Skip to content
Post Views: 3,650
அன்பு – 9
“டேய் கவினு!!! இந்த பிரபா சரியே இல்லை டா!! இவனைப்போய் நல்லவன்னு இத்தனை நாளும் நம்பிட்டு இருந்தேன் பாரு.. சரியான லூசு டா நான்!!!” என உணவு மேசையில் ஒரு கையால் கன்னத்தை முட்டுக் கொடுத்து, நாற்காலியில் சம்மணமிட்டு அமர்ந்த மது, அவள் எதிரில் அமர்ந்திருந்த பிரபஞ்சனை முறைத்துக்கொண்டே கவினுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
Advertisement
அவள் பேச்சு காதில் விழுந்தாலும், அதை சட்டை செய்யாத பிரபாவோ, கைபேசியில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தான்.
அவனின் அலட்சியம் மதுவை மேலும் கோபமூட்ட,
Advertisement
Advertisement
“நீ உடனே கிளம்பி இங்க வா டா கவின்!! இவனைப் பார்க்க பார்க்க எனக்கு இன்னும் காண்டாகுது!!” என்று கடுப்புடன் மொழிந்தாள்.
அங்கு படப்பிடிப்பில் இருந்த கவினோ,
Advertisement
“ப்ச்!! மது!! உங்க ரெண்டு பேரு சண்டையை கேட்க இப்போ எனக்கு டைம் இல்லை.. முக்கியமான சீன் போயிட்டு இருக்கு.. அதுனால நைட்டு கால் பண்றப்போ உன்னோட புலம்பலை எல்லாம் கேட்கிறேன்.. இப்போ நீ சாப்பிட்டு ரெஸ்ட் எடு!! லவ் யூ!!” என்ற கவின், மதுவின் பதிலுக்கு காத்திராமல் அழைப்பைத் துண்டித்திருந்தான்.
கவினின் செயலில் மேலும் எரிச்சலடைந்த மது, கோபமாக எழுந்து உள்ளே செல்லப்போக,
“எதுக்கு இவ்வளவு கோவம்?? இந்த டைம்ல கோவம்லாம் கம்மி பண்ணிக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காங்க தான?? டாக்டர் சொன்ன எதையும் கேட்கிறது இல்லை!!” என அலுத்துக் கொண்ட பிரபா,
அங்கே முறைத்துக்கொண்டு நின்றிருந்த மதுவின் கைபிடித்து மீண்டும் நாற்காலியில் அமரவைத்து,
“ஒழுங்கா சாப்பிடுங்க!! லேட் ஆச்சு!!” என அவளுக்கு உணவை எடுத்து வைக்கப்போக,
“என்ன இவ்வளவு நேரம் அந்நியனா இருந்த.. இப்போ மறுபடியும் அம்பியா மாறிட்டியா??” அவனின் அக்கறையில் மனம் சற்றே இலகுவாக, இயல்பாய் அவனை சீண்டினாள் மது!!
அதற்கெல்லாம் பதிலளிக்காத பிரபா, பலவித எண்ணங்களில் சிக்கித் தவிப்பதன் பிரதிபலிப்பாக அவன் முகம் மிகவும் குழம்பிக் காணப்பட்டது.
மது தன் குறும்பைக் கைவிட்டவளாக,
“கவின் உனக்கு ஒரு லவ் பெய்லியர் ஸ்டோரி இருக்குன்னு சொல்லிருக்கான்.. உன் லவ் பெய்லியர்!!! அதுக்கு.. ம்ம்.. அதுக்கு அஞ்சலி தான் காரணமா டா பிரபா???” என தயக்கத்தையும் மீறிய ஆர்வம் மதுவின் குரலில் தெரிந்தது.
அவளின் பேச்சைக் கேட்டு மென்மையாய் புன்னகைத்த பிரபா,
அங்கே அடைத்து வைக்கப்பட்டிருந்த கவியின் அறையை காதலுடன் நோக்கியவன்,
“ஹம்ம்ம்!!! லவ் பெயிலியர்!!!” என வலி தாங்கிய குரலில் சொல்லிக் கொண்டவனின் சிரம் தன்னாலே இட வலமாய் அசைந்தது.
“என் லைஃப்ல, என் சிங்கிங் கேரியர்ல நான் அடைஞ்ச வெற்றி, என் வாழ்க்கையில நடந்த, இனி நடக்கப்போர எல்லா நல்லதுக்கும் காரணம் என் கவி தான்!!! கவி மட்டும் தான்!!!” என ஆத்மார்த்தமான குரலில் பிரபஞ்சன் சொல்லி முடிக்க, மது அவனை அதிசயமாகப் பார்த்திருந்தாள்!!
இன்றைய சமூகத்தில், காதல் தோல்வி அடைந்த பல பேர், காதல் எனும் பெயரில் என்னென்ன கொடூரங்களை ஒரு பெண்ணிற்கு செய்கின்றனர், என கண்கூடாக பார்த்திருந்த மதுவிற்கு, பிரபா அனைத்து ஆண்மகன்களிலும் இருந்து தனித்து காணப்பட்டான்.
இவ்வளவு மரியாதையாக தன் முன்னால் காதலியை அறிமுகப்படுத்த முடியுமா என்ன?? இதோ அவன் காதலுக்கும், காதலிக்கும் இவ்வளவு அழகாய் மரியாதை செய்துவிட்டானே இந்த பிரபா!! என எண்ணி பெருமிதம் கொண்ட மது,
“நீ உண்மையாவே ரொம்ப கிரேட் டா பிரபா!!” என மனமுவந்து பாராட்டினாள்.
இன்னும் அவன் கவியை நேரில் சந்தித்துவிட்டதை நம்பமுடியாமல், கனவுலகில் சஞ்சரிப்பவனைப் போல், கவியின் அறையைப் பார்த்தபடி நின்றிருந்த பிரபாவின் மனதிற்குள் ஆயிரம் சிந்தனைகள்.
‘ இதற்கு முன் கவி வாழ்க்கையில் என்ன நடந்தது? அம்முவின் தகப்பனுக்கு என்னானது?? இனி என்ன நடக்கப்போகிறது??’ என அவனுக்குள் ஆயிரம் விடை தெரியாத கேள்விகள் இருந்தாலும்,
“என்ன நடந்தாலும், இந்த முறை மட்டும் உன் கவியை தொலைச்சிடாத பிரபா!!!” என ஒரு குரல் மட்டும் உள்ளே அழுத்தமாக கேட்டுக் கொண்டே இருந்தது பிரபாவிற்கு!!!
எனவே மதுவின் பாராட்டிலெல்லாம் கவனம் கொள்ளாதவன்,
“கவி.. கவி சாப்பிட்டாளா??” என சட்டென நினைவு வந்தவனாகக் கேட்க,
மதுவிற்கும் அப்போது தான் அஞ்சலி இன்னும் உணவருந்தாதது நினைவு வந்தது.
“அச்சோ!! இல்லைடா பிரபா.. அந்த குட்டிக்கு மட்டும் தான் சாப்பாடு கொடுத்தா.. அவ இன்னும் சாப்பிடலை.. இரு கூப்பிடுறேன்” என மது எழுந்து கொள்ள,
கவியைப் பற்றி நன்கு அறிந்திருந்த பிரபஞ்சன், இந்நேரம் அவளின் மனநிலை என்னவாக இருக்கும் என யூகித்ததால்,
“நான் அந்த ரூம்ல இருக்கேன்.. நான் இருந்தா அவ வர மாட்டா..” என கவிக்காக யோசித்து அவன் இன்னொரு அறைக்குள் அடைந்து கொள்ள,
“அநியாயத்துக்கு நல்லவனா இருக்கியே டா பிரபா!!” என சிலாகித்துக் கொண்ட மது, கவியை அழைக்க அவள் அறைக்குச் சென்றாள்.
இங்கே கவியின் அறையில்,
பிரபா நினைத்ததைப் போல், நடந்ததை நம்ப முடியாத அதிர்ச்சியில் திக்பிரம்மை பிடித்ததைப் போல் அமர்ந்திருந்தாள் கவிதாஞ்சலி!!!
யாரை இனி வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது என கடவுளிடம் தினம் தினம் பிரார்த்தனை செய்தாளோ, அவனே இவ்வளவு விரைவில் தன் கண் முன் தோன்றுவான் என கனவிலும் அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.
வாழ்க்கை, அவளுக்கு எழுந்து கொள்ளக் கூட அவகாசம் கொடுக்காமல், அடுத்தடுத்து கொடுத்துச் சென்றிருந்த வலிகளில், உணர்ச்சிகள் மொத்தமும் மரித்து, மனம் என்றோ கல்லாய் இறுகிவிட்டது என அவள் நினைத்திருக்க,
கல்லுக்குள்ளும் ஈரம் உண்டு எனத் தன் ஒற்றைப் பார்வையில் அவளுக்கு உணர்த்தியிருந்தான் அவளின் பிரபஞ்சன்!!!!
அவனைப் பார்த்ததே பேரதிர்ச்சி எனும் போது, காலங்கள் கடந்த பின்னும் அவன் கண்களில் இன்னும் மாறாதிருந்த(தீராதிருந்த) அவளுக்கான காதல்!!! அவளை சுக்குநூறாய் உடைத்திருந்தது!!!
“ஏன்டா பிரபா!!! என்னால எவ்வளவு கஷ்டப்பட்ட??? அவ்வளவு நடந்தபிறகும்.. உன் வாழ்க்கையை கெடுத்துட்டு, என் வாழ்க்கை.. என் வாழ்க்கை வேற திசையில அமைச்சுக்கிட்டேன்னு தெரிஞ்ச பின்னாடியும் ஏன்டா என்னை வெறுக்க மாட்டேங்குற???” கண்களில் வழியும் கண்ணீரைக் கூட துடைத்துவிடும் ஸ்மரனை இல்லாமல், மானசீகமாக பிரபாவிடம் கேட்டுக்கொண்டிருந்த கவிக்கு, அவன் காதலின் ஆழத்தைக் கண்டு மீண்டும் கண்கள் கரித்தது!!!
“நான்.. நான் உன் காதலுக்கு தகுதியானவ.. இல்லை டா பிரபா!!” மனம் அரற்ற, குற்ற உணர்ச்சியுடன் நிமிர்ந்த கவியின் கண்கள், அங்கே கட்டிலில் நிம்மதியான சயனத்தில் ஆழ்ந்திருந்த ஆதினியின் மீது நிலைகுத்தி நின்றது.
குழந்தையைக் காணக் காண, கவியின் குற்ற உணர்ச்சி அதிகரித்துக் கொண்டே போக, தன்னால் அவன் அடைந்த துயரங்கள் அனைத்தும் இன்று நடந்தது போல் மீண்டும் அவள் கண் முன் தோன்றி, கத்தி இல்லாமலே அவளை வதம் செய்தது.
நேரம் ஆக ஆக, பிரபாவை விட்டு முடிந்த அளவு தூரமாகச் சென்று விடு, அவன் வாழ்க்கை இனியாவது மலரட்டும் என ஒரு குரல் உள்ளே கேட்டுக்கொண்டே கவியை கொன்று சாய்க்க,
கலங்கிப் போய் அமர்ந்திருந்த கவி, அவனை விட்டு விலகிவிடுவது தான் அவன் வாழ்க்கைக்கு நல்லது என முடிவெடுத்து, எப்படி, எங்கு செல்வது என தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்க,
காதல் கொண்ட மனமோ, ‘ எத்தனை முறை தான் அவன் காதலை கொன்னுட்டே இருப்ப கவி?? இத்தனை நடந்த பின்னும் குறையாத அவனோட காதல், இப்போ நீ விலகிப் போனா மட்டும் குறைஞ்சிடுமா??’ என நியாயமாக கேள்வியெழுப்ப,
அதற்கெல்லாம் பதில் தெரிந்தும், அதை சிந்தித்துப் பார்க்கக் கூட திராணி இல்லாத கவியின் பார்வை இன்னமும் மகளிடமே!!!
“எனக்கு இப்போ என் அம்மு தான் முக்கியம்!!!!” என அந்த தாயின் உள்ளம் காதல் மனதை வென்றிருக்க,
தெளிவான மனதுடன் மீண்டும் பிரபாவைப் பிரிவது என முடிவெடுத்தபடி கவி நிமிர,
கதவைத் தட்டும் சப்தம் அவள் செவியை அடைந்து சிந்தையைக் கலைத்தது.
‘ எங்கே மீண்டும் பிரபாவோ???’ என அஞ்சிய கவிக்கு, அவன் கண்களைக் கண்டால் எங்கே அவனை விட்டு விலக முடியாதோ என பயம் அதிகமாக இருந்தது.
எனவே முடிந்தளவு, அவன் கண்முன் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என முடிவெடுத்த கவி, எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் கதவையே பார்த்திருக்க,
பிரபா சொன்னதை நினைவில் கொண்டு வந்த மது, கவியின் மனநிலை உணர்ந்து,
“அஞ்சலி!! நான் தான் மது!!” என குரல் கொடுத்தாள்.
மதுவின் குரல் கேட்டாலும், எங்கே வெளியே சென்றால் பிரபாவைக் காண நேருமோ எனத் தயங்கிய கவி, இன்னும் அமைதியாகவே இருக்க,
பொறுமையிழந்த மது, “நான் உள்ள வரேன் அஞ்சலி!!” என சொல்லிக்கொண்டு கதவைத் திறந்திருக்க,
கவியின் பார்வை அவசரமாய் மதுவின் பின்னால் ஆராய்ந்தது!!!
எங்கே பிரபா ஏதும் நிற்கிறானா என சோதனை செய்து ஆசுவாசம் அடைந்த கவியை கண்டுகொண்ட மதுவும், அவளுக்கு சங்கடம் கொடுக்க விரும்பாமல்,
“யாரும் இல்லை.. நீ வா நம்ம சாப்பிடலாம்!!” என இயல்பாய் அழைக்க,
கவிக்கு பசி என்ற உணர்வே மரத்துப் போயிருந்தது.
“இல்லை.. எனக்கு பசியில்லை.. நீங்க சாப்பிடுங்க” என கவி மறுக்க,
“ப்ச்!! பசி இல்லைனாலும் கூட வந்து கம்பெனி குடு.. எனக்குத் தனியா இருக்க ஒரு மாதிரி இருக்குன்னு தான உன்னையவே கூப்பிட்டு வந்திருக்கேன்.. எனக்கு கம்பெனி கொடுக்காம நீ பாட்டுக்கு ரூம்குள்ளேயே உட்கார்ந்துகிட்டா என்ன அர்த்தம்??” என மது பட பட பட்டாசாய் பொரிய,
கவிக்கு அப்போது தான் எதற்காக இங்கே வந்தோம் என்று புரிய, தன் நிலையும், பிரபஞ்சனின் தற்போதைய உயரமும் அவனை விட்டு பிரியும் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது!!
மதுவிடம் சங்கடமாக புன்னகைத்த கவி,
“சாரி க்கா!! நீங்க போங்க.. நான் ஃப்ரெஷ் ஆயிட்டு பின்னாடியே வரேன்!!!” என்று கூற,
அழுது சிவந்திருந்த பெண்ணவளின் கயல்விழிகளைக் கண்ட மதுவும், அவளுக்கான நேரத்தைக் கொடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.
சொன்னது போலவே இரண்டு நிமிடங்களில், முகத்தை நன்றாக கழுவிக்கொண்டு தயக்கத்துடன் அறையை விட்டு வெளியே வந்த கவி, பிரபா எங்கேனும் தென்படுகிறானா என அந்த வீடு முழுவதும் பார்வையால் அலசிவிட்டு, அவன் இல்லை என உறுதிப்படுத்திக்கொண்ட பின் தான் உணவு மேசைக்கே வந்தாள்.
அவளையே பார்த்திருந்த மதுவிற்கும், கவியின் மனநிலை புரிய, பிரபாவைப் பற்றிப் பேசி அவளை மேலும் சங்கடப்படுத்த விரும்பாமல்,
தன்னைப்பற்றியும், தன் வேலையைப் பற்றியும் சுவாரசியமாக கவியிடம் பேச்சுக்கொடுத்த மது, சற்று நேரத்தில் கவியை இயல்பாக்கியிருந்தாள்.
மதுவின் இலகுவான பேச்சில், தன் கவலையை ஒதுக்கி வைத்துவிட்டு கவியும் சிறு புன்னகையுடன் உணவருந்த,
அங்கே அறையின் உள்ளிருந்த பிரபாவிற்கு அவ்வப்போது கேட்கும் கவியின் சிறு சிரிப்பொலியுடன் கூடிய ஒன்றிரண்டு சொற்கள் தான், அவனின் வறண்டு கிடந்த பாலைவன வாழ்க்கையில் சிறு மழைச்சாரலைத் தூவிச்சென்றது என்று சொன்னால் மிகையாகாது.
கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கழித்து அவனின் கவியை இவ்வளவு அருகில் பார்த்ததே அவனை ஒரு பரவச நிலையில் வைத்திருக்க, அவன் கேட்க ஏங்கிக்கிடந்த கீதமாய் அவளின் குரல் அவன் செவியை நிறைக்க, அந்த நொடி வாழ்க்கை அழகானதைப் போல் ஒரு தோற்றம் அவனுக்குள்!!!
மிகவும் உணர்ச்சிவசப்பட்டிருந்த பிரபஞ்சன், கவியின் குரலைக் கேட்டுக்கொண்டே கதவில் செவியைச் சாய்த்தபடி தரையில் அமர்ந்திருக்க, வெளியே கேட்ட கவியின் அந்தக் கேள்வியில் அப்படியே வியப்பில் அவன் புருவங்கள் இரண்டும் மேலேறியது.
அவள் இந்நேரம் தன்னை விட்டு விலகிச்செல்ல முடிவெடுத்திருக்ககக்கூடும் என அறிந்தே இருந்தவனுக்கு,
“அவ.. அவர் சாப்பிட்டாரா???” என தயக்கமாக ஒலித்த கவியின் குரலில் ஆகாயத்தில் பறக்கும் உணர்வு தான் அந்தக் காதலனுக்கு!!
‘ இதான் நீ கவி!!! என்னதான் என்கிட்ட இருந்து விலக, என்னைத் தெரியாத மாதிரி நடிச்சாலும் உன் கண்ணு!!! உன் கண்ணு எனக்கு உன்னை காட்டிக்கொடுத்திடும் கவி!!! நீ இல்லாம நான் இல்லை.. நான் இல்லாம நீயும் நிம்மதியா இல்லை கவி!! பிளீஸ் புரிஞ்சுக்கோ!!’ என மனதோடு அவளுடன் பேசிக்கொண்டிருந்தான் அவன்.
அதற்குள் கவியின் கேள்வியில் வியப்புடன் அவளை ஏறிட்ட மது, மேலும் ஏதாவது பேசி அவளை சங்கடப்படுத்த விரும்பாமல்,
“இல்லை!! இன்னும் சாப்பிடலை பிரபா!!” என கேள்விக்கு மட்டும் பதில் அளித்தாள்.
அவளின் பதிலில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கவிக்கு, உணவு உள்ளே இறங்காமல் அப்படியே தொண்டையில் சிக்கிக் கொண்டது!!!
“ஹேய் ஹேய் பார்த்து ஒழுங்கா சாப்பிடு அஞ்சலி!!!” என தண்ணீரை அவள் பக்கம் மது நகர்த்தி வைக்க,
மதுவின் சப்தத்தில் என்னானதோ, என நினைத்துக்கொண்டு பட்டென பிரபா கதவைத் திறக்க,
திடீரென தன் முன்னால் கதவைத் திறந்து கொண்டு வந்த பிரபாவைக் கண்டு அஞ்சலிக்கு அதிர்ச்சியில் மேலும் புரையேறிக் கொண்டது.
பலத்த இருமலில், கண்களில் நீர் கோர்த்துக் கொள்ள கவி மூச்சு விடவே சிரமப்பட, பதறிப்போன பிரபா,
“ஹேய் கவி!! என்னாச்சு?? இந்தா தண்ணி குடி.. ஒன்னும் இல்லை!! ஒன்னும் இல்லை!!” என சொல்லிக்கொண்டே அவள் தலையைத் தட்டிக்கொடுத்து, முதுகை நீவி விட, அஞ்சலிக்கு அவன் செய்கையில் மூச்சடைத்தது!!
அவனின் அக்கறையை உரிமையாக உள்வாங்கிக் கொள்ள முடியாமல் அவள் அவஸ்தையில் நெளிய,
அதற்குள் அன்னையின் இருமல் சப்தத்தில் கண் விழித்திருந்த அம்மு, அன்னையைத் தேடிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்திருக்க,
அங்கே அவனின் கவிக்கு என்னானதோ எனக் கவலையுடன், அஞ்சலியையே பார்த்தவண்ணம் நின்றிருந்த பிரபஞ்சனைக் கண்டு குழந்தையின் கால்கள் அப்படியே வேரூன்றி நின்று விட, கண்கள் அதிர்ச்சியில் விரிந்தது!!!
கதவு திறக்கும் சப்தத்தில் அஞ்சலியின் கவனம் அங்கே செல்ல, மகளின் வரவைக் கண்டு அஞ்சலிக்கு முள்ளில் நிற்கும் நிலையாக, தவிப்புடன் அவள் பிரபாவை நோக்கிய சமயம்,
அஞ்சலியின் பார்வையைக் கொண்டு பிரபாவின் கவனமும் அறையின் பக்கம் திரும்ப, அங்கே கவி, குழந்தையில் இப்படித்தான் இருந்திருப்பாளோ என எண்ணும் வகையில், அப்படியே கவியின் அச்சுப்பிரதியாக வந்து நின்ற குட்டி அம்முவைக் கண்டு பிரபஞ்சனின் உலகம் ஒரு நொடி சுழல மறந்தது!!!!
“காதல் கொண்டு ஜனிக்காவிட்டாலும்,
மொட்டுகளை வேர்கள் என்றும் வெறுப்பதில்லை!!!”
error: Content is protected !!