Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

24. கண்மணி - அன்பின் முகவரி அவள்

அன்பின் முகவரி அவள் – 32

அன்பு – 31

“கவி!!! எதுக்கு டென்ஷனா இருக்க?? ரிலாக்ஸ்!!” என தன்னருகில் அமர்ந்திருந்தவளின் கரத்தை ஆதரவாய் பற்றிக்கொண்டவன், மெலிதாய் அதை தட்டிக்கொடுக்க,



Advertisement

“தெரியலை பிரபா!! அந்த சரளா மா என்ன பேசுவாங்களோன்னு கொஞ்சம் பயமா இருக்கு!!” என்றாள் கவியும் தன் மனதை மறையாமல்.

“அட!! ஜஸ்ட் இத்தனை வருஷம் உங்களுக்கு அவங்க துணையா இருந்தாங்களேன்னு அவங்களை இன்வைட் தான் பண்ணப்போறோம்.. மத்தபடி அவங்க கருத்து, இங்க எதையும் மாத்தப்போறது இல்லை.. இனிமேலும் மத்தவங்களுக்கு பயந்து நம்ம வாழ்க்கையைத் தொலைக்க முடியாது கவி!!! போறோம்.. பத்திரிகையைக் கொடுக்கிறோம்.. வரோம்!!! சரியா??” என்று பிரபா கேட்க,

Advertisement

Advertisement

புன்னகையுடன் தலையசைத்தாள் கவி.

அதற்குள்ளாகவே உறக்கத்தில் இருந்த ஆதினியும் கண் விழித்திருக்க,

Advertisement

போகும் வழியெங்கும் அது என்ன இது என்ன என கேட்டு கலகலத்துக்கொண்டே வந்ததில் பயணக்கழைப்பு கூட பெரிதாய் தெரியவில்லை பிரபஞ்சனுக்கு.

நேராக ஹைதராபாத் சென்றவர்கள், அங்கே அறையெடுத்து தயாராகி, அங்கேயே காலை உணவையும் முடித்துக்கொண்டு, ஜல்பல்லி நோக்கி பயணித்தனர்.

முன்பே கைலாசத்திற்கு அழைத்து தகவல் சொல்லியிருந்த பிரபஞ்சன், கவிக்கு அவர் கொடுத்திருந்த கடன் தொகையையும் கேட்டு அறிந்து அதையும் முன்பே அனுப்பி வைத்து, கடனை அடைத்திருந்தான்.

“பிரபா!! அது நான் வாங்குன கடன்.. நீ ஏன்??” என்று மறுத்துப் பேச நினைத்த கவியை தன் பார்வையாலே அவன் அடக்கிவிட்டது வேறு கதை.

இத்தனை வருடங்களும் அவளுக்கு துணையாக இருந்ததற்கு மரியாதையாக, அவர்களையும் தங்களின் திருமணத்திற்கு அழைக்க வேண்டும் என பிரபஞ்சன் தான் முடிவாய் சொல்லி, அவர்களை கிளப்பிக் கொண்டு வந்திருக்கிறான்.

கைலாசம் முன்பே தன் மனைவியிடம் அனைத்தும் சொல்லி அடக்கி வைத்திருந்தார்.

“இதோ பாரு!! வரது பெரிய பாடகராம்.. கவிக்கு நம்ம கொடுத்த காசுக்கு வட்டிக்கு மேலயே அதிகமா பணத்தைப் போட்டு கையில கொடுத்துட்டாரு.. ஒரு மரியாதைக்காக நம்மளை மதிச்சு பத்திரிகை வைக்க வராங்க.. உன் வாயை வச்சிட்டு சும்மா இருக்கணும் சொல்லிட்டேன்..  ஏதாவது பேசி என் மரியாதையையும் கெடுத்துராத!!” என அவர் கண்டிப்பாக சொல்லிவிட்டிருக்க,

“வேலைக்கு போன இடத்துல, அந்த ஊமைக்கோட்டான் பண்ணியிருக்க வேலையைப் பாரு!! நல்லா பெரிய கையா பார்த்து தான் வளைச்சுப் போட்டிருக்கா!!! புருஷன் செத்து முழுசா மூணு வருஷம் ஆகலை, அதுக்குள்ள இன்னொன்னு பிடிச்சிட்டா!!!” என கவிக்கு வசதியான இடத்தில் வாழ்வு கிடைத்துவிட்டது என்பதில் உண்டான புகைச்சலை தனக்குள் மட்டுமே முணுமுணுத்துக்கொண்டு வெளிப்படுத்தினார் சரளா.

நண்பகல் போல ஜல்பல்லியை மூவரும் அடைந்து விட்டிருக்க,

“பிரபு!! இங்க இருக்க ஓல்ட் லேடி கொஞ்சம் டேஞ்சர்!!” என அந்த வீட்டை அடைந்ததுமே ஆதினி பிரபஞ்சனின் காதில் ரகசியமாக எச்சரித்தாள்.

கவிக்கும் அது நன்றாக கேட்டுவிட்டதில், மகளைத் திரும்பி நன்றாக முறைத்தாள்.

“அம்மு!! மரியாதையா பேசணும்னு எத்தனை முறை சொல்றது உனக்கு??”  என்று பல்லைக் கடிக்க, அதற்குள் சப்தம் கேட்டு கைலாசம் புன்னகை முகமாக வெளியே வந்திருக்க,

அவரைத் தொடர்ந்து வந்த சரளாவின் கண்களில் அந்த சொகுசுக் கார் விழ,

‘ இவளுக்கு வந்த வாழ்வைப் பாரேன்!!’ என சற்று கடுப்புடனே தான் அவர்களை நெருங்கினார்.

சரளாவின் முகத்தை வைத்தே அவரின் குணத்தை அறிந்துவிட்ட பிரபஞ்சனுக்கு, இதைவிட மோசமான குணமுள்ள மனிதர்களை எல்லாம் கடந்துவந்துவிட்டதால், ஒரு புன்னகையுடன் தான் அவரையும் பார்த்திருந்தான்.

“வாங்க வாங்க சார்!! வாம்மா அஞ்சலி!! அடடே குட்டிப்பொண்ணு எப்படி இருக்கீங்க?? தாத்தா கிட்ட வர்றீங்களா??” என இன்முகமாக வரவேற்ற கைலாசத்திடம், புன் சிரிப்புடன் பதிலளித்த பிரபஞ்சன்,

“அவங்க அப்பா அம்மா தவறுன பின்னாடி, கவியையும் அம்முவையும் பத்திரமா பார்த்துகிட்டதுக்கு ரொம்பவே தேங்க்ஸ் சார்!!” என்று மனதார நன்றி தெரிவித்து அவன் கைகுவிக்க,

“அட!! என்ன சார் நீங்க?? அஞ்சலியும் எனக்கு பொண்ணு மாதிரி தான்.. அதுவும் இல்லாம அவங்க அப்பா எனக்கு செஞ்ச உதவிக்கு நான் என்னைக்கும் கடமைப்பட்டிருக்கேன்” என்று கைலாசம் புன்னகைக்க,

“வாங்க!! வாங்க!!” என கடமைக்கு அவர்களை வரவேற்ற சரளா!!

“அடியே சின்னக்குட்டி!! புதுசா பதவிசா ஆளைப் பிடிக்கவும் இந்த பாட்டியை மறந்துட்ட தான நீ??” என்று வஞ்சத்தை மறைத்துக்கொண்டு, கேலி பேசுவது போல் குழந்தையின் கன்னத்தைப் பற்றிக் கிள்ள,

அது கேலி அல்ல என அம்மு முதற்கொண்டு அனைவருக்கும் புரிந்தாலும், நாகரிகம் கருதி அடுத்து பேச்சை வளர்க்காமல்,

“எனக்கு லேட் ஆச்சு!! பத்திரிகை வச்சிட்டு, இங்க ஒரு வேலை இருக்கு கிளம்பணும்!!” என பிரபா அவசரப்படுத்தினான்.

தன் மனைவியை அடிக்கண்ணால் முறைத்த கைலாசம்,

“உள்ள வந்து காபி ஆச்சும் குடிச்சிட்டு போகலாம் சார்!!” என கட்டாயப்படுத்தி அவர்களை உள்ளே அழைத்தவர்,

“சரளா!! வந்தவங்களுக்கு தண்ணீ கொண்டு வா!!” என மனைவியை உள்ளே அனுப்பினார்.

“அவ கொஞ்சம் பட படன்னு பேசுவா.. தப்பா எடுத்துக்காதீங்க” என மனைவிக்காக அவர்களிடம் சமாதானம் பேசியவர்,

“ரொம்பவே கஷ்டப்பட்டிருச்சு சார் அஞ்சலி!! அவளை பத்திரமா பார்த்துக்கோங்க!!” என பிரபஞ்சனிடம் உண்மையான அக்கறை கொண்டு கோரிக்கை வைத்த மனிதர்,

“எங்க உன் வாழ்க்கை இப்படியே போயிருமோன்னு ரொம்ப பயந்துட்டேன் மா.. இப்போதான் நிம்மதியா இருக்கு!! நல்லா இருக்கணும் நீ!!! உனக்குன்னு யாரும் இல்லைன்னு கலங்கிறாத!!! உன் அப்பா ஸ்தானத்துல என்னைக்கும் நான் இருக்கேன் உனக்கு.. என்ன பிரச்சனைனாலும் நான் கூட இருப்பேன் மா.. பார்த்துக்கலாம்” என்று பரிவாக சொல்ல, அஞ்சலிக்கு அவரின் அன்பில் நெஞ்சம் இளகியது!!

பெற்ற தகப்பனே அவளின் வாழ்க்கையை குழியில் புதைத்திருக்க, இன்று தனக்கு பெரிதாய் உறவு கூட இல்லாத மனிதர், தனக்காக இருக்கிறேன் என்று சொல்வது கவிக்கு ஆறுதலாக இருந்தது.

அதற்குள்ளே சரளா தண்ணீர் குவளைகளுடன் வந்திருக்க,

அவர்களின் பேச்சு அத்துடன் தடைபட்டது.

சரளாவின் எண்ணப்போக்கை அறிந்ததால், அவரின் கைகளால் தண்ணீர் வாங்கி அருந்துவது கூட உசிதமல்ல என்று நினைத்த பிரபஞ்சன், தண்ணீரை வாங்கி அருந்தாமலே அப்படியே வைத்துவிட்டு, தன் பையில் கொண்டு வந்திருந்த பத்திரிகையுடன் எழுந்து கொண்டான்.

“கவி இங்க வா!!” என அவளையும் தன்னருகில் அழைத்து, பத்திரிக்கையை அவர்களிடம் வழங்கியவன்,

“கல்யாணம் ரொம்ப சிம்பிளா கோவில்ல தான் பண்றோம்..  ஆனா அடுத்த நாளே ரிசப்ஷன் வச்சிருக்கோம்.. கண்டிப்பா குடும்பமா வந்துடனும்!! கவிக்கு நீங்க தான் உறவா முன்னாடி நின்னு எல்லாம் பண்ணனும்!!!”  என அவர்களை முன்னிலைப்படுத்தி பிரபஞ்சன் அழைக்க,

“ஆமா அங்கிள்!! ரெண்டு நாள் முன்னாடியே வந்துடுங்க!!! நான் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப எதிர்பார்ப்பேன்!!” என கவியும் சேர்ந்துகொள்ள,

தங்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில் சரளாவும் சற்று குளிர்ந்து போக,

“ஹான் எங்க அம்புட்டு தூரம் வரது  கொஞ்சம் கஷ்டம் தான்.. வயசாகிடுச்சுல.. ஆனா என்ன பண்ண?? உனக்குன்னு யாரு இருக்கா?? நாங்கதான் வந்தாகணும்!! வரோம் வரோம்!!” என ஏதோ போனால் போகிறதென்று ஒத்துக்கொள்வதைப் போல் சரளா பேசியது கடுப்பைக் கிளப்பினாலும் முகத்தில் எதையும் காண்பித்துக்கொள்ளவில்லை அவர்கள்.

மனைவியை முறைத்த கைலாசம்,

“அவளுக்கு முடியலைனா போகுது!! நான் கண்டிப்பா வருவேன் மா.. நீங்க ஒன்னும் சங்கடப்படாதீங்க!!” என சமாளிக்க,

“பரவாயில்லை சார்!! அப்போ நாங்க கிளம்புறோம்!!” என பிரபஞ்சன் சொல்லிக்கொள்ள, கவியும் அவனைப் பின்பற்றி அவர்களிடமிருந்து விடைபெற்றுக் கிளம்ப, மூவரும் தங்களின் காரில் ஏறிக் கிளம்பிவிட்டனர்.

“பணம் வந்ததும் ஆளே மாறிட்டா பார்த்தீங்களா?? எவ்வளவு செஞ்சிருப்போம்.. அந்த நன்றிக்கடன் கூட இல்லை.. இந்த சின்ன வாண்டு கூட மாறிடுச்சு பாருங்களேன்!!” என சரளா வன்மத்தைக் கொட்ட,

அவரை அற்பமாகப் பார்த்த கைலாசம்,

“நாய் வாலை நிமிர்த்தவே முடியாது!! அதுமாதிரி உன்னைத் திருத்தவே முடியாது.. உன்கிட்ட பேசுறதே வேஸ்ட்” என்று வெறுப்புடன் உள்ளே சென்று விட்டார்.

அவரின் கோபத்தை அலட்சியம் செய்த சரளாவும்,

“இல்லாததை சொல்லிட்ட மாதிரி ரொம்பத்தான் பண்றாரு!!” என்று சலித்துக்கொண்டு, அவரும்  பொருமலுடன் உள்ளே சென்றுவிட்டார்.

இங்கே ஹைதராபாத் வந்து, தாங்கள் தங்கியிருந்த அந்த நட்சத்திர விடுதியிலே மதிய உணவையும் முடித்துக் கொண்ட மூவரும் தங்கள் அறைக்குச் செல்ல,

“பிரபா!! இப்போவே கிளம்பலாமே!! அங்க மது அக்கா பேபியை வச்சுட்டு தனியா கஷ்டப்படுவாங்க!!” என்று கவி சொல்ல,

“அட!! அதான் துணைக்கு ரமணி அம்மா இருக்காங்களே.. அவங்க பார்த்துப்பாங்க.. நம்ம இங்க ரெண்டு நாள் இருந்து இந்த ஊரைக் கொஞ்சம் சுத்திப்பார்த்துட்டு, ஷாப்பிங் கொஞ்சம் பண்ணிட்டு போகலாம்” என்று பிரபா சொல்லிவிட,

“சூப்பர் பிரபு!!” என அவனுக்கு ஹை – ஃபை கொடுத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் ஆதினி.

“ரெண்டு பேரும் முடிவு பண்ணிட்டீங்க.. இனி நான் சொல்றதை கேட்கவா போறீங்க??” என பொய்யாய் சலித்துக்கொண்ட கவியும்,

“சரி எனக்கு டயர்டா இருக்கு!! நான் தூங்குறேன்..” என்று தன்னுடைய அறைக்கு சென்றுவிட,

“ஓகே பேபி!! அம்மாவை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.. நம்ம போய் மூவி பார்ப்போமா??” என்று ஆதினியை தன்னுடன் அழைத்துக்கொண்டான் பிரபா!!

ஆதினி இவர்களின் திருமணத்திற்கு சம்மதித்து ஆறு மாதங்கள் ஓடி விட்டது.

என்னதான் இருவரும் சம்மதித்து விட்டாலும், கவியின் மனதில் உள்ள பழைய காயங்களால் உண்டான குழப்பங்களை நீக்கி விட்டு, அவளின் முழு விருப்பத்துடனே திருமணம் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த பிரபஞ்சன், அதற்காக இந்த ஆறுமாத அவகாசத்தை எடுத்துக்கொண்டான்.

அவனின் அன்பே அவளின் காயங்களை ஆற்றும் வல்லமை கொண்டது தான் என்றாலும், முறையாக ஒரு மனநல மருத்துவரிடம் அவளை அழைத்துச் சென்று, அவள் மனது தெளிவடைய உதவி செய்தான்.

கவியும் தன் கடந்தகாலத்தை மறந்து, பிரபாவுடன் தனது எதிர்காலம் சிறக்க வேண்டும் என மிகவும் முயல்வதால், அவளிடம் இந்த ஆறு மாதங்களில் நல்ல முன்னேற்றம்.

இப்போதெல்லாம், ஜெயசிம்மன் தந்த காயங்களைக் காண்கையில், சாதாரண வடுவாக நினைத்து அதைக் கடக்கப் பழகியிருந்தவள், நடந்த அனைத்தையும் ஒரு கெட்ட கனவாக நினைத்து மறக்கவும் முயற்சி செய்து கொண்டே இருக்கிறாள்.

இதனிடையில், மதுவிற்கு அழகாக பெண் குழந்தை பிறக்க, கவினின் பெற்றோர் அதற்கு மேல் தங்கள் வீராப்பை தூக்கி சுமக்க முடியாமல், தங்கள் பேத்தியைக் காண ஓடோடி வந்துவிட்டனர்.

கவியும் உடனிருக்க, கவினின் தயாரான ரமணியின் கவனிப்பில் மதுவும் விரைவிலேயே குணமடைய, மீண்டும் தனக்குப் பிடித்த தொகுப்பாளினி வேலைக்குச் செல்லத் துவங்கிவிட்டாள்.

முன்பு போல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்காமல், குழந்தையுடன் பெரும்பான்மையான நேரத்தை செலவழித்து விட்டு மீதமிருக்கும் சில நேரங்களில் சிற்சில சின்ன நிகழ்ச்சிகளில் மட்டும் தற்போது ஒப்பந்தமாகி பணிக்கும் சென்று வர, மதுவிற்கு தற்போது தான் அனைத்து கவலைகளும் பறந்து போய், நிம்மதியாக இருப்பது போல் ஒரு எண்ணம்.

ஆதினியும் இடைப்பட்ட நாட்களில் நன்றாகவே நிதர்சனத்தைப் புரிந்து கொள்ள, தன்னுடைய தோழிகளின் தகப்பன் போல, பிரபஞ்சனும் இனி எப்பொழுதும் அவளுடனே இருப்பான் என்பதில் அவளுக்கு பெரும் மகிழ்ச்சியே!!

எனவே மிகுந்த எதிர்பார்ப்புடன், பிரபா – கவி திருமண நாளிற்காக காத்திருக்கிறாள்.

கவியின் மனம் கனிய பல காலங்களாக பிரபஞ்சன் காத்துக்கொண்டிருக்க, அவனின் காத்திருப்பை நிறைவு செய்து, திருமண தேதியையும் கவி தான் இப்போது முடிவு செய்திருந்தாள்.

அதிலும், இப்போது பிரபாவின் ஆலோசனைப்படி கவி, வீட்டில் வெறுமனே அமர்ந்திருக்காமல், குழந்தையை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டு, கிடைத்த ஓய்வு நேரங்களில் டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் ஸ்டாக் முதலீடுகளைப் பற்றியும் படித்துக் கொண்டிருக்கிறாள்.

சுயசம்பாத்தியம் இருக்கும் பட்சத்தில், கவியிடம் இன்னுமே தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும் என பிரபஞ்சன் இதற்கு ஏற்பாடு செய்திருக்க, கவி பிரபஞ்சனின் காதலில் மெதுமெதுவாய் சுகம் சுகமாய் கரைந்து கொண்டிருந்தாள் நாளுக்கு நாள்.

இதோ அனைத்தும் நல்லபடியாக முடிந்து, திருமண நாளும் அழகாய் விடிந்திருக்க, பிரபஞ்சனுக்கு தன் மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

எத்தனை வருடக் கனவு!!!

இதோ இன்னும் சற்று நேரத்தில் அவனின் நிஜமாகப் போகிறது.

அடித்துக்கொள்ளும் இதயத்துடன் கைகளைக் கட்டிக்கொண்டு பிரபஞ்சன், தன்னை நிலைப்படுத்த முயல,

“பிரபா!! ரிலாக்ஸ் டா!! எதுக்கு நெர்வஸா இருக்க?? உன்னோட இத்தனை வருஷ காத்திருப்பு முடிவுக்கு வருது மேன்!! இப்போ நீ ஜாலியா ஒரு குத்தாட்டம் போட்டுட்டு இருக்கணும்!! சியர் அப் டா!!!” என்று கவின் ஆதரவாய் பிரபஞ்சனின் தோளைத் தட்டிக் கொடுத்தான்.

ஒன்பது வருடங்களுக்கு முன்பு, யாருக்கும் தெரியாமல் பிரபாவும் கவியும் திருமணம் செய்த அதே முருகன் கோவில்!!!

அங்கு தான் திருமணம் நடக்க வேண்டும் என பிரபா சொல்லிவிட, மிக எளிமையாக அங்கே அவனின் விருப்பப்படி திருமணம் ஏற்பாடாகியிருந்தது.

கவிக்கு அவன் அப்போது அணிவித்த தாலிக்கயிற்றை முன்பே கழற்றி,

“எங்களைத் தொடர்ந்த கஷ்டங்களெல்லாம் இத்தோட முடிஞ்சுடனும் கடவுளே.. இனி புதுசா தொடங்கப்போற எங்க வாழ்க்கைக்கு நல்லபடியா அமைய நீ தான் துணை புரியணும்!!” எனும் வேண்டுதலுடன் உண்டியலில் போட்டிருந்தனர்.

இப்போது திருமணத்திற்கு, கவின் – மது தம்பதியர், கவினின் பெற்றோர், இசையமைப்பாளர் தேவா, கைலாசம் – சரளா என சொற்ப நபர்களை மட்டுமே அழைத்திருந்தான் பிரபஞ்சன்.

அதன்படி நெருங்கிய நட்பு வட்டம் சூழ, இன்னும் சற்று நேரத்தில், முறையாக அனைவரின் ஆசிர்வாதங்களும் நிறைய, கவியின் கணவனாகப் போகின்றான் பிரபஞ்சன்.

அங்கே அவனை அதிக நேரம் சோதிக்க வைக்காமல், கவியின் கரத்தைப் பற்றிக்கொண்டு பெரிய மனித தோரணையுடன், மணப்பெண்ணை அழைத்து வந்து கொண்டிருந்தாள் ஆதினி.

குழந்தை விருப்பப்பட்டது போல், தேவதை உடையில் அச்சு அசல் தேவதை போலவே மிளிர்ந்த ஆதினியைத் தான் மகிழ்ச்சியில் கையில் பிடிக்க முடியவில்லை.

“பிரபு!!!!” என உற்சாகமாக அழைத்து அவனுக்கு கையசைக்க வேறு செய்த குழந்தையின் செயலில், பிரபஞ்சனின் பதட்டமும் கொஞ்சம் குறைய, சிரிப்புடன் குழந்தைக்கு கையசைத்தவனின் பார்வை, இப்போது அவனின் கவியை சிறைபிடித்தது.

 மெல்லிய ஜரிகை கொண்ட சிகப்புப் பட்டில், மதுவின் பிடிவாதத்தில் மெலிதாய் கண்மை இட்டு, தலைக்கு கொஞ்சம் மல்லிகைப்பூ சூடியிருந்தாள் கவி!! அதுமட்டுமே அவளின் அலங்காரம்!!!

அதிலே, பிரபஞ்சனின் கண்களுக்கு அவள் பேரழகியாகத் தெரிய,  முன்பு போல் கூச்சம் இல்லாமல் வெளிப்படையாகவே அவளை ரசித்தபடி காத்துக்கிடந்தான் அந்த காதலன்.

“பார்ரா!! சிட்டிக்கு ரொமான்ஸ் எல்லாம் வரும் போல??” என்று மது அதைக்கண்டு கேலி செய்ய,

அதற்குள் மணப்பெண்ணும் அவர்களை சமீபித்திருந்தாள்.

“கவி!! வா வா!! வந்து இவன் பக்கத்துல நில்லு!! ரொம்ப நேரமா உன்னைக் காணோம்ன்னு தேடித் தவிச்சிட்டான்!!” என அப்போதும் மது தான் அந்த இடத்தை கலகலப்பாக வைத்திருந்தாள்.

சன்னதியின் அருகில் பிரபா!!

அவனின் வலப்பக்கம் கவி நின்றிருக்க, இடப்பக்கம் குழந்தை அவன் கைகளைப் பற்றியபடி நின்றிருந்தாள்.

அவனின் உலகம் அவனின் இருபக்கமும் நிறைந்திருக்க, வாழ்க்கை முழுமையடைந்துவிட்டதாக அந்த க்ஷணம் பிரபா உணர, கண்கள் கூட கலங்கும் போலிருந்தது.

இருந்தும் கண்ணை சிமிட்டி, ஒவ்வொரு நொடியையும் அவன் உள்வாங்கி ரசிக்க, கவியும் அவனுக்கு இணையான மகிழ்வுடன் அந்தத் தருணத்தை மனதில் பொக்கிஷமாக சேகரித்துக் கொண்டாள்.

கடவுள் பாதத்தில் வைத்து பூஜை செய்த தாலியுடன் அய்யர் அவர்களை நெருங்க, பிரபஞ்சனின் இதயம் இருமடங்கு வேகத்தில் துடிக்கத் துவங்கியது.

இதோ!! வந்தே விட்டது!! அவன் எதிர்பார்த்த நிமிடங்கள்!!!!

“இந்தாங்க அம்பி!! பகவானை வேண்டிட்டு தாலியை கட்டுங்கோ!!” என்று அவனிடம் மங்கள நாணை அவர் கொடுக்க வர,

“எங்க பொண்ணுகிட்ட கொடுங்க சாமி!!! அவ கையால எடுத்து தரட்டும்!!!” என அதை ஆதினியின் கரங்களில் கொடுக்கச் சொல்லி, மீண்டும் அவனின் காதலால் கவியின் மனதில் எங்கோ சென்றுவிட்டான்.

குழந்தைக்கு அவனின் செயலில் பொதிந்திருந்த அன்பு புரியாவிட்டாலும், மற்ற அனைவருக்கும் அவன் குழந்தையை மனதில் எந்த இடத்தில் வைத்திருக்கிறான் என்று புரிய, பிரபஞ்சன் அனைவரின் மனதிலும் உயர்ந்து நின்றான்.

கலங்கிவிட்ட கண்களுடன் அவனைத் திரும்பிப் பார்த்த கவி,

“தேங்க்ஸ்!!” என முணுமுணுக்க,

“அட!! அவ என் பொண்ணு!! அவ எடுத்துக் கொடுக்கிறது தான் சரியா இருக்கும்!!” என அவளின் கண்ணீரைத் துடைத்தான் பிரபஞ்சன்.

ஆசையாய் அந்த மங்கள நாணை கைகளில் வாங்கிய ஆதினி,

“இந்தாங்க பிரபு!!! கட்டுங்க!!!” என்று பிரபஞ்சனின் கைகளில் கொடுத்த ஆதினியின் முகமெல்லாம் புன்னகையில் பூத்திருந்தது.

“தேங்க் யூ அம்மு!!!” என்று அந்த பொன் மஞ்சள் சரடை  கைகளில் வாங்கிய பிரபஞ்சன்,

தன் கண் முன்னிருந்த கடவுளிடமும், அவன் கண்ணை விட்டு என்றோ மறைந்து தெய்வமாகியிருந்த அவனின் அன்னையிடமும், மனதார வேண்டிக் கொண்டவன்,

“என் கவியும் அம்முவும் என்னைக்கும் சந்தோஷமா இருக்கணும்!!” எனும் வேண்டுதலுடன் கண் திறக்க,

அங்கே அவனையே காதலாகப் பார்த்தபடி அவனின் கவி!!!

அதில் அவனின் அகமும் முகமும் சேர்ந்து மலர,

“கட்டவா???” என்று அவளிடம் அப்போதும் சம்மதம் கேட்டு நின்ற பிரபஞ்சனை பொய்யாய் முறைத்த கவி,

“அட கட்டு டா பிரபா!! நீ கட்டுறியா இல்லை நான் காட்டவா??” என்று ஒரு நிமிடம் பழைய கவியாக மாறி அவள் பொய்யாய் அதட்டல் போட,

இருவரின் முகத்திலுமே அதை நினைத்து அமர்க்களமான புன்னகை!!

அதே மகிழ்வுடன், கவியின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அனைவரின் ஆசிர்வாதம் சூழ, மீண்டும் அவளைத் தன் மனைவியாக்கிக் கொண்டான் பிரபஞ்சன்.

“ஐய் சூப்பர் சூப்பர்!!!” என்று ஆதினி மகிழ்ச்சியில் கைதட்டி துள்ளிக் குதிக்க,

மென்முறுவலுடன் ஆதினியை தன் கைகளில் அள்ளிக்கொண்ட பிரபா, அவளின் கன்னத்தில் மென்மையாய் ஒரு முத்தம் பதித்தவன்,

அவர்களை கனிவுடன் பார்த்திருந்த அவனின் கவிக்கும் ஒரு முத்தத்தைப் பரிசளித்திருந்தான்.

அவனின் செய்கையை எதிர்பார்க்காத கவி அதிர்ந்து வாயைப் பிழக்க,

“டேய் பிரபா!! கலக்குற டா!!” என மது அந்தக் காட்சியைக் கண்டு ஆரவாரம் செய்துவிட்டாள்.

அவனைக்கொண்டு, குழந்தையும் தன் அன்னைக்கு முத்தம் பதிக்க, கவியின் மனம் சந்தோஷத்தை எல்லாம் கடந்து, ஆழ்கடலைப் போல ஒருவித அமைதி நிலையை அடைந்திருந்தது.

அவர்களின் கஷ்ட காலங்களில் உடனிருந்து கண்டிருந்த கவின் மற்றும் மதுவிற்கு இப்போது தான் நிம்மதியாக இருந்தது.

இனியாவது இவர்கள் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என அனைவரும் நினைக்க, அனைவரின் ஆசைப்படி, பிரபஞ்சனும் அவனின் கவியும் வளமான ஒரு வாழ்வை வாழ்வர் என்பதில் இனி சந்தேகமில்லை.

உண்மையான காதல் எத்தனைத் தடைகளைக் கடந்தும் கடைசியில் கைவந்து சேரும் என்பதற்கு இவர்களின் காதலே சாட்சி!!!

காதல் வெல்லட்டும்!!! அவர்கள் வாழ்வில் இன்பம் பொங்கட்டும்!!!!

“இருவராய் பிரிந்து,

 மூவராக இணைந்திருக்கும் இந்தக் காதல்!! 

 முடிவில்லாமல் நீண்டு கொண்டே போகட்டும்!!!  முடிவிலியாய்!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!