Skip to content
Post Views: 3,359
அன்பு – 13
“குட் மார்னிங் பிரபா!!!!” என முகம் மலர்ந்த புன்னகையுடன் அவன் அருகில் வந்த கவியை கனிவுடன் பார்த்த பிரபஞ்சன்,
Advertisement
“குட் மார்னிங்!!!” என மென்குரலில் பதில் வணக்கம் கூறினான்.
பள்ளி தொடங்கி இன்றோடு மூன்று வாரங்கள் நிறைவடைந்திருக்க, அந்த சம்பவத்திற்கு பின், மறுநாளே கவியே வந்து அவனிடம் இயல்பாய் நட்பு பாராட்ட, அன்று தனக்காக வந்து நின்ற கவியின் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்த பிரபஞ்சனும், தயக்கம் இருந்தாலும் ஒன்றிரண்டு வார்த்தை அவளோடு பேசுவதை அன்று முதல் வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
Advertisement
Advertisement
அன்று கவியிடம் அடி வாங்கிய மாணவர்களுக்கு இவர்களின் நட்பு பெரும் கோபத்தை உண்டுபண்ண, பார்க்கும் நேரமெல்லாம் இவர்கள் இருவரையும் பார்வையாலே பஸ்பம் ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள்.
அதையெல்லாம் துளியும் சட்டை செய்யாத கவி, அவர்களை வெறுப்பேற்றவே பிரபாவுடன் இன்னும் நன்றாக பழகத் தொடங்கியிருந்தாள்.
Advertisement
இதோ இன்றும் வகுப்புக்குள் நுழைந்ததும், கவியின் கண்கள், அவளையும் அறியாமல் பிரபஞ்சனைத் தான் முதலில் தேடி, அவனை கண்டுகொண்டதும் தான் புன்னகையில் பெரிதாய் மலர்ந்துபோனது!!!
“என்ன டா பிரபா?? நேத்து ஹோம் வொர்க் பண்ணிட்டியா??” என இயல்பாய் அவன் அருகில் அமர்ந்தபடி, அவன் கையில் வைத்திருந்த நோட்டை எடுத்துப் பார்வையிட்டாள் கவி!!
அவள் வளர்ந்த சமூகத்தில், ஆண் நண்பர்கள் அருகில் அமர்வதெல்லாம் சாதாரணமான ஒன்று என்பதால், கவி இயல்பாய் இருக்க, பிரபஞ்சன் தான் அவஸ்தையாக அமர்ந்திருந்தான்.
அன்னையைத் தவிர வேறெந்த பெண்ணின் அருகாமையும் அறிந்திராதவனுக்கு, கவியின் இந்த நெருக்கம் பெரும் அவஸ்தையைக் கொடுக்க, எழுந்து போ என அவளிடம் சொல்லவும் முடியாமல், அவளின் அருகாமையை ஏற்கவும் முடியாமல் முள்ளின் மேல் நிற்பதைப் போல் இருந்தது அவனின் நிலை!!
அதையெல்லாம் அறியாத கவி,
“ஹேய் என்ன டா எல்லா சம்மும் போட்டுட்ட?? இவ்வளவு படிப்ஸை இந்த உலகம் தாங்காது டா!!” என கிண்டல் செய்தவள்,
“சரி இதை விடு!!! என்ன லஞ்ச் கொண்டு வந்த இன்னைக்கு??” என கேட்டுக்கொண்டே அவனின் அனுமதி இல்லாமல், இயல்பாய் அவன் பையைத் திறந்து உணவு டப்பாவைத் திறந்து விட,
“ஷ்!!! கவி!! என்ன பண்ற???” என தன்னையும் மீறி முதன்முதலில் மனதிற்குள் மட்டும் சொல்லிக் கொண்ட அவளின் பெயரை பதட்டத்தில் இப்போது உச்சரித்திருந்தான் பிரபஞ்சன்!!
அதில் கவியின் கண்கள் ஆச்சரியத்தில் விரிய,
எதற்காக இந்த ஆச்சரியம் என புரியாமல் பார்த்திருந்த பிரபஞ்சன், அவள் கையில் இருந்த உணவு டப்பாவை வாங்கி மீண்டும் உள்ளே வைத்திருந்தான்.
“டேய் பிரபா!! என்ன சொல்லி கூப்பிட்ட என்னை நீ இப்போ!!!”
“அது!! அது!! ஏதோ பதட்டத்துல!!” என பிரபா திணற,
“சூப்பர் டா!! என்னை எல்லாரும் இதுவரைக்கும் அஞ்சலின்னு தான் கூப்பிடுவாங்க.. இது டிஃபரண்டா ஒரு மாதிரி நல்லா இருக்கு!! எனக்கு பிடிச்சிருக்கு!! இனி நீ என்னை கவின்னே கூப்பிடு!!” என கவி உற்சாகமாக சொல்ல,
அவளின் புன்னகை பிரபஞ்சனையும் தொற்றிக்கொள்ள, இளநகையுடன் அவளை ஏறிட்ட கவி, சிரிக்கும் போது வசீகரமாய் மாறிப் போகும் அவன் முகத்தை தான் கண்ணெடுக்காமல் பார்த்திருந்தாள்.
“சிரிச்சா ரொம்ப அழகா ஆயிடுற பிரபா நீ!!!” மனதில் எவ்வித கள்ளமும் வைத்துக்கொள்ளாமல் கவி பாராட்ட, பிரபஞ்சனுக்கு தான் அதற்கு எப்படி எதிர்வினையாற்ற எனப் புரியவில்லை.
திருவிழாவில் தொலைந்த குழந்தை போல், அவன் திருதிருவென விழிக்க, அவனின் பாவனையில் பக்கென சிரித்துவிட்டாள் கவி!!
திடீரென கேட்ட அவளின் சிரிப்பு சப்தத்தில், மொத்த வகுப்பின் கவனமும் அவர்கள் மேல் குவிய, பிரபா தான் அவஸ்தையுடன் தலையை குனிந்து கொண்டான்.
கவி அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிரிப்புடனே இன்னும் சற்று நேரம் அவனுடன் உரையாடிவிட்டே தன்னுடைய இருக்கைக்கு எழுந்து சென்றாள்.
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அவர்களின் நட்பும் அழகாய் வளர்ந்து கொண்டே போக, இருவருக்குமிடையே நல்ல புரிதல் ஒன்று வந்திருந்தது.
கவியைப் பற்றி அனைத்துமே பிரபாவிற்கு இந்த கொஞ்ச காலங்களில் தெரிந்திருந்தது என்று சொல்வதை விட கவி தன்னைப்பற்றி அனைத்தையும் அவனுக்கு தெரிவித்திருந்தாள்.
அரசல் புரசலாக அவனைப் பற்றி பல விஷயங்கள் கவியின் செவியை வந்தடைந்தாலும், இதுவரை ஒருநாள் கூட பிரபாவிடம் அவனின் சொந்த விஷயங்கள் எதையும் கேட்டுக்கொண்டதில்லை அவள்!!
அதுவே பிரபாவிற்கு கவியின் மீதான மரியாதையை பன்மடங்கு உயர்த்த, ஒருநாள் மதிய இடைவெளியை அடுத்து வந்த வகுப்பிற்கான ஆசிரியர் வராத காரணத்தால், மாணவர்கள் தங்கள் இஷ்டம் போல் விளையாடி கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது தன் ரெக்கார்ட் நோட்டை எடுத்துக்கொண்டு பிரபஞ்சன் அருகில் வந்து அமர்ந்த கவி,
“டேய் படிப்ஸ்!! எனக்கு இதுல டிராயிங் மட்டும் போட்டு வச்சிடு!! நான் எப்படி போட்டாலும் அலங்கோலமா தான் இருக்கு!! எனக்கே அதை கண்கொண்டு பார்க்க முடியலை!! அப்பறம் டீச்சர் எப்படி பார்ப்பாங்க??” என கவி சலித்துக்கொள்ள,
மென் புன்னகையுடன் அவளை பார்த்திருந்த பிரபா, சம்மதமாய் தலையசைத்தான்.
“ரொம்ப பேசுனா உன் வாயில இருந்து விலை மதிப்பில்லாத முத்து உதிர்ந்திடும், பேசாம பத்திரமா இருன்னு உங்க அம்மா ஏதும் சொல்லி அனுப்பிருக்காங்களா டா பிரபா??” என போலியாய் ஆச்சரியம் கொண்டு கவி கேட்க,
பிரபாவின் முகத்தில் ஒரு விரக்தியான முறுவல்!!
அவனின் சோகம் அவளை ஏதோ செய்ய,
“சரி விடு!! உனக்கும் சேர்த்து நானே பேசுறேனே!! உன் முத்தை நீ பத்திரமா வச்சுக்கோ!! பேச வேண்டாம்” என பெருந்தன்மையாகக் கூறி அவனை இயல்பாக முனைந்தாள் அவள்!
“எங்க அம்மாக்கு வெறும் பத்தொன்பது வயசு கவி நான் பிறக்கும் போது!!!!” என சம்பந்தமே இல்லாமல் பிரபா கூற,
முதலில் புரியாமல் விழித்த கவி, பின்பே அவன் தன்னிடம் மனம் திறக்க முயல்கிறான் என உணர்ந்து வியப்படைந்தாள்.
“பத்தொன்பது வயசுல குழந்தையா??” என அவள் ஆச்சரியமடைய,
வலியுடன் ஆமோதித்த பிரபா,
“எங்க அம்மாவை நீ பார்த்ததில்லைல!!! ரொம்ப அழகு கவி அவங்க!!!! அந்த அழகு தான் ஆபத்தா மாறிடுச்சு அவங்களுக்கு!!!!” என சொல்லியவனுக்கு, இப்போதும் தன் அன்னை அடைந்த துயரங்களை எண்ணிப் பார்க்கும் போது தொண்டை அடைத்தது!!!
செந்தமிழினி!!! பிரபஞ்சனின் அன்னை!!
பிரபா கூறியதைப் போல் பேரழகி!!! ராமநாதபுரத்தில் அமைந்துள்ள தேவிபட்டினத்தை பூர்வீகமாகக் கொண்டவர் தான் செந்தமிழினி!!
பிரசவத்தின் போதே அவரின் அன்னை தவறிவிட, ஒற்றை ஆளாய் இருந்து மகளை வளர்க்கத் திறமை இல்லாமல், தமிழினி பிறந்த அதாவது, அவரின் மனைவி இறந்த மறு மாதமே மறுமணம் செய்து கொண்டு வந்து நின்றார் தமிழினியின் தந்தை!!
சிறுவயதிலிருந்தே சித்தி கொடுமையில் தினமும் சித்திரவதை பெற்று வளர்ந்த தமிழினியின் ஒரே ஆறுதல் எல்லாம் பாடல் மட்டுமே!!
பாட்டு கேட்பது மட்டுமல்லாமல், பாடுவதும் அவருக்கு இயல்பாகவே அருமையாக வர, யாரும் இல்லாத தனிமையில் தனக்குப் பிடித்த பாடல்களைப் பாடி தன்னைத்தானே சந்தோஷமாக வைத்துக்கொண்டார் அவர்!!
வருடங்கள் அப்படியே ஓடிவிட, தமிழினிக்கு பதினாறு வயது இருக்கும் போது தூரத்து சொந்தம் ஒருவரின் அறிவுரையின் பேரில், சென்னையில் வசித்த ஒரு குடும்பத்தில் வயதான பெண்மணி ஒருவரை பார்த்துக்கொள்ளும் வேலைக்கு அனுப்பப்பட்டார் அவர்!!
பணம் அதிகம் கிடைக்கும் என்பதால், பெண்ணவளின் பாதுகாப்பு குறித்து சிறிதும் யோசிக்காமல் அவரின் சித்தி, தமிழினியை சென்னைக்கு அனுப்ப, அங்கே ஆரம்பித்தது அனைத்தும்!!
முதல் இரண்டு வருடம் அனைத்தும் நன்றாகவே செல்ல, சித்தியின் கொடுமை இன்றி, மூன்று வேளை சாப்பாடுடன் நிம்மதியாகவே தமிழினியின் நாட்கள் கழிய, அதைக் குலைப்பதைப் போல் லண்டனில் இருந்து வந்து இறங்கினார் அந்த வயதான பெண்மணியின் ஒரே மகன் – பூமேஷ் யாதவ்!!!
மேல்நாட்டு கலாச்சாரத்தில் முழுதாய் மூழ்கிப் போயிருந்த பூமேஷிற்கு, அழகுப்பதுமையாய் அவர் வீட்டில் நடமாடிய தமிழினியின் மேல் இருந்து சுத்தமாகப் பார்வையைத் திருப்ப முடியவில்லை!!
எத்தனை பெண்களோடு கூடிக் களித்திருந்தாலும், தமிழினியிடம் இருந்த ஏதோ ஒன்று அவரை மொத்தமாக பித்துக்குளி ஆகியிருக்க, எப்படியாவது அவரை தன் வலைக்குள் விழ வைக்க வேண்டும் என முடிவெடுத்தவர், முதற்கட்டமாக தமிழினியின் குரல் வளத்தை கண்டுபிடித்து,
‘ உன்னை சிறந்த பின்னணி பாடகராக ஆக்குகிறேன்!! எனக்கு நிறைய இசையமைப்பாளர்களைத் தெரியும்!!’ என ஆசை வார்த்தை காட்ட,
பெரிதாய் வெளி உலகமும், போதிய பக்குவமும் இல்லாத தமிழினிக்கு பூமேஷின் குள்ளநரித்தனத்தை சுத்தமாக கண்டுகொள்ள முடியவில்லை!!
பூமேஷ் காட்டிய ஆசை வார்த்தகளை நம்பி, அவனுக்காக பாடிக் காட்டுகிறேன் என அவளுடைய ஓய்வு நேரம் அனைத்தும் அவனுடனே கழிக்க, கொஞ்சம் கொஞ்சமாக தன் திறமையால் அவளை தன் வலையில் வீழ்த்தியிருந்தான்.
அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல், எதற்கும் மசியாத தமிழினியை, அவளைத் திருமணம் செய்து கொள்கிறேன் என வாக்குறுதி அளித்து, தன் வாய்ஜாலம் கொண்டு அவரை மயக்கியவன், தன் ஆசை தீர அவரை அனுபவித்துவிட்டு, சொல்லாமல் கொள்ளாமல் லண்டனுக்கு பறந்து சென்று விட்டான்.
பூமேஷைப் போல் அல்லாது, அவன் மீது உண்மையான காதலும் அசைத்துப் பார்க்க முடியாத நம்பிக்கையும் வைத்திருந்த தமிழினிக்கு, அவனின் இந்த நம்பிக்கை துரோகத்தை தாங்கிக்கொள்ளவே முடியாமல் போக, அடுத்து என்ன செய்வது எனத்தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்தவர், இப்படி ஏமாந்து போய் நிற்கும் தன் நிலையை அறவே வெறுத்தார்.
வாழவே பிடிக்காமல், உயிரை மாய்த்துக்கொள்ள நினைத்த சமயத்தில் தான், பிரபஞ்சன் அவரின் மணி வயிற்றில் உதித்திருக்கும் விஷயமே அவரின் கவனத்திற்கு வர,
வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் அவரை இப்படி ஒரு இக்கட்டில் இருக்கும் அவரின் நிலையைக் கண்டு கழிவிரக்கத்தில் கரைந்தவர்,
பின் ஒரு முடிவோடு, நடந்த அத்தனையும், பூமேஷின் தாயிடம் சொல்லி நியாயம் கேட்க,
விரக்தியாக புன்னகைத்த அந்த முத்த பெண்மணியோ,
‘ இந்தக் குடும்பத்து ஆண்களின் புத்தி, என் மகனுக்கு மட்டும் இல்லாமலா போகும்!!’ என நினைத்துக்கொண்டவர்,
தன் மகனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கைமாறாய் குறிப்பிட்ட தொகையும், அவரின் வயிற்றில் முறையான அங்கீகாரம் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் அவர்களின் வாரிசிற்காக ஒரு வீடும் கொடுப்பதாகக் கூறியவர், இதைக்கூட அவரின் மன திருப்திக்காக செய்வதாக மட்டும் முடித்தார்.
அவரின் கூற்றில் கோபம் வந்தாலும், அவ்வளவு உயரத்தில் இருப்பவனை இந்தப் பாமரப் பெண்ணால் என்ன செய்துவிட முடியும் எனும் நிதர்சனம் உரைக்க, குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமைதியாக அவர் தருவதை வாங்கிக்கொள்ள முடிவு செய்தார்.
விஷயம் அறிந்து, தமிழினியை அடித்து விளாசிவிட்ட அவரின் சித்தி, கேட்கக் கூடாத வார்த்தைகளால் தமிழினியை நித்தம் நித்தம் கொன்று கொண்டிருந்தார்.
ஆனாலும், சுளையாக பணமும், இருக்க சொந்தமாக ஒரு வீடும் வரப்போவதை அடுத்து, அவளை வெளியே துரத்தாமல் வீட்டிலே மீண்டும் வேலையாளாக வைத்துக்கொள்ள, தமிழினியின் பத்தொன்பது வயதில், பல வித துயரங்களையும், அவமானப் பேச்சுக்களையும் அன்னைக்கு வாங்கிக் கொடுத்து, இந்த மண்ணில் வந்து ஜனித்தான் பிரபஞ்சன்!!!
அவன் பிறந்ததும், சொன்னது போலவே பிரபஞ்சனின் பெயரில் பத்து லட்ச ரூபாய் பணமும், ராமநாதபுரத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்த அந்த பெண்மணி, இனி எக்காரணம் கொண்டும் என் மகனின் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என உத்தரவாதம் வாங்கிக் கொண்டார்.
வீடும், பணமும் எப்பொழுதும் போல் தமிழினியின் சித்தியின் கையில் போய் சேர, மீண்டும் அதே அடிமை வாழ்க்கை!! அவரோடு சேர்த்து பிரபஞ்சனிற்கும்!!!
அடிமை வாழ்க்கையோடு சேர்த்து அவப்பெயரும்!! அவமானமும்!!!
சிறுவயதில் இருந்தே, அவனை அடக்கி அடக்கி வளர்த்த தமிழினியின் சித்தியினால், பிரபஞ்சனிற்கு ஆசைப்படுவதற்கு கூட அனுமதி இல்லாமல் போய்விட்டது!!
இயல்பிலேயே அமைதியான குணம் கொண்ட பிரபஞ்சனை, அவன் வளர்ந்த சூழலும், மனிதர்களும் மிகவும் கோழையாக்கி விட்டனர்!!
அதுவும் அவன் சிறிதாக ஒரு தவறு செய்தால் கூட, அவனின் அன்னையின் ஒழுக்கத்தை சந்தி சிரிக்குமாறு செய்துவிடும் சில மனிதர்களுக்கு பயந்தே அவன் சத்தமாகக் கூட பேச பயந்தான்.
தன் வயிற்றில் பிறந்த கொடுமைக்கு தான் பிரபஞ்சனுக்கு இவ்வளவு துயரம், எனத் தாயாக தமிழினி தினம் தினம் மனதிற்குள் புழுங்கிக் கொண்டாலும், அவரின் சுபாவம் யாரையும் எதிர்த்து பேசி, தனியாக நிமிர்ந்து நிக்க அனுமதிக்கவில்லை!!
இரண்டு வருடங்களுக்கு முன்னால், அவரின் சித்தியின் ஒரே மகன் இவர்களுக்கும் இலவசமாக(?) கஞ்சி ஊத்த முடியாது என தமிழினியையும் பிரபஞ்சனையும் தயவு தாட்சண்யம் பார்க்காமல் அவர்கள் வீட்டில் இருந்து துரத்தி விட்டிருந்தான்.
திக்குத் தெரியாமல் முழித்த, தமிழினிக்கு தூரத்து உறவினர் ஒருவர் தான் மதுரையில் ஒரு மில்லில் வேலை வாங்கிக் கொடுக்க, அவரின் உதவியுடன் மதுரைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அன்னையும் மகனும் வீடெடுத்து தங்கியிருக்கின்றனர்.
அன்னையின் கஷ்டத்தை கண்டு வளர்ந்ததாலோ என்னவோ, படிப்பின் மீது அதிக கவனம் கொண்ட பிரபா, நன்றாக படித்து அன்னையின் துயரை போக்கிவிட வேண்டும் என வைராக்கியமாக இருந்தான்.
அதுமட்டுமல்லாமல், அதிகாலையில் எழுந்து வீடு வீடாக சென்று பேப்பர் போடும் வேலையை செய்து வேறு அன்னைக்கு உதவிக் கொண்டிருக்கிறான்.
இதோ, இப்போது கூட பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்ததால், இந்த பள்ளியில் கட்டணமில்லாமல் அவனுக்கு சீட்டு கிடைத்த ஒரே காரணத்தால் மட்டுமே அந்த அரசுப்பள்ளியில் இருந்து இங்கே வந்து சேர்ந்திருக்கிறான்.
எந்த வகையிலும் அன்னைக்கு கஷ்டம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் முனைப்பாய் இருப்பவன், நிச்சயம் ஒருநாள் நல்ல நிலைமைக்கு வந்து அன்னையை கண்ணுக்குள் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே தன் ஒரே கனவு என அனைத்தையும் கவியிடம் சொல்லி முடித்திருக்க,
கவி அனைத்தையும் கேட்டு சில நொடிகள் சிலையாய் சமைந்திருந்தாள்!!!
துன்பம் எனும் வார்த்தைக்கு அர்த்தம் கூட அறிந்திராத கவிக்கு, பிரபஞ்சன் மற்றும் அவனின் அன்னையை எண்ணி கண்கள் கலங்கியது!!!
‘ ச்சே!! எவ்வளவு கஷ்டம்!!! இவங்களை கஷ்டப்படுத்துனவங்க எல்லாம் நல்லா இருக்காங்க!! ஆனா இவங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கஷ்டமா இந்த கடவுள் கொடுத்திருக்காரு!!!” என கடவுளின் மீது ஆதங்கம் கொண்டவளுக்கு,
தமிழினியின் தந்தை தொடங்கி, அவரின் சித்தி, சித்தியின் மகன், பூமேஷ், அவரின் அன்னை என அனைவரின் மீதும் கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தது கவிக்கு!!
என்ன கோபம் கொண்டு என்ன பயன்?? எனத் தோன்றிய போதும், அவளால் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை!!!
முதலில் கற்பு என்பது பெண்ணுக்கு மட்டும் தான் என சொன்னவனைக் கண்டுபிடித்து கொல்ல வேண்டும் என ஏதேதோ நினைத்துக்கொண்டு கவி தீவிரமாக அமர்ந்திருக்க,
“ஹேய் கவி!! என்னாச்சு???” என தன் இயல்பை மீறி சற்று சத்தமாக அவளை அழைத்திருந்தான் பிரபஞ்சன்.
அவனின் சத்தத்தில் தன் சிந்தனையில் இருந்து விடுபட்ட கவி,
“ப்ச்!! போ பிரபா!! யாருமே சரியில்லை!! ஆண்ட்டிக்கும் உனக்கும் மட்டும் எவ்வளவு கஷ்டம்??? ஆனா உங்களுக்கு இவ்வளவு கெடுதல் பண்ணவங்க எல்லாரும் நல்லா இருக்காங்க.. யாரோ பண்ண தப்புக்காக இந்த கேவலமான சமுதாயத்துல நீயும் ஆண்ட்டியும் எவ்வளவு அவமானங்களை சந்திக்கிறீங்க!!” என்றவளின் குரலில் தான் எத்தனை வேதனை!!!
தனக்காக இவ்வளவு யோசித்து வருந்தும் கவியை வாஞ்சையாகப் பார்த்திருந்த பிரபாவின் முகத்தில் ஒரு மென்முறுவல்!!!
“ப்ச்!! சிரிக்காத!! எனக்கு கோபம் கோபமா வருது!! எனக்கு மட்டும் பவர் இருந்தா உன்னைக் கஷ்டப்படுத்துன எல்லாரையும் உண்டு இல்லைன்னு பண்ணிருவேன்!!” என உணர்ச்சிவசத்தில் கவி பேசிக் கொண்டிருக்க,
முதன்முதலாய் கவியிடம் நட்பையும் மீறிய ஒரு நெருக்கத்தை உணர்ந்தான் பிரபஞ்சன் அந்நொடி!!
நிச்சயமாய் காதல் இல்லை!! அதைப்பற்றி யோசிக்கும் சூழ்நிலையில் அவன் நிச்சயம் இல்லவே இல்லை!! ஆனால், அவன் அன்னைக்கு அடுத்து கவியை மிகவும் மனதிற்கு நெருக்கமாக உணர்ந்தான் அந்த பதின்ம வயது பிரபஞ்சன்!!!
பிரபஞ்சனின் கதை தெரிந்த பின், மேலும் அவனோடு நட்பாகிய கவி, தன்னுடைய பெரும்பான்மையான நேரங்களை அவனுடனே செலவளிக்க, இருவரிடையே அழகான, ஆழமான நட்பு ஒன்று உருவாகியிருந்தது!!!
“நட்பு எனும் தொடக்கப்புள்ளியில் தொடங்கிய பந்தம்!!
முடிவில்லா தொடர்கதையாய் நீண்டு கொண்டு போவது தான் காதலோ??”
error: Content is protected !!