Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 9 3

“என்ன கிருஷ்ணா சொல்ற? பவித்ராவை இங்க விட்டுட்டு போறியா?”

“ஆமா மா, அங்க வீட்ல ஒரே பிரச்சனை. பவித்ராவை தேவையில்லைன்னு தூக்கி எறிஞ்சிட்டாங்க. இவளும் போறேனு வந்துட்டா. அதான் இங்க கூட்டிட்டு வந்தேன். இனி அவ இங்க தான் இருப்பா. நீங்க தான் அவளை பாத்துக்கணும். செலவுக்கு பணம் அனுப்புறேன். அப்ப அப்ப வந்து பாத்துக்குறேன். எனக்கு வேற என்ன செய்யன்னு தெரியலை”, என்று சொல்லும் போதே குற்ற உணர்வில் அவர் கண்கள் கலங்கியது.



Advertisement

“சீ நீயெல்லாம் ஆம்பளையா? அவங்க சொன்னாங்கன்னு இவளை இங்க கொண்டு வந்து விடுற? இது பொம்பளைப் பிள்ளை வாழ்க்கை டா”

Advertisement

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க? இதுக்கு தான் ரெண்டாவது கல்யாணம் வேண்டாம்னு சொன்னேன். நீங்களும் குழந்தை குழந்தைன்னு என் பேச்சைக் கேக்கலை. இப்ப என்னை குறை சொன்னா ஆச்சா?”

Advertisement

“நாங்க செஞ்சது தப்பு தான். ஆனா நீ இவளுக்கு புருஷன் டா”

Advertisement

“வேற என்ன மா பண்ணுறது? அங்கேயே பவித்ராவை வச்சிருந்தா தினமும் எல்லாருக்கும் போராட்டம் தான். வேணும்னா சென்னைல இன்னொரு வீடு பாக்குறேன். அங்க பவித்ரா இருக்கட்டும். நீங்க அவளுக்கு துணையா வந்து இருங்க. நான் அப்ப அப்ப வந்து போறேன்”

“இப்படிச் சொல்ல உனக்கு வெக்கமா இல்லையா டா?”

“இருக்கு மா. இவ வாழ்க்கையை வீணாக்கிட்டோம்னு கவலையா இருக்கு. குற்ற உணர்ச்சி என்னைக் கொல்லுது. ஆனா சத்தியமாவே எனக்கு என்ன செய்யன்னு தெரியலை மா”

“டேய் பவித்ரா பாவம் டா. இப்ப அவளும் மாசமா இருக்கா டா”

“என்ன?”

“ஆமா, அவ குழந்தைக்கு என்ன பதில் சொல்லப் போற?”, என்று ஈஸ்வரி கேட்க தளர்ந்து போய் அமர்ந்தார் ராதாகிருஷ்ணன்.

மனைவியை தாய் வீட்டில் விட்டவருக்கு பிள்ளையை என்ன செய்ய என்று தெரிய வில்லை. தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்.

“அத்தை அவரை விடுங்க. அவரை நிறுத்தி தர்மசங்கடப் படுத்தாதீங்க? என்னை ஒண்ணும் அவர் அம்போன்னு விட்டுட்டு போகலையே? கவுரவமா மாமியார் வீட்ல தானே உக்கார வச்சிட்டு போறார். நீங்க என்னையும் உங்க பேரப் பிள்ளையையும் பாத்துக்க மாட்டீங்களா?”, என்று அவளுடைய காதலை நிரூபித்தாள் பவித்ரா.

அதற்கு மேல் ஈஸ்வரி எதுவும் பேச வில்லை. பவித்ரா ராதாகிருஷ்ணனைப் போகச் சொல்ல அவரும் கிளம்பி விட்டார். வீட்டுக்குச் செற்ற ராதாகிருஷ்ணனிடம் கோதை பவித்ராவைப் பற்றி விசாரிக்க எல்லாவற்றையும் சற்று எரிச்சலுடன் சொல்லி முடித்தவர் “இப்ப உனக்கு நிம்மதியா? உன் பாவம் உன்னை சும்மா விடாது? என்னையும் தான்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.

கணவரின் பாராமுகம் வருத்தம் தந்தாலும் பவித்ரா மீண்டும் தன்னுடைய வாழ்க்கையில் வந்து விடுவாளோ என்ற பயம் கோதைக்கு இருந்தது. ராதாகிருஷ்ணன் ஊருக்குச் சென்று அவளுடன் இருந்து கொள்வாரோ, திரும்பி வர மாட்டாரோ என்ற பயம் இருந்து கொண்டே தான் இருந்தது. ஆனால் பவித்ராவை அங்கே இருந்தும் விரட்டி கணவனின் கோபத்துக்கு ஆளாக அவள் விரும்ப வில்லை.

ஆனாலும் மாதத்தில் ஒரு நாள் கணவன் ஊருக்குச் செல்லும் போது பதட்டத்துடன் தான் இருப்பாள். அவர் ஊரில் இருந்து வந்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக இருக்கும். ஊருக்குச் செல்லும் ராதாகிருஷ்ணன் மனைவிக்கு தாய்க்கு எல்லாம் வாங்கிச் செல்வார். அதை பவித்ரா வாங்கிக் கொண்டாலும் அவரிடம் அதிகம் உரிமை கொண்டாட மாட்டாள்.

அவள் மனதில் இருக்கும் காதல் மேல் எழுந்து அவரை நெருங்கத் துடிக்கும். குழந்தை வயிற்றில் வளர்வதால் ஏற்படும் ஹார்மோன் மாற்றம் அவருடன் கூடிக் குலாவ ஏங்கும். ஆனால் அடக்கிக் கொண்டு ஒரு துறவி போல நிற்பாள். மருமகளை எண்ணி ஈஸ்வரிக்கே கண்கள் கலங்கும். இருவருக்கும் தனிமை கொடுத்து விட்டு அந்த மூதாட்டி விலகிச் சென்றாலும் இருவரும் தனித் தனியே நின்று தான் பேசுவார்கள்.

பவித்ராவின் கண்களில் இருக்கும் விலகலே ராதாகிருஷ்ணனை எட்ட நிறுத்தி விடும். அவள் மேலும் எழும் காதலும் அவள் அழகின் மீதும் எழும் ஆசையும் அவளை கேட்டாலும் ஒற்றைப் பார்வையில் தள்ளி நிறுத்தும் அவளை நெருங்காமல் விலகியே இருப்பார். மனதால் அடி பட்டவளை உடலாலும் வீழ்த்த அவர் முயல வில்லை.

ஒரு வழியாக நாட்கள் மாதங்களாக உருண்டோடியது. கோதைக்கு அருண் பிறந்தான். அடுத்த மாதத்தில் பவித்ராவுக்கு கண்மணி பிறந்தாள்.

பிள்ளைகள் வளர வளர ராதாகிருஷ்ணன் மற்றும் பவித்ரா இடையே இருந்த இடைவெளியும் வளர்ந்தது. மாதம் ஒரு முறை மனைவியைப் பார்க்கச் செல்லும் ராதாகிருஷ்ணன் இப்போதெல்லாம் அதையும் குறைத்துக் கொண்டார். ஏனோ பவித்ரா அவரைத் தள்ளி வைப்பது அவருக்கே ஏதோ அடுத்த வீட்டுக்கு செல்லும் உணர்வைக் கொடுத்தது. மகளைப் பார்க்க ஆசை இருந்தாலும் அதை மறந்து வேலையில் கவனம் செலுத்தினார்.

அருணுக்கு ராதாகிருஷ்ணனின் இன்னொரு குடும்பத்தைப் பற்றி சொல்லாமல் வளர்த்தார்கள் என்றால் கண்மணிக்கு எல்லாவற்றையும் சொல்லியே வளர்த்தாள் பவித்ரா.

“எந்த காலத்துலயும் நாம அங்க போகக் கூடாது. அவங்க வாழ்க்கைக்கு நாம இடையூறா இருக்க கூடாது. உனக்கு நான் எனக்கு நீ. நமக்கு பாட்டி அவ்வளவு தான்”, என்று சொல்லி சொல்லி தான் மகளை வளர்த்தாள்.

கண்மணி பள்ளிக்கு செல்லும் வரைக்கும் பவித்ராவால் குழந்தையை தந்தை நமக்கு இல்லை என்று சொல்லி தேற்ற முடிந்தது. ஆனால் பள்ளியில் சேர்த்ததும் கண்மணி குணம் கொஞ்சம் கொஞ்சமாக மாற ஆரம்பித்தது.

“அப்பாக்கு நீ ரெண்டாவது பொண்டாட்டியா மா? அப்பா நம்மளை வேண்டாம்னு சொல்லிட்டு தான் விட்டுட்டு போய்ட்டாறா மா? ஸ்கூல்ல எல்லாரும் சொல்றாங்க மா. எல்லாருக்கும் அப்பா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் மா அப்பா இல்லை”, என்று அவள் கேள்வி கேட்க பவித்ராவுக்கு அழுகையாக வந்தது. ராதாகிருஷ்ணனை அழைத்து இவர் தான் உன் தந்தை என்று அவளுக்கு காட்ட வேண்டும் போல இருந்தது.

தான் மகளுக்கு நியாயம் செய்ய வில்லை என்று புரிந்தது. தன்னுடைய நியாயங்களுக்கு கட்டுப் பட்டு கோதை வாழ்வில் இருந்து வந்து விட்டாள் தான். ஆனால் மகள்… அவள் என்ன பாவம் செய்தாள்? அவளுடைய வயிற்றில் பிறந்ததை தவிர? இதே ஊரில் இருந்தால் மகளின் வாழ்வு கேள்விக் குறியாகும் என்று புரிந்தது. ஒரு முடிவு எடுத்து மாமியாரைத் தேடிச் சென்றாள்.

“அத்தை”

“சொல்லு மா, ஏதாவது வேணுமா? கடைக்கு போய்ட்டு வரவா?”

“வேண்டாம் அத்தை. நான் உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”

“என்ன மா? முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு”

“அத்தை, நானும் என் மகளும் இந்த ஊரை விட்டு போகப் போறோம்”

“பவித்ரா”

“எனக்கு வேற வழி தெரியலை அத்தை. என் மகளோட வாழ்க்கையை காப்பாத்த எனக்கு வேற வழி தெரியலை. இங்கயே இருந்தா உங்க பிள்ளையோட நிழல் எங்களைத் துரத்தும். எங்களை யாருன்னே தெரியாத ஒரு ஊருக்கு போகப் போறோம். எனக்கு என் மகளோட எதிர் காலம் முக்கியம் அத்தை. இப்பவே அவ எல்லார்கிட்டயும் அவமானப் படுறா. பெரியவங்க நாம எல்லாம் தப்பு பண்ணிட்டு அந்த பிஞ்சை வதைக்கணுமா? நாங்க போறோம் அத்தை”

“நல்ல முடிவு தான் மா. நாம இங்க இருந்து போயிரலாம். எனக்கு இந்த ஊரும் வேண்டாம். என் மகனும் வேண்டாம். நான் உன் கூட கடைசி வரைக்கும் இருக்கேன் மா. எனக்கு ஒரு வாய் கஞ்சி ஊத்தி உன் கூட வச்சிக்கோ மா”

“வேண்டாம் அத்தை, நீங்க வர வேண்டாம். நீங்க எனக்கு அம்மாவா இருந்திருந்தா நான் உங்களைக் கூட்டிட்டு போயிருப்பேன். நீங்களும் முழுசா எனக்கு சொந்தம் இல்லை அத்தை. என்னைக்கு இருந்தாலும் அம்மான்னு சொல்லிட்டு அவர் உங்களைத் தேடி வருவார். அதுக்கு நீங்க இங்க இருக்கணும். பங்கு போடுற சொந்தம் எதுவும் எனக்கு வேண்டாம் அத்தை. எனக்கு என் மக இருக்கா. அவளுக்கு நான் இருக்கேன். அது போதும்”

“எங்க மா போவ? உனக்கு யாரைத் தெரியும்? உனக்கும் சின்ன வயசு. என் பேத்தியும் குழந்தை. இந்த உலகம் ரொம்ப ஆபத்தானது மா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!