காலை 8 மணிக்கு அந்த நேரத்திற்கே உரிய பரபரப்பில் இயங்கிக் கொண்டிருந்தது விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி என்ற ஊரில் உள்ள அந்தப்பேருந்து நிலையம். பேருந்து நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோ நிறுத்ததில் ஒரு ஆட்டோவில் கல்லூரிக்கு ஏறினாள் நதி. நம் கதையின் நாயகி.
Advertisement
Advertisement
அவள் குரு – லட்சுமி தம்பதியரின் கடைக்குட்டி. குரு – லட்சுமி தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள். நடுத்தர குடும்பம். டீ கடை வைத்து வாழ்ந்து வருகின்றனர்.
மூத்த பெண் ரமா திருமணம் முடிந்து பக்கத்து ஊரில் வசித்து வருகிறார். தற்போது ரமாக்கு ஏழாம் மாதம் நடந்து கொண்டு இருக்கிறது. அடுத்தது சுதா முதுகலை தாவரவியல் முதலாம் ஆண்டு வெளியூரில் படித்துக் கொண்டிருக்கிறாள். கடைசிப்பெண் நதி. உள்ளூரிலேயே இளங்கலை முதலாம் ஆண்டு கணிதம் படிக்கிறாள்.
Advertisement
கடந்த மாதம் தான் கல்லூரி திறந்தது. இண்டர் காலேஜ் போட்டிக்காக நடன பயிற்சி எடுக்க சீக்கிரமே புறப்பட்டுவிட்டாள். அவளுக்கு 10 மணி தான் கல்லூரி நேரம்.
அவள் கல்லூரி அரசு உதவி பெறும் இருபாலர் கல்லூரி. அவள் கல்லூரியில் 2 சிஃப்ட். காலை 8 முதல் மதியம் 1 வரை ஒரு சிஃப்ட். அவர்கள் செல்ப் பைனான்ஸ் மாணாக்கர்கள். காலை 10 முதல் மாலை 4 வரை அடுத்த சிஃப்ட் கல்லூரி. இவர்கள் ரெகுலர் மாணாக்கர்கள்.
ஆட்டோ புறப்படும் நேரம் ஒரு கை வந்து ஆட்டோவை நிறுத்தியது. மஞ்சள் வண்ண கட்டம் போட்ட முழுக்கை சட்டை, கருப்பு நிற கால்சட்டை அணிந்த ஒரு இளைஞர் ஆட்டோவின் முன்புறம் ஓட்டுநரின் அருகில் அமர்ந்தான். அந்த இளைஞர் நதியை பார்க்கவில்லை.
கல்லூரிக்கு செல்லும் பரபரப்பில் இருந்தான். நதி அவனை பார்த்தாள். மாநிறம். ஆறடி உயரம். உயரத்திற்கு ஏற்ப உடல்வாகு. அவன் கழுத்தில் சிறு வெள்ளியிலான செயின் அணிந்திருந்தான். கல்லூரிக்கு பை எதுவும் இல்லாமல் இரண்டு நோட்டு மட்டுமே வைத்திருந்தான். பார்த்ததும் பிடித்து விடும் பேரழகனல்ல என்றாலும் மீண்டும் பார்க்க தூண்டும் ஆணழகனாகவே இருந்தான்.
ஏனோ அவனைப் பார்த்ததும் ஒரு பிடித்தம் நதிக்கு. அவளுக்கு மஞ்சள் நிறம் பிடிக்கும். எனவே மீண்டும் பார்க்க தோன்றுகிறது என அவள் நினைத்துக் கொண்டாள்.
கல்லூரி வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டனர். ஆட்டோ ஓட்டுநர் ”தம்பி 8 ரூபாய்க்கு 20 ரூபாய் குடுக்குற? என்கிட்ட சில்லரை இல்ல” என்றார்.
அந்த மஞ்சள் சட்டை ”பரவால்லண்ணே வச்சுக்கோங்க” என்று கிளம்பி விட்டான். மணி 8.20 ஆனதால் அவன் கல்லூரிக்குள் வேகமாக ஓடினான்.
அவன் கணினித்துறை பக்கம் போனதால் அவன் உயரத்தையும் எடையையும் வைத்து இளங்கலை கணினி கடைசி வருடம் என்று எண்ணிக் கொண்டாள் நதி.
அவளுக்கும் நேரம் ஆனதால் ஆடிடோரியத்திற்கு பயிற்சிக்கு சென்றாள் அவள்.
அங்கே அவளுக்கு முன்பே அவள் தோழி ராதா வந்து காத்திருந்தாள்.
”எல்லாரும் வந்துட்டாங்க நீ தான் லேட்’’ என நதியை திட்டினாள் ராதா.
”ஆமா நான் தினமும் சீக்கிரம் வந்து வெயிட் பண்னேன். அப்ப எனக்கும் கடுப்பா தான இருந்து இருக்கும். எனக்காக ஒரு நான் வெயிட் பண்ணா ஒன்னும் குறஞ்சுற மாட்டிங்க” என்று பயிற்சிக்கு சென்றனர் இருவரும்.
நாட்கள் அதன் போக்கில் சென்றது. இண்டர் காலேஜ் போட்டியில் அவர்கள் கல்லூரி இரண்டாம் இடம் வெற்றி பெற்றனர். கல்லூரியின் முதல்வரிடம் கோப்பையை காட்டி விட்டு திரும்புகையில் இளங்கலை கணினி வகுப்புகளை கடந்து தான் செல்ல வேண்டும். ஏனென்றே தெரியாமல் நதி திரும்பி மூன்றாம் ஆண்டு வகுப்பறையைப் பார்த்தாள். அவளின் மனம் எதிர்பார்த்த அந்த நபர் அங்கு இல்லை.
”என்னடி பண்ற நீ? இதெல்லாம் சரியில்லை” என அவள் மனசாட்சி எடுத்துரைத்தது.
”அதெல்லாம் ஒன்னும் இல்ல. சும்மா ஒரு சைட்டிங் தான். நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல’’ என அவள் மனசாட்சிக்கு அவளே சமாதானம் சொல்லிக் கொண்டாள்.
அடுத்த வாரம் ஒரு நாள் அவள் பள்ளித்தோழி காரிகா இளங்கலை கணினி முதல் வருடம் படிக்கிறாள். அவளைக் காண காலை பத்து மணி இடைவேளையில் சென்றாள்.
அவளோ அவள் பக்கத்து பெஞ்சில் இருந்த இளைஞரை வெகு தீவிரமாக ரசித்துக் கொண்டிருந்தாள்.
”அடியே காரிகா நான் வந்தது கூட தெரியாம அப்டி என்னடி தீவிர பார்வை அந்தப்பக்கம்?” என நதிக் கேட்டாள்.
”இல்லடி சும்மா தான்” என காரிகா நெளிந்தாள்.
”உன் பார்வை அப்டி சொல்லலயே! ஏதோ உளுந்துவடையை காக்கா தூக்கிட்டு போய்ரும்னு ஆயா வெறிக்க வெறிக்க காக்காவ பாக்குற மாதிரில பாக்க” என நதி சொன்னாள்.
”அடியே டீ கடைனு இதுலெல்லாமா நிரூபிப்ப” என காரிகா முறைத்தாள்.
”அதெல்லாம் சொல்லமாட்டேன். நீ உன் சைட்டிங்க கேரியான், நான் அப்படிக்கா என் கிளாசுக்கு கேரியான் டாடா” என நதி அவள் வகுப்பிற்கு கிளம்பினாள்.
காரணமே இல்லாமல் அவள் மனம் அந்த மஞ்சள் சட்டையை நினைத்து பார்த்தது.
மூன்றாம் ஆண்டு வகுப்பறையையும் ஒரு பார்வை பார்த்துச் சென்றாள். இப்போதும் அவன் இல்லை. அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனக்குனு இருந்தா கண்டிப்பா எனக்குத்தான். பாப்போம் அந்த பக்கோடாவ மறுபடியும் பாக்காமலா போகப்போறோம் என அவள் வகுப்பிற்குச் சென்று விட்டாள்.