Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 3 1

அத்தியாயம்

ஆயுதமேந்தி வரும்

போர்வீரனைப் போல தான்

உந்தன் விழிகளும்!!!



Advertisement

போனை எடுத்து யாரென்று கேட்டதும் “சிவா”, என்று ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது. “ஒரு வேளை அவளா இருக்குமோ? ஆனா அவ வாய்ஸ் மாதிரி இல்லையே?”, என்று எண்ணிக் கொண்டு “சிவா தான் பேசுறேன். நீங்க யாரு?”, என்று கேட்டான்.

Advertisement

“நான் கண்மணி”, என்று அந்த பக்கம் சொன்னதும் அவன் புருவம் உயர்ந்தது.

Advertisement

“கண்மணியா? அப்படி யாரையுமே எனக்கு தெரியாதே”, என்று குழப்பமாக கேட்டான்.

Advertisement

“நான் இளவரசன் மனைவி”, என்று அந்த பக்கம் சொல்ல ஒரு நொடி அதிர்ந்து போனான். அவன் இதயமே ஒரு நொடி நின்று துடித்தது போல இருந்தது. சட்டென்று சிவனுக்கு அடுத்து என்ன பேச என்று கூட தெரிய வில்லை.

“லைன்ல இருக்கியா சிவா?”, என்று அந்த பக்கம் பதறுவது புரிந்தது.

“இருக்கேன், சொல்லுங்க”, என்று தயக்கத்துடன் கேட்டான்.

“நீ கொஞ்சம் திருப்பூர் வரைக்கும் வரியா”

“நானா? திருப்பூர்க்கா?”

“ஆமா பிளீஸ், நீ வரணும்”

“என்னால முடியாது. நான் இப்ப ஊருக்கு கிளம்பிட்டு இருக்கேன். நான் கட்டாயம் நாளைக்கு ஊர்ல இருக்கணும்”

“பிளீஸ் சிவா, புரிஞ்சிக்கோ. என்ன வேலையா இருந்தாலும் நீ இங்க வந்து தான் ஆகணும். இது உங்க அண்ணாவோட கடைசி ஆசை”, என்று கண்மணி சொல்ல “என்னது? என்ன சொல்றீங்க நீங்க?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான்.

“ஆமா சிவா. இப்ப இளா ஐ.சி.யுல இருக்கான். பிழைக்கிறது கஷ்டம்னு டாக்டர் சொல்றாங்க. அவன் உன்னைப் பாக்கணும்னு சொல்றான். நீ வர வரைக்கும் அவன் உயிர் இருக்குமான்னு கூட தெரியலை. பிளீஸ் வாயேன்”, என்று அவள் குரல் கெஞ்சியது.

அதற்கு மேல் அவன் எப்படி மறுப்பானாம்? “நான் கிளம்பிட்டேன். ஹாஸ்பிட்டல் அட்ரஸ் மட்டும் அனுப்பி வைங்க”, என்று சொன்னவன் போனை வைத்து விட்டு ஒரு நொடி யோசித்தான்.

பின் பஸ்ஸில் சென்றால் வெகுநேரம் ஆகும் என்பதால் ஒரு கார் பிடிக்க முடிவு செய்தான். அப்போது தான் அவனது பர்சை அவள் எடுத்துச் சென்றதே நினைவில் வந்தது.

அந்த நிமிடத்தில் அவள் மீது எழுந்த வெறுப்புக்கு அளவே இல்லை. தன்னை இப்படி ஒரு சூழ்நிலையில் நிறுத்தி விட்டாளே என்று எண்ணி அவளைக் கொன்று போடும் அளவுக்கு ஆத்திரம் வந்தது.

அப்போது ரஞ்சித்தின் தந்தை அவன் அருகில் வந்தார். “கிளம்பிட்டியா பா?”

“ஆமா சார். ஆல்பம் ஒரு பத்து நாள்ல தந்துறேன்”

“பொறுமையா பண்ணுப்பா. அழகா இருந்தா போதும். அப்புறம் ரஞ்சித் சென்னைல தான் வேலை பாக்குறான். மகனும் மருமகளும் அங்க குவாட்ரஸ்ல தான் தங்கப் போறாங்க. அதனால அவனே நேரம் கிடைக்கும் போது வந்து வாங்கிக்குவான்”

“சரிங்க சார்”, என்று சொல்லும் போதே அவன் முகம் ஒரு மாதிரி இருப்பதைக் கவனித்து விட்டு “என்ன ஆச்சு தம்பி?”, என்று கேட்டார்.

“ஒண்ணும் இல்லை சார்”

“ஊருக்கு கிளம்பலையா பா?”

“போகணும் சார், ஆனா…”

“தயங்காம சொல்லுப்பா”

“சார் வந்து…. பர்சை மிஸ் பண்ணிட்டேன். என்னோட பணம் கார்ட் எல்லாமே அதுல தான் இருக்கு. என்ன செய்யன்னு தெரியலை. நீங்க கொடுத்த பாதி பேமண்ட் கூட அதுல தான் இருக்கு”, என்று சொன்னவன் அந்த நேரத்திலும் அவளை போட்டுக் கொடுக்க வில்லை. அது அவளுக்கு பிரச்சனை வரக் கூடாது என்று இல்லை. கல்யாணப் பெண்ணின் தோழி தான் பர்சை எடுத்து விட்டாள் என்று சொன்னால் இந்த பெரிய மனிதன் கல்யாணப் பெண்ணைத் தவறாக எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் அப்படிச் சொன்னான்.

“இருப்பா, நான் தரேன். அப்புறம் ஆல்பம் வாங்கும் போது சரி பண்ணிக்கலாம். எப்படியும் நான் உனக்கு தரணும் தானே?”, என்று சொன்னவர் ஒரு இரண்டாயிரம் பணத்தை அவன் கையில் கொடுத்தார்.

மதுரையில் இருந்து திருப்பூர்க்கு காரில் செல்ல இது போதும் தான். ஆனால் திரும்பி வரும் போது? என்ற பெரிய கேள்வி அவனுக்குள் எழுந்தது.

அவன் முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாரோ “இந்தாப்பா இதையும் வச்சிக்கோ”, என்று சொல்லி கூட மூவாயிரம் கொடுத்தார்.

“ரொம்ப நன்றி சார், நான் ஆல்பம் கொடுக்கும் போது குறைச்சிக்கிறேன்”

“சரிப்பா, போயிட்டு வா”

“சார், இங்க ஏதாவது ஒரு கார் ரெடி பண்ண முடியுமா? திருப்பூர் போகணும். அண்ணாக்கு சீரியஸா இருக்காம்”

“அப்படியா? இந்த நேரத்துல எங்கன்னு காரைத் தேடுறது? நீ ஒண்ணு பண்ணு. நம்ம காரை எடுத்துட்டு போ. நான் டிரைவரை அனுப்புறேன். இங்க இனி கார் தேவையில்லை பா”, என்று அவர் சொல்ல தன்னுடைய இரு கரம் கூப்பி விட்டான்.

இது எவ்வளவு பெரிய உதவி என்று அவருக்கு தெரியாது. ஆனால் அவனுக்கு தெரியுமே?

“மணி இங்க வாப்பா”, என்று தன்னுடைய டிரைவரை அழைத்தார்.

“என்னங்க ஐயா?”

“இந்த தம்பி எனக்கு வேண்டியவர். இவரை திருப்பூர்ல விட்டுட்டு வந்துரு”

“சரிங்க ஐயா”

“இந்தா இதுல பெட்ரோல் போட்டுக்கோ”, என்று சொல்லி அவன் கையில் தனியே பணம் கொடுத்து அவன் காதில் எதையோ சொன்னதும் அவனும் காரை எடுக்கச் சென்றான்.

மீண்டும் அவருக்கு நன்றி சொல்லி விட்டு காரில் ஏறி அமர்ந்தான். அவன் முகம் பார்த்த மணி எதுவும் பேசாமல் காரை ஓட்டினான். சில நேரம் அடுத்தவர்களை மௌனமாக இருக்க விடுவது கூட நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி தான்.

சிறிது தூரம் சென்றதுமே வீட்டில் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. கிளம்பி விட்டானா என்று கேட்க தான் அன்னை அழைக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. ஆனால் போனை எடுத்து என்ன பதில் சொல்வானாம்?

தன் வரவை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் தாயிடம் என்ன சொல்ல முடியும்? நான் இன்னும் கிளம்ப வில்லை என்றா? நாளைக்கு மதியை பெண் பார்க்கும் நிகழ்வு நடக்க போவதில்லை என்றா? உன் மூத்த மகன் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறான் என்றா? இது எதையுமே அவனால் பார்வதியிடம் சொல்ல முடியாது. அதனால் போனை எடுக்காமலே தவிர்த்தான்.

அண்ணன் போன் எடுக்க வில்லை என்றதும் மதி முகம் சுருங்கிப் போனது. “என்ன ஆச்சு மதி? சிவா போனை எடுத்தானா இல்லையா?”, என்று கேட்டாள் பார்வதி.

இரவு பத்து மணிக்கு மேல் ஆகியும் இன்னும் சிவன் கிளம்பி விட்டேன் என்று தகவல் சொல்லாததால் பார்வதிக்கு கொஞ்சம் பதட்டம் வந்தது.

“அம்மா, அண்ணா போனை எடுக்கலை மா. அங்க இருந்து இன்னும் கிளம்பலையோ என்னவோ?”, என்று மதி சொன்னதும் பார்வதி முகமும் சுருங்கியது.

“என்ன பையன் இவன்? இப்படி பொறுப்பில்லாம இருக்கான். நாளைக்கு காலைல அவன் இங்க இருக்கணும். அப்ப தான் உன்னோட நிச்சயதார்த்ததுக்கு எல்லா ஏற்பாடும் பண்ண முடியும். இந்த நேரம் கண்டிப்பா கிளம்பிருவேன்னு சொன்னானே?”

“சும்மா அண்ணனைத் திட்டாத மா. அதுக்கு என்ன பிரச்சனையோ?”, என்று அண்ணனுக்கு பரிந்து பேசினாள் மதி.

“எனக்கு புரியுது டி. ஆனா என் பயம் உனக்கு புரியாது. நாளைக்கு உன்னை பொண்ணு பாக்க வரும் போது அவன் இங்க இருக்கணும். வரவங்களுக்கு ஒரு குறையும் வைக்க கூடாதுள்ள? மாப்பிள்ளை கவர்ன்மெண்ட் வேலை பாக்குறார். என்னால இந்த சம்பந்தத்தை விட முடியாது மதி”

“அம்மா அதெல்லாம் அண்ணன் பாத்துக்கும். அதுக்கு தெரியாதா என்ன? கண்டிப்பா வந்துரும். ஒரு வேளை அண்ணனால இங்க வர முடியாம போய் பொண்ணு பாக்க வரவங்க வராம இருந்தா கூட நான் அண்ணனைத் திட்ட மாட்டேன். உன்னையும் திட்ட விட மாட்டேன். ஏன்னா என்னோட அண்ணனைப் பத்தி எனக்கு தெரியும்”

“வாய் வைக்காத டி கழுத. திருப்பியும் ஒரு தடவை அவனைக் கூப்பிடு”, என்றதும் மீண்டும் அழைத்தாள் மதி.

அப்போதும் அவன் எடுக்க வில்லை என்றதும் “அண்ணாவே பண்ணும் மதிக்கா. நீ திருப்பி திருப்பி கூப்பிட்டு அண்ணாவை டென்ஷன் பண்ணாத”, என்றாள் வெண்ணிலா.

“இந்த அண்ணனும் தான் ஏன் இப்படி பண்ணனும்? கிளம்பிட்டேன்னு இல்லைன்னா கிளம்ப போறேன்னு ஒரு தகவல் சொல்ல வேண்டியது தானே? தங்கச்சியை பொண்ணு பாக்க வரது எவ்வளவு முக்கியமான விஷயம். அதுல இப்படி பொறுப்பு இல்லாம இருந்தா எப்படி? அண்ணா இப்பவே இப்படி இருந்தா நாளைக்கு பொண்டாட்டின்னு ஒருத்தி வந்தா நம்ம யாரையுமே கண்டுக்காது போல மா? அதனால அண்ணா கிட்ட நீ தெளிவா பேசிரு மா. என் நாத்தனாவை அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சா ரெண்டு குடும்பமும் ஒண்ணா ஆகிரும்”, என்று நேரம் பார்த்து அன்னையிடம் ஓதினாள் செல்வி.

“எப்படி டி அண்ணனை இப்படி பேச உனக்கு வாய் வருது? உன் கல்யாணத்தை எப்படி எந்த குறையும் இல்லாம நடத்துச்சு? அந்த நன்றியே உனக்கு இருக்காதுல்ல? இதுல அந்த கோனை மூக்கு கோகிலாவை எங்க அண்ணனுக்கு கட்டனுமா? உன் நாத்தனார் உறவை எல்லாம் உன் கூடவே வச்சிக்கோ. அண்ணன் இருக்குற அழகுக்கு ரதியாட்டம் இருக்குற பொண்ணைத் தான் கல்யாணம் பண்ணி வைக்கணும்”, என்றாள் மதி.

செல்வியின் நாத்தனார் அழகாக தான் இருப்பாள். ஆனாலும் மதிக்கு அவளுடைய அண்ணன் தான் அழகு.

“ஆமா, அண்ணி அவ்வளவு அழகா இருக்கணும். உன் நாத்தனார் எல்லாம் அண்ணனுக்கு தங்கச்சி மாதிரி தான் இருக்கும்”, என்றாள் வெண்ணிலா.

“பாருமா இவளுங்களை, எப்படி சொல்றாங்கன்னு?”, என்று அன்னையிடம் தங்கைகளைப் போட்டுக் கொடுத்தாள் செல்வி.

“செல்வி, நீ வாயும் வயிறுமா இருக்குற? தலைச்சன் புள்ளை வேற. தேவையில்லாம எதையும் யோசிக்காத. போய் படு போ”, என்று பார்வதி சொல்ல தங்கைகளை முறைத்த படி சென்றாள் செல்வி.

“நீங்க ரெண்டு பேரும் போய்ப் படுங்க டி”, என்று பார்வதி சொன்னதும் வேறு வழியில்லாமல் அவர்களும் சென்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!