன்பு – ரெங்கன்,அழகி – முத்துராமன் என்று தத்தமது கணவர்களோடு வந்திருக்கத் தீடீரென அவர்களது வருகையில் கொஞ்சம் பதட்டமாக அவர்களை நோக்கி எட்டு வைத்தான்.
Advertisement
தனது கம்பீர குரலில், “வாங்க மாமா! வாக்கா! என்ன ஆச்சு?” சுற்றி ஆட்களை கண்டு வரவேற்பாக புன்னகைத்து கொண்டே கேட்டான் தணிகாசலம். உள்ளுக்குள் கூட்டம் கண்டு என்னவோ பயமிருந்தாலும் அதனை வெளி காட்டி கொள்ளாமல்.அவர்களது வருகை நன்மையாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில் கேட்டவனைப் பார்த்து பெரியக்கா ராணி புன்னகை புரிய.
வாய் கொள்ளா சிரிப்புடன் கந்தன், “மாப்புள குமாரி பெரிய பொண்ணு ஆகிட்டா” என்றவர் குரலில் அத்தனை களிப்பு.இருக்காதா பின்னே. செல்வ மகள் பற்ற செல்வம் அல்லவா.முகம் கொஞ்சம் முதிர்ச்சி பெற்று அச்சு அசல் தன் மகளை போலவே நிற்கும் பேத்தியை பார்த்து அகம் மகிழ்ந்து நின்றார் கந்தன்.
அவர் சொன்னதை ஏற்கவே சில நொடிகள் பிடித்தது தணிகாசலத்துக்கு.எதிர்பார்த்த விடயம் தான் என்றாலும் அதனைக் கடக்க வெகுவாகச் சிரம பட்டுப் போனான்.
“வாடா வந்து பிள்ளையப் பாரு” இரண்டாம் அக்கா பவளம் அழைக்க உணர்வுகளை தன்னுள் அடக்கி சிறு புன்னகையோடு அவளோடு நடந்து கொண்டே,
“அப்பாவும், அம்மாவும் எங்க?”
“வந்துகிட்டே இருக்காங்க தட்டு சாமான் எல்லாம் நாங்க அம்மாவை வாங்க சொல்லிருக்கோம் கடைக்குப் போயிட்டு தான் வருவாங்க நீ வா!”
“தனியா ஏன் அனுப்பி வைச்ச” இரு பெரியவர்கள் மட்டுமே எப்படி அலைந்து திரிந்து வாங்க முடியும் என்ற கவலை அவனுக்கு.
“அன்பும் அவர் வீட்டுக்காரரும் கூட இருகாங்கடா. நாங்க தனியா போக விடுவோமா நீ வா” என்றவள் அழைத்துச் சென்று குமாரி இருக்கும் இடத்தில் விட. அங்கே வழமை போல் தாயும், மகளும் வம்பு செய்து கொண்டிருந்தனர்.
“விசா ஒரே இடத்துல உட்கார முடியல என்னை விடு நான் அங்க போறேன் எல்லாரும் அங்க தான் இருக்காங்க”
“ஒழுங்கு மரியாதையா உட்காரு தலைக்கு தண்ணி உத்தி சடங்கு முடிச்சுட்டா நீ எங்க வேணாலும் போலாம்”
“கொடுமை பண்ணுறியா அப்பா வரட்டும் சொல்றேன்” காலையில் இருந்து படுத்திக் கொண்டிருந்தவள் மேல் கோபமோ கோபம் விசாலாட்சிக்கு.
“உங்கப்பன் பெரிய ஆளு பாரு சொல்லுடி பார்ப்போம் குட்டி சாத்தான்”
“நீ தான் பேய் குட்டி”
“கொன்னுடுவேன் உன்னை வாய் அடக்கி உட்காருடி”
“முடியாதுடி” இருக்க, இருக்க இருவரது குரலும் கொஞ்சம் கொஞ்சமாக எற. இவர்கள் பேசி கொள்ளும் அழுகும் பழகும் விதமும் கொஞ்சமே கொஞ்சம் பவளத்திற்கு இந்தச் சில நாட்களில் தெரிந்திருந்தாலும்.
இருபெண்களும் மல்லுக்கு நிற்பதை இத்தனை அருகில் பார்த்தவள் அதிர்ந்து நின்றாள்.தணிகாசலத்துக்கு இந்தக் கூத்து எல்லாம் சில நாட்களில் வழமை தான் போலும்.அவர்கள் பேச்சை கருத்தில் கொள்ளாமல் செல்வியைப் போலவே அலங்காரத்தில் ஜொலிக்கும் மகளை ஆசையாகப் பார்த்திருந்தான்.
“எங்க தைரியம் இருந்தா கிட்ட வந்து பேசு பார்ப்போம்” வேண்டுமென்றே விசாவை வம்புக்கு இழுக்க.
“யாருக்குத் தைரியம் இல்ல” என்றவள் அருகில் செல்ல போக ஏய்! என்ற கூவலோடு விசாலாட்சியை இழுத்து தன் பக்கம் நிறுத்தி கொண்டாள் பவளம்.
“என்னடி பொண்ணுங்க நீங்க? அக்கா ,தங்கச்சி கூட இல்ல, மாமிய மருமக சண்டையாள இருக்கு.நித்தமும் இப்படி சண்டை கட்டி வச்சா என் தம்பி என்னத்துக்கு ஆகுறது” இருவரையும் முறைத்துக் கொண்டு சொல்ல.
அப்பொழுது தான் தாயும் மகளும் இவர்களது இருப்பை உணர்ந்தனர்.தந்தையைக் கண்டவுடன் குமாரிக்கு அழுகை வர “ப்பா! என்ற கூவலுடன் அவனை அனைத்து கொள்ள.அவனும் தொண்டை அடைக்க அவளை அனைத்துக் கொண்டான்.
“குமாரி அழுக கூடாது” ஒருவிதமான கலங்கிய குரலில் சொன்னவன். அவளது தலையில் தனது முகத்தைப் புதைத்து கொள்ள.அவனது உணர்வு புரிந்த விசாலாட்சி தகப்பனையும் மகளையும் ஒரு பார்த்து விட்டு விலகி சென்றாள்.
பவளம் சிறு கண்ணீர் துளிர்க்க இக்காட்சியைப் பார்த்து நின்றாள்.பசி, வறுமை, துன்பம் என்று எதுவுமே தெரியாமல் செல்வமாக வளர்ந்தவர்கள் சிவராமன் சிவகாமி பிள்ளைகள்.
கடவுள் புண்ணியத்தில் இன்றும் அப்படித் தான் வாழ்க்கை,ஆனால் தம்பியின் வாழ்க்கை மட்டும் ஏனோ தடுமாறி நிற்க.அவ்வீட்டு பெண்களும் அவனை எண்ணி கலங்கி தான் நின்றனர். சமயம் பார்த்து செல்வியின் எண்ணம் வேறு அனைவரையும் வெகுவாகத் தாக்கி நின்றது.
“ப்ச்! குமாரி அழுக கூடாது. அப்பாவை விடு அவன் இப்போதான் வந்திருக்கான் குளிச்சிட்டு வருவான்” அத்தை சொன்னதும் தந்தையை விட்டு விலகி நின்றவள்.
“ப்ப! நானும் வெளில வரேன்ப்பா”
“இன்னைக்கு ஒரு நாள்டா நாளையில் இருந்து வெளில வந்துடலாம் என்ன?”
முகத்தைத் தூக்கி கொண்டு, “சரி” என்றவள் தலையைப் பற்றி மீண்டும் முத்தம் வைத்தவன்.
“குளிச்சிட்டு வரேன் க்கா”
“சீக்கரம் வா தணிகா பெரிய மாமா உனக்கு வேண்டி தான் காத்திக்கிட்டு இருக்காங்க. அம்மா சொல்லி சின்ன மாமா எல்லாருக்கும் சொல்லிட்டாரு. இந்த பந்தல் போட்டு சாப்பாடு சொல்லனும் அது தான் பாக்கி”
“வரேன்! வரேன்!” என்றவன் தனது அறைக்குள் நுழைந்து கொள்ள.அங்கே விசாலாட்சி குமாரிக்கு தேவையான துணிகள்,சில அலங்கார பொருள்களை எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.
“என்னடியம்மா பாட்டி ஆகிட்டியா?” தணிகாசலம் குறும்பாகக் கேட்க. அவனை விடக் குறும்பு கண்களோடு.
“ஆமா தாத்தா” என்றவளை பார்த்து அவனுக்குச் சிரிப்பு.
“போயி குளிச்சிட்டு வாங்க”விசாலாட்சி சொல்லவும்.
“இங்கையே இரு வந்திடுறேன்” என்றவன் பத்து நிமிடத்தில் குளித்துக் கிளம்பி வர.அதுவரை அவனுக்காக காத்திருந்தவள் அவன் வந்தவுடன்.
“என்ன? இருக்க சொன்னீங்க வெளில ஆள் வராங்க வேலை இருக்கு” என்றவளை நெருங்கி அவளை இறுக்க அனைத்து தனது உணர்வுகளைக் கொட்ட.அவனது மனநிலையை கணித்தவள் அவனை ஆதரவாக வருடி கொடுத்தாள்.
இந்த சில நாட்களில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் நெருங்கி தான் நின்றனர் இருவரும். இயல்பாகத் தொட்டு கொண்டனர்.இது போல் உணர்வுகளைப் பரிமாறி கொண்டனர்.நிறைய பேசி கொண்டனர்,குமாரியை இருவருமாகச் சேர்ந்து பார்த்துக் கொண்டனர்.அதனை தாண்டி எதுவும் என்று இருவரும் யோசித்துக் கொள்ளவில்லை.
அவர்களை சூழ்நிலையும் யோசிக்க விடவில்லை.இதோ புரிதல் கொள்ளும் நேரம் மகள் பெரிதாகி நின்றாள்.இனி அவளைக் கொண்டே எண்ணம் நகரும் அல்லவா.
சில நொடிகள் அவளை அனைத்து நின்றவன் கொஞ்சமாக அவளை விலக்கி, “வா!” என்றழைத்து வெளியில் செல்ல.சிவராமன், சிவகாமி உள்ளே வரவும் சரியாக இருந்தது.
சிவகாமி ஆர்ப்பாட்டமாக வந்து பேத்தியை அனைத்துக் கொள்ள. சிவராமன் தனது மகனை அனைத்து கொண்டார்.பொறுப்புகள் கூடக் கூடத் தான் வாழ்வின் வளர்ச்சியே.அதனை கொண்டே மகன் தோள் தட்டினார்.
அதன் பின் பொழுது மின்னல் வேகத்தில் ஓட. இரவு ஏழு மணி போல் குமாரிக்கு வெகு விமர்சையாகச் சடங்கை தொடங்கினர்.தணிகாசலத்திற்கு ஐந்து அக்கா மார்கள் அல்லவா.
ஐந்து பெண் மக்களுக்கும் இரு மகன்கள் என்ற கணக்கில் பத்து மாமன்கள் இருந்தனர்.செல்வியின் அண்ணன் முதல் தாய் மாமனாக இருக்க.அவளது சின்னம்மா மகன்கள் அனைவரும் அவனுக்குப் பின் நின்றனர்.
வெகு விமர்சையாகச் சீர் தட்டு பரப்பி இருந்தார்கள்.வீட்டிலே அனைத்தும் என்பதால் முக்கிய உறவுகளுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் சிவராமன்.அதில் கந்தனுக்கு தான் கொஞ்சம் சுணக்கம்.
ஒரே பேத்தியின் விழாவை அவர் பெரிதாகச் செய்ய எதிர்பார்க்க.அவரோ சில உறவுகளின் கண்ணைத் தவிர்க்கவே இப்படி ஏற்பாடு செய்திருந்தார்.ராணி முதலில் நலுங்கு வைத்து குமாரியை கட்டி கொள்ளக் கந்தனும் கலங்கி விட்டார்.
ஒரே பெண்னின் எண்ணம் மனம் கனத்தது.உச்சியில் முத்தம் வைத்து அவளுக்கு நகை புடவை வைத்து கொடுக்க.அவளை தொடர்ந்து நால்வரும் அவளுக்குச் சீர் செய்தனர்.அவர்களைத் தொடர்ந்து தூரத்து உறவில் உள்ள மாமன்,தாத்தன் என்று அனைவரும் அழைக்கப்பட்டுக் குமாரி ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டாள்.
எல்லாம் முடியும் நேரம் தான் சிவகாமிக்கு விசாலாட்சியின் எண்ணம் வந்தது போலும்,”அன்பு விசாலாட்சி எங்க?” என்றதும் அவளும் அப்பொழுது தான் அவளை தேடினாள்.
“குமாரிக்கு அலங்காரம் பண்ணுற அறையில தானே இருந்தா?”
“பவளம் நீ பார்த்தியா?”
“இல்லையேம்மா நானும் ராணியக்காவும் தட்டு அடக்கி வச்சுட்டு இருந்தோம்”
அழகி, “என்னம்மா ஆச்சு?”
“அவ தானே பொண்ணுக்கு அம்மா. அவளை முன் நிறுத்தி பண்ண வேணாமா? எனக்கு இருந்த பரபரப்புல நானும் அவளை பார்க்காமா விட்டு வச்சுட்டேன்.தணிகாவை என்ன செய்யறதுனே தெரியல “மகனையும் சாடி விட்டு மகள்களைக் கடிந்து கொள்ள அவர்களுக்கு பேச்சே வரவில்லை
“வேணுன்னு பண்ணலமா! இருக்குற வேலைல மறந்து போயிட்டோம்”
“ப்ச்! மறக்குற விஷியாம இது எங்க போனானு தெரியல” சிவகாமி விசாலாட்சியைத் தேடி செல்ல போக. அதற்குள் சபையில் அமர்ந்திருந்த தேவி அதாவது சிவகாமியின் அத்தை மகள் ஒருவள்.
“சிவகாமி உன் சமந்தி வீட்டுல யாரையும் காணோமே” கொஞ்சம் உரக்க கேட்க. அப்போது தான் தண்ணீர் குடுக்க லோட்டாவை எடுத்து கொண்டு கூடத்துக்குள் நுழைந்தாள் விசாலாட்சி.
அவளை கண்டு புருவம் சுருக்கிய சிவகாமி அவளை நோக்கி சென்று கொண்டே, “எல்லாரும் தான் இருக்காங்களே தேவி” என்றவர் விசாலாட்சியை முறைத்து.
“என்ன சீலை கட்டிருக்க நீ?”
“வேலைக்கு இது தான் சரியா வரும்”
“ஏன் நாங்கெல்லாம் பட்டு சீலை கட்டில? இரு பேசுகிறேன்”சிவகாமி விசாலாட்சியைக் கடிந்து கொண்டே தேவியிடம் வர,
“சிவகாமி எங்க உன் மருமக வீட்டு ஆட்களைக் காணோமே” என்றதும் சிவகாமி அதிர்ந்து தனது பெண்களைப் பார்க்க.அவர்களோ ஒருவருக்கு ஒருவர் பார்த்து நின்றனர்.
விசாலாட்சி இப்போது தனது மாமியாரை ஒரு பார்வை பார்த்து விட்டு அங்கிருந்து செல்ல மீண்டும் அந்தப் பெண்மணி தேவி, “என்ன சிவகாமி?”
“அது வந்து பெருசா யாருக்குமே சொல்லலையே தேவி. முறை காரங்களுக்குக்கு மட்டும் தான் சொன்னோம்”
தேவியும் விடா பிடியாக “ஓ! பொண்ணுக சம்மந்தம் போட்டவங்க எல்லாரும் இருக்காங்க அதான் கேட்டேன்.அவரது பேச்சில் விகல்பம் இல்லை என்றாலும் ஏன் அவர்கள் வரவில்லை என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது.
அனைத்தும் விசாலாட்சி கேட்டும் கேட்காதது போல் தான் இருந்து கொண்டாள்.சிவகாமிக்கு கொஞ்சம் சங்கடமாகி போனது. பேத்தி பெரிய பெண்ணாகிய சந்தோசத்தில் பொறுப்பைப் பிரித்துக் கொடுத்து விட்டு அதனை சரி பார்க்க தவறி விட்டார் போலும்.
பவளத்திடம் வந்த சிவகாமி, “என்ன பவளம் சமந்திக்கு சொல்லலையா நீ”
“இல்லம்மா நீங்க போட்ட சிட்டையில அவங்க பேரே இல்லம்மா. எங்களுக்கு அவங்க நியாபகம் வரல “என்றதும் நொந்தே போனாள் சிவகாமி.
அதற்குள் தாயிடம் எதுவோ கேட்க வந்த தணிகாசலம் சிவகாமியை நெருங்கி “ம்மா! எல்லாம் முடிஞ்சுது தானே அடுத்து பந்தி ஆரம்பிக்க சொல்லவா?”
“தணிகா இப்படி வா! ” என்றழைத்து மகனது கை பற்றிக் கொஞ்சம் தள்ளி சென்ற சிவகாமி.
“தணிகா உன் மாமியார் வீட்டுக்கு சொல்லலையா?”
“ம்மா! நானே காலையில தான் வந்தேன்.அக்காவும், மாமாவும் தான் எல்லாருக்கும் சொல்லிட்டேன்னு சொன்னாங்க “
“இல்லடா நான் தான் சிட்டை போட்டுக் கொடுத்தேன். உன் மாமியார் வீட்டை மறந்து போயிட்டேன் தணிகா”
“ஓ!.. சரி விடுங்க தெரியாம தானே விட்டு போச்சு இப்போ என்ன பேசிக்கலாம்”
“தப்புடா உன் பொண்டாட்டி என்ன நினைப்பா”
“அவ இதுல நினைக்க என்ன இருக்கு” எதற்கோ தணிகாசலத்தை அழைக்க வந்த விசாலாட்சி வழமை போல் கணவனது அலட்சிய பேச்சை கேட்டு.
“அதானே அத்தை நான் கேட்க என்ன இருக்கு? நான் எல்லாம் ஒரு ஆளா என்ன? ” ஒரு மாதிரியாக சிரித்து விட்டு விறு விறுவெனத் தனது அறைக்குள் செல்ல.
“விசாலாட்சி!” என்று பதறி நின்றாள் சிவகாமி.
அது என்ன தன் குடும்பத்தை கொண்டு அத்தனை அலட்சியம் என்ற கோபம் உச்சிக்கு ஏறியது.
error: Content is protected !!