Skip to content
Post Views: 3,332
அத்தியாயம் 15
“அத்தை இந்த பூவுக்கு ஆரஞ்சு கலர் போடவா?”
“ஆரஞ்சு கலர் சூப்பரா இருக்கும். அந்த பூவுக்கும் அதுக்கு ஆப்போசிட் பூவுக்கும் ஆரஞ்சு போட்டுடு பாப்பா..”
“சரி அத்தை” என்று உற்சாகமாக தமயந்தியுடன் இணைந்து அழகான கோலத்திற்கு கலர் கொடுத்து கொண்டு இருந்தாள் அருந்ததி.
Advertisement
விடிந்தும் விடியாத காலை பொழுது… மனதை மயக்கும் பறவைகளின் ரீங்காரம் … சில்லென்று வீசிய தென்றல் காற்று… அருந்ததி தன் அத்தையுடனான இந்த பொழுதை மிகவும் ரசித்து கோலம் போட்டுக்கொண்டிருந்தாள்.
தீடிரென இந்த கோலத்தை போலவே தன் வாழ்வு வண்ண மயமாகியதாய் தோன்றியது அவளுக்கு.
இன்று தை பொங்கல். தமயந்தி வீட்டில் சேர்ந்து கொண்டாடலாம் என்று அவினாஷிடம் கண்டிப்பாக கூறியிருந்தார் தமயந்தி. முதல் நாள் இரவே அருந்ததியை அழைத்து வந்து விட்டார்.
Advertisement
“கருணா அக்கா அவங்க வீட்டில கோலம் போடுவாங்களா அத்தை…”
Advertisement
“இல்ல பாப்பா.. கருணா பாப்பாக்கு இதுல எல்லாம் அவ்வளவு இன்ட்ரஸ்ட் இல்லை”
“ஓ…”
“இன்னிக்கு கூட பொங்கல் விழா ஒன்றுக்கு பேச போறா.. அதுக்கு தயார் செஞ்சிட்டு இருப்பா..”
Advertisement
“அவங்க சூப்பர் இல்ல அத்தை, எனக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்”
“பாப்பாவும் சூப்பர் தான்.. நீயும் சூப்பர் தான் பாப்பா.. “
“நல்லா கிடைச்சாங்க அத்தை, உங்களுக்கு பெரிய பாப்பா… சின்ன பாப்பா…” என்று கூறி கொண்டு வந்து நின்றான் வில்வா.
“வந்துட்டாங்க காலையிலே வம்பு வளர்க்க” என்று வாய்குள்ளே முனங்கி கொண்டாள் அருந்ததி.
“நீ என்ன சீக்கிரம் எழுந்துட்ட… பாரி இன்னும் எந்தரிக்கலையே வில்வா…”
“இன்னிக்கு ஒரு சப்ஜெக்ட் படிக்கலாம் சொன்னான் அத்தை, ஆறு மணிக்கு வர சொன்னான். எதுக்கு வம்புன்னு நான் தான் பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டேன்“
“சரி வில்வா, டீ குடிச்சிட்டியா?”
“பாட்டி தான் போட்டாங்க அத்தை, டீ குடிச்ச மாதிரியே இல்ல.. டீ தண்ணீ தான் அது… நீங்க கொடுத்தா திரும்பவும் குடிப்பேன்“
“சரி இரு, இரண்டு நிமிஷம்”
“கோலம் சூப்பர்ரா இருக்கு அத்தை”
அதை கேட்டதும் அருந்ததி முகம் பூவாய் மலர்ந்தது.
“நல்லா இருக்குல்ல.. நானும் பாப்பாவும் அஞ்சு மணியில இருந்து போடறோம் வில்வா”
“எங்க வீட்ல இப்படி அழகா கோலம் போட மாட்டேங்கிறாங்களே அத்தை? ஒன்னுக்கு மூனு பேர் இருக்காங்க தானே?”
“ஏன்? நீங்க கூட போடலாமே?” என்றாள் அருந்ததி.
“என் தங்கச்சி கூட ரொம்ப சேராத சின்ன பாப்பா… எவ்வளவு சாதுவா இருந்த இங்க வரும்போது, இப்ப என்னன்னா அவளை மாதிரியே பேசுற. என்னமோ போ…”
“சரி அத்தை, நான் போய் பாரியை எழுப்புறேன்” என்று உள்ளே சென்று விட்டான்.
இங்கே வந்து ஏழு மாதங்கள் ஆகிவிட்டது. வேதாச்சலம் தாத்தா உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருந்தது. ஒருவர் துணையோடு ஸ்டிக் வைத்து நடக்கவும் முடிகிறது.
அவர் வேலைகளை அவரே பார்த்து கொள்கிறார். அதுவே அவருக்கு நிம்மதியாக இருந்தது.
காலையில் குளித்து பேரன் வாங்கி கொடுத்த வேஷ்டி சட்டையில்,பேரனின் தோளை பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியாக மகள் வீட்டிற்குள் வந்தார்.
அவினாஷ் கையில் இரண்டு பெரிய பைகள் இருந்தது.
அருந்ததி வேகமாக சென்று அண்ணனிடம் இருந்து ஒரு பையை வாங்கி கொண்டாள்.
“வாங்க மாமா, வா அவி “என்று இவர்களை வரவேற்று கொண்டே
“தமா, சீக்கிரம் வா” என்று மனைவிக்கு குரல் கொடுத்தார் தர்மராஜ்.
அவினாஷ் தாத்தாவை வசதியாக அமர வைத்தான்.
இவர்கள் குரல் கேட்டு படித்து கொண்டிருந்த பாரியும் வில்வாவும் வெளியே வந்தனர்.
தங்கையின் உதவியுடன் கொண்டு வந்திருந்த பொருட்களை எல்லாம் பெரிய தாம்பாளங்களில் எடுத்து வைத்தான் அவினாஷ்.
பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம், நெய், கரும்பு, மஞ்சள் கொத்து, காய்கறிகள், வாழைப்பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு போன்ற பண்டிகை உபசாரப் பொருட்கள் அனைத்தையும் அழகாக அடுக்கி வைத்தனர் அண்ணன் தங்கை இருவரும் சேர்ந்து.
பின் தமயந்திக்கு, புதிய புடவை தர்மராஜிற்கு வேஷ்டி சட்டை பாரிக்கு டிரஸ் ஒரு சின்ன வெள்ளி குத்து விளக்கு எல்லாம் ஒரு தட்டில் வைத்தனர்.
“என்னடா இது எல்லாம்?” என்றான் பாரி வில்வாவிடம் மெதுவாக.
“பொங்கல் சீர் மாதிரி இருக்குடா, எங்க மாமா நேத்து வந்து கொடுத்துட்டு போனாங்க”
“ஓ… “
“வாங்..கோங்க ..பாப் பா..மாப்.ள.. பாயி…” என்றார் வேதாச்சலம். இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சம் பேசுகிறார். பேச்சு உடைந்து தான் வருகிறது.
“டேய் அத்தையும் பாப்பா தானா” என்றான் வில்வா பாரியிடம் அதிர்ச்சியாக.
அருந்ததி திரும்பி இவர்களை முறைத்தாள்.
கலங்கிய கண்கள், நடுங்கும் கைகள், ததும்பிய நெஞ்சம் என்று உணர்ச்சி பிழம்பாக நின்றிருந்தார் தமயந்தி.
இதுவே அவரது பிறந்த வீட்டில் இருந்து வரும் முதல் பொங்கல் சீர்.
அருந்ததியும் அவினாஷும் தாத்தாவின் இரு புறமும் நின்று கொண்டு தாம்பாளங்களை கொடுத்தனர்.
தமயந்தியால் பிடிக்க கூட முடியவில்லை. பாரியும் தர்மராஜும் அவரை தாங்கி பிடித்து கொண்டனர்.
வில்வா விரைந்து சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.
“நேத்து வில்வா வீட்ல அவங்க மாமா பொங்கல் சீர் கொடுத்தாங்கன்னு கருணா, பாப்பாக்கிட்ட சொல்லிட்டு இருந்தா.. அதான் நானும் தாத்தாகிட்ட கேட்டு என்னால முடிஞ்சதை கொண்டு வந்தேன் அத்தை” என்றான் அவினாஷ்.
தமயந்தி இவ்வளவு உணர்ச்சி வசப்படுவார் என்று அவன் நினைக்கவே இல்லை. அவனுக்கு மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது, எவ்வளவு ஏங்கி உள்ளார் என்று பார்த்து.
“எங்க அப்பா எங்க அண்ணா எல்லாரும் என்னை அப்படியே விட்டுட்டாங்க அவி, நீ தான் எனக்கு முதல்ல பொங்கல் சீர் கொடுத்து எனக்கு பிறந்த வீட்டு உறவு இருக்குன்னு ஒரு நம்பிக்கையை கொடுத்திருக்க…” என்றார் தமயந்தி கரகரப்பான குரலில்.
வேதாச்சலம் வேதனையாக தன்னை பார்ப்பார் என்று நினைத்து, அவரை பார்த்தார் தமயந்தி. ஆனால் அவரோ பெருமையாக தன் பேரனை பார்த்து கொண்டிருந்தார்.
சில விஷயங்களை மாற்ற முடியாது, சிலர் குணங்களையும் மாற்ற முடியாது, உண்மையை ஏற்று கொள்ள பழகி கொள்ள வேண்டும், என்ன செய்ய?
பின் பொங்கல் வேலைகளை ஜரூராக தொடங்கினார்கள். வில்வாவும் சாமி கும்பிட அவன் வீட்டிற்கு சென்று விட்டான்.
தமயந்தி கையினால் அண்ணண் மகன் கொடுத்த பச்சரிசியில் தித்திப்பாய் வெல்லம் சேர்த்து மகிழ்ச்சியாக தயாரானது அன்றய பொங்கல்.
பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து பின் அனைவரும் சேர்ந்து உணவை உண்டனர். உணவை முடித்து இலகுவாக அனைவரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“உங்க அப்பா அம்மா இருக்கும்போது இப்படி தான் நீங்களும் செய்வீங்களா?” என்றார் தமயந்தி அருந்ததியிடம்.
“இல்ல அத்தை, அம்மாக்கு இது எல்லாம் பிடிக்காது. குக்கர்ல தான் செய்வாங்க“
“நீ அவங்களை மிஸ் பண்றீயா? நாம வேணும்னா போன் பண்ணி பேசுவோமா?”
சின்ன பெண், இந்த வயதில் தாயை தேடுவாள், என்று நினைத்தே தமயந்தி இதனை கேட்டார்.
“வேணாம் அத்தை” என்று உடனே அவினாஷும் அருந்ததியும் சேர்ந்தே கூறினார்கள்.
வேதாச்சலம் விரக்தியாக சிரித்து கொண்டார்.
அதற்கு மேல் தமயந்தி அது சம்பந்தமாக எதுவும் பேசவில்லை. காலம் தான் எல்லாத்துக்கும் விடை தர வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
சற்று நேரத்தில் தாத்தாவை அழைத்து கொண்டு அவினாஷ் புறப்பட்டு விட்டான். அவனுக்கு ஆன்லைன் வகுப்புகள் இருந்தது. முதலில் தமிழ் வகுப்பு மட்டுமே எடுக்க தொடங்கினான். இவன் கற்றுக்கொடுப்பது அவ்வளவு எளிமையாக இருக்கவும், மாணவர்களே மேத்ஸ்,சயின்ஸ் சொல்லி கொடுக்க முடியமா? என்று கேட்டு, இவனிடம் சேர்ந்து கொண்டனர்.
பத்தாம் வகுப்பு வரை இவனும் இப்பொழுது எடுக்கிறான். கருணா சொன்னதை போல, ஒருவர் வழியை காட்ட முடியும் அதில் வெற்றிகாணுவது அவர் அவர் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியம் அவினாஷிடம் இருந்தது.
இயற்கையிலே அவனுக்கு பிசினஸ் செய்யும் திறமை இருந்தது. இப்பொழுது மாதம் நாற்பதாயிரம் வரை சம்பாதிக்கிறான். தனது நேரத்தை அத்தனை லாவகமாக திட்டமிட்டுக்கொள்வான்.
அருந்ததி அத்தையுடன் இருந்துவிட்டு வருவதாக கூறிவிட்டாள்.
அத்தையுடன் சேர்ந்து அனைத்தையும் ஒதுங்க வைக்க உதவினாள்.
தமயந்தி சற்று நேரம் படுக்க சென்று விட்டார்.
கேரம் போர்ட் விளையாடலாம் என்று தர்மராஜ் கூறவும் ஆசையாக நானும் வரேன் என்று அவருடன் இணைந்து கொண்டாள்.
வில்வாவும் அவர்கள் வீட்டில் உணவை முடித்துக்கொண்டு, சரியாக அந்நேரம் வந்தான். பாரியும் வில்வாவும் ஒரு அணி, தர்மராஜும் அருந்ததியும் ஒரு அணி.
தர்மராஜ் அருந்ததிக்கு சொல்லி கொடுத்து கொண்டே விளையாடினார்.
“ரொம்ப தேங்க்ஸ் மாமா.. எனக்கு யாருமே இப்படி சொல்லி கொடுத்து இல்லை” என்றாள் நெகிழ்ச்சியாக.
இங்கே வந்த சமயத்தில் அதிகமாக அவினாஷ் பின்னே ஒளிந்து கொள்ளுவாள். இப்பொழுது தான் சகஜமாக அனைவருடனும் பழகுகிறாள். அதற்காக தான் வில்வாவும் பாரியும் அவளிடம் வம்பு வளர்ப்பதும்.
“பாப்பாவை கூட்டிட்டு வரலையா வில்வா காலையில் இருந்து இன்னும் பார்க்கவே இல்லை” என்றார் தர்மராஜ்.
“இன்னிக்கு ஆறு மணிக்கு ரோட்டரி கிளப் நடத்தும் விழாவுல பேச போறா இல்ல? அதுக்கு தான் தயார் செஞ்சிட்டு இருந்தா”
“நீங்க எல்லாம் அக்கா பேசுறதை கேக்க போறீங்களா மாமா?” என்றாள் அருந்ததி ஆசையாக.
“போகணும் பாப்பா, இந்த தடவை உங்க மூணு பேருக்கும் சேர்த்து தான் டிக்கெட் போட்டிருக்கேன், எல்லாரும் போவோம்”
“சூப்பர் மாமா..” என்றாள் அருந்ததி மகிழ்ச்சியாக
இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது வந்தாள் கருணா.
“வா பாப்பா… எல்லாம் தயார் செஞ்சுட்டியா? உக்காரு” என்று ஆரவாரமாக வரவேற்றார் தர்மராஜ்.
பின் தர்மராஜ், அருந்ததி, கருணா மூவரும் மும்மரமாக பேச தொடங்கினார்கள்.
“ஏன்டா பாரி நானும் டெய்லி வரேன். அவளும் டெய்லி வாரா.. ஆனா அவளை மட்டும் மாமா எப்பவுமே ஸ்பெஷல்லா வரவேற்கிறார், ஏன்டா”
“டேய், நீயாச்சும் வந்து போற. நான் இங்கயே தானே இருக்கேன். ஒரே பையேன்னு ஒரு நாள் கூட கொஞ்சுனது இல்ல. முன்னெல்லாம் ஒரு பாப்பா… இப்ப ரெண்டு பாப்பா… “
“ஆமாடா.. சின்ன பாப்பா.. பெரிய பாப்பா.. நினைச்சாலே காண்டு தாம்பா” என்று ராகமிட்டு பாடினான். உடன் பாரியும் இணைந்து கொண்டான்.
“பாருங்க க்கா, எப்பவுமே பாப்பான்னு கிண்டல் பண்றாங்க“ என்று கருணாவை துணைக்கு அழைத்தாள் அருந்ததி.
“நம்ம இரண்டு பேரும் பாப்பான்னா, இவனுங்க இரண்டு பேரும் பீப்பா. இது எல்லாம் பெருசா, நீ வா நாம எங்க வீட்டுக்கு போவோம், என்று கையோடு அருந்ததியை அழைத்து சென்று விட்டாள்.
அன்றய விழாவிற்கு வேதாச்சலம் தாத்தா உட்பட, அனைவரும் சென்றார்கள்.
வாழ்க தமிழ்!
வளர்க விவசாயம்!
என்ற தலைப்பில் பேசினாள் கருணாம்பிகை.
“தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல; அது நம் வாழ்க்கை முறை.
தமிழே நம் வாழ்வியல்..
தமிழே அன்பு…
தமிழே காதல்…
தமிழே ஒழுக்கம்…
தமிழே நாகரிகம்…
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். எந்த மொழி பேசுபவர்களும் தங்கள் குழந்தைகளுக்கு அவர்களின் மொழியை பெயராக சூட்ட மாட்டார்கள். ஆனால் நாம் ஆசையாக தமிழரசி, தமிழ்ச்செல்வன், என்று தமிழை பிள்ளைகளுக்கு பெயராக சூட்டி கொண்டாடுவோம்.
அதே போலத்தான் விவாசாயமும்
“விவசாயம் ஒரு தொழில் மட்டுமல்ல; அது நம் உயிரின் ஆதாரம்!”
விவசாயமே ஆரோக்கியம்
அதுவே ஆகாரம்
அதுவே ஆனந்தம்
அதுவே நிதர்சனம்..
அதுவே நிரந்தரம்
என்று தனது உரையை தொடங்கினாள். அடுத்த ஒரு மணி நேரம் அங்கே உள்ளவர்களின் ஒட்டுமொத்த கவனமும் கருணாவின் பேச்சில் மட்டுமே.
மிகவும் எளிமையாகவும் அழகாகவும், விவசாயத்தின் அடிப்படை முக்கியத்துவம்,
நவீன கால விவசாயியின் போராட்டங்கள், இளைய தலைமுறையினரின் விவசாய கண்ணோட்டம், இளைஞர்கள் விவசாயத்தை தவிர்ப்பது ஏன்?அதை மீண்டும் வாழ்விக்க என்ன செய்யலாம்?
விவசாயிக்கு உரிய மரியாதை, நம்முடைய பொறுப்பு, பொங்கல் என்பது ஏன் தமிழர் திருநாள் என்று கொண்டாடுகிறோம், என்று பல பல விஷயங்களை பேசினாள்.
யாருக்கும் எப்பொழுது இந்த பேச்சு முடியும் என்ற சோர்வு ஒரு நொடி கூட ஏற்படவே இல்லை. அதுக்குள்ளே முடிந்து விட்டதா என்ற எண்ணமே.
அருந்ததிக்கு அத்தனை பெருமையாக இருந்தது. பக்கத்தில் இருந்த தன் அண்ணனிடம், “எப்படி பயப்படாம எவ்வளவு தெளிவா பேசுறாங்க அண்ணா? எனக்கு கூட இப்படி பேசணும்னு ஆசையா இருக்கு.. ஆனா நாலு பேர் இருந்தாலே எனக்கு பேச வர மாட்டேங்குது” என்றாள்.
“நிஜமாலுமே ரொம்ப நல்லா பேசுனாங்க பாப்பா.. நீ அவங்ககிட்டவே கேளு.. உனக்கும் சொல்லி தருவாங்க” என்றான் தங்கையிடம்.
அன்றைய நிகழ்ச்சியில் அனைவராலும் பாராட்ட பெற்றாள் கருணாம்பிகை.
மனதிற்குள் இவள் என் தங்கை இவள் என் தோழி என்று அவ்வளவு பெருமை பாரிக்கும் வில்வாவிற்கும். ஆனால் எப்பொழுதையும் போல வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள்.
என்ன செய்ய? அவர்கள் அனுபவம் அப்படி…
error: Content is protected !!