Skip to content
Post Views: 3,019
அன்பு – 25
“தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அண்ட் ரவுண்ட்!!!
ரவுண்ட் அண்ட் ரவுண்ட்!!
Advertisement
ரவுண்ட் அண்ட் ரவுண்ட்!!!”
தி வீல்ஸ் ஆன் தி பஸ் கோ ரவுண்ட் அண்ட் ரவுண்ட்!!! ஆல் த்ரூ தி டவுன்!!!”
Advertisement
என்று அந்த பெரிய தொலைக்காட்சியில் குழந்தைகளுக்கான ரைம்ஸ் ஓடிக்கொண்டிருக்க,
Advertisement
மதுவும், ஆதினியும் அதோடு சேர்ந்து பாடிக்கொண்டே தங்களுக்கென தனி உலகில் உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருந்தனர்.
Advertisement
“மதும்மா!! இப்படி பண்ணக்கூடாது!! கையை இந்த மாதிரி தான் ரோல் பண்ணனும்!!!” என்று குழந்தை மதுவைத் திருத்த,
“அட குட்டி பேபி!! நான் ஒரு காலத்துல டான்ஸ் காம்பெடிஷன்ல டைட்டில் வின்னர்!! எனக்கே சொல்லித்தரியா நீ??” என பொய்யாய் கோபம் கொண்டாள் மது.
“நீங்க மட்டும் தான் அதுல பாட்டிசிபேட் பண்ணிங்களா??” எனத் தன் இரு கைகளையும் கொண்டு வாயை மூடிக்கொண்டு குழந்தை களுக்கென சிரித்தது.
மதுவை கிண்டல் செய்து விட்டதாம், அது முகத்தில் தான் எத்தனை குறும்புத்தனம்!!!
குழந்தையை அள்ளிக்கொள்ள கைகள் பரபரத்தது மதுவிற்கு!!!
“இத்துணூண்டு இருந்துட்டு என்னையே கலாய்க்கிறியா நீ??? உன்னை என்ன பண்றேன் பாரு!!!” என குழந்தையை அள்ளிக்கொண்ட மது, அவளிற்கு விடாமல் கிச்சு கிச்சு மூட்ட,
“ஹாஹா.. ஹாஹாஹா!! விடுங்க!! விடுங்க!!! மதும்மா!! ஹாஹா!!!” என குழந்தையின் சிரிப்புச் சப்தம் வீட்டை நிறைக்க,
அவளுக்கு இணையாய் மதுவின் சிரிப்பும் அங்கே நிறைந்து கிடந்தது.
இவர்களின் சந்தோஷக் கூச்சல் பூட்டியிருந்த அறைக்குள்ளும் பலமாய் ஒலிக்க,
அதுவரை கனத்த அமைதியுடன் இருந்த அந்த மூவருக்கும் கூட அதில், லேசாய் புன்னகை அரும்பியது.
உதட்டிலிருந்த அதே மென் சிரிப்புடன், தன் முன் அமர்ந்திருந்த பிரபா மற்றும் கவியை ஆழ்ந்து பார்த்த கவின்,
“சொல்லுங்க!!! என்ன முடிவு பண்ணிருக்கீங்க??” என்று கைகளைக் கட்டிக்கொண்டு பதிலுக்காக இருவரின் முகம் பார்த்திருந்தான்.
கவியின் முகத்தில் அதுவரை இருந்த சிறு சிரிப்பும் இப்போது சுத்தமாக மறைந்து போக, முகத்தில் வந்து பட்டென ஒட்டிக்கொண்ட கலக்கத்துடன் கவினை எதிர்கொள்ள முடியாமல் அவள் தலை குனிந்துகொள்ள,
ஒரு பெருமூச்சுடன் கவியின் முகத்தில் இருந்து பார்வையைத் திருப்பியிருந்த பிரபாவின் முகத்தில் ஒரு முடிவெடுத்துவிட்ட தீர்க்கம்!!
“என்னால இனிமேல் கவியை விட்டுட்டு இருக்க முடியாது ண்ணா!!! எனக்கு அவ வேணும்!!!” என இதுதான் என் முடிவு என்பது போல் அத்தனை உறுதியாய் வந்து விழுந்த பிரபாவின் வார்த்தைகளில், கவினுக்கு பெரும் மகிழ்ச்சி!!!
“சூப்பர் டா பிரபா!!! நீ இவ்வளவு ஸ்டாராங்க பேசி இன்னைக்குத் தான் பார்க்குறேன்!!” என உள்ளார்ந்த மகிழ்வுடன் கவின் கூற,
“என்னோட கோழைத்தனத்துனால நான் இழந்தது அதிகம், அதைவிட என்னை சுத்தி இருந்த என் அம்மாவும், என் கவியும் பட்ட கஷ்டம் அதைவிட அதிகம் ண்ணா!!! இனியும் அந்த கஷ்டத்தை என் கவிக்கு நான் குடுக்க விரும்பலை!!” என்று விரக்திச் சிரிப்புடன் கூறியவனின் குரலில் இழையோடிய வருத்தம், பெண்ணவளின் மனதை ஊசியே இல்லாமல் குத்திக் கிழித்தது.
‘ என் கஷ்டத்துக்கு நீ காரணம் இல்லவே இல்லை பிரபா!! எல்லாம் நானா தேடிக்கிட்டது!! நீயா உன் மேல பழி போட்டு கஷ்டப்படுத்திக்காத உன்னை!!’ என மனதில் தவிப்புடன் எண்ணிக்கொண்டவளுக்கு, அதை அப்படியே அவனிடம் சொல்வதற்கு புதிதாய் ஒரு தயக்கம்.
பிரபாவின் மனநிலை புரிந்தது போல, ஆதரவாய் அவனின் தோளில் தட்டிக்கொடுத்த கவின்,
“நடந்தது நடந்திருச்சு!! இனி எதையும் மாத்தமுடியாது!! சோ பழசை நினைச்சு ஃபீல் பண்றதை விடுடா!! அடுத்து என்ன பண்ணலாம்னு பார்க்கலாம்” என்றவன், பின் இதுவரை ஒரு வார்த்தை பேசாமல் ஒரு தவிப்புடனே அமர்ந்திருந்த கவியைக் கண்டு,
“நீ என்னம்மா யோசிச்சிட்டு இருக்க?? இங்க பாரு!! உன் வாழ்க்கையில என்ன நடந்துச்சுன்னு எனக்குத் தெரியலை!! ஆனா இவனைப் பிரிஞ்சி நீயும் நல்லா ஒன்னும் வாழலைன்னு மட்டும் புரியுது!!! முன்னாடி உங்க வாழ்க்கையில நடந்ததை கெட்ட கனவா நினைச்சு மறந்திடுங்க!! ஒருத்தர் மேல ஒருத்தர் இவ்வளவு அன்பை வச்சிட்டு பிரிஞ்சி போறது சரியில்லை மா.. இன்னொரு முறை இவனை விட்டுட்டு போகணும்னு நினைக்காத!!! ஒருமுறை விட்டுட்டு போனப்போவே அவன் உயிரில்லாத ஜடமாத் தான் இத்தனை வருஷமா வாழ்ந்துட்டு இருக்கான்.. இன்னொரு முறையும் இப்படி போகணும்னு நினைக்காத!! அப்படி மட்டும் நடந்தா நிச்சயம் அவனை அதிலிருந்து மீட்கவே முடியாது!! பார்த்துக்கோ!!!” என பிரபஞ்சனை சரியாக புரிந்து வைத்திருந்த கவின், பெண்ணவளுக்கு அறிவுறுத்த,
கவிக்கும் அனைத்தும் புரிந்தாலும், அவளால் தனக்குத்தானே போட்டு வைத்திருக்கும் தடைகளில் இருந்து அவ்வளவு சுலபமாய் வெளிவர முடியவில்லை.
அவளைப் பொறுத்தவரை பிரபா ஒரு புனிதமானவன்!!! அப்படி இருப்பவனுக்கு, தான் என்றும் இணையாக முடியாது என அவள் மனதில் ஆழமாய் பதிந்து போயிருந்தது!! அதிலும் தன்னால் அவன் அனுபவித்த துயரங்கள் அனைத்தும் அவள் கண்முன் வந்து போக, அந்த குற்ற உணர்ச்சியே பிரபாவின் அருகில் நெருங்க விடாமல் அவளை தினம் தினம் குத்திக் கொன்றது.
அதிலும் இந்த எட்டு வருடங்களில், அவள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அனுபவித்த துன்பங்கள், அவளை அத்தனை சீக்கிரம் இன்னொரு வாழ்க்கைக்குள் நுழைந்து பார்க்கும் தைரியத்தை அவளுக்கு வழங்கவில்லை!!!
இத்தனைக்கும் மேலாய் அவளின் உலகமான ஆதினி!!!
அவளுக்கு என்ன பதில் சொல்வது!!! விவரம் புரியாத அளவிற்கு சிறு குழந்தை இல்லையே அவள்!! இத்தனை வருடங்களுக்குப் பின், பிரபஞ்சன் தான் என்னுடைய முன்னாள்(?) காதலன் இப்போது மீண்டும் அவனுடன் வாழ நினைக்கிறேன் என்று சொல்லும் அளவிற்கு கவிக்கு இன்னும் துணிவு வரவில்லை.
பலவற்றையும் யோசித்து அவள் குழம்பித் தவிக்க,
“என்னமா?? என்ன யோசிக்கிற?? முன்னாடி மாதிரி உங்களை சேர விடாமத் தடுக்க இப்போ இங்க யாருமில்லை!!! முன்னாடி அவ்வளவு பேர் எதிர்த்து நின்னாலும், இவன் தான் வேணும்னு துணிவா நின்ன அந்த அஞ்சலி எங்க???” என்று கவின் கேட்க,
விரக்தியாக புன்னகைத்த கவி,
“அது தைரியம் இல்லை சார்!!! அசட்டுத் துணிச்சல்!!! என் குடும்பத்தைப் பத்தி எங்கம்மா அவ்வளவு சொல்லியும், அப்படி என்ன பண்ணிடுவாங்கன்னு ஒரு அசால்ட்!! அது தான் என்னை இங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு.. என்னால!! என்னால இவன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டான்.. இனியும் வேணாம்.. அவன் வாழ்க்கையை வீணாக்காதீங்க.. நீங்க என்னை மிரட்டி உருட்டி அவனோட சேர்த்து வச்சாலும், கண்டிப்பா என்னால அவனோட நிம்மதியா வாழ முடியாது!! பிளீஸ் புரிஞ்சுக்கோங்க.. அவன் வாழ்க்கையை கெடுக்க நினைக்காதீங்க.. முடிஞ்சா அவனுக்கு எடுத்து சொல்லி புரியவைங்க..” என கவியும் தன் முடிவில் உறுதியாக இருப்பதை கவினுக்கு உணர்த்தினாள்.
“இப்போ என்ன பண்றது??” என்பது போல் பிரபாவை கவின் பார்க்க,
“அவளை கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க!! பார்த்துக்கலாம்” என்பதாய் பிரபஞ்சன் சைகை செய்ய,
அதை புரிந்து கொண்ட கவினும், இதற்கு மேல் பிரபாவே பார்த்துக்கொள்வான் எனும் நம்பிக்கையுடன்,
“சரி மா!! இது உங்க தனிப்பட்ட வாழ்க்கை!! என்னால எடுத்து தான் சொல்ல முடியும்!! ஆனா முடிவு உங்களோடது தான்.. இனி இதைப்பத்தி பேசி நான் உன்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்.. நீ கவலைப்படாத!!” என்றவன்,
“ஆனா ஒரே ஒரு ரெக்வஸ்ட்!!! தயவு செஞ்சு இன்னைக்கு மாதிரி தெரியாத ஊருக்கு போறேன்னு குழந்தையைத் தூக்கிட்டு கிளம்பிடாத!! உலகம் எவ்வளவு கெட்டுப்போய் கிடக்குன்னு நியூஸ்ல பார்க்குற தானே?? மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டைக் கொளுத்த நினைக்காத!!! இங்க உன்னை மீறி எதுவும் நடக்காது!! அதை மட்டும் மனசுல வை!! நீ பாட்டுக்கு எங்ககிட்ட சொல்லாம கொள்ளாம கிளம்பி போயிருந்தா, உன்னோட கார்டியன், இங்க உன்னை வந்து எங்களை நம்பி விட்டுட்டு போனவருக்கு நாங்க என்னமா பதில் சொல்லிருப்போம்??? கொஞ்சம் எல்லாத்தையும் யோசிச்சு நடந்துக்கோ மா!!” என பொறுமையாக கவின் எடுத்துரைக்க,
அவளின் தவறு கவிக்குப் புரிந்தது!!
பிரபாவிற்காக பயந்து, தான் வந்த வேலையை பாதியில் விட்டுவிட்டு சொல்லிக்கொள்ளாமல் கிளம்பியது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என உணர்ந்த கவியும்,
“சாரி சார்!!! இனி அப்படி எந்த முட்டாள்தனமான முடிவும் எடுக்க மாட்டேன்!!! மது அக்காவை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் பொறுப்பு!!!” என கவின் சொல்லாமல் விட்டதையும் புரிந்து கொண்டு அவனுக்கு உறுதி கொடுத்தாள்.
லேசாய் புன்னகைத்த கவின், “மதுவை யாரும் பார்த்துக்கத் தேவையே இல்லை!! அவளுக்குத்தேவை பேச்சுத்துணைக்கு ஒரு ஆள்!! அந்த குறையையும் உன்னோட பொண்ணு தீர்த்து வச்சுட்டா மா!! இனி அவளைப்பத்தி நான் கவலைப்பட வேண்டாம்” என வெளியே கேட்ட மதுவின் சிரிப்பு சப்தத்தில் நிறைவாய் ஒரு புன்னகை கவினின் முகத்தில்!!
அதன்பின் நேரம் ஆவதை உணர்ந்து கவி எழுந்து கொள்ள,
“நான் போய் சமைக்கிறேன்!!” என இருவருக்கும் பொதுவாக சொன்னவள் அங்கிருந்து வெளியேறிவிட்டாள்.
அவள் சென்றதும் இன்னும் ஏதோ யோசனையுடனே இருந்த பிரபஞ்சனை எதிர்கொண்ட கவின்,
“இன்னும் என்ன டா யோசனை!!! விடு.. எல்லாம் சரியாகும்.. அந்தப்பொண்ணுக்கும் டைம் வேண்டும்ல!!” என்று சொல்ல,
“இல்லைண்ணா!!! ரொம்ப கஷ்டப்பட்டுட்டா அவ!!! என் தப்பு தான்.. நான் போயிருக்கணும்ண்ணா!! என்னால தான்!!!” என்ற பிரபாவிற்கு, இன்னும் கவியின் வாய்மொழியாக அவள் அடைந்த துன்பத்தை அறிந்து கொண்டதில் இருந்து சுத்தமாக வெளிவரமுடியவில்லை.
‘ இப்படி கவியை கஷ்டப்பட விட்டுட்டியே பிரபா!!’ என அவனின் மனசாட்சியே அவனைக் குத்திக் கொல்ல, மனதளவில் மிகவும் துவண்டு போனான்.
“பிரபா!! என்னைப்பாரு!!!” என அவனின் தலையை நிமிர்த்தி தன்னைப்பார்க்கச் செய்த கவின்,
“ஃபர்ஸ்ட் இந்த மாதிரி யோசிக்கிறதை நிப்பாட்டு!!! இந்த உலகத்துல நம்மையும் மீறிய சக்தி இருக்குன்னு நீ நம்புற தானே?? இதான் நடக்கணும்னு இருந்திருக்கு!! நடந்திருச்சு.. நடந்து முடிஞ்ச பின்னாடி, இப்படி பண்ணிருந்தா சரியா இருந்திருக்குமோன்னு யோசிச்சு வருத்தப்படுறதுனால எந்தப் பயனும் இல்லை!! அதுனால நடந்து முடிஞ்சது நினைச்சு வருத்தப்படுறதை விட்டுட்டு அந்தப்பொண்ணு மனசை எப்படி மாத்துறதுன்னு யோசி!!”
“நீங்க ரெண்டு பேர் சேரணும்னு தான் இருக்கு!! அதான் இத்தனை வருஷம் கழிச்சும் அந்தப்பொண்ணை உன்கிட்டேயே கொண்டு வந்து சேர்த்திருக்கு விதி!!! இனியும் பழசை நினைச்சிட்டு பியூச்சரை கோட்டை விட்டுடாத டா!! அவ்வளவு தான் சொல்லுவேன்!!” என்ற கவின், இனி அவன் யோசித்து தெளிந்து கொள்ளட்டும் என அவனுக்குத் தனிமை வழங்கிவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
கவின் சென்ற பின்னும் அதே இடத்தில் அமர்ந்துவிட்ட பிரபாவின் எண்ணமெல்லாம், கவியை இந்த முறை விட்டுவிடவே கூடாது என்பதிலே சுற்றி வர, என்ன செய்வது என்று தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
கவியின் மனநிலை புரிந்ததால், அதிகம் அவளுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது, அவளாகவே தன்னைப் புரிந்துகொண்டு தன்னிடம் வரச் செய்ய வேண்டும் என நினைத்துக்கொண்டான்.
எந்தவொரு முடிவையும் ஸ்திரமாக எடுப்பதில் இத்தனை நாளும் திணறிக் கொண்டிருந்த பிரபா, இந்த முறை தன் முடிவில் உறுதியாக இருந்தான்.
கவி என்ன பேசி, தன்னை அவள் முடிவுக்கு வளைக்கப்பார்த்தாலும், தான் உறுதியாக இருக்கவேண்டும் என நினைத்துக் கொண்டவன், அடுத்து என்ன செய்வது என்று சிந்தித்து ,தெளிவான மனநிலையுடன் அந்த அறையில் இருந்து வெளியேறினான்.
அவன் வெளியில் வந்த நேரம், கவி சமைத்து முடித்து அனைத்தையும் மேசையில் எடுத்து வைத்துக்கொண்டிருக்க,
வேகமாக அவளிடம் சென்றவன், அவள் கேட்காமலே அவளுக்கு உதவி செய்ய,
அதில் பட்டென நிமிர்ந்து அவனைப் பார்த்த கவி தடுமாற்றத்துடன்,
“இல்லை.. இல்லை வேணாம்.. நான் பார்த்துக்கிறேன்” என மறுத்தாள்.
“உனக்கு ஹெல்ப் பண்றதுனால, என்கூட தான் நீ வந்து வாழணும்னு எல்லாம் கம்பெல் பண்ண மாட்டேன்.. அதுனால பயப்படாம இரு!!” என்றவன் அனைவரும் சாப்பிடுவதற்காக தட்டுக்களை எடுத்துக்கொண்டு வெளியே சென்று விட,
“இப்படியும் கூட பிரபா பேசுவானா??” அந்நாளில் எத்தனையாவது முறை என்று தெரியாத அளவிற்கு கவியை ஆச்சரியத்தில் ஆழ்த்தினான்.
இது தான் ஆரம்பம் என பாவம் பெண்ணிற்கு அப்போது புரியவில்லை.
இவள் இங்கு அதிர்ந்து நிற்பதற்குள்ளே அனைத்தையும் எடுத்து வைத்து, மற்றவர்களை சாப்பிட அழைத்திருந்த பிரபா, கவியையும் அழைக்க வந்துவிட்டான்.
“அப்பறம் வந்து என்னைப்பத்தி யோசிக்கலாம்.. இப்போ நேரமாச்சு!! வா வந்து சாப்பிடு!!” என உரிமையாக அவள் கைகளைப் பற்றிய பிரபாவின் மாற்றத்தில் பெண்ணவளுக்கு கண்கள் வெளியே வந்துவிடும் அளவிற்கு விரிந்து கொண்டது.
அவளின் அதிர்ச்சி எதனால் என்று புரிந்து கொண்டவன், இன்னும் தன் பிடியில் அழுத்தம் கொடுத்து,
“இந்த பிரச்சனை எதுவும் நடக்காததுக்கு முன்னாடி நமக்குள்ள ஒரு நல்ல பிரண்ட்ஷிப் இருந்துச்சு!! அது இன்னும் இருக்குன்னு நான் நம்புறேன்.. அதுனால என்னைக்கண்டா எதுக்கோ பயந்து தள்ளிப்போகாம என்னோட பழைய கவியா, அதாவது என்னோட பிரெண்டா இரு!! மத்த எதுக்கும் நான் உன்னைக் கம்பெல் பண்ண மாட்டேன்.. சரியா!!!!” என்று வேறு அவன் கேட்க,
பதில் சொல்லத்தெரியாமல் தடுமாறினாள் பெண்ணவள்.
“உன்னை பிரெண்டா இருன்னு சொல்றதுன்னால நான் என் முடிவுல இருந்து மாறிட்டேன்னு அர்த்தம் இல்லை.. அது என்னைக்கும் மாறாது!! வாழ்ந்தாலும் உன்னோட தான், செத்தாலும் உன் மடியில தான்!! அதுல எந்த மாற்றமும் இல்லை!! அதையும் உன் மனசுல நல்லா பதிஞ்சு வச்சுக்கோ” என அழுத்தமாக உரைத்தவன், அவள் அதிர்ந்து நிற்பதை பொருட்படுத்தாது, அவளையும் கூட்டிக்கொண்டு உணவுக்கூடம் செல்ல,
அங்கே அமர்ந்திருந்த மூவரும் பிரபாவின் கைகளில் சிறைபட்டிருந்த கவியின் கைகளைக் கண்டு, ஆச்சரியத்தில் புருவம் உயர்த்தினர்.
அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த பிரபாவோ, இப்போது பற்றியிருந்த கவியின் கரங்களை, தன் காலம் முடியும் வரையில் விடக்கூடாது எனும் உறுதியுடன் இன்னும் அழுத்தமாக பற்றிக்கொண்டான்.
“விலக நினைக்கும் இதயம் ஒன்று!!
விட்டுக்கொடுக்க மறுக்கும் இதயம் ஒன்று!!
வெல்லப்போவது யாரோ??”
error: Content is protected !!