Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அங்கணம் நின்றான் அந்தியூறான்

அந்தியூரான் – 9

அந்தியூரான் – 9
தனக்கு எதிரில் அமர்ந்திருக்கும் அமுதனை முறைத்துக் கொண்டிருந்தார் முத்து.அவரது பக்கத்தில் சிறு விசம்பலோடு காந்திமதி அமர்ந்திருக்க.மரகதம் அவரைத் தோள் தொட்டுச் சமாதானம் செய்து கொண்டிருந்தாள்.
“என்ன அண்ணி இது? அழுகாதீங்க அண்ணி! மனசு சங்கட பட்டு போகுது”
“இந்த பைய சொல்லாம கொள்ளாம போகுற அளவுக்கு நாங்க அப்படி என்ன மரகதம் அவனுக்கு பாவம் செஞ்சோம்? விசலாட்சியை விட இவன் தானே எனக்கு விருப்பம்.மலடி பட்டம் வாங்கும் முன்னுக்கே இந்தப் பையில என் பையனா எண்ணி தானே இருந்தேன்” என்றவர் ஓவென்று அழுக.


Advertisement

அவரது அழுகையில் பதறி எழுந்து பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டான் அமுதன், “அத்தை! அவர் தோள் தொட்டு அசைக்க.அவனது கையைத் தட்டி விட்டாள் காந்திமதி.
“அத்தை தான்டா நான், அதான் உதறி விட்டு போயிட்ட. அம்மாவா எண்ணி வச்சா இது போலச் செஞ்சிருப்பியா நீ?” காந்திமதி தனது ஆதங்கத்தை கொட்டி விட்டாள்.
“நம்ப கிட்ட என்ன இருக்கு காந்திமதி நம்பல மதிக்க. இந்த வீட்டை விட்டா நமக்குச் சொத்தில்லை, சொல்லிக்கிற அளவுக்கு சொந்தமும் இல்லை.இனி இந்த ஆளை அண்டி என்னதுக்குன்னு கிளம்பிட்டான் போல” முத்து அவர் பங்கிற்குத் தனது ஆதங்கத்தைக் கொட்ட முற்றிலும் பதறிப் போனான் அமுதன்.

Advertisement

“மாமா! என்ன பேசுறீங்க?”

Advertisement

“உண்மைய தாண்டா பேசி வைக்கிறேன்.எங்க இல்லன்னு சொல்லு பார்ப்போம்?”
“கண்டிப்பா இல்லை மாமா உங்களுக்காகத் தான், நான் விசாலாட்சியை அந்தக் குடும்பத்துக்குக் கல்யாணம் பண்ண சம்மதம் சொன்னேன். விசாலாட்சி கல்யாணம் இப்பவும் என் கண்ணுக்குள்ள விழுந்த உறுத்தல் தான்.இப்போ அவளுக்கு சில பிரச்சனை இருக்கு அதுக்கு வேண்டி தகப்பன்னா நான் சில பொறுப்புகளை எடுக்கனும் தானே”
“அப்போ எனக்கு அந்தப் பொறுப்பு இல்லன்னு சொல்ல வரியா நீ?”

Advertisement

“மாமா!.. அர்த்தம் அப்படியில்லை”
“உன் பேச்சுக்கு அர்த்தம் அப்படிதான்”
“இப்படி மல்லுக்கு பேசுனா நான் எப்படி உங்களுக்குப் புரிய வைப்பேன் சொல்லுங்க? அம்மா வந்து உங்க கிட்ட சொன்ன உடனே நீங்க பேசிருக்கணும் தானே மாமா” என்றதும் சில நொடிகள் மௌனமாகி விட்டார் முத்து.
“அது என் தப்பு தான். அப்போ பார்த்து உன் அத்தைக்கு உடம்பு முடியல. அதுல வந்த பதட்டம் அதுவும் போக நண்பன் மகன் தானே அப்படின்னு எண்ணம்.எல்லாம் சேர்த்து தான் காலம் தாழ்த்தி போக வச்சுடுச்சு தப்பு என் மேல தான்” என்றார் முத்து.
“அந்த கோபம் தான் மாமா என்னை இப்படி செய்ய வச்சுது அது மட்டும் இல்ல.நான் இப்படி செய்யாட்டி அந்த குடும்பத்துல விசலாட்சியை பத்தி யோசனை பண்ணிருக்கவே மாட்டாரு” அமுதன் வார்த்தையில் அதிர்ச்சி கொண்டு காந்திமதி, முத்து இருவரும் ஒரு சேர பதறி,
“என்னடா சொல்ற?”
“உண்மை தான் அத்தை விசாவை கூட்டிட்டு போன்னு அவர் எப்படி என்கிட்ட சொன்னார் தெரியுமா? அவங்க அப்பா அம்மா கிட்ட அந்தப் பொண்ணு போகட்டும்னு சொல்றார்.இவளுக்கும், அவருக்கும் கணவன் மனைவிக்கு உண்டான நெருக்கமே இல்லை போல”
“என்ன மரகதம் இவன் என்ன என்னமோ சொல்றான்” அமுதன் சொன்னதைக் கேட்டு காந்திமதிக்கு இன்னும் பதட்டம் கூடியது.
“உண்மை தான் அண்ணி அந்தப் புள்ளைய பத்தி பேசுறா.அவங்க மாமியார், மாமனார் பத்தி பேசுறா,ஆனா புருஷனை பத்தி கேட்டா மாசம் இரண்டு நாள் வருவாருன்னு சொல்றா.கல்யாணம் பண்ண கையோட ஈரோட்டுக்குப் போயிட்டாராம்” மகளது வாழ்க்கையை எண்ணி பயம் கவ்வ கலங்கிய குரலோடு பேசி வைத்தார் மரகதம்.
“கல்யாணம் பண்ணி அடுத்த நாளே அவரை வேலையில பார்த்துட்டு எனக்கே அதிர்ச்சி தான் மாமா.அதுவும் போக நானும் அவரைப் பார்த்துட்டு தானே இருக்கேன்.ஆபீஸ் பக்கத்துல ஒரு வீடு இருக்கு அங்க தான் இருப்பார்.சாப்பாடு வெளில இருந்து வரும்.
இதுல எங்க குடும்ப நடத்த சொல்லுங்க.இந்த அழகுல கொஞ்ச நாள் உன் தங்கச்சிய கூட்டிகிட்டு போன்னு சொல்றார்.இதெல்லாம் பார்த்தும் நான் அமைதியா இருக்க முடியுமா சொல்லுங்க?”
“இந்தச் செய்தி எல்லாம் எனக்குத் தெரியாதுடா.முன்னுக்கே இது தெரிஞ்சிருந்தா நான் சிவா கிட்ட பேசிருப்பேன். உனக்கு தான் எல்லாமே தெரியுமே நீ சொல்லிருக்க வேண்டியது தானே?”
“அவர் என்னைக் கூப்பிட்டு பேசாத வரைக்கும் இந்தப் பேச்சை எப்படி நான் தொடங்க முடியும், பேச முடியும் சொல்லுங்க மாமா?”
“அதுவும் சரி தான்”
“இப்பவும் அவர் எந்த அளவுக்கு இருக்காருன்னு தெரியல. அவர் மேல எனக்கு நம்பிக்கை குறைவு தான்.பார்ப்போம் அடுத்த மாசம் விசாவை ஒரு வாரம் கூட்டிட்டு வந்து வச்சு விசாரிச்சாதான் தெரியும்” மகனது பேச்சில் பதறிய மரகதம்.
“ஐயோ! என்னடி வேலை பண்ண பாக்குற நீ? அப்படி எதுவும் பண்ணி இன்னும் பிரச்சனை ஆகிட போகுது அமுதா”
“ம்மா! நம்ப வச்சிருந்து அனுப்புறோம்னு சொல்லி கூட்டிட்டு நான் வரேன் எதுவும் நடக்காது”
“அமுதன் சொல்றது சரிதான் மரகதம். அங்க புள்ள எப்படிருக்குன்னு நமக்கும் தெரியணும் தானே. இனியும் நம்ப தப்ப தொடர கூடாது” காந்திமதி உறுதியாகச் சொல்ல.
“எல்லாம் சரிதான் அண்ணி, ஆனா மாப்பிள்ளை தம்பி ரொம்ப அழுத்தம் போல. நம்ப கேட்க போயி அவருக்கு தப்பா போச்சுன்னா என்ன செய்யிறது?”
“ம்மா! உன் மாப்பிள்ளை அழுத்தம் இல்லை சுயநலவாதி, அலட்சியமான ஆளு, திமிரும் கூட” ஓர் இரு வருடங்கள் அவனை பக்கமிருந்து பார்த்த அமுதன் தணிகாவை சரியாக நாடி பிடித்தான்.
“அமுதா! காந்திமதியும், முத்துவும் ஒரு சேர அதட்டி வைத்தனர்.
“ப்ச்! சலித்தவன் என்ன சொன்னாலும் அந்த ஆளு அப்படி தான். மகளுக்கு வேண்டினு என் தங்கச்சியைக் காவ கொடுத்தாச்சு.என் பொறுமைக்கும் ஒரு அளவுண்டு மாமா அது போச்சுன்னா?… பார்ப்போம்” என்றவன் சிறு மௌனத்திற்குப் பிறகு.
“சரி நான் கிளம்புறேன்”
“டேய்! இங்கயே வந்துடேன்”
“மாமா எனக்கு வேலை அங்க தான். சமைக்குறதுக்கு எனக்கு அம்மா வேணும். நீங்க வேணா அங்க வந்துடுங்க” அமுதன் எண்ணியதை எண்ணம் போல் பேசி விடுபவன் அதே சமயம் அன்பும் கொண்டவன்.
“அது முடியாது இவளுக்கு வைத்தியமிருக்கு” என்று முத்து மனைவியைக் காரணம் காட்ட.
“என்னங்க நம்ப மாச முதல் பத்து நாள் மட்டும் இங்க இருக்கலாம். மீதி நாள் அங்க போயிடலாம்”தனிமை பயம் காட்டி வைக்க காந்திமதி முந்தி கொண்டு பதில் சொன்னார்.
அவரது பேச்சில் சிறு புன்னகை கொண்டான் அமுதன்.அவனுக்கும் தனது அத்தையை அப்படி தான் புடிக்கும்,ஆனால் வெளியில் காட்டி கொள்ள மாட்டான்.
“நமக்குத் தான் ரோஷமில்ல,ஆனா அவன் எத்தனை உறுதியா நான் இங்க வரமாட்டேன்னு சொல்றான் பாரு” மீண்டும் அமுதனை சாட தொடங்கினார் முத்து.
“ப்ச்! மாமா என்ன பேச்சு இது?”
“சரிதான் போடா” என்றவர் வெடுக்கென எழுந்து சென்று விட. அவரை சமாதானம் செய்ய அவனும் அவர் பின்னே சென்று விட்டான்.தங்களை விட்டு அவன் வேறு இடம் சென்றதை அதுவும் சொல்லாமல் சென்றதை இன்னும் முத்துவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.அதன் பொருட்டே அவர் இப்படி பேசி வைக்கிறார் போலும்.
“அண்ணி நீங்க எதுவும் யோசிக்காதீங்க” மரகதம் காந்திமதி தோள் தொட்டு சொல்ல.அவரது கையின் மேல் தன் கையை வைத்து அழுத்திய காந்திமதி.
“எனக்கு உங்களை விட்டா யாரு மரகதம் இருக்கா? எங்க கடைசி காலம் விசாலாட்சி, அமுதனை நம்பி தான்.அவன் சொல்லாம போனது வருத்தமா இருக்கு வேற ஒன்னுமில்லை.அவன் வச்ச விளக்கம் நியாயம் தானே மரகதம்.
நமக்கெல்லாம் வயசு போச்சு, ஆனா அதுங்க பார்க்க வேண்டிய தூரம் இன்னும் இருக்கே.அதுனால தான் அவன் பயந்து வைக்கிறான். அவன் செஞ்சது சரி தான் மரகதம்.நம்ப விசலாட்சியை இன்னும் கொஞ்சம் கவனிச்சு பார்த்து இருக்கலாம்” என்றதும் மரகதம் சில நொடிகள் மௌனம் கொண்டு.
“அவ அந்த வீட்டுல நிலைச்சு இருப்பாளா அண்ணி?” திடீரென மரகதம் கேட்கவும் அதிர்ந்த காந்திமதி.
“இது என்ன பேச்சு? நீ ஏன் இப்படி யோசிக்கிற? அப்படியெல்லாம் அவளை விட்டுருவோமா? என்ன மரகதம்?”
“பயந்து வருது அண்ணி இரண்டு பிள்ளைகளும் சூழ்நிலை அறிஞ்சு நடக்கிற புள்ளைங்க.என் சொல்லுக்கு மறுபேச்சு பேசி நிற்க மாட்டாங்க அப்படிப்பட்ட பிள்ளைகளுக்கு நம்ப நியாயம் செய்யனும் இல்லையா?” மரகதத்தின் எண்ணம் நன்றாக விளங்கியது தான்.
“அப்படியெல்லாம் உங்க அண்ணன் விட மாட்டாரு. அவர் நண்பன்னு கொஞ்சம் மெத்தனமா இருந்துட்டாரு. இனி அப்படி இருக்க மாட்டாரு மரகதம். அவர் நண்பனை விட நம்ப பிள்ளை நமக்கு முக்கியம்”
“அண்ணனை நான் இப்பவும் நம்புறேன் அண்ணி” என்றவள் கையை ஆறுதலாகத் தட்டி கொடுத்தாள் காந்திமதி.
இங்கே நிலை இப்படி இருக்க அங்கே அந்தியூரில்!..
“விசா அப்பா கூப்பிடுறாரு” என்று விட்டு அவளது பதிலை எதிர் பார்க்காமல் குமாரி செல்ல. கணவன் எதற்கு அழைக்கிறான்? ஒருவித பயம் கவ்வ அதனை மறைத்துக் கொண்டு.மகள் பின்னே சென்றாள் விசலாட்சி.
இவர்கள் மொட்டை மாடியில் இருக்க தணிகாசலம். கீழே அமர்ந்து கொண்டு விசாலாட்சியை அழைத்து வர சொன்னான்.
தனக்கு முன்னே செல்லும் மகளது ஜடையைப் பிடித்து இழுத்த விசாலாட்சி “ஏய் ஆட்ட குதிரை நில்லுடி. எதுக்குடி உங்க அப்பன் வர சொன்னாரு” என்றதும் அவளை மூக்கு விடைக்கப் பார்த்த வைத்தாள் குமாரி.
“என்ன பார்வை கேட்டதுக்குப் பதில் சொல்லுடி”
“விசா என்கிட்ட அப்பாவ இப்படி மரியாதை இல்லாம பேச கூடாதுனு அப்பத்தா சொன்னாங்க தானே”
“ப்ச்! இங்க உங்க அப்பத்தா இல்ல தானே பிறகு என்ன? எனக்கு இப்படி தான் பேச வரும்” என்றதும் தலையை உலுக்கி கொண்டவள். விசாலாட்சிக்குப் பதில் சொல்லாமல் படியில் இறங்க முற்பட மீண்டும் முடியை பற்றி இழுத்தாள் விசலாட்சி. இந்த முறை கொஞ்சம் வலிக்க இழுத்துவிட.
ஆ!.. என்றவள் அவளது கையை இறுக்கி பிடித்து கடித்து வைக்க.இருவருக்கும் கொஞ்சம் தள்ளு, முள்ளாகி போனது.நடு படியில் நின்று கொண்டு இருவரும் சண்டையைத் தொடர நொடிகள் செல்ல செல்ல கூச்சல் அதிகமாக.அதில் சிவராமன், சிவகாமி, தணிகா மூவரும் அந்த இடத்திற்கு ஒன்றாக விரைந்து வந்தனர்.
“எரும மாடே நாயாடி நீ? இந்த கடி, கடிக்கிற”
“சும்மா இருந்த என்னை நீ தானே வம்புக்கு இழுக்குற, அப்பா கூப்புட்டாரு தானே சொன்னேன், நீ தானே உங்க அப்பன்னு வம்பை தொடங்கி வச்ச”
“உண்மைக்கும் உனக்கு அப்பன் தானடி அதைத் தானே சொன்னேன் அதுக்குக் கடிப்பியா நீ?”
“நீ என் முடிய பிடிச்சு இழுத்த. எனக்கு எப்படி வலிக்குது தெரியுமா? அதான் கடிச்சேன்”
“அதுக்குக் கடிப்பியாடி ராட்சசி”
“நீ தாண்டி ராட்சசி”
“நீ குட்டி பிசாசு”
“நீ பெரிய பிசாசு”
“கொழுப்பை பாரு சண்டி குதிரை” என்றவள் மீண்டும் அவளது முடியை பிடித்து இழுக்க வர.
“ஏய்! இந்தாங்கடி ஆயியும் மவளும் என்னங்கடி பண்ணுறீங்க” சிவகாமி அதட்டல் போட.அதுவரை அடித்துக் கொண்டிருந்த இரு பெண்களும் கீழே எட்டி பார்த்தனர். அங்கே மூவரையும் எதிர்பாராமல் அதிர்ந்து நிற்க.தணிகாசலம் வேறு இருவரையும் முறைத்துக் கொண்டு நின்றான்.
“இப்போ இரண்டு பேரும் கீழே வரீங்களா என்ன?” முதல் முறை இருவரது சண்டையையும் நேரில் கண்ட தணிகாசலம்.பெண்களை அதட்டி வைக்க அதில் பயம் கொண்டு இரு பெண்களும் அமைதியாக கீழே இறங்கினர்.
இரு பெண்களுக்கும் மூச்சே இல்லே அவன் சொன்ன மறு நொடி இரு பெண்களும் பவ்வியமாக வந்து நின்றனர்.இருவரையும் ஆழமாக ஒரு பார்வை பார்த்து விட்டு எதுவும் பேசாமல் முன்னே நடந்து விட்டான் தணிகாசலம்.
“நீ வா என்கூட” குமாரியை சிவகாமி இழுத்து செல்ல.பெரும் பயத்தை உள்ளுக்குள் மறைத்து தணிகாசலத்தை நோக்கி சென்றாள் விசாலாட்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!