Skip to content
Post Views: 5,895
“இது என்ன எனக்கு தெரியாத வேலையா? அதான் வாசுவையும் வரச் சொல்லிருக்கியே? அப்புறம் என்ன? நான் பாத்துக்குறேன். சரி நீ நாளைக்கு வந்துருவ தானே?”
“நாளான்னைக்கு தான் மா வருவேன்”
Advertisement
“என்னப்பா சொல்ற? ரெண்டு நாள் அங்க தங்கிருவியா?”
“இன்னைக்கு நைட் மட்டும் தங்கணும் மா. கொஞ்சம் பெரிய ஆர்டர். இன்னைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு நிச்சயதார்த்தமாம். ஆனா என்னை ரெண்டு மணிக்கே வரச் சொல்லிருக்காங்க. நிச்சயதார்த்ததை கவர் பண்ணனும். அப்புறம் இன்னைக்கு நைட் பெரிய ஹோட்டல்ல வச்சு ரிசப்ஷன் வச்சிருக்காங்களாம். நாளைக்கு காலைல ஆறு மணிக்கு முகூர்த்தம். நாளைக்கு சாயங்காலம் மறுவீடு. அப்புறம் பொண்ணு வீட்ல ஏதோ வரவேற்ப்பாம். எல்லாம் முடிஞ்சதும் நைட் பதினொரு மணிக்கு அங்க இருந்து கிளம்பிருவேன் மா. அதிகாலைல வந்து சேந்துருவேன். கருப்பட்டி பஸ் ஸ்டாண்ட் வருவான்”
Advertisement
Advertisement
“கண்டிப்பா வந்துருவ தானே? இல்லை உங்க அண்ணன் மாதிரி….”
“அம்மா… ஏன் மா இப்படி எல்லாம் பேசுற?”, என்று கேட்டான். அவனுக்கு கோபம் வந்தால் பார்வதியை வா போ என்று தான் அழைப்பான்.
Advertisement
மகன் கோபம் புரிந்ததும் “மன்னிச்சிரு பா? என்னோட பயம் அப்படி. ஞாயிற்றுக் கிழமை மதியை பொண்ணு பாக்க வராங்க. அண்ணனா நீ இங்க இருக்கணும். அதுக்கு தான் அப்படிச் சொல்லிட்டேன்”, என்றாள்.
“எனக்கு நினைவு இருக்கு மா. நான் தான் ஞாயிற்றுக் கிழமை காலைல வந்துருவேனே? மதியை பொண்ணு பாக்க மாப்பிள்ளை வீட்ல இருந்து சாயங்காலம் தானே வராங்க? அப்புறம் என்ன?”
“ஆமாப்பா, ஆனா எல்லா ஏற்பாடும் பண்ணனும்”
“கவலைப்படாதீங்க மா. நான் காலைல வந்துருவேன். வந்து எல்லாம் நான் பாத்துக்குறேன்”
“சரிப்பா, இந்த மூணு பிள்ளைகளையும் நீ ஒரு அதட்டல் போடக் கூடாதா? என் பேச்சைக் கேக்குறதே இல்லை?”
“என்ன செஞ்சாங்க மா?”
“இந்த செல்வியைப் பாரு, இன்னும் மூணு மாசத்துல பிள்ளையே பிறக்கப் போகுது? இன்னும் பொறுப்பில்லாம தூங்குறா. மதியும் அப்படி தான். இந்த சின்னக் கழுதை நிலா பன்னெண்டாப்பு படிக்குது. ஆனா புக்கையே தூக்க மாட்டிக்கு. எட்டரைக்கு ஸ்கூல்னா ஏழரைக்கு தான் எந்திக்கிறா”
“அம்மா செல்வி இப்ப பிரசவத்துக்காக நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. இப்ப அவ நல்லா ரெஸ்ட் எடுக்கணும். அவ வீட்ல அவ பொறுப்பா தானே இருக்குறா? மாப்பிள்ளை ஆகட்டும், அவ மாமனார், மாமியார், நாத்தனார்னு யாருமே அவ மேல இது வரைக்கும் ஒரு குறை சொல்லலை. நம்ம வீட்ல பிரீயா இருக்கட்டுமே மா? அப்புறம் மதி எல்லாரையும் விட ரொம்ப பொறுப்பானவ. நல்ல படியா டிகிரி முடிச்சிட்டு கவர்ன்மெண்ட் பரீட்சையும் நல்லா எழுந்திருக்கா. ரிசல்ட் வந்ததும் போஸ்டிங் போட்டுருவாங்க. அதுக்குள்ள நாம அவளுக்கு கல்யாணமும் பண்ணிருவோம். அது வரை தானே இவ்வளவு நேரம் தூங்க முடியும்? அவளைப் போய் என்ன சத்தம் போடச் சொல்றீங்க? அப்புறம் நிலா…..”
“அவ ரொம்ப அடம் பண்ணுறா”
“அவ சின்ன பொண்ணு மா. அப்படி தான் இருப்பா. நல்லா தான் படிக்கிறா. நல்ல மார்க் வாங்கிருவா மா. என் தங்கை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவ என்ன மார்க் எடுத்தாலும் அதுக்கு ஏத்தாப்ல உள்ள படிப்பைத் தான் படிக்க வைக்கப் போறோம்? அவ நிறைய மார்க் வாங்கி டாக்டர்க்கு படிக்க ஆசைப் படுறேன்னு சொன்னா நம்மளால அவளைப் படிக்க வைக்க முடியுமா?”, என்று கேட்டவனின் குரலில் தான் நினைத்ததை அடைய முடியவில்லையே என்ற ஏக்கம் இளையோடியது. அது அந்த தாய்க்கு புரிந்தது.
“இப்ப என்ன மூணு தங்கச்சிகளையும் கண்டிக்க மாட்ட? அப்படித் தானே சிவா?”
“கண்டிக்கிற மாதிரி அவங்க நடவடிக்கை இல்லை மா. நானும் அவங்களை ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களும் சொல்லக் கூடாது”
“சரி, உன் தங்கச்சிகளை நான் எதுவும் சொல்லலை. கருப்பட்டியும் உன் கூட வரானா பா?”
“இல்லை மா, உள்ளூர் விசேசம்னா அவனைக் கூட்டிட்டு போயிருவேன். ஆனா வெளியூர் போகனுமே? அவன் வந்துட்டா படுத்த படுக்கையா இருக்குற சுந்தரி அம்மாவை யார் பாத்துக்குவா? நம்ம வீட்ல நானும் இல்லாம அவனும் இல்லாம இருந்தா நல்லா இருக்காது. அது மட்டுமில்லாம நம்ம ஸ்டூடியோலயும் ஆள் இருக்கணும்ல? அங்கயும் வேலை நிறைய இருக்கு. நிறைய பேர் ஆல்பம் போட்டோன்னு வாங்க வருவாங்க. அதனால நான் மட்டும் தான் போறேன்”
“சரிப்பா, சாப்பாடு தங்க இடம் எல்லாம்…”
“மாப்பிள்ளையோட அப்பா எல்லாம் அரெஞ்ச் பண்ணி தறேன்னு சொல்லிட்டார் மா”
“இவ்வளவு பெரிய விசேசத்தை கவர் பண்ணணும்னா உன்னால தனியா முடியுமாப்பா? அங்க இங்க அசைய முடியாது”
“புரியுது மா. ஆனா வேற வழி இல்லை. இப்ப கஷ்டப் பட்டா பணம் கிடைக்கும் போது சந்தோஷமா இருக்கும் மா”
“எல்லாம் உங்க அப்பா நம்மளை விட்டுட்டு போனதால தானே? அவர் சாவுக்கு அந்த விளங்காதவன் தான் காரணம். அவன் எல்லாம் இருக்கானோ செத்தானோ தெரியலை”
“உங்க வாயால அண்ணனுக்கு சாபம் எதுவும் கொடுத்துறாதீங்க மா. அது பழிச்சிறப் போகுது. ஒண்ணு அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்னு நினைங்க. இல்லைனா ஒண்ணுமே நினைக்காதீங்க”
“மனசு கேக்கலைப்பா. மூணு தங்கச்சி, நீ, நான், எல்லாரும் அப்பா இல்லாம சிரமப் பட காரணம் அவன் தானே? அப்படியா அவன் காதல் அவன் கண்ணை மறைச்சிருச்சு. அவன் கூட போன அந்த ஒடுக்காளியும் நல்லா இருக்க மாட்டா”
“அம்மா, விடுங்க மா. இனி இப்படி பேசாதீங்க”
“என்னை மன்னிச்சிருப்பா. நீ கிளம்பும் போது தேவையில்லாம பேசுறேன்”
“உங்க மனக் கஷ்டம் எனக்கு புரியுது மா. உங்களையும் மூணு தங்கச்சிகளையும் நான் பாத்துக்குவேன். என்னை நம்புறீங்க தானே?”
“உன்னைத் தான் பா மலை போல நம்பிருக்கேன். நீ தான் என்னோட ஒரே நம்பிக்கை. செல்விக்கு நீ ஒண்டியா நின்னு சீர் செஞ்சு கல்யாணத்தை நடத்துன. அடுத்து மதிக்கும் நகை சேத்துட்ட. அடுத்து நிலாவையும் நீ தான் படிக்க வைக்கிற? உன் ஒருத்தன் உழைப்புல தான் பா நாங்க நிமிந்து நிக்குறோம்”
“நீங்களும் ஒண்ணும் சும்மா இல்லையே மா? நீங்களும் மதியும் சேந்து தான் நம்ம தோட்டத்தை பாத்துக்குறீங்க? நம்ம தோட்டத்துல விளையுற காய்கறிகளை வித்து நீங்க குடும்ப செலவைப் பாத்துகிறதுனால தான் என்னால தங்கச்சி கல்யாணத்துக்கு நகை சேக்க முடியுது. சரி மா, நான் கிளம்புறேன்”
“ஞாயிறு காலைல வந்துருப்பா”
“கண்டிப்பா வந்துருவேன் மா”, என்று சொல்லி விட்டுச் சென்றவனுக்கு தெரியவில்லை. சொன்ன நேரத்துக்கு அவனால் வர முடியாது என்று. அன்னையிடம் சொல்லி விட்டு நேராக அவன் ஸ்டூடியோவுக்கு வரும் போது கருப்பட்டி ஏற்கனவே கடையை திறந்து வைத்து சாமி புகைப்படத்துக்கு பூஜை எல்லாம் போட்டிருந்தான்.
“கிளம்பிட்டியா டா?”, என்று கேட்டான் கருப்பட்டி.
“ஆமா டா”, என்று சொல்லி அவனிடம் சில வேலைகளைச் சொல்லிக் கொண்டிருந்தவன் கேமரா, மற்ற பொருள்கள் என அனைத்தையும் எடுத்து வைத்துக் கொண்டு அந்த திருமணத்துக்கு கிளம்பி விட்டான்.
நேராக பஸ் ஸ்டாண்ட் சென்று மதுரை போகும் பேருந்தில் ஜன்னல் ஓர சீட்டில் அமர்ந்து கொண்டான். பஸ் கிளம்பியதும் அவனும் ஹெட்செட்டைக் காதில் மாட்டிக் கொண்டு அவனுக்கு விருப்பமான பாடல்களை ஓட விட்டான். இளையராஜா பாடல்களும், முகத்தில் மோதிய தென்றலும் சேர்ந்து கொள்ள சந்தோஷமாக வெளியே தெரியும் காட்சிகளைப் பார்த்தவாறே அவன் பயணம் ஆரம்பித்தது. அந்த திருமணத்தில் அவன் எதிர் பார்க்காத பல நிகழ்வுகள் நடக்கும் என்று அவன் அப்போது அறிய வில்லை.
தோட்டம் வைத்து பெரிய பெரிய வீடுகளைக் கட்டிக் கொண்டு அதில் சந்தோஷமாக இருக்க முடியாமல் பணத்தை தேடி அலையும் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி. கிராமத்தில் இருப்பது போல ஒட்டி ஒட்டி இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிதாக இருந்தன வீடுகள்.
‘உமா இல்லம்’ என்று பெயர் போட்டிருந்த அந்த பெரிய பங்களா அங்கிருந்த மற்ற வீடுகளை விட பெரியதாக கம்பீரமாக வீற்றிருந்தது. அந்த வீடு தோட்டத்துடன் சேர்த்து கிட்டத்தட்ட ஐந்து ஏக்கராவது இருக்கும். மிக உயரமான கம்பவுண்ட் சுவர் கட்டப் பட்டு தனி கம்பீரத்துடன் நின்றது.
error: Content is protected !!