Skip to content
Post Views: 3,777
அன்பு – 8
“என்னடா??? அப்படியே ஷாக் ஆகிட்ட?? எதிர்பார்க்கலையா??” என குறும்புடன் புருவத்தை ஏற்றி இறக்கிய கவியை விட்டு கண்களை திருப்பமுடியவில்லை பிரபஞ்சனுக்கு!!!
Advertisement
காதல் கொண்டவனின் கண்களுக்கு, காக்கை கூட அழகாகத் தெரியுமாம்.. அப்படி இருக்கையில் காதலித்தவள் பேரழகியாகத் தெரிவது இயல்புதானே!!!
அதுவும் அன்று அவனுக்காக பார்த்துப் பார்த்துத் தன்னை அலங்கரித்துக் கொண்டு பாவாடை தாவணியில் அவன் கண்முன் தோன்றி அவன் சிந்தையை சிதறடித்த கவி, அவன் கண்களுக்கு சிறகுகள் இல்லாத தேவதையாகத் தான் தோன்றினாள்.
Advertisement
Advertisement
பருவ வயதில் அடியெடுத்து வைத்திருந்த பிரபாவிற்கு, கவியின் அழகு சித்தம் கலங்கடிக்கச் செய்ய, தன்னை மறந்து அவளை ரசித்துக் கிடந்தான்.
அவன் பார்வை மங்கையின் மனதில் குறுகுறுப்பை உண்டுசெய்ய,
Advertisement
“பார்த்தது போதும் டா பிரபா!! விஷ் பண்ணவே இல்லை நீ இன்னும் எனக்கு!!!” என வெட்கத்தில் சிவந்த கன்னக்கதுப்புகளை பொய்க் கோபம் கொண்டு ம(மு)றைத்தபடி கவி கேட்க,
அவளின் கேள்வியில் தான் நினைவு வரப் பெற்றவனாக,
“ப்ச்!! சாரி!! சாரி கவி!!! விஷ் யூ எ மெனி மோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே!!! நீ ஆசைப்பட்ட எல்லாம் கிடைச்சு, நீ சந்தோஷமா இருக்கணும் என்னைக்கும்!!” என மனதார அவளை வாழ்த்தினான்.
“நான் ஆசைப்பட்டது உன் மேல தான்.. அதான் நீ எனக்கு கிடைச்சிட்டியே!! நான் சந்தோஷமா.. ம்ஹூம்!! ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!!” என அகமும் முகமும் மலர, புன்னகையுடன் கவி நின்றிருந்த காட்சி, மரித்தாலும் அவன் மனக்கண்ணில் இருந்து மறையாதபடி அவன் மனதில் ஆழமாய் பதிந்து போனது.
“போதும் பிரபா!! என்னை இப்படி பார்க்காத!! ஒரு மாதிரி ஷையா வருது டா!!” என லேசாய் சிணுங்கிக் கொண்டே பிரபாவின் முகத்தைப் பிடித்து வேறு பக்கம் கவி திருப்ப,
‘இப்படியா பார்ப்ப??’ என தன்னைக் குறித்தே ஆச்சரியம் கொண்ட பிரபஞ்சனுக்கும், வெட்கம் வந்து தொலைத்தது!!
“நீ ஏன்டா பிளஷ் ஆகுற??” என அவனின் முகத்தை நிமிர்த்தி கவி கேட்க,
“ஷ்!! கவி!! விடு கவி!!” என மேலும் வெட்கம் கொண்டு அவளிடமிருந்து முகத்தை விடுவித்துக் கொள்ள போராடினான்.
“அழகன் டா நீ!!!!” அவனைப் போல் அல்லாமல், வெளிப்படையாகவே அவனை பாராட்டி ரசித்தாள் கவி!!
ஒருவரின் ஒருவர் அண்மையை அனுபவித்து ரசித்து, இதமாய் கழிந்த அவர்களின் பொன்னான நிமிடங்களைக் கலப்பதைப் போல் நாராசமாய் அவன் செவியைத் தீண்டியது அந்தக் குரல்!!!
“யோவ்!!! என்ன கனவா கண்டுட்டு இருக்க?? சிக்னல் விழுந்திருச்சு.. வண்டியை எடுத்துத் தொலை!!!” என பின்னால் இருந்து வந்த வாகன ஓட்டியின் குரலில் தன் நினைவில் இருந்து கலைந்த பிரபஞ்சன்,
“சாரி.. சாரி சார்.. கவனிக்கலை!!” என அவரிடம் மன்னிப்பு வேண்டியவன், வேகமாய் வண்டியைக் கிளப்ப,
பிரபஞ்சனை தற்போது அடையாளம் கண்டுகொண்ட அந்த வாகன ஓட்டி,
“சார் நீங்களா?? சாரி சார்!!!” என பவ்யமாக பம்முவதை அடுத்து கேட்க அங்கே இல்லை பிரபஞ்சன்.
மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த பிரபஞ்சனின் முகம் தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தது.
இத்தனை நாட்கள் இல்லாமல், இன்று அளவிற்கு அதிகமாய் அவனை சோதித்தது கவியின் நினைவுகள்!!!
மறக்கக் கூடிய உறவல்லவே அவர்களுக்கிடையில் இருப்பது!! இருந்தாலும் நிதர்சனத்தை உணர்ந்து கொண்டு, முடிந்து போன உறவை முடிந்தளவு நினைவால் கூட தொடர வேண்டாம் என அவனுக்கவனே கட்டுப்பாடு விதித்துக்கொண்டு, தன்னால் இயன்ற வரையில் அதை காப்பாற்றிக்கொண்டும் வருகிறான்.
ஆனால், இன்று போல் என்றாவது ஒருநாள் அவன் கட்டுப்பாடுகள் அனைத்தையும் காட்டாற்று வெள்ளம் போல் தகர்த்தெறிந்து விட்டு, அவனை மொத்தமாய் தனக்குள் மூழ்கடித்துக் கொள்ளும் கவியின் நினைவுகள்.
அப்போதெல்லாம், யாரையும் சந்திக்காமல், தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் பிரபஞ்சன், பின் தன் மனம் ஓரளவு சமன்பட்டபின் தான் வெளியே வருவான்.
ஆனால் இன்று அவ்வாறு செய்ய முடியாதே,
மதுவைப் பார்த்துக் கொள்ளும் பெரிய பொறுப்பை அவனை நம்பி கவின் ஒப்படைத்துச் சென்றிருக்க, தன்னுடைய நினைவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அறையில் அடைந்து கொள்ள முடியாதே!!!
எனவே, ஒரு புதுப்படத்தில் பாடல் பாடுவதற்காக ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டு வந்து கொண்டிருந்த பிரபஞ்சன், விரைவாக வீட்டை நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான்.
காரை அதன் இடத்தில் நிறுத்திவிட்டு, மின்தூக்கியை நோக்கிச் சென்றவனின் மனமெல்லாம் இன்னதென பிரித்தறிய முடியா ஏதோ உணர்வு!!!
அந்த உணர்வு வலிக்கச் செய்தாலும், எங்கோ ஓர் மூலையில் சின்னதாய் ஒரு சுகமும் பரவுவதை அவனால் உணர முடிந்தது!!
மின்தூக்கி அவர்களின் தளத்தை அடைய, அவன் இதயம் துடிக்கும் ஓசை அவனுக்கே கேட்டது,
தொண்டையெல்லாம் உலர்ந்து, மூச்சுவிடவே ஏதோ ஒரு சிரமம் அவனிடம்!!
‘ எனக்கு என்னானது???’ என அவன் ஒரு நொடி அப்படியே நின்று நிதானமாய் ஆழ மூச்செடுத்து விட,
அப்போதும் அவன் மனம் சமன்பட மறுத்தது!!
நேராக தன்னுடைய வீட்டிற்கே சென்று விடலாமா என அவன் ஒரு எட்டு பக்கவாட்டில் எடுத்து வைத்த நேரம், அவனை மீறிய ஏதோ ஒரு சக்தியின் உந்துதலில் மதுவின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தியிருந்தான் பிரபஞ்சன்!!
‘ என்னடா பிரபா ஆச்சு உனக்கு???’ என தன்னைக்குறித்தே குழப்பமடைந்து அவன் நின்றிருந்த வேளையில், லேசாய் கதவு திறக்கப்பட,
மெதுவாய் கண்களை அங்கு திருப்பிய பிரபஞ்சன் அங்கே கண்ட காட்சியில், தனக்கு ஏதும் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதோ என பயந்தேவிட்டான்.
பின்னே, இத்தனை நேரமாய் அவன் நினைவுகளில் தோன்றி, விடாமல் அவனைத் துரத்திய கவி, இப்போது நிஜமாய் கண்முன் தோன்றினால் அவனும் வேறு எப்படித் தான் எண்ண முடியும்???
ஆனால், இவனைப் போல அல்லாமல், பிரபஞ்சனை அங்கே கனவிலும் எதிர்பார்க்காத கவியின் கண்கள் இரண்டும் பெரிதாய் விரிய, அதிர்ச்சியில் சமைந்து நின்றுவிட்டாள் அப்படியே!!
அவளின் அதிர்ச்சி அவனின் விழியில் நுழைந்து மூளையில் பதியவே சில நொடிகள் தேவைப்பட, புரிந்ததும் இது கனவில்லையோ??? என அவன் மனம் சட்டென பரபரப்பானது!!!
‘அப்போ?? அப்போ!! நிஜமாவே கவி.. என் கவி.. என்னைத்தேடி வந்துட்டாளா???’ என அவனின் உள்ளம் ஆர்ப்பரிக்க, உணர்வுகளின் பிடியில் சிக்கித் தவித்த பிரபாவின் கண்கள் இரண்டும் இரத்தமென சிவந்து போனது!!!
“க.. கவி!!!!!”
இந்த இரண்டெழுத்தை உச்சரிப்பதற்குள்ளே அவன் தொண்டை உலர்ந்து போக, கலங்கிய கண்களை பட்டென புறங்கையால் துடைத்துவிட்டுக் கொண்டவன், எங்கே கண்ணை சிமிட்டினால் கூட அவள் உருவம் காற்றாய் கலைந்து விடுமோ என அஞ்சி, கண்களைக் கூடச் சிமிட்டாமல் அவள் உருவத்தை தனக்குள் பத்திரமாய் சேமித்துக் கொண்டிருந்தான்.
அவனையே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த கவிக்கு, அவனின் தவிப்புகள் புரிய, அவனின் நிலை கண்டு,
‘ இன்னும் என்னை மறக்கலையா பிரபா நீ!???’ என உள்ளுக்குள் கண்ணீருடன் கதறினாள்.
இவர்களின் நிலையைக் கலைப்பதைப் போல்,
“ஓய் அஞ்சலி!! எதுக்கு காலுல கம் ஒட்டிக்கிட்ட மாதிரி அங்கேயே நிக்கிற?? நீ உள்ள வந்தா தான அவன் உள்ள வர முடியும்??” எனக் கேட்ட மதுவின் குரலில்,
சட்டென சுதாரித்த அஞ்சலி, தன் அதிர்ச்சியை பட்டென மறைத்துக் கொண்டவள், அடுத்த நொடி பிரபாவை நிமிர்ந்தும் பாராமல் விரைவாக உள்ளே சென்றுவிட்டாள்.
அவள் விலகியதும், பரபரப்பான பிரபா,
“கவி!!!” என அழைத்துக்கொண்டே அவளைத் தொடர்ந்து உள்ளே வர,
“வாடா சிங்கர்!!! வேலை எல்லாம் முடிஞ்சுதா??” என மது விசாரிக்க,
அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரபஞ்சனின் கண்கள் அவனின் கவியைத் தேடி நாலாபக்கமும் அலைபாய்ந்தது.
“யாரை இப்படி தேடுற நீ?? அந்த கேர் டேக்கரையா??” என்ற மதுவின் கேள்வியில் தான் கவி எப்படி இங்கே வந்தாள் என்பது பிரபஞ்சனுக்குப் புரிய, அவன் மனதில் மிதமாய் ஒரு பூகம்பம்.
கவியின் வசதி நிலை அவன் அறியாததா??? அப்படி இருக்கையில் அவள் ஏன் இந்த வேலைக்கு வர வேண்டும் என அவன் மனம் புரியாமல் குழம்பித் தவிக்க, அப்போது தான் ஏஜென்சியில் வேலைக்கு வருவது ஒரு இளம் விதவை என குறிப்பிட்டிருந்தது இவன் நினைவுக்கு வர, சட்டென அவன் உடலில் ஒரு பரபரப்பு!!
“எங்க.. எங்க அவ??” என மதுவிடம் கேட்டுக்கொண்டே அங்கே திறந்திருந்த அறைக்குள் நுழையப் போன பிரபாவின் கைபிடித்து தடுத்த மது,
“மேனர்ஸ் இல்லையா பிரபா?? இப்படியா பெர்மிஷன் கூட கேட்காம வயசுப்பொண்ணு ரூமுக்குள்ள போக டிரை பண்ணுவ??” என கண்டிப்புடன் கேட்டாள்.
அவளின் கேள்விக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லும் நிலையில் பிரபா இல்லவே இல்லை!!!
அவன் மனதில் எக்கச்சக்க குழப்பங்கள்!!! விடையறியா பல கேள்விகள்!!! அனைத்திற்கும் விடையாய் இருப்பவள், இவனைக்கண்டு அறைக்குள் ஒளிந்து கொள்ள, அவனுக்கு பித்து பிடிப்பது போல் ஆனது!!
முயன்று, ஆழ மூச்சுக்களை இழுத்துவிட்டு, தன்னை கொஞ்சம் நிதானத்திற்கு கொண்டு வந்தவன்,
அங்கே அவனின் செய்கைகளை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த மதுவிடம்,
“அவளை வெளிய வர சொல்லு!!!!” என்றுமே இல்லாத அழுத்தம் நிறைந்த குரலில் மொழிய,
மதுவிற்கு பலத்த ஆச்சர்யம்!!
‘ இப்படியெல்லாம் பேசுவியா டா நீ??’ என வியப்பு மேலோங்கிட அவனையே பார்த்து நின்ற மதுவைக் கண்டு பல்லைக் கடித்த பிரபஞ்சன்,
“ப்ச்!! என் மூஞ்சில என்ன இருக்கு?? அவளைக் கூப்பிடு!!!” என கோபம் கொள்ள,
‘ சிட்டிக்கு கோபம் எல்லாம் வருது ‘ என அதிசயித்துக் கொண்ட மது,
“அஞ்சலி!!! கொஞ்சம் வெளிய வரியா???” என அவள் இருந்த அறையின் வெளியே நின்று குரல் கொடுத்தாள்.
“ஒரு.. ஒரு நிமிஷம்!!!” என அவகாசம் கேட்ட கவியின் குரலே அவள் அழுகையை அடக்கப் போராடுகிறாள் என பிரபஞ்சனுக்கு உணர்த்தி விட,
‘ உன்னையும் வருத்தி, என்னையும் இன்னும் எவ்வளவு வதைக்கப் போற கவி?? இன்னும் என்னென்ன என்கிட்ட மறைச்சு வச்சிருக்க???’ என ஆதங்கமாக அவளுடன் மானசீகமாக உரையாடிக் கொண்டவன், கவியின் வருகைக்காக காத்திருக்க,
ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு, கதவைத் திறந்து வெளியே வந்த கவி தெளிவாக காணப்பட்டாள்!?(தெளிவாக இருப்பதாக காட்டிக்கொண்டாள்!!)
அதை சட்டென உணர்ந்து கொண்ட பிரபாவிற்கு, அவளின் சிவந்திருந்த கண்கள் வேறு கதை சொல்ல,
‘ என்கிட்டேயே நடிக்கிற?? ம்ம்ம்!!’ என பெருமூச்சுடன் எண்ணிக்கொண்டவனின் பார்வை அப்போது தான் அவள் கொண்டுள்ள மாற்றங்களை கவனித்தது!!
இயல்பிலேயே சற்று பூசினார் போன்ற உடல்வாகு கொண்ட கவிக்கு, கன்னங்கள் இரண்டும், இரண்டு பெரிய தக்காளியை பொருத்தி வைத்தது போல், அவ்வளவு புசு புசுவென இருக்கும்.
இன்றோ, கிள்ளி எடுக்கக் கூட சதை இல்லாமல், கண்கள் இரண்டும் உள்ளே போய், கன்னங்கள் வற்றி, கழுத்து எலும்புகள் எல்லாம் துருத்திக் கொண்டு வெளியே தெரிய, ஏதோ நோயாளி போல் அவன் கண் முன் நின்றிருந்த கவியைக் கண்டு பிரபாவின் நெஞ்சுக்கூடே காலியான உணர்வு!!
‘ என்ன தான் கவி ஆச்சு உனக்கு???’ என அவன் மனம் அரற்ற, அவன் கண்கள் அப்படியே அவனின் மனவலியை பிரதிபலித்தது!!
ஆனால் அதை கண்டுகொள்ள கவி, அவனை நிமிர்ந்தாவது பார்க்க வேண்டுமே!!
அவள் கருமமே கண்ணாக மதுவிடம் திரும்பி, “என்ன மேம்!!?? சாப்பாடு எடுத்து வைக்கவா??” எனத் தன் நிலை இதுதான் என அவனுக்கு உணர்த்துவதோடு, தனக்கும் மனதில் கூறிக்கொண்டாள்.
இவள் தான் பிரபாவின் காதலி எனத் தெரியாத மதுவோ,
“ப்ச்!! மேம்னு சொல்லாதன்னு எத்தனை தடவை சொல்றது உனக்கு??” என அதட்டியவள்,
“ஸீ!! இது பிரபா!! பெரிய சிங்கர்!! கேள்விப்பட்டிருப்ப தான??” என பிரபாவை சுட்டிக்காட்டி மது அறிமுகப்படுத்த,
பிரபாவின் பக்கம் திரும்பாமலே,
“பாட்டு கேக்குற பழக்கம் எனக்கு இல்லை” என்றவளைக் கண்டு பிரபா பல்லைக் கடித்தான்.
“பார்ரா!! இவன் தான் மியூசியத்துல வைக்க வேண்டிய பீஸ்ன்னு நினைச்சிட்டு இருந்தேன் இவ்வளவு நாளும்!! அவனையே ஓவர்டேக் பண்ண நீ வந்துட்ட இப்போ!! பாட்டு கேட்க பிடிக்காத ஒரு பொண்ணை இப்போ தான் நான் பார்க்கிறேன்!!” என வியந்த மது,
“சரி அதை விடு!! இவன் எங்களோட பெஸ்ட் பிரண்டு.. எதிர்த்த பிளாட்ல தான் இருக்கான்.. கவின் இல்லாதப்போ என்னைய பார்த்துக்கிட்டது எல்லாமே இவன் தான்.. இன்ஃபாக்ட், ஏஜன்சியில கேர் டேக்கர் வேணும்னு போய் ரிஜிஸ்டர் பண்ணதே பிரபா தான்.. நீ வர டைம், வேற வேலையா வெளிய போயிட்டான்.. இப்போதான் வரான்.. அதான் உனக்கு இன்ட்ரோ கொடுக்கலாம்னு கூப்பிட்டேன்!!” என மது பெரிதாய் விளக்கம் கொடுக்க,
கவியின் முகத்தில் சின்ன சலனம் கூட இல்லை,
‘ ஓஹ் அப்படியா!!’ என கதை கேட்கும் பாவனையில் அவள் அமைதியாக முகத்தை வைத்திருக்க,
பிரபாவிற்கு உள்ளே பற்றிக் கொண்டு வந்தது!!!
“பிரபா!! இதான் அஞ்சலி!!”
“அஞ்சலி!! இது பிரபா!!” என மீண்டும் முறையாக இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தாள் மது!!
சம்பிரதாயத்திற்காக அவனைக் கண்டு லேசாய் தலையசைத்த கவியின் முகத்தில் இருந்து எதையும் பிரபஞ்சனால் கண்டுகொள்ள முடியவில்லை!!
‘ எப்படி என்னைக் கண்ட பின்னும் இவளால் யாரோ போல் ஒதுங்கி நின்று, என்னைப் பார்த்து நிற்க முடிகிறது??’ என எண்ணி எண்ணி குமைந்து போன பிரபஞ்சனுக்கு, தன் நிலையை எண்ணி ஆற்றாமையாய் வந்தது!!
“அம்மு!! அம்மு முழிச்சுப்பா.. நான் உள்ள போறேன்.. ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க” என மதுவிடம் சொல்லிக்கொண்டு அஞ்சலி உள்ளே செல்லப் போக,
“நில்லுங்க கவி….” என அழுத்தமாய் வந்து விழுந்த பிரபஞ்சனின் குரலில் கவிதாஞ்சலியின் கால்கள் தன்னைப் போல் சட்டென நின்றுவிட,
மெதுவாய் திரும்பி அவனை தீர்க்கமாக நோக்கியவள்,
“அஞ்சலி!!!” என அவனைத் திருத்தினாள்.
அவள் குரலில் இருந்த கடினம், அவனை எட்ட நிறுத்தியது!!!
அவளின் எண்ணவோட்டத்தை கண்டுகொண்ட பிரபாவின் இதழோரம் ஒரு கசந்த முறுவல்!!!
“ஓஹ்!! அஞ்சலி!!!” என ஒவ்வொரு எழுத்தாய் நிறுத்தி நிதானமாக உச்சரித்தவன்,
“பட்!! கவிதாஞ்சலி தானே உங்க பெயர்??” என விடாமல் கேட்க,
மதுவிற்கு பிரபாவின் இந்த பரிமாணம் புதிதாக இருந்தது.
என்னாச்சு இவனுக்கு என அவள் குழம்பிப் போய் நிற்க,
அஞ்சலி அவனுடன் மேலும் பேச்சை வளர்க்க விரும்பாமல்,
“எதுக்கு சார் கூப்பிட்டீங்க??? உள்ள என் பொண்ணு தனியா தூங்கிட்டு இருக்கா!! நான் போகணும்!!” என மரியாதை கொடுத்து அவனை எட்ட நிறுத்தவே முயன்றாள்.
அதை உணர்ந்தாலும், பெரிதாய் அலட்டிக்கொள்ளாமல்,
“உங்க ஹஸ்பண்டுக்கு என்னாச்சு??” என அவளின் வெற்றுக்கழுத்தை பார்த்துக் கொண்டு அவன் தனக்கு வேண்டியதை வினவ,
பெண்ணவளுக்குள் தடுமாற்றம்.
அஞ்சலியின் முகத்தைக் கண்டு சங்கடம் கொண்ட மது,
“பிரபா!! என்ன பண்ற?? அறிவில்லையா உனக்கு??” என அடிக்குரலில் சீறினாள்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாத பிரபஞ்சன்,
“உங்க ஹஸ்பண்ட், எப்போ எப்படி இறந்தாருன்னு நான் தெரிஞ்சுக்கலாமா??” என பதில் தெரிந்தே ஆக வேண்டும் என அடமாய் அவன் நிற்க,
அவனை கண்களில் திரண்டு விட்ட கண்ணீருடன் நிமிர்ந்து நோக்கிய கவி,
“வேண்டாமே!! பிளீஸ்!!” என இறைஞ்சுதலாய் அவனைப் பார்க்க,
அதற்கெல்லாம் மசிந்துவிடக்கூடாது என பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான் பிரபஞ்சன்.
அவனின் எண்ணவோட்டத்தை அறிந்து கொண்ட அஞ்சலியும், தன் கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவள், ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து நோக்கி,
“அம்முவோட அப்பா தவறி, இரண்டு வருஷம் ஆச்சு!!! போதுமா? இல்லை வேற எதுவும் வேண்டுமா??” என சற்று கட்டமாகவே கேட்க,
பிரபாவின் முகத்தில் மென்முறுவல்!!
அவன் கேட்க நினைத்த பதில் கிடைத்துவிட்டதில், அவன் மனதின் கொந்தளிப்பு சிறிதாய் அடங்க,
“நீங்க போகலாம்!!” என இளநகையுடனே அவளை உள்ளே செல்ல அனுமதித்தவன், செல்லும் அவளையே காதலாகப் பார்த்திருந்தான்.
இன்னும் கவியின் வாழ்க்கையில் முழுதாக என்ன நடந்ததென்று தெரியாவிட்டாலும், அவளின் மனதின் மூலையில் தனக்காக ஒரு சின்ன இடம் இன்னும் இருப்பதை அறிந்து கொண்டவன்,
‘ அறியா வயதில் உன்னை பத்திரப்படுத்துக்கொள்ள தெரியாமல் தொலைத்துவிட்டேன்.. இந்த முறை நிச்சயம் அதே தவறை செய்ய மாட்டேன்!!’ என தனக்குள் கூறிக்கொண்டான்.
சென்ற முறை அவனின் காதலுக்கு, யார் யாரோ தடையாக இருந்தனர்!!
ஆனால் இந்த முறை, அவன் காதலியே தடையாக இருக்கப் போகிறாள், அவளிடமே தன் காதலுக்காக மிகவும் போராட வேண்டும் என உணர்ந்தே இருந்தவனுக்கு, கவியின் அண்மையே யானை பலத்தை வழங்க,
“எது வந்தாலும் பார்த்துக்கலாம்!!!” எனும் அசட்டுத் துணிச்சலுடன், கவியுடனே அவன் காதலுக்காக போராட தயாராகி விட்டான் அந்த காதல் கிறுக்கன்!!
“கத்தியின்றி இரத்தம் இன்றி ஒரு போர்!!
காதலுக்காக!!! காதலியுடனே!!!”
error: Content is protected !!