Skip to content
Post Views: 3,679
ஐந்தரைக்கு உறக்கம் களைந்தவன் ஏசியின் குளிர் தாங்காது கழுத்துவரை போர்த்தி கவிழ்ந்து படுத்து தலையணையில் முகம் புதைத்து ஆழ்ந்துறங்கும் அணங்கவளை ரசனையுடன் பார்த்தான்.
ஏசி ரிமோட் எடுத்து முற்றிலுமாக அணைத்து விட்டான்.
அவளை தொட்டு அணைக்க வேண்டும் அங்கமெல்லாம் முத்தமிட வேண்டும்.இன்னும் என்னென்னவோ செய்ய வேண்டும் என்றெல்லாம் அவனுக்குள் பேரார்வம் தோன்றவில்லை.
அமைதியாய் தள்ளி அமர்ந்து அவளை கண்டு ரசித்து இதயத்தில் நிறைத்து மூளைக்குள் சேமித்து கொள்ளவே அவா கொண்டான்.
Advertisement
கட்டில் வளைவில் ஒரு தலையணை வைத்து அதில் சரிந்து படுத்து இன்னொரு தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு அவளை ரசித்துக் கொண்டிருந்தான்.
மாநிறம் என்று சொல்லிவிட முடியாது. அதற்குமேல் வெளுப்பாக தான் இருந்தாள்.அதிலும் இந்த மூன்று மாத அமெரிக்க வாழ்க்கையில் ஓரிரு இன்ச் நிறம் கூடி இருந்தது. அழகிய கூர் நாசி தான் அவள் அழகை இன்னும் கூட்டியது. இன்னும் ஒரு ப்ளஸ் என்னவென்றால் அவளது அடர்ந்த புருவம். அத்தனை வசீகரத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
சிறு பரு,புள்ளி எதுவும் இல்லாத பௌர்ணமி நிலவு போன்ற கலங்கமற்ற முகம். அது அவனுக்கு குறையாக தோன்றியது. குட்டி குட்டி நட்சத்திரமாய் ஓரிரு பருக்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
Advertisement
அவள் அழகு என்பதை விட அம்சம் என்று சொல்வது தான் பொருத்தம்.
Advertisement
உறங்கும் குழந்தையை கொஞ்சக் கூடாதாமே… அச்சோ என் அம்மாயியை கொஞ்சிக் கொண்டிருக்கிறேனே… லேசாய் இதழ் வளைந்து கொண்டது அசட்டு சிரிப்பில்.
தன் அன்னை போல் கருகமணி தாலி போட்டு சற்று பெரிய பொட்டு வைத்து கை நிறைய கண்ணாடி வளையல் போட்டால் எப்படி இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்குள் விநாடி நேரத்தில் ஜிவ்வென்ற போதை ஏற்றியது.
டிக் டிக் என்ற அந்த பொன்னிற கடிகாரத்தின் ஓசை மணி ஆறு என்று காட்டியது. அரை மணி நேரமாகி விட்டதா? அவளை ரசித்த மணித்துளிகள் துகள்களாக கரைந்து விட்டதோ… நேரம் போனதே தெரியவில்லையே…
Advertisement
அவளை தொடாமல் அவள் கன்னம் வழித்து முத்தமிட்டவன் அவள் உறங்கட்டும் என்று…காலை கடன் முடிக்க சென்று விட்டான்.
தாடி மழித்து தலைக்கு குளித்து புத்துணர்வுடன் வெளியில் வந்தான்.
மெல்லிய நறுமணம் கமழும் அறையில் மெத்தென்ற மிருதுவான மெத்தையில் ஆழ்ந்து துயில் கொண்டிருந்தவள் லிரில் லெமன் சோப்பின் வாசனை நாசியை துளைக்க மெல்ல உடல் முறுக்கி லேசாய் சிணுங்கி கண் விழித்தாள்.
பளிச்சென்று ஒரு ஆண் சிற்பம் கண்ணாடி முன் நின்று தலை துவட்டிக் கொண்டிருந்தது. அந்த அழகிய சிற்பம் அரைகால் சட்டையும் கையில்லா வெள்ளை டிஷர்ட்டும் போட்டிருப்பது கண்டு கூசி கண்மூடிக் கொண்டாள்.
ஏய் குலாபி என்னாச்சுரா …? ஈர தலையை கோதிக் கொண்டே கேட்டான்.
போய் ஷர்ட் போடுங்க… நான் கண்ணை திறக்கணும்.
இது என்னடி வம்பா இருக்கு… சத்தமாய் சிரித்தான் அதில் அழகாய் இருந்தான்.
ஒரு பொண்ணு இருக்க ரூமில் இப்படி தான் அரைகுறையா நிற்பீங்களா?
எந்த பொண்ணு…? அவன் இதழ் கடித்து குறும்புடன் தேடினான் .
அவள் மூக்கு விடைத்தது.
ஓ உன்னை தான் சொன்னியா?
நீ பொண்ணு இல்ல… என் பொண்டாட்டி என் பாரியாள். உன் முன்னாடி இப்படி நிற்கலாம் தப்பில்ல…
உங்கட்ட போய் சொன்னேன் பாருங்க… தலையில் அடித்துக் கொண்டாள்.
ஏய் குலாபி ஆதாம் மாதிரி இல்லை… டிரஸ் போட்டுட்டு தான்டி இருக்கேன்… அவள் கன்னத்தில் கிள்ளி விட்டு வெளியில் சென்று விட்டான்.
ரசித்திருந்தவள் முறைத்து விட்டு அவன் மீது டவலை தூக்கி வீசினாள்.
ஏய்… சிணுங்கினான்.
ஹைய்யடா ஸார் ஆம்ஸ் அழகா இருக்குன்னு எல்லாரும் பார்க்கணும் அதுக்கு தானே இப்படி அலையறீங்க… ஒழுங்கா ஸ்லீவ் ஷர்ட் போட்டுட்டு போங்க… மிரட்டிவிட்டு சென்றவளை கண்டு கிளுக்கி சிரித்தான்.
ஓய்வறை கதவில் சாய்ந்தவள் பளீரென்ற அவன் மேனியும் திரண்டு இறுகி இருந்த அவன் புஜமும் கண்ட கிளர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.
எவ்வளவு அழகா திடமா இருக்கான். அவன் என்னோட ஹரி….. உள்ளம் ஆனந்தத்தில் பொங்கி சிலிர்த்தது. பவி நீ இன்னும் கொஞ்சம் போல கலரா இருந்திருக்கலாம் என்று கையை நீட்டி பார்த்து குறைப்பட்டுக் கொண்டாள்.
படைத்த வண்ணம் மாறிவிடுமா? படைத்தவனால் கூட மாற்றிட தான் முடியுமா?
இது புரியாமல் ஒரு ஃபேர் அன் லவ்லி (Fair&Lovely ) க்ரூப் சுற்றுகிறதே…. (நம்ம கலராச்சே விட்டுக்கொடுத்துட முடியுமா?)
“———————“
அவளும் குளித்து தயாராகி வரவே…. படித்துக்கொண்டிருந்த இந்தியா டுடேவை கவிழ்த்து வைத்தவன் அவளையே இமைக்க மறந்து பார்த்திருந்தான்.
சந்தன வண்ண பட்டியாலா வெள்ளையில் கறுப்பு வண்ண பூக்கள் தெளித்த ரவுண்டு நெக் குர்த்தி போட்டிருந்தாள்.
தன்னை குறு குறுவென விழியால் அளவெடுக்கும் வேந்தனவன் முகம் காண இயலாது நாணத்திரை அவளை சூழ்ந்தது.
இரவு அவன் அணைப்பில் படுத்திருந்த போது தோன்றாத வெட்கமெல்லாம் இப்போது தோன்றி தொலைக்கிறதே…. வெட்க சிவப்பை மறைக்க முடியாமல் ஓடிப்போய் ஜன்னல் திரையில் மறைந்து நின்றாள்.
தனக்கான வெட்கம் பூண்டு தாரகை அவள் வெட்கி ஒளிந்த நொடி அவனுள் இறக்கை இரண்டை பொருத்தியது.
மெல்ல சிறு சிறு அடிகள் தாங்கி மோகனப் பார்வை வீசி மோகனன் நெருங்கி சென்றான்.
அவளது சந்தன சோப்பின் வாசம் அவனுக்கும் அவனது எலுமிச்சை சோப்பின் வாசம் அவளுக்கும் போதை வஸ்தாக தோன்றியதோ…?
போதை வஸ்து பேதை வஸ்தாகாமல் இருந்தால் சரி.
திரைசீலையோடு சேர்த்து அவளை அணைத்து காமம் மறைத்து காதல் நிறைத்து வெகு அழகாய் சிரித்தான் அந்த சுந்தர தெலுங்கன்.
விடுங்க… சிக்கனமாய் சிணுங்கினாள்.
விடறதா…. மீண்டும் அதே சிரிப்பு அவனிடத்தில்.
இப்போ விட சொன்னேன்! அவனைவிட சிக்கனமாய் சிணுங்கினாள்.
சிணுங்களின் சிருங்காரம் சிங்கத்தை மெல்ல உசுப்பியது.
குலாபி ஒரு உம்மா தருவியா? அவஸ்தைக்கு உள்ளாக்கும் அத்தனை ரகசியக் குரலில் கிசுகிசுத்தால் நாளமில்லா சுரப்பிகள் கூட நாணமுள்ள சுரப்பிகள் ஆகி விடாதா?
விடுங்க….. அவன் பிடியில் இருந்து விலாங்காய் நழுவ பார்த்தாள்.அவனோ விலங்கிட்டு பிடித்திருந்தானே…
குலாபி நான் தான் உனக்கு முத்தா கொடுத்திருக்கேன்… நீ பாவாக்கு கொடுத்ததே இல்லையே… கெஞ்சலா? கொஞ்சலா? மோகித்திருந்தவளுக்கு பிரித்தரிய இயலவில்லை போலும்.
அவள் முகத்திற்கு மட்டுமல்ல மொழிக்கும் திரை இட்டுக் கொண்டாள். ஆம் மௌனத்திரை.
பவி… இந்த ஹரி பாவம் இல்லையா? ஏங்கினான் மேலும் நெருங்காது தேங்கினான்.
நேரமாகுது கிளம்புவோம்….! நமத்த குரலில் வந்தது தேவதை கானம்.
ஒரு முத்தம் கொடுக்க மூனு மணி நேரமா ஆகிடும்? நொடித்துக் கொண்டான் பல்லை கடித்துக் கொண்டான்.
உங்க பேச்சு சரியில்லை… கிளம்புங்க… வெட்கத்தோடு சேர்த்து அவனையும் விரட்டினாள்.
போடி கஞ்சப் பொண்ணே… என்னை கேட்டிருந்தா நிமிஷத்திலே நூறு கொடுத்திருப்பேன்… தன் பெருமை பேசி சிடு சிடுத்தான்.
கேட்கும் போது கொடுங்க… இப்போ கிளம்புவோம்! அவன் மார்பில் கை வைத்து தள்ளிவிட்டு ஓடினாள்.
பூங்காற்று மோதி புயலுண்டாகுமா? காதலில் மட்டும் சாத்தியம்.
அவன் முகம் பார்க்கவே முடியவில்லை அவளுக்கு. தான் தைரியமான பெண் என்று அவனுக்கு காட்டிவிட துடித்தாள். ஆனால் மென்மை வடிவான அவள் பெண்மை அதற்கு ஒத்துழைக்க வேண்டுமே… விரட்ட விரட்ட வந்து ஒட்டிக்கொண்டது வெட்கம்.
கட்டிலில் அமர்ந்து தொடையில் கையூன்றி அலங்காரம் செய்யும் பூஷிதையை கவிஞனாய் அவளின் ரசிகனாய் ரசித்துக் கொண்டிருந்தவன் பவி குட்டி இங்கே வாயேன் என்றான்.
கண்ணாடி பார்த்து தலைவாரிக் கொண்டு இருந்தவளை கண் அசைத்தும் கையசைத்தும் அழைத்தான்.
என்ன? என்றாள் பெரும் வெட்கத்தை மறைத்து.
உன்கிட்ட ஒன்னு கேட்கணும்.
முத்தம் ?
மொத்தம்!
எது… அவள் விசுக்கென்று திரும்பி நின்றாள்.
அய்யயோ என்ன உளறினோம்…?
அம்மாயி பாவா தமிழ் கொஞ்சம் வீக்.
அவள் முறைக்க… “தமிழ் மட்டும் தான்” என்று அழுத்தமாய் கண்சிமிட்டி காட்டி கொடுத்து விட்டான் அவன் இரட்டை அர்த்த வாக்கியத்தை.
சீப்பை தூக்கி வீசினாள்.
எதுக்குடி அடிக்கிற? நேனு நந்தமூரி குடும்பத்து வாரிசு.
எந்த நரியோ…? சடைத்துக் கொண்டாள்.
உன்கிட்ட ஒன்னு கேட்கணும்….!
மறுபடியும்…. பல்லை கடித்தாள்.
ஏய்… இது வேற!
வேறயா?
ஆமா… ஒரு டவுட்… உதடு கடித்தான்.
ஏடாகூடமாய் கேட்டு விடுவானோ என்று கண்கள் உருட்டியவளை அள்ளி எடுத்து வந்து கட்டிலில் அமர்த்தினான்.
என்ன பண்றீங்க?
ஒண்ணுமில்ல… என் கேள்விக்கு பதில் சொல்லு!
எப்படி ஏர்போர்ட்டுக்கு வந்த? அவள் கழுத்தை கட்டிக் கொண்டான்.
டாக்ஸில…. சிரிக்காமல் சொல்லி அவனை முறைக்க வைத்தாள்.
சிரிக்கணுமா…என்றான்
அது உங்க இஷ்டம் என்றவள் கன்னத்தை வலிக்கட்டும் என்றே அழுத்தி கிள்ளினான்.
ஸ் வலிக்குது… முகம் சுருங்கினாள்.
என்னை பார்த்து கிச்சனுக்குள்ள கதவை மூடிட்டு அழுதவ… என்னை நம்பி ஏர்போர்ட்டில் வந்து நின்னியே…. ஆர்வமாய் கேட்டான்.
ரொம்ப முக்கியம்.. அசட்டையாய் அவனை விலக்கி எழுந்தவள் மணி எட்டாகப் போகுது… வாங்க சாப்பிட்டு கிளம்பலாம்… சாமர்த்தியமாய் பேசி விட்டதாய் எண்ணி ஓடியே விட்டாள்.
ஏற்கனவே உணவு சொல்லி இருந்தான் என்பதால் தயாராய் இருந்த உணவை உண்டு முடித்தனர்.
என்ன இன்னும் பில் வரல… கைக் கடிகாரத்தை பார்த்துக் கொண்டே கேட்டாள்.
அதெல்லாம் ஏற்கனவே செட்டில் பண்ணியாச்சு! கிளம்பலாம் என்று அவன் முன்னே செல்ல மேனேஜர் ஓடிவந்து வழி அனுப்பினார். பணியாள் ஒருவன் பெட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடிவந்தான். டாக்சியை பார்த்து திகைத்தவன் எதுவும் பேசாது சுமையை டிக்கியில் வைத்து மூடிவிட்டு சென்றான்.
பேருந்து நிலையம் வந்து அங்கு ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம் நோக்கி சென்றனர்.
மிகச்சரியாய் 8.30 க்கு அவர்கள் செல்ல வேண்டிய பேருந்து வந்தது.
ஏறி அமர்ந்தவளுக்கு இதுவரை இருந்த மனநிலை மாறியது.
அவன் வீட்டுக்கு செல்ல போகிறோம்… என்னென்ன பேசுவார்களோ… உண்மையில் எந்த பெண்ணுக்கும் இவ்வளவு துணிச்சல் வராது இல்லையா?
அவன் ஆம்பிள்ளை அழைத்தான் என்றால் நீ பெண் பிள்ளை ஓடிவந்து விடுவாயா என்று கேள்வி கேட்டால்…? அய்யோ… அவளுக்கு நினைக்கவே நடுங்கியது.
புரிந்து கொண்டவன் அவள் கரத்தை பிணைத்துக் கொண்டான்.
சன்னலில் தலை முட்டி பேருந்தின் ஓட்டத்தில் சில்லிபரோட்டா போல் பிய்த்து போட்ட தெலுங்கு எழுத்துகள் தாங்கிய பெயர்ப்பலகைகள் கண்டு சிரிப்பு வந்துவிட்டது அவளுக்கு.
ஏய் குலாபி…எந்துக்கு நவ்வுதுன்னாரு?
நகந்து உட்கார இடமில்லை…
அடி…இவ வேற ஏன் சிரிக்கறேன்னு கேட்டேன்?
உங்க தெலுங்கு எழுத்தை பார்த்து சிரித்தேன்.
அதில் என்ன சிரிப்பு? எங்க அக்ஷரம் 56 தான் உங்களது போல 200 பிளஸ் இல்ல… எங்களது சுந்தர தெலுங்காக்கும்…
சிலிர்த்துக் கொண்டான்.
இப்போ என்ன சொல்லிட்டேன்… எங்களதும் செந்தமிழ் தான் அவளும் தான் சிலிர்த்துக் கொண்டாள்.
பின்னே என் தெலுங்கை குறைச்சு மதிப்பீடு செய்வியோ….
இந்த மொழிப்போர் அக்கப்போரா மாறிடும் போல என்று உணர்ந்தவள் கப் சிப்
நா குலாபிக்கி கோபம் வச்சிண்டா… தோளோடு இறுக்கிக் கொண்டான்.
அதெல்லாம் இல்லை… முறுக்கிக் கொண்டவள் கொணட்டிய அழகில் சொக்கி தான் போனான்.
ஒவ்வொரு ஊரை பேருந்து கடக்கும் போதும் அந்த ஊரின் பெயரையும் அந்த ஊரின் சிறப்புகளையும் சொல்லிக்கொண்டே வந்தான்.ம்ம்ம்ம்ம் கொட்டி கொண்டே வந்தவள் காலை நேர காற்றின் இதமான தாலாட்டில் அவன் தோள் வளைவிலே கண்ணயர்ந்தாள்.
சிரித்துக்கொண்டே அவள் மதி முகம் கண்டு ரசித்தான்.
ஒரு மணி நேரமாய் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவள் பேருந்து குலுங்கி நிற்கவே… திடுக்கிட்டு கண்விழித்து சாரி என்றாள் அசடு வழிந்தபடி.
ஏய் ஒன்னுமில்லரா அம்மாயி ஹைவேஸ் ரெஸ்டாராண்டில் பஸ் நிற்குது. இது இப்ராஹிம் நகர். நீ ரெஸ்ட் ரூம் போகணுமா?
இல்ல வேண்டாம்… தலை அசைத்தாள்.
காபி டீ?
குடிக்கலாம் என்றாள் துள்ளலுடன்.
சரி வா என்று அந்த சாலையோர கடையில் டீ வாங்கி பருகினார்கள்.
ஆனியன் சமோசா சாப்பிடலாமா?
சாப்பிட்டதே ஜீரணம் ஆகல…எனக்கு வேண்டாம்… மறுப்பாய் தலை அசைத்தாள்.
ஆனியன் சமோசா பெருசா இருக்குமே அதைவிட இந்த மினி சமோசா ரொம்ப டேஸ்டா இருக்கும்.
சுட சுட ஆறு சமோசா இருபது ரூபாய்க்கு வாங்கியவன் ஒன்றை எடுத்து கடித்து சிலாகித்து கண்கள் மூடி ரசித்து விழுங்கினான்.
அவன் சாப்பிடும் அழகில் அவளுக்கு உமிழ் நீர் சுரக்க அவள் ஒன்றை எடுத்து கடித்து பார்த்தாள். மொறு மொறுவென்ற மேல் பாகமும் பொன்னிறமாய் உள்ளிருந்த வெங்காயமும் அவள் சுவைமொட்டை தூண்டி விட்டது.
அவன் சாப்பிட்டது இரண்டு தான்… மீதி இருந்தால் தானே…
அவன் கேலியாய் சிரிக்க அவள் கோபமாய் முறைக்க மீண்டும் தொடர்ந்தது பயணம்.
பேருந்தில் அல்லு அர்ஜுனின் நா பேரு சூரியா நா இல்லு இண்டியா ஓடிக் கொண்டிருந்தது.
ஐந்து நிமிடம் பார்த்தவளுக்கு மீண்டும் கொட்டாவி வந்தது பின்னே சப்டைட்டில் இல்லாத தெலுங்கு படத்தை தமிழ் பொண்ணு எப்படி பார்க்கும்?
மீண்டும் அவள் பார்வை சாலையில் பதிந்தது. இது என்ன ஊரு பெயர்.. குண்ட்லபள்ளி,கொட்ல பள்ளி சிரித்து விட்டாள். அடக்க முயன்றாள் தான் ஆனால் வெடித்து வந்து விட்டது.
இதுக்கு என்ன சிரிப்பு? உங்க ஊருல கூட தான் கொட்டாம்பட்டி, குண்டாம்பட்டின்னு கூகுல் மேப்பில் பார்த்து சிரித்திருக்கேன்.
சிரித்துட்டு போங்க உதட்டை பிதுக்கினாள்.
ஏய் லூசு பொண்ணு.. தெலுங்கில் பள்ளினா கிராமம் இல்லன்னா ஊரு இதே வார்த்தையை கர்நாடகவில் ஹள்ளின்னு சொல்வாங்க… ரெண்டுக்கும் சேம் மீனிங் தான்.
இயல்பாய் பேசிக் கொண்டே வந்தனர். அனந்தசாகர் டோல் வந்துட்டோம் இன்னும் முக்கால் மணி நேரத்தில் கரிம்நகர் போயிடலாம். அங்கிருந்து பதிமூன்று கிலோமீட்டர் தான் எர்ரபள்ளி என்றான்.
இதுவரை அவள் இயல்பாக காட்டிக் கொண்டிருந்தவளின் முகத்தில் அப்பட்டமாய் கலவரம் அப்பியது.
எந்துக்கு இந்த பயம்…? நான் இருக்கேன்னு சொன்னேன்… கோபத்தில் பல்லை அழுந்த கடித்தான்.
என்னை ஏத்துப்பாங்களா? இதுவரை வாய் திறந்து கேட்காதவள் விழி நீர் முட்ட நடுங்கும் குரலில் கேட்டு விட்டாள்.
ஏன் ஏத்துக்காம…? நான் என்ன உன்னை தாலிகட்டி கூட்டிட்டு போயா நிற்க போறேன்…? இந்த அம்மாயியை பிடித்திருக்கு கல்யாணம் கட்டி வைங்கன்னு தானே கேட்க போறேன்…
அவங்க ஏத்துக்கலைனா? தயக்கமாய் கேட்டாள்.
ஏத்துக்கனும்…. அழுத்தி கூறினான்.
அதுக்கில்ல…. அவள் சற்று இழுக்க… வாயை மூடிட்டு இரு! வாயை பொத்தி காண்பித்தான்.
ஊரை நெருங்க நெருங்க…. அவளுக்கு லப் டப் வேகமெடுத்தது.
பதட்டத்தில் வெளிறி இருக்கும் அவள் முகம் பார்க்க தவிர்த்து வெளியில் வேடிக்கை பார்க்க தொடங்கினான்.
மெல்ல மெல்ல கரிம்நகர் வந்திறங்கி அவன் டாக்சி அழைக்க… வழுக்கி கொண்டு அவனை உரசி நின்றது கருப்பு வண்ண Audi A6.
புரிந்து கொண்டவன் தன் குலாபியின் கரம் பற்றிக் கொண்டான்.
கார் கதவை திறந்து விட்டவனின் பார்வை ஊசியாய் குத்தியது பவித்ராவை.
தேவ் இ அம்மாயி மீக்கு வதின என்றான் மிடுக்கான குரலில்.
ஓ என்றவன் எதுவும் பேசாது டிரைவர் சீட்டில் அமர்ந்து சீட் பெல்ட் போட்டுக் கொண்டான்.
பவித்ரா கலவரத்துடன் ஹரி முகம் நோக்க….இவன் என்னோட தம்பி ஐ மீன் என் சின்னயனா வெங்கட கிருஷ்ணா மகன் தேவ் சரண். அவள் கரம் பற்றி நெருங்கி அமர்ந்து கொண்டான்.
இங்கேயும் நமக்கு கரீம்நகரில் வீடு இருக்கு ஆனா கிராமத்தில் தான் பரம்பரையா இருக்கோம் என்றான்.
அவளால் பெயரளவில் கூட உம்ம்ம்ம்ம் சொல்ல முடியவில்லை.
அவன் கரத்தை இவள் இறுக்கிக் கொண்டாள்.
வீட்டில் தெரிந்து விட்டது அது தான் கார் வந்திருக்குறது. பார்த்துக் கொள்ளலாம் என்று தலை கோதிக் கொண்டான்.
மூன்றாண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணை மிதிக்க போகிறான்… கொஞ்சம் சங்கடமாகவும் நிரம்ப மகிழ்ச்சியாகவும் இருந்தது.
எர்ரபள்ளி என்ற மஞ்சள் வர்ண பலகை வரவேற்றது. அது கிராமம் தான் என்று கிளை சாலையிலே தெரிந்தது.
கார் பதினைந்தடி உயரம் கொண்ட மதில் சுவருக்குள் வந்து நின்றது.
பெரிய்ய்ய்ய வீடு….. அடுக்கடுக்காய் பிரம்மாண்டாமாய் இல்லாமல் பரந்து விரிந்த வீடாய் தனித்து கம்பீரமாய் தெரிந்தது.
குலாபி வெல்கம் டு அவர் நேட்டிவ் என்று அவள் கரம் பற்றி இறக்கினான்.
இரண்டு ஏக்கரை விழுங்கியிருந்த வீடும் தோட்டமும் அவளை திகைக்க வைத்தது. திருமண மண்டபம் போல் என்று சொல்ல முடியாது அதை விட நான்கு மடங்கு பெரிதாக இருந்தது.
அவன் வீட்டை பார்த்தே அவளுக்கு அடிவயிற்றில் அமிலம் சுரந்தது.
வாடா அம்மாயி அவள் கரம் பற்றி நடந்தான்.
அங்கே வாயிலில் நிறைய பேர் குழுமி நிற்க… பவித்ராவிற்கு நடை தடுமாறியது.
நான் இருக்கேன் என்றவன் தோளில் கை போட்டு நடந்தான்.
வீட்டு வாயிலை நெருங்க…
லோபலிக்கு ராவத்து(உள்ளே வராதே) என்ற கர்ஜனையில் தூக்கி போட்டது பவித்ராவிற்கு.
எந்துக்கு ராக்குடுது? நெஞ்சம் நிமிர்த்தி கேட்டான்.
உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா நம்ம ஹோட்டலிலே ஒரு பெண்ணை கூட்டிட்டு போய் ஒரே ரூமில் தங்கி இருப்ப… கர்ஜித்தார் வெங்கட கிருஷ்ண நந்தமூரி.
———–/தொடரும் ——-
error: Content is protected !!