Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 14 2

அவர்கள் இங்கே பேசிக் கொண்டிருக்க அப்போது அவர்கள் வீட்டுக் காரே அங்கே வந்து விட்டது. அனைவரும் கருப்பட்டி வீட்டு வாசலுக்கு சென்றார்கள்.

கண்மணி சந்தோஷமாக காரில் இருந்து இறங்கி வேகமாக வந்தாள். “பாத்து மா”, என்று ராதாகிருஷ்ணன் சொல்லும் போதே ஓடி வந்து பார்வதியைக் கட்டிக் கொண்டாள். அதைப் போல சுந்தரியிடம் நலம் விசாரித்தாள்.



Advertisement

“கண்மணி இங்க இருக்க தான் விருப்ப படுறா. இந்த நேரத்துல அவ சந்தோஷம் தான் முக்கியம். அதான் விட்டுட்டு போகலாம்னு வந்தோம்”, என்றாள் கோதை.

“சரி சரி உள்ள வாங்க”, என்று கருப்பட்டி வீட்டுக்குள் வரச் சொல்லி அவர்களை வரவேற்றாள் பார்வதி. சுந்தரியும் வரச் சொல்ல அவர்கள் உள்ளே வந்து அமர்ந்தார்கள். கண்மணியும் கருப்பட்டியின் மனைவியாக அந்த வீட்டுக்குள் அடி எடுத்து வைத்தாள்.

Advertisement

Advertisement

கோதைக்கு கண்மணியின் சந்தோசத்தைக் கண்டு வியப்பாக இருந்தது. அவ்வளவு பெரிய வீட்டில் உம்மென்று இருந்தவள் இந்த சின்ன வீட்டில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பது விந்தையாக தான் இருந்தது.

பார்வதி அனைவருக்கும் டீ போட்டுக் கொடுக்க மறுக்காமல் குடித்தார்கள். “நாங்க கண்மணியை விட்டுட்டு போறதுக்கு மட்டும் வரலை. உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு தான் வந்தோம்”, என்று ஆரம்பித்தார் ராதாகிருஷ்ணன்.

Advertisement

சிவாவும் கருப்பட்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். “என்ன விஷயம்ங்க?”, என்று கேட்டாள் பார்வதி.

“இல்லை, எங்க மகனுக்கு உங்க பொண்ணைக் கேட்டு வந்துருக்கோம்”, என்று கோதை சொல்ல அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.

“இது என்ன டா புதுக் குழப்பம்?”, என்று கேட்டான் கருப்பட்டி. “எனக்கும் ஒண்ணும் புரியலை டா. பொறு என்ன பேசுறாங்கன்னு பாப்போம்”, என்றான் சிவன்.

“மதியை எங்களுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஆஃபிஸ்ல அவ வந்த பிறகு எங்களுக்கு பாதி வேலை குறைஞ்ச மாதிரி இருக்கு. அறிவும் அழகும் அவளுக்கு இருக்கு. எங்க அருணுக்கு பொருத்தமா இருப்பா. நீங்க என்ன சொல்றீங்க?”, என்று கேட்டாள் கோதை.

“இல்லை, நாங்க உங்க அளவுக்கு வசதி இல்லை”, என்று மறுத்தாள் பார்வதி.

“வசதில என்ன இருக்கு? பிள்ளைங்க சந்தோஷம் தானே முக்கியம்? எங்க அருணை உங்களுக்கும் உங்க பொண்ணுக்கும் பிடிச்சிருந்தா மேற்கொண்டு பேசலாம்”, என்றார் ராதாகிருஷ்ணன்.

“சிவா நீ என்ன டா சொல்ற?”, என்று கேட்டாள் பார்வதி.

“நாம முடிவு பண்ணுறது முக்கியம் இல்லை. மதிக்கு பிடிக்கணும். நான் மதி கிட்ட கேக்குறேன் மா”, என்று சொன்னவன் வீட்டை விட்டு வெளியே வந்து மதிக்கு அழைத்தான்.

அதை எடுத்து “சொல்லுண்ணா”, என்றாள்.

“கண்மணியோட அண்ணன் அருணுக்கு உன்னை பொண்ணு கேக்குறாங்க மா. நாங்க என்ன சொல்லட்டும்?”, என்று அவன் கேட்டதும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“என்னண்ணா சொல்ற?”, என்று குழப்பமாக கேட்டாள் மதி.

“ஆமா மா, அருண் அங்க இருக்காரா?”

“ஆமா அண்ணா, அவங்க ரூம்ல வொர்க் பண்ணிட்டு இருக்காங்க”

“உன் கிட்ட எதுவும் இதைப் பத்தி பேசினாங்களா?”

“இல்லையேண்ணா? அவர் பார்வைல கூட அப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு எனக்கு தெரியாது”

“அப்படின்னா கண்மணியை அவங்க கூட கடைசி வரை தக்க வைக்க தான் அவங்க அம்மா அப்பா இப்படி யோசிக்கிறாங்கன்னு நினைக்கிறேன்”

“எனக்கு புரியலைண்ணா”

“கண்மணிக்கு அங்க இருக்க புடிக்கலையாம் மா. அதனால அவளை இப்ப அழைச்சிட்டு இங்க வந்துட்டாங்க. எங்க கண்மணியை இழந்துருவோம்னு பயந்து நம்ம குடும்பத்து கூட சம்பந்தம் பண்ண நினைக்கிறாங்க போல. காரணம் என்னவேனாலும் இருக்கட்டும். உன்னையும் அவங்க பிடிச்சு தான் கேக்குறாங்க. அம்மா முகத்துல சந்தோஷம் தான் தெரியுது. எனக்கும் பையன் நல்லவனா இருக்கான்னு தோணுது.  நல்ல குடும்பம். சரின்னு படுது. ஆனா உன்னோட சம்மதம் தான் முக்கியம். உனக்கு என்ன தோணுதோ சொல்லு”

“அவர் என் கிட்ட வந்து காதல் அது இதுன்னு சொல்லிருந்தா நான் சம்மதிச்சிருக்க மாட்டேன் அண்ணா. ஆனா நீயும் அம்மாவும் சரின்னு சொல்றதுனால எனக்கும் சம்மதம் தான்”

“அவரை உனக்கு பிடிச்சிருக்கா மதி?”

“பிடிச்சிருக்குன்னு சொல்றதை விட பிடிக்கலைன்னு சொல்றதுக்கு காரணம் ஒண்ணும் இல்லைண்ணா”

“நல்லா பேசக் கத்துகிட்ட மதி?”

“பின்ன யார் தங்கச்சி நானு? இது கூட பேசலைன்னா எப்படி?”

“ஹா ஹா, சரி அவங்க கிட்ட சம்மதம்னு சொல்லிறட்டுமா?”

“சரிண்ணா”, என்று சொல்லும் போது அவள் குரலிலும் சிறு வெட்கம் தெரிந்தது.

உள்ளே வந்து அம்மாவைப் பார்த்து “நம்ம விருப்பம் தான் அவ விருப்பமும்னு சொல்லிட்டா மா. எனக்கு சம்மதம். நீங்க பேசுங்க”, என்றான் சிவன்.

பார்வதி சம்மதம் சொன்னதும் திருமணம் மற்றும் நிச்சயதார்த்த தேதியை குறித்து விட்டே அவர்கள் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள் .

இங்கே அலுவலகத்தில் ஒரு பைலில் கையெழுத்து வாங்க வேண்டி தயக்கத்துடன் அருண் அறைக்குச் சென்றாள் மதி. இது வரை அவள் மனதில் எதுவும் இல்லை. ஆனால் இப்போது அவனைப் பார்ப்பதே சிறு குறுகுறுப்பைத் தந்தது.

திருமண பேச்சு வார்த்தை பற்றி அவன் ஏதாவது சொல்வான் என்று அவள் எதிர் பார்க்க அவனோ வேலையில் மட்டுமே குறியாக இருந்தான்.

“இவனுக்கு கல்யாண விஷயம் பேசினது தெரியாது போல? அவங்க அப்பா அம்மாவே பேசிட்டாங்க. இவங்க விஷயம் தெரிஞ்சா சம்மதம்னு சொல்லுவாங்களா?”, என்ற குழப்பத்துடன் தன்னுடைய இருக்கைக்குச் சென்றாள்.

அவள் போன பின்பு தனக்குள் சிரித்துக் கொண்டான் அருண். அவள் முன்பு சாதாரணமாக இருப்பது போல நடிப்பதற்குள் வெகுவாக திணறிப் போனான்.

அவளை அவனுக்கு மிகவும் பிடிக்கும் தான். அவள் அவனுக்கு வேண்டும். அவளிடம் காதல் என்று சொல்லி அவளை மொத்தமாக இழக்க அவன் தயாராக இல்லை. அதனால் தான் பெற்றவர்கள் மூலம் காய் நகர்த்தினான். அது மட்டும் அல்ல அவன் திருமண வாழ்வில் அவனுடைய தங்கையின் வாழ்வும் அடங்கி இருக்கிறதே?

மதியை திருமணம் செய்து உமாவின் வாழ்வை சீர் செய்ய முயன்றான். இது மதிக்கு தெரிந்தால்…?

வீட்டுக்கு வந்ததும் அருண் மற்றும் உமா இருவரிடமும் மதி மற்றும் அருணின் திருமண விஷயம் பற்றிச் சொல்லப் பட்டது.

“மதி நல்ல பொண்ணு தான். அண்ணாவுக்கு பொருத்தமா இருப்பா. ஆனா திடீர்னு ஏன் பா இந்த விஷயம் பேசுனீங்க?”, என்று குழப்பமாக கேட்டாள் உமா.

“நாங்க எங்க திடீர்னு பேசினோம்? உங்க அண்ணா தான் பொண்ணு கேக்க சொன்னான்? எப்படியோ அவன் கல்யாணம் பண்ண சம்மதிச்சதே எங்களுக்கு போதும். நீயும் கல்யாணத்துக்கு சம்மதிச்சா ரொம்ப சந்தோஷப் படுவோம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் ராதாகிருஷ்ணன். கோதையும் அவர் பின்னே சென்று விட்டாள்.

பெற்றோர் போனதும் அண்ணனை சந்தேகமாக பார்த்தாள் உமா. அவள் பார்வையில் “என்ன உமா?”, என்று கேட்டான்.

“திடீர்னு ஏன் இப்படி பண்ணின அண்ணா? எனக்காகவா மதியைக் கல்யாணம் பண்ணணும்னு நினைச்ச?”

“உனக்காக உயிரைக் கொடுப்பேன் உமா. அதே நேரம் உயிரை எடுக்கவும் செய்வேன். ஆனா என் வாழ்க்கையை எல்லாம் விட்டுக் கொடுக்க மாட்டேன். எனக்கு மதியைப் பிடிச்சிருக்கு, அதான் அப்பா கிட்ட சொன்னேன். ரொம்ப சிம்பிளா இருக்கா. அதுவே இம்ப்ரஸ் பண்ணிருச்சு”, என்று அவளிடம் சொன்னவன் “மதியை வச்சு உன்னோட வாழ்க்கையையும் சரி பண்ணுவேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.

அவன் பதில் திருப்தியைத் தர உண்மையிலே அவர்கள் திருமணத்துக்கு சந்தோசத்துடன் வாழ்த்துச் சொன்னாள் உமா.

கருப்பட்டி வீட்டில் சுந்தரியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் கண்மணிக்கு கருப்பட்டியைப் பார்க்க சிறிது சங்கடமாக தான் இருந்தது. ஆனாலும் “இது தான் உன் வீடு, இனி நீ இங்க தான் இருக்கணும். உன் கணவனையும் மாமியாரையும் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்”, என்று அவள் உள்மனது குரல் கொடுக்க அதற்கு பிறகு தான் கொஞ்சம் இயல்பாக இருந்தாள்.

என்ன தான் அவள் இயல்பாக அங்கே பொருந்திக் கொண்டாலும் கருப்பட்டியுடன் ஒரே அறையில் இருப்பது கொஞ்சம் சங்கடத்தைக் கொடுத்தது.

ஆனால் கருப்பட்டி அவளை கட்டிலில் படுக்கச் சொல்லி விட்டு தரையில் படுத்துக் கொண்டான். அவளுடன் இயல்பாக பேசினான். அவளும் தன்னுடைய கூட்டில் இருந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

கண்மணி இங்கே வந்த பிறகும் பார்வதி தான் அனைவருக்கும் உணவை சமைத்து எடுத்து வந்தாள். சுந்தரியிடம் தான் சமையல் செய்யவா என்று கேட்டாள் கண்மணி. ஆனால் குழந்தை பிறக்கும் வரை பார்வதியே செய்யட்டும் என்று சொல்லி விட்டதால் கண்மணிக்கு ரெஸ்ட் தான்.

சுந்தரியை கண்மணி நன்கு பார்த்துக் கொண்டாலும் ஒரு நாள் கருப்பட்டியின் உடையை துவைக்கும் போது அவள் தயங்க, அவள் கைகளில் இருந்து அவன் உடையை மட்டும் அல்ல அவளது உடையையும் வாங்கி அவனே துவைத்துப் போட்டான். இப்படியே ஒரு வாரம் கடந்திருந்தது.

அன்று ஏனென்றே தெரியாமல் சோர்வாக இருந்தது கண்மணிக்கு. கட்டிலில் படுத்திருந்தாள். அவளின் தலைப் பக்கமாக வந்து நின்ற கருப்பட்டி “என்ன ஆச்சு கண்மணி? உடம்பு சரியில்லையா? முகம் எல்லாம் வாட்டமா இருக்கு? ஆஸ்பத்திரிக்கு போவோமா?”, என்று கேட்டான்.

“அதெல்லாம் வேண்டாம்”, என்ற படி எழுந்து அமர்ந்தவள் காலை கீழே தொங்கப் போட அவள் கால்கள் இரண்டும் வீங்கி இருந்தது.

“இது என்ன கால் இப்படி வீங்கி இருக்கு?”

“தெரியலை. ரொம்ப வலிக்கிற மாதிரி இருக்கு”

“இரு அம்மா கிட்ட கேட்டுட்டு வரேன்”, என்று சொன்னவன் சுந்தரியிடம் கேட்க “இப்ப அப்படி தான் டா இருக்கும். வெண்ணி வச்சு அதுல கொஞ்சம் நேரம் காலை வைக்கணும். வெண்ணி வச்சு அவ கால்ல ஒத்தடம் கொடுக்கணும். மதியை வரச் சொல்லு”, என்றாள் சுந்தரி.

“மதி வேலைக்கு போயிட்டா மா. நான் செய்றேன்”, என்று சொன்னவன் வெந்நீர் வைத்து எடுத்துக் கொண்டு அவர்களின் அறைக்குச் சென்றான். சிறு சிரிப்புடன் மகன் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் சுந்தரி.

காதல் தொடரும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!