Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

18. மகாமணி - தூறலாய் நீ சாரலாய் நான்

தூறலாய் நீ… சாரலாய் நான்…15

தூறல் – 15
குருவின் முதுகில் தன் முதுகை சாய்த்தபடி கால்கள் இரண்டையும் விரித்து குட்டி கவுன் தொடைவரை ஏறியிருக்க சென்றமுறை அவன் வாங்கி வந்திருந்த ரிமோட் காரினை லாவகமாக நகர்த்தி இதழ் விரிந்த சிரிப்புடன் விளையாடிக் கொண்டிருந்தாள் சவி.


Advertisement

தலை குனிந்து அமைதியாக காலை உணவினை உண்டு கொண்டிருந்தவனுக்கு பரிமாறியபடி அவனையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் அஞ்சலி.
அருகில் இருந்த தட்டினை அவள்புறம் நகர்த்தி இடுக்கி கொண்டு சப்பாத்தி இரண்டினை எடுத்து அவள் தட்டில் வைத்து குருமாவை அவள்புறமாக நகர்த்தி வைத்தான் குரு. 

Advertisement

Advertisement

“சாப்பிடு…”
தலை நிமிர்ந்து அவள் முகம் பார்த்து கூறவில்லை. ஆனால் அந்த குரலில் ஒரு கனிவு தெரிந்தது.

Advertisement

இந்த நாற்பதே நாட்களில் என்ன மாயம் செய்தான்..? அவள் வாழ்வில் மட்டுமல்ல… மனதிலும்கூட ஏதோ மாயாஜாலம் செய்துவிட்டானே. 
தந்தை அன்பிற்காக சவி ஏங்குவது ஒருவகை என்றால் அவள் எதிர்பார்க்கும் அன்பு..???
அப்படி ஒரு அன்பு அவள் வாழ்ந்த மின்மினி வாழ்க்கையில் அவளுக்கு கிடைத்ததே இல்லையே… அதை முற்றிலுமாக அவள் உணர்ந்ததே இல்லையே…
திருமணம் என்றால் கணவனும் மனைவியும் உடலும் உடலும் உரசி மற்றும் ஒரு உயிரை உருவாக்க வேண்டும் என்ற ஆதி காலத்து அகராதிதானே அவள் வாழ்விலும் நடந்து முடிந்தது. புரிதலே இன்றி ஒற்றை மஞ்சள் கயிற்றின் உறவில் உரிமை என்ற பெயரில் இருபதே நாட்கள் ஒரு இல்லற வாழ்க்கை.
அவனைப் பற்றி அவளுக்கு என்ன தெரியும்..? 
அவன் பெயர் அசோக் என்பது தெரியும்… வெளிநாட்டில் வேலையில் இருக்கிறான் என்பது தெரியும்… விரைவில் அவளையும் வெளிநாடு அழைத்துச் செல்வான் என்று தெரியும்… அதை தாண்டி..???
அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, குணம், சிந்தனை, அக்கறை, அன்பு, காதல், திறமை, இப்படி நீண்ட நெடுந்தூரப் பயணமான இல்வாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை பற்றி அவள் அறிந்து கொண்டாளா என்றால் பூஜ்ஜியம்தானே பதிலாகக் கிடைக்கிறது. 
இணைந்து வாழ்ந்த தெரிந்து கொள்ளலாம் என்ற எல்லோருக்குமான எண்ணம்தான் அவளுக்கும் இருந்தது. அதையும் பிழை என்று சொல்லிவிட முடியாதே. 
ஆனால் விதி வேறு வழி அல்லவா செய்து வைத்திருந்தது… அதையும் தாண்டி அவனைப் பற்றி தெரிய வந்த தகவல்கள் அனைத்தும் அவள் இதயத்தில் உண்டான காயத்தின்மீது மேலும் மேலும் ரணத்தை கொடுத்த காரணிகளாகத்தானே மாறிப் போயிருந்தன. 
தவறான ஒருவனுக்குத்தான் வெகு சில நாட்கள் மனைவியாக வாழ்ந்தோம் என்ற உண்மை இதயத்தில் அறைந்தபோது வாழ்வில் தோற்றுப்போன மொத்த வலியையும் மூளைவரை உணர்ந்திருந்தாள் அஞ்சலி. அதையே தாங்கிக் கொள்ள முடியாத அவளுக்கு இடைவிடாமல் கொடுக்கப்பட்ட மனரீதியான உளைச்சல்கள் அவளை உயிரோடு எரித்துக் கொன்றனவே. தன்னை பெற்றவர்களும் அவர்களுக்கு உறுதுணையாக நின்று கடனை கட்ட முயற்சித்த வேலைகள் என்று அவள் கடந்து வந்த பாதை அனைத்துமே கசப்புகள் நிறைந்த ஒன்றுதானே. 
ஆனால் இந்த 40 நாட்களாக அவள் அனுபவிக்கும் வாழ்க்கை..?? 
எந்நேரமும் நாவில் தித்திக்கும் தேன் சுவைபோல் ஏதோ ஒரு இதமும் இனிமையும் இதயத்தின் ஓரமாய் எந்நேரமும் தேங்கி நிற்கிறது. சிறிய விஷயத்தில் தொடங்கி ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்யும் குருவின்மேல் என்ன மாதிரியான உணர்வும் எண்ணமும் மூளை உணர்த்துகிறது என்பதை அவளால் முழுமையாக புரிந்து கொள்ளக்கூட முடியவில்லை. 
இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா..? இப்படித்தான் மனிதர்கள் இருப்பார்களா..? இப்படி ஒருவனைத்தான் அந்த தீபா இழந்துவிட்டாளா..? 
இந்த நொடிகூட இறந்து போனவளால் இவனுக்கு இழப்பு என்று தோன்றவில்லை. இறந்து போனவள்தான் இவனை இழந்துவிட்டாள் என்றுதான் இவள் மனம் சிந்திக்கிறது. 
எனக்காக இத்தனை யோசிப்பவன் தன் மனைவிக்கும் மகளுக்கும் எத்தனை யோசித்திருப்பான்..? எப்படி வாழ்ந்திருப்பான்..? எத்தனை கனவுகளை தாங்கி இருப்பான்..? அனைத்தையும் துறந்து துறவியாக கடல் தாண்டி ஓடிவந்தவனின் இதயம் எத்தனை இறுக்கத்தையும் ஏக்கத்தையும் சுமந்திருக்கும். 
இரவு நேரங்களில் தன்னைப் பற்றி சிந்திப்பதை மாற்றி அவனைப் பற்றி சிந்திக்கத் தொடங்கியிருந்தாள் அஞ்சலி. 
அவளைப் பற்றி சிந்திப்பதற்கும் கவலைப்படுவதற்கும் இனி எதுவும் இருப்பதாக தோன்றவில்லை. அவளுக்காக அவன் இருக்கிறான் என்று ஆழ்மனம் அழுத்தமாக உணர்ந்து கொண்டதே. நான் இருக்கிறேன் என்ற அந்த ஒற்றை வார்த்தையில் அவளது மொத்த வலியையும் போக்கியிருந்தானே. 
அவனது வீடியோகால் அழைப்பிற்கு சின்னவளைவிட இவள்தானே சுவற்றுக் கடிகாரத்தை நொடிக்கு நூறு முறை பார்த்தபடியே வேலை செய்வதுபோல் போக்கு காட்டிக் கொண்டிருப்பாள். அவளிடம் அதிகம் பேசமாட்டான். நல விசாரிப்புகள் அக்கறையான வார்த்தைகள்தான். ஆனால் அதுவே அந்த ஒற்றை நாளைக்கு அவளுக்கு போதுமானதாக இருக்கும். ஆனால் சவியுடன் பேசி சிரித்து விளையாடும் போது மனம் ஏங்கித் தவிக்கும். 
மெல்ல மெல்ல ஏதோ ஒரு வகையில் முண்டி முண்டி நுழைந்து அவள் இதயத்திற்குள் ஒளிந்து கொண்டான் என்பதுதான் அவளும் உணர்ந்து கொண்ட நிதர்சனம். ஆனால் தனக்குள் தோன்றியிருக்கும் இந்த உணர்வுகளை அவனிடம் அவளால் வெளிப்படையாக பகிர்ந்து கொள்ள முடியுமா..? அவளைப் பற்றி என்ன நினைப்பான்..? என்ன யோசிப்பான்..? நினைத்தாலே நெஞ்சம் பதைபதைக்கிறது.
அவனது அக்கறைக்கு பழகிய மனம் அவனிடம் இருந்து வெளிப்படும் அன்புக்கும் ஏங்குகிறது. மகளுக்கு கொடுக்கும் அன்பில் 20% எனக்கும் கொடுக்க மாட்டாயா என்று உள்ளுக்குள் ஒரு மனம் தவித்து கரைகிறது. 
அவளையும் மீறி அவள் விழிகள் அவனை ரசனையாய் சுற்றி வட்டமிடுகின்றன. அவன் உச்சி முதல் பாதம் வரை அங்குலம் அங்குலமாக விழிகளால் வளைக்கிறாள். இதயத்தில் ஒரு குறுகுறுப்பு தோன்றி திட்டி பயமுறுத்தும். ஆனால் பலவற்றுக்கு ஏங்கிக் கிடக்கும் பேதையவளுக்கு அவனது மொத்த அன்பும் தனக்கானதாக வேண்டும் அதில் காலம் முழுக்க திளைத்து கிடக்க வேண்டும் என்று அவளையும் மீறி கற்பனைச் சோலை அவள் கட்டுப்பாட்டுகளை எல்லாம் கடந்து பறந்து விரிந்து போனதை பாவம் அவள்தான் எப்படி தடுப்பாள்.
மனம் மட்டும் இன்றி உடலும்கூட மரத்துப் போனவளுக்கு உடல் சார்ந்த தேவைகளும் ஏக்கங்களும் இந்த நொடிவரை எழவில்லை. மனம் சார்ந்த தேவைகளோடுதான் அவனை ஏக்கமாக பார்க்கிறாள். 
அக்கறையான அவனது விழிகள் நேசத்தோடு அவளை நோக்க வேண்டும்… உனக்கு நான் இருக்கிறேன் என்ற அந்த வார்த்தையில் அவன் சகலமுமாக அவளுக்கு மாற வேண்டும்… தள்ளி நிற்பவளை தோளோடு அழுத்தி தன் நெஞ்சில் சாய்த்து இதமாய் தலைவருடிக் கொடுக்க வேண்டும். இறுகிக் கிடப்பவனை இதமாய் தன் மடி சாய்த்து அவன் தலை கோதி வேண்டும். ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் அவன் கை கோர்த்து மெல்ல உலாவி கடற்காற்றோடு ஒரு இனிய சுகந்தமான தருணத்தை தனிமையில் அனுபவிக்க வேண்டும். அவனுக்கென்று பார்த்து பார்த்து சமைக்கும் உணவினை அவள் அருகிலிருந்து பரிமாற அவன் அனுபவித்து உண்ண வேண்டும்… இப்படி நிறைய… நிறைய… 
அதில் ஒன்றாக அவள் பரிமாற அவன் உண்டு கொண்டிருக்கிறான். ஆனாலும் இருவருக்கும் இடையில் பெரும் திரை இருந்து கொண்டுதானே இருக்கிறது. அவள் இதயத்திரையை அவளால் விலக்க முடியாது… அவன் என்ன நினைக்கிறான் தெரியாது… சவியிடம் அழுத்தமாக கூறினான்தான்… நான்தான் உன் அப்பா என்று. 
அதற்கு முழு பொறுப்பாளனாக காலம் முழுக்க அவன் இருப்பான் என்ற பெரிய நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. ஆனால் குழந்தைக்கு அப்பாவானவன் அவளை பெற்றவளுக்கு என்னவாக மாறுவான்..?? பெரும் கேள்வி மனதில் எழாமல் இல்லை… கேட்கவும் முடியாது… முடியவும் இல்லை. 
தட்டில் வைத்திருந்த உணவினை கையில் எடுக்காமல் விரல்களால் அலைந்தபடியே இருந்தவளை விழிகள் நிமிர்த்திப் பார்த்தான் குரு. 
“சாப்பிடாம என்ன யோசனை..? நேத்துல இருந்து நீயும் சாப்பிடலேல்ல… சாப்பிடு…” 
கனிவான வார்த்தைகளை தாங்கிய இந்த அக்கறை… ஒவ்வொரு விஷயத்திலும் அவன் காட்டும் இந்த அக்கறைதானே சிறுகச் சிறுக அவனிடம் அவளை ஈர்த்துக் கொண்டது. கண்கள் கலங்க அவனையே பார்த்தாள். 
“என்னம்மா..?” 
குரல் கனிந்து அவன் கேட்ட விதத்தில் அப்படியே பாய்ந்து அவன் கழுத்தோடு கட்டிக் கொண்டு நெஞ்சில் புதைந்து கதறி அழச் சொல்லி இதயம் இறைஞ்சியது.
ஒன்றுமில்லை என்ற தலையசைத்துக் கொண்டவள் இடது கையால் விழி நீரை துடைத்துக் கொண்டு மருந்தினை உட்கொள்ளுவது போல் அவனுக்காக விருப்பமே இன்றி அந்த உணவினை சிரமப்பட்டு தொண்டைக்கு கீழே தள்ளினாள். 
அவள் மனதிற்குள் பெரும் போராட்டம் கிளம்பி புயலாய் அடித்துக் கொண்டிருக்கிறது என்பது அவனுக்கும் புரிகிறது. என்ன மாதிரியான போராட்டம் என்பது அவனுக்கு தெரியாது. ஆனால் போராட்டத்தில் உழன்று தவிக்கிறாள் என்பது மட்டும் நிச்சயமாகத் தெரியும். சவிக்கு இனி நான்தான் அப்பா என்று அவளிடமும் கூறி இவளுக்கும் புரிய வைத்துவிட்டான். இனி அடுத்து அவர்களின் நகர்வு என்ன..? எப்படி..?? எதை நோக்கி..??? அவனுக்கு தெரியாது. 
ஆனால் மனம் முழுக்க நிறைத்துவிட்ட மகளைப் பிரிந்து அவனால் இனி வாழ முடியாது என்பது மட்டும் தெளிவாக புரிந்து போனது. தன்னை விட்டுப் போன பிள்ளை வேறு உருவில் தன்னிடமே வந்து சேர்ந்தபின் இறுக்கிப் பிடித்து தன் வாழ்வை அர்த்தமாக்கிக் கொள்வதை தவிர தான் வாழ்வதற்கு வேறு எந்த காரணமும் இருப்பதாக அவனுக்கு தோன்றவில்லை. 
இதனை அடைவதற்கு இன்னும் வேறு சில சிரமமான சூழல்களை கடந்து வரவேண்டும்… அவனுக்கும் தெரியும்… அதற்கு தன்னை மெல்ல மெல்ல தயார்படுத்த அவகாசம் அவனுக்கும் வேண்டும் அல்லவா. 
தான் அங்கு வந்திருப்பதாக அத்தைக்கு அழைத்து கூறிய பின்புதான் ராதாவிற்கே விபரம் தெரியும். அவன் உண்டு முடித்தபோது வீட்டிற்குள் நுழைந்திருந்தார் ராதா. 
“என்ன தம்பி திடீர்னு..? ஒரு வார்த்தை என்கிட்ட கூட கதைக்கலையே…” என்றபடியே அவன் எதிரில் அமர்ந்தார். ஓடி வந்து அவர் மடியில் ஏறி உரிமையாக அமர்ந்து கொண்டாள் சங்கவி. 
“நேத்து சவி ரொம்ப அழுதா அத்தை… மனசு கேட்கல… அதான்…” 
“இன்டைக்கு வேலை இருக்குதானே…” 
“ம்ம்… உங்களுக்கு உடம்பு ரொம்ப முடியாம இருக்குன்னு பொய்யா கதைச்சுத்தான் வைஸ் பிரின்ஸ்பால்க்கு போன் பண்ணி கொஞ்சம் முன்னாடி பேசினேன்…” என்றவனின் உதட்டோரம் தன்னையும் மீறிய மெல்லிய குறும்புப் புன்னகை. 
“அது சரி… பெட்ல அட்மிட் பண்ணிட்டியா..? இல்ல பக்கத்துல இருந்து பார்த்துக்கிறியா..?” அவரும் குறும்பு மாறாமல் கேட்க பற்கள் தெரிய சிரித்திருந்தான் குரு. 
“தவிர்க்கவே முடியல… ரெண்டு நாள் கண்டிப்பா லீவ் வேணும்னு சொல்லிட்டேன்…”
தன் மருமகனின் வாழ்வு ஏதோ அர்த்தத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது என்பது அந்த அனுபவசாலி பெண்ணுக்கு தெரியாதா..? அவன் வாழ்வை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்ற வேண்டும் என்பதுதானே அவரது ஆசையும்கூட. 
அவனை அப்பா, அப்பா என்று அயராது அழைப்பவளை அசந்து போய்தான் பார்த்துக் கொண்டிருந்தார் ராதா. ஒரு வித அர்த்தம் பொதிந்த பார்வையுடன் கண்களை அழுத்தமாக மூடித் திறந்தான் அவனும். 
“நானும் அத்தையும் கொஞ்சம் கடை வரைக்கும் போயிட்டு வந்துடறோம் அஞ்சலி. அத்தைக்கு ஏதோ முக்கியமான சாமான் வாங்கணுமாம்… உனக்கு ஏதாவது வாஙகணுமா..? வரும்போது வாங்கிட்டு வந்திடறேன்…”
சமையலறையில் ஒதுங்க வைத்துக் கொண்டிருந்த அஞ்சலியிடம் மெல்லிய குரலில் கேட்டபடி வந்து நின்றான் குரு. 
அத்தையும் மருமகனும் தனிமையில் ஏதோ பேசிக்கொள்ள விரும்புகிறார்கள் என்பது படித்த பெண்ணுக்கு புரியாமல் இல்லை. 
“இல்ல… இப்போதைக்கு எல்லாமே இருக்கு… நீங்க போயிட்டு வாங்க…” 
“நானு…” என்று ஓடிவந்து அவனது கால்களை இறுக்கி கட்டிக் கொண்டாள் சவி. அவளை தூக்கி முத்தமிட்டு ஒற்றைக் கையால் தோளோடு பிடித்துக் கொண்டான். 
“போகலாமே…” செல்லமாக தலையாட்டி கண்சிமிட்டியவனின் செல்லச் சிரிப்பில் அவன் கன்னத்தில் முத்தம் பதித்திருந்தாள் குவளை மலர். 
“நைட் எதுவும் பண்ண வேணாம் அஞ்சலி… நாங்க சாப்பிட்டு உனக்கு வரும்போது ஏதாவது வாங்கிட்டு வந்துடறோம் சரியா…” 
பதில் பேசாமல் சரி என்று மட்டும் தலையாட்டிக் கொண்டாள். ஏனோ அவள் மட்டும் தனித்துப் போனதுபோல் மனம் முரண்டியது. 
“ஏன் அப்பு..? அவளையும் வெளிக்கிட்டு வரச் சொல்லு…” 
மெல்லிய குரலில் ராதா அவனிடம் கூறினார். 
“உங்ககூட கொஞ்சம் தனியா கதைக்கோணும் அத்தை…”
அவனும் மெல்லிய குரலில் பதில் அளித்திருந்தான். அதற்குப்பின் அவர் எதுவும் கூறவில்லை. மூவருமாக கிளம்பி வெளியேறி வந்தனர்.
சற்றுத் தள்ளி காய்கறி வண்டியில் கத்தரிக்காய்க்கு பேரம் பேசியபடி நின்றிருந்த சசியை கண்ட சவி “அத்தை…” என்று சத்தமாக குரல் கொடுத்தாள். குரல் வந்த திசையில் சசியும் திரும்பினாள். 
“அப்பா… என் அப்பா…” 
ஒற்றை குட்டிக் கையால் அவனது அகன்ற கழுத்தை அழுந்தப் பிடித்து அவன் கன்னத்தோடு கன்னம் வைத்து பற்கள் தெரிய சிரித்தபடி அவளும், கண்கள் சிரிக்க இதழ்கள் விரித்து பெருமிதமாய் அவனும் நின்ற அந்த ஒற்றைக் காட்சியை புகைப்படமாய் எடுத்து கண்காட்சியில் வைத்தால் எத்தனை கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்படுமோ… அப்படி ஒரு நிறைவான காட்சி அது? 
சசி மற்றும் ராதாவின் விழிகள் அந்த அழகிய காட்சியைத்தான் ஆதுரமாக மீட்டின.
(தொடரும்)
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!