Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அந்தி சாயும் நேரம்

அந்தி சாயும் நேரம் 8 3

ஏன் இப்படி என்று எண்ணினான். உயிரை விடும் அளவுக்கு வாழ்வை வெறுத்து இப்படி இருக்கும் அவளைக் கண்டு அவனுக்கு பரிதாபமாக இருந்தது. இந்த சூழ்நிலையை எப்படி கையாள்வது என்று கூட அவனுக்கு தெரிய வில்லை. இது எல்லாம் உன்னால் தான் என்று அவன் மனசாட்சி அவனைக் குற்றம் சாட்டியது.

அவள் செய்த தவறுக்கு பல முறை அவனிடம் மன்னிப்பு கேட்டு விட்டாள் தான். அப்படி இருந்தும் அவன் ஏன் அவள் மீது கோபமாக இருந்தான்? அது கண்மணியால் மட்டும் தான். அவளுக்கு சரியான அங்கீகாரக் கிடைக்காததால் வந்த கோபம் என்று அவனுக்கு புரிந்தது.



Advertisement

அதே நேரம் அவள் தந்தை செய்த தவறுக்கு அவள் என்ன செய்வாள் என்ற அவனின் மனசாட்சி கேள்வி எழுப்பியது. கூடவே காதல் என்று வந்து சொன்னவளை அவமானப் படுத்தியதை நினைத்து அவனுக்கே அவன் மேல் வெறுப்பு வந்தது.

Advertisement

அவனால் சத்தியமாக உமா இப்படி ஒரு முடிவு எடுப்பாள் என்று நம்பக் கூட முடிய வில்லை. அவனது தந்தை இறக்கும் போது கூட அவன் அன்னை தங்கைக்காக தைரியமாக தான் இருந்தான். அவன் அண்ணன் இறக்கும் போது கூட அவன் குடும்பத்துக்காக தைரியமாக இருந்தான்.

Advertisement

ஆனால் உமாவின் அப்பழுக்கில்லாத காதல் அவனை மொத்தமாக புரட்டிப் போட்டிருந்தது. ஒரு புறம் அவள் மீது கோபமாகவும் வந்தது. அப்படி என்ன வாழ்க்கையையே வெறுக்கும் அளவுக்கான காதல்? யாரென்றே தெரியாத ஒருத்தனுக்காக இந்த அளவுக்கு போவாளா அவள் என்ற கோபம் வந்தது.

Advertisement

மரணத்தை முத்தமிடும் அளவுக்கா அவன் மீது காதலை வைத்திருக்கிறாள் என்று குழப்பமும் வந்தது.

“அவளுக்கு எதுவும் ஆகக் கூடாது”, என்று அவன் உள்ளம் பதறியது.

அவன் பார்வை படுக்கையில் கிழிந்த நாராக கிடந்த உமாவின் மீதே நிலைத்தது. எழுமிச்சை நிறத்தில் குண்டு குண்டு கண்களுடன் இருந்தவளோ இப்போது எலும்பும் தோலுமாக இருந்தாள். அவள் கண்களில் கருவளையம் விழுந்து பார்க்கவே பரிதாபமான தோற்றம்.

அப்போது கண்மணி நினைவு வர உமாவை ஒரு முறை கண்களால் அளவிட்டவன் அங்கிருந்து சென்றான். அமைதியாக கண்மணி அருகே சென்று அமர்ந்து விட்டான்.

“என்ன ஆச்சு சிவா?”, என்று அவள் கேட்ட போது கூட “ஒன்றும் இல்லை”, என்று சமாளித்தான். ஆனால் அவன் மனம் மட்டும் உமாவின் பக்கம் மொத்தமாக சாய்ந்து விட்டது.

மருத்துவமனை விட்டு வெளியேறிய சிவனுக்கு மனதுக்குள் இனம் புரியாத பாரம் ஏறி அமர்ந்து கொண்டது. வாடி வதங்கிய தளிர் கொடி போல கிடந்த அவள் பின்பம் அவன் கண்ணை விட்டு மறைய மறுத்தது.

அவளது கோலம் கண்டு அவன் மனதே நீ அவளுக்கு நியாயம் செய்ய வில்லை என்று அவனைக் கடிந்து கொண்டது.

தனக்காக ஒருத்தி இந்த அளவுக்கு உருகிப் போயிருக்கிறாள்? அவள் காதலை மறுப்பதா? என்ற மிகப் பெரிய கேள்வி எழுந்தது. அதே நேரம் அவள் தன்னால் தான் வாழ்க்கையை வெறுத்தாளா? இல்லை அவளது தந்தையின் இன்னொரு குடும்பம் பற்றி தெரிந்தது காரணமா என்று குழம்பினான்.

இதற்கு பதில் அவள் தான் சொல்ல வேண்டும். அவள் இனி ஒரு தடவை வந்து காதல் என்று சொன்னால் போதும் அவளை உயிருக்குள் வைத்து தாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டான். ஆனால் அவன் அறிய வில்லை அவள் மனது அவன் பேச்சால் அதிகம் பாதிப்படைந்திருக்கிறது என்று. மறுபடியும் அவள் வந்து எப்படி அவனிடம் காதலைச் சொல்வாள்?

ஆனாலும் தான் அவளை வேண்டாம் என்று சொன்ன போது அவள் கண்களில் இருந்த வலி அவன் மனதை விட்டு நீங்க மறுத்தது.

அவளிடம் சென்று எதனால் இப்படி செய்தாய் என்று கேட்க வேண்டும் போல இருந்தது. ஆனால் அதைச் செய்ய அவனுக்கு தைரியம் இல்லை.

உமா கண் விழிக்கும் போது அவளது மொத்தக் குடும்பமும் அங்கே தான் இருந்தது. யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கண்களை மூடி படுத்திருந்தாள். மூடிய கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

அவள் மேல் உயிரையே வைத்திருக்கும் மூவரையும் அவளால் நிமிர்ந்து பார்க்க முடிய வில்லை. எதனால் இப்படி செய்தோம் என்று தெரியாமல் அவளே குழம்பிப் போனாள்.

“உனக்கு அறிவே இல்லையா? உன்னை வேண்டாம்னு சொன்னவனுக்காகவா இந்த அளவுக்கு போன?”, என்று அவள் மனசாட்சி அவளிடம் கேள்வி கேட்டது. சிவனை நினைத்தா தந்தையை நினைத்தா என்று அவளுக்கே தெரிய வில்லை.

உமா மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. இப்போதும் அறைக்குள்ளே தான் வாசம் செய்கிறாள். ஆனால் மூன்று வேளையும் கோதை கொடுக்கும் உணவை உண்கிறாள். அவள் உண்டு முடிக்கும் வரைக்கும் ராதாகிருஷ்ணன் மகள் அருகிலே தான் இருந்தார். அவளிடம் என்ன காரணம் என்று கேட்டு யாரும் அவளைக் காயப் படுத்த வில்லை.

பழைய படி உமா உண்ண நினைத்தாலும் இத்தனை நாளில் சுருங்கிய அவளது குடல் இப்போது அதிக அளவு உணவை ஏற்றுக் கொள்வதில்லை. தோழிகள் வேறு அவளைக் காண வந்து அவளிடம் பேசி பதில் கிடைக்காது ஏமாந்து போனார்கள். அவர்களிடம் உமா எப்படி சொல்வாள் அவள் காதல் தோற்ற கதையையும், அவளது தந்தையைப் பற்றியும்?

தந்தை தந்தை என்று உயிரை விடும் தங்கை இப்போது தந்தையை வெறுத்து ஒதுக்குவது ஏன் என்று அருணுக்கு கூட புரியவே இல்லை. இத்தனைக்கும் அவர் ஒன்றும் அவளுடைய காதலுக்கு மறுப்பு சொல்ல வில்லையே? அது கூட இல்லாமல் அவள் அவளுடைய காதலையும் ஒத்துக் கொள்ள வில்லையே? மொத்தத்தில் மண்டை காய்ந்து போய் தொழிலில் கவனம் செலுத்தினான். அதில் வெற்றியும் கண்டான்.

அப்படி இருக்க உமாவின் நிலையைக் கேள்விப் பட்ட சதாசிவம் உமா தன்னை வந்து பார்த்ததையும் அவள் கேள்வியையும் சொல்ல அதிர்ந்து போனார் ராதாகிருஷ்ணன்.

மகளுக்கு இப்படி ஒரு உண்மை தெரியும் என்று அவர் கனவில் கூட நினைக்க வில்லை. அதே நேரம் தவறு செய்த தன்னிடம் எதையும் கேட்காமல் மகள் அவளையே தண்டித்துக் கொண்டது அவருக்கு வியப்பாக இருந்தது. இந்த விஷயம் தெரிந்ததில் இருந்து மகள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் குற்ற உணர்ச்சியில் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன்.

கூடவே அவரின் இன்னொரு மனைவி பவித்ரா நினைவும் வந்தது. என்ன தான் சந்தர்ப்பவசம் என்றாலும் தான் ஒரு பெண்ணுக்கு செய்த கொடுமை அவரை கூறு போட்டது.

இப்போது அவர் அறைக்குள் முடங்கிக் கிடக்க “என்னங்க ஆச்சு உங்களுக்கு?”, என்று கேட்டாள் கோதை.

“இப்ப உனக்கு சந்தோஷமா? என்னோட பொண்ணு என்னை சுத்தமா வெறுத்துட்டா. என்னை அப்பானு கூப்பிடுறதைக் கூட அசிங்கமா நினைக்கிறா. உனக்கு அது தானே வேணும்? சந்தோஷமா இரு”

“இப்படிச் சொன்னா என்ன அர்த்தம்ங்க? நான் என்ன செஞ்சேன்?”

“பவித்ரா பத்தி உமாவுக்கு எல்லாம் தெரிஞ்சிருச்சு”

“என்னது?”

“ஆமா, அதான் அவ அப்படி இருக்குறா. நான் என் பொண்ணுக்கு நல்ல அப்பாவா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா மோசமான அப்பாவா இருக்கேன். இது எல்லாம் உன்னால தான்”, என்று மனைவியை குற்றம் சாட்டும் பார்வை பார்க்க அவளோ அவர் பார்வையை எதிர்க் கொள்ள முடியாமல் அங்கிருந்து சென்று விட்டாள்.

மூன்று நாட்களுக்கு மேல் குற்ற உணர்வைத் தாங்க முடியாமல் இன்று மகளிடம் பேச வேண்டும் என்று முடிவு எடுத்தவர் “கோதை, இங்க வா. அருண் நீயும் வா. நான் பாப்பா கிட்ட பேசப் போறேன். எல்லா உண்மையும் சொல்லப் போறேன். அதுக்கு நீங்களும் என் கூட இருக்கணும்”, என்றார்.

அருண் அவரைக் குழப்பமாக பார்க்க “வேண்டாங்க”, என்றாள் கோதை.

“ஏன் வேண்டாம்? எதுக்கு வேண்டாம்னு கேக்குறேன்? என்ன குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்குதோ?”, என்று அவர் கேட்க கோதை தலை குனிந்தாள்.

“என்ன தான் நடக்குது இங்க? எனக்கு ஒண்ணுமே புரியலை? நீங்க ரெண்டு பேரும் பேசுறதும் புரியலை. அவ ஏன் இப்படி இருக்கான்னும் எனக்கு புரியலை. இப்பாவது சொல்லுங்க. இல்லை என் மண்டையே வெடிச்சிரும்”, என்று கத்தினான் அருண்.

“வா சொல்றேன்”, என்று சொன்ன ராதாகிருஷ்ணன் மகளின் அறைக்கு சென்றார். அருணும் கோதையும் அவர் பின்னே சென்றார்கள்.

காலை நீட்டி கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்த உமா அவர்களை கேள்வியாகப் பார்த்தாள். “இப்ப எப்படி பாப்பா இருக்க?”, என்று கேட்ட ராதாகிருஷ்ணன் அவளுடைய காலைப் பற்றிய படி அமர அவள் காலை மடக்கி கொண்டு சம்மணம் போட்டு அமர்ந்தாள். அருண் மற்றும் கோதை இருவரும் கட்டிலின் அந்த பக்கம் அமர்ந்தார்கள்.

உமா அமைதியாக இருந்தாள். “உனக்கு என்ன மா தெரியணும்? என் கிட்ட கேளு. நான் உண்மையைச் சொல்றேன்”, என்று மகளிடம் கேட்டார் ராதா கிருஷ்ணன்.

அவளுக்குமே இதற்கு மேல் மௌனமாக இருக்கப் பிடிக்காமல் அவரை நேருக்கு நேர் பார்த்தவள் “உங்களுக்கு இன்னொரு குடும்பம் இருக்கா?”, என்று கேட்டாள். இப்போதும் அவள் அப்பா என்று சொல்ல வில்லை என்பதை அவர் மனம் குறித்துக் கொண்டது.

“உமா நீ என்ன லூசா? யார் கிட்ட என்ன கேட்டுட்டு இருக்க?”, என்று கோபப் பட்டான் அருண்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!