Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 19

அன்பு – 19

“கவி!! புரிஞ்சு தான் பேசுறியா??? தயவுசெஞ்சு உளறாம போ கவி!!” என்றவனை முறைப்புடன் நோக்கிய கவி,



Advertisement

“உளறுறேனா?? பிரபா என்னைக் கொலைகாரி ஆக்காத!! ஆல்ரெடி நான் டென்ஷனா இருக்கேன்.. நீயும் படுத்தாத!! ஒழுங்கா நான் சொல்றதைக் கேளு!!” என அடமாய் நின்றாள்.

“என்ன கேட்க சொல்ற கவி!!! நம்ம வயசென்ன?? கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம கல்யாணம் பண்ணிக்கலாம்னு வந்து நிக்குற!!! ஃபர்ஸ்ட் நீ எனக்கு நல்ல பிரெண்ட் மட்டும் தான் கவி!! அதை உன் மனசுல நீ நல்லா பதிய வச்சுக்கோ.” என என்றும் இல்லாத அழுத்தத்துடன் பிரபா மொழிய,

Advertisement

Advertisement

சட்டென கண்கள் கலங்கிய கவி,

“பொய்!!! நீ பொய் சொல்ற!!! எங்க என் கண்ணைப்பார்த்து சொல்லு!! நான் உனக்கு வெறும் பிரெண்ட் தானா???” என அழுகையுடன் கேட்டவளை இயலாமையுடன் எதிர்கொண்ட பிரபா,

Advertisement

“ஷ்!! கவி!! அழாத..” என இறைஞ்சினான்.

“நான் என்னமோ பண்ணிட்டு போறேன்.. நீ ஒழுங்கா நான் கேட்டதுக்கு பதில் சொல்லு!! நான் உனக்கு பிரெண்ட் மட்டும் தானா???” என அவள் பதில் தெரிந்தே ஆக வேண்டும் என நிற்க,

அவன் எப்படிச் சொல்லுவான், அவனுக்கு எல்லாமுமாக இருக்கும் அவளை, தோழி என ஒரு உறவிற்குள் மட்டும் எப்படி அடக்கி வைப்பான்??

“கவி!! பிளீஸ் கவி!! புரிஞ்சுக்கோ!! இதெல்லாம் சரியில்லை.. திடீர்னு உனக்கு என்னாச்சு??? இத்தனை நாள் நல்லாதானே இருந்த?? இப்போ என்ன மறுபடியும் காதல்?? கல்யாணம்??.. இதெல்லாம் வேணாமே” என இயலாமையுடன் மொழிந்த பிரபாவை மீண்டும் முறைத்த கவி,

“நானா வந்து லவ்வை சொன்னதுனால உனக்கு ஈசியா போயிட்டேன்ல!!! நீ முன்னாடி என்னை பிரெண்டா பார்த்திருந்தாலும், இப்போ நமக்குள்ள இருக்கது பிரண்ட்ஷிப் மட்டுமே இல்லைன்னு உனக்கும் தெரியும்!!! முன்னாடி இதைப்பத்தி பேசலைனா அதுக்கான அவசியம் வரலை!!! ஆனா இப்போ வந்திருக்கு.. சோ எனக்கு முடிவு தெரிஞ்சே ஆகணும்!! உனக்கு நான் வேண்டுமா?? வேண்டாமா??” என கவி உறுதியாக நிற்க,

“ப்ச்!! என்ன கவி கேள்வி இது?? எனக்கு இப்போதைக்கு இந்த உலகத்துல இருக்கது நீ மட்டும் தான்.. நீயும் இல்லைன்னா நான் எப்படி இருப்பேன்..” என தவிப்புடன் கேட்டவன்,

“பிளீஸ் கவி!! இதை விடேன்.. ” எனக் கெஞ்சியே விட,

“பிரபா!! உனக்கு புரியுதா இல்லையா?? நான் உன் கூட இருக்கணும்னா இது ஒண்ணு தான் ஒரே வழி!!”

“திரும்பத் திரும்ப அதையே சொல்லாத கவி!! கொஞ்சமாச்சும் யோசிச்சிதான் பேசுறியா?? கல்யாணம் பண்ணிக்கிட்டா?? அதோட எல்லாம் முடிஞ்சுதா?? அதுக்கடுத்து தான் வாழ்க்கையே ஆரம்பிக்கும் கவி!! முதல்ல என்கிட்ட அடுத்தவேளை சாப்பாட்டுக்கு காசு இருக்கா??  அம்மா போன பின்னாடி, வீட்டு வாடகைக்கு கூட பணம் பத்தாம நான் நைட்டும் ஏரியா பசங்களுக்கு டியூஷன் எடுத்து தான் பொழைப்பை ஓட்டுறேன்னு உனக்கும் தெரியும்!!! இப்படி அஞ்சுக்கும், பத்துக்கும் சிங்கி அடிக்கிற பொழைப்பு என்னோட போகட்டும்.. உனக்கு அந்த நிலைமை வேண்டாம்.. நீ எப்படி இருக்கணும் தெரியுமா??? ராணி மாதிரி வாழணும் நீ!!! என் சுயநலத்துக்காக உன் வாழ்க்கையை நான் கெடுக்க மாட்டேன்.. நீ.. நீ என் கூடவே இல்லைனாலும் பரவாயில்லை.. ஆனா நீ நல்லா இருக்கணும்!!” என உணர்ச்சிவசத்தில் பேசிக்கொண்டு வந்தவன், கடைசி வரியில் தன்னையும் மீறி கண் கலங்கிட,

கவிக்கும் அனைத்தையும் அலசி ஆராயும் பக்குவமோ, வயதோ இல்லையே!!!

அவளுக்கு, அவளின் பிரபா வேண்டும்!! அதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தவள், திருமணம் செய்துவிட்டால் தங்களை யாராலும் பிரிக்க முடியாது என ஸ்திரமாக நம்பினாள்.

“பிரபா!! எனக்கு எல்லாம் புரியாம எல்லாம் இல்லை!! பட் இப்போ விட்டா, உன்னை மிஸ் பண்ணிருவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு டா!! புரிஞ்சுக்கோ!!” என மண்டியிட்டு அவன் கண்களைப் பார்த்தபடி அமர்ந்தவள்,

“இப்போதைக்கு கல்யாணம் மட்டும் பண்ணிக்கலாம் யாருக்கும் தெரியாம!! நம்ம படிப்பை முடிச்சிட்டு எங்க வீட்டுல சொல்லிக்கலாம் பிரபா!! பிளீஸ்!!” என சம்மதம் சொல்லிவிடேன் என கண்களாலேயே கெஞ்சிக் கொண்டிருந்தாள்.

“கவி!!! என்னை மறுபடியும் மறுபடியும் நோ சொல்ல வைக்காத கவி.. நீ கேட்டு, அதை மறுக்கிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!! இது ஒத்துவராது!! புரிஞ்சுக்கோ!!” என பிரபா அவளுக்கு எப்படியாவது புரிய வைத்துவிட மாட்டோமா என எவ்வளவோ முயற்சி செய்ய,

ம்ஹூம்!! கவி தன் பிடிவாதத்தை சிறிதும் தளர்த்தவில்லை!!

“எனக்கு நீ வேணும் பிரபா!! அட் எனி காஸ்ட்!! நீ மட்டும் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கலை, அப்பறம் என்னையும் நீ தொலைச்சிட வேண்டியது தான்!!! மொத்தமா!!!” என கடைசியாக தன் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்த கவி, மறைமுகமாய் அவனை மிரட்டினாள்.

அவளின் கூற்றில் நெஞ்சம் பதற, கலங்கித் துடித்த பிரபா,

“விளையாட்டுக்குக் கூட அப்படி சொல்லாத கவி!!!”

“உனக்கு என்ன இப்போ கல்யாணம் தான பண்ணனும்?? சரி!! உன் இஷ்டப்படியே செய்!!!” என வெற்றுக்குரலில் சொன்னவன்,

“என்னைக் கொஞ்ச நேரத்துக்கு தனியா விடு!!” என நடந்ததை, நடக்கப்போவதை ஜீரணித்துக்கொள்ள அவகாசம் எடுத்துக்கொண்டு, இலக்கில்லா பார்வையுடன் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

இப்படி வலுக்கட்டாயமாக பிரபாவை மிரட்டி, திருமணம் செய்ய வைப்பது கவிக்கும் வலியைக் கொடுக்க,

“என்னால உன்னை விட்டுக்கொடுக்க முடியாது பிரபா!! உன்னை ஹர்ட் பண்றேன்னு தெரியுது!! பட் எனக்கு வேற வழியில்லை. மன்னிச்சிடு!!!” என மனதோடு அவனுடன் பேசிக்கொண்டவள், அடுத்தடுத்து என்ன செய்யவேண்டும் என விரைவாய் திட்டமிட்டாள்.

அவளின் முடிவின்படி, அடுத்த நாளே, அவர்களின் கல்லூரி அருகில் உள்ள முருகன் கோவிலில், பிரபா – கவியின் திருமணம், யாரும் இல்லாமல் எளிமையாக நடந்தேற,

எத்தனை குழப்பங்கள் இருந்தாலும், கவியின் கழுத்தில் மூன்று முடிச்சிடும் போது, கடைசி வரை அவளை  கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற வேண்டுதலுடன் அவளுக்கு முழுமனதுடன் தான் தாலி கட்டினான்.

என்னதான் பிரபாவை அரட்டி உருட்டி திருமணம் செய்து கொண்டாலும், கவிக்கு இன்னும் தன் வீட்டை எண்ணி கலக்கமே!!

அதுவும் அவளின் அன்னை, அன்று விரைவில் கவிக்கு யாரென்றே தெரியாத அந்த ஜெயசிம்மனுடன் திருமணம்  செய்யப்போவதைப் பற்றி சேதுராமனிடம் பேசியதைக் கேட்டபின்பு தான் கவிக்குள் இத்தனை தவிப்பு!!

தன்னைச்சுற்றி பின்னப்படும் சூழ்ச்சியில் இருந்து எப்படியாவது மீண்டுவிட வேண்டும், பிரபாவை விட்டுவிடக்கூடாது எனும் எண்ணத்தில் தான் பிரபாவின் சம்மதம் இல்லாமலே, இந்தத் திருமணத்தை நடத்தி முடித்திருந்தாள்.

நிச்சயம் இந்தத் திருமணம், இவர்களுக்காக காத்திருக்கும் ஆபத்துகளில் இருந்து காக்குமா என கவிக்குத் தெரியவில்லை!! ஆனால் மாற்றனின் மனைவியை மணம் புரிய அந்த முகம் தெரியா ஜெயசிம்மன் துணியமாட்டான் என அவனைப்பற்றி அறியாமல் தப்புக்கணக்கு போட்டுவிட்டாள் பேதை!!!

திருமணம் முடிந்த பின்னாவது, பிரபாவிடம் அவர்களின் பூர்வீகம், சேதுராமனின் குடும்பப் பின்னணி, ஜெயசிம்மன் என எதைப்பற்றியாவது கவி சொல்லியிருக்கலாம். ஆனால், பிரபாவையும் தேவையில்லாமல் பயம் கொள்ளச் செய்ய வேண்டாம் என நினைத்து எதையும் சொல்லாமலே விட்டுவிட, பிரபஞ்சனுக்கு கடைசி வரை எதற்கிந்த அவசரத் திருமணம் எனத் தெரியாமலே போய்விட்டது!!

ஒருவாரத்தில் ஜல்பல்லியில் இருந்து திரும்பிய சேதுராமன், மிகுந்த யோசனையுடனே காணப்பட்டார்.

என்னதான், ஜெயசிம்மனை கவிக்கு திருமணம் செய்துகொடுக்க முடிவெடுத்துவிட்டாலும், இந்த ஒரு வாரத்தில் அவனை அருகில் இருந்த பார்த்த பின்பு, அவசரப்பட்டுவிட்டோமோ என மிகவும் யோசித்தார் அவர்!!

கட்டப்பஞ்சாயத்து தான் அவர்களின் குடும்பத் தொழில் என்றாலும், பெரும்பாலான பிரச்சனைகளை அடிதடியோடு முடித்துக் கொண்டு, முடிக்க முடியாத சில பிரச்சனைகளுக்கு மட்டுமே ஆயுதத்தைக் கையில் எடுப்பர்!!

சேதுராமனின் தமக்கை யசோதாவிற்கு திருமணம் முடிந்ததும், அவரின் கணவர், சேதுராமனை முழுதாக ஓரம் கட்டிவைத்து விட்டு, அந்தத்தொழிலை முழுதாக கையில் எடுத்துக்கொள்ள,  சில வருடங்கள் பொறுத்துப்பார்த்த சேதுராமன், மரியாதை இல்லாத இடத்தில் இருக்கப் பிடிக்காமல், தன் குடும்பத்தை அழைத்துக்கொண்டு தமிழகம் வந்திருந்தார்.

கவி பிறந்த போதே, அவள் தான் தன்னுடைய மருமகள் என யசோதா சொல்லியிருக்க, அதையே இன்னும் பிடித்துக்கொண்டு ஒருவன் இத்தனை வருடமாக காத்திருப்பான் என கனவிலும் அவர் எண்ணவில்லை!!

அதிலும், இப்போது அம்மாநிலத்தின் பிரபல அரசியல்வாதியின் வலது கையாக செயல்பட்டுவரும் ஜெயசிம்மனுக்கு, கொலைகள் செய்வதெல்லாம் சர்வ சாதாரணம் என அறிந்த பின்னே, அவசரப்பட்டுவிட்டோமோ என அஞ்சியவர், இதற்கு மேல் அவனிடம் இருந்து பின்வாங்குவதும் முடியாத காரியம் என்பதால் என்ன செய்வது என யோசித்துக்கொண்டு இருந்தார்.

மிகுந்த யோசனைக்குப் பிறகு, முதலில் அந்த பிரபாவின் கணக்கை முடித்து வைத்துவிட்டு, அதன்பின் கவியின் படிப்பைக் காரணம் காட்டி அவனிடம் சற்று அவகாசம் கேட்கலாம், அதற்குப் பின் ஜெயசிம்மனை எப்படி சமாளிப்பது என்று யோசிக்கலாம் என அவர் தற்காலிமாக அந்த பிரச்சனைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்.

அவனின் கூற்றுப்படி, கவியிடம் பெரிதாய் கோபத்தைக் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் அவளை கண்காணிப்பதை நிறுத்தவில்லை சேதுராமன்.

அதை உணர்ந்துகொண்ட கவி, இப்போதெல்லாம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கிறாள், கல்லூரி நேரம் தவிர, தனியே வேறெப்போதும் பிரபஞ்சனை சந்திக்க அவள் முயலவில்லை. ஆனால் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து கல்லூரியில் அவனை காதலில் திளைக்க வைத்துக் கொண்டாடி தீர்த்தாள் பெண்ணவள்.

என்ன தான் கவிக்கு கணவனாகிவிட்டாலும், தன் எல்லைக்கோட்டில் இருந்து சற்றும் விலகவில்லை பிரபஞ்சன். அவள் மீது தனக்கு இருப்பது பெயரிடப்படாத பேரன்பு மட்டும் தான் உறுதியாக நம்பியவன், இன்னும் காதலாய் அவளைப் பார்த்திருக்கவில்லை. அதில் கவிக்கு வருத்தம் தான் என்றாலும், அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனுக்கும் சேர்த்து பெண்ணவள் திகட்டத் திகட்ட அவனைக் காதலித்து திக்குமுக்காட செய்தாள்.

அந்த இரண்டு மாதமும், அவர்கள் வாழ்க்கையில் அடுத்து திரும்பவே கிடைக்கப்போவதில்லை என்று உணர்ந்ததாலோ என்னவோ, மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த அன்றில் பறவைகள் வானில் சிறகடித்துப் பறக்க, அதன் சிறகுகளை முறித்துப் போட மதுரையில் காலெடுத்து வைத்திருந்தான் ஜெயசிம்மன்.

அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை,

செமஸ்டர் தேர்வுகள் எல்லாம் நிறைவுபெற்று விட்டதால், கவி இலகுவாக வீட்டில் அமர்ந்து ஏதோ பாடல் கேட்டுக் கொண்டிருக்க, வீட்டின் அழைப்பு மணியின் ஓசை அவள் கவனத்தைக் கலைத்தது.

சேதுராமன் ஒரு திருமணத்திற்குச் சென்றிருக்க, பொற்கொடி பின்கட்டில் ஏதோ சமையலுக்கு அரைத்துக் கொண்டிருந்தார்.

எனவே வேறு வழியில்லாமல், கவி தான் சென்று கதவைத்திறக்க, அங்கே ஆளை விழுங்கும் பார்வையுடன் ஆறடியில் ஆஜானுபாகுவான தோற்றத்துடன் நின்றிருந்தான் ஜெயசிம்மன்.

அவனைக் கண்டு முதலில் மிரண்டு போன கவி,

‘யாருடா இந்த மலைமாடு’ என நினைத்துக்கொண்டே நின்றவள், அவனின் உரிமையான பார்வையில் சற்று கோபம் வரப்பெற்றவளாக,

“யார் வேணும்???” என சுள்ளெனக் கேட்டாள்.

அவளை மேலிருந்து கீழாய் தன் பார்வையால் அளவிட்டவன், நிதானமான குரலில்,

“நீதான்!!!” என்று சொல்ல,

அவன் பார்வையிலே கொதித்துப் போய் நின்றிருந்த கவி, இப்போது அவன் இப்படிச் சொல்லவும்,

“யூ ராஸ்கல்!!” என சட்டென கோபத்தில் அவனை அடிக்க கைநீட்டி விட,

“அஞ்சலி!!!” என பதறிப்போய் கத்திய பொற்கொடி,

“அவர் உனக்கு முறைமாமன்!! மரியாதையா நடந்துக்கோ!!!” என அடிக்குரலில் அவளைக் கண்டித்தவர்,

“வாங்க!! வாங்க தம்பி!! அவளுக்கு நீங்க யாருன்னு தெரியலை!! அதான்!!!” என அவனை சமாதானம் செய்ய,

அவரையும் கவியையும் அழுத்தமாகப் பார்த்துக்கொண்டே வீட்டிற்குள் அடியெடுத்து வைத்த ஜெயசிம்மன்,

“அவளுக்குத் தெரியலை இல்லை!! நீங்க சொந்தத்தை சொல்லி வளர்க்கலை!!” என பொற்கொடிக்கு குட்டு வைத்தவன்,

அங்கே குழப்பமாய் அவனைப் பார்த்தபடி நின்றிருந்த கவியைக் கண்டு,

“போட்டோல விட நேர்ல இன்னும் அழகா இருக்கியே பங்காரம்!!!!” என்று சொல்லி அவளின் ரத்த அழுத்தத்தை உயர்த்தியவன்,

“என்ன இன்னும் நான் யாருன்னு தெரியலையா???” என அழகாய் சிரித்து புருவம் உயர்த்தியவன்,

“நீங்க இன்னும் சொல்லலையா??” என பொற்கொடியை வேறு பார்த்து வைத்தான்.

“இவர் தான் டி உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறாரு!!!” என மெதுவாய் கவியின் தலையில் இடியை இறக்கினார் பொற்கொடி!!

திருமணம் எல்லாம் படிப்பு முடிந்தவுடன் தான் செய்வார்கள் என குருட்டு தைரியத்தில் இருந்த பெண்ணுக்கு, இப்போது என்ன செய்வது என பலத்த யோசனை!!

அதற்குள் சேதுராமன் வேறு வந்துவிட, ஜெயசிம்மனைக் கண்டு அதிர்ந்தாலும், அதை காட்டிக்கொள்ளாமல் சிரிப்புடன் அவனை வரவேற்று உபசரித்தவர்,

“அஞ்சலி!! நீ உள்ள போ!!” என மகளை உள்ளே அனுப்பிவிட்டு,

“என்ன தம்பி!! சொல்லாம கொள்ளாம வந்திருக்கீங்க!??” என தயக்கத்துடன் அவனிடம் விசாரித்தார்.

அவரின் அல்லுடு எனும் அழைப்பு தொலைந்து விட்டதை கண்டுகொண்ட சிம்மன், மனதிற்குள் வன்மச் சிரிப்புடன்,

“ஏன் வரக்கூடாதா??” என இடக்காகக் கேட்டான்.

“அச்சோ!! இது நம்ம வீடு!! நீங்க எப்போ வேணும்னாலும் வரலாம்!!!”

“அம்மாக்கு என் கல்யாணத்தை உடனே பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருக்காம். அதுனால அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணத்தை வச்சுக்கலாம்னு நேரிலேயே சொல்லிட்டு போகத்தான் வந்தேன். உங்க எல்லோருக்குமான டிக்கெட்ஸ் நாளைக்கு வந்திடும்.. புதன் கிழமை ஃப்ளைட்!! வந்து சேருங்க!!” என கட்டளை போல் சொல்லியவனைக் கண்டு அதிர்ந்தவர்,

“அதுக்குள்ள கல்யாணமா?? அஞ்சலி இன்னும் படிச்சே முடிக்கலையே!!” என கோபத்தை மறைத்துக்கொண்டு தன்மையாகவே சேதுராமன் கேட்க,

“அங்க பெல்லிக்கான (கல்யாணம்) எல்லா வேலையும் நடந்துட்டு இருக்கு.. கிளம்பி வந்துடுங்க!!!” என அதுதான் முடிவு என்பதைப் போல் அழுத்தமாக சொல்லியவன்,

“என்னைப்பத்தி தெரியும்னு நினைக்கிறேன்.. குறிச்ச நேரத்துல பெல்லி ஒழுங்கா நடக்கலை!!!! அப்பறம்…” என்ன செய்வான் என்பதை பார்வையாலே சேதுராமனுக்கு உணர்த்திவிட்டு, சிறு புன்னகையுடன் அங்கிருந்து கிளம்பிவிட்டான்.

அவன் சொன்ன செய்தியில் சேதுராமனுக்கு,

‘ இதென்ன டா பூனைக்கிட்ட இருந்து தப்பிக்க புலி கிட்ட மாட்டிகிட்ட கதையா இருக்கு ‘  என நொந்து போய், என்ன செய்து தப்பிப்பது என தீவிர சிந்தனையில் இருக்க,

அறைக்குள் இருந்த அஞ்சலியும் அவனின் பேச்சில் அதிர்ந்து, முதலில் இங்கிருந்து தப்பித்து சென்றுவிட வேண்டும் என முட்டாள்தனமாக அவசரத்தில் முடிவெடுத்தவள், அன்று இரவே, யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, தூக்கத்தில் இருந்த பிரபாவை அடித்து எழுப்பி கிளப்பிக்கொண்டு வேகவேகமாக பேருந்து நிலையம் செல்ல,

“கவி!! பைத்தியமா உனக்கு?? என்ன தான் ஆச்சு?? இந்நேரத்துக்கு எங்க கூட்டிட்டு போயிட்டு இருக்க நீ??” என பிரபாவின் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லும் நிலையில் இல்லை அவள்!!!

பதறிய காரியம் சிதறிப் போகும் என பக்குவமில்லா அந்தப் பெண்ணிற்கு அப்போது புரியவில்லை.

இந்த ஊரை விட்டு இப்போதைக்கு சென்றுவிட்டால் போதும், ஓடிப் போன பெண்ணை ஜெயசிம்மன் திருமணம் செய்ய மாட்டான், பெற்றோரும் கோபத்தில் சில வருடங்கள் தன்னுடன் பேசாமல் இருப்பர் பின் அவர்களைப் பார்த்துக்கொள்ளலாம் என தப்புக்கணக்கு போட்டவள், விரைவாக வண்டியை செலுத்த,

பிரபஞ்சனுக்கு ஏதோ தவறாகப்பட்டது!!

ஆனால் கவி தான் கடைசி வரை வாயைத் திறக்கவே இல்லையே!!

என்ன நடந்தது, நடக்கின்றது என்று புரியாமலே அவள் இழுத்த இழுப்பிற்கு சென்று கொண்டிருந்தான் பிரபஞ்சன்.

நடுராத்திரி இரண்டே முக்கால் மணிக்கு பேருந்து நிலையத்தை அடைந்தவர்கள், அங்கே இந்நேரத்திலும் மக்கள் நடமாட்டம் இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்து,

“இங்க ஸ்கூட்டியைப் போட்டா கண்டுபிடிச்சிடுவாங்க.. நான் கொஞ்சம் தள்ளிப்போய் போட்டுட்டு வரேன்.. நீ இங்கேயே இரு!!” என பிரபாவை இறங்கச் சொன்ன கவியை,

அழுத்தமாக முறைத்த பிரபஞ்சன்,

“நீ நிஜமாவே மெண்டல் ஆகிட்டியா?? ஃபர்ஸ்ட் கல்யாணம் பண்ணனும்னு வந்து நின்ன!! இப்போ யாருக்கும் தெரியாம நடுராத்திரி ஓடிப் போகணும்னு நிக்கிற!! கவி!! மரியாதையா வீட்டுக்கு போ!! இது எதுவுமே சரியில்லை!!!” என வாழ்நாளில் முதன்முறையாக அவ்வளவு கடுமையாக பேசியிருந்த பிரபஞ்சனை அதிர்ச்சியுடன் பார்த்த கவியின் கண்கள், சற்று நேரத்தில் பயத்தில் விரிந்து கொண்டது!!!

ஆம், பிரபஞ்சனுக்குப் பின் தன் குரூரச் சிரிப்புடன் நின்று கொண்டிருந்தான் ஜெயசிம்மன்.

அவன் கண்கள் சொன்ன செய்தி, பெண்ணவளின் நெஞ்சத்தைப் பதறச் செய்ய,

“பிரபா!!!” என பதறிப்போய் அவனை தன் பக்கம் அவள் இழுப்பதற்குள்ளே, ஜெயசிம்மன் கண்களில் ததும்பிய வன்மத்துடன், பிரபஞ்சனின் பின்னந்தலையில் இரும்பு ராட் கொண்டு பலமாய்த் தாக்கியிருந்தான்.

“பிரபாஆஆ!!!!” என கண்ணீருடன் கவி கதற,

என்ன நடந்ததென்று தெரியாமல், திடீரென ஏற்பட்ட அதீத வலியில்,

“அம்மாஆஆஆ!!!” எனும் அலறலுடன் அப்படியே மடங்கிச் சரிந்த பிரபாவின் இமைகள் கொஞ்சம் கொஞ்சமாய் மூடிக்கொண்டது!!!!!

மூடிய விழிகளிலும் அவனின் கவியின் அழுத தோற்றம் வந்து அவனை இம்சை செய்ய,

“கவி!!!!!” என தீனமாய் முனகியவன், ஆழ்ந்த மயக்கத்திற்குள் சென்றுவிட்டான்.

“காதலுக்கும் கௌரவத்திற்கும் நடக்கும் போரில், 

 கண்கட்டி காட்டில் விட்டது போல் தவிக்கும் நாயகன், கண்திறந்து நாயகியை மீட்பானா இல்லை காட்டின் இருட்டில் தொலைந்து போவானா??”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!