Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

பிரியமே பிரிவேது

பிரியமே பிரிவேது! 28

அத்தியாயம் 34

நினைத்து அழுத பொழுதுகள் எல்லாம் சிரிப்பை கொடுக்குமாமே! அப்படி ஒரு இடத்தில் தான் இருந்தனர் மகேஸ்வரி குடும்பத்தினர்.



Advertisement

மகேஸ்வரி சந்தோஷத்தில் குதிக்கவில்லை அவ்வளவு தான்.. கொண்டாடி தீர்த்தார்.

தான் நீண்ட நாட்களாய் காண ஏங்கிய தன் செல்ல மகனின் திருமணம் கைக்கூடி வந்திருக்க, கூடவே தன் மூத்தமகன் அப்பாவாக போகிறான் எனும் செய்தி அவரை இளமையாய் உளவ செய்தது.

Advertisement

Advertisement

கல்பனா எந்த ஒன்றிற்காக ஏங்கி ஏங்கி தவித்தாளோ இதோ அந்த செல்வம் அவளினுள் கருவாய்.. நினைத்து நினைத்து மனமும் முகமும் பூரித்து ஒரே நாளில் அகிலனின் உலகையே அழகாக்கி இருந்தாள் அவன் மனைவி.

நேற்று கல்பனா மகேஸ்வரி மேல் சாயவும் சட்டென அனைவரும் பதட்டமாகி இருக்க, ரகு தான் தண்ணீரை எடுத்து வந்து தெளித்தான்.

Advertisement

மயக்கமில்லை ஒரு சோர்வு அதுவும் திடீரென.. மனம் பதட்டத்தில் அடித்துக் கொள்ள தண்ணீரை தெளிக்கவும் பரவாயில்லை போல தோன்றிய நொடி மின்னலாய் ஒரு கீற்று அவள் மனதினுள் எழ, கண்களை அங்கும் இங்குமாய் சுழற்றி அவள் யோசிக்க, மகேஸ்வரியும் தர்ஷினியும் பயந்து போயினர்.

“ம்மா என்னாச்சு ம்மா?” யார் பேச்சையும் கவனிக்காமல் தன் மன எண்ணத்தில் மட்டும் கல்பனா சுழன்று கொண்டிருக்க, ரகு அன்னையை கேட்கவும்,

“தெரியலையே ரகு!” என்றவர் இப்படி இருக்குமோ என்று எதிர்பார்க்கவில்லை. என்னவோ என்ற பயம் தான் அவருக்கு.

“அண்ணி!” என்று தர்ஷினி கல்பனாவை உலுக்க,

“தர்ஷி! இருக்குமோ?” என்றாள் கல்பனா இப்பொழுதும் கண்களை சுழற்றி.

“என்ன ண்ணி?” என்றவளுக்கு முதலில் புரியவில்லை.

வெளிச்சமாய் கல்பனாவின் முகமும்  அப்படி இல்லையென்றால் என்ற பயமும் என மாறி மாறி அவள் முகத்தினில் தெரியவும் சில நொடிகளில் தர்ஷினிக்கு புரியவர,

“அண்ணி!” என்று கண்களை விரித்தவள்,

“உங்களுக்கு தெரியலையா? எத்தனை நாள் ஆச்சு?” என்று கேட்க, மகேஸ்வரிக்கும் புரிய ஆரம்பித்தது.

நாட்கள் தள்ளி போவதை மட்டும் வைத்து சொல்லிவிட முடியாதே.. கல்பனாவிற்கு எப்போதுமே அப்படி சரியாய் இருக்காதே! அதை அவளும் சொல்ல,

“அட அறிவு கெட்டவளே! உன்னைய கொல்ல போறேன் பாரு.. இதை கூட கவனிக்காம..” என்ற மகேஸ்வரி புரியாமல் நின்ற ரகுவை,

“ரகு காரை எடு டா!” என்று சொல்லி உடனே கிளம்பினர் மருத்துவமனைக்கு. நிஜம் என்று உறுதியான் அடுத்த நொடி மருமகளுக்கு உச்சி முகர்ந்து முத்தம் கொடுத்தவர் அகிலனை அழைத்து வரவேற்று அவரே குழந்தையாய் துள்ளி குதிக்க, மொத்த குடும்பமே குதூகலித்தது.

அகிலனிடம் வாழ்த்து கூறிய ரகு சில நிமிடங்கள் கழித்து தன் அறைக்கு வந்தவனுக்கு மகிழ்ச்சியில் ஒரு இடத்தில் இருக்க முடியவில்லை.

ஸ்ருதி பேசியதை கேட்ட அடுத்த நொடி மூச்சைடைத்து வந்தது தான் நிஜம் ரகுவிற்கு.

ஆர்ப்பரித்து வந்த புன்னகையை மகிழ்ச்சியை தன் வசந்தத்தை அந்த நொடியில் வெளிப்படுத்தி இருக்கலாம் தான்.. ஆனாலும் அதை மறைத்து நின்று அளவாய் சிரித்து அவர்கள் கிளம்பி அதன்பின் தன் அண்ணியை கவனித்து அவர்களின் புது வரவில் சந்தோசமாய் பங்கு கொண்டு என, அவன் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொள்ளவே கால நேரம் எடுத்துக் கொண்டு தன் அறைக்கு வந்து சேர்ந்திருந்தான்.

“ஆராத்யா!” கத்தி சொல்ல வேண்டுமாய் ஒரு உணர்வு உந்த, இதயத்தை மெல்ல நீவிக் கொண்டு வார்த்தைக்கும் வலிக்காமல் அவன் சொல்லிப் பார்த்து பால்கனி அருகே சென்றவன் கண்ணாடியில் கைவைத்துப் பார்த்தான் அந்த ஊஞ்சலை.

“இனி உனக்கு வேலை இல்லை!” மனம் தானாய் அந்த ஊஞ்சலிடம் சொல்ல,

“என்ன பண்ற ஆரா நீ என்னை?” என சொல்லிக் கொண்டவன்,

“ம்ம்ஹும்! என்னவோ பண்ணுதே!” என வாய்விட்டே சொல்லி அந்த அறைக்குள் மட்டுமாய் அத்தனை உழன்றவன், எதற்கும் மனம் நிதானிக்காமல் போக, எடுத்துவிட்டான் அலைபேசியை கையில்.

“பிக்கப் மை கேர்ள்!” என்று தனக்கு தானே சொல்லி அழைப்பு செல்லும் நேரத்திற்குள் மனதுக்குள் ரயிலோடும் சத்தங்கள்.

ரகு தர்ஷினியிடம் சொல்லியது தான் உண்மை. எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் என்ற முடிவிற்கு ஆராத்யா வரும் பொழுது தன்னுடன் ரகுராம் என்ற ஒருவன் இருப்பான் என்று நினைக்கும் அளவிற்கு வந்திருந்தாள்.

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பின் அலைபேசியை பார்த்த பொழுது அத்தனை அழைப்பு வந்திருந்தது கார்த்திகா, பிரேம், விக்ரம், இன்னும் அலுவலக எண்கள் என்று.

எதற்கும் அழைத்து பதில் சொல்லும் நிலையில் இல்லாமல் மொபைலை தூக்கிப் போட்டவள் தனியாய் யோசித்தது என்னவோ அரை மணி நேரம் மட்டும் தான்.

“அச்சிடேன்ட்ல ரகுராம்ன்றவரை ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி இருக்கோம்.. உடனே வாங்க!” என்ற வார்த்தைகள் திரும்ப திரும்ப மனதில் ஓடி, உடலை நடுங்கவும் பதறவும் வைத்திருந்தது.

தர்ஷி இதை விளையாட்டாய் செய்யவில்லை என்பது புரிந்தாலும் எந்தளவிற்கு தனக்காக தன் புரிதலுக்காக இந்த குடும்பம் மொத்தமும் காத்து கிடக்கிறது என்பதும் புரிந்தது தர்ஷினி கல்பனாவின் இந்த ஒரு செயலில்.

அத்தனைக்கும் மீறி தன் மனதின் எண்ணத்தை அதுவே மொத்தமாய் படம்பிடித்து தனக்கே காட்டிவிட்டதே!

யாரும் இல்லாமல் தான் மட்டுமாய் இந்த வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு போக முடிவெடுத்திருந்தவளுக்கு ரகுவிற்கு ஒன்று என்று அழைப்பு வந்த நொடி முற்றிலும் மூளை வேலையை செய்திருக்கவில்லை.

“ஏன் டி அறிவிருக்கா உனக்கு? ரகுக்கு அச்சிடேன்ட் உடனே வாங்கனு ஆராத்யாக்கு போன் பண்ணா அவ ஓடி வருவாளா? நான் ஏன் வரணும்னு உடனே உங்க வீட்டுக்கு தான் போன் பண்ணுவா இன்ஃபார்ம் பண்ண.. இல்ல ஆபீஸ்ல சொல்லி யாரையாவது பார்க்க சொல்லுவா!” என்று சொல்லி நந்தா மனைவி தர்ஷினியை அப்போது திட்டி இருந்தான்.

“எனக்கு தெரியும் நந்து நீங்க டியுப்லைட்னு! நான் என்ன சொல்றேன்னா.. இந்த காதல்ன்றது ரொம்ப மோசமான நோய்! மூளையை கழட்டி அடகு வச்சுட்டு தான் வேலையை செய்யும்.. அப்படி மூளை இருந்து ஆரா வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணி அவ ஹாஸ்பிடல் ஓடலைனா அவ மனசுல காதலே இல்லைனு சொல்லி நம்ம ரகுக்கு நாம காவி வாங்கி குடுத்துடலாம்.. டீல்?” என்று தர்ஷினியே சொல்லி தான் இந்த வேலையை செய்ததே!

இதோ கொஞ்சமும் யோசிக்காமல் இன்னும் அப்படி எதுவும் நடந்திருந்தால் என்ற படபடப்பில் நெஞ்சம் அடித்துக் கொள்ள, என்னவும் நடக்கட்டும் என்று சொல்லி ஸ்ருதி முன்பும் அவள் கணவன் முன்பும் நின்று தனக்கான திருமணத்தை பற்றிய பேச்சை அவள் துவங்கி வைத்திருக்க, அன்றைய நாள் அனைவர்க்கும் மகிழ்ச்சியை வாரி வழங்கி இருந்தார் கடவுள்.

ஸ்ருதி போய் பேசிவிட்டு அங்கே பேசியதை ஆராத்யாவிடம் சொல்லவும் சிறு புன்னகை கொடுத்தவள் மனம் ஊஞ்சலுக்கு செல்ல சொல்ல, அங்கிருந்து நேராய் ரகுவின் வீடு. அதை காண கூச்சம் கொண்டவள் தன் அறைக்குள் ஒளிந்து கொண்டாள்.

தர்ஷினி கல்பனா யாரேனும் ஒருவரின் கிண்டல் பேச்சை வரவை என எதிர்பார்த்து ஆராத்யா காத்திருக்க, அப்படி ஒன்று நிகழவில்லை ஒரு மணி நேரம் தாண்டியும்.

அடுத்ததாய் ரகுவின் முகம் மனதில் எழ, அதில் அவன் சிரிக்கும் முகம் கூடவே அதில் கொஞ்சம் கோபமான பார்வை கூட.

மனதின் கனங்கள் எல்லாம் இறக்கி வைக்கப்பட்டு இலகுவாகி இருக்க, ஆனாலும் புதிதாய் அந்த மனதை என்னவோ செய்து கொண்டிருக்கும் உணர்வை தாண்டி வெளிவர முடியவில்லை அவளுக்கு.

எதுவும் செய்ய தோண்றாமல் அறைக்குள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து என்னென்ன நினைவுகளோடோ புன்னகையில் இருந்தவள் கவனத்தை தன் வசம் திருப்பியது அவளின் கைப்பேசி.

தர்ஷினியை எதிர்பார்த்து ஓடி சென்று கையில் எடுத்துப் பார்க்க, தெளிவாய் தெரிந்த ரகுவின் எண்ணில் மனதுள் மத்தள சத்தங்கள்.

விரல் நடுங்க அழைப்பை ஏற்று காதில் வைத்து அவன் குரல் கேட்க இவள் காத்திருக்க, அதற்கெனவே அவளே பேசட்டும் என வேண்டுமென்றே அமைதி காத்து சத்தமில்லா புன்னகையுடன் இருந்து கொண்டிருந்தான் ரகு.

நிமிடங்கள் கடந்தும் வந்த அமைதி ஒரு நேரத்திற்கு மேல் தவறாய் ஆராத்யாவால் புரிந்து கொள்ளப்பட,

“அங்க எதுவும் பிரச்சனையா? ஸ்ருதி வீட்டுல வந்து பேசினது உங்க வீட்டுல யாருக்கும் பிடிக்கலையா? அதான் தர்ஷ் என்னை பார்க்க வரலையா? அதான் நீங்களும் கோபமா இருக்கீங்களா? நான் தான் அவசரப்பட்டுட்டேன்!” என்றவள் பேச்சில்,

“சத்தியமா கடுப்பாகிடுவேன் ஆரா!” என்கின்ற அவன் சத்தத்தில் மீண்டும் கப்சிப் ஆராத்யா.

“எப்பவுமே தப்பு தப்பா தான் யோசிப்பியா?”

“இல்ல தர்ஷ் வருவாங்கனு நினச்சேன் வர்ல.. நீங்களும் பேசாம இருந்திங்களா.. அதான் ஒருவளை…” என்று சொல்லி முடிக்கும் முன்,

“நீ சித்தியா ப்ரோமோட் ஆகிட்ட அதான் தர்ஷ் வர்ல” என்றான் சட்டென்று.

“என்ன?” என்றவளுக்கு யோசிக்கவே முடியவில்லை. என்ன சொல்கின்றான் என சுத்தமாய் புரியாமல் அவள் விழிக்க,

“சுத்தம்! உனக்கு ஒவ்வொண்ணும் சொல்லி தரணும் போலயே!” என்று வாய்விட்டு சொல்லியவன்,

“மிஸ்ஸஸ் ஆராத்யா ரகுநாதன்! என் அண்ணா அகிக்கு பேபி வர போகுது.. நான் சித்தப்பான்னா நீங்க சித்தி தானே?” என்று தெளிவான அவன் சொல் கேட்டு, கண்களை விரித்து சிலையாய் நின்றவள் முகம் முழுதும் செவ்வானமாய் சிவந்தது அவனின் அழைப்போடு, அவன் கூறிய செய்தியும் கேட்டு.

“நிஜமாவா? ரொம்ப சந்தோஷம்..” என்றவளுக்கு சட்டென தன் சந்தோசத்தை பகிரும் வார்த்தைகள் பிடிபடவில்லை அவனிடம்.

“ம்ம்! இப்ப தான் ஹாஸ்பிடல் போய்ட்டு வந்தோம்!” என்றவன் அங்கு நடந்ததை சொல்லி முடித்து,

“ஓகே! இனி அவங்க டாபிக் ஓவர்! நம்ம டாபிக்கு வருவோம்!” என்று சொல்ல, சிறு புன்னகை ஆராத்யாவிற்கு.

“என்னவாம்? திடிர்னு ஆராத்யா பொண்ணுக்கு ரகுராமை கல்யாணம் பண்ணிக்க தோணி இருக்கு?” என்றவன் கேள்வியில் இவள் அப்படியே இருக்க,

“ஆனா நான் கூட ஒன்னு யோசிச்சேன்.. நீ என்னை தேடி வர எவ்வளவு அச்சிடேன்ட் வேணா நான் எடுத்துக்கலாம்னு” என்று சொல்லவும், மீண்டுமாய் அந்த வார்த்தைகள் அவளின் விழிகளுக்கு படமாய் விரிய,

“வேண்டாம் வேண்டாம்! வேண்டாம் ப்ளீஸ்! அப்படிலாம் சொல்லாதீங்க.. எனக்கு இங்க கை எல்லாம் நடுங்குது..” என்றவளின் நடுக்கம் அவளின் குரலே உணர்த்த, முதல்முதலாய் அவளாய் தன்னை நினைத்துப் பேசும் பேச்சில் இதழ் திறக்காமல் சிரித்துக் கொண்டவன்,

“ஓகே ரிலாக்ஸ்!” என்றான் மென்மையான குரலில்.

“நான் எதுக்காக ஸ்ருதிகிட்ட….” என்றவள் பேசும் முன்,

“நோ நோ! நோ ஆரா பொண்ணே! எனக்கு தெரிஞ்சுக்கணும் தான்.. ஆனா இப்ப இல்ல.. அதுக்கு ஒரு டைம் இருக்கு.. அப்ப சொல்லு நான் கேட்குறேன்!”

“என்ன டைம்?”

“சொல்லிடுவேன் ஆனா நீ வெட்கப்படுவ.. அதையும் நான் போன்ல பார்க்க முடியாதே!” என்றவன் பேச்சுக்கள் கேட்டு,

‘அச்சோ இவ்வளவு பேச்சா?’ என்று அவள் விழிக்க,

“மீட் பண்ணலாமா ஆரா!” என்றான் சட்டென்று நேராய்.

“ஹான்!”

“ஓய்! கேட்டுச்சு தான?”

“இல்ல! இப்ப எப்படி? அது.. நாளைக்கு ஸ்ருதி கிளம்புறா!”

“எனக்கு பாக்கணும்னு இருக்கு..” என்று சொல்ல, மனதெல்லாம் சொல்ல தெரியாத ஒரு சிணுங்கல் ஆராவிடம்.

“மணி ரெண்டு தானே ஆகுது? ஒரு சின்ன மீட்.. ப்ளீஸ் ப்ளீஸ்!” என்று கெஞ்சவே செய்ய,

“சார்….” என்றவளுக்கு அத்தனை சிரிப்போடு சிறு சங்கடமும் அவனில் இத்தனை நாட்கள் கேட்டிராத கெஞ்சலான குரலில்.

“ம்ம்ஹும்! சாரெல்லாம் இனி இல்ல.. கால் மீ ரகு!” என்று சொல்ல,

‘ராம்!’ என்றவள் அழைப்பு காற்றிற்கு மட்டுமே கேட்டிற்கும்.

********************

மேலே சென்ற ஒரு மணி நேரத்தில் முழங்கை வரை மடித்துவிட்ட சட்டையை மீண்டும் சரிபார்த்துக் கொண்டு பளபளக்கும் முகத்துடன் முன்னுச்சி சிகையை கைகளால் கோதியபடி பால்நிலாவின் வெளிச்சமாய் முகப் பொலிவுடன் படிகளை தாவி கடந்து வந்து இறுதிப் படிக்கு வந்தபின் தான் தர்ஷினி, அகிலன், கல்பனா என அங்கே அவனைப் பார்த்தபடி இருந்த மூவரையும் கண்டான் ரகு.

ஆராத்யாவை பேசி சம்மதிக்க வைத்து அடுத்த அரை மணி நேரத்தில் கீழே இறங்கி வர, நந்திகள் மொத்தமாய் இருப்பதாய் தான் தெரிந்தது அவன் கண்களுக்கு.

“போச்சு! இதுங்களா?” என்று முணுமுணுத்தவன் ஆனாலும் எதுவும் அறியாதவன் போல,

“ம்மா! ஆபீஸ் கிளம்புறேன்..” என்று சத்தமாய் சொல்ல,

“இவன் இறங்கி வந்தப்ப கூட கொஞ்சம் தான் சந்தேகம் இருந்தது.. கத்தி கூப்பாடு போட்டு அதுவும் ஆபீஸ் தான் போறேன்னு சொல்லும் போது தான் ஆபீஸ் இல்லாம எங்கேயோ போறான்னு எனக்கு சந்தேகம் வருது!” தர்ஷினி சொல்ல,

“நம்ம ஸ்டைல்லேயே கேட்டுடுவோமே!” என்று கல்பனா கண்ணடிக்க,

“இன்னுமா நீங்க அடங்கல? என்னவோ நல்ல நேரமா இருக்க போய் காலைல நீங்க பண்ணின அலப்பறைக்கு இது ஒரு குடும்பமான்னு ஓடாம இங்கேயே வாக்கப்பட அந்த பொண்ணு சம்மதம் சொல்லி இருக்கு.. எதையாவது பண்ணி வைக்காதிங்க!” என்ற அகிலன் பேச்சை காதில் வாங்கவில்லை இருவரும்.

“ஆபீஸ் போனுமா ரகு? மணி மூணாக போகுதே போக மாட்டியோன்னு நினச்சேன்.. மதியமே சரியா சாப்பிடல.. காபி எதாவது போடவா?” என அன்னை கேட்க,

“இல்லம்மா! நான் பார்த்துக்குறேன்!” என்றவன் மூவரையுமே பார்க்காமல் கிளம்பிவிட நினைக்க,

“வா தர்ஷி! நாம போய் ஆராவை பார்த்துட்டு வருவோம்!” என்று ஆரம்பித்து வைத்தாள் கல்பனா.

சட்டென கால்கள் நிற்க திரும்பிப் பார்த்தவன், “இப்ப எதுக்கு அங்க?” என்று கேட்க,

“உனக்கென்ன? நாங்க ஆராவை பார்த்து கல்பனா அண்ணி கன்சீவா இருக்கறதை சொல்லி பீசா வாங்கி சாப்பிட்டு செலிப்ரட் பண்ணுவோம்..!” என்று தர்ஷினி கூற,

“கூடவே கல்யாணப் பொண்ணுகிட்ட ட்ரீட் கேட்டு பில்லை அவளையே தர சொல்லுவோம்!” என்று அலப்பறையை ஆரம்பித்து வைக்க,

உடனே பதிலாய் எதுவும் சொல்லிவிட முடியாமல் பொய் சொல்லி கிளம்புவதில் முதல் முறையாய் ஒரு அவஸ்தை ரகுவிற்கு.

“நீ கிளம்பு! நாங்க பார்த்துக்குறோம்!”

“க்கா! அதான் நாளைக்கு ஃபன்க்சன் சொல்லி இருக்கு இல்ல.. அப்புறமா பார்த்துக்கலாம் இப்ப எதுக்கு அங்க போய்கிட்டு?” வாய்க்கு வந்ததை அவன் சொல்லி வைக்க,

“அப்ப நீ ஆபீஸ் தான் போற?” என்றாள் தர்ஷினி. மறைக்காமல் சொல்லிவிடு என்னும் முறைப்பு கூடுதலாய் அவளிடம்.

“வெளில போறவன்கிட்ட என்ன வம்பு உனக்கு? போய் உன் பொண்ணுகிட்ட கொஞ்ச நேரம் படு! உனக்கு ஜூஸ் தந்தேனே குடிச்சியா? அப்ப ரூம்ல போய் ரெஸ்ட் எடு.. இனி குழந்தை பொறக்குற வர நீ பேசவே கூடாது பார்த்துக்க!” என்று மகேஸ்வரி இருவரையும் சொல்லிவிட்டு,

“அகி அவளை உள்ள கூட்டிட்டு போ!” என்று அகிலனிடம் ஒப்படைத்துவிட்டு  சென்றுவிட,

“ஏய்! அவனை கிளம்ப விடுங்க ரெண்டு பேரும்.. கிளம்புற நேரத்துல தடுத்துகிட்டு..” என்ற அகிலனுக்கும் தம்பியின் நிலை புரிய அவனுக்கு உதவியாய் வந்தான்.

“தர்ஷி! போய் பாப்பாவை பாரு!” என்று விரட்ட,

“ஒரு நிமிஷம் அகி!” என்ற தர்ஷினி,

“ஆமா! மதியமே உன் கல்யாணம் உறுதி ஆகிட்டே! என் புருஷன்.. அதான் உன் மாமாக்கு போன் பண்ணி இப்படி இப்படி நடந்துச்சுன்னு சொன்னியா?” என்று கேட்க,

வாசலையும் மணியையும் பார்த்து கிளம்பும் அவசரத்தில் நின்ற ரகு அவள் கேள்வியில் தான் நியாபகம் வந்தவனாய் நெற்றியில் அடித்துக் கொண்டு அதே நிலையில் தர்ஷினி புறம் திரும்ப,

“இம்புட்டு தானா டா உங்க பாசம் எல்லாம்?” என்று தர்ஷினி சொல்லி செல்ல,

“க்கா! நிஜமா சாரி! ஆனாலும் இப்ப டைம் இல்ல நைட்டு சொல்லிடுறேன்!” என்று சொல்லியபடியே ஓடி காரை எடுத்துக் கொண்டு கேட் அருகே வந்து பார்க்க, இன்னும் ஆராத்யா கிளம்பி இருக்கவில்லை அவன் கூறிய இடத்திற்கு.

“தட்ஸ் குட் மை கேர்ள்!” சொல்லிக் கொண்டவன், அவளுக்கு முன் சென்று அவள் வரவைக் காண ஆவலாய் சென்றான்.

இருபது நிமிடங்கள் கடந்தும் ஆராத்யா வராமல் இருக்க, நிமிடங்கள் எல்லாம் நொடிகளாய் தெரிந்தது ரகுவிற்கு.

அன்று இரவு உணவிற்காக அவளை அழைத்து வந்திருந்த அதே இடத்தில் தான் இன்றும் காத்திருந்தான்.

இதோ வந்துவிட்டாள்! கதவை தள்ளிக் கொண்டு உள்ளே வந்தவள் ரகுவைப் பார்வையால் தேட, அவன் பார்வை முழுதும் அவளிடம் மட்டும் தான்.

டேபிளில் முழங்கையை ஊன்றி வலது கை அவனின் முகத்தை தாங்கி இருக்க, மற்றொரு கை டேபிளில் என்னவோ எழுதிக் கொண்டிருந்தது அவனும் அறியாமல்.

பார்வை மட்டும் நீலவண்ண சல்வாரில் தன்னைப் பார்த்துவிட்டு தூரமிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நெருங்கி வரும்  அவளிடம்.

ஏற்கனவே பார்த்து பிடித்தவள் தான் எனினும் இதோ அவளும் இனி தன்னை கவனிப்பாள் தானே என்ற எண்ணம்.. இன்னும் சில நாட்களில் தான் அவளின் கணவன் எனும் எண்ணம் என மனதுக்குள் அத்தனை எண்ணங்கள்.

புதிதாய் ஒரு புத்துணர்ச்சி மனதுள் அதிகமாய் ஊர்வலம் நடத்த, பார்வை கூட கொஞ்சம் உரிமையாய் அவளிடம் வலம்வர, கூடவே அவளின் சிவந்த முகமும் என நெஞ்சமெல்லாம் கொண்டாட்டமும் திண்டாட்டமும் ரகுவிற்கு.

‘ஷட்டப் ரகு! ஓஹ் காட் உன்கிட்ட ஆராவை கல்யாணம் வரை எப்படி காப்பாத்த?’ என்று அவனே அவனுக்கு கேள்வி கேட்டுக் கொண்ட தருணம் அது.

தூரத்தே தேடியவள் ரகுவைக் கண்டதும் சிறு புன்னகை கொண்டு அவன்புறம் நடந்து வரும் பொழுதே அவன் பார்வையை கண்டு முகம் செம்மையுற, அழகுக்கு அழகு சேர்த்தது அந்த வெட்கமும்.

“நேரமாச்சா?” என்றவள் அவனுக்கு எதிரில் டேபிள் அருகே அமர, கொஞ்சமும் அசராமல் எழுந்து வந்து அவளுக்கு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து  கொண்டதில் மனதுக்குள் ஒரு தடதடப்பு ஆராத்யாவிற்கு அவனிடம் இதை எதிர்பாராதவள்.

“அன்னைக்கு தள்ளி இருக்க வேண்டிய இடத்துல நான் இருந்தேன்.. இன்னைக்கு அப்படி இல்லையே!” என்று அதற்கு விளக்கமும் கொடுக்க,

அவன் பார்வையும் பேச்சும் என சுத்தமாய் அங்கே ரகுராம் என்ற எம்டியாய் இல்லாமல் ஆராத்யாவின் காதலை பெற, தன் காதலை உணர்த்தும் ஒரு இளைஞனாய் அவனை காண முடிந்தது.

“என்னாச்சு லேட்?” ரகு கேட்க,

“ஸ்ருதிகிட்ட சொல்லிட்டு வரணுமே?” என்றவளால் அவன் பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை.

“ம்ம் என்னனு?”

“நீங்க என்ன சொல்லிட்டு வந்திங்க?”

“நான் சொல்லல.. ஆனா கெஸ் பண்ணிருப்பாங்க.. நான் வெளில வரவும் ரெண்டு பேருமா ஆராவை பார்க்க போறோம்னு கிளம்பி என்னை கண்ணை கட்ட வச்சுட்டாங்க!” என்று சொல்ல ஆராத்யா சிரிக்கவும்,

“ஸ்ருதி கேட்கல?” என்றான் ரகு.

“ம்ம் கேட்டா.. ஆனா தர்ஷ் அளவுக்கு கிண்டல் பண்ண தெரியாது அவளுக்கு!”

“ஹ்ம்!” என்றவன் அவளை அமர சொல்லி இருவருக்குமாய் காபி வாங்கி வந்து அமர்ந்தவன் அவளருகில் ஒன்றை நகர்த்தினான்.

“தேங்க்ஸ் ஆரா!” ஒரு சிப் எடுத்துக் கொண்டவன் சொல்லவும் அவள் கேள்வியாய் பார்க்க,

“நிஜமா எக்ஸ்பெக்ட் பண்ணல.. அதுவும் மார்னிங் அக்கா ஒரு கேங் சேர்த்து இவ்வளவு பண்ணுவானும் நினைக்கல!”

“அதுக்காக மட்டும் நான் சம்மதம் சொல்லல..” எங்கே அவன் தவறாய் நினைத்துக் கொண்டானோ என வேகமாய் அவள் மறுக்க வர,

“தெரியும்! இந்த பேமிலியை உனக்கு புடிக்கும்.. அதானே?” என்றதற்கும்

“ம்ம்ஹும்! அதுவும் தான்..” என்று கூற,

“அப்ப வேற?” என்றவன்,

“பேமிலினு சொன்னதுல நானும் இருக்கேன்.. அப்ப என்னையும் பிடிக்கும் தானே?” என்று அவன் நேராய் எளிதாய் கேட்டுவிட, அப்படி சாதாரணமாய் எல்லாம் அவன்முன் அமர்ந்துவிட முடியவில்லை ஆராத்யாவிற்கு.

“தர்ஷ் சொன்னா.. பிடிக்கும்னா அது அப்படியே இருக்கட்டும்.. நாளைக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணின அப்புறம் பேசிக்கலாம் மத்ததெல்லாம்!” என்றவனின் குறுஞ்சிரிப்பு என்னவோ கதை சொல்ல, முகத்தை மறைக்கும் வழி தெரியாது கிளம்பிவிட்டால் என்ன என்று தான் தோன்றியது அவளுக்கு.

“ஆராத்யா!” என்று அழைத்தவனிடம் முகத்தை மறைக்க திரும்பி இருந்தவள் அவன் புறம் திரும்பி பின் அவன் பார்வை சென்ற பக்கம் பார்க்க, இருவரையும் தெரியும்படிக்கு முன்பக்க கேமராவை தனது அலைபேசியில் எடுத்து வைத்திருந்தவன், ‘ஸ்மைல்’ என்பதை போல ஆட்காட்டி விரலையும் பெருவிரலையும் விரித்து கேமராவிலேயே காட்ட ஆச்சர்யம் அதிர்ச்சி என அங்கே விழிவிரித்து தலைசாய்த்து பார்த்திருந்தவள் முகத்தில் சிறிது சிறிதாய் புன்னகை.

“ஃபர்ஸ்ட் மீட்… ஃபர்ஸ்ட் போட்டோ!” சொல்லிக் கொண்டவன் கையோடு அதை அவளுக்கும் அனுப்பி வைத்தான்.

ஃபர்ஸ்ட் மீட் என்றதில் முதல் முறை ரகுவோடு இங்கே வந்ததும் கூடவே பரமசிவத்தை பார்த்ததும் அவன் கூறிய வார்த்தைகளும் என நியாபகத்தில் வந்து மனம் மீண்டும் சஞ்சலம் புக,

“என்ன ஓடுது இங்க?” என்று தன் நெற்றியின் ஓரம் விரல் வைத்துக் காட்டியவன்,

“சொல்லிடு.. எதுவா இருந்தாலும் ஃபேஸ் பண்ணிக்கலாம்.. ஆனா ஒவ்வொரு நாளும் உன்னை கிட்ட வச்சுட்டு உன்கிட்ட எதையும் ஷேர் பண்ண முடியாம இருந்த பிளேஸ்க்கு எல்லாம் மறுபடியும் என்னால நினைச்சு கூட பார்க்க முடியாது..” என்று தலையை ஆட்டிக் கொண்டவன்,

“உன்கிட்ட சொல்லிடணும்னு தான் நினைப்பேன்.. என்னவோ ஒன்னு.. அதுவும் லாஸ்ட் டைம் இந்த ஆபீஸ் அவுட்டிங்ல நீ பேசின பாரு.. அங்க தான் முழுசா பயந்ததே! நானெல்லாம் சன்னியாசினு தான் நினச்சேன்!” என்றான் அவனே தன் மனம் திறந்து.

“நானா? நான் என்ன பேசினேன்?” என்றவளுக்கு சட்டென நினைவில் வரவில்லை.

“அதான்! உனக்கு வர போற ஹஸ்பண்ட் எப்படி இருக்கனும் எப்படி வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தியே! அது தான் நான் லாஸ்ட்டா வந்த அவுட்டிங்!” என்றதும் நியாபகம் வந்தவளுக்கு அவன் சொல்லியது அதிர்ச்சியும் கொடுக்க,

“அதுக்காகவா நீங்க அதுக்கப்பறம் ஆபீஸ் அவுட்டிங் எதுக்கும் வர்ல?” என்று அதிர்ச்சியை முகத்திலும் காண்பித்து கேட்க,

“பின்ன! இதே மாதிரி மனசுல இருக்கறதை சொல்றேன்னு நீ சொல்லிட்டு போய்டுவ.. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சுன்னா யாரு பாக்குறது?” என்றவன் பேச்சில் புன்னகை எல்லாம் வரவில்லை.

“நந்தா மாமா மட்டும் இல்லைனா நான் என்ன பண்ணிருப்பேன்னு எனக்கே தெரில! என்னால மாமாகிட்ட மட்டும் தான் சில விஷயங்களை ஷேர் பண்ண முடிஞ்சது.. நீ ஈசியா என்னைய வேண்டாம்னு சொல்லிட்ட.. உனக்கு போன் பண்ணி உன்னை திட்டினேனே.. அன்னைக்கு எல்லாம் மாமா மட்டும் தான் எனக்கு ஆறுதல்.. வேற யார் பேச்சையும் என்னால கேட்கவும் முடியல.. இந்த கோபம் வேற சட்டுசட்டுன்னு முன்னாடி வந்து நிக்கும் எனக்கு!” அவனை பற்றி அவனே சொல்லிக் கொண்டு இருக்க,

“நான் இப்ப வரைக்கும் அப்படி யாரும் இல்லாம தான் சரியா முடிவெடுக்க தெரியாம இருக்கேன் போல!” மனதில் தோன்றியதற்கு சட்டென வார்த்தை கொடுத்து வெளியில் ஆராத்யா சொல்லிவிட,

“ஆரா!” என்று கேள்வியாய் அவன் அழைத்தபின் தான் சுதாரித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!