Skip to content
Post Views: 3,597
அன்பு – 10
வெளியே கேட்ட சப்தத்தில் தூக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட ஆதினி, கண்களைக் கசக்கிக் கொண்டு, அந்த அறையெங்கும் தன் அன்னையைத் தேடித் துலாவினாள்.
Advertisement
அறையில் அன்னை இல்லை என்றதும், வெளியே செல்ல எண்ணி, கட்டிலில் இருந்து இறங்கிய ஆதினிக்கு, வெளியே பதற்றத்துடன் கேட்ட ஆணின் குரலில்,
“யாரு வந்திருக்கா???” என குழந்தைகளுக்கே உரித்தான ஆவல் தோன்ற, விரைவாக அறையை விட்டு வெளியேறினாள்.
Advertisement
Advertisement
கதவு திறக்கும் சப்தத்தில், கவியின் கவனம் அங்கே திரும்ப, கண்களைக் கசக்கி மிச்சம் சொச்சம் ஒட்டிக்கொண்டிருந்த தூக்கத்தை விரட்டப் போராடிக் கொண்டே வெளியே வந்த மகளைக் கண்டு அவளின் இதயம் படபடவென அடித்துக் கொண்டது!!
அம்முவும் பிரபாவும், முதன்முதலாக நேரில் சந்தித்துக் கொள்ளும்போது பிரபாவின் எதிர்வினை எப்படி இருக்கும் என கவிக்கு கலக்கமாக இருந்தது!!
Advertisement
அங்கே அவளின் பயம் அவசியமற்றது என்பதைப் போல், அம்முவைக் கண்டு பேச மறந்த சிலையாய் மாறிப்போனான் பிரபஞ்சன்.
இத்தனை வருடங்கள் கழித்து கவியை நேரில் கண்டுவிட்டதில் மற்ற எதுவும் அவன் சிந்தையில் பதியாமல் போக, இப்போது குழந்தையை நேரில் கண்டபின் தான், குழந்தையைப் பற்றிக்கூட ஒரு வார்த்தை கவியிடம் விசாரிக்காமல் போனேனே!!! என தன்னைத் தானே நொந்து கொண்டான்.
அதிலும் கவியை அச்சில் வார்த்ததைப் போல, அழகோவியமாய் நின்றிருந்த குழந்தையை அள்ளிக்கொள்ளச் சொல்ல அவனின் உடலில் உள்ள அத்தனை செல்களும் பரபரத்தது!!!
இருந்தும், குழந்தையின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என பயந்து கொண்ட பிரபஞ்சன், கைகளைக் கட்டிக்கொண்டு தன்னை முயன்று அடக்கிக் கொண்டு நின்றாலும், அவன் கண்களில் திரண்டு நின்ற கண்ணீர் அவன் உணர்ச்சிகளை அடக்க மிகவும் போராடுகிறான் என்பதை பார்ப்பவர்களுக்கு உணர்த்தியது!!
பெரியவர்கள் இருவரும் இருவேறு மனநிலையில் இருக்க, அதற்கு முற்றிலும் மாறாக ஆனந்த மிகுதியில் இருந்தது ஆதினி மட்டுமே!!!!
ஆம்!!! தனக்கு மிகவும் பிடித்தவர்களை திடீரென நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால், அந்தக் குழந்தையின் உள்ளம் எந்த அளவிற்கு உவகை கொள்ளும் என விவரிக்க வார்த்தையில்லை.
அதுபோலொரு மனநிலையில் இருந்த ஆதினிக்கு பிரபாவிடமிருந்து கண்களைத் திருப்பவே முடியவில்லை.
அவனைக் கண்டதும் ஆச்சரியத்தில் விரிந்து கொண்ட கண்கள், இமைக்க மறந்தது!!!
“பிரபஞ்சன் சார்!!” என மனதிற்குள் சொல்லிப்பார்த்துக் கொண்ட குழந்தையின் உள்ளம் உவகை கொள்ள,
அவனை இன்னும் அருகில் சென்று பார்த்துவிடச் சொல்லி ஆசை தள்ளியதில், தயக்கத்துடன் கவியின் அருகில் நடந்து வந்தாலும், பார்வை என்னமோ இன்னும் பிரபாவிடம் தான்!!!
குழந்தையின் பார்வையில் இருந்த உற்சாகம் புரிந்தாலும், அதற்கான காரணம் அறியாமல் பிரபா குழப்பத்துடன் கவியை ஏறிட,
கவி அவன் பார்வையை சந்திக்க மறுத்து, குழந்தையை அழைத்துக்கொண்டு உள்ளே செல்ல முற்பட்டு பட்டென எழுந்து கொண்டாள்.
அதற்குள், இவர்களின் மௌன நாடகத்தைக் கண்டு வெறுப்படைந்த மது,
“ஹோய் குட்டி!! என்ன நல்ல தூக்கமா???” என ஆதினியின் கைபிடித்து தன்னருகில் இழுத்துக்கொள்ள,
கவி பரிதவிப்புடன் மதுவின் கைகளில் சிறைபட்டிருந்த மகளின் கையைப் பார்த்திருந்தாள்.
ஏனோ, அந்த நொடி முள்ளின் மேல் நிற்பதைப் போல அவ்வளவு அவஸ்தையாக இருந்தது பெண்ணவளுக்கு!!
“ம்ம்ம்.. தூங்கிட்டேன்!!” என மென்குரலில் மதுவிற்கு பதிலளித்தாலும், ஆதினியின் பார்வை இன்னும் பிரபாவிடம் தான்.
அதை கண்டுகொண்ட மது,
“என்ன இந்த அங்கிளையே பார்க்குற?? பார்க்க பனை மரம் மாதிரி இருக்கானா??” என கேலியாகக் கேட்க,
“அங்கிளா??” என பல்லைக்கடித்த பிரபா, அடிக்கண்களால் மதுவை முறைத்தான்.
அத்திப்பூத்தார் போல் முளைவிடும் பிரபாவின் கோபம் மதுவிற்கு உற்சாகமூட்ட,
“ஏன் பேபி!! அங்கிள் பார்த்தா பயமா இருக்கா?? நாம வேணும்னா உள்ள போயிடலாமா??” என மேலும் சீண்ட,
தலையை இடவலமாக அசைத்து பட்டென மதுவின் கூற்றை மறுத்த குழந்தை,
பிரபாவை அடிக்கண்ணால் பார்த்துக்கொண்டே,
“அங்கிள் இல்லை.. பிரபஞ்சன் சார்!!!” என மிகத் தெளிவாக அவன் பெயரை உச்சரித்தது.
குழந்தையின் குரலில் தன் பெயரைக் கேட்கும் போது, பிரபாவின் உடல் சிலிர்த்தடங்க, வாஞ்சையாய் அவளைப் பார்த்திருந்தான்.
குழந்தையின் கூற்றில் மது வியப்படைய, அதைக்கண்டு சங்கடம் கொண்ட கவி,
“அம்மு!! வா உள்ள போகலாம்!!” என மகளின் கைபிடித்து இழுத்தாள்.
“ப்ச்!! என்ன அஞ்சலி!! அவளே ஃப்ரீயா தான இருக்கா?? நீ ஏன் இப்படி பிஹேவ் பண்ற??” என கடிந்து கொண்ட மது,
“ஓஹ்!! இந்த பிரபஞ்சன் சாரை பேபிக்குத் தெரியுமா??” என குழந்தையிடமிருந்து விஷயத்தை வாங்க முற்பட்டாள்.
தெரியும் என்பதாய் குழந்தை தலையசைக்க,
“யாரு இந்த பிரபஞ்சன் சார்???” என ஆவலானாள் மது இப்பொழுது!!
நிச்சயம் தான் யாரென்று குழந்தைக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், நூற்றில் ஒரு பங்காக எங்கே தன்னைப்பற்றி கவி கூறியிருப்பாளோ என நப்பாசை கொண்ட பிரபஞ்சன், குழந்தையின் பதிலுக்காக ஆவலாக காத்திருக்க,
கவிக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது அந்த சூழ்நிலை!!!
அவனை அதிக நேரம் காக்க விடாமல்,
” சின்ன நிலா பாட்டு பாடுனவங்க!!!” என ஒரு பாடகராக அவனைத் தெரிந்து வைத்திருந்தது குழந்தை!!!
அதில் பிரபாவிற்கு சிறிதான ஏமாற்றம் தான் என்றாலும், வேறு என்ன எதிர்பார்த்துவிட முடியும்?? என எண்ணி தன்னைத்தானே சமன்படுத்திக் கொண்டான்.
குழந்தையின் பதிலில் அவஸ்தையாக நெளிந்த கவியைக் கண்டு மதுவிற்கு சிரிப்பு வர,
“ஆமா உங்க பிரபா சார் பாடுனதுல சின்ன நிலா பாட்டு மட்டும் தான் பேபிக்குத் தெரியுமா??”
“ம்ஹூம்!!! அவரோட எல்லாப் பாட்டும் எனக்குத் தெரியும்.. எல்லாமே கேட்டிருக்கேன்.. எல்லாமே சூப்பர்” என ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் இணைத்து குழந்தை சூப்பர் என செய்து காட்ட,
பல பல விருதுகள் வழங்காத மகிழ்ச்சியை அந்த மழலையின் பாராட்டு பிரபாவிற்கு வாரி வழங்க, அழகாய் ஒரு புன்னகை அவன் இதழோரம் வந்தமர்ந்தது!!
பிரபாவின் புன்னகையைக் கண்டு குழந்தைக்கு வெட்கம் வந்து விட, மதுவின் கையை நன்றாக பற்றிக் கொண்டு தலையை குனிந்து கொண்டாள்.
“சரி!! இந்த சார் சிங்கர்னு உனக்கு எப்படித் தெரியும்?? நீயா போன்ல இவர் பாட்டெல்லாம் போடுவியா??” என மது கவியை நக்கலாக பார்த்துக்கொண்டே கேட்க,
“நோ!! அம்மா தான் போட்டுத் தருவாங்க.. அம்மாக்கும் இவங்க பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும்!! நானும் அம்மாவும் நைட்டு இவர் பாட்டு கேட்டுட்டு தான் தூங்குவோம்!!” வெள்ளந்தியாய் குழந்தை கவியின் குட்டை போட்டு உடைக்க, கவிக்கு அப்படியே எங்காவது ஓடிவிட மாட்டோமா என்றிருந்தது.
‘ நீதான் பாட்டே கேட்காத ஆளா?’ என கிண்டலாக மது பார்த்து வைக்க, கவி யாரையும் நிமிர்ந்து பார்க்கத் திராணியற்று குனிந்த தலை நிமிராமல் நின்றிருந்தாள்.
பிரபாவோ, “என் பாட்டோட முதல் ரசிகையே உங்க அம்மா தான்!!! அவளை எனக்குத் தெரியாதா என்ன??” என்பதைப் போல் குழந்தையின் பேச்சில் அதிராமல், ஆதினியையே ஏக்கமாகப் பார்த்திருந்தான்.
அவன் மனமறிந்த மது,
“பேபி!! உனக்கு பிடிச்ச சிங்கர் இவ்வளவு பக்கத்துல இருக்காங்க.. அவங்க கிட்ட போய் பேசலையா நீ??” என்று கேட்க,
ஆசை அவ்வளவு இருந்தாலும், அவனின் அருகில் செல்ல கூச்சம் கொண்ட குழந்தை,
“ம்ஹூம்!!” என்பதாய் தலையசைத்து, மதுவின் கைகளை இறுகப்பற்றிக் கொண்டது!!
குழந்தையின் செய்கையில் பிரபாவின் மனம் கலங்கிவிட, அவன் முகமும் அவன் வருத்தத்தை அப்படியே பிரதிபலித்தது.
அவன் வேதனையை காணப் பிடிக்காத கவி,
இவ்வளவு தூரம் வந்தாகிவிட்டது, இன்னும் என்ன என நினைத்துக் கொண்டு,
“அம்மு!! கிட்ட போடா!!” என கண்ணசைவில் மகளுக்கு தைரியம் வழங்க,
மதுவும் குழந்தையை பிரபாவிடம் நகர்த்திக் கொண்டு போக,
கூச்சமும், எதிர்பார்ப்பும் போட்டி போட பிரபாவின் அருகே வந்துவிட்ட குழந்தை, அருகில் தெரிந்த அவன் முகத்தைக் கண்டு, லேசாய் வெட்கப்பட்டு சிரிக்க,
குழந்தையின் சிரிப்பில் தெய்வத்தை காணலாம் என எங்கோ கேட்டது பிரபாவின் மனதில் வந்து போனது!!!
அவ்வளவு அழகாய் தன் முன் நின்ற கவியின் குட்டி பிரதியை கண்கள் கலங்க வாஞ்சையாக பிரபா பார்த்திருக்க,
அவன் பார்வையின் பொருள் விளங்காத ஆதினியோ,
“அழ.. அழாதிங்க சார்!!” என அவளாகவே அவனை நெருங்கி வந்திருந்தாள்.
பிரபாவினுள் ஒரு தடுமாற்றம்!!!
“அழ.. அழாத!!!” என இதே போல் இவன் அருகில் வந்து தயக்கத்துடன் ஒலித்த பதினாறு வயது கவியின் பிம்பம் அவன் கண்முன் தோன்ற, பிரபாவின் கண்ணீர் கரை உடைத்துக்கொண்டு கன்னத்தை தழுவியது!!!!
மிகவும் பிடித்த நபரின் வருத்தம் நம்மையும் வாட்டுமாமே!!! அதுபோல பிரபாவின் கண்ணீர் அந்தப் பிஞ்சையும் வாட செய்ய,
“அழுவாதீங்க சார்!! எல்லாம் சரியா போயிடும்” என பெரிய மனிதி போல் சமாதானம் செய்த ஆதினியைக் கண்டு மதுவின் முகத்தில் பெரிதாய் ஒரு புன்னகை!!!
“சின்னப்பிள்ளை சமாதானம் சொல்ற அளவுக்கு இருக்கியே டா பிரபா!! டூ பேட்!!” என்று வேறு கேலி செய்ய, பிரபாவின் சிந்தையில் அதுவெல்லாம் பதியவே இல்லை!!
மிக அருகில் தெரிந்த குழந்தையின் முகம், அவனின் மனக் காயங்களுக்கெல்லாம் மருந்தாய் மாறி, உள்ளுக்குள் ஏதோ மாயம் செய்வதை உணர்ந்தவன்,
தன் தயக்கத்தை விட்டொழிந்து,
“உங்க.. உங்க கையை நான் பிடிச்சுக்கவா???” என குழந்தையின் அனுமதியை வேண்டி இறைஞ்சுதாலாய் அவன் பார்த்திருக்க,
குழந்தைக்கு அவனைப் பிடித்திருந்தாலும், அந்நிய(?) ஆண்மகனின் தொடுகையை எப்போதும் ஆதரிக்கக் கூடாது எனும் அன்னையின் அறிவுரை குழந்தைக்கு நினைவு வர,
என்ன செய்ய இப்பொழுது என்பதைப் போல் பாவமாய் கவியை நிமிர்ந்து ஏறிட்டது குழந்தை!!!
பிரபாவின் கண்களில் வழிந்த ஏக்கத்தை முழுதாய் உணர்ந்துகொண்ட கவிக்கு, அதை மறுக்கத் தோன்றவில்லை. எனவே மகளிடம் சம்மதமாய் அவள் தலையசைக்க,
அடுத்த நொடி தன் பிஞ்சுக்கரங்கள் கொண்டு அவன் கைகளைப் பற்றியிருந்தாள் குழந்தை!!!
பல நாள் பட்டினியில் கிடந்தவன் தண்ணீர் வேண்டி தவிக்கும் போது, அறுசுவை விருந்தே கிட்டினால்?? பிரபாவின் நிலையும் தற்போது அப்படித்தான் இருந்தது!!
குழந்தையைப் பற்றி கேள்விப்பட்டது முதலே, என்றாவது ஒருநாள் அவளை அருகினில் பார்த்துவிட மாட்டோமா?? என அவன் கொண்ட தவிப்பு அவன் மட்டுமே அறிந்தது!! அப்படி இருக்கையில் இன்று குழந்தையின் ஸ்பரிசம்!!! அவன் வாழ்வை முழுமையாக்கியிருந்தது!!!!
குழந்தையின் ஸ்பரிசம் உணர்ந்ததும், இத்தனை நேரம் போட்டு வைத்திருந்த கட்டுப்பாடுகள் உடைப்பெடுக்க, மென்மையாய் குழந்தையை நெஞ்சோடு அணைத்திருந்தான் பிரபா!!!!
அவனின் திடீர் செய்கையில் குழந்தை மிரண்டாலும், அவனின் நெஞ்சுக் கதகதப்பில் இதுவரை உணர்ந்திராத ஒரு பாதுகாப்பை உணர்ந்த குழந்தையும் எதிர்ப்பேதும் காட்டாமல் அவன் கைகளில் அடக்கமாய் நின்றுவிட்டது!!!
உலகமே அவன் கைக்குள் வந்துவிட்டதைப் போல் பிரபாவின் மனம் பரவசத்தில் இருக்க, அதை அவன் முகமும் அப்படியே வெளிப்படுத்தியது!!!
இந்தக் காட்சியை காணக்காண, கவிக்கு தன் கண்ணீரை அடக்குவது மிகுந்த சிரமமாகிப் போக, எங்கே சப்தமிட்டு கதறிவிடுவோமோ என பயந்தவள், சட்டென அறைக்குள் ஓடி கதவை சாற்றிக்கொண்டாள்.
அந்த சப்தத்தில் தன் மோன நிலையில் இருந்து கலைந்த பிரபஞ்சனுக்கு அப்போது தான் தன்னை மீறி குழந்தையை அணைத்திருந்தது விளங்க,
குனிந்து தன் கைகளுக்குள் பாந்தமாய் பொருந்தி நின்ற ஆதினியைக் கண்டு அவன் கண்கள் கனிந்தது!!!
தொலைந்து போன இன்பம், இரட்டிப்பாய் அவன் இதயத்தை வந்தடைந்த நிம்மதி அவனிடம்!!!
அவன் அணைப்பில் ஒரு வித கூச்சத்துடன் நின்றிருந்த ஆதினி, மெல்ல நிமிர்ந்து அவன் கண்களைச் சந்திக்க,
“என்ன டா!!!???” என கேட்டிருந்தவனின் குரலில் தான் எவ்வளவு மென்மை!!!
“நான்.. வெளிய போகவா???”
“ஹான்!!! புரியலை!! எங்க போகணும்??”
இதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், அவளை அணைத்திருந்த கைகளை குழந்தை பாவமாய் பார்க்க,
அவளின் கூச்சத்தை புரிந்து கொண்ட பிரபாவும், நிதானமாகவே தன் கைகளை விலக்கிக் கொண்டான்.
தான் சொல்லாமலே புரிந்து கொண்ட பிரபாவின் செயலில், குழந்தையின் கண்கள் மின்ன,
“தேங்க் யூ!!!” என மெல்லிசாக முணுமுணுத்தாள்.
“ம்ஹூம்!!! நான் தான் தேங்க்ஸ் சொல்லணும்!!! ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் நிம்மதியா இருக்கேன்!!!” என பிரபா உணர்ந்து சொல்ல,
குழந்தைக்கு அவன் கூற்று விளங்காவிட்டாலும், பார்த்திருந்த மதுவிற்கும், அறைக்குள் இருந்து அதை கேட்டிருந்த கவிக்கும் அவனின் மனநிலை நன்றாகவே விளங்கியது!!
“நீங்க.. இங்க தான் இருக்கீங்களா???”
தனக்குப் பிடித்த பிரபஞ்சனின் வீட்டிற்குத் தான் வந்திருக்கிறோமா என குழந்தைக்கு ஒரே ஆச்சரியம்.
தன்னிடம் இயல்பாய் குழந்தை பேசுகிறாளே என பிரபாவிற்கு பேரானந்தம்!!
“இல்லை டா!! நான் ஆப்போசிட் பிளாட்ல இருக்கேன்” என மென்சிரிப்புடன் மறுத்தான்.
அதில் குழந்தையின் முகம் லேசாய் வாட,
“அவன் சும்மா சொல்றான் பேபி!!! பாதி நேரம் இங்க தான் இருப்பான்.. நைட்டு தூங்க மட்டும் தான் அவங்க வீட்டுக்கு போவான்.. இனி உனக்கு எப்போ வேணுமோ அவனை பாட சொல்லி கேட்டுட்டே இரு!! போன்ல எல்லாம் கேட்க வேண்டாம்” என மது குழந்தையை உற்சாகமூட்ட,
சட்டென மூண்டுவிட்ட சந்தோஷத்தில், “எனக்காக பாடுவாங்களா???” என எதிர்பார்ப்புடன் ஆதினி கேட்க,
“அவன் இப்போ விட்டா, உனக்காக அவன் சொத்து முழுக்க கூட எழுதி வைப்பான்.. பாட மாட்டானா??” என பிரபாவிற்கு கேட்குமாறு முணுமுணுத்த மது,
“டேய் பிரபா!! பேபி கேட்குறா பாரு!! ஒழுங்கா பாடு!!” என உத்தரவிட்டாள்!!!
அதில் லேசாக புன்னகைத்த பிரபா,
“உங்களுக்கு என்ன பாட்டு பிடிக்கும்??” என குழந்தையிடம் கேட்க,
“அப்போ நிஜமாவே பாடப் போறீங்களா??” என கண்கள் விரிய கேட்ட குழந்தை,
“சின்ன நிலா பாட்டு பாடுறீங்களா?? எனக்கு அது ரொம்ப ரொம்ப பிடிக்கும்!!! பிளீஸ்!!!” என கண்ணைச் சுருக்கி கோரிக்கை வைத்த குட்டி தேவதையை மீண்டும் அள்ளிக் கொள்ளச் சொல்லி கைகள் பரபரத்தது பிரபஞ்சனுக்கு!!!
“அழகு ம்மா நீ!!!” என வலது கையால் குழந்தையின் கன்னத்தை வாஞ்சையாக பற்றிக் கொண்டான்!!!
பின் குழந்தையின் ஆசைக்கிணங்க,
மெல்லிய குரலில்,
“சின்ன நிலவே!!
என் செல்லத் திமிரே!!
வா என் வாழ்வே நீ வா!!”
“வண்ண மயிலே!!
இசை பாடும் குயிலே!!
என் கண்மணியே நீ வா!!!”
“உனக்காகத் தானே!! என் உயிர் வாழுதிங்கே!!
நீ தள்ளிப்போனால், என்னாவேன் அன்பே??
என் உயிர் தீரும் முன்னே, கையில் சேர்ந்திட வா!! கண்ணே!! “
“சிரித்திடும் பொன் இதழில்
சிணுங்கிடும் உன் குரலில்
தொலைந்த என் இனிமைகளை கண்டுகொண்டேனே!!
வருடங்கள் போனாலென்ன?
வயது தான் ஓய்ந்தால் என்ன?
மகளே உன்னிடத்தில் குழந்தை ஆகின்றேன்!!
இருண்ட என் உலகிற்கே வெளிச்சம் தந்தாயே!!
வறண்ட என் வாழ்க்கைக்கு வசந்தம் சேர்த்தாயே!!”
என அவன் பாடி முடிக்கவும், சிரிப்புடன் ஓடி வந்து அவன் கரத்தைப் பற்றிக்கொண்ட குழந்தை,
“ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்!!!” என ஆசைப்பட்டது கிடைத்த மகிழ்ச்சியில் கண்கள் மின்ன சிரித்த குழந்தையை ஆதுரமாக பார்த்த பிரபஞ்சன்,
தன் இடக்கை கொண்டு குழந்தையின் முகத்தை பற்றிக் கொண்டவன்,
கமறிய தொண்டையை சரி செய்துகொண்டு,
“இஃப் யூ டோண்ட் மைண்ட்!!!!” என அனுமதி கேட்டவன்,
குழந்தை புரியாமல் விழிக்கும் போதே, குனிந்து அவளின் பிறைநுதழில், தன் நடுங்கும் இதழ்கள் கொண்டு முத்தம் பதித்திருந்தான்!!!
“சிலருக்குக் கவலையாகத் தெரியும் பெண் பிள்ளைகள்!!
சிலருக்கு கவிதையாகிப் போகும் மாயம் தான் என்ன??”
error: Content is protected !!