Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 1 4

நடுவில் பெரிய அளவிலான வீடும், சுற்றிலும் தோட்டமும், வீட்டின் ஒரு பக்கத்தில் மிக அழகாக அமைந்த நீச்சல் குளமும் அழகாக தான் இருந்தது. குளத்தின் அருகே ஒரு டீப்பாய் போடப் பட்டு அதைச் சுற்றி நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. இன்னும் கொஞ்சம் தள்ளி இருந்த பெரிய மாமரத்தில் ஒரு பெரிய மர ஊஞ்சல் கட்டப் பட்டிருந்தது.

வீட்டைக் கட்டினவன் நிச்சயம் ரசிகனாகத் தான் இருக்கும் என்று அந்த வீட்டைப் பார்த்தாலே தோன்றும். தோட்டத்தில் ஆங்காங்கே இரும்பு கம்பம் வைத்து அதன் முனையில் நியான் விளக்குகள் பொருத்தப் பட்டிருந்தன. வீட்டைச் சுற்றி இருந்த தோட்டத்தில் பல பழ மரங்கள், அழகாக செதுக்கப்பட்ட புல்வெளிகள், அழகான மலர்கள் என பார்ப்பவரின் கண்ணைப் பறித்தது. வெளியே இப்படி என்றால் வீட்டினுள் இன்னும் பிரம்மாண்டம் தான்.



Advertisement

இப்போது அந்த வீட்டுக்கு சொந்தக்காரர்கள் ராதாகிருஷ்ணன் மற்றும் கோதை தான். ராதாகிருஷ்ணன் கட்டுமானத் துறையில் கொடி கட்டிப் பறப்பவர். அவர் இந்த வீட்டுக்கு சொந்தக்காரராக இப்போது இருந்தாலும் அந்த வீட்டைக் கட்டியது கோதையின் தந்தை தான்.

கோதைக்கு உடன் பிறந்தவர்கள் இல்லை என்பதால் அவளுடைய தந்தையின் சொத்து, தொழில் என அனைத்தும் மருமகனுக்கு வந்தது.

Advertisement

Advertisement

ராதாகிருஷ்ணன் ஒரு சாதாரண சிவில் இஞ்சினியராக தான் கோதையின் தந்தை நடத்திக் கொண்டிருந்த கம்பெனியில் பணியில் சேர்ந்தார். அவர் உழைப்பு, நியாயம் பிடித்துப் போனதால் மகளை அவருக்கு மணம் முடித்து வைத்தார். அவர்கள் போன பிறகு மொத்த தொழில்களும் ராதாகிருஷ்ணனுக்கு வந்தது.

ராதாகிருஷ்ணன் கோதை தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள்.  மூத்தவன் அருண் தந்தையைப் போலவே சிவில் இஞ்சினியரிங் முடித்து விட்டு தந்தையுடன் சேர்ந்து அவர்கள் அலுவலகத்திலே வேலை செய்கிறான்.

Advertisement

அருணுக்கு அடுத்து பிறந்தவள் உமா. அந்த வீட்டின் இளவரசி. அவளுக்கு வயது இருபத்தி நான்கு. எலுமிச்சையும் மஞ்சளும் கலந்த நிறம், அடர்ந்த நீளமான கூந்தல், தன்னுடைய பேச்சால் செயலால் அனைவரையும் கவரும் செல்ல ராட்சசி. ராதாகிருஷ்ணனுக்கு இருக்கும் நல்ல பண்புகள் அனைத்தும் அவளிடம் இருந்தாலும் கோதையிடம் இருக்கும் மமதையும் திமிரும் கூட அவளிடம் உண்டு.

படிப்பில் மட்டும் அல்லாமல் மற்ற எல்லாவற்றிலும் கை தேர்ந்தவள். அவளது கலகலப்பும் சுட்டித்தனமும் மற்றவர்கள் ரசிக்கும் படி இருக்கும். சிலரை காயப் படுத்தவும் செய்யும். காயம் பட்டவர்கள் இது வரை அவளிடம் வந்து சொல்லியதில்லை என்பதால் அது அவளுக்கு தெரியாமலே போனது. பாட்டு, நடனம் என்று எல்லாவற்றிலும் கலந்து கொண்டு ஜெயிக்கவும் செய்வாள்.

கணினி பொறியியலில் முதுகலைப் பட்டம் முடித்திருக்கிறாள். ராதாகிருஷ்ணனுக்கு மகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவளுக்கும் தந்தை என்றால் உயிர். அவரிடம் இருந்து வரும் ஒரு கடுஞ்சொல்லைக் கூட தாங்க மாட்டாள்.

ராதாகிருஷ்ணன் மற்றும் கோதை இருவரும் பிள்ளைகளை திருமணம் செய்ய வற்புறுத்த அருணோ “உமாவுக்கு முடிஞ்ச பிறகு தான் எனக்கு”, என்கிறான்.

ஆனால் அவளோ கொஞ்ச நாள் போகட்டும், கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லி நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறாள். உமா மகேஸ்வரி என்பது தான் அவளது முழுப் பெயர். கோதையின் தாய் பெயர் அது தான் என்பதால் பாட்டியின் பெயர் பேத்திக்கு வைக்கப் பட்டிருக்கிறது.

அதே போல ராதாகிருஷ்ணனின் தந்தையின் பெயர் அருணகிரி. அவர் நினைவாக மகனுக்கு அருண் என்று பெயர் வைத்திருந்தார்கள். பணம் செழிக்கும் அவர்கள் குடும்பத்தில் பெண் கொடுக்க, பெண் எடுக்க அனைவரும் வரிசையில் நிற்கிறார்கள். பல இளைஞர்கள் இப்போது வரை உமாவின் கடைக்கண் பார்வைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால் அவள் இது வரை யாரையும் திரும்பிப் பார்த்ததில்லை. அவள் பார்க்கும் அனைத்து ஆண்களும் அவளிடம் வழிவதால் கூட அவளுக்கு அவர்கள் மேல் விருப்பம் வர வில்லையோ என்னவோ?

உலகில் உள்ள அழகையும் பணத்தையும் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்திருந்த அந்த இளவரசி காலை எட்டு மணி ஆகியும் இன்னும் இழுத்து மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள். சூரிய ஒளி முகத்தில் பட்டாலும் கூட அவள் எழுந்து கொள்ளவே இல்லை. அப்போது அவளது ஐபோன் நான் இருக்கிறேன் என்று குரல் கொடுத்தது.

“மொச்சக் கொட்ட பல்லழகி, முத்து முத்து சொல்லழகி…..”, என்ற பாடல் அதிர அதை எடுத்து காதில் வைத்தவள் “சொல்லு டி”, என்றாள்.

“ஹலோ மேடம், இன்னும் எந்திக்கவே இல்லையா? நீ எப்ப எந்திச்சு குளிச்சி கிளம்பி வரது? மவளே சரியான நேரத்துக்கு வந்து சேரலை கொன்னுறுவோம் கொன்னு”, என்று அந்த பக்கம் பொரிந்தாள் அவளது தோழி நிஷா.

“ஏன் டி காலைலே தாலாட்டு பாடுற?”, என்று அரைத் தூக்கத்தில் கேட்டாள் உமா.

“தாலாட்டு பாடுறேனா? திட்டிட்டு இருக்கேன் டி. மணி எட்டு ஆகிருச்சு”

“ஐயோ எட்டு ஆகிருச்சா? சரி சரி வை. நான் வந்துருவேன். இனி தான் அப்பா கிட்ட பெர்மிசனே வாங்கணும்”, என்று சொல்ல அந்த பக்கம் நிஷா கத்துவதைக் கேட்க பொறுமை இல்லாமல் போனைக் கட் செய்து விட்டு அவசர அவசரமாக குளிக்கச் சென்றாள்.

குளித்து முடித்து ஒரு டீஷர்ட் பேண்ட் என வீட்டுக்கு அணியும் உடையை அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள்.

ராதாகிருஷ்ணன் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்க “குட் மார்னிங் பா”, என்ற படி அவர் அருகில் அமர்ந்தாள்.

“குட் மார்னிங் டா குட்டி. அடடே சீக்கிரம் எந்திரிச்சு குளிச்சிட்டியே?”, என்று அவர் மகளைப் பரிவாக பார்க்க அவளோ தந்தைக்கு ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். இருவரும் தனி உலகத்தில் இருந்தார்கள். அப்பா மகள் இருவரும் அவர்கள் அருகில் இருந்த கோதையை கவனிக்கவே இல்லை. கோதைக்கு அவர்களைக் கண்டு புசுபுசுவென்று கோபம் வந்தது.

“நானும் இங்க தான் இருக்கேன்”, என்று மகளை முறைத்த படி சொன்னாள் கோதை.

“யார் இல்லைன்னா? பாப்பாவுக்கு டிபன் வை”, என்றார் ராதாகிருஷ்ணன்.

“இவ பாப்பாவா?”, என்று கோதை கேட்க அன்னையை முறைத்துப் பார்த்தாள் உமா.

“அப்பா, என்னை பாப்பான்னு சொன்னா உனக்கு ஏன் எரியுது மா? ஒழுங்கா டிபன் எடுத்து வை”, என்று பதிலுக்கு அன்னையிடம் வாயாடினாள் உமா.

“என்ன டி திமிரா? நான் என்ன உனக்கு வேலைக்காரியா?”

“காலைலே ஆரம்பிச்சிட்டியா? உனக்கு என்ன தான் மா பிரச்சனை? சும்மா சும்மா என்னை வம்பு பண்ணிட்டு இருக்க?”, என்று சலிப்புடன் கேட்டாள் உமா.

“அதானே? கோதை இப்ப எதுக்கு பிள்ளையை காலையிலே மூட் அவுட் பண்ணுற?”, என்று கேட்டார் ராதாகிருஷ்ணன்.

“ஆமா நான் தான் அவளை மூடவுட் பண்ணுறேன்? நான் இங்க தானே இருக்கேன்? பின்ன உங்களுக்கு சொன்ன குட் மார்னிங்கை என் கிட்ட சொன்னா தான் என்னவாம்?”, என்று கோதை கேட்க “அம்மா, இது தான் உன் கோபமா? அப்பாவைப் பாத்ததும் எனக்கு என்னையே மறந்துருது. இதுல உன்னை எப்படி கண்டுக்குவேன்?”, என்று சிரிப்புடன் கேட்டாள் மகள்.

“அதான் டி எனக்கு புரிய மாட்டிக்குது? நான் உனக்கு அம்மா தானே? எப்பவாது அம்மா எனக்கு இது வேணும் அது வேணும்னு கேட்டுருக்கியா? எதுக்கு எடுத்தாலும் அப்பா தான். வயசுக்கு வந்ததை கூட இவர் சொல்லி தான் எனக்கே தெரிஞ்சது? இதெல்லாம் பாக்க ஒரு அம்மாவா எனக்கு எப்படி இருக்கு தெரியுமா?”, என்று கவலையுடன் கேட்டாள் கோதை.

“கோதை, சின்ன வயசுல இருந்து அவ என் கிட்ட குளோசா இருக்கா. அதான் என் கிட்ட எல்லாம் சொல்றா. இது என்ன பெரிய விஷயமா?”, என்று மகளுக்காக பரிந்து வந்தார் ராதாகிருஷ்ணன்.

“நீங்க தான் இதுக்கு காரணம்”, என்று கோதை கணவனைத் திட்ட “அப்பா ஒண்ணும் இதுக்கு காரணம் இல்லை. நீயும் உன் கூட எப்பவும் ஒட்டிட்டு திரியும் உன் அருமை புத்திரனும் தான் இதுக்கு காரணம். சின்ன வயசுல இருந்து அம்மா அம்மான்னு உன் முந்தானையை பிடிச்சிட்டே திரியுவான். எங்க அம்மா எங்க அம்மான்னு சொல்லி என்னையே துரத்துவான். நீயும் அவனைத் தான் தூக்கி வச்சிட்டு சுத்துவ? அதனால நான் அப்பா கிட்ட ஒட்டிக்கிட்டேன். இல்லைப்பா”, என்று கேட்டாள் உமா.

“ஆமா டா”, என்று சொல்லி ராதாகிருஷ்ணன் மகள் தலையை வருடிக் கொடுக்க “என்ன ஆமா டா?”, என்று கோதை கணவனை முறைத்த படி கேட்டாள்.

“அவ உண்மையை தானே சொல்றா கோதை. நீ அருண் கூட ரொம்ப குளோஸ். இப்ப வரைக்கும் அவன் சூக்கு கூட நீ தான் பாலிஷ் போடுற? இப்ப நான் சாப்பிடுற மெனு கூட அவனுக்கு பிடிச்சது தான். உனக்கு அவன் தான் இப்ப வரை ஸ்பெஷல். அதை தான் உமா சொல்றா”, என்றார் ராதாகிருஷ்ணன்.

“காலைலே இங்க என்ன கலாட்டா? என் தலை வேற உருளுது”,. என்று சட்டைக் கைக்கு பட்டன் போட்ட படி அங்கு வந்தான் அருண். இப்போது கோதையின் பார்வை பாசத்துடன் அருணை வருடியது.

அதைப் பார்த்த உமா “என்னமோ சொன்ன? இப்ப உன் கண்ணு அவனை எப்படி பாசமா பாக்குது பார்? இதுல என்னை குறைச் சொல்ல வந்துட்ட?”, என்று அன்னையைச் சுட்டிக் காட்டினாள்.

“என்ன பிரச்சனை உமா உனக்கு?”, என்று கேட்ட படி தந்தைக்கு மறுபுறம் அமர்ந்தான் அருண். அவன் கேட்காமலே அவனுக்கு தட்டு வைத்து பரிமாறினாள் கோதை.

“எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. எல்லாம் உன் அம்மாவுக்கு தான் பிரச்சனை. நான் அவங்களைக் கண்டுக்காம அப்பா கூடவே ஒட்டிக்கிறேன்னு அவங்களுக்கு பொறாமை அண்ணா. ஆனா பாரு அவங்க தான் உன்னை ஒரு விதமாவும் என்னை ஒரு விதமாவும் டிரீட் பண்ணுறாங்க”, என்று சொன்னாள் உமா.

“அப்படியா? ஏன் அப்படிச் சொல்ற?”, என்று குழப்பமாக கேட்டான் அருண்.

காதல் தொடரும்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!